Advertisement

அத்தியாயம் – 29
சிவாவின் கைப்பேசி ஒலித்துக் கொண்டிருக்க அந்த அழைப்பை ஏற்க வேண்டுமா? என்று சிவாவும் கௌரியும் ஒரே போல் யோசித்துக் கொண்டிருந்தனர்.
சில நிமிடங்களுக்கு முன் பாத் ரூமில், பாத் ரோப் மட்டும் அணிந்து கொண்டிருக்கிறாள் என்ற கௌரியின்  விளக்கத்தைக் கேட்டு, அதை  உறுதி செய்து கொண்டவுடன் அவனுள் ஏற்பட்ட மாற்றத்தை கையாள முடியாமல், கோபமாகக் கத்திய அவன் முட்டாள்தனத்தை நினைத்து நோந்து கொண்டான் சிவா.  ஏற்கனவே திருமணமானவன், இரு குழந்தைகளுக்குத் தகப்பன் இப்படித் தான் நடந்து கொள்வானா? என்ற அவன் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.  
இனி அவர்கள் இருவரும் ஒரே படுக்கைறையைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்.  அப்போதும் இப்படித் தான் நடந்து கொள்வானா? அந்த மாதிரியான செய்கை, முன் அனுபவமில்லாத கௌரிக்கு என்ன செய்தியை அனுப்பக் கூடும் என்று யோசிக்க ஆரம்பித்தான் சிவா. அந்த யோசனையின் முடிவில், குளித்து முடித்தவுடன், கௌரியைப் போலவே ஒரு பாத் ரோபை அணிந்து கொண்டு வெளியே வந்தான். இனி இது போல் உடை அணிவதை அவர்கள் இருவரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற செய்தியைக் கௌரிக்கு அனுப்ப நினைத்தான். 
அவன் பாத் ரூமிலிருந்து வெளியே வந்தவுடன் குழந்தைகள் செய்த களோபரத்தில் அவன் நோக்கத்தைச் சிதற விட்டவன், சில நிமிடங்களில் கழித்து அதை ஒன்று திரட்டினான்.   அதற்க்குப் பின் கட்டிலை நோக்கிச் சென்றவன், அரைகுறை ஆடையில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து, இந்த முறை சரியாகக் கையாள வேண்டுமென்று, அவன் உணர்வுகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.  அப்போது அவன் கைப்பேசி இடையூறு செய்ய ஆரம்பித்தது.  
பாத் ரூம் கதவை அடித்துச் சாத்திக் கொண்டு வெளியே வந்ததிலிருந்து கௌரியின் மனது ஒரு நிலையில் இல்லை. அதற்குக் காரணம்,  அவள் சொன்ன விஷயத்திற்கு சிவாவின் எதிர்வினை எப்படி இருந்திருந்தாலும் அவளுடைய எதிர்வினை அப்படி இருந்திருக்கக்கூடாது என்ற எண்ணம் தான்.  இரண்டு நாள்கள் முன் கல்யாணம் செய்து கொண்டவர்கள், இரண்டு பகல்கள், இரவுகள் ஒரே அறையில் கழித்திருக்கிறார்கள்.  மேகலா ஆன் ட்டி வீட்டில், அவள் அறையில் குடும்பமாக ஒரே கட்டிலில் படுத்து உறங்கி இருக்கிறார்கள்.  நேற்று இரவும், இதே அறையில், அதே போல் தூங்கினார்கள். 
இனி ஒரே வீட்டில், ஒரே அறையில் இருக்கப் போகிறார்கள்.  அப்போதும் இது போன்ற சூழ் நிலையில் இப்படித் தான் நடந்து கொள்வாளா? அவளுடைய அனுபவமின்மை தான் அவளுடைய பதற்றத்திற்குக் காரணமா?  அவளை அவன் கணிக்க முயன்ற போது பதிலுக்கு அவளும் அவனைக் கணித்திருக்க வேண்டுமா? இல்லை பாத் ரூம் கதவை அடித்துச் சாத்தாமல், நிதானமாக அங்கேயிருந்து வெளியேறி இருக்க வேண்டுமா? எத்தனை யோசித்தும் பதில் கிடைக்கவில்லை.  அதனால் நடந்து முடிந்ததைப் பற்றி யோசித்து பயனில்லை என்று உணர்ந்தவள், இனி அடுத்த முறை இது போன்ற சூழ் நிலையை நிதானமாக கையாள வேண்டுமென்று முடிவெடுத்தாள்.  
