Advertisement

அத்தியாயம் – 26_1
மனிதர்கள், யார் இவர்கள்? பூமியை இருப்பிடமாக கொண்டு வாழும் இவர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவியல், மானிடவியல் ஆராய்ச்சிகள் சான்றுகளுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபக்கின்றன. ஆனால் நாங்கள் ஒரே இனத்தவரல்ல என்று  தாய் நாடு, தாய் மொழி, உணவு, உடை, நம்பிக்கை என்று சகலத்தையும் வைத்து தங்களை வேற்றுமைப் படுத்திக் கொள்வதில் இவர்கள் வல்லவர்கள். எங்கே, எப்போது ஆரம்பமாகிறது இவர்களுக்குள் இந்த வேற்றுமை?
தடையில்லா இனப்பெருக்கத்திற்காக ஆண், பெண் என்று கரு உருவாகும் போதே படைப்பு ஏற்படுத்தும் வேறுபாடு தான் இதன் அடிப்படையா? உயிருடன் தோன்றுவதால் தான் சிலரது உயிர் அவர்கள் உடலை விட்டுப் பிரியும் வரை வேற்றுமைகளும் அவர்களை விட்டு விலகுவதில்லையோ? 
குடும்பத்தில்,  மகள், மகன் என்று ஆரம்பித்து, மூத்தவள், இளையவன் என்று உடன் பிறப்புக்களைப் வரிசைப்படுத்தி, மாமா, தாய் மாமா என்று உறவுளை முக்கியப்படுத்தி, அழகு, அறிவு, அந்தஸ்து என்று சக மனிதர்களை வித்தியாசப்படுத்தி, எல்லா நிலைகளிலும், அறிந்தும் அறியாமலும் வேற்றுமைகளோடு ஒற்றுமையாக வாழும் விசித்திரப் பிறவி, மனிதப் பிறவி. 
அந்த மனிதக் கூட்டத்தில், வேற்றுமையை விதைக்காமல், வித்தியாசங்களை வேரூன்ற விடாமல், தங்கள் தனித் தன்மை மூலம் மனிதத்தன்மையை வளர்த்து வரும்  மேகலா, ராம கிருஷ்ணனை எண்ணி வியப்படைந்திருந்தான் சிவா.  
இரண்டு நாள்களுக்கு முன்னர் பெற்றோர் ஸ்தானத்தில் கௌரியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். உடன் பிறந்தோர் ஸ்தானத்தில் உறுதுணையாக மாலினியும் அவினாஷும்,  உறவுகளாக விட்டலும் நித்யாவும், இரண்டு குடும்பத்தின் பெரியவர்களாக சுப்ரமணி, திருமதி சுப்ரமணியின் ஆசிர்வாதத்துடன், ஆண்டவனின் அனுக்கிரஹத்தில் கல்யாணம் இனிதே நடந்தேறியது. ஆனால் அதன் பின் நடந்தவை தான் கசந்தது. அதற்குக் காரணம் என்ன என்று யோசனையானவனின் மனது கல்யாணத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்களில் நிலைபெற்றது. 
கல்யாணத்திற்கு மூன்று நாள்கள் இருக்கையில் அவன் வீட்டைக் காலி செய்து கொண்டு மகேஷின் வீட்டிற்குச் சென்றவனைத் துளைத்து எடுத்து விட்டார் ஜமுனா.  புது வீடு, புதுக் கடை இரண்டிற்கும் ஏன் அவர்கள் யாரையும் அழைத்துச் செல்லவில்லை என்று தீவிர சண்டையில் இறங்கினார்.  புதுக் கடையைப் பற்றிய சில விவரங்கள் அவன் மாமா மூலம் தெரிந்திருந்தாலும் அதைக் கௌரியின் பெயரில் வாங்கப் போகிறான் என்ற முக்கிய விவரம் அவரும் அறிந்திருக்கவில்லை. அதைக் கல்யாணத்திற்கு முன் வெளிப்படுத்த சிவாவும் விரும்பவில்லை. அதனால் புதுக் கடைக்கு அவினாஷைத் தவிர யாரையும் அழைத்துச் செல்லவில்லை.
