Advertisement

அத்தியாயம் – 27_1
வரவேற்பறையில் படுத்திருந்த ஜமுனாவும் உறங்கவில்லை.  புதுக் கடை, புது வீடு என்று புதுசாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் கௌரி எதற்காக இரண்டு குழந்தைகளின் தகப்பனான சிவாவை மணக்க வேண்டுமென்று யோசனையில் இறங்கினார்.
அதே சமயம் சமையலறையில் யோசனையில் இருந்த சாவித்திரி அம்மா ஒரு முடிவுடன் வரவேற்பறைக்கு வந்தார்.  அங்கே கண் மூடிப் படுத்திருந்த ஜமுனாவி மீது பார்வையைச் செலுத்தியவர் மகேஷும் விஜியும் எங்கே என்று தேடிக் கொண்டு சென்றார். குழந்தைகள் அறையில், பங்க் பெட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏணியில் ஏறி, இறங்கி விளையாடிக் கொண்டிருந்தாள் அக்ஷ்யா. கீழ் பெட்டில் அமர்ந்திருந்தனர் மகேஷும், விஜியும்.
“மகேஷ் தம்பி.” என்று அழைத்து, அறையின் வாசலில் நின்று கொண்டார் சாவித்திரி அம்மா.
“என்ன சாவி ம்மா?” என்று எழுந்து வந்தான் மகேஷ்.  சாவித்திரி அம்மாவை கண்டு கொள்ளாமல் மேல் பெட்டில் விளையாடிக் கொண்டிருந்த அக்ஷ்யாவுடன் பேச ஆரம்பித்தாள் விஜி.
“நான் வீட்டுக்குக் கிளம்பறேன்..நீங்களே வீட்டைப் பூட்டிட்டு  சாவியைச் சிவா தம்பிகிட்டே கொடுத்திடுங்க.” என்றார்.
“என்ன திடீர்னு இப்படிச் சொல்றீங்க?” என்று கேட்டான் மகேஷ்.
“நீங்களும் திடீர்ன்னு தானே இங்கே வரணும்னு சொன்னீங்க..முன்னேயே சொல்லியிருந்தா சாயங்காலம் ரிசெப்ஷனுக்கு உடுத்த வேண்டிய புடவையை இங்கே கொண்டு வந்திருப்பேன்..இப்போ புடவை என் வீட்லே இருக்கு.. நான் இங்கே இருக்கேன்..சாயங்காலம் இங்கேயிருந்து வீட்டுக்குப் போய், அங்கேயிருந்து கௌரி வீட்டுக்குப் போகறத்துக்குள்ளே ரிசெப்ஷன் முடிஞ்சிடும்..அதான் நான் கிளம்பறேண்ணு சொல்றேன்.” என்று விளக்கினார்.
அப்போது தான் விஜிக்கும் அந்த விஷயம் உரைத்தது.  அவர்கள் யாரும்  சாயங்காலம் உடுத்த வேண்டிய உடையை உடன் கொண்டு வரவில்லை.  திருமண முடிந்தவுடன் புதுமணத் தம்பதியரை அவர்கள் வீட்டிற்குத் தான் அழைத்துப் போயிருக்க வேண்டும். திடீரென்று ஜமுனா திட்டத்தை மாற்ற,  புது வீட்டைப் பார்க்கும் ஆசையில் அவளும் அதை எதிர்க்கவில்லை. இங்கே வந்த பின் வேறு விஷயங்களைப் பற்றிய யோசனையில் சாயங்காலம் ரிசெப்ஷனுக்கு எப்படித் தயாராகுவது என்ற யோசனை எழவில்லை. 
“நாமளும் டிரெஸ் கொண்டு வரலையே..உடனே டாக்ஸி புக் செய்யுங்க..இப்போ கிளம்பி போனாக்கூட, எல்லாரும் ரெடியாகி நம்ம வீட்லேர்ந்து ரிசெப்ஷனுக்கு போக லேட்டாயிடும்..அத்தையை எழுப்பிவிடுங்க..திடீர்ன்னு எதையாவது செய்து பிரச்சனை செய்யறதே அவங்க வழக்கமாகிடுச்சு…போதும் நீ விளையாடினது” என்று மாமியாரைத் திட்டிக் கொண்டு அக்ஷ்யாவையும் கிளப்பினாள் விஜி.
வரவேற்பறைக்கு வந்த விஜி ஒரு நொடி கூட அங்கே நிற்காமல், மாமியார், மாமனாரை எழுப்பாமல், அவள் செருப்பை மாட்டிக் கொண்டு,  வாசல் கதவைத் திறந்து அக்ஷ்யாவுடன் மின் தூக்கியை நோக்கிச் சென்றாள்.
