Advertisement

அத்தியாயம் – 30_2
“சுப்ரமணி ஸர்கிட்டே நல்ல நாள் பார்க்கச் சொல்லியிருக்கேன்..முதல்லே நம்ம கல்யாணத்தைப் பதிவு செய்யணும்..அப்புறம்  கடையை உன் பெயர்லே..வியாபாரம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சின்னதாப் பூஜை..” என்று அடுக்கிக் கொண்டு போனதை நம்ப முடியாமல்,“எனக்கு எல்லா நாளும் நல்ல நாள் தான்.” என்றாள் கௌரி.
அதைக் கேட்டு இந்த வீட்டிற்கு அவளை முதன்முதலில் அழைத்து வந்த தினம் சிவாவின் மனத்தில் வந்து போனது.  அதைச் சரியாகச் செய்யவில்லை என்பதால் தான் மற்ற விஷயங்களைச் சரியாகச் செய்து அவர்கள் வாழ்க்கையை நல்ல நாள், நல்ல நேரம் என்று நல்ல விதமாக ஆரம்பிக்க எண்ணினான்.  அதைப் புரிய வைக்க கௌரியுடன் அவன் வாதாடியிருக்கலாம். சிவா  வாதாடவில்லை. அவினாஷின் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.  அதனால்,
“சரி..அப்போ உனக்கு எந்த நாள்கள் சௌகர்யம்னு சொல்லு எல்லாத்தையும் முடிச்சிடலாம்.” என்று  உடனே ஒத்துக் கொண்டான்.
“என் லீவ் முடியறத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் முடிச்சிடுங்க.” என்று சொன்னவள், சில நொடிகள் கழித்து, டைனிங் டேபிளில் வந்து அமர்ந்து,
திடீரென்று,“கடையை நம்ம இரண்டு பேர் பெயர்லே பதிவு செய்ய ஏற்பாடு செய்யுங்க.” என்றாள்.
அதைச் சிவா எதிர்பார்க்கவில்லை,”ஏன் ?” என்று எதிர்க் கேள்வி கேட்டவனிடம்,”பழைய கடையை வித்து உங்களுக்குக் கிடைச்ச பணத்தை நாம எப்படியும் எதிலேயாவது இன்வெஸ்ட் செய்யணும்..இல்லை வரி கட்ட வேண்டி வரும்.” என்று அவன் மறுக்க முடியாத காரணத்தைச் சொன்னாள்.
“வராது..எங்க மூணு பேருக்கும் கிஃப்ட்டா கொடுத்திருக்காங்க அப்பா.” என்று அந்தக் காரணத்தை உடைத்தான் சிவா
“அப்போ உங்க அப்பாக்கு வரி கட்ட வேண்டி வரும்.” என்று உண்மையான காரணத்தை வெளியிடாமல் வேறு பாதையில் போனாள் கௌரி.
அவனுடைய அப்பா அவருக்குக் கிடைத்த பங்கை வட்டிக்கு விட்டால் என்ன, வரி கட்டினால் என்ன, அவர் என்ன செய்யப் போகிறார் என்பது இனி அவனுடைய கவலையில்லை.  அதைக் கௌரியிடம் தெரிவித்திருக்கலாம், ஆனால்,”அதுக்காக நம்ம இரண்டு பெயர்லே கடையை வாங்கணும்னு அவசியமில்லை.” என்று பாதை மாறிப் போனவளை மறுபடியும் அவர்கள் பாதைக்கு அழைத்து வந்தான் சிவா . 
இவன் லேசில் ஒத்துக் கொள்ளப் போவதில்லை என்று உணர்ந்த கௌரி,“அவினாஷ் அண்ணனுக்கு நான் பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் போகறதில்லை.. உங்க உழைப்புலே நீங்கதான் திருப்பிக் கொடுக்கப் போறீங்க….அதனாலே கடை உங்க பெயர்லேயும் இருக்கறது நியாயம் தான்.” என்றாள்.
“வேணாம்…உன் பெயர்லே இருக்கும்னு சொல்லித்தான் இந்தக் கல்யாணம் நடந்தது.” என்று திட்டவட்டமாக மறுத்தான் சிவா.
“நீங்க எல்லாப் பணத்தையும் அண்ணனுக்குத் திருப்பிக் கொடுத்த பிறகு, உங்க பெயர்லே நான் கடையை மாற்றிக் கொடுத்த பிறகு தான் கணக்குச் சரியா வரும்னு சொல்றீங்களா? அப்போ நம்ம கல்யாணத்தையும் அப்போவே பதிவு செய்திக்கலாம்.” என்றாள் மெல்லியக் குரலில் சீறினாள் கௌரி.
