Advertisement

அத்தியாயம் – 31_1
வினாக்களும், விளக்கங்களும் தேவையில்லை என்ற நிலையை இருவரும் அடைந்திருந்ததால் சிவாவிற்கும் கௌரிக்கும் இடையே வாக்குவாதங்கள் அதிகமாக எழவில்லை.  பெற்றோர் ஆனபின், வாழ்க்கையில் ஏற்படும் சந்தோஷங்கள், சஞ்சலங்களுக்கு குழந்தைங்கள் தான் காரணமாகிறார்கள். இங்கே இருவரும் கணவன், மனைவி ஆகும் முன் அம்மா, அப்பாவாக உணர்ந்து செயல்பட ஆரம்பித்ததால், எந்தப் பிரச்சனையானலும், எங்கே சுற்றினாலும், எப்படியாவது குழந்தைகளை அவர்களும், அவர்களை குழந்தைகளும் ஒரு கோட்டில் கொண்டு வந்து சேர்த்தனர்.
அவனுடைய சாவி போட்டு வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே வந்தான் சிவா.  எப்போதும் போல் அமைதியாக இருந்தது வீடு. அதற்குக் காரணம் அப்போது மணி இரவு பத்தரையைத் தாண்டி இருந்தது.   கௌரியும் குழந்தைகளும் ஆழந்த உறக்கத்தில் இருந்தனர்.  டைனிங் டேபிள் மீது அவனுக்கான இரவு உணவு காத்துக் கொண்டிருந்தது.  அவன் உடையை மாற்றிக் கொள்ள சிவா படுக்கையறைக்குள் நுழைந்தவுடன், இரவு விளக்கின் வெளிச்சத்தில்,  குப்புற படுத்துக் கொண்டிருந்த சூர்யாவும், அவளை அடுத்து உறங்கிக் கொண்டிருந்த கௌரியும் தென்பட்டனர்.
ஜன்னலிருந்து வீசிய காற்றோடு ஸீலிங் மின்விசிறி, மேஜை மின்விசிறி, இரண்டின் காற்றும் சேர்ந்து படுக்கையறையைக் குளுமையாக்கியிருந்தது. இந்த வீட்டிற்கு வந்து இரண்டு மாதம் போல் ஆகியிருந்தது. இன்னும் கௌரியின் ஃபிளாட்டிலிருந்து எடுத்து வந்த ஏஸியைப் பொருத்தவில்லை.  கடையின் வேலையை முடித்துக் கொடுத்த கார்பெண்டருக்கு வீட்டில் ஏஸி பொருத்துவது சின்ன வேலையாக தெரிந்ததால் இந்தப் பக்கம் வரவில்லை.  அடுத்து வரும் திங்கட்கிழமையில் சிசிடிவி, ஏஸி இரண்டையும் முடித்துவிட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான் சிவா. 
சத்தம் எழுப்பாமல் உடை மாற்றிக் கொண்டிருந்தவனுக்கு  இளைய மகள், மனைவி இருவரின் அமைதியான, ஆழமான தூக்கத்தைப் பார்த்துச், சாப்பாட்டைத் தியாகம் செய்து விட்டு அவர்களைப் போல் உறங்க  ஆசை வந்தது. சாப்பாட்டை வீணாக்க முடியாது அதனால்  கிடுகிடுவென்று உடை மாற்றி, இரவு சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு, இன்னொரு படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்த தீபாவைப் பார்க்கச் சென்றான். இப்போதெல்லாம் சூர்யாவை விட தீபாவினால் தான் அவனுக்குக் குழப்பமும், கவலையும் ஏற்பட்டது. 
குழந்தைகளின் அறை சிறியதாக இருந்ததால் அந்த அறைக்கு  ஒரு மின்விசிறி போதுமானதாக இருந்தது. பங்க் பெட்டில்,  மேல் படுக்கையில் தலை முதல் கால் வரை போர்த்திப் படுத்திருந்தாள் தீபா.  கீழ் படுக்கையில் அவளின் புத்தகங்களும், ஸ்கூல் பேக்கும் இருந்தது.  அந்தப் படுக்கை சூர்யாவுடையது.  பகல் வேளையில் இருவரும் அந்தப் படுக்கையைப் படிப்பதற்காக உபயோகப்படுத்தினர்.  இரவுகளில் தீபா மட்டும் தனியாக இங்கே படுத்துக் கொள்ள, சூர்யா அவர்களுடன் படுத்துக் கொண்டாள்.  சில நாள்கள், கீழ் படுக்கையில் சூர்யாவுடன் கௌரியும் படுத்துக் கொள்ளும் போது அவன் மட்டும் தனியாக அவர்கள் படுக்கையறையில் படுத்துக் கொள்வான்.
