Advertisement

அத்தியாயம் – 30_1
மனமாற்றம். காலம், நேரம் மாறுவது போல் மனமாற்றத்தையும் இயற்கை நிகழ்வாக எடுத்துக் கொண்டு, அதைத் தடுத்து நிறுத்தாமல், தடைச் செய்யாமல் இருந்தால், ஒரே இடத்தில் அடைப்பட்டுக் கிடக்கும் உணர்வுகள், சிறைப்பட்டுக் கிடக்கும் சிந்தனைகள், விடுதலை பெற்று, எல்லைகளைக் கடந்து, காலத்தால் அழியாதச் சாதனைகளைப் படைத்து, புதியதோர் உலகத்தை உருவாக்க முடியும். 
எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் காலத்தோடு, நேரத்தோடு சேர்ந்து  மாற மறுப்பவர்கள்,  பொருந்திப் போக முடியாதவர்கள், விளைவுகளைச் சந்திக்க இயலாதவர்கள், எதிர்த்துப் போராடும் தைரியமில்லாதவர்கள் கண்டுபிடித்த வார்த்தைகள் தான் கெட்ட காலம், நல்ல காலமோ? 
பண்புகளையும் குணங்களையும் மாற்றிக் கொள்ள விரும்பாமல், காலப் பெயர்களுக்கு முன்னால் நல்ல, கெட்ட போன்ற  பண்புப் பெயர்களைச் சேர்க்கிறோம். மனித மனதின் பலகீனங்களை மறைக்க ராகுவையும் கேதுவையும் பலசாலியாக மாற்றுகிறோம். அதற்குப் போறாத காலம் என்று பெயரிட்டு அடுத்த தலைமுறைக்கும் அதைப் பயிரிட்டு வளர்க்கச் சொல்லிக் கொடுக்கிறோம்.
சூர்யாவின் பின்னால் சென்ற சிவா, அவளைத் தூக்கி வைத்துக் கொண்டு, அவளுடன் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தார் ராம கிருஷ்ணன். சற்றுமுன் வரை சிவாவின் மீது அவருக்கு இருந்த கிலேசம் இப்போது போன இடம் தெரியவில்லை. அவினாஷுடன் சண்டை போட தயாரான கௌரியை அமைதிப்படுத்தி, அடுத்த விடுமுறை அவனின் விருப்பம், செலவு என்று அனைவரின் முன்னிலையில் அறிவித்தது, கௌரியின் ஊதியத்தில் உட்கார்ந்து சாப்பிட நினைக்கும் சோம்பேறியில்லை அவன், சுய சம்பாத்தியத்தில் முன்னேற நினைக்கும் சுயமரியாதை உடையவன் என்று காட்டியது.  
அதே போல் மகளின் மன்னிப்பு கேட்டு சந்தோஷமடைந்து இருந்தாலும் அத்துடன் அந்த விஷயம் முடிந்தது என்று எண்ணாமல், அவள் செயலின் வீர்யத்தை அவளுக்குப் புரியும்படி விளக்கிக் கொண்டிருந்தது அவனை நல்ல மனிதனாக, தகப்பனாக காட்டியது.  அதன் விளைவாக சிவாவை வாழ்க்கை துணையாக கௌரி தேர்ந்தேடுத்த போது ஏற்பட்டிருந்த மனவருத்தம் மறைந்து போய், கௌரிக்கு ஏற்ற துணையாக சிவாவை ராம கிருஷ்ணன் மனம் ஏற்றுக் கொண்டது.
