Advertisement

அத்தியாயம் – 33_1
நான்காம் நாள் காலையில், குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் செல்லும் முன், சாமி அலமாரியில் புதிதாக மாட்டியிருந்த காயத் ரியின் படத்தை வணங்கி விட்டுச் சென்றனர்.  அதைப் பார்த்து, கௌரியை நினைத்து ஆச்சர்யமானது சாவித்திரி அம்மாவிற்கு.
“காயத் ரியோட ஃபோட்டோ எல்லாத்தையும் சிவா தம்பி அலமாரி உள்ளே வைச்சவுடனே நிம்மதியா இருந்திச்சு..குழந்தைங்க இரண்டு பேரும் உன்னை அம்மான்னு ஏத்துக்கிட்டது சந்தோஷமா இருக்கு..எதுக்கு இப்போ இந்த ஃபோட்டோவை இங்கே மாட்டி வைச்சிருக்க?” என்று உரிமையுடன் கௌரியிடம் கோபப்பட்டார்.
“அலமாரி உள்ளே பூட்டி வைச்சிருந்தா, பெரிசான பிறகு அவங்க அம்மாவை அவங்களும் இவ்வளவு நாள் மறந்திட்டாங்கண்ணு தீபாவும் சூர்யாவும் மனசு வருத்தப்படலாம்..இந்த மாதிரி வெளியே இருந்தா அவங்க எங்கேயும் போகலை நம்மகூட தான் இருக்காங்கண்ணு தோணும் சாவிம்மா.” என்றாள் கௌரி.  அதன் பின், ஒவ்வொரு நாள் காலையிலும், கடைக்குக் கிளம்புவதற்கு முன், சிவாவும், பள்ளிக்குக் கிளம்புவதற்கு முன், குழந்தைகளும், காயத் ரிக்கு ஹலோ சொல்லி விட்டுப் போனார்கள்.  
அது சிவாவினுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. காயத்ரியுடனான அவன் வாழ்க்கை முடிந்த போன ஒன்று என்று நிதமும் அவன் மனத்தில் பதிய ஆரம்பித்தது.  
அவர்கள் அறையில் தீபா படுத்துக் கொள்வது, ஆரம்பத்திலிருந்து கௌரிக்குப் பிடிக்கவில்லை.  அது தொடர் கதையானால் வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்ற எண்ணம் தான் அதற்குக் காரணம்.  அதனால், அடுத்த தினம், அதற்கு அடுத்த தினம் என்று தினமும், அவர்களுடன் தூங்க ஆரம்பித்தவுடன், பிரச்சனைகள் ஆரம்பிக்கும் முன், ஏன் இந்தப் புது வழக்கம் என்று தீபாவை விசாரித்த கௌரிக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. 
அடுத்த சில நாள்களில் அவள் எதிர்பார்த்தபடி அந்த விஷயம் புதுப் பிரச்சனைகளைக் கிளப்பியது. இப்போதெல்லாம் அவளுடைய அறையை முழுவதுமாக தவிர்த்தாள் தீபா.  சமீப காலமாக, சில விஷயங்களில் அவள் அக்காவைப் பின்பற்ற ஆரம்பித்திருந்த சூர்யாவும், தீபாவைப் போல் கௌரியின் படுக்கையறையில் குடியேறினாள்.  அதன் விளைவாக புத்தகப் பையும், பள்ளிக்கூடம் சம்மந்தப்பட்ட பொருள்களும் கட்டிலை ஆக்கிரமித்துக் கொண்டன. குழந்தைகள் இருவரும், அவர்கள் வீட்டுப் பாடங்களைப் பெற்றோர்களின் படுக்கையறையில் செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.