அப்போது தான் உறக்க நிலைக்கு போய்க் கொண்டிருந்த ஜமுனாவை,”அம்மா, அம்மா” என்று கூச்சலிட்டு எழுப்பினான் மகேஷ்.
“என்ன டா..இப்படிக் கத்தற?” என்று எரிந்து விழுந்தார் ஜமுனா.
“கிளம்புங்க..நான் டாக்ஸிக்குச் சொல்லிட்டேன்..நம்ம வீட்டுக்குப் போயிடலாம்.”
அந்தக் கத்தலில் மெதுவாக எழுந்து அமர்ந்த வெங்கடாசலம்,”ஏன் டா?” என்று விசாரிக்க.
“ரிசெப்ஷனுக்கு எப்படி ரெடியாகறது? நாம துணி எதுவும் கொண்டிட்டு வரலையே.” என்று விளக்கம் கொடுத்து கொண்டிருந்த மகேஷின் கைப்பேசி ஓசை எழுப்ப, அதற்கு மேல் நேரத்தை வீண்டிக்காமல்,”நீங்களே பூட்டிட்டு கிளம்புங்க சாவி ம்மா.. டாக்ஸி வந்திடுச்சு..நாங்க கீழே போறோம்.” என்று அவன் அப்பா, அம்மாவை அவர்கள் என்னயென்று உணருமுன் விரட்டியடித்து கீழே அழைத்துச் சென்றிருந்தான்.
“இவங்க மாற்றுத் துணி எங்கே? சாவிம்மாகிட்டே கொண்டிட்டு வரச் சொன்னேனே” என்று கேட்டாள் கௌரி.
கௌரியின் அறையிலிருந்த கட்டிலில், காலையில் உடுத்தியிருந்த பட்டுப் பாவாடையில் தூங்கிக் கொடிருந்தனர் குழந்தைகள் இருவரும். அவர்களருகே அமர்ந்திருந்தான் சிவா.
“ஒரு பெட்டியும், பையும் உன் கார் டிக்கிலே வைச்சிருக்கு..பைலே வீட்லே போட்டுக்கற உடுப்பும், பெட்டிலே ரிசெப்ஷன் உடுப்பும் இருக்கு.” என்றான்.
அவள் கார் இன்னும் கோவிலில் தான் இருந்தது.  கோவிலில் வேலை முடியவில்லை.  மாலினியின் குடும்பமும், நித்யாவும், குழந்தைகளும் இன்னும் வீடு வந்து சேரவில்லை. இவர்கள் நால்வரும் வீடு வந்த சேர்ந்த போது ஆர்த்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்தது மேகலா ஆன்ட்டியும், நித்யாவின் அம்மாவும் தான்.  வீட்டில் வேறு யாருமில்லாததால், கல்யாணத்திற்கு வரமுடியாமல், வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த நித்யாவின் அம்மாவின் உதவியோடு பால் பழம் கொடுத்து சடங்கை செய்து முடித்து விட்டு ஓய்வெடுக்க சென்று விட்டார் மேகலா.  
ஆரம்பத்திலிருந்து இரண்டாம் கல்யாணமென்று அசட்டையாக நடந்து கொண்ட ஜமுனா திடீரென்று பால், பழம் சடங்கு என்று சொன்னது ஆச்சர்யமாக இருந்தது மேகலாவிற்கு.  இதுபோல் செய்ய வேண்டுமென்று முதலே சொல்லியிருந்தால் நித்யா இல்லை மாலினியை அவருடன் வீட்டிற்கு அழைத்து வந்திருப்பார். திடீரென்று திருமதி சுப்ரமணியதிடமிருந்து இந்தத் தகவல் வந்தவுடன் என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை.  ஜமுனாவும் உடன் வந்தால் அவர் உதவியுடன் ஆர்த்தி எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தார்.  ஆனால் சிவா, கௌரி மட்டும் குழந்தைகளுடன் வந்திறங்கியவுடன், ஆர்த்தி எடுக்க நித்யாவின் அம்மாவை அழைத்துக் கொண்டார்.
“வீட்லே யாருமில்லை..எல்லாரும் இன்னும் கோவில்லே தான் இருக்காங்க..இவங்க நித்யாவோட அம்மா.” என்று சிவாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார் மேகலா.
