Advertisement

அத்தியாயம் – 27_2
இன்று காலை வரை, கல்யாணம் முடிந்த பின், அவர்கள் அனைவரும் மகேஷின் வீட்டிற்குச் செல்வதாக தான் பிளான். மகேஷின் குடும்பத்துடன் அங்கே சில மணி நேரங்கள் இருந்து விட்டு இவர்கள் நால்வர் மட்டும் இங்கே வர திட்டமிட்டு இருந்தனர்.  எந்த நேரத்திலும் பால், பழம் சடங்கு பற்றி பேச்சே எழவில்லை. அதனால் எப்போது, ஏன் திட்டம் மாறியது என்று அவனுக்குத் தெரியவில்லை.  மகேஷ் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை என்று அவனிடம் சொல்லியிருந்தால் அவர்கள் நால்வரும் நேரடியாக இங்கே வந்திருப்பார்கள்.  எப்படியும் மாலை ரிசெப்ஷனுக்கு இங்கே தான் தயாராக முடிவு செய்திருந்தனர்.  அதனால் தான் கௌரி சொன்னபடி அவர்கள் துணிகளைத் தனித் தனியாக பேக் செய்திருந்தார் சாவித்திரி அம்மா. 
திடீரென்று புது வீட்டிற்குப் போனது கௌரி, சிவா இருவருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது.  அந்த நிகழ்விலிருந்து வெளி வரமுடியவில்லை. ஒரு படுக்கையறை கூட தயாராக இல்லாத நிலையில், வீடு முழுவதும் சாமான்கள் இருக்கும் அந்த வீட்டில் எங்கே, எப்படி அவர்களால் ஓய்வு எடுத்துக் கொள்ள முடியும் என்று யோசித்தவனின் மனது அப்படியே அவர்களிடமிருந்து ரிசெப்ஷன் நிகழ்ச்சிக்குத் தாவியது. உடனே,
“சாவித்திரி அம்மா என்ன சொன்னாங்க? எல்லாரும் எப்போ வர்றாங்க ரிசெப்ஷனுக்கு?” என்று கௌரியை விசாரித்தான் சிவா.
“அவங்கெல்லாம் மகேஷ் வீட்டுக்குக் கிளம்பிப் போயிட்டாங்களாம்..நம்ம வீட்டைப் பூட்டிக்கிட்டு சாவிம்மாவும் அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க..சாயங்காலம் ரிசெப்ஷன்லே வீட்டுச் சாவியை உங்ககிட்டே கொடுத்திடுவாங்களாம்.” என்று பதில் சொல்லிவிட்டு மாற்றுத் துணியோடு பாத் ரூமிற்குச் சென்றாள் கௌரி.
“மகேஷ் வீட்டுக்குப் போயிட்டாங்களா? ஏன்?” என்று யோசனையானான் சிவா.  அப்போது அவர்கள் அறை கதைவைத் தட்டினான் அவினாஷ்.
உடனே எழுந்து சென்று கதவைத் திறந்தான் சிவா.
“கோவில்லேர்ந்து வந்திட்டாங்க..உங்களோட சாமான் இரண்டு இருந்திச்சு..கொண்டு வந்திட்டேன்.” என்று ஒரு பையை, பெட்டியைச் சிவாவிடம் கொடுத்தான் அவினாஷ்.
அதை வாங்கிக் கொண்டு கதவைச் சாத்தினான் சிவா.  பெட்டியை ஓரமாக வைத்து விட்டு பையைப் படுக்கை மீது வைத்தான். ஹோல்டால் பையிலிருந்து அவனுடைய டீ ஷர்ட், வேஷ்டியை எடுத்துப் படுக்கை மீது வைத்தான் சிவா.
பாத் ரூமிலிருந்து வெளியே வந்த கௌரி சுடிதார் அணிந்திருந்தாள். முகத்தைக் கழுவியதனால் மூக்குக் கண்ணாடியைக் கையில் வைத்திருந்தாள். நேரே டிரெஸ்ஸிங் டேபிளிற்குச் சென்றவள், முதலில் மூக்குக் கண்ணாடியை அங்கே இருந்த துணியில் உடைந்து போகும் அளவிற்கு அழுத்தமாகத் துடைத்து அதன் உறையில் வைத்தாள். அவளின் தலை பின்னல், பூ, ஹேர் கிளிப் என்று அனைத்தையும் வேக, வேகமாக களைந்து, விட்டெறிந்து, கோபம், கசப்பு, களைப்பு என்று அனைத்தும் சேர்ந்து கொள்ள,  கட்டிலிற்குச் சென்று தீபாவின் அருகே படுத்துக் கொண்டாள். 
