Advertisement

அத்தியாயம் – 28
ஆசை, விருப்பம்.  கனவுகளின் அஸ்திவாரம். நியாயமானதாக இருக்கும் வரை வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக மாற்றக்கூடியது. பேராசையாக, பெருவிருப்பமாக மாறும் போது வாழ்க்கையைச் சிதைக்கிறது. அதற்குக் காரணம் மனிதர்களா? சூழ் நிலைகளா? இல்லை இரண்டுமா?
சிவாவின் இரண்டாவது மனைவியான கௌரியை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்து கொண்ட விஜி,  திடீரென்று அவளுடைய வாழ்க்கையைக் கௌரியுடன் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தாள்.  அதன் விளைவாக கௌரியைப் புறக்கணிக்க அவள் செய்த செய்கைகள் அனைத்தும் அவளைப் புறக்கணிக்க கௌரி செய்ததாகத் தோன்றியது.  அதை வலுப்படுத்த கௌரியின் படிப்பு, வேலை, வசதி என்று காரணங்களும் கூடவே சேர்ந்து கொண்டன.  
எத்தனை முயன்றாலும் முதல் இரண்டு விஷயங்களிலும் அவளால் கௌரியுடன் போட்டிப் போட முடியாது என்று  முடிவு செய்த விஜி, மூன்றாவது விஷயத்தில் கௌரியை விட ஒரு படி மேலே இருக்க வேண்டுமென்று எண்ணலானாள். இதுபோன்று எட்டிக்குப் போட்டியாக ஆரம்பிக்கும் பயணங்களுக்கு முடிவே கிடையாது என்று அந்தப் பயணத்தின் பாதியில் தான் புரிதல் ஏற்படும்.  அதற்குப் பின் அந்த முட்டாள்தனத்தால் ஏற்பட்ட விளைவுகளை சந்தித்தபடி, சமாளித்தபடி மற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் எந்தப் பயணமும் மேற்கொள்ள துணிவு இல்லாமல் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்க நேரிடும். 
ராமகிருஷ்ணன் வீட்டில் ஒரு பங்கு, சொந்தமாக ஒரு ஃபிளாட், கார் இருக்கிறது என்று கௌரியைப் பற்றிய விவரங்கள் சிவாவின் வீட்டில் யாருக்கும் தெரியவில்லை.  அவள் மனேஜராக வேலை பார்க்கிறாள் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு, சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது என்ற தகவலும் போய்ச் சேரவில்லை.  சிவாவின் இரண்டாம் கல்யாணத்திற்கு முன் கடையை விற்று, அவர்கள் பங்கைப் பிரித்து எடுத்துக் கொண்டு, புத்திசாலியாக அவனை அவர்கள் வாழ்க்கையிலிருந்து விலக்கி விட்டோம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் விரும்பியபடி செய்து அவனும் அவர்களை விலக்கி வைக்கிறான் என்ற உண்மையை அவன் அக்கா சாந்தி மட்டும் உணர்ந்திருந்தாள். 
அதனால் தான் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விடைபெற்றப் போது அவள் தம்பி மனைவியிடம் தானாகவே போய்ப் பேசி அவள் வீட்டிற்கு வர வேண்டும் என்ற அழைப்பு விடுத்தாள்.  சிவாவிடம் மனம் விட்டுப் பேச விஷயம் இருந்தது.  அவர்கள் வீட்டிற்கு வரும் போது பேசிக் கொள்ளாலாம் என்று எண்ணியிருந்தாள் சாந்தி.  அதைப் பூடகமாக அவள் கணவர் வெளிப்படுத்திய போதும் அவள் கண்டு கொள்ளவில்லை.  சிவாவிடம் தான் முதலில் அந்த விஷயத்தைத் தெரியப்படுத்த வேண்டுமென்று தெளிவாக இருந்தாள்.  ஆனால் அவள் அறிந்திருக்கவில்லை சிவா அவள் வீட்டிற்கு வரப் போவதில்லையென்று.  அதனால் சில மாதங்கள் கழித்து கௌரியிடம்  அவளே அந்த விஷயத்தைத் தெரியப்படுத்தப் போகிறாளென்று.
வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜமுனாவிற்கும் சிவாவுடன் சில விஷயங்களைப் பற்றி பேச வேண்டியிருந்தது. அவர்கள் அனைவரும் தாமதமாக வந்ததால் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை.  அதனால் விடைபெற்றுக் கொள்ளும் போது, கௌரியிடம் சொல்லிக் கொள்ளவில்லை. 
“உன்கிட்டே பேசணும்..எனக்கு ஃபோன் செய்.” என்று சிவாவிற்குக் கட்டளையிட்டார். 
“செய்யறேன்.” என்று அமைதியாக பதில் அளித்தான். அவன் ஃபோனை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ஜமுனா, ஆத்திரமடைந்து, சிவாவிற்கு அழைத்தப் போது,  அவன் ஃபோன் அறையிலே அலறிக் கொண்டு இருக்க,  கடற்கரையில், மனைவி, குழந்தைகளுடன் காலை வேளையை அனுபவித்துக் கொண்டிருந்தான் சிவா.
மிதமான குளிச்சியுடன் வீசிக் கொண்டிருந்த கடற்கரை காற்றை அமைதியாக அனுபவித்துக் கொண்டிருந்த சிவாவிடம்,“என்ன யோசனை?” என்று கேட்டான் அவினாஷ்.
“ஒண்ணுமில்லை” என்றான் சிவா.
“இவர் பொண்டாட்டிக்குக் கடல் பிடிக்கும்னு இவருக்கு விவரம் இருக்கு..அதனாலே அவளை எப்படி இங்கேயிருந்து கிளப்பணும்னுங்கற விவரமும் தெரிஞ்சிருக்கணும்..உங்க பொண்டாட்டியை எப்படி இங்கேயிருந்து கிளப்பப் போறீங்க?” என்று கேட்டான் அவினாஷ்.
எப்படிக் கிளப்பப் போகிறோம் என்றெல்லாம் சிவா யோசிக்கவேயில்லை.  அது விவகாரமாகக்கூடும் என்றும் எண்ணவில்லை.
“ஏன் பிராப்ளம் ஆகுமா? என்று கேட்ட சிவாவிடம்,
“ஆல் தி பெஸ்ட்.” என்று வாழ்த்துச் சொல்லி விட்டு அனன்யாவுடன் எழுந்து கொண்டான் அவினாஷ்.  அவனை அடுத்து விட்டலும் எழுந்துக் கொள்ள, சிவாவும் அவன் மடியில் அமர்ந்திருந்த சூர்யாவை எழுப்பிவிட்டு எழுந்து கொண்டான். உடனே அலையில் விளையாடிக் கொண்டிருந்த அனைவரும் கரையை நோக்கி வந்தனர்.  மெதுவாக, குடும்பம் குடும்பமாக அறையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.  
வழியில், நீச்சல் குளத்திற்கு அருகே இருந்த ஷவரின் அடியில், உடம்பில் ஒட்டியிருந்த ஈரமணல் போகும் வரை நின்று விட்டு, இரண்டு குடும்பங்கள் அவர்கள் அறைக்குச் சென்று அரைமணி நேரம் ஆன பின்னும் ஒரு குடும்பம் மட்டும் அங்கே தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தது.  அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிவாவிற்கு அப்போது தான் அவினாஷின் வாழ்த்து எதற்கு என்று புரிந்தது.  கடலினுள் போக பயந்த சூர்யா இப்போது ஷவரின் அடியில் நின்று கொண்டு அட்டகாசம் செய்து கொண்டிருந்தாள்.  அவளுடன் சேர்ந்து கௌரியும் தீபாவும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.
குழந்தைகளைக் கண்டிக்க விரும்பாமல், அவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த மனைவியை அவர்கள் எதிரில் அதட்ட முடியாமல்,”கௌரி..போகலாம்.” என்று சொன்னான் சிவா.