இந்த வீட்டில் இருக்க ஆரம்பித்தவுடன், முதல் சில் நாள்கள், நால்வரும், பெரிய படுக்கையறையில் ஒரே கட்டிலில் படுத்துக் கொண்டனர்.  அதன் பின் பங்க் பெட்டில் தனியாகப் படுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவள் விருப்பத்தை வெளியிட்டாள் தீபா.  சிவாவிற்கு அதில் உடன்பாடில்லை.  அவர்களுடனே படுத்துக் கொள்ளட்டும், பகல் வேளையில் மட்டும் குழந்தைகள் அந்த அறையை உபயோகிக்கட்டுமென்று நினைத்தான்.  ஆனால் தீபா பிடிவாதமாக இருந்தாள்.  ‘அம்மா, ப்ளீஸ்’ என்று கௌரியின் ஆதரவை நாட, அதற்குக் கௌரியும்,’பக்கத்து ரூம்லேதானே’ என்று ஆதரவு கொடுக்க,  மறுக்க முடியாமல், அரைமனதாக ஒப்புக் கொண்டான் சிவா. 
தீபா தனியாக தூங்கிய அந்த முதல் இரவு, தூக்கம் வராமல் அரைமணிக்கு ஒருமுறை தீபாவின் அறையை எட்டிப்  பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.  அவள் அப்பாவின் அவஸ்தையை அறியாமல் ஹாயாக தூங்கிக் கொண்டிருந்தாள் தீபா. அன்றும் இதே போல் அவர்களின் படுக்கையறையில் கௌரியும், சூர்யாவும் உறங்கிக் கொண்டிருக்க, இரு அறைகளுக்கும் நடுவே நடந்து நடந்து களைப்பு மிகுதியால் பங்க் பெட்டின் கீழ் படுக்கையில் படுத்துக் கொண்டான் சிவா. 
அடுத்த நாள் காலை, விழித்தவுடன், அவனைக் காணாது, எங்கே போயிருப்பான் என்று யோசனையுடன் வந்த கௌரியின் கண்களுக்குத் தீபாவின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த சிவாவைப் பார்த்தவுடன் விஷயம் என்னயென்று புரிந்து போயிற்று. தனியாக உறங்க மகளுக்குத் தைரியம் இருக்கிறது.  அதை ஏற்றுக் கொள்ள தகப்பனுக்குத் தைரியமில்லை.  
அதே நேரம் தூக்கத்திலிருந்து விழித்து, மேல் படுக்கையிலிருந்து கீழே இறங்கி வந்த தீபா, அங்கே உறங்கிக் கொண்டிருந்த சிவாவைப் பார்த்தவுடன், ஆத்திரத்துடன் அவன் மேல் பாய்ந்தாள். “நான் தனியாப் படுக்கணும்னு சொன்னேன்.” என்று கூச்சலிட்டு, ஏமாந்துவிட்டோம் என்று எண்ணி அழ ஆரம்பித்தவள், கதவருகே நின்று கொண்டிருந்த கௌரியிடம்,”அம்மா,..அப்பா இங்கே தான் தூங்கியிருக்காங்க..சும்மாவாச்சும் தனியான்னு சொல்லியிருக்காங்க.” என்று அழுகையினுடே கம்ப்ளேண்ட் செய்தாள். 
அதைக் கேட்டு பதற்றத்துடன் எழுந்து கொண்ட சிவா, உண்மையை வெளியே சொல்ல முடியாமல், வேறு என்ன சொல்லி தீபாவைச் சமாதானம் செய்வது என்று தெரியாமல், கௌரியைத் தவிப்புடன் பார்க்க,”அப்பா இங்கே வந்து பத்து நிமிஷம்தான் ஆச்சு தீபு..இராத்திரி எங்களோட அந்த ரூம்லே தான் தூங்கினாங்க.” என்று சிவாவின் சங்கடத்தைப் புரிந்து கொண்டு, தீபாவின் மேல் அவனுக்கிருந்த கரிசனத்தை உணர்ந்து, அவள் சொன்ன அந்தப் பொய்யிலேர்ந்து பெற்றோர்களாக அவர்கள் புரிதல் ஆரம்பமானது. 
புது வாழ்க்கையில் குழந்தைங்கள் இருவரோடு அவர்கள் இருவரும் பொருந்திக் கொள்ள சிரமப்பட்டப் போது, அதைச் சரி செய்ய, இது போன்ற பொய்களைச் சூழ் நிலைக்கு ஏற்றார் போல் சொல்லி ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொண்டனர் சிவாவும் கௌரியும். இருவரும் அவர்கள் அறியாமலேயே அவரவர் எண்ணங்களை, உணர்வைகளை வார்த்தைகளின் உதவியில்லாமல் புரிந்து கொள்ள ஆரம்பிக்க, இருவரின் குண்டலினி திறனும் விசுத்தி நிலையைத்  தாண்டி ஆரவாரமில்லாமல் அடுத்த ஆதாரமான (சக்கரம்) ஆக்ஞையை அடைந்தது.