கௌரி, சிவா இருவரும் எதிர்பார்க்கவேயில்லை அதே போன்ற சூழ் நிலையை, உடனே, அடுத்த பத்து நிமிடத்தில் சந்திக்கப் போகிறார்களென்று.
பத்து நிமிடங்கள் முன் அவன் மனைவி அணிந்திருந்ததைப் போல் ஓர் அங்கியை இப்போது கணவன் அணிந்திருந்தான்.  இப்போது, மனைவியோ, அவள் உடையின் மேல் பாதியை அணிந்து முடித்து, கீழ் பாதியை அணியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள்.  அந்த முயற்சியை நோட்டம் விட்டபடி, மனைவியிடம், உடை மாற்றும் விதிமுறையை மாற்றி அமைக்க வேண்டுமென்று நிதனாமாக விளக்கினான் கணவன். அதைக் கேட்டுக் கொண்டே நிதானமாக அவள் உடையை மாற்றிக் கொண்டிருந்தாள் மனைவி.  அனுபவம், அனுபவமின்னை இரண்டு ஒரே முறையைப் பின்பற்றி, ஒரு புள்ளியில் இணைய முடிவெடுத்த அந்த நொடியில் தான் அலைபேசி அலறியது.
அடுத்து சிவா என்ன செய்யப் போகிறான் என்று எதிர்பார்போடு இருந்த கௌரிக்கு, அவன் அம்மாவின் அழைப்பை ஏற்றவுடன் அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த இணைப்பு அறுந்தது.  அவர்கள் இருவரும் ஒரே புள்ளியில் வந்த பின், அவன் அம்மாவின் அடுத்த அழைப்பை சிவா ஏற்றிருக்கலாம். இரண்டு நாள்களாக அவன் அழைப்பிற்காகக் காத்திருந்த, கடந்த பத்து நிமிடங்களாக அவனை விடாமல் அழைத்துக் கொண்டிருந்த அவன் அம்மாவின் அந்த அழைப்பையே ஏற்றான் சிவா. 
“ஹலோ” என்ற சொல்லிவிட்டு, மேலே பேச்சைத் தொடருமுன்,”நீங்க மூணு பேரும் கிளம்புங்க..நான் பேசி முடிச்சிட்டு..தயாராகி வர நேரமாகும்.” என்று கௌரியையும் குழந்தைகளையும் அங்கேயிருந்து கிளப்பினான் சிவா.  அதற்கு முக்கியக் காரணம், அவனால் முடிந்த அளவிற்குக் கௌரியை அவன் குடும்பப் பிரச்சனைகளிலிருந்து விலக்கி வைத்து, அவளைப் பாதுகாக்க நினைத்தான்.
சிவா சொன்னதைக் கேட்டவுடன், அவள் உடையைச் சரியாக அணிந்து, ஈரத் தலையில் ஒரு க்ளிப் போட்டுக் கொண்டு. குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் கௌரி.  அப்போது, அவள் மனத்தில், அவளை இன்னும் அவன் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக் கொள்ளவில்லை அதனால் தான் அவன் அம்மாவுடன் தனிமையில் பேச நினைக்கிறான் என்ற எதிர்மறை எண்ணம் உதித்தது.   
கணவன், மனைவி இருவரும் அவரவர் எண்ணங்களைப் மனத்திற்குள் புதைத்து வைக்காமல் அப்போதே பகிர்ந்து கொண்டிருந்தால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படவிருந்த சில சம்பவங்களைத் தவிர்த்து இருக்கலாம்.
கௌரியும் குழந்தைங்களும் அறையிலிருந்து வெளியேறியவுடன்,”சொல்லுங்க மா..எதுக்கு இப்படி, இத்தனை முறை ஃபோன் செய்யறீங்க? என்ன எமர்ஜன்ஸி?” என்று விசாரித்தவனின் குரலில் துளிக்கூட கரிசனம் இல்லை.
சிவாவின் குரலில் இருந்த ஒட்டாத் தன்மை ஜமுனாவின் மனத்தில் ஒட்டிக் கொண்டது.