சூர்யாவிற்கு அவள் செயலையும் அதன் விளைவுகளையும் விளக்கிக் கொண்டிருந்த சிவா, அதே போல் அவன் செயலால் பாதிக்கப்பட்டிருந்த கௌரிக்கும், அவனுடைய அம்மாவுடன் ஏன் தனிமையில் பேச விரும்பினான் என்று விளக்கியிருக்காலம். அதை விளக்கம் வேண்டுமென்று சிவாவிற்குத் தோன்றவேயில்லை.  அதனால் அவன் குடியிருந்த கௌரியின் மனத்தில் லேசான தடுமாற்றம் தோன்றியிருந்ததை அவள் குடியிருந்த அவன் மனம் உணரவேயில்லை. அந்த மன நிலையில் அவர்களின் வாழ்க்கை ஆரம்பமானது.
அவர்கள் இருவரும் தம்பதிகளான பின் திடீர் திடீரென்று முளைத்த பிரச்சனைகளுக்கு ஏன்? என்ற காரணத்தையும், எப்படி? என்ற தீர்வையும் மாறி மாறித் தேடிக் கொண்டிருந்தனர் சிவாவும் கௌரியும். கௌரியை மனைவியாக பாவித்து, வீடு, கடை இரண்டையும் பற்றி அவளுடன் கலந்து பேசி முடிவெடுத்தான் சிவா.  வீடு பற்றிய அனைத்து விஷயங்களும் அவன் மனைவி என்பதால் தான் என்று தோன்றிய அதே மனதின் ஓரத்தில், கடையைப் பற்றிய விஷயங்களில் அவளைக் கலந்தாலோசிப்பது முதல் போட்ட முதலாளியிடம் கண்ணியம் தவறாமல் நடப்பது போல் தோன்றியது.      
அந்த எண்ணத்தைச் சிவாவிடம் எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் கௌரி திண்டாட, அவள் தவிப்பைப் புரிந்து  கொள்ளமால் கடையின் அனைத்துச் செலவு கணக்குகளையும் ஒப்பித்து  அவளை மேலும் தவிக்க விட்டான் சிவா.  அதனால் எழுந்த மனக்குழப்பங்கள், பொங்கிய கோபங்கள், புகைந்த சந்தேகங்களுக்கு நடுவே புதுப் பள்ளி, புது வீடு, புதுக் கடை என்று அடுத்தடுத்து வாழ்க்கை பயணமானது.  
கடற்கரை விடுதியிலிருந்து திரும்பிய அடுத்த நாள் மாலினியின் குடும்பத்தினர் பூனாவிற்குப் புறப்பட்டனர்.  அன்றே குழந்தைகள் இருவரையும் புதுப் பள்ளிக்கு அழைத்துச் சென்றாள் கௌரி.  இரண்டு குழந்தைகளுக்குமே புதுப் பள்ளிக்கூடம் பயத்தை ஏற்படுத்தியிருந்தது. அன்றைய தினம், பள்ளி முடிந்த பின், அவர்களை அழைத்துச் செல்ல வந்த கௌரியைக் சந்தோஷத்துடன் தீபாவும், சோகத்துடன் சூர்யாவும் அணைத்துக் கொண்டனர்.  
முதல் நாள் என்பதால் இருவரின் வகுப்பு ஆசிரியைகளை நேரில் சந்திக்கச் சென்றாள் கௌரி.  தீபாவைப் பற்றி புகார் எதுவும் இல்லை, சூர்யாவைப் பற்றி அதே புகார்கள்.  எழுதவது, படிப்பது இரண்டிலும் பின் தங்கியிருப்பதால் தினசரி  எழுத, படிக்க பயிற்சி அளிக்க வேண்டுமென்று ஆலோசனை அளித்து, அவள் வகுப்பு குழந்தைகளுடன் சிநேகிதமாக பழகுகிறாள் என்ற பொதுவான கருத்தையும் தெரிவித்தார் சூர்யாவின் வகுப்பு ஆசிரியை.  புதுப் பள்ளியில் சூர்யா பொருந்திப் போக வேண்டுமென்று கவலை கொண்டிருந்த கௌரிக்கு அந்தச் செய்தி நிம்மதியை அளித்தது.