அவள் செய்கைகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.  அவள் என்ன எண்ணுகிறாள் என்று அவனால் யுகிக்க முடியவில்லை.  ஆனால் அவளின் செய்கையில் தெரிந்த வேகம் அவள் கோபமாக இருக்கிறாள் என்று காட்டியது.  அவன் செய்கை தான் அவள் கோபத்திற்குக் காரணமென்று அப்போதே சிவாவிடம் கௌரி வெளிப்படுத்தி இருக்கலாம். அவன் அம்மாவின் செயலால் அவனுக்கு ஏற்பட்டிருந்த எரிச்சலை சிவாவும் கௌரிக்குத் தெரியப்படுத்தி இருக்கலாம்.  ஆனால் இருவரும் அவரவர் எண்ணங்களை வெளியிடாமல், மனத்தில் விதைத்துக் குழப்பத்தை வளர்க்க ஆரம்பித்தனர்.
அதன் பின் பாத் ரூமிற்குச் சென்று திரும்பிய சிவா அவன் உடைகளைக் களைந்து விட்டு வீட்டில் அணியும் டீ ஷர்ட் வேஷ்டிக்கு மாறிக் கொண்டு சூர்யாவின் அருகில், கௌரிக்கு எதிர்புறம் படுத்துக் கொண்டான்.  அவன் படுத்தவுடன் அவன் மீது கால்களைப் போட்டுக் கொண்டாள் சூர்யா.  தீபாவை அணைத்துப் படுத்திருந்த கௌரியின் புறம் திரும்பிப் படுத்தான் சிவா. கல்யாணம் ஏற்படுத்திய களைப்பில் தூங்கிப் போயிருந்தாள் மனைவி. களைப்பாக இருந்தாலும் குழந்தைகளையும் மனைவியையும் பார்த்தபடி விழித்தே இருந்தான் கணவன்.
பகல் நேரத்தில் சாதாரணமாகக் காட்சியளித்த வீடு இருளில் கவிழ ஆரம்பித்தவுடன்  பிரமிப்பை ஏற்படுத்தியது. மாடியிலும் வீட்டைச் சுற்றியும் வண்ண வண்ண விளக்குகள், வீட்டு வாசலில் வாழை மரம் என்று கௌரியின் கல்யாணத்தில் வீடும் மகிழ்ச்சியாக காட்சியளித்தது. மேகலா குடும்பத்திற்குத் தெரிந்தவர்கள், கௌரியுடன் வேலை பார்ப்பவர்கள், மாலினி, அவினாஷை அறிந்தவர், தெரிந்தவர் என்று வீட்டு மாடியில் வரவேற்பு நிகழ்ச்சி களை கட்டியிருந்தது.  
நிகழ்ச்சி முடியும் தருவாயில் தான் வந்து சேர்ந்தார் ஜமுனா. நிகழ்ச்சி ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் வந்தனர் சாந்தியும் ராஜேந்திரனும்.  அவர்கள் குழந்தைகள் வரவில்லை.  இந்த முறையும் அமைதியாக, தனியாக அமர்ந்திருந்தாள் சாந்தி.  ராஜேந்திரனை யாருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் தேவை ஏற்படவில்லை. அவராகவே சுய அறிமுகம் செய்து கொண்டு, அனைவர்க்கும் தன்னுடைய பிஸ்னஸ் கார்ட்டை கொடுத்து வியாபாரத்தை விரிவாக்கும் வேலையில் இறங்கினார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்குச் சிவா, குழந்தைகளை அறிமுகப்படுத்தி வைத்தனர் கௌரியும் அவள் குடும்பத்தினரும்.  எந்த இடத்திலும், யாரிடத்திலும், எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அவளுடைய கணவன், குழந்தைகள் என்று சிவாவையும், தீபா, சூர்யாவையும் அறிமுகம் செய்து வைத்து அவள் வட்டத்திற்குள் அவர்களைச் சேர்த்துக் கொண்டாள் கௌரி.  அதன் விளைவாக அங்கே வந்திருந்த விருந்தினர்களுக்கும் சிவாவிற்கும் சகஜமான உறவு உண்டானது. 
வரவேற்பு நிகழ்ச்சியின் நடுவில், மூன்று அடுக்கில், பெரிய கேக்கை கொண்டு வந்து வைத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் நித்யாவின் அம்மா.  அதற்குப் பின் குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டமாகிவிட்டது. தீபா, சூர்யா, சுனித், வினித், சிதார்த் என்று குழந்தைகள் புடைச் சூழ குடும்பமாக கேக்கை வெட்டி, கணவன், மனைவியானதைக் கொண்டாடினர் சிவாவும் கௌரியும்.  அந்தக் கேக்கிலிருந்து ஒரு துண்டத்தை எடுத்து அவர்கள் முதல் திருமண நாளில் சாப்பிட  என்று அதைத் தனியாக ஃப்ரிஸரில் பாதுகாப்பாக வைத்தார் நித்யாவின் அம்மா. அந்த அன்பில் கரைந்து, அவரை அணைத்து நன்றி சொன்ன அந்த நொடி அன்று மதியம் ஏற்பட்டிருந்த கசப்பு மறைந்து போய் அந்தத் தினம் மறுபடியும் இனிப்பாக மாறியது கௌரிக்கு.