அறிமுகத்தை தலையசைவில் ஆமோதித்த சிவாவின் மனத்தில் சற்றுமுன் அவன் வீட்டில் நடந்தவைகள் வந்து போயின.  அவன் வீட்டில் அவன் அம்மா, விஜி இரண்டு பெண்கள் இருந்தும் அவர்களை ஆர்த்தி எடுத்து வீட்டினுள் அழைக்கவில்லை.  அவசர அவசரமாக, அரை குறையாக, பகல் வேளையில் பால் காய்ச்சி, பழம் சாப்பிட வைத்த சடங்கை நினைத்து சங்கடமாக உணர்ந்தான்.  அங்கே எதுவும் சரியாக நடக்கவில்லை என்று அப்போது  கௌரி உணர்ந்திருக்கா விட்டாலும் இப்போது உணர்ந்திருப்பாள் என்று அவள் முகத்தைப் பார்த்து அவள் மனவோட்டத்தை அறிய முயன்றான் சிவா. 
அவள் தோளில் உறங்கிக் கொண்டிருந்த சூர்யாவைத் தட்டிக் கொடுத்தபடி ஆர்த்தி எடுக்கும் வரை அமைதியாக சிவாவின் அருகில் நின்று கொண்டிருந்தாள் கௌரி. தூக்க கலக்கத்தில் சிவாவின் கையைப் பிடித்து நின்றிருந்தாள் தீபா.
ஒரு டாக்ஸி பிடித்து அவர்கள் நால்வரும் அவினாஷின் வீடு வந்து சேர்ந்த போது தூக்கத்தில் இருந்தனர் குழந்தைகள் இருவரும்.  அந்தப் பயணம் முழுவதும் கணவன், மனைவி இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.  சிவாவுடன் பேசவே தோணவில்லை கௌரிக்கு. கௌரியுடன் பேச சங்கடப்பட்டுக் கொண்டு மௌனமாக இருந்தான் சிவா.  வீட்டு வாசலில் டாக்ஸி நின்றவுடன் தீபா எழுந்து கொள்ள, தூங்கிக் கொண்டிருந்த சூர்யாவைத் தூக்கிக் கொண்டான் சிவா.  ஆனால்,”அம்மா” என்று கௌரியிடம் தாவினாள் சூர்யா.  கௌரியும் அவளைத் தூக்கிக் கொண்டாள். 
டாக்ஸி சத்தத்தில் கேட்டிற்கு வந்தனர் அவினாஷும் ராம கிருஷ்ணனும்.  வீட்டிற்குள் நுழையும் முன், குடும்பமாக வாசலில் நிற்க வைத்து ஆர்த்தி எடுத்தனர் மேகலாவும், நித்யாவின் தாயாரும்.  அப்போது விழித்துக் கொண்ட சூர்யா,”தூங்கணும்.” என்று மறுபடியும் சிணுங்கினாள்.  உடனே,
“கௌரி, உன் அறைலே தூங்கட்டும்.” என்றார் மேகலா.  உடனே தீபாவும்,”எனக்கும் தூக்கம் வருது.” என்றாள்.
“நீங்க எல்லாரும் கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துக்கோங்க..சாயங்காலம் ஏழு மணிக்கு ரெடியான போதும்.” என்று நால்வரையும் கௌரியின் அறைக்கு அனுப்பி வைத்தார் மேகலா.
புது வீட்டு அறையின் ஜன்னல்களும், அறையினுள் சாமான்களும் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததால் காற்று வந்து போக வழி இருக்கவில்லை.  காற்றில்லாத சமையலறையில், பிற்பகல் வேளையில்  பால் காய்ச்சி, விளக்கேற்றி முடிப்பதற்குள் வேர்வையில் குளித்திருந்தாள் கௌரி.  அவள் பருத்தி உடுத்தி இருந்தததால் அத்தனை அசௌகர்யமாக உணரவில்லை. குழந்தைகளும் சிவாவும் பட்டு உடுத்தியிருந்ததால் வெப்பத்தில் வெந்து போயிருந்தனர்.
படுக்கையில் அமர்ந்து தீபா, சூர்யாவின் தூக்கம் கலையாமல் பாவாடை சட்டையை அவிழ்த்தாள் கௌரி. மாற்று உடை இல்லாததால் ஏஸி போடாமல் மின் விசிறியின் வேகத்தை அதிகரித்தாள். அடுத்து அந்தப் பட்டுத் துணிகளை எடுத்துக் கொண்டு போய் அறையின் மூலையில் இருந்த அழுக்குக் கூடையில் போட்ட போது மேஜையில் இருந்த அவள் கைப்பேசி ஓசை எழுப்பியது. அழைத்தது சாவித்திரி அம்மா.
குழந்தைகள் விழிக்கும் முன் அதை ஏற்று,”சொல்லுங்க சாவி ம்மா.” என்றாள் கௌரி.