“என்ன டா இப்படிக் கேட்கற?உன்னை  ஃபோன் செய்யுண்ணு சொல்லி இரண்டு நாளாயிடுச்சு.” என்று அவர் தொடருமுன்,
“அன்னைக்கு நைட் எப்படிச் செய்திருக்க முடியும்? நேத்து எனக்குச் சில வேலைகள் இருந்திச்சு.. அதையெல்லாம் முடிக்க வேண்டியிருந்திச்சு..அப்புறம் இன்னுமொரு முக்கியமான வேலை வந்திடுச்சு.. நேரமே கிடைக்கலை.” என்ற சிவாவின் விளக்கத்தை இடைமறித்து,
“ஊர் சுத்தப் போயிருக்கறது தான் அந்த முக்கியமான வேலையா? என்று ஜமுனா கேட்டவுடன், சிவாவிற்குக் கோபம் வந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல், அவருக்கு எப்படி அந்தத் தகவல் கிடைத்தது என்று விசாரிக்காமல்,“என்கிட்டே என்ன பேசணும் உங்களுக்கு? என்று நேரே விஷயத்திற்கு வந்தான் சிவா.     
“எங்கே டா இருக்க இப்போ? காலைலே உனக்கு ஃபோன் செய்தேன் நீ எடுக்கவேயில்லை..அப்புறம் சாவித்திரிக்கு ஃபோன் போட்டேன்..நீங்கெல்லாம் வெளியே போயிருக்கறதா அவத் தான் சொன்னா..அவக்கிட்டே உன்னாலே விவரம் சொல்ல முடியுது அதே விவரத்தை எனக்கு ஃபோன் செய்து சொல்ல முடியலையா?” என்று பொரிந்தார் ஜமுனா.
இது போன்ற சூழ் நிலைகள் சிவாவிற்குப் புதிது. குடும்பத்துடன் வெளியூருக்குச் சென்றதில்லை. குழந்தைகளை, காயத் ரியை அவன் வீட்டிற்கோ இல்லை காயத் ரியின் வீட்டிற்கோ தான் அழைத்துச் செல்வான்.  அதற்கு முக்கியக் காரணங்கள், கடை, காசு.  தேவையில்லாமல் கடைக்கு விடுமுறை விட்டது கிடையாது.  அதே போல் இது போன்ற பயணங்களில் காசு செலவழித்தது இல்லை. இப்போதும் இந்தப் பயணத்தில் அவனது பங்களிப்பு எதுவுமில்லை.  எங்கே போக வேணடுமென்று முடிவெடுத்தது மாலினி.  யார் செலவில் என்று முடிவெடுத்தது அவினாஷும் மாலினியும்.  கௌரியும் செலவு அவளுடையது என்று ஒத்துக் கொண்டதற்குக் காரணம் அவளுக்குக் கிடைத்திருந்த பதவி உயர்வு.
மாலினி பூனாவிற்குத் திரும்பிச் செல்லுமுன் ஒரு முறை கடற்கரைக்கு அழைத்துப் போக வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார் ராம கிருஷணன்.  அப்போது தான் அவளுடைய இந்தத் திட்டத்தோடு வந்தாள் மாலினி.  கல்யாணத்திற்காக மாலினியும் அவினாஷும் அலைந்து திரிந்தது சிவாவும் அறிந்தது தான்.  அதனால் அவர்கள் அனைவரும் ஓய்விற்காக இரண்டு நாள்களுக்கு இந்த ரிஸார்ட்டிற்கு வரத் திட்டமிட்ட போது அதற்குச் சிவாவினால் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை.  அவனுடைய வேலைகள் சிலவற்றை முடித்துக் கொள்ள சில மணி நேரங்கள் அவகாசம் மட்டும் கேட்டான்.
அந்த சில மணி நேரத்தில் சாவித்திரி அம்மாவிற்கும், மனோகருக்கும் அவன் பயணத்தைப் பற்றி தகவல் கொடுத்து அவர்களுக்கும் விடுமுறையும் கொடுத்தான்.  அதன் பின் கௌரி சொன்னபடி புதுப் பள்ளிக்குச் சென்று தீபா, சூர்யா இருவருக்கும் மேலும் சில நாள்கள் அனுமதி பெற்றுக் கொண்டான். அவர்கள் வகுப்பில் நடந்து கொண்டிருந்த பாடங்களை, அந்தந்த வகுப்பு ஆசிரியர்களின் அனுமதியுடன், நோட் புத்தகத்திலிருந்து ஃபோன் மூலம் ஃபோட்டோ பிடித்துக் கொண்டான். அதன் பின், வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போன சுப்ரமணி ஸரை அவர் வீட்டில் சந்தித்து, இந்தத் திடீர் ப்ரோகரமைப் பகிர்ந்து கொண்டு, அவன் திருமணத்தையும், புதுக் கடையைப் பதிவு செய்ய நல்ல நாள் பார்க்கச் சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தவனை அப்படியே கிளப்பிக் கொண்டு வந்திருந்தனர் அனைவரும்.
