Advertisement

அத்தியாயம் – 32
குழந்தைகள் இருவரையும் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு பத்து நிமிடத்தில் வீடு திரும்பினான் சிவா.  அவசரத்தில் அவனுடைய சாவியை எடுத்துச் செல்லாததால், அழைப்புமணியை அழுத்தி விட்டு வாசலில் காத்திருந்தான். அந்த நேரத்தில் கௌரி குளித்துக் கொண்டிருந்ததால் வாசல் கதவைத் திறக்க அவளால் வர முடியவில்லை.  இன்றைக்கு தாமதமாக வேலைக்கு வந்திருந்ததால், சாவித்திரி அம்மாவும் சமையலறையில் பிஸியாக இருந்தார்.
சிவாவை சில நிமிடங்கள் காக்க வைத்துவிட்டு, கதவைத் திறந்த சாவித்திரி அம்மா, “வாசல்லே நீங்க அடிக்கறீங்க, உங்க அறைலே உங்க ஃபோன் அடிச்சுக்கிட்டு இருக்கு..கௌரி பாத் ரூம்லே இருக்கா போல.” என்று சொல்லி  விட்டு அரக்க பரக்க சமையலறைக்குச் சென்றார்.
இத்தனை காலை வேளையில் விடாமல் ஃபோன் செய்வது யார்?  ஒரு வேளை ராம கிருஷ்ணனோ? மேகலா ஆன் ட்டிக்கு உடல் நிலை சரி இல்லையோ? கௌரிக்கு அழைத்துவிட்டு, அவள் எடுக்காததால் தன்னை அழைக்கிறாரோ என்று எண்ணிக் கொண்டே படுக்கையறைக்குள் சென்றான்.  அங்கே சார்ஜிலிருந்த அவன் ஃபோனை எடுக்கலாம் என்று நினைத்த போது குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் கௌரி.
இரவிக்கை, உள்பாவாடையில் இருந்த கௌரி, கட்டில் மீதிருந்த புடவையை எடுத்து, கண்ணாடி முன் நின்று அதை உடுத்த ஆரம்பித்தாள். கடல் நீலம், பச்சை பின்னணியில், கறுப்பு நிறத்தில் அலை அலையான டிசைனில் ஜார்ஜட் புடவை. அதே டிசைனில் இரவிக்கை. அவள் புடவை உடுத்துவதை சிவா பார்வையிட்டுக் கொண்டிருந்ததை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் கௌரி.  அவர்கள் இருவருக்கும் இது போன்ற தனிமை இதுவரை கிடைத்ததில்லை.  கௌரியின் வெளியூர் பயணங்கள், வேலை பளு காரணமாக அவள் அலுவலகத்திற்குப் புறப்படும் நேரம் ஒரே போல் இருந்ததில்லை.  அதே போல் சிவாவும் அவனுடைய கடையைச் சீக்கிரமாகத் திறக்க வேண்டிய தினங்களில், குழந்தைகள் இருவரும் பள்ளிக்குப் புறப்படுவதற்கு முன்பு அவன் புறப்பட்டுச் சென்று விடுவான். இன்றைக்கு எல்லாம் தாமதமானது இதற்குத் தான் என்று தோன்றியது சிவாவிற்கு.  அவளைப் பார்வையால் மட்டும் தீண்டிக் கொண்டிருந்தவனுக்கு அவள் அலுவலகம் செல்லத் தாமதமாகிறது என்று கருத்தில் பதியவில்லை.  
அதே சமயத்தில் இன்றைக்கு காலையிலிருந்து அலுவலகம் செல்ல சோம்பேறித்தனமாக உணர்ந்திருந்த கௌரிக்கோ விடுமுறை எடுக்க வலிய காரணம் கிடைக்கப் போகிறதா? என்ற எதிர்பார்புடன் சிவாவின் பார்வைகளைப் பின்பற்றிக் கொண்டிருந்தாள்.  இதுவரை குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் மனத்தில் இருப்பதை புரிந்து கொண்டு செயல்பட்ட இருவருக்கும், முதல் முறையாக, ஒரே அலைவரிசையில் இருக்கிறோமோ என்ற எண்ணம் தோன்றிய அந்த நொடியில்,
“சிவா தம்பி, என்ன ஃபோனை எடுக்க மாட்டீங்கறீங்க? இன்னும் அடிச்சுகிட்டு இருக்கு.” என்று அறையின் வாயிலிருந்து குரல் கொடுத்தார் சாவித்திரி அம்மா.  அதே அலைவரிசையில் இருந்த இருவருக்கும் அந்த அறையில் அலறிக் கொண்டிருந்த அலைபேசியின் அழைப்பு கேட்கவில்லை.   