“இதோ.” என்று பதில் சொன்னாள் கௌரி.  அந்த “இதோ” என்ற வார்த்தைக்கு வேறு அர்த்தம் என்று புரிந்த போது அரைமணி நேரமாகியிருந்தது.  அதுவரை பொறுமையாக இருந்தவன்,”கௌரி.” என்று குரலை உயர்த்தியவுடன்,
“சரி..கிளம்பலாம்” என்ற கௌரியிடம், ‘ப்ளீஸ்’ என்று அடம் பிடித்த தீபாவையும், அழ ஆரம்பித்த சூர்யாவையும் இழுத்துக் கொண்டு அறையை நோக்கிச் சென்றனர் சிவாவும் கௌரியும். அப்போது உரக்க அழ ஆரம்பித்த சூர்யாவைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு, தீபாவையும் அருகில் அழைத்து அவர்கள் இருவரிடமும் குசுகுசுவென்று பேசினாள் கௌரி. அதைக் கேட்டு இருவர் முகத்திலும் சிரிப்பு தோன்றியது.  
அதைப் பார்த்து,”எதுக்கு சிரிக்கறாங்க?” என்று விசாரித்த சிவாவின் கேள்விக்குப் பதில் கொடுக்காமல்,
“இவங்க இரண்டு பேரையும் நீச்சல் கத்துக்க அனுப்பனும்..உங்களுக்கும் நீச்சல் தெரியுது அதனாலே நீங்களும் அவங்களோட கிளாஸ்க்குப் போயிட்டு வாங்க.” என்று அவன் கவனத்தை அவர்களிடமிருந்து திசை திருப்பினாள் கௌரி.   
“முதல்லே ஸ்கூல்க்குப் போகட்டும்..எழுத, படிக்க கத்துக்கட்டும்.” என்று கண்டிஷன் போட்டான் தகப்பன். அதற்கு கௌரி பதில் சொல்லுமுன்,”ரூமுக்குப் போகலாம்.” என்று அறையை நோக்கி ஓடிப் போனாள் தீபா.  எப்படித் திடீரென்று அறைக்குப் போக ஆர்வமானாள் என்று அடுத்த சில நிமிடங்களில் தெரிந்து கொண்டான் சிவா.
பாத் ரூமில் பெண்கள் முவரும் சிரித்துப் பேசி, குதுகலமாகக் குளித்துக் கொண்டிருந்தனர். வெளியே, பால்கனியில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் பொறுமையாக அவனுடைய முறைக்காகக் காத்திருந்து கொதித்துப் போயிருந்தவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் நேரே பாத் ரூம் மீது படையெடுத்தான்.
அவன் கதவைத் திறக்க, நீளமான குளியல் தொட்டியில் நிரம்பியிருந்த தண்ணீரில் தீபா  விளையாடிக் கொண்டிருக்க, தரையில் அமர்ந்து அவர்கள் மீது பீச்சிக் கொண்டிருந்த நீர்த் திவலைகளில் கண்களை மூடிக் கொண்டு முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தனர் சூர்யாவும் கௌரியும்.  அதனால் அவர்களுக்கு முன், கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவனைப் பார்த்து,”அப்பா, எதுக்கு உள்ளே வர்றீங்க?” என்று கத்தினாள் தீபா.
உடனே கண்களைத் திறந்த கௌரிக்கு ருத்ர மூர்த்தியாகக் காட்சியளித்தான் சிவா. கடற்கரைக்கு உடுத்திச் சென்றிருந்த உடைகள் பாதி ஈரத்தில் உடம்போடு ஓட்டியிருக்க, முகத்தில் கோபம் தாண்டவமாட,”இத்தனை நேரம் தண்ணீர்லே விளையாடினா உடம்புக்கு ஒத்துக்குமா?” என்று அடிக்குரலில் கௌரியிடம் கேட்டான்.
“ஒண்ணும் ஆகாது.” என்றாள் கௌரி.
“உனக்கு இல்லை..இவங்க இரண்டு பேருக்கும்.” என்று குழந்தைகளைப் பற்றிய அவன் கவலையை வெளியிட,
“ஒண்ணும் ஆகாது.” என்று கௌரியைப் போல் பதில் அளித்தனர் இருவரும். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிவா அவன் வாயைத் திறக்குமுன்,”அப்பா சொல்றது சரி..தண்ணீர்லே விளையாடினது போதும்..குளிச்சிட்டு ரெடியாகயாகணும்..எல்லாரும் காத்துக்கிட்டு இருப்பாங்க.” என்றாள் கௌரி.