அவன் குடும்பத்தினருக்கு இந்தப் பயணத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டுமென்ற எண்ணமே தோன்றவில்லை.  இப்போதும் அதற்கு அவசியமில்லை என்று தான் தோன்றியது.  அதனால்,
“சாவித்திரி அம்மா என் வீட்லே வேலை செய்யறாங்க..அவங்களுக்குத் தகவல் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கு அதனாலே சொன்னேன்.” என்று பதில் கொடுத்தான்.
“ஏன் டா..அவசியம் இருந்தா தான் சொல்லுவேயா?” என்று புதுச் சண்டையை ஆரம்பித்தார் ஜமுனா.
அவனிடம் சண்டைக்கு நேரமுமில்லை, சக்தியுமில்லை என்று உணர்ந்தவன்,”எதுக்கு கோபப்படறீங்க? என்ன விஷயம்  சொல்லுங்க.” என்று தழைந்து போனான்.
உடனே அவரின் கோபத்தைக் குறைத்துக் கொண்டு,”எப்போ டா உன் புது வீட்டுக்குக் குடித்தனம் போகப் போற?” என்று கேட்டார் ஜமுனா.
அந்த வீட்டைப் பார்த்த பின்பு அவரிடமிருந்து இந்தக் கேள்வியைச் சிவா எதிர்பார்க்கவில்லை.  அதனால்,”நீங்களே நேர்லே பார்த்தீங்க இல்லே? எல்லாச் சாமானும் போட்டபடி கிடக்கு..இனிமேதான் அதைச் செட் செய்யணும்..முதல்லே குழந்தைங்க புது ஸ்கூலுக்குப்  போகணும்..அப்புறம் அவ லீவு முடியறத்துக்கு முன்னாடி கௌரி வீட்டைச் சரி செய்யணும்..எப்போ இதெல்லாம் செய்து முடிப்பேண்ணு எனக்குத் தெரியலை.”
“அப்போ எதுக்கு டா இப்போ வெளியே சுத்தப் போயிருக்க?” என்று அவர் மறுபடியும் ஆரம்பித்தவுடன்,’நான் வைக்கறேன்.” என்று அழைப்பைத் துண்டித்தான் சிவா.  அதற்குப் பின் அவன் தயாராகி, சாப்பிட சென்ற போது கிட்டதட்ட அனைவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர்.
அந்த ரிஸார்ட்டில் இவர்கள் குடும்பத்தைத் தவிர வேறு விருந்தினர்கள் இல்லை.  வார நாள்களில் இது போன்ற இடங்களுக்கு யாரும் வருவதில்லை.  அதனால் இந்தப் பயணம் இனிமையாக அமைந்தது.  அவர்களின் ஆர்டர் படி காலை உணவைச் சூடாக தயார் செய்து கொடுத்தனர்.  மூன்று மேஜைகளை சேர்த்துப் போட்டிருந்தனர். குழந்தைகள், சுமித், வினித், தீபா, சூர்யா நால்வரும் ஒரே வரிசையில் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். அவர்களை அடுத்து கௌரி அமர்ந்திருக்க அவள் அருகில் காலியாக இருந்த நாற்காலியில் சிவா அமர்ந்தான்.  எதிர்புறத்தில் அவினாஷ், நித்யா, அவர்கள் மடியில் சிதார்த்தும், அனன்யாவும்.  அவர்களை அடுத்து ராம கிருஷ்ணன், மேகலா.  கடைசியாக விட்டலும் மாலினியும். சிவாவின் விருப்பத்தை ராமகிருஷ்ணன் கேட்க, அதற்கு அவன் பதில் சொல்லுமுன், இது நன்றாக இருக்கிறது, அது நன்றாக இருக்கிறது என்று குழந்தைங்கள் அனைவரும் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பரிந்துரை செய்தனர்.  