“இதோ..எடுக்கறேன்.” என்று அழைப்பது யாரென்று கூட பார்க்காமல் அவன் கைப்பேசியின் அழைப்பை ஏற்றான் சிவா.  அடுத்த சில நொடிகளில் அவன் முகம் மாறிப் போனது.  அதுவரை இருந்த பார்வையும் மாறிப் போனது.  என்ன ஆயிற்று இவனுக்கு? அழைத்தது யார்? என்று கௌரி அவனைக் கேட்கும் முன்,  கைப்பேசியை மேஜை மீது வைத்து விட்டு, பாத் ரூமிற்குள் நுழைந்து கொண்டான் சிவா.  அவள் புடவையைக் கட்டி முடிக்கும் வரை அவன் வெளியே வரவில்லை. காலை உணவை முடித்துக் கொண்டு அவள் வீட்டை விட்டுப் புறப்படும் போது அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்தான் சிவா.
அப்போது கௌரியும் சாவித்திரி அம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  கௌரியின் தோற்றத்தைப் பாராட்டிக் கொண்டிருந்தார் சாவித்திரி அம்மா.
“இந்தப் புடவை உனக்கு நல்லா இருக்கு கௌரி…இன்னைக்கு லேட்டாயிடுச்சு அப்படியும் புடவை உடுத்திக்கிட்டு போகற?” என்று விசாரித்தார்.
“முக்கியமான மீட்டிங் இருக்கு..அதான்..இல்லைன்னா சல்வார் கமீஸ் போட்டுக்கிட்டு இதுக்குள்ளே ஆபிஸ் போய் சேர்ந்திருப்பேன்.” என்றாள் கௌரி.
அப்போது அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்த சிவாவை அது சென்றடயவில்லை. அவன் முகத்தைப் பார்த்த கௌரிக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.  அதற்குக் காரணம் அந்தக் கைப்பேசி அழைப்பு தான் என்று புரிந்து போனது.  ஒருவேளை அவள் மாமியார் தான் அழைத்திருந்தாரா? அவருக்கு ஏதாவது பிரச்சனையா? ஏன் இவன் வாயைத் திறந்து எதையும் சொல்ல மாட்டேங்கறான் என்று சிவா மீது கடுப்பானாள் கௌரி. என்ன? ஏதுயென்று விசாரிக்க இப்பொழுது அவளிடம் நேரமில்லை. சிவாவும் விளக்கம் எதுவும் கொடுக்க தோன்றாமல், அவன் ஸ்டீல் அலமாரி இருந்து மற்றொரு படுக்கையறைக்குள் சென்றான்.  அவன் வெளியே வரும் வரை காத்திருக்க முடியாததால், சிவாவிடம் எதுவும் விசாரிக்காமல் அலுவலகம் புறப்பட்டுப் போனாள் கௌரி.
அன்றைய தினத்தில் இரண்டு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. முதல் மாற்றம், சிவாவுடனான கௌரியின் உறவில் மெல்லிய, குறிப்பிடதக்க முன்னேற்றம் ஏற்பட்டது.  அந்த முன்னேறத்திற்குக் காரணமாக அமைந்தது, அன்று இரவு சிவா வீடு திரும்பிய போது, அவனது தோற்றத்தைப் பார்த்து, அன்று காலையில் அவனுக்கு வந்த கைப்பேசி அழைப்பு எதைப் பற்றி என்று அவன் சொல்லாமலேயே கௌரி தெரிந்து கொண்டது தான். 
இரண்டாவது மாற்றம், அன்றைக்குப் பிறகு, எல்லாப் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கும் செல்ல வேண்டுமென்று அடம் பிடிக்கும் பழக்கத்தை அடியோடு விட்டு விட்டாள் தீபா.