அவர்களின் படுக்கையறை,  குழந்தைகளின் படுக்கையறையாக மாறிக் கொண்டிருந்தது. “என்ன ஆயிடுச்சு தீபாக்கு? எதுக்கு தினமும் நம்மகூட படுக்க ஆரம்பிச்சிட்டா? ஏன் இரண்டு பேரும் அவங்க ரூமுக்குப் போகிறதில்லை?” என்று கௌரியைச் சிவா கேட்க, அவளிடம் அதற்குப் பதில் இல்லை.  இந்தப் புதுப் பழக்கத்தை உடைத்து, எப்படி அனைத்தையும் பழையபடி ஆக்குவது என்று யோசனையானாள் கௌரி.
ஒரு நாள் மதிய வேளையில், மாலினிக்கு அக்காவிற்கு ஃபோன் செய்தாள் கௌரி.  தீபாவின் திடீர் மாற்றத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டு, அதைச் சமாளிக்க ஆலோசனை கேட்டாள். 
“வெயில் ஜாஸ்தி ஆயிடுச்சுன்னு உங்க ரூமுக்கு வந்து படுக்கறாளா?” என்று விசாரித்தாள் மாலினி.
“எங்க ரூம்லே இன்னும் ஏஸி பொருத்தலையே..இப்போதான் சிசி டிவி பொருத்தினோம்..அடுத்து தான் ஏஸி.”
“என்ன செய்துகிட்டு இருக்கார் சிவா? ஏஸி பொருத்தக்கூட நேரமில்லையா அவருக்கு?”
“கடைலே ஆள் இல்லை க்கா..அவரும், மனோகரும் தான் பார்த்துக்கறாங்க..இப்போதான் பார்ட்டைம்மா ஒரு டிசைனரை வேலைக்கு வைச்சுக்கிட்டு இருக்கார்.”
“அவருக்கு டையமில்லை.. சரி..நீ என்ன பண்ற?..ஆள் ஏற்பாடு செய்ய வேண்டியது தானே.”
“இனி அதுதான் செய்யணும்.. மறுபடியும் மதுரை போகணும் க்கா…அங்கே ஒரு பிரச்சனை, முடியாம இழுத்துக்கிட்டு இருக்கு..அங்கே போயிட்டு வந்த பிறகு, வீட்லே விட்டுப் போன வேலைகளை முடிக்கறேன்…சூர்யா நல்லா தேறிட்டா க்கா..நான் வீட்டுக்குப் போனதும் எல்லா வீட்டுப் பாடத்தையும் கொண்டு வந்து காட்டறா க்கா..ரிடிங் வந்திடுச்சுக்கா..ரைட்டிங் தான் கொஞ்சம் மெதுவா எழுதறா..கை வலிக்குதுண்னு சில சமயம் எழுத மாட்டேங்கறா..அப்போ அவளுக்குத் தீபா உதவி செய்யறா க்கா..
தீபா முன்னே போல இல்லை க்கா..எல்லார் பார்ட்டிக்கும் போகணும்னு அடம் பிடிக்கறதில்லை…. ஆனா இந்த ஒரு விஷயத்திலே அடமா இருக்கா..வாரத்திலே இரண்டு நாளாவது உன் ரூம்லே படுத்துக்கோன்னு சொன்னா..அம்மா, நீங்களும் என்கூட படுங்கண்ணு சொல்றா..ஆபிஸ்லேர்ந்து வீட்டுக்குப் போனா என்கூடத் தான் முழு நேரம் இருக்கா..திடீர்னு சூர்யா மாதிரி நடந்துக்கறா க்கா..ஏன்னு யோசிச்சு எனக்கு டென்ஷனாகுது .” என்றாள் கௌரி.
“நீ டென்ஷனாகாதே….அவக்கிட்டே நிதானமா விசாரி.” என்றாள் மாலினி.