“எல்லாம் ஒண்ணு ஒண்ணு ஆர்டர் பண்ணுங்க.” என்று சொன்னவனை அவினாஷைத் தவிர மற்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.  உடனே சிவா விரும்பியபடி அனைத்தையும் ஆர்டர் செய்தான் அவினாஷ்.
“தாங்க்ஸ்.” என்று நன்றி சொன்ன சிவாவிடம்,
“நீங்க லேட்டா வரப் போறீங்கண்ணு கௌரி சொன்னதுமே எனக்குப் புரிஞ்சிடுச்சு..எத்தனை நேரம்  தண்ணீரை வைச்சு உங்களுக்குத் தண்ணி காட்டினா?” என்று விசாரித்தான் அவினாஷ். உடனே,
“அண்ணா.” என்று சண்டை போட எழுந்த கௌரியின் கையை இறுகப் பற்றி அமர வைத்தான் சிவா. 
கௌரி அமைதியாக அமர்ந்தவுடன்,”அடுத்த முறை டி ரீட் என்னோடது..எந்த இடம் போகப் போறோம்னு நான் தான் தேர்ந்தெடுப்பேன்.” என்றான் சிவா.
அதைக் கேட்டு மாலினியும் கௌரியும் ஒரே போல்,”நோ” என்று கத்தினர். கடலை நேசிக்கும் மனைவியை நேசிக்கும் விட்டல்,”ஏதாவது காட்டுப் பகுதிக்குப் போகலாம்..பசங்க போகணும்னு சொல்றாங்க.” என்றான்.
“ஆமாம்..கடல் ஓவர்..அடுத்து காடு..அப்புறம் மலை..பாலைவனம்..இனி அந்த மாதிரி தான் போகணும்.” என்று விட்டலுக்கு ஆதரவு கொடுத்தான் அவினாஷ்.
அவர்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த சூர்யா,“காட்டுலே அனிமல்ஸ் இருக்கு.. கடிச்சு சாப்டிடும்.” என்றாள்.  
உடனே,“அப்போ நீயும் அனிமலா..அதான் உன் அப்பாவைக் கடிச்சிட்டேயா?” என்று கேட்டார் ராம கிருஷ்ணன்.
அதற்கு என்ன பதில் சொவதென்று சூர்யாவிற்குத் தெரியவில்லை.  அதைக் கேட்டுக் கொண்டிருந்த கௌரிக்கு அப்போது தான் சிவாவிற்கு ஆன் டிஸெப்டிக் போடவில்லை என்று நினைவிற்கு வந்தது.  அடுத்து அந்தக் கேள்வியைத் தான் கேட்டார் ராம கிருஷ்ணன்,”கௌரி, ஆன் ட்டி ஸெப்டிக் அப்ளே செய்தாச்சா?” என்றார்.
“இல்லை அங்கிள்.” என்றாள் கௌரி.  உடனே அவர் அறையின் சாவியை அவளிடம் கொடுத்து,”ஆன் ட்டியோட மெடிசன் பேக்கை எடுத்துக்கிட்டு வா..அதிலே சாவ்லான் இருக்கு,” என்றார்.
“வேணாம்..தானாச் சரியாகிடும்.” என்றான் சிவா. அதைக் கேட்க கௌரி அங்கே இல்லை.  அவள் திரும்பி வந்த போது சாப்பிட ஆரம்பித்திருந்தான் சிவா.  அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை ராம கிருஷ்ணனைத் தவிர மற்றவர்கள் அங்கேயே அமர்ந்திருந்தனர்.  ரெஸ்டாரண்டிற்கு வெளியே இருந்த தோட்டத்தில், குழந்தைகளுடன் சேர்ந்து பட்டாம்பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தார் ராம கிருஷ்ணன்.  
சாப்பிட்டு முடித்து, கை கழுவிக் கொண்டு கௌரியின் அருகில் அமர்ந்து கொண்டான் சிவா.  அவன் கையைப் பற்றி, சாவ்லானைப் பஞ்சில் தோய்த்து, பல் பட்டிருந்த இடத்தை மென்மையாகத் துடைத்து விட்ட கௌரி,
“ஏன் இப்படி செய்திட்டா?” என்று விசாரித்தாள்.