அந்தப் புறம் சாவித்திரி அம்மா சொன்னதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள்,”சரி..சாயங்காலம் பார்க்கலாம்.” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தாள். அவள் மனத்தில் இத்தனை வருடங்களாக இல்லாத ஓர் உணர்வு தலை தூக்கியிருந்தது. அவள் வீட்டிலேயே அவளை வெளி ஆளாக, வேண்டாதவளாக உணர வைத்திருந்தனர் சிவாவின் குடும்பத்தினர்.  இன்று தான் மகேஷின் மனைவி விஜியை முதன் முதலாகச் சந்தித்திருந்தாள்.  அவளைக் கௌரிக்கு யாரும் அறிமுகப்படுத்தி வைக்கவில்லை அவளும் சுய அறிமுகம் செய்து கொள்ளவில்லை.  
தற்போது விஜி வீட்டில் தான் சிவாவின் குடும்பம் தங்கியிருப்பதால் கல்யாண முடிந்து அங்கே தானே போக வேண்டும் அப்போது அவளுடன் பேசிக் கொள்ளலாமென்று எண்ணியிருந்தாள் கௌரி.  ஆனால் அந்த வீட்டிற்குச் செல்லாமல் அவள் வீட்டிற்கே கட்டாயப்படுத்தி ஜமுனா அழைத்து சென்றது, அதற்குக் குடும்பத்தினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதது அவளுள் கசப்புணரவை ஏற்படுத்தியிருந்தது.  கல்யாணத்திற்கு வந்திருந்த அவன் அக்கா சாந்தி, கல்யாணம் முடிந்த பின் சிவாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு சென்றது, அவளும் தன்னை ஏற்றுக் கொள்ள்வில்லையோ என்ற எண்ணத்தைக் கௌரியினுள் ஏற்படுத்தியிருந்தது.  
புது வீட்டிற்குத் தான் போகப் போகிறார்கள் என்ற தகவலைச் சாவித்திரி அம்மாவிற்குத் தெரியப் படுத்தச் சொல்லி அவளிடம் நேரடியாக ஓரிரு வார்த்தைகள் பேசினார் ஜமுனா.  அதன் பின் ஜமுனா, விஜி இருவருமே அவளுடன் பேசவில்லை. புது வீட்டில் இருந்த அரைமணி நேரம், சாவித்திரி அம்மாவும் குழந்தைகளும் தான் அவளுக்குத் துணையாக, ஆதரவாக இருந்தனர். 
அந்த வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து அவள் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தனர் தீபாவும் சூர்யாவும்.  அவளுக்குத் தேவையானதை எடுத்துக் கொடுத்து சொந்த குடும்பம் போல் உறுதுணையாக இருந்தார் சாவித்திரி அம்மா. சமையலறையில்  சில சாமான்களை ஒதுங்க வைத்து அவர்களுக்குப் புழங்க இடம் ஏற்படுத்திக் கொடுத்தான் சிவா.  மகேஷும் வெங்கடாசலும் வெளியே கொளுத்திக் கொண்டிருந்த வெயிலை ஆராய்ச்சி செய்தபடி வரவேற்பறை சோபாவில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.  விஜியும் ஜமுனாவும் வீட்டுக்குள்ளேயே ஒவ்வொரு அறையாக திறந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர்.  
எப்படி இந்தக் குடும்பத்தை, இது போன்ற மாமியாரைச் சமாளிக்கப் போகிறாள்? அவன் அம்மா சொல்வதற்குச் சரி சரியென்று சொல்லும் சிவாவை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? என்று ஜமுனாவை நினைத்தும் அவர் போக்கைக் கண்டிக்காத சிவாவின் போக்கை நினைத்துக் கவலையானாள் கௌரி.
கௌரியின் படுக்கையில், அவன் மகள்கள் அருகில் அமர்ந்திருந்த சிவாவின் மனத்திலும் எப்படி அவன் அம்மாவைச் சமாளிக்கப் போகிறான் என்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டிருந்தது. இன்றைக்கு அவன் அம்மாவின் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், எந்த ஏற்பாடும் செய்யாமல், கௌரியை அவர்கள் புது வீட்டிற்கு அழைத்துச் சென்றது தப்பு என்று இப்போது உணர்ந்திருந்தான். அவர்கள் குடும்பமாக வாழப் போகிற வீட்டில் அவளுக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் அவனுக்கும் பிடிக்கவில்லை.  நடந்து முடிந்ததை அவனால் மாற்ற முடியாதென்று உணர்ந்தவன், இனி நடக்க போவதைச் சரியாக நடத்த வேண்டுமென்று உறுதி எடுத்துக் கொண்டான்.

Advertisement