ஆனால் கௌரிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.  அவள் வெளியூர் போகப் போகிறாள் என்று இந்த முறை குழந்தைகளிடம் சொன்ன போது, சூர்யா எப்போதும் போல் இருந்தாள், ஆனால் தீபா, அவளையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று கோரிக்கை வைத்தாள். இதுவரை குழந்தைகள் இருவரும், கௌரி ஆபிஸ் போய் வருவததை, அவளின் வெளியூர் பயணங்களைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள்.  அதற்கு முக்கியக் காரணம் சாவித்திரி அம்மாவும் சிவாவும் தான்.  குழந்தைகளுக்குத் தேவையானதை செய்து, எப்போதும் போல் அவர்களைக் கவனமாகப் பார்த்துக் கொண்டனர் இருவரும். அதனால், கௌரி வீட்டில் இல்லாததை அவர்கள் உணரவில்லை.
அன்று மாலை ஃபிளைட்டில் மதுரைக்குப் பயணமாகிறாள் கௌரி.  அங்கே இரண்டு நாள் வேலை இருந்தது. நாளை மறு நாள் திரும்பி விடுவாள்.  பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த தீபாவும் சூர்யாவும், அந்த நேரத்தில், கௌரி வீட்டில் இருந்ததைப் பார்த்து ஆனந்தமடைந்தனர்.  அவர்கள் இருவரும் படுக்கையறைக்குள் நுழைந்த போது, கட்டில் மீதிருந்த கௌரியின் பெட்டியைப் பார்த்து,
“எங்கே ம்மா போறீங்க?” என்று கேட்டாள் தீபா.
”மதுரை” என்றாள் கௌரி. குழந்தைகள் இருவரும் முகம் கழுவி வேறு உடைக்கு மாறிக் கொண்டவுடன், அவர்கள் மூவரும் சேர்ந்து மதிய உணவை உண்டனர்.  அதன் பின், சாவித்திரி அம்மா சமையலறையில் பிஸியாகி விட, தீபாவும் சூர்யாவும் அவர்கள் புத்தகப் பையுடன் கௌரியின் படுக்கையறைக்கு வந்தனர்.  
அவள் பையைத் திறந்த சில நிமிடங்களில், அதன் மீது தலை சாய்த்துத் தூங்கிப் போனாள் சூர்யா.  உடனே, அவள் பையை அகற்றி விட்டு, அவளைச் சரியாகப் படுக்க வைத்தாள் கௌரி. பேக்கிங் செய்து கொண்டிருந்த கௌரியைப் பார்த்தபடி  அவள் வீட்டுப் பாடத்தை செய்து கொண்டிருந்தாள் தீபா.
அவள் பேக்கிங்கை முடித்து, பெட்டியைப் பூட்டி ஓரமாக வைத்து விட்டு, டாக்ஸிக்குச் சொல்லி விட்டு, பாத் ரூம் சென்றாள் கௌரி.  அவள் பாத் ரூம் கதவைத் திறந்து வெளியே வந்த போது, அதன் வாசலில் நின்றிருந்த தீபா, அவள் இடுப்பை அணைத்துக் கொண்டு,”நானும் வரேன்.” என்றாள்.
தீபா சொன்னது கௌரிக்குப் புரியவில்லை.  அதனால்,” எங்கே?” என்று கேட்க,
“மதுரை.” என்றாள் தீபா.
என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது,”நான் புதுசுன்னு என்னை அழைச்சிட்டுப் போக மாட்டீங்களா?  தினமும் உங்களோட தானே தூங்கறேன்..இன்னும் பழைசு ஆகலையா?” என்று அவள் விழித்திருக்கும் நேரம் மட்டுமில்லாமல் தூங்கும் நேரத்தையும் கௌரியோடு செலவழித்த தீபா, குழப்பத்துடன் கேட்டாள்.
இதென்ன புதுசு? பழைசு?  என்ன சொல்கிறாள் இவள்? என்று குழம்பிப் போனாள் கௌரி. அப்போது அவள் ஃபோனில் அழைப்பு வர, டாக்ஸி வந்திருந்தது.  