அதற்கு மேல் அங்கே நிற்காமல் பாத் ரூம் கதவைச் சாத்திக் கொண்டு வெளியேறினான் சிவா. அடுத்து வந்த நிமிடங்களில் இரண்டு குழந்தைகளையும் குளிக்க வைத்து டவலைச் சுற்றி வெளியே அனுப்பினாள் கௌரி.  அடுத்து அவளும் குளித்து முடித்து, மடித்து வைப்பட்டிருந்த அங்கியில் ஒன்றை அணிந்து கொண்டு வெளியே வந்தாள். 
அவள் வெளியே வரும்வரை மிகவும் பொறுமையாக அமர்ந்திருந்தவன் உடனே பாத் ரூமிற்குள் நுழைந்து கொண்டதால் கௌரியின் அரைகுறை உடையைக் கவனிக்கவில்லை.  சில நிமிடங்கள் கழித்து உள்ளேயிருந்து ‘கௌரி’ என்று அழைத்தான் சிவா. அப்போது, சிவா கொண்டு வந்திருந்த பெட்டியைத் திறக்கும் முயற்சியில் இறங்கியிருந்தாள் கௌரி.  இதுவும் நம்பர் லாக்.  வரவேற்பு நிகழ்ச்சிக்கு உடை எடுத்து வந்த அதே பெட்டி.  இதுவரை சிவா தான் அதைத் திறந்து பூட்டிக் கொண்டிருந்தான்.  இப்போது குழந்தைகள் அணிய வேண்டிய உடை அதனுள் இருந்தது.  அன்றைக்கு அவன் அனுப்பிய எண்களை மனத்தில் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தவளுக்கு சிவாவின் அழைப்பு போய்ச் சேரவில்லை.  இரண்டு, மூன்று நொடிகள் யோசித்த பின் அவள் கைப்பேசியை எடுத்துப் பார்க்கலாம் என்று நினைத்த போது சிவாவின் கைப்பேசி அழைத்து.  கட்டிலருகே இருந்த மேஜையில் அவன் ஃபோன் விடாமல் ஒலிக்க, ஜமுனாவிடமிருந்து தான் அழைப்பு என்றவுடன் அதை நிராகரித்தாள் கௌரி.  அந்த அழைப்பு நின்றபோது பாத் ரூம் கதவைத் லேசாகத் திறந்து  கௌரியை அழைத்தான் சிவா. 
இப்போது அவன் அழைப்பு தெளிவாகக் கேட்க, அதே நொடி அந்த எண்களும் கௌரியின் நினைவில் தோன்ற, உடனே அதை உபயோகித்து பெட்டியைத் திறக்கும் முயற்சியில் இறங்கினாள் கௌரி.  அப்போது,
“அம்மா, பாத் ரூம்லேர்ந்து அப்பா கூப்பிடறாங்க.” என்றாள் தீபா.
“என்னென்னு கேளு.” என்றாள் கௌரி.
“என்ன வேணும்ப்பா?’ என்று பெரியவள் கட்டிலிருந்து கேட்க,
“உங்கம்மாவை வரச் சொல்லு.” என்றான் சிவா.
அது கௌரியின் காதில் தெளிவாக விழுந்தது.  பெட்டி திறந்தவுடன் அதிலிருந்து உடையை எடுத்துக் கட்டிலின் மீது வைத்தாள் கௌரி.  ஒருவேளை கௌரியின் காதில் அது விழவில்லையோ என்று சந்தேகமடைந்த தீபா,”அம்மா, உங்களை பாத் ரூமுக்கு கூப்பிடறாங்க அப்பா.” என்று தகவல் கொடுத்தாள்.
“போறேன்..காத்திருக்கச் சொல்லு.” என்றாள் கௌரி.
