Advertisement

அத்தியாயம் – 26_2
முகூர்த்தச் சாப்பாடு முடிந்தவுடன் ஜமுனாவும் அவர் திட்டத்தைச் செயல்படுத்தினார்.  அதன் விளைவாக ஜமுனா, சாவித்திரி அம்மா இருவருக்கும் இடையே இருந்த வெறுப்பும் பகையும் அதிகமானது. கடைசி பந்தியில் மனோகரும் சாவித்திரி அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டிலிருந்து அவர்கள் கொண்டு வந்திருந்த பொருள்களைச் சேகரித்து, அந்த இடத்தை முடிந்த அளவு சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர் மாலினியும் நித்யாவும். அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள் கௌரி. அவன் பெற்றோர்களை வீட்டிற்கு அழைத்துப் போயிருந்தான் அவினாஷ்.  குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தான் விட்டல்.  மண்டபத்தின் படிகளில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் திருமதி சுப்ரமணி.
மேகலாவோடு பேச விருப்பமில்லாததால் அவர் புறப்படும் வரை காத்திருந்த ஜமுனா,“கல்யாண ஜோடியை இரண்டு வீட்டுக்கும் அழைச்சுக்கிட்டுப் போய் பால், பழம் கொடுக்கணும்.” என்று திருமதி சுப்ரமணியிடம் தெரிவித்தார்.
எதற்காக நம்மிடம் சொல்கிறார்? என்று யோசித்தவர், மேகலா வீட்டிற்குப் போய்விட்டதால் தன்னிடம் தெரிவிக்கறார் போல் என்று நினைத்தார். மேகலா கிளம்பும் வரை வீம்பாகக் காத்திருக்கக்கூடும் என்று தோன்றவேயில்லை. அதனால்,
”மேகலா இப்போ தான் அவ வீட்டுக்குப் கிளம்பிப் போனா…அவளோடவே அவங்களை அனுப்பியிருக்கலாம்..நீங்க முதல்லே உங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போங்க….மேகலாக்கு நான் ஃபோன் செய்து சொல்லிடறேன்..அங்கே மெதுவா போனாக்கூட போதும்..எப்படியும் சாயந்திரம் ரிசெப்ஷன் அங்கே தான்..அதுக்கு அப்புறம் சிவாவும் கௌரியும் கொஞ்ச நாள் அவங்ககூட தானே இருக்கப் போறாங்க.” என்றார் திருமதி சுப்ரமணி.
அந்தத் தகவல் ஜமுனாவிற்கு புதிய தகவல். அதைப் பிறகு பார்த்துக் கொள்ளாலம் என்று முடிவு செய்து,”சிவா” என்று குரல் கொடுத்தார் ஜமுனா.
சுப்ரமணி ஸருடன் பேசிக் கொண்டிருந்தவன் அதைக் கேட்டு அவரருகே வந்தவுடன்,”உன்னோட புது வீட்டிற்குப் போக வண்டி ஏற்பாடு செய்திடு..அங்கே தான் உங்களுக்குப் பாலும், பழமும் கொடுக்கணும்….அப்படியே அங்கேயிருந்து நீ அவங்க வீட்டுக்குப் போயிடு..நாங்க எல்லாரும் சாயந்திரம் வரை உன் வீட்லே இருந்திட்டு அங்கேயிருந்து ரிசெப்ஷனுக்கு வந்திடறோம்.” என்றார்.
அதைக் கேட்டு அதிர்ந்தவன்,”அம்மா, அந்த வீட்லே இன்னும் பால் காய்ச்சலை..கல்யாண முடிஞ்ச பிறகு நல்ல நாள் பார்த்துச் செய்யணும்னு சுப்ரமணி ஸர் சொன்னார்..இப்போ அங்கே போய் எப்படி பால், பழமெல்லாம்..வீடு எந்த நிலைலே இருக்குண்ணு எனக்குத் தெரியலை..எந்தச் சாமான் எங்கே இருக்குண்ணு சாவித்திரி அம்மாக்குத் தான் தெரியும்.” என்றான்.
“அதான் இப்போ கல்யாணம் முடிஞ்சிடுச்சே..இன்னைக்கு நல்ல நாள் தான்..ஒரு லிட்டர்ப் பால் பாக்கெட்டோட சாவித்திரியை முதல்லே அங்கே அனுப்பு..நாம அங்கே போய்ச் சேர்றத்துக்குள்ளே வாசல் தெளிச்சு ஒரு கோலம் போடச் சொல்லு, அப்படியே  சாமிப் படத்தையும், சின்ன விளக்கையும் ரெடி செய்து வைக்கட்டும்..விளக்கேத்திட்டு, பால் பழம் சாப்டிட்டு நீ கிளம்பிடு..சாவித்திரி எங்களோட இருக்கட்டும்.” என்றார் ஜமுனா.
ஜமுனாவின் யோசனையில் எரிச்சலடைந்திருந்த சிவாவிடம்,”உன் புதுப் பொண்டாட்டியைக் கூப்பிடு.’ என்று அவர் கௌரியை அழைத்த விதம் அவனிடம் சென்றடையவில்லை, அதனால்,”கௌரி.” என்று அழைத்து அவன் அம்மாவின் கட்டளைக்கு அடிபணிந்தான் சிவா.
சிவா கூப்பிட்டவுடன் மாலினிக்கும் நித்யாவிற்கும் உதவி செய்து கொண்டிருந்த கௌரி அவனருகே வந்தாள். ”புது வீட்டுக்குப் போய் பால் காய்ச்சனும்..அப்படியே உங்க இரண்டு பேருக்கும் பால், பழம் கொடுக்கற சடங்கை அங்கேயே முடிச்சிடலாம்…சாவித்திரி சாப்பிட்டுக்கிட்டு இருக்கா..அவக்கிட்டே விவரத்தை சொல்லி அவளை இங்கே அழைச்சிட்டு வா.” என்றார் ஜமுனா.  எந்த இடத்திலும் கௌரிக்கோ, சிவாவிற்கோ திட்டத்தை மாற்றும் அதிகாரம், அனுமதி கொடுக்கவே இல்லை.
“சரி அத்தை.” என்று அவள் மாமியாருக்கு உரிய மரியாதையை அளித்தாள் கௌரி.  ஆனால் ஜமுனாவின் திட்டத்தைக் கௌரியின் வாயிலாகக் கேட்ட சாவித்திரி அம்மா வாயிலிருந்து பல விதமான வண்ண வண்ண வார்த்தைகள் வந்து விழுந்தன.  கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன்பு வரை, அவள், அலுவலகம் சென்று வந்ததால், மாலினியும் சாவித்திரி அம்மாவும் சேர்ந்து தான் புது வீட்டை தயார் செய்தனர். கடந்த வாரத்திலிருந்து இப்போது வரை சாவித்திரியம்மாவும் கடுமையாக உழைத்திருக்கிறார் என்று உணர்ந்த கௌரி,” நீங்க வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்திட்டு நேரா ரிசெப்ஷனுக்கு வந்திடுங்க சாவிம்மா..நாங்களே பால் வாங்கிட்டுப் போயிடறோம்..நானே கோலம் போட்டிடறேன்..விளக்கு, சாமி படம் எங்கே வைச்சிருக்கீங்கண்ணு மட்டும் சொல்லுங்க.” என்று அவள் மாமியாரின் திட்டத்தை அவளால் முடிந்த அளவு மாற்ற முயன்றாள்.
இந்தம்மா அப்படியே விளக்கேத்தி வீட்டை விளங்க வைச்சிருக்கற மாதிரி பேசுது என்று மனதிற்குள் ஜமுனாவை அர்ச்சனை செய்த சாவித்திரி அம்மா, அவர் கோபத்தை அடக்கிக் கொண்டு,”உன்னாலே கண்டு பிடிக்க முடியாது கௌரி..அந்த அட்டைப் பெட்டியை மேலே தூக்கி வைச்சிட்டேன்..முதல்லே சாமி அலமாரியைச் செட் செய்திருக்கணும்..நான் செய்ய வேணாம்னு நினைச்சேன்..உன் அக்கா நீயே செய்யணும்னு நினைச்சிது..அதான் அந்த வேலையைத் தவிர மற்ற எல்லாத்தையும் செய்தோம்..நான் மனோகரையும் என்கூட அழைச்சிட்டுப் போகறேன்..அவன் பால், பழம் வாங்கி வந்திடுவான்..நான் வீட்டைச் சுத்தப்படுத்தி வைக்கறேன்..நீயும் சிவாவும் குழந்தைங்களையும் அழைச்சிட்டு வந்திடுங்க.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார் சாவித்திரி அம்மா.
சிவாவின் புது வீட்டைப் பார்த்துப் பொறாமையில் பொசுங்கி போனர் அவன் குடும்பத்தினர்.  மூன்று படுக்கையறைகள், மூன்று பால்கனி, மூன்று பாத் ரூம் என்று நாலு பேரைக் கொண்ட குடும்பத்திற்கு அந்த வீடு பெரியதாகத் இருந்தது.  வரவேற்பறை, சமையல் அறையில் மட்டும் சாமான்கள் பிரித்து வைக்கப்பட்டு இருந்தன.  அளவில் சிறியதாக இருந்த படுக்கையறையைப் புத்தக அலமாரி, மேஜை, நாற்காலி, நான்கு அடி உயரத்தில் பங்க் பெட் போட்டு குழந்தைகள் அறையாக மாற்றியிருந்தாள் மாலினி.  இரண்டாவது படுக்கையறையில் சிவாவின் கட்டில், ஸ்ட்டீல் அலமாரி இருந்தது. அளவில் மிகப் பெரியதாக இருந்த படுக்கையறையில் கௌரியின் கட்டில், டிரெஸ்ஸிங் டேபிள் போடப்பட்டிருந்தது.  வரவேற்பறையில் கௌரியின் சோபா, டைனிங் ஹாலில் அவள் சாப்பாடு மேஜை.  அதனருகே சிவாவின் ஃபிரிஜ். வரவேற்பறை ஒட்டிய பால்கனியில் கௌரியின் ஊஞ்சல்.  சமையலறையில் இருவரின் சாமான்களும் சேர்ந்து கலப்படமாக, கலவரமாக, போர்க்களமாக காட்சியளித்தது.  
அங்கே ஒரு அலமாரியில்  வெங்கடாசலபதி படம், அதன் எதிரே சிறிய ஜோதி. இருவரின் வீட்டிலிருந்து எடுத்து வரப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருக்க, கௌரியின் நாலு பர்னர் ஸ்டவ்வில், மதியம் மூன்று மணிக்கு மேல், தே நீர் அருந்தும் வேளையில், ஒரு லிட்டர்ப் பாலைக் காய்ச்சி தெய்வத்திற்கு முன் வைத்து, விளக்கேற்றி குடும்பமாக வழிப்பட்டனர் நால்வரும். அதைச் சமையலறையின் வாயிலில் நின்றபடி வேடிக்கை பார்த்தது சிவாவின் குடும்பம். சின்ன கின்னத்தில் பாலை ஊற்றி, வாழைப்பழத்தை சேர்த்து சிவாவும் கௌரியும் அவர்களாகவே சாப்பிட்ட பின், குழந்தைகள் இருவருக்கும் கௌரியே  ஒரு வாய் ஊட்டி விட்டாள். இந்த நிகழ்ச்சியைப் புது வீட்டில் தான் நடத்த வேண்டுமென்று அடம் பிடித்த ஜமுனாவின் முக்கியப் பங்களிப்பு, மீதியிருந்த பாலில் மாலை ஐந்து மணிக்கு டீ போடும் படி சாவித்திரி அம்மாவிற்குக் கட்டளையிட்டது தான்.
மேகலா வீட்டிற்குச் சிவாவின் குடும்பம் கிளம்பிப் போன பின், படுக்கையறை தயாராக இல்லாததனால் வரவேற்பறை தரையில் படுக்கை விரிப்பை விரித்துப் படுத்துக் கொண்டனர் ஜமுனாவும் வெங்கடாசலமும்.  உறங்காமல், ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் சிவாவின் வீட்டை அங்குலம், அங்குலமாக அளந்து கொண்டிருந்தனர் மகேஷும் விஜியும்.  அவர்கள் ஆராய்ச்சியின் முடிவில் அதிலிருந்த சாமான்கள் தான் சிவாவிற்கும் கௌரிக்கும் சொந்தமானவை அந்த வீடு அவர்களுக்குச் சொந்தமில்லை என்ற முக்கியமான விஷயம் அவர்கள் மனத்தில் பதியவேயில்லை.

Advertisement