Advertisement

அத்தியாயம் – 31_2
அதே விலையில் பென்சில் பவுச், ஸ்டெஷனரி செட், எரேசர் பேக், பல வடிவங்களில் ஷார்ப்னர் பேக், கலர் பென்சில், பென் பேக் என்று வெரைட்டியாகக் கொண்டு வந்து போட்டான் சிவா.  அதற்குப் பின் பார்ட்டிகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கத்தன. அதனால் பொறுமையிழந்த சிவா, கௌரியைக் காரணம் காட்டி விழாக்களுக்குப் போவதைக் குறைத்தான்.  கௌரி வீட்டிற்கு வர தாமதமானால், வெளியூருக்குச் சென்றிருந்தால், பார்ட்டிக்குச் செல்லத் தடை விதித்தான். அம்மாவின் பின்னால் நின்று, அவன் அதிகாரத்தை நிலைநாட்டி, அக்மார்க் அப்பாவாக நடந்து கொண்டான்.  அதைப் புரிந்து கொண்ட கௌரியும் அந்த வாய்ப்பைப் பயன் படுத்தி சூர்யாவை வழிக்குக் கொண்டு வர முயன்றாள்.  அந்தத் தினங்களில் அவளுடைய வீட்டுப் பாடங்களைச் சூர்யா சரியாகச் செய்து முடித்தால், சாவித்திரி அம்மாவுடன் அவர்கள் இருவரையும் பார்ட்டிக்கு அனுப்பி வைத்து, அப்பாவின் கட்டளைக்குப் பயப்படாத அக்மார்க் அம்மாவாக நடந்து கொண்டு குழந்தைகள் இருவரின் அன்பைச் சம்பாதித்தாள்.
 தீபாவின் அறையிலிருந்து திரும்பிய சில நிமிடங்களில், கிட்சனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவளை பின்னாலிருந்து அணைத்தாள் தீபா.
அதுவரை கௌரியுடன் ஓட்டிக் கொண்டிருந்த சோர்வு அந்த அணைப்பில் மறைந்து போனது. அதனால் உற்சாகத்துடன்,“இன்னும் கொஞ்சம் தூங்கலாம்..டயமிருக்கு.”  என்றாள்.
அதற்குப் பதில் சொல்லாமல் அவள் அணைப்பை இறுக்கினாள் தீபா. ஏதோ விஷயமென்று புரிந்து கொண்ட கௌரி, அடுப்பை அணைத்து விட்டு, தீபாவின் புறம் திரும்பி,”என்ன டா?” என்று விசாரித்தாள்.
“அதிதிக்கு இன்னைக்குப் பர்த் டே ம்மா” என்றாள் தீபா. அதிதி அதே பில்டிங்கில் இருக்கிறாள்.  தீபாவிற்கு நெருக்காமான சிநேகிதி.
அதைக் கேட்டு அடடா, காலையிலேவா என்று ஆயாசமடைந்த கௌரி,”தீபு.” என்று அவளைச் செல்லமாக அழைத்து,”இன்னைக்குச் சாயங்காலம் நான் வர லேட்டாயிடும்.” என்றாள்.
தீபுவை ஒதுக்கிய தீபா,”அம்மா, சூர்யா ஹோம்வர்க்கை முடிச்சிட்டா நாங்க போகலமில்லே?” என்று அடுத்த கண்டிஷனை நிறைவேற்றி பார்ட்டிக்குப் போகத் திட்டமிட்டாள்.  இப்போதெல்லாம் அக்காவும் தங்கையும் சேர்ந்து படிக்கிறார்கள், வீட்டுப் பாடங்களைச் சேர்ந்து செய்து முடிக்கிறார்கள்.  தீபாவின் வழி காட்டலில் சூர்யாவும் அவள் கடமைகளைத் தானாகச் செய்யக் கற்றுக் கொள்ளுகிறாள்.  இன்று கௌரியால் சரியான நேரத்திற்கு அலுவலகத்திலிருந்து புறப்பட முடியாது அதனால் சாவித்திரி அம்மாதான் இரவு உணவைத் தயார்ச் செய்ய வேண்டும். எப்படி இதைச் சமாளிக்கலாமென்று யோசனை செய்தவள்,”சாயங்காலம் சாவி அம்மாகிட்டே பேசறேன்..இப்போ நீ ஸ்கூலுக்கு ரெடியாகு.” என்றாள் கௌரி.