புது வீட்டிற்கு அவன் பெற்றோர்களை அழைத்துச் செல்ல வேண்டுமென்று தான் எண்ணியிருந்தான். ஆனால் அந்த எண்ணத்தைச் செயல்படுத்த முடியவில்லை. புது வீட்டைப் பேசி முடித்தவுடன் புதுப் பள்ளியின் வேலைகள் அவனை இழுத்துக் கொண்டன.  அந்த வேலை முடிந்தவுடன், கல்யாணத்திற்கு முன், கடையை விற்று அனைவரின் பங்கைப் பிரித்துக் கொடுக்க வேண்டுமென்று கடையை விற்பதில் முனைப்பானான். அவன் குடும்பத்தினர் விரும்பியபடி அனைவர்க்கும் பங்கு கொடுத்தப் பின்னும் சந்தோஷம் அடையாமல் எதற்காக ஜமுனா கோபம் கொள்கிறார்?  என்று சிவாவிற்குப் புரியவில்லை. அந்தக் காரணத்தைக் கேட்டு சண்டையை வளர்க்க விரும்பாமல் அவன் அம்மாவின் திட்டுக்களை அமைதியாக ஏற்றுக் கொண்டான் சிவா.
அவன் குடும்பத்தினரைத் தொந்தரவு செய்யாமல், சாவித்திரி அம்மா, மனோகருடன் சேர்ந்து ஒரே டிரிப்பில் அவன் சாமான்களைப் புது வீட்டிற்கு மாற்றியிருந்தான்.  அதன் பின் அந்த வீட்டிற்கு அவன் போகவேயில்லை. அவனால் அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.  பழைய வீட்டைக் காலி செய்த பின் அடுத்த வேலையாக புதுக் கடையின் அருகிலே ஒரு கிடங்கை வாடகைக்கு எடுக்க அலைந்து திரிந்தான். அதை உறுதி செய்த பின் மனோகரும் அவனும் சேர்ந்து அவன் மொத்த கடையை அந்தக் கிடங்கில் போட ஒரு பகல், இரண்டு இரவுகள் தேவைப்பட்டது.  சுப்ரமணி ஸரிடம் கேட்டு, ஒரு நல்ல நாளில், புதுக் கடையைப் பதிவு செய்த பின், குடும்பத்தினரை அழைத்துப் பூஜை போட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தான். அதன் பிறகு தான் கடையை அவன் தேவைக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கும் வேலையைத் தொடங்க எண்ணியிருந்தான்.  எல்லாவற்றையும் ஒரே ஆளாகத் திட்டமிட்டு, செயல்படுத்திக் கொண்டிருந்ததால் அவன் அம்மாவை அழைத்துப் போய் புது வீட்டைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் எங்கே, எப்படிக் காணாமல் போனது என்று அவனுக்குத் தெரியவில்லை.   
இந்த சூழ் நிலையில், சிவாவைக் கடைக்கு அழைத்துச் சென்று கல்யாணத்திற்காகப் பட்டு வேஷ்டி, சட்டையும், ரிசெப்ஷனில் அணிவதற்கு ஃபார்மல் பேண்ட் ஷர்ட்டும் வாங்கிக் கொடுத்தார் சுப்ரமணி.  அது சுப்ரமணி, திருமதி சுப்ரமணியின் பரிசு என்று கடைக்குப் போன பின் தான் அவனுக்குத் தெரிய வந்தது. அதையும் அவன் பொறுப்பில் விட்டிருந்தால் எதையாவது அணிந்து கொண்டு கல்யாணத்திற்கு வந்திருப்பானோ என்ற சந்தேகம் அவர்கள் இருவருக்குமே இருந்ததால் பரிசைப் பற்றிய விவாதம் எழவில்லை.  
சிவாவின் மனத்தில் அது போன்ற எண்ணம் எழுந்ததற்கு வலுவான காரணம் இருந்தது. அவன் வீட்டை காலி செய்த போது காயத்ரியின் நினைவுகள் அவனைக் கட்டிப் போட்டிருந்தன.  அதன் விளைவாக கல்யாண வேலைகளில் முழுதாகப் பொருந்த முடியாமல் இரண்டும் கெட்ட மன நிலையில் இருந்தான் சிவா. அதனோடு பத்திரம், பதிவு, பணம், முன் பணம், ரொக்கம் என்று இடைவிடாது சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு நொடி, ஓர் இடத்தில் அமர்ந்து அவனுடையை முதல் கல்யாணத்தையும், காயத்ரியையும் பற்றி சிந்திக்க இடைவெளி கிடைக்கவில்லை.  அந்த இடைவெளி அவனுக்குக் கிடைத்த போது அவனருகே மணப்பெண்ணாக கௌரி அமர்ந்திருந்தாள்.  அவனுக்கு மட்டுமே உரிய,  அவன் மட்டுமே உணரக் கூடிய உணர்வுகளுடன் அவன் ஒப்பந்தம் செய்து கொள்ளுமுன் கௌரியுடன் புது ஒப்பந்தத்தில் பிணைந்திருந்தான். கௌரியின் கழுத்தில் தாலி கட்டிய போது சிவா சந்தோஷமாக உணர்ந்தானா என்று தெரியாது ஆனால் இரண்டு வருடங்களாக ஓயாமல் அலைந்து திரிந்தவனுக்கு இளைப்பாற ஓர் இடம் கிடைத்ததில் நிம்மதியாக உணர்ந்தான். அந்த நிம்மதி அவன் முகத்தில், அவன் தாடி, மீசையைத் தாண்டி வெளிப்பட்டது.