இருவரையும் பள்ளியிலிருந்து அவள் காரில் அவர்களின் புது வீட்டிற்கு அழைத்து வந்தாள் கௌரி.  அந்த வீட்டில் நிரந்தரமாக தங்க ஆரம்பித்த பின் தான் இருவரையும் பள்ளி பேருந்திலேயே பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவரை கௌரி, சிவா இருவரில் ஒருவர் அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல, திரும்ப அழைத்து வரத் திட்டமிட்டிருந்தனர்.  
அன்று காலை சீக்கிரமாகவே எழுந்து காலை உணவு, ஸ்கூல் டிஃபன் இரண்டையும் மேகலா ஆன்ட்டி வீட்டில் தயார் செய்து கொண்டாள் கௌரி.  குழந்தைகளைப் பள்ளியில் விட்ட பின் புது வீட்டிற்கு வந்து, சாவித்திரி அம்மாவுடன் சேர்ந்து, முதலில் சமையலறையைச் சீர் செய்தாள். அதன் பின் சிம்பிலாக மதிய உணவை செய்து முடித்தாள்.  குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்தவுடன் அவர்கள் சீருடையை மாற்றி,  முகத்தைக் கழுவி, டேபிளில் அமர்த்தி, தயாராக இருந்த உணவைப் பரிமாறினாள்.  சாவித்திரி அம்மா தனியாக சமையலறையில் சாப்பிட, கௌரியும் குழந்தைங்களும் டைனிங் டேபிளில் அமர்ந்து உண்டனர்.  சூயாவிற்கு உயரம் போதவில்லை.  அதனால் அவளை மடியில் வைத்துக் கொண்டு அவளுக்கு ஊட்டிக் கொண்டே  சாப்பிட்டு முடித்தாள் கௌரி. 
அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் வரவேற்பறையில் அமர்ந்து, விடுமுறை எடுத்ததால் விட்டுப் போன பாடங்கள், அன்றைய வீட்டுப் பாடங்கள் என்று குழந்தைங்கள் இருவருக்கும்  உதவி செய்ய ஆரம்பித்தாள் கௌரி. அவரின் மதிய சாப்பாட்டிற்குப் பின், கௌரியின் அனுமதியோடு, குழந்தைகளின் படுக்கையறையில், தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார் சாவித்திரி அம்மா. 
கௌரியை மாலினி அறிமுகப்படுத்தியதிலிருந்து அவளிடம் சரியாக நடந்து கொண்டிருக்கிறார் சாவித்திரி அம்மா.  இரண்டு வருடங்களாக சிவாவின் வீட்டையும், குழந்தைங்களையும் பார்த்துக் கொண்டிருந்தவர், வயதில் மூத்தவர், எந்த விதமான சங்கடமுமில்லாமல்  சிவாவின் மனைவியாக கௌரியை ஏற்றுக் கொண்டு மரியாதையுடன் நடத்தினார்.  அதனால் கௌரிக்கும், சாவித்திரி அம்மாவிற்கும் இடையே மரியாதையும் நல்லுறவும் ஏற்பட்டது. அவள் மாமியாரைப் பிடிக்காத, அவள் மாமியாருக்குப் பிடிக்காத சாவித்திரி அம்மாவைக் கௌரிக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால் அவள் மாமியாருக்குப் அவளைப் பிடிக்காமல் போவதற்கு அதுவும் ஒரு காரணமாகப் போவதைக் கௌரி அறிந்திருக்கவில்லை. 
அப்போது அழைப்பு மணி ஒலிக்க, கதவைத் திறந்தவுடன், மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்கு வந்த சிவாவை ஓடிப் போய் அணைத்துக் கொண்ட சூர்யாவின் கையில் ஒரு சாக்லெட் இருந்தது.  அதை அவனிடம் காண்பித்தவுடன்,
“யார் கொடுத்தாங்க?” என்று விசாரித்தான் சிவா.