கௌரியின் எண்ணங்களை உணர்ந்து சிவா செயல்பட, சிவாவின் எண்ணங்களை உணர்ந்து கௌரி செயல்பட, எந்த இடையூறும் இல்லாமால் அப்படியே அவர்கள் வாழ்க்கை தொடர்ந்திருந்தால், தொடர் வரிசை நிகழ்வாக, இயற்கையாக, இருவரும் இணைந்து கௌரிசங்கர் ஆகியிருப்பார்கள். ஆனால் அடுத்தடுத்து நிகழந்த நிகழ்வுகளில் கௌரியின் மனம் சிறிது தடுமாறியது அதனால் அந்த நிகழ்வு சற்றுத் தள்ளிப் போனது,
தீபாவைப் பார்த்துவிட்டு அவனுடைய படுக்கை அறைக்குத் திரும்பியவன், உறங்கிக் கொண்டிருந்த இருவரின் தூக்கத்தைக் கலைக்காமல் சூர்யாவின் அருகில் படுத்துக் கொண்டவுடனேயே தூங்கிப் போனான்.  சிவா தூங்கிப் போன சில மணி நேரங்கள் கழித்து விழித்துக் கொண்டாள் கௌரி.  இப்போதெல்லாம் அலார்ம் இல்லாமல் காலையில் விழிப்பு வந்துவிடுகிறது.  அவளை அணைத்துக் கொண்டிருந்த சூர்யாவின் கையை விலக்கி, மெதுவாக எழுந்து அமர்ந்து கொண்டாள்.  ஏனோ இன்றைக்குக் காலையிலேயே களைப்பாக உணர்ந்தாள்.  கடந்த இரண்டு மாதமாக ஆபிஸ் வேலையோடு வீட்டையும் சமாளித்துக் கொண்டு, வெளியூர் போய்க் கொண்டு என்று பறந்து கொண்டிருந்ததின் பலன் அந்த நொடியில், கலையாத துயிலிருந்து எழுந்த பின்னும் விலகாத சோர்வில் உணர்ந்தாள்.  
மாலினி அக்காவின் ஆலோசனைபடி சாவித்திரி அம்மாவை வேலையில் வைத்துக் கொண்டது அவளுக்குப் பெரும் உதவியாக இருந்தது.  காலையில், அவள் பாதியில் விட்டுப் போகும் சமையலைச் செய்து முடித்து, மதியம் அதைக் குழந்தைகளுக்கு கொடுத்து, மாலையில் அவர்களைப் பூங்காவிற்கு அழைத்து சென்று, அவள் வீடு வந்து சேர்ந்தவுடன் இரவு சமையலுக்கு உதவி செய்து விட்டு அவருடைய வீட்டுக்குச் செல்வார் சாவித்திரி அம்மா. இந்த வீட்டில் குழந்தைங்கள், சமையல் இரண்டும் தான் அவருடைய பொறுப்பு.  மற்றபடி வீட்டைப் பெருக்கி துடைக்க, பாத்திரங்கள் கழுவ என்று வேலைக்காரிகள் இருவரை நியமித்திருந்தாள் கௌரி. அதே போல் அவள் ஊரில் இல்லாத ஞாயிற்றுக் கிழமைகளில் வேலைக்கு வரவேண்டுமென்று சாவித்திரி அம்மாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தாள். இதுவரை அந்த ஒப்பந்தத்தை மீறாமல், சாக்குப் போக்குச் சொல்லாமல் அந்த ஞாயிற்றுக் கிழமைகளில் வேலைக்கு வந்து போனார்.
வீட்டு வேலைகள் குறைந்ததால் தனக்குச் சம்பளம் குறைந்து விடுமோ என்று கவலையான சாவித்திரி அம்மாவின் கவலையைப் போக்கி, அவர் சம்பளத்தை உயர்த்தி, அவர் மேற்பார்வையில் மற்ற இருவரும் வேலை செய்வார்கள் என்று அவருக்குப் புரிய வைத்தாள்.  அதே போல் காலை, மாலை இரு வேளைகளிலும் அவருடன் வீட்டு பொறுப்புக்களைப் பங்குப் போட்டுக் கொண்டு குடும்ப நபர் போல் உணர வைத்தாள். அதன் விளைவாகப் பொறுமை இழந்து குழந்தைங்களைக் கத்துவது, திட்டுவது என்று சகலமும் நின்று போய் சாவித்திரி அம்மாவிற்கும் குழந்தைகளுக்கும் நடுவே நட்பு உருவாக ஆரம்பித்திருந்தது.  பார்க், பிறந்த நாள் விழா என்று சாவித்திரி அம்மாவின் துணையோடு, சில சமயங்களில் அவரின் சிபாரிசோடு குழந்தைகளின் நாள்கள் சந்தோஷமாகக் கழிந்து கொண்டிருந்தன.
