Advertisement

அத்தியாயம் – 25
கடல் அலைகள் கதிரவனோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த விடியற் காலை வேளையில், குழந்தைகள், பெரியவர்களின் சிரிப்பும் கூச்சலும் அலையோசையோடு போட்டியிட்டுக் கொண்டிருந்தது.  அத்தனை ஆரவாரத்திற்கு நடுவில், மேகலாவின் மடியில், அமைதியாகக் தூங்கிக் கொண்டிருந்தாள் அனன்யா. 
அவர்கள் அனைவரும் கடற்கரைக்கு வந்து ஒரு மணி நேரமாகியிருந்தது. உறக்கம் கலையாமல் தூங்கிக் கொண்டிருந்த சின்ன குழந்தைகளை ஜாக்கிரதையாகத் தூக்கிக் கொண்டு வந்தனர்.  முதல் பத்து நிமிடங்கள், ராம கிருஷ்ணனும் மேகலாவும் உறங்கிக் கொண்டிருந்த அனன்யா, சிதார்த், சூர்யாவைப் பார்த்துக் கொள்ள, பெரிய குழந்தைகளும், பெரியவர்களும் கடலில் குளித்து எழுந்தனர்.  
தீபா, வினித், சுமித் மூவரும் கை கோத்து கொண்டு ஒரே இடத்தில் நின்றபடி அலைகளோடு விளையாட, அவர்களுக்கு பின்னே அரணாக நின்று கொண்டனர் கௌரியும் சிவாவும்.  நித்யாவும் அவினாஷும் ஓடிப் பிடித்து விளையாட, விட்டலும் மாலினியும் கை பிடித்துக் கொண்டு அலைகளோடு சண்டை போட்டு முன்னேறிச் சென்றனர்.  
தீபாவின் உயரத்திற்கு அலை எழுந்த போதெல்லாம், பயத்தில், அப்பா, அப்பா என்று கூச்சலிட்டபடி சிவாவைக் அணைத்துக் கொண்டாள்.  மேகலா தவிர பெரியர்வர்கள் அனைவரும் ஷார்ட்ஸ், டீ ஷர்ட்டில் இருந்தனர்.  குழந்தைகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் நீச்சல் உடையில் இருந்தனர். பெண்கள் மூவரும் முட்டி வரை கேப்ரி போல், ஷார்ட்ஸ் அணிந்திருந்தாலும் சிவாவிற்குச் சங்கடமாகத் தான் இருந்தது.  
இரண்டு நாள்கள் முன்பு அரக்கு நிறப் புடவையில் கல்யாணப் பெண்ணாக வளைய வந்து கொண்டிருந்தவள், இப்போது, உடலோடு ஓட்டிக் கொண்டிருந்த நீல நிற ஷார்ட்ஸில் நீலக் கடலில் ஆட்டம் போட்டாள்.  நேற்று மாலை இங்கே வரும் போது தீபா, சூர்யாவிற்கு நீச்சல் உடை வாங்கிய அதே கடையில் சிவாவையும் கட்டாயப்படுத்தி ஷார்ட்ஸ் வாங்க வைத்தாள் கௌரி. வேணாம் என்ற அவனின் மறுப்பைக் காது கொடுத்துக் கேட்கவில்லை.  இடுப்பு உயரத்திற்கு அலைகள் எழுந்து உடலை அடித்த போது அது சரியான முடிவு தான் என்று தோன்றியது சிவாவிற்கு.  
கொஞ்சம் நேரம் அலைகளின் அரவணைப்பை அனுபவித்த குழந்தைகள் மூவரும் அதன் பிறகு  வீட்டிலிருந்து எடுத்து வந்த பந்துடன் விளையாட ஆரம்பித்தனர். உடனே ராம கிருஷ்ணனும் அவர்களுடன் விளையாட்டில் சேர்ந்து கொண்டார்.  அதன் பின் பெண்கள் மூவரும் தனியாக அலைகளோடு உறவாட, ஆண்களும் அவர்கள் இஷ்டத்திற்கு அலை கடலில் நீச்சல் அடித்துக் கூத்தடித்துக் கொண்டிருந்தனர்.  சிவாவிற்கு நீச்சல் தெரியுமென்று அப்போது தான் கௌரிக்குத் தெரிய வந்தது.