சாவித்திரி அம்மாவின் ஃபோனிலிருந்து கௌரிக்கு ஃபோன் செய்வது குழந்தைகளுக்கு வாடிக்கையாகி விட்டது.  வீட்டில் ஒரு லேண்ட்லைன் ஃபோன் வேண்டுமென்ற கௌரியின் ஆலோசனைக்கு சிவா செவி சாய்க்கவில்லை.  வீட்டுச் செலவுகள் அனைத்தையும் கௌரி தான் சமாளிக்கிறாள் அதனால் சிறு தொகையாக இருந்தாலும் தேவையில்லாதது என்று அவனுக்குத் தோன்றியது.  அதனால், அவசரத்திற்கு சாவித்திரி அம்மாவின் கைப்பேசியை உபயோகித்தனர் குழந்தைகள்.  
பெரும்பாலும் மாலை வேளையில் அவர்கள் ஃபோன் செய்யும் போது அது பஞ்சாயத்திற்காக தான் இருக்கும்.  பார்க் போக, பார்ட்டி போக, அவள் இதைச் செய்தாள், இவள் அதைச் செய்தாள், சாவிம்மா செய்யவிடவில்லை என்று மகள்கள் இருவரும் அவர்கள் அம்மாவின் அலுவலக நேரத்தில் அவர்களின் சண்டையை தீர்த்து வைக்கத் தொல்லை செய்தனர்.  இது எப்படி ஆரம்பமானது என்று கௌரிக்குத் தெரியவில்லை.  ஆனால் அந்த வாடிக்கையால் அவர்கள் மூவருக்கும்  இடையே ஓர் ஒட்டுதல், பந்தம் ஏற்பட்டது.
“ஓகே ம்மா.” என்று உற்சாகமின்றி பதில் அளித்துவிட்டு வெளியேறினாள் தீபா.  
கடந்த இரண்டு மாதங்களாக குழந்தைகளை எங்கேயும் வெளியே அழைத்துச் செல்லவில்லை.  அவர்கள் வழக்கமாக செல்லும் மாலிற்குக் கூட போக முடியவில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் சிவா கடைக்குச் செல்லுவதால் இவர்கள் மூவரும் வீட்டில் இருந்தார்கள். புதுக் கடையின் பூஜைக்குப் பின், தொடர்ந்து  இரண்டு ஞாயிற்றுக் கிழமைகள், உடல் நலம் குன்றியிருந்த மேகலா ஆன்ட்டியைச் சந்திக்கச்  குழந்தைகளையும் அழைத்துச் சென்றாள் கௌரி. அதன்பின் அவளும் திருச்சி, மதுரை என்று வெளியூர் பயணங்கள் மேற் கொண்டதால் அங்கே போவதற்கும் நேரம் கிடைக்கவில்லை. 
கௌரி ஊரில் இருக்கும் ஞாயிற்றுக் கிழமை சாவித்திரி அம்மாவிற்கு விடுமுறை என்பதால் அன்றைக்கு வீடு கௌரியின் பொறுப்பு. வார நாள்களில் தள்ளிப் போட்ட வேலைகள் அனைத்தையும் அந்த ஒரு நாளில் செய்ய வேண்டியிருந்தது.  அதில் மிக முக்கியமாக, தீபா, சூர்யா இருவருக்கும் நீளமாக வளர ஆரம்பித்திருந்த தலைமுடியைப் பராமரிப்பதில் காலை பொழுது ஓடிப் போனது. சமையல் வேலையை இழுத்துக் கொள்ளாமல், ஞாயிறு காலை உணவு பிரெட், மதியத்திற்குக் கலந்த சாதம், இரவு நூடில்ஸ் என்று இலகுவானதைச் செய்தாள் கௌரி.  அவர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு வந்தான் சிவா.
அவர்களுடன் சிறிது நேரம் கழித்த பின், மறுபடியும் சிவா அவன் கடைக்குச் சென்றவுடன், குழந்தைகளும் அவளும் சிறிது நேரம் தூங்குவார்கள்.  அன்று மாலை பொழுது அடுத்த நாளிற்குத் தேவையானவற்றைத் தயார் செய்வதில் கழிந்து விடும்.  இரவு சிவா வீடு வந்து சேரும் போது மூவரும் உறங்கிக் கொண்டிருப்பார்கள். அடுத்த நாள் காலை திங்கட் கிழமை மற்ற மூவரும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது அவன் கடைக்கு விடுமுறை என்பதால் சிவா மட்டும் தூங்கிக் கொண்டிருப்பான். அன்றைய தினத்தை ராம கிருஷ்ணன், சுப்ரமணி ஸர், கார், ஸ்கூட்டி, பைக் ரிப்பேர், கௌரியின் ஃபிளாட் என்று மற்ற வேலைகளுக்கு ஒதுக்கியிருந்தான்.  அதில் அவன் குடும்ப நபர்கள் இடம் பெறவில்லை. அவன் அம்மாவாக அழைத்த போது பேசியவன் அவனாக யாரையும் அழைத்துப் பேச முயற்சி செய்யவில்லை. அதே போல் அவனுடைய ஓய்வு நாளில் அவர்கள் யாரையும் சந்திக்கச் செல்லவில்லை. அதை அவனுடைய செயலாக, முடிவாக எடுத்துக் கொள்ள முடியாமல், கல்யாணத்திற்குப் பின், கௌரியால் தான் சிவா மாறிப் போனான் என்று வன்மம் கொண்டார் ஜமுனா.