“அப்பா, வெயிட் பண்ணுங்க..அம்மா வர்றாங்களாம்.” என்று கத்தினாள் தீபா.  அந்த உரையாடலில் கலந்து கொள்ளாமல் கண்ணாடி முன் இருந்த கௌரியின் அழகு சாதனப் பையைத் திறந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள் சூர்யா.
அதைப் பார்த்து,”சூர்யா, அதை மூடு..இங்கே வந்து டிரெஸ் போட்டுக்கோ.” என்று அவளை அழைத்தாள் கௌரி.  சூர்யா வரவில்லை. பையிலிருந்த சாமான்களில் எதைத் திறக்க முடியும் என்று திருகிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  
உடனே,”நீயே போட்டுக்கோ.” என்று தீபாவிடம் அவள் உடைகளைக் கொடுத்து விட்டு, எதையாவது திறந்து கீழே கொட்டுமுன் ஓடிப் போய் டவலோடு சூர்யாவை அப்படியே தூக்கி வந்து கட்டிலின் மீது போட்டாள் கௌரி. 
அப்போது,”கௌரி” என்று சத்தமாக அழைத்தான் சிவா.
“என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு இப்படிக் கத்தறீங்க?” என்று பதிலுக்குக் கத்தினாள் கௌரி.
“நீ இங்கே வா..சொல்றேன்.”
உடனே கௌரி பாத் ரூமிற்குச் செல்ல, அவளைப் பின் தொடர்ந்து வந்தாள் சூர்யா.  இடுப்பில் டவலுடன் நின்று கொண்டிருந்தான் சிவா.
“இன்னும் குளிக்கலையா?” என்று கௌரி விசாரிக்க,
“இதை எப்படித் திறக்கறது? “ என்று ஷவரை சுட்டிக் காட்டிக் கேட்டான்.
பாத் ரூம் உள்ளே சென்ற கௌரியைத் தாண்டி வேகமாகச் சென்ற சூர்யா, அந்தக் குமிழைத் திறந்து மூடுவது எப்படி என்று சிவாவிற்கு செய்து காண்பிக்க, பீச்சி அடித்த நீர்வீச்சில் அவர்கள் மூவரும் நனந்தனர்.  அதில் சந்தோஷமடந்தை சூர்யா மறுபடியும் குமிழைத் திருப்பி, மூடி, திறந்து விளையாட,”வேணாம்..நீங்க இரண்டு பேரும் மறுபடியும் ஈரமாயிடுவீங்க..வெளியே போங்க..எப்படின்னு புரிஞ்சிடுச்சு..நான் பார்த்துக்கறேன்.” என்று கத்தினான் சிவா.
“அவ டவலைச் சுத்திக்கிட்டு இருக்கா..நான் இது மட்டும் தான் போட்டிருக்கேன்..ஈரமானா ஒண்ணும் பிராப்ளமில்லை.” என்று விளக்கம் கொடுத்தாள் கௌரி.
அதைக் கேட்ட நொடி அவளைத் தலையிலிருந்து கால் வரை ஆராய்ச்சி செய்தவனுக்கு அவள் உண்மையை தான் சொல்கிறாள் என்று உணர்ந்தவுடன் அவன் உணர்வுகள் விழித்துக் கொள்ள, அவனின் டவலை இடுப்புடன் இறுக்கிக் கொண்டு,”முதல்லே நீ வெளியே போ.” என்றான் கோபமாக.
அவன் கோபத்தில் மருண்டு போன சூர்யா, முதலில் வெளியே ஓடிப் போக, அதைப் பார்த்து சிவாவைக் கடிந்து கொள்ள நினைத்த கௌரி அவன் புறம் திரும்ப, அவர்கள் இருவரும் இருந்த நிலை கௌரிக்கு உரைக்க, அதைச் சிவா படிக்க நினைக்க, அதற்கு அவகாசம் கொடுக்காமல் அவசரமாக கதவைச் சாத்திக் கொண்டு வெளியேறிய கௌரி, அதன் மேல் சாயந்து அவளை நிதானப்படுத்திக் கொண்டாள். அவள் வெளியேறியவுடன் பாத் ரூம் சுவரில் சாயந்து அவனை நிதானப்படுத்திக் கொண்டான் சிவா. அடுத்து வந்த நொடிகளை அவர்கள் சாயந்திருந்த உணர்வற்ற கதவும், சுவருமாக மாறி அதைக் கடந்தனர் கௌரியும் சிவாவும். 