அவன் மாமா சாப்பிட்டுக் கொண்டிருக்க அவன் அக்கா மட்டும் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து அவளிடம் சென்றான் சிவா.  மகேஷின் குடும்பம் இன்னும் வந்திருக்கவில்லை.
“அக்கா, ஏன் பசங்க வரலை?” என்று சாதாரணமாக பேச்சை ஆரம்பித்தான் சிவா.
“படிச்சுகிட்டு இருக்காங்க..காலைலே கல்யாணத்துக்கு வந்தாங்களே.”
“ஆமாம்..வந்திருந்தாங்க.”
அதன் பின் என்ன பேசுவதென்று தெரியவில்லை.  சில நிமிடங்கள் கழித்து,”உன்கிட்டே கொஞ்சம் பேசுணும் டா..ஃபோன் செய்தேன்.. நீ எடுக்கவே இல்லை.”
“என்ன செய்ய? ஓர் ஆளா எல்லாத்துக்கும் அலையறேன்..எதுவும் இன்னும் முழுசா செய்து முடிக்கலை..வீடு…கடை எல்லாம் பாதிலே நிக்குது..இதிலே இன்னைக்குப் புது வீட்லே தான் பால், பழம் கொடுக்கணும்னு கட்டாயப்படுத்தி எங்களை அங்கே அழைச்சிட்டுப் போயிட்டாங்க அம்மா..அங்கேயிருந்தே இங்கே கிளம்பி வரேண்ணு என்கிட்டே சொல்லிட்டு மகேஷ் வீட்டுக்குக் கிளம்பி போயிருக்காங்க..இன்னும் அவங்க யாரும் வரலை..எல்லாரும் சாப்பிட ஆரம்பிச்சாச்சு..கொஞ்ச நேரத்திலே கிளம்பிடுவாங்க.” என்றான் சிவா.
சிவா சொன்னதைக் கேட்டு இதென்ன கூத்து? எதற்காக புது வீட்டிற்குப் போனார்கள்? ஒருவேளை சிவாவையும் கௌரியையும் அவள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விஜிக்கு இஷ்டமில்லையா? என்று யோசனையானாள் சாந்தி. அப்போது அங்கே வந்த சாவித்திரி அம்மாவிடம்,”சாவிம்மா, அக்காவைச் சாப்பிட அழைச்சுக்கிட்டு போங்க.” என்றான் சிவா.
“உன் மாமா?” என்று விசாரித்தவளிடம்,”அவர் சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு..அதான் உன்னைப் பார்த்துப் பேசிட்டு அப்படியே சாப்பிட அழைச்சிட்டுப் போகலாம் வந்தேன்..நீ சாவிம்மாகூட போ க்கா.” என்றான் சிவா.
சாவித்திரி அம்மாவுடன் சாப்பிடச் சென்றாள் சாந்தி.  அங்கே குழந்தைகள் அனைவர்க்கும் தனித் தனி ப்ளேட்டில் அவர்களுக்கு வேண்டியைதைப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் மாலினி.  அவர்களை நாற்காலியில் உட்கார வைத்து சாப்பிடுவதை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள் நித்யா. சாந்தியைக் கண்டவுடன் சாவித்திரி அம்மாவை அனுப்பி விட்டு மாலினியே கவனித்துக் கொண்டாள். அவர் சாப்பிட்டு முடித்தவுடன் அவருடைய குழந்தைகளுக்காகத் தனியாக உணவும், கேக்கும் பேக் செய்து கொடுத்தாள்.
“நான் கிளம்பறேன்.” என்று சாந்தி விடை பெற்றுக் கொண்ட போது,”உங்க அம்மாவைக் காணுமே.” என்று விசாரித்தாள் மாலினி.
“தெரியலை..என்கிட்டே எதுவும் சொல்லலை.” என்றாள் சாந்தி.  அந்த நேரம் அங்கே சாந்தியைத் தேடிக் கொண்டு வந்த சாவித்திரி அம்மா,”உன் வீட்டுக்காரர் தேடறாரு..கிளம்பிட்டியா?” என்று கேட்டார்.
“கிளம்பிட்டேன்..அம்மா ஏன் இன்னும் வரலை சாவிம்மா?” என்று விசாரித்தார் சாந்தி.