நேற்று இரவு சிவா எப்போது வந்தான் என்ற விவரம் கௌரிக்குத் தெரியவில்லை. கடையை மூடி விட்டு அவன் வீட்டிற்கு வரும் வரை அவளால் விழித்திருக்க முடியவில்லை.  ஒரு சில நாள்கள் அவள் முயன்ற போது அது சரிப்படாது என்று தோன்றியதால் அவள் அதைத் தொடரவில்லை, சிவாவும் வற்புறுத்தவில்லை. இன்னும் சில நிமிடங்களில் சாவித்திரி அம்மா வந்துவிடுவார்.  அதன் பின் குழந்தைங்களைத் தயார் செய்வதில் அவள் நேரம் பறந்து விடும்.  ஏனோ இன்று அலுவலகத்திற்குச் செல்ல சோம்பேறித் தனமாக இருந்தது.  ஆனால் ஒரு முக்கியமான வேலை இருந்தது.  அதற்காக கண்டிப்பாக போக வேண்டுமென்று அலைபாய்ந்து கொண்டிருந்த மனதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள் கௌரி.  அப்போது அழைப்பு மணி ஒலித்தது.
கதவைத் திறந்தவுடன்,”ஆட்டோலே வந்தேன்..இல்லைன்னா லேட்டாகியிருக்கும்.” என்றார் சாவித்திரி அம்மா. மாலையில் நடக்கவிருக்கும் பிறந்த நாள் பார்ட்டி மனதிலிருந்ததால் அவர் சொன்னது கௌரியின் மனத்தில் பதியவில்லை.
“தீபா எழுந்திரிச்சிட்டா..சின்னவளைத் தான் எழுப்பணும்…..மாவு பிசைஞ்சு வைச்சிருக்கேன்..பூரி செய்திடுங்க..உருளைக் கிழங்கு மசாலா செய்திட்டேன்..மத்தியானத்துக்கு தக்காளி ரசம், வெண்டக்காய் பொரியல், வெள்ளரிக்காய் பச்சடி..மீதி இருந்தா அதை ஃபிரிஜ்லே வைச்சிடுங்க..இராத்திரிக்குக் கொண்டைக் கடலை ஊற வைச்சிருக்கேன்.” என்று அனைத்தையும் ஒப்பித்து விட்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள்.
சிவாவின் மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் சூர்யா.  சுவர்க் கடிகாரத்தைப் பார்த்த கௌரிக்குப் பக் என்றானது.  சாவித்திரி அம்மா ஏன் ஆட்டோ பிடித்து வந்தார் என்று இப்போது தான் புரிந்தது.  கால் மணி நேரம் தாமதமாக வந்திருந்தார். ஏன் இன்றைக்கு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை என்று புரியவில்லை.  படுக்கையில் அமர்ந்தவள், “சூர்யா, சூர்யா” என்று அவளை உலுக்கி எழுப்ப, அவள் எழுந்து கொள்ளவில்லை அவளுடைய அப்பா விழித்துக் கொண்டான். 
இரவு உடையில் இருந்தாள் கௌரி.  ஒரே டிசைனில் காட்டன் பேண்ட், சர்ட். டி ஷர்ட், கைலியில் இருந்தான் சிவா.  அவள் முகத்தில் இருந்த பதற்றத்தைப் புரிந்து கொண்டு, அவன் மீது படுத்திருந்த சூர்யாவை தூக்கிப் படுக்கையில் விட்டு, அவளை உலுக்கி எழுப்பினான் சிவா.
“லேட்டாயிடுச்சு…அவளை அப்படியே தூக்கிட்டு பாத் ரூமுக்கு வாங்க.” என்று கட்டளையிட்டு விட்டு பாத் ரூமிற்குள் நுழைந்தாள் கௌரி.  அவள் பின்னால் சூர்யாவைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் சிவா.
சூர்யாவைப் பாத் ரூம் ஸ்ட்டுலில் நிற்க வைத்து, பல் தேய்த்து விட்டு, குளிப்பாட்டுவதற்காக அவள் உடைகளைக் களைந்தாள் கௌரி.
“பால் குடிச்சிட்டுக் குளிக்கட்டும்.” என்றான் சிவா.