சிறிது நேரம் கழித்து சிதார்த்தும், சூர்யாவும் விழித்துக் கொண்டவுடன் அவர்கள் இருவருக்கும் உடை மாற்றி அலைகடலுக்கு அழைத்து வந்தாள் கௌரி. சிதார்த்தை அவினாஷ் தூக்கிக் கொண்டு செல்ல, கடலை அருகில் பார்த்தவுடன் அழ ஆரம்பித்த சூர்யா கௌரியின் இடுப்பை விட்டு இறங்க மறுத்தாள்.  அதைப் பார்த்து அவர்களருகில் வந்த சிவாவிடம் தாவினாள் சூர்யா.  உடனே,
“தீபாவும் இரண்டு அண்ணன்களும் பயப்படவேயில்லை..நீயும் பயப்படக் கூடாது.” என்று அவளைத் தூக்கிக் கொண்டு மெதுவாக அலைகளின் ஊடே சென்றான்.  அவள் முகத்தை சிவாவின் தோளில் புதைத்திருந்த சூர்யாவின் கால்களை அலைகள் தொட்டவுடன்,”அம்மா..அம்மா” என்று கதற ஆரம்பித்தாள். அதைக் கேட்டு அவர்களிடம் கௌரி வருவதற்குள், சூர்யாவின் முகத்தைத் திருப்பி ஓயாமல் உயரே எழும்பிக் கொண்டிருந்த அலைகளைக் காண்பிக்க முயற்சி செய்த சிவாவின் வலது கையைக் கடித்தாள் சூர்யா. “ஹா” என்று  அவன் கையை அவள் வாயிலிருந்து விடுவித்துக் கொண்டு, உடனே  அவர்கள் அருகில் வந்த கௌரியிடம் அவளைக் கொடுத்து விட்டு அவன் கையைச் சோதனை செய்தான் சிவா.
“என்ன ஆச்சு?” என்று கௌரி விசாரிக்க,”முகத்தைப் பிடிச்சுத் திருப்பினேன்..கையைக் கடிச்சிட்டா.” என்றான் சிவா. அவன் கையைப் பிடித்து அவள் பார்த்துக் கொண்டிருந்த போது அவர்கள் அருகில் பந்து விழுந்தது.  அதை அலை அடித்துச் செல்லுமுன் அவசரமாக காப்பாற்ற வந்தார்  ராம கிருஷ்ணன்.  
கௌரியின் தோளில் முகம் புதைத்து அழுதுக் கொண்டிருந்த சூர்யாவைப் பார்த்துக் கோபம் வந்தது சிவாவிற்கு. அவன் தூக்கிக் கொண்டிருக்கும் போது எதற்கு பயம் என்று சிவாவிற்குப் புரியவில்லை. சூர்யாவிற்கு ஒரு வயது முடிந்து சில மாதங்கள் இருந்த போது ஒரு முறை கடற்கரைக்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.  அதன் பின் அவனுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் மால் போவது வழக்கமாகி விட்டது.
“என்ன டா?” என்று சிவாவின் கையைச் சோதித்துக் கொண்டிருந்த கௌரியிடம் விசாரித்தார் ராம கிருஷ்ணன்.
“இவங்க கையைச் சூர்யா கடிச்சிட்டா.” என்றாள் கௌரி.
”பல்லு பட்டிருச்சா?” என்று சிவாவின் கையை அவரும் சோதனைச் செய்தார்.
“கொஞ்சம்.” என்றான் சிவா. முன் வரிசை பற்களின் தடங்கள் தெளிவாகத் தெரிந்தன.
“ஏ டி எஸ் ஊசிப் போடணும்.” என்றார் ராம கிருஷ்ணன்.
“ஒரு வருஷம் முன்னாடி கால்லே இரும்பு ராட் விழுந்த போது டி டி போட்டுக்கிட்டேன்.”
“அப்போ ஊசி வேணாம்..ரூமுக்கு போனவுடனே டெட்டால் வைச்சுக் கழுவிடுங்க.” என்றார் ராம கிருஷ்ணன். அப்போது சற்று தூரத்திலிருந்த மாலினியும் நித்யாவும் கௌரியை அழைக்க,“அவங்க இரண்டு பேரும் உன்னைக் கூப்பிடறாங்க..நீ போடா..நான் இவளை மேகலாகிட்டே விடறேன்.” என்று சொன்னவர்,”வர்றியா..பாட்டிகிட்டே போகலாம்.” என்று கௌரி தோளில் இருந்த சூர்யாவைக் கேட்டவுடன், அவரிடம் தாவினாள் சூர்யா.  உடனே பந்தை சிவாவிடம் கொடுத்துவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டு மேகலாவிடம் சென்றார் ராம கிருஷ்ணன்.