அவன் கடையின் முதலாளியாக இருக்க அவள் விரும்பவில்லை என்று அவனுக்குப் புரியம்படி விளக்கியிருக்கலாம்.  உன்னை மனைவியாக பாவித்துத் தான் அனைத்து விஷயங்களையும் உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று அவளுக்கு விளங்கும்படி அவன் சொல்லியிருக்கலாம்.  கடையை அவன் பெயருக்கு மாற்றிய பின் தான் கல்யாணத்தைப் பதிவு செய்ய வெண்டுமென்று கௌரி கண்டிஷன் போட்டது, கடையில் பங்குதாரரானால் தான் அவன் கணவனாக முடியும் என்று தப்பாகப் புரிந்து கொண்டு கலங்கிப் போனான் சிவா. அதைத் தெளிவுப்படுத்திக் கொள்ளாமல், கௌரியின் கோபத்தால் விளைந்த தயக்கத்தினால், அடுத்த அறையில் சாவித்திரி அம்மாவும் வரவேற்பறையில் குழந்தைகளும் இருந்ததால்,”சரி..நீ சொல்றபடியே செய்யறேன்.” என்று ஒப்புக் கொண்ட சிவாவின் மனத்தில் எப்படியும் ராம கிருஷ்ணன் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டரென்று எண்ணிக் கொண்டான்.
ராம கிருஷ்ணனின் மனமாற்றத்தைப் பற்றி அவன் அறிந்திருக்கவில்லை அதனால் எந்தவித தடையுமில்லாமல் இருவர் பெயரிலும் கடையைப் பதிவு செய்த போது, நல்ல நாள், நல்ல நேரம் தான் அதற்குக் காரணம் என்று நினைத்துக் கொண்டான் சிவா. நல்ல செயல்கள், கெட்ட செயல்களுக்குக் காரணம் நல்ல நேரம், கெட்ட நேரமில்லை, நல்ல எண்ணங்கள், கெட்ட எண்ணங்கள் என்று நாம் உணர்வதேயில்லை.
சாஸ்திரப்படி மனைவியாக ஏற்றுக் கொண்டவளைச் சட்டப்படியாகவும் ஏற்றுக் கொள்ள தான் அந்தப் பதிவுத் திருமணம் என்று மனைவியிடம் ஒரு வார்த்தை கணவன் சொல்லியிருக்கலாம். உன் மனைவியாக மட்டும் தான் இருக்க விரும்புகிறேன் என்று மனைவியும் கணவனிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.
அவள் மனத்தில் இருப்பதைக் கௌரி தெளிவாக விளக்கவில்லை. அவன் மனத்தில் இருந்ததைச் சிவா விளங்கச் சொல்லவில்லை.
சிவா பதிலில் திருப்தியடைந்த கௌரி, அந்தப் பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டு,
“எல்லா அறைலேயும் கர்ட்டன் போடணும், பெரிய ரூம்லே ஏஸி ஃபிட் பண்ணனும்..சிசிடிவி பொருத்தணும்……சாவித்திரி அம்மாவும் நானும் இன்னைக்குச் சமையலறையைச் சரிச் செய்திட்டோம்..இதுக்கு மேலே எங்க இரண்டு பேராலே இன்னைக்கு எதுவும் முடியாது….அவங்க எழுந்தவுடனே வீட்டுக்குப் போகட்டும், நானும் குழந்தைங்களை அழைச்சிட்டு ஆன்ட்டி வீட்டுக்குப் போயிடறேன்..தினமும் இவங்களை ஸ்கூல்லே விட்டிட்டு  இங்கே வந்துடறேன்.. எங்களாலே முடியற வேலையைச் செய்யறோம்..இவங்க ஸ்கூல்லேர்ந்து வந்த பிறகு மதியம் சாப்பாடு முடிச்சிக்கிட்டு ஆன்ட்டி வீடு..மற்ற வேலைகளை உங்களுக்கு டயம் கிடைக்கற போது செய்து முடிங்க” என்று வீட்டு வேலைகளைப் பங்குப் போட்டாள் கௌரி.