அன்று காலை அதிதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குப் போக ஆவலாக இருந்த தீபா, சரியான நேரத்திற்குச் சூர்யா வீட்டுப் பாடத்தை முடித்த பின்னும் அந்த விழாவிற்குப் போகவில்லை.  அன்று மாலை சாவித்திரி அம்மாவின் கைப்பேசி அழைப்பிற்காக காத்திருந்த கௌரி, அந்த அழைப்பு வராத போது, அவள் வேலையைச் சரியான நேரத்திற்குள் சூர்யா முடிக்கவில்லை என்று அவளாக எண்ணிக் கொண்டாள்.  அதனால் தீபாவையோ, சாவித்திரி அம்மாவையோ கைப்பேசியில் அழைத்து அதைப் பற்றி விசாரிக்கவில்லை. .  தீபாவின் கோபத்தை, ஏமாற்றத்தை தூண்டிவிட்டு விடுவோம் என்ற பயத்தில் அன்று வீடு வந்த பின்னும் அந்தப் பேச்சை கௌரி  எடுக்கவில்லை.
‘என் பிறந்த நாள் பார்ட்டிக்கு என்னோட கிளோஸ் பிரண்ட்ஸ் தான் வராங்க…..நீ இங்கே புதுசு..எனக்கு நீ கிளோஸ் கிடையாது..’ என்று தீபா நெருக்கமாக கருதிய அதிதி, அவளை நெருக்கமில்லை என்று சொல்லி, பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குத் தீபாவை அழைக்கவில்லை. தீபாவின் எண்ணங்களில் அது குறிப்பிடதக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கௌரிக்குத் தெரியவில்லை. 
அன்று இரவு ஏழு மணிக்கு மேல் வீடு வந்த சேர்ந்த கௌரியிடம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு, அன்று காலையில் வீட்டை விட்டுப் போன சிவா இன்னும் வீடு வந்து சேரவில்லை என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டு கிளம்பிப் போனார் சாவித்திரி அம்மா.  அந்தத் தகவலை அசை போட்டபடி அவளுடைய அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு, சூர்யாவுடன் தூங்கத் தயாரானாள் கௌரி. 
அப்போது அவள் படுக்கையறைக்கு வந்த தீபா,”இன்னைக்கு நானும் இங்கேயே தூங்கறேன் ம்மா.” என்றாள்.
அதைக் கேட்டு,”என்ன ஆச்சு?”உன் ரூம்லே ஃபேன் காத்து சரியா வரலையா?” என்று விசாரித்தாள்.
“உங்களோட படுத்துக்கணும்.” என்று பதில் சொல்லி விட்டு, கௌரியின் ஒப்புதலுக்குக் காத்திராமல், அவளருகே படுத்துக் கொண்டாள்.
கௌரிக்குத் தீபாவின் இந்தச் செய்கை பிடிக்கவில்லை.  சிவாவிற்குப் பிடிக்கும் என்று தெரியும்.  தீபா மறுபடியும் அவர்களோடு படுத்துக் கொள்வது அவனுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று நினைத்தாள்.  ஆனால், அன்றிரவு, சிவா படுக்கைக்கு வந்த போது, கௌரியின் இன்னொரு புறத்தில் பெரிய மகளைப் பார்த்தவுடன், “இவ எங்கே இங்கே?” என்று அவன் ஏமாற்றத்தை உரக்க வெளியிட்டான்.
தீபா, சூர்யா இருவரும் ஆழமான உறக்கத்தில் இருக்க, சிவாவை பற்றிய யோசனையில் ஆழ்ந்தாள் கௌரி. இது போல் அவன் நடந்து கொண்டதே இல்லை.  சாவித்திரி அம்மாவிற்கோ இல்லை அவளிற்கோ தகவல் கொடுக்காமல் இருந்ததில்லை. இன்று ஏன் இப்படி? என்று கவலையானவளுக்கு எப்போதும் போல் படுத்தவுடன் தூக்கம் வரவில்லை. அவளுடைய கைப்பேசியை எடுத்து, அவள் மீட்டிங்கில் இருந்த போது சிவாவிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த போது, காலையில் அவன் கைப்பேசிக்கு வந்த அழைப்பு அவளுக்கு நினைவில் வந்தது. அதுதான் அவனுடைய விசித்திரமான நடவடிக்கைக்குக் காரணமா? என்ற கேள்வி எழுந்தது.  உடனே அவனுடைய கைப்பேசிக்கு அழைக்க,”வந்துக்கிட்டு இருக்கேன்.” என்று சொன்னவனின் குரல் ஒரு மாதிரியாக இருந்தது.