“உங்கம்மாவைப் பற்றி தெரியாதா?..மதியம் புது வீட்டுக்கு வந்த பிறகு தான் சாயங்காலம் ஃபங்ஷனுக்கு உடுத்திக்க துணி கொண்டு வரலைன்னு நியாபகம் வந்திச்சு..உடனே மகேஷ் தம்பியோட புறப்பட்டுப் போயிட்டாங்க..உடம்பு சரியில்லாத புள்ளைத்தாச்சியை அழைச்சுக்கிட்டு இப்படியா அலைவாங்க..அவளுக்கு முடியாம போயிருக்கும் அதான்  மெதுவா புறப்பட்டு வராங்க போல.” என்று விவரத்தைப் பகிர்ந்து கொண்டார் சாவித்திரி அம்மா.
சாவிர்த்தி அம்மா சொன்னதைக் கேட்டுச் சாந்திக்குக் கோபமாக வந்தது.  எதற்காக புது வீடு விஜயம் என்று அவளுக்கும் புரியவில்லை.  இப்போது விஜி இருக்கும் நிலையில் அவளும் எதற்காக அங்கே சென்றாள் என்று விஜி மீது கோபமானாள்.  ஆனால் அவள் யாரையும் ஏன் இப்படிச் செய்கிறீகள் என்று கேள்வி கேட்க முடியாது.  நல்லதை, நியாயத்தை எடுத்துச் சொன்னால் மகேஷும் விஜியும் அவளை எடுத்தெறிந்து பேசக்கூடுமென்று மௌனமானாள் சாந்தி.
சிவாவிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்ட சாந்தி இந்த முறை கௌரி இருக்குமிடம் வந்து,”கௌரி, நான் கிளம்பறேன் மா..உனக்கு எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ நீயும் சிவாவும் குழந்தைங்களை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வாங்க..நான் வேலைக்கெல்லாம் போகலை..எப்போதும் வீட்லே தான் இருப்பேன்.” என்று தயக்கத்துடன் பேசினார் சாந்தி. 
“வரோம் அண்ணி..உங்க குழந்தைங்க ஏன் வரலை?” என்று அழைப்பை ஏற்றுக் கொண்டு அவர் பிள்ளைகளைப் பற்றி விசாரித்தாள் கௌரி.
“பரீட்சைக்குப் படிக்கறாங்க..அதான் அழைச்சிட்டு வரலை.” என்றார்.  அப்போது,”சாந்தி.” என்று அழைத்துக் கொண்டு வந்தார் ராஜேந்திரன்.
“கிளம்பிட்டேன்.” என்று பதில் கொடுத்தார் சாந்தி.
“அடுத்து எங்க வீட்டு விசேஷம் தான்..கண்டிப்பா நீ வரணும்..இப்போவே அழைச்சிட்டேன்.” என்று பூடகமாகப் பேசினார் ராஜேந்திரன்.
எங்கள் வீட்டிற்கு வா என்று சாதாரணமாக அவளை அழைத்தார் சாந்தி. இவர் விசேஷம் என்று சொல்கிறார். என்ன நடக்கிறது என்று புரியாமல் சாந்தியைப் பார்த்தாள் கௌரி.  அதற்கு விளக்கம் கொடுக்கவில்லை சாந்தி.  அந்த விளக்கத்தை முதலில் அவள் தம்பிக்கு கொடுக்க வேண்டுமென்று நினைத்ததால்  மௌனம் காத்தாள் சாந்தி.  
அவர்கள் வீட்டில் அடுத்தடுத்து ஒரே போல் விசேஷம் வரப் போவதை அவர்கள் மூவருமே அப்போது அறிந்திருக்கவில்லை.  
அவர்கள் புறப்பட்டுச் சென்ற பின் வந்து சேர்ந்தனர் சிவாவின் பெற்றோரும், தம்பியின் குடும்பமும்.  அவர்களைக் கண்டவுடன் தீபாவும் சூர்யாவும் கௌரியையே வட்டமிட்டனர்.  கௌரியும் அவர்கள் இருவரையும் அவளுடனேயே வைத்துக் கொண்டாள்.  
வீட்டு மாடியிலிருந்து வரவேற்பு நிகழ்ச்சிக்காக அலங்கரிக்கப்பட்டு இருந்த வீட்டையும், அதன் சுற்றுப் புறத்தையும், சுற்றளவையும் பார்த்து மனத்தில் கணக்கிட்டு கொண்டிருந்தாள் விஜி.  அப்போது அங்கே வந்த மகேஷிடம்,”ரொம்ப அழகா இருக்கு இந்த வீடு..பெரிய வீடு.” என்றாள்.
“அவினாஷ், மாலினியோட வீடு..அவங்க அப்பா, அம்மாக்குக் கௌரியோட குடும்பத்தைத் தெரியும்.” என்று விளக்கம் கொடுத்த மகேஷிற்கும், வீட்டை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த விஜிக்கும் அந்த வீட்டில் கௌரிக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்ற முக்கியமான விவரம் தெரிய வந்தால் என்ன நடக்கும்?

Advertisement