“காலைலே எப்படியும் என்னாலே இங்கே வர முடியாது..மதியம் சாப்பிட வரும் போது மனோகரையும் அழைச்சிட்டு வரேன்…எல்லா வேலையையும் ஒவ்வொண்ணா முடிக்கறேன்.” என்று வாக்குக் கொடுத்தான் சிவா.  ஆனால் சில வேலைகளை அவனால் முடிக்கவே முடியவில்லை.   அதைப் பொருட்படுத்தாமல் அவினாஷ் கிளம்புவதற்கு முன் புது வீட்டிற்குக் குடிப் பெயர்ந்தாள் கௌரி.
சிவாவின் விருப்பப்படி முதலில் அவர்கள் திருமணத்தைப் பதிவுச் செய்தனர்.  அதன் பின் அவர்கள் இருவரின் பெயரில் புதுக் கடை பதிவு செய்யப்பட்டது.  அந்த நிகழ்விற்கு சிவாவின் மாமாவினால் வரமுடியவில்லை.  ஒரு முக்கியமான விஷயமாக அவர் சொந்த ஊருக்குச் சென்றிருந்ததால் கடையில் கௌரிக்கும் பங்கு இருக்கிறதது என்ற விவரம் சிவாவின் வீட்டினரைச் சென்றடையவில்லை.  அதே போல் ஒரு நல்ல நாளில் சுப்ரமணி தம்பதி தலைமையில், கௌரி விளக்கேற்ற, குழந்தைகள் இருவரும் பூஜை செய்ய, புதுக் கடையில் வியாபாரத்தை ஆரம்பித்தான் சிவா.  ராம கிருஷ்ணனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது ஆனால் மேகலாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்ததால் அவரால் பூஜையில் பங்கேற்க முடியவில்லை.
புதுக் கடையில் வியாபாரத்தைப் பெருக்க அயராது உழைக்க ஆரம்பித்தான் சிவா.  கோச்சிங் கிளாஸ் மாணவர்களால் முதல் நாளிலிருந்து பிராஜெக்ட் குவிந்தது. பழைய டிஸைனர்களைப் புது இடத்திற்கு அழைத்த போது அவர்கள் யாரும் புதுக் கடைக்கு வர விரும்பவில்லை.  அதனால் மனோகரை மட்டும் உடன் வைத்துக் கொண்டு, தனியாக சமாளிக்க முடியாமல் போனால் பகுதி நேரமாக யாரையாவது வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான் .
புதுக் கடையைத் திறப்பதற்கு முன்னும், கடையைத் திறந்த பின்னும், அவன் கடையைப் பற்றிய விவரங்கள் அடங்கிய விளம்பரச் சிற்றேடுகளைக் கடைக்கு அருகே இருந்த குடியிருப்பு பகுதிகளில் விநியோகம் செய்திருந்தான் சிவா. அதனால் ஸ்டேஷனரி வியாபாரமும் சூடு பிடித்துக் கொண்டது. இந்த நிலையில் அந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் இருக்கும் கடைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை கொடுக்க வேண்டியிருந்தது.  அதனால் நேரும் இழப்பை ஈடு செய்ய, கடையைச் சில நாள்கள் சீக்கிரமாகத் திறந்து, சில நாள்கள் தாமதமாக மூடிச் சரி செய்து கொண்டிருந்தான் சிவா. 
பதவி உயர்வின் விளைவால் பெருகியிருந்த பொறுப்புக்களையும், வேலை பளுவையும் சமாளிக்க சில நாள்கள் அலுவலகத்திற்குச் சீக்கிரமாக சென்று, சில நாள்கள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் கௌரி. அலுவலக விஷயமாக அவள் வெளியூர் பயணங்கள் மேற் கொள்ள வேண்டியிருந்த போது சாவித்திரி அம்மா தான் எப்போதும் போல் வீட்டையும் குழந்தைகளையும் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டார். 
காயத்ரியை இழந்த பின் நடந்த சம்பவங்கள், அவனுடைய இரண்டாவது திருமணத்திற்கு முன் நடந்த நிகழ்வுகள் என்று எல்லாம் சேர்ந்து சிவாவின் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.  அதன் விளைவாக அவன் குடும்பத்தாரைப் புது வீட்டிற்கும், புதுக் கடையின் பூஜைக்கும் சிவா அழைக்கவில்லை.  அவனுடைய அக்கா அவர்களைக் குடும்பத்துடன் அவர் வீட்டிற்கு அழைத்ததைக் கௌரி தெரியப்படுத்திய பின்னும் சாந்தியின் வீட்டிற்குச் சிவா அவளை அழைத்துச் செல்லவில்லை. ஏன் என்று கௌரி கேட்கவில்லை. சிவாவும் சுய விளக்கம் கொடுக்கவில்லை. 

Advertisement