அதற்கு மேல் தூங்க முயற்சி செய்யாமல், வரவேற்பறையில் போய் அமர்ந்து கொண்டு அவன் வரவிற்காக காத்திருந்தாள்.  சில நிமிடங்கள் கழித்து, அவன் சாவியைப் போட்டுக், கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவனின் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள் கௌரி. காடு போல் வளர்ந்திருந்த தலைமுடி எல்லாம் காணாமல் போய், சம்மர் கட் செய்திருந்தான்.  மீசையும் தாடியும் மழிக்கப்பட்டு, சௌகார்பேட் சேட் போல் ஆள் மாறிப் போயிருந்தான்.  அவர்கள் கல்யாணத்திற்குக் கூட செய்திராத மாற்றங்களை இன்று எதற்காக செய்திருக்கிறான் என்று யோசித்தவளுக்கு உடனே புரிந்து போனது.  இப்போது சிவாவின் தோற்றம், அவள் அம்மாவின் காரியங்களைச் செய்த விட்டலின் தோற்றத்தை நினைவுப்படுத்தியது.
இன்று காயத்ரிக்கு திதி கொடுத்திருக்கிறான். அதான் காலையில் வீட்டை விட்டுப் போனவன் இடையே வீட்டிற்கு வரவில்லை.  காலையில் அவன் கைப்பேசியில் வந்த அழைப்பு அதைப் பற்றி தான் இருந்திருக்க வேண்டுமென்று யுகித்தாள்.
சிவாவின் கையிலிருந்த பையை வாங்கிக் கொள்ள அவள் கையை நீட்டிய போது,”வேணாம்..துவைக்கப் போடணும்..நானே செய்யறேன்.” என்றான் சிவா.
அதில் அவன் வீட்டிலிருந்து உடுத்தி சென்ற துணி இருந்தது.  என்ன அது? என்று விளக்கம் கொடுக்கும் நேரம் அதில்லை என்று உணர்ந்ததால் அவனே செய்து விடுவதாக கௌரிக்குத் தெரிவித்தான் சிவா.
“திதி கொடுக்க தானே போயிருந்தீங்க? நீங்க வீட்லேர்ந்து போட்டுக்கிட்டுப் போன துணிதானே இது? என்று கேட்டு சிவாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினாள் கௌரி.
“ஆமாம்.” என்று தலையசைத்தவனின் கையிலிருந்து அதை வாங்கிக் கொண்டு போய் வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு வந்தாள். அங்கே வரவேற்பறை சோபாவில் அமர்ந்து, விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. அவனருகே கௌரி அமர்ந்தவுடன்,
“இன்னைக்குத் தான்னு எனக்குத் தெரியலை..காலைலே சுப்ரமணி ஸர் ஃபோன் வந்த பிறகு தான் தெரிஞ்சுது..ஸருக்குத் தெரிஞ்சவங்க ஓர் இடத்திலே நடத்திக் கொடுக்கறாங்க..முதலே சொல்லாததுனாலே நான் தான் இன்னைக்குக் கடைசி ..…அதை முடிச்சிட்டு அங்கேயிருந்து நேரே கடைக்குப் போயிட்டேன்..எப்போவும் கவனமா நியாபகம் வைச்சிருப்பேன்..இந்த முறை தேதிக்கு முன்னே திதி வந்திடுச்சு..அதான் இப்படி ஆயிடுச்சு” என்றான்.
இவனுக்கு இதெல்லாம் முக்கியம்.  அவளுக்கு அப்படியெல்லாம் இல்லை.  குழந்தைகள் இருவரின் பிறந்த நாள்களை அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் போது தெரிந்து கொண்டாள். சிவாவின் பிறந்த நாளை அவர்கள் திருமணம், கடை பதிவின் போது தெரிந்து கொண்டாள்.  காயத்ரியைப் பற்றி சிவாவிடம் அவள் வீட்டைக் காலி செய்த தினத்தன்று விசாரித்தது தான். 