அதைப் பார்த்து இரண்டாவது கல்யாணம் தானே என்று ஜமுனாவைப் போல் எண்ணிக் கொண்டு கல்யாணத்திற்கு வந்திருந்தவர்கள் ஆச்சர்யமடைந்தனர்.  கௌரியிடம் குழந்தைங்கள் இருவரும் காட்டிய நெருக்கம், சிவா, கௌரி இருவருக்கும் இடையே இருந்த இணக்கம், கௌரியின் குடும்பத்தாரின் இனிமையான உபசாரம் என்று எல்லாம் சேர்ந்து அந்தக் கல்யாணத்தை இனிமையான நிகழ்வாக மாற்றி, சிவாவை அதிர்ஷ்டசாலியாகக் காட்டியது. அதைச் சிவா உணர்ந்தானோ இல்லையோ வருகை தந்திருந்த விருந்தினர்களும் அவன் குடும்பமும் உணர்ந்தது. 
சிவாவின் புது வீடு மாலினியின் ஏற்பாடு என்பதால் அவர் மாப்பிள்ளை மூலம் விவரம் அறிந்து கொள்ள விரும்பிய ஜமுனா தோல்வியைத் தழுவியிருந்தார். அவன் அப்பாவிடமும் தம்பியிடமும் சிவா எதையும் பகிர்ந்து கொள்ளாததால் புது வீடு பற்றி எந்த விவரமும் அவன் குடும்பத்தினருக்குத்  தெரியவில்லை.  புது வீட்டைப் பார்க்க விரும்பிய ஜமுனா அதற்கான வாய்ப்பை கல்யாணதன்றே ஏற்படுத்திக் கொண்டார். 
கல்யாணம் முடிந்தவுடன் சிவாவையும் கௌரியையும் மகேஷின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களின் புது வீட்டிற்கே அழைத்துச் செல்ல திட்டமிட்டார் ஜமுனா.  அந்தத் திட்டத்தை அவர் மூத்த மகனிற்கு முன்பே தெரிவித்திருந்தால் எல்லா ஏற்பாடும் அவன் செய்திருப்பான். ஆனால் சிவாவின் அம்மாவாக அதைச் செயல்படுத்த விரும்பவில்லை. மேகலாவிற்குப் பாடம் புகட்டுவதாக நினைத்து, கௌரியின் மாமியாராக அதைச் செயல்படுத்தினார்.
கல்யாணத்திற்கு முன்பு, ஒருமுறை கூட ஜமுனாவிடம் பேசவில்லை மேகலா. கல்யாணத்தன்றும் பேசவில்லை.  மரியாதையுடன் சிவாவின் குடும்பத்தினரை வரவேற்று அவரின் உடல் நிலை காரணமாக ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டார் மேகலா.  அதை அவமரியாதையாக எடுத்துக் கொண்டார் ஜமுனா.  தாலி டிசைன் விஷயத்தைச் சிவாவே சுமூகமாக முடித்து விட்டான் என்று அந்தத் தாலி ஆசிர்வாதத்திற்கு அவரிடம் வரும் வரை ஜமுனாவிற்குத் தெரியவில்லை. அவரிடம் யாரும் எதுவும் கேட்காததனால் மனதிற்குப் பிடித்த டிசைனில் தாலி வாங்கிவிட்டார்களோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.  இப்படித் தப்பு தப்பாக யோசித்தவருக்கு ஒருமுறை கூட காயத்ரி அணிந்திருந்த தாலியைப் பற்றி சிந்திக்கவில்லை.  