உடல் சோர்வை மூட்டைக் கட்ட முடியாமல் அதனுடனேயே காலை கடன்களை முடித்துக் கொண்டு சமையலறையில் அவளுடைய வேலைகளை ஆரம்பித்தாள் கௌரி.  காலை உணவு தயார் செய்து கொண்டே, கிடைத்த இடைவெளியில் அவளுடைய காப்பியுடன் தீபாவின் அறைக்குச் சென்றாள் கௌரி. முந்தைய இரவு, சிவா நோட்டம் விட்டது போல், அறையின் வாயிலில் நின்று கொண்டு உறங்கிக் கொண்டிருந்த தீபாவை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கௌரி. நான்கு வயது ஆகியிருந்த சூர்யாவை, சரியாக எதையும் சொல்லத் தெரியாத சூர்யாவைச் சுலபமாக புரிந்து கொள்ள முடிந்த கௌரிக்கு எட்டு வயது தீபா இன்று வரை புதிராக இருந்தாள். சிவா சொன்னது போல் 
அவளைச் சிறு பெண்ணாக ஒதுக்க முடியவில்லை, பெரிய பெண்ணாக நினைத்து சேர்த்துக் கொள்ள முடியவில்லை.  
இந்த வீட்டிற்கு வந்த புதிதில், பார்க், பள்ளி, பக்கத்துப் பில்டிங் என்று புதிதாகக் கிடைத்திருக்கும் சி நேகிதர்களின் பிறந்த நாள் பார்ட்டிக்குச் செல்ல விரும்பினார்கள் தீபாவும் சூர்யாவும்.  முதலில் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாவித்திரி அம்மாவுடன் வார நாள்களில் அவர்களை அனுப்பி வைத்தான் சிவா. ஞாயிற்றுக் கிழமையன்று சாவித்திரி அம்மாக்கு விடுமுறை, அவனுக்குக் கடை, கௌரிக்கும் அன்று ஓய்வு தேவை என்பதால் அன்று குழந்தைகளைப் பார்ட்டிக்கு அனுப்ப மறுத்தான்.  
ஆனால் நாளாக நாளாக  வார நாள்களில் நடக்கும் பார்ட்டிகளுக்கு அவர்களை அனுப்பி வைக்க சிவா இஷ்டப்படவில்லை.  அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன.  பார்ட்டியென்று வீட்டுப் பாடத்தை முடிக்காமல் பிரச்சனை செய்தாள் இளையவள்.  தீபாவினால் வேறு பிரச்சனை முளைத்தது. ஒவ்வொரு பார்ட்டியிலும் வித விதமான பரிசுப் பொருள்கள் கொடுக்க வேண்டுமென்று அடம் பிடிக்க ஆரம்பித்தாள்.  அவன் கடையிலிருந்து ஒரே போல் பென்சில் பாக்ஸ் எடுத்து வந்து வீட்டில் போட்டிருந்தான் சிவா. முதல் இரண்டு, மூன்று பிறந்த நாள் விழாவிற்கு அதை எடுத்துச் சென்ற தீபா, அதற்குப் பின் வேறு பரிசுக் கொடுக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள். அதனால் அப்பாவிற்கும் மூத்த பெண்ணிற்கும் பெரிய சண்டையானது.  அதைத் தீர்க்க வழி தெரியாமல் திணறிப் போனாள் கௌரி.
”பென்சில் பாக்ஸ் சும்மாவா வருது..வெளியே வித்தாக் காசு தானே..இவ கேட்கற மாதிரி வித விதமா எத்தனை பேருக்கு இலவசமாக் கொடுத்திட்டு இருக்க முடியும்?” என்று கௌரியிடம் கோபப்பட்டான் சிவா.
“புது வீடு.புது பிரண்ட்ஸ்…இந்தச் சூழ் நிலைக்குப் பொருந்திப் போக குழந்தைங்களும் முயற்சி செய்யறாங்க..கொஞ்ச நாள்லே இதெல்லாம் பழகிப் போன பிறகு சுவாரஸியம் போயிடும்….பொறுமையா இருங்க.”என்றாள் கௌரி.
“இவ்வளவு நாள் பொறுமையா தான் இருந்தேன்..இருக்கேன்.”
“அதே விலைலே இரண்டு, மூணு சாமான் கொண்டு வாங்க..அப்போவும் சமாளிக்க முடியலைன்னா வேற ஏதாவது வழிக் கண்டுபிடிக்கலாம்.” என்றாள் கௌரி.

Advertisement