சிவாவின் முதல் திருமணம் சம்மந்தப்பட்ட விஷயங்களை, பொருள்களை இந்த வீட்டில் எதிர்கொள்ளவில்லை. அதற்குக் காரணம், அவன் பழைய வாழ்க்கையோடு புது வாழ்க்கையை ஒப்பீடு செய்ய விரும்பவில்லை சிவா.  கௌரியின் வழக்கத்திற்கு, பழக்கத்திற்கு அவன் மாறிக் கொண்டான்.  அது ஓரளவிற்குச் சுலபமாக இருந்ததற்குக் காரணம், கடந்த இரண்டு வருடங்களாக அவனும் குழந்தைகளும் எல்லா விதமான சூழ் நிலைகளுக்கும் ஏற்பாடுகளுக்கும் பழகிக் கொண்டதுதான்.  அமைதியாக அமர்ந்திருந்தவனிடம்,
“தேதி என்னைக்கு?” என்று கேட்டாள் கௌரி.
“நாலு நாள் கழிச்சு.” என்றான்.  அந்தத் தேதியை மனத்தில் பதிய வைத்துக் கொண்டவளுக்கு அப்படியே அவன் பெட்டிகளின் நம்பர் பூட்டைத் திறக்க உபயோகித்த எண்கள் மனத்தில் வந்து நிற்க, அதுவும் தேதிதான் என்று சரியாக யுகித்தாள்.  ஆனால் அது எந்தப் பிறந்த நாளோடும் ஒத்துப் போகவில்லை. அதனால், அந்த எண்கள் அவனுடைய முதல் கல்யாண நாளாக இருக்கக்கூடுமோயென்று தோன்றியது. அதைப் பற்றி இப்பொழுது விசாரிக்க முடியாது என்று உணர்ந்து,
“தேதி அன்னைக்கு என்ன செய்வீங்க?” என்று கேட்டாள்.
“முதல் வருஷம் குழந்தைகளை அழைச்சுக்கிட்டுக் காயத் ரியோட வீட்டுக்குப் போனேன்..அவங்க வீட்லே அதை விரும்பலை..அதனாலே அடுத்த முறை எப்போவும் போல கடைக்குப் போயிட்டேன்…. இப்போதைக்குக் குழந்தைங்களுக்கு இதெல்லாம் தெரிய வேணாம்னு நினைக்கறேன். ” என்று கௌரிக்குத் தெரியப்படுத்தினான்.
இது போல் திதியை, தேதியை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்று கௌரிக்குத் தோன்றியது. குழந்தைகளுக்கு, அவர்கள் அம்மாவின் நினைவு அவசியம் இருக்க வேண்டுமென்று நினைத்தாள்.  அதனால்,
“காயத் ரியோட ஃபோட்டோவை சாமி அலமாரிலே மாட்டி வைக்கலாம்..இப்போதைக்குத் திதி கொடுக்கற இடத்திற்கு இரண்டு பேரையும் கூட்டிட்டுப் போக முடியாது..இறந்த தேதி அன்னைக்கு நம்ம வீட்லேயே  இரண்டு பேரும் அவங்க அம்மாவைக் கும்பிடட்டும்.” என்றாள் கௌரி.
கௌரிக்காக அவனுடைய பர்ஸில் இருந்த காயத் ரியின் புகைப்படத்தை அகற்றி இருந்தவனுக்கு, அவளே அவர்கள் வீட்டில் காயத் ரியின் படத்தை மாட்டி வைக்கச் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.  தினமும் காலை, கடவுளை வேண்டிக் கொள்ளும் போது, அவரருகே காயத் ரியின் புகைப்படத்தைப் பார்க்க நேரிடும் போது, அது அவனை எப்படி உணர வைக்ககூடுமென்று அவனுக்கே தெரியவில்லை.
ஆனால் கௌரி சொன்னதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. வருடத்தில் ஒரு நாளாவது காயத்ரியை குழந்தைகளுக்கு நினைவுப்படுத்த வேண்டுமென்று தோன்றியது. ஆனாலும்,
“இப்போதான் இரண்டு பேரும் உன்னை அம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சு இருக்காங்க.” என்றான் சிவா.
“அதுக்காக அவங்க அம்மாவை மறக்கடிக்க வேணாம்.” என்று முடிவு எடுத்தாள் கௌரி. அதோடு அந்த உரையாடலை முடித்துக் கொள்ள நினைத்தவள், அவன் பெட்டிகளைத் திறக்க உபயோகித்த எண் இலக்கை சொல்லி, உங்க முதல் கல்யாண நாளா?” என்று கேட்டாள்.
“ஆமாம்.” என்று தலையசைத்தான் சிவா.
அதன் பின் அந்தப் பேச்சை விடுத்து, டைனிங் டேபிளில் இருந்த உணவைக் காட்டி,”டின்னருக்கு சப்பாத்தி, சன்னா..லேட்டாயிடிச்சே..இப்போ சாப்பிடுவீங்களா?” என்று கொட்டாவி விட்டபடி கேட்டாள் கௌரி.
“இல்லை..அதை ஃபிரிஜ்லே வைச்சிடறேன்..நீ போய்த் தூங்கு..உனக்கும் இன்னைக்கு லேட்டாயிடுச்சு.” என்று கௌரியைப் படுக்கையறைக்கு அனுப்பி வைத்தான் சிவா.
அவனுடைய இரவு சாப்பாட்டை ஃபிரிஜ்ஜில் பத்திரப்படுத்தி விட்டு, அவனிருந்த மன நிலையில் தீபாவின் படுக்கயறைக்குப் போகாமல் நேராக அவன் படுக்கையறைக்கு வந்தான். இரவு விளக்கின் வெளிச்சத்தில், சத்தம் வராமல் அலமாரியைத் திறந்து, அவனுடைய கைலியை வெளியே எடுத்த போது, அதனருகே, காலையில் கௌரி உடுத்தியிருந்த புடவை தொங்கிக் கொண்டிருந்தது. அந்த நொடி அன்று காலையில் நடந்த அனைத்தும் சிவாவைப் பலமாகத் தாக்கியது.  அதன் விளைவாக, அந்தப் புடவையை அவன் வருடிப் பார்க்க, அடுத்த நொடி அந்தப் புடவையை உடுத்தியிருந்தவளை வருடிப் பார்க்கத் தோன்றியது.  அந்த எண்ணத்தை செயல்படுத்த எழுந்த வேகத்தில், கட்டிலை அடைந்தவனுக்கு, அங்கே தலை முதல் கால் வரை போர்த்திப் படுத்துக் கொண்டிருந்த மூத்த மகளைப் பார்த்தவுடன் அதிர்ச்சியானது. 
“இவ எங்கே இங்கே?” என்று அவன் உரக்கக் கேட்டது அங்கே உறக்கத்தில் இருந்த மூன்று பேரையும் சென்று அடையவில்லை.
மறு நாள் காலை அவர்கள் நால்வரும் விடாமல் அடித்துக் கொண்டிருந்த கௌரியின் கைப்பேசியின் அலார்மில் விழித்து கொண்டனர்.  
முதல் கேள்வியாக,”எதுக்கு இங்கே படுத்திருக்க?” என்று தீபாவிடம் சிவா கேட்க,
”அம்மாவை கட்டிக்கிட்டு தூங்கணும்னு தோணிச்சு.” என்று சொன்னதோடு இல்லாமல், கௌரியை இறுக அணைத்துக் கொண்டாள் தீபா.
அதைப் பார்த்து,”நானும்.” என்று மற்றொரு புறத்திலிருந்து கௌரியை அணைத்துக் கொண்டாள் சூர்யா.
உடனே”நானும்” என்று சூர்யா, தீபா இருவரையும் அவளோடு அணைத்துக் கொண்டாள் கௌரி. 
அந்த நொடி, மோஹன கௌரியாக ஒளிர்ந்தாள் கௌரி லக்ஷ்மி.  அதனால் , ”நானும்” என்று சொல்லி அந்தப் அணைப்பில் அவனைப் புகுத்திக் கொண்டான் சிவா.
**************************************************************
திரிலோக்ய மோஹன கௌரி – உற்சாகம், ஊக்கம் அளிப்பவள். புதிய செயல், தொழிலுக்குத் துணையாக இருப்பவள்.
இந்தக் கதையை ரொம்ப நாளா எழுதிக்கிட்டு இருக்கேன். அதனாலே இதைக் கூடிய விரைவில் எழுதி முடிக்க எனக்கும் மோஹன கௌரி அருள் தேவைப்படுத்து.  
நிறைய நாள்களுக்குப் பிறகு, மறுபடியும், கதையினுள் சென்றிருக்கிறேன், எங்கேயாவது சொதப்பியிருந்தா..மன்னிப்பு.

Advertisement