“அடுத்த முறை அழைச்சிட்டுப் போவீங்களா?” என்று தீபா கேட்டவுடன்,
“தீபு, அம்மா இங்கே தினமும் எப்படி ஆபிஸ் போகறேனோ அதே போல மதுரைலே இருக்கற ஆபிஸ்ஸுக்கு இப்போ  போறேன்..அது ரொம்ப தூரத்திலே இருக்கு..உன்னை அழைச்சிட்டுப் போக முடியாது.” என்று அவளுக்குப் புரியும்படி பதில் கொடுத்துவிட்டுக் கிளம்பிப் போனாள் கௌரி. 
அந்த உறவு அவர்கள் இருவருக்குமே புதுசு தான் என்று ஏனோ தீபாவிற்குத் தோன்றவில்லை.
அவள் ஃபோனின் அழைப்பில் கவனம் சிதறிய கௌரி, யாரிடமிருந்து என்று பார்க்க, யாரென்று தெரியவில்லை.  யோசனையுடன் “ஹலோ” என்றவுடன், அந்தப் புறத்திலிருந்து,”கௌரி?” என்று கேள்வியாக ஒலித்தது ஒரு பெண்ணின் குரல். 
“ஆமாம்.” என்று கௌரி பதிலளித்தவுடன்,
“நான், சாந்தி பேசறேன்.” என்றார் தயக்கத்துடன்.
இதுவரை அவர் அழைத்ததே இல்லை.
அவரின் தயக்கத்தைப் போக்க,”ஹலோ அண்ணி, எப்படி இருக்கீங்க?” என்றாள் கௌரி.
“நல்லாயிருக்கேன் கௌரி..சாவித்திரி அம்மாகிட்டேயிருந்து உன் நம்பர் வாங்கிக்கிட்டேன்…இப்போ தான் ஃபோன் செய்ய நேரம் கிடைச்சுது.” என்ற சொன்ன சாந்திக்கு, இப்போ தான் தைரியம் வந்தது என்று உண்மையைச் சொல்ல முடியவில்லை.
ஏன் சாவித்திரி அம்மாவிடம் கேட்க வேண்டும்? சிவாவிடம் கேட்டிருக்கலாமே..இந்த அழைப்பு எதற்கு? என்று எப்படிக் கேட்பதென்று கௌரி யோசித்துக் கொண்டிருக்கும் போது,”நாளைக்கு உன் வீட்டுக்கு வரட்டுமா கௌரி?” என்று கேட்டார் சாந்தி.  அவர் கேள்வியில் ஏகப்பட்ட தயக்கம் இருந்தது. சொந்தம், உறவு, உரிமை, பெயருக்குக் கூட எதுவும் இல்லை.  அதற்கு என்ன பதில் சொல்வதென்று கௌரிக்குத் தெரியவில்லை.  அவள் மதுரை ஏர்போர்ட்டில் அமர்ந்திருந்தாள். வீடு போய்ச் சேர நள்ளிரவாகி விடும். நாளை ஞாயிற்றுக் கிழமை.  சாவித்திரி அம்மா வேலைக்கு வரமாட்டார். சிவா கடைக்குச் செல்ல வேண்டும்.  அவனில்லாமல் அவன் அக்காவை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையில்,”அவங்க வீட்லே இருக்க மாட்டாங்க அண்ணி…ஞாயிற்றுக் கிழமையும் கடைக்குப் போவாங்களே.” என்று சிவாவைக் காரணம் காட்டி மறுத்தாள்.
“சரி..கௌரி..வைச்சிடறேன்.” என்று அவர் ஃபோனை வைக்குமுன்,”நான் இப்போ மதுரைலே இருக்கேன்..வீட்டுக்குப் போக மிட் நைட் ஆகிடும்..நாளைக்குக் கொஞ்சம் லேட்டா எழுந்திருப்பேன்.. அதனாலே பதினொரு மணி போல வாங்க அண்ணி.” என்று கௌரி அழைப்பு விடுத்தவுடன்,”பதினொரு மணிக்கும் மேலே வரேன்.” என்று சந்தோஷத்துடன் கௌரியின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் சாந்தி.

Advertisement