“ரூபி மேம்..நான் ஸ்கூலுக்குப் புதுசுன்னு கொடுத்தாங்க.” என்றாள் சூர்யா.
“எனக்கும் கொடுத்தாங்க ப்பா..முதல் நாள்ன்னு.” என்று அவள் பையிலிருந்து ஒரு சாக்லெட்டை எடுத்துக்  காண்பித்தாள் தீபா.
இரண்டு குழந்தைகளும் இந்த விஷயத்தைக் கௌரியிடம் சொல்லவில்லை.  அவர்கள் அப்பாவிடம் மட்டும் பகிர்ந்து கொண்டார்கள்.  சூர்யாவிற்கு அவள் வகுப்பு ஆசிரியையின் பெயர் தெரிந்திருக்கிறது என்ற விவரம் இப்போது தான் கௌரிக்குத் தெரிய வந்தவது. அதில் கொஞ்சம் போல்  மனசஞ்சலமடைந்த கௌரி, கல்யாணம் முடிந்த நாலாவது நாளே குழந்தைகளிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று அவள் மனதிற்குப் புரிய வைக்க முயன்றாள்.  மாலினியின் முயற்சியால் தான் கல்யாணத்திற்கு முன்பிலிருந்து குழந்தைகள் இருவரும் அவளை அம்மாயென்று அழைக்கிறார்கள்.  அதனால் அவர்களாகவே அவளின் அன்பை உணர்ந்து, அனைத்தையும் அவளுடன் பகிர்ந்து கொள்ளும் வரை பொறுமையாக இருக்க வேண்டுமென்று அவள் மனதிற்குப் பாடம் படிப்பித்துக் கொண்டாள்.  
டைனிங் டேபிளில் இருந்த உணவை ஒரு தட்டில் போட்டுக் கொண்டே,”சாவித்திரி அம்மா எங்கே?” என்று விசாரித்தான் சிவா.
“அசதிலே தூங்கறாங்க.” என்று குழந்தைகளின் அறையைச் சுட்டிக் காட்டினாள் கௌரி.
சிவா சாப்பிட ஆரம்பித்த போது அவன் கைப்பேசி அழைத்தது. அந்த அழைப்பை ஏற்க போனவனிடம்,”சாப்டிட்டுப் பேசுங்க..ஏற்கனவே லேட்டாயிடுச்சு.” என்றாள் கௌரி.  பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகியிருந்தது.  அதனால் இனியும் உணவைத் தாமதிக்க வேண்டாமென்று சாப்பிட ஆரம்பித்தான் சிவா.  சாப்பிட்டுக் கொண்டே அவனுடைய விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொண்டான்.
“கார்பெண்டர் வந்து கடையைப் பார்த்திட்டுப் போயிருக்கார்..பதிவு முடிஞ்சவுடனே வேலையை ஆரம்பிச்சிடலாம்னு சொல்றார்..மூணு லட்சமாகும்..நம்ம பக்கத்துக் கடை டெய்லர் கடை.. இன்னொரு சைட் ஏதோ கோச்சிங் கிளாஸ் நடத்தறாங்க..காலைலே, சாயங்காலம் திறந்து வைச்சிருக்காங்க..அப்புறம் ஒரு பல் டாக்டர் கிளினிக்..அவங்களும் சாயங்காலம் தான் வர்றாங்க…கோச்சிங் கிளாஸ் நடக்கறதுனாலே பிஸ்னஸ் சீக்கிரமே பிக் அப் ஆகிடும்னு நினைக்கறேன்.” என்றான்.
“பதிவுக்காக தான் அண்ணன் காத்திருக்கார்..நீங்க எதுக்கு இழுத்து அடிக்கறீங்க?” என்று கடையைப் பதிவு செய்ய என்ன தயக்கமென்று தெரிந்து கொள்ளக் கேட்டாள் கௌரி.

Advertisement