பத்து நிமிடங்கள் கழித்து, பாத் ரோபில், பாத் ரூம் கதவைத் திறந்த சிவாவிடம், அதன் வாசலில்  காத்திருந்த குழந்தைங்கள் இருவரும்,”அப்பா, திரும்பி நில்லுங்க.” என்று கத்தினர்.  ஏன் என்று கேட்கக்கூட அவகாசம் கொடுக்காமல் அவனை வலுக்கட்டாயமாக கதவை நோக்கித் திரும்பி நிற்க வைத்தனர் இருவரும்.
“இப்போ தான் அங்கேயிருந்து வந்தேன்..திரும்ப உள்ளே எதுக்கு அனுப்பறீங்க? நான் ரெடியாக வேணாமா? ” என்று கேட்டவனிடம், 
“அம்மா டிரெஸ் மாத்தறாங்க..பார்க்கக்கூடாது.” என்றாள் தீபா.
அவளுடைய கமீஸைத் தலை வழியாக அணிந்து கொண்டிருந்தாள் கௌரி. அப்போது சிவாவின் கைப்பேசி அழைத்தது.  
கௌரியின் புறம் திரும்பாமல்,“ஃபோன்லே யார்?” என்று கேட்டான் சிவா.
அவளுடைய உடையை அணிந்தபடி,“உங்கம்மா..” என்றாள் கௌரி.
அவருக்கு ஃபோன் செய்யாதது உடனே நினைவுக்கு வர,“எடு.” என்று கட்டளையிட்டான் சிவா. 
இவன் அம்மாவுடன் இப்போது நான் எப்படி பேச முடியும் என்று கோபப்பட்ட கௌரி,“நீங்க குளிக்க போனதிலிருந்து விடாம ஃபோன் செய்துகிட்டு இருக்காங்க.” என்றாள்.
“ஏன் நீ எடுக்கலை?” என்று விசாரணையில் இறங்கினான் சிவா.
“உங்களோட தானே பேசணும்னு சொன்னாங்க.” என்று ஜமுனா சொன்னதை அப்படியே சொல்லிக் காட்டினாள் கௌரி.
“சரி..ஃபோனை என்கிட்டே கொடு.” என்றான்.
“குழந்தைங்க சொன்னது காதிலே விழலையா..நான் டிரெஸ் போட்டுக்கிட்டு இருக்கேன்.” என்றாள்.
அப்போது அழைப்பு நின்றது.  அவளுடைய சல்வாரை எடுக்கப் போன போது மறுபடியும் ஃபோன் ஒலிக்க ஆரம்பித்தது.
குழந்தைகள் இருவரையும் விலக்கி விட்டு, நிதனாமாக மேஜையை நோக்கி வந்த சிவா, அவன் ஃபோனை எடுத்தவுடன் அழைப்பு நின்று போனது.  அப்போது அவனைக் கண்களால் எரித்து கொண்டிருந்த மனைவியிடம்,
“ஒவ்வொரு முறையும் நீ டிரெஸ் மாற்றும் போது திரும்பி நிற்க என்னாலே முடியாது…நான் மாற்றும் போது உன்னையும் திரும்பி நில்லுன்னு சொல்ல மாட்டேன்..அதெல்லாம் இவங்க இரண்டு பேருக்கு தான்.” என்றான் சிவா.
உடனே, அவன் அங்கே நிற்பதைப் பொருட்படுத்தாமல், கட்டில் மீது அமர்ந்து நிதானமாக அவள் சல்வாரை அணிய ஆரம்பித்தாள் கௌரி. 
கணவன் மனைவியாக, கௌரி சங்கராக,  கௌரியும் சிவாவும் உணர ஆரம்பித்ததை அவர்கள் இருவரும் உணருமுன் சிவாவின் ஃபோன் ஓசை எழுப்பி அந்த நொடியை மாசுப்படுத்தியது. 
 

Advertisement