மாலினி, நித்யா இருக்குமிடம் சென்றாள் கௌரி. அவன் கையிலிருந்த பந்துடன் குழந்தைகளிடம் சென்ற சிவா, ராம கிருஷ்ணன் வரும்வரை அவர்களுடன் விளையாடினான்.  அதன் பின் விட்டலுடன், அவினாஷுடன் சேர்ந்து அலைகளுடன் அலைந்து கொண்டிருந்தவனின் மனது அவன் சின்ன மகளின் செயலை அலசிக் கொண்டிருந்தது.  அவன் அக்கா குழந்தைகளுடன், அக்ஷ்யாவுடன், தீபாவுடன் சண்டை போடுவது, அவர்களை அடிப்பது, அவைகளை எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டது தவறோ? அவனைக் கடித்தது போல் பெரியவர்கள் யாரையாவது கடித்தால் என்ன செய்வது? என்று யோசனையானான்.  அவர்கள் அறைக்குத் திரும்பிச் சென்ற பின் சூர்யாவை கொஞ்சம் மிரட்டி வைக்க வேண்டுமென்று முடிவு செய்தான். 
அவளை யாராவது மறுபடியும் கடலிற்கு அழைத்துச் சென்று விடுவார்களோ என்ற பயத்தில் மேகலாவின் கையைப் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த அனைவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சூர்யா.
ஒரு பக்கம் தாத்தா ராம கிருஷ்ணன், பேரக் குழந்தைகள், வினித், சுமித், சிதார்த், தீபா ஓர் அணி. மாலினி, நித்யா, கௌரி மூவரும் எதிர் அணி.  விட்டல், அவினாஷ், சிவா மூவரும் குழந்தைகளுக்குப் போட்டியாக விளையாடிக் கொண்டிருந்த மனைவிகளுக்கு எதிராக அவ்வப்போது ராம கிருஷ்ணனுக்கும், குழந்தைகளுக்கும் உதவி செய்து கொண்டிருந்தனர். அதற்கு ஆட்சேபம் தெரிவித்தபடி ஒரு தடவை கூட விட்டுக் கொடுக்காமல் விளையாடிக் கொண்டிருந்தது அம்மாக்களின் அணி.  அந்தப் புறம் ராம கிருஷ்ணன் ஒருவரால் மூன்று பேருக்கும் ஈடு கொடுக்க முடியாமல் தோற்றுக் கொண்டிருந்தது அவரது அணி. அப்போது வினித், சுமித், சிதார்த் மூவரும் விட்டலிடமும், அவினாஷிடமும் மாலினி, நித்யாவைப் பற்றி புகார் வாசித்தார்கள். அவர்களைத் தட்டிக் கேட்ட விட்டலை, அவினாஷை அலட்சியப்படுத்தினர் மாலினியும் நித்யாவும். ஒரு கட்டத்திற்கு மேல் அவன் அம்மாவிடம் வந்த அவினாஷ்,
“நீங்க என்ன மாமியார்? உங்க மருமகளை அடக்க மாட்டீங்கறீங்க? விட்டுக் கொடுக்காம சின்ன புள்ளையாட்டம் எப்படி விளையாடறா பாருங்க.” என்று அவனின் இயலாமையை அவருடையதாக மாற்றிப் பேசினான்.
“டேய்..சின்ன புள்ளையாட்டம் நீ என்கிட்டே வராதே..இந்தா உன் பொண்ணைப் பிடி.” என்று அனன்யாவை அவனிடம் கொடுத்தார்.  அவரருகே அமர்ந்திருந்த சூர்யா சிவாவின் அருகே சென்று அவளைத் தூக்கிக் கொள்ளச் சொன்னாள்.  அப்போது கை தட்டி அலையோசையை விட அதிக ஓசை எழுப்பினார் மேகலா. உடனே அனைவரும் சத்தம் வந்த திசையைப் பார்த்தனர்.
“அரை மணி நேரத்திலே எல்லாரும் ரூமுக்கு வந்திடணும்..ஒரு மணி நேரத்திலே பிரேக்ஃபாஸ்ட் டேபிள்லே இருக்கணும்.” என்று மொத்தமாக விளையாட்டிற்கு முடிவு கட்டி விட்டுக் கிளம்பிச் சென்றார்.
உடனே,”அம்மா, அம்மா” என்று மறுப்புத் தெரிவிக்க அழைத்த மாலினியை அவர் கண்டு கொள்ளவில்லை. உடனே,”அப்பா.” என்று அவள் ராம கிருஷ்ணனிடம் முறையிட,”அரை மணிலே அஞ்சு நிமிஷம் இப்போவே வீண்டாயிடுச்சு..பந்தோட விளையாடினது போதும்.” என்று அவள் அம்மாவின் கட்டளைக்கு அடிபணிய வேண்டுமென்று மகளுக்கு விளக்கினார் ராம கிருஷ்ணன்.  உடனே குழந்தைகளிடம் பந்தைக் கொடுத