“தெரியலை..திடீர்ன்னு கடிச்சிட்டா..இதுவரை அக்ஷ்யாவை அடிச்சிருக்கா..தீபா, மேக்னாவைக் கிள்ளுவா..விஜய்கிட்டே போகப் பயப்படுவா..ஆனா அவனையும் ஒருமுறை அடிச்சிருக்கா.” என்றான் சிவா.
“விஜய், மேக்னா யார்?”
“சாந்தி அக்கா பசங்க..இதுவரை யாரையும் கடிச்சதில்லை..எங்கே கத்துக்கிட்டாண்ணு தெரியலை..என்னைக் கடிச்ச மாதிரி யாரையாவது கடிச்சு வைச்சா என்ன செய்யறது?” என்று அவன் கவலையை கௌரியிடம் வெளியிட்டான் சிவா.
அதற்குப் பதில் கௌரியிடம் இல்லை.  அவளுக்குக் குழந்தைகளின் மனத்தைப் படித்துப் பழக்கமில்லை.  சுமித், வினித் இருவரிடமும் அதிகமாகப் பழகியதில்லை.  விடுமுறையில் சந்திப்பது தான்.  ஒரு வயது வரை சிதார்த் மேகலா ஆன் ட்டி வீட்டில் தான் இருந்தான்.  அப்போது வாரமொருமுறை அவளும் அவள் அம்மாவும் ஆன் ட்டி வீட்டிற்கு போவது வழக்கம்.  அப்போது இருந்த சிதார்த்திற்கும் இப்போது இருப்பவனுக்கும் கடலளவு வித்தியாசம் இருந்தது.  இதுவரை சூர்யாவும் தீபாவும் அவளிடம் அடம் பிடித்ததில்லை, சண்டை பிடித்ததில்லை. அதனால்  அதெல்லாம் நடந்தால் என்ன செய்யப் போகிறாளென்று ஐடியாவுமில்லை. ஏதாவது பெரிய பிரச்சனை ஏற்பட்டால் மாலினி, நித்யாவின் உதவியைத் தான் நாட வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டாள்.  
அப்போது, ராம கிருஷ்ணனின் கையைப் பற்றிக் கொண்டு, சிவா அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தாள் சூர்யா.  சிவாவின் மடியில் ஏறி அமர்ந்து, அடுத்த நொடி, அவள் கடித்த கையைப் பிடித்துக் கொண்டு, அவனிடம்,”ஸாரி” என்று சொல்லி விட்டு அதற்கு அடுத்த நொடி அவன் மடியிலிருந்து இறங்கி தோட்டத்தை நோக்கி ஓடிப் போனாள்.  
புயல் போல் வந்து மன்னிப்பு கேட்டு, மனதைக் கவர்ந்து கொண்டு ஓடிப் போன மகளைப் பின் தொடர்ந்து போனான் சிவா.  அவள் மன்னிப்பில் அவன் மனசு லேசாகியிருந்தது.  சிவா, சூர்யாவை பார்த்துக் கொண்டிருந்த கௌரியிடம்,”இந்த மாதிரி செய்யறது  தப்புன்னு அவளுக்குப் புரிய வைக்கணும் கௌரி. அப்போ தான் திரும்ப அதைச் செய்யாம இருப்பா..அவ ஏன் இந்த மாதிரி செய்தான்னு காரணத்தைக் கண்டு பிடிக்கணும்..பெரும்பாலும் பயம் தான் காரணம்..கடல் பார்த்துப் பயந்திட்டாண்ணு நினைக்கறேன்..அதை வெளிப்படுத்த தெரியாம சிவாவைக் கடிச்சிட்டா..சில குழந்தைங்க பயத்திலே பாத் ரூம் போயிடுவாங்க.” என்றார் ராம கிருஷ்ணன்.
உடனே கௌரியின் மனத்தில், படுக்கையில் சூர்யா பாத் ரூம் போவதற்கும் பயம் தான் காரணமா? என்ற கேள்வி எழுந்தது. இங்கே கடலைப் பார்த்து பயந்தவள், வீட்டில் எதைப் பார்த்துப் பயந்து போகிறாளென்று யோசித்த கௌரி, அந்தக் கேள்வியை சிறிது திருத்தி, யாரைப் பார்த்து? என்று மாற்றி யோசித்திருந்தால், இனி வரும் காலங்களில், தொடர்ந்து சில இரவுகள் அவள் தூக்கத்தை இழந்திருக்க மாட்டாள்.

Advertisement