“டயமில்லை..பஸ் போயிடும்..சாவித்திரி அம்மாகிட்டே லேசான சூடுலே பால் ரெடி செய்யச் சொல்லுங்க..அப்படியே தீபா என்ன செய்யறாண்ணு பாருங்க.” என்று சிவாவை விரட்டினாள்.
அதற்குப் பின் வந்த நிமிடங்களில் சூர்யாவைக் குளிப்பாட்டி. சீருடை அணிவித்து டைனிங் டேபிளிற்கு அழைத்து வந்து பாலுடன், ஒரு பூரியை சாப்பிடக் கொடுத்தாள்.  அதே சமயம் இன்னொரு நாற்காலியில் அமர்ந்திருந்த தீபாவின் தலையை வாரி, பொட்டு வைத்து தயார் செய்தாள். சாப்பிட்டுக் கொண்டிருந்த சூர்யாவின் தலையை வாரி தயார் செய்த போது, பேருந்து வரும் நேரமாகியிருந்தது.  அவர்கள் பையுடன், டி ஷர்ட், பேண்ட்டில் தயாராக வாயிலில் நின்றிருந்தான் சிவா. கடைசியாக ஷு மாட்டி சூர்யாவைத் தயார் செய்த போது,
“அம்மா, பாத் ரூம் வருது.” என்றாள் சூர்யா.
அதைக் கேட்டு சிவா, கௌரி இருவருக்கும் ஐயோ என்றானது. தமாதமாகி விட்டது என்று நினைத்துப் பாலைக் கடைசியில் குடிக்க வைத்திருக்கக் கூடாது என்று தாமதமாக உணர்ந்தாள் கௌரி. 
அப்போது,“அம்மா,” என்று சூர்யா கத்தியவுடன், அவளை அப்படியே பாத் ரூமிற்குத் தூக்கிச் சென்றாள் கௌரி. அவர்கள் இருவரும் வெளியே வந்த போது கௌரியின் கார் சாவியுடன் நின்றிருந்தான் சிவா.
அதைக் கவனித்த சூர்யா,”ஐ கார்.” என்றாள்.
“அடுத்த ஸ்ட்டாப்லே நிறைய பசங்க காத்திருப்பாங்க, அங்கே வரை கார்லே அழைச்சிட்டுப் போய் ஏத்திவிட்டிட்டு வரேன்.” என்றான் சிவா.
அடுத்த ஸ்டாப் வரை தான் கார் சவாரி என்று கேட்டவுடன் தீபா, சூர்யா இருவரின் முகங்களும் சோகமானது.  உடனே இருவரும் கௌரியை நோக்க, அப்பாவின் முடிவை அம்மா மாற்றுவாள், பள்ளிவரை காரில் செல்லலாம் என்ற எதிர்பார்பு அதில் இருந்தது. அவள் என்ன செய்யப் போகிறாள் என்று சிவாவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.  இந்தச் சூழ் நிலையில் அவள் தலையிட்டால்,’நீயே பள்ளி வரை கொண்டு போய் விடு’ என்று அவளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அவன் மறுபடியும் தூக்கத்தைத் தொடரும் அபாயம் இருப்பதை உணர்ந்த கௌரி,”பஸ் போயிடும்..இப்போ சீக்கிரம் கிளம்புங்க..அப்படியே சாயங்காலம் சீக்கிரம் வேலையை முடிங்க.” என்று குழந்தைகளைக் கிளப்பினாள் கௌரி.
இவள் எதற்கு தேவையில்லாமல் காலை வேளையில் மாலை வேளையைப் பற்றி பேசுகிறாள் என்று கௌரியைச் சிவா புதிராகப் பார்க்க, ஏன் என்று புரிந்து  கொண்டு , மகிழ்ச்சியடைந்த தீபாவோ,”அப்பா, இப்போ நீங்க தான் லேட் செய்யறீங்க.” என்று சிவாவிடம் சிடுசிடுத்தவள், சுமித்ர கௌரியாக வரம் அளித்த கௌரி லக்ஷ்மியைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்து,”அம்மா, பை.” என்றாள்.
————————————————————
Kundalini skips விசுத்தி நிலை, 5th level and reaches the sixth level, ஆக்ஞா சக்கரம்..this chakra deals with intuition, decision making..
In the story, siva and gowri,  intuitively understand each other and take decisions.
Only one more to go..sahasraram..the last stage..oneness..
————————————————————-
சுமித்ர கௌரி – சுமித்ரா, சினேகிதமானவள், மன நிம்மதியை அளிக்கக்கூடியவள்.
இராம நாதபுரம், திருவாடானை கோவிலில் ஆதிரத்தினேசுவரரோடு அருள்பாலிக்கும் சினேகவல்லி அம்பாள், சுமித்ர கௌரி அம்சமானவள். 
——————————————————————

Advertisement