மாங்கல்ய தாரணம் ஆவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பெரியவர்களின் ஆசிர்வாதத்திற்காக எடுத்த வந்த தாலியைப் பார்த்து அதிர்ச்சியானார் ஜமுனா. ஒன்று தாலியின் டிசைன், இரண்டாவது தாலி கயிறுடன் இருந்த தங்கச் சங்கிலி. அவர் அணிந்திருந்த சங்கிலியை விட கனமாக, காத்திரமாக இருந்தது. கல்யாணச் சடங்குகளின் போது கௌரியை ஊன்றிக் கவனித்தவருக்கு, கழுத்தில் சுமாரான கனத்தில் தங்கச் சங்கிலி, மெலிதான தங்க நெக்லஸ், கைகளில் இரண்டு ஜோடி தங்க வளையல்கள், காதில் தோடு, ஜிமிக்கி, இடது கை மோதிர விரலில் ஒற்றை வெள்ளை கல் வைத்த, மிக மெலிதான தங்க மோதிரம் என்று அவள் அணிந்திருந்த நகைகள் பத்து, பன்னிரெண்டு பவுன் இருக்கும் என்று தோன்றியது.  இப்போது தாலி செயினைப் பார்த்தவுடன் ஒரு கணம் ஸ்தம்பித்தவர் அடுத்த கணம் மொத்தம் இருபது பவுன் நகைகள் தான் இவளிடம் என்று கௌரி மீது இளக்காரம் ஏற்பட்டது. 
ஜமுனாவைப் போலவே அவர் மகனும் அவன் மனைவியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். அவன் கொடுத்த பணத்தில் என்ன வாங்கிக் கொண்டிருக்கலாமென்று கண்டு பிடிக்க முயன்றான். கௌரியின் தாலி செயின், ரிசெப்ஷன் பட்டுப் புடவை இரண்டும் ராம கிருஷ்ணன் தம்பதியர் பெற்றவர்கள் ஸ்தானத்தில் அவளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவலை அவனுக்கு உடை வாங்கும் போது சுப்ரமணி ஸர் அவனுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அதனால் கௌரியைத் தலை முதல் கால் வரை பலமுறை அலசியவனின் கண்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் பெறுமானம் உள்ள பொருள் தென்படவில்லை.  ஒருவேளை எதுவும் வாங்கிக் கொள்ளவில்லையோ என்ற கேள்வி எழ, அதை வெளிப்படுத்த தயக்கமாக இருந்தது.  சில நாள்கள் கழித்து கேட்டுக் கொள்ளலாம் என்று அதைத் தள்ளிப் போட்டான்.
கோவில் கல்யாணத்திற்கு சிவாவின் ஸைடிலிருந்து அனைவரும் ஆஜராகியிருந்தனர்.  அவன் பழைய கடை அருகே அந்தக் கோவில் இருந்ததால், அவன் கடையை விற்று விட்டு புது இடத்திற்குப் போகப் போவதால், விருந்தினர்களால் கோவில் நிரம்பி வழிந்தது.  அத்தனை பேரையும் வரவேற்று, உபசரித்து, விருந்து உண்ண வைத்து தாம்பூலப் பையுடன் வழியனுப்பியது சுப்ரமணி தம்பதியர், சாவித்திரி அம்மா, மனோகர் தான்.  மகேஷும், வெங்கடாசலமும் அவர்கள் உறவினர்களை மட்டும் கவனித்துக் கொண்டனர்.  
கல்யாணத்திற்கு முன்னும், கல்யாணம் முடிந்த பின்னும் வினித், சுமித், சிதார்த்துடன் பிரகாரத்தில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் தீபாவும் சூர்யாவும்.  அவள் அம்மாவின் அருகில் அமர்ந்து அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷ்யா. அவர்கள் இருந்த இடத்தை விட்டு அகலாமல் ஒரே இடத்தில் அமர்ந்து  இருந்தனர் ஜமுனாவும் விஜியும்.  சாந்தியும் ராஜேந்திரனும் அவர்கள் குழந்தைகளுடன் தனியாக அமர்ந்திருந்தனர்.  அவள் அம்மாவுடன் பேச முயற்சி செய்து அது தோல்வி அடைந்ததால் அமைதியாக இருந்தாள் சாந்தி. அதனால் முகூர்த்தச் சாப்பாடு முடிந்தவுடன் ரிசெப்ஷனில் சந்திக்கலாம் என்று சிவாவிடம் சொல்லிக் கொண்டு அவள் வீட்டிற்குப்  புறப்பட்டுச் சென்று விட்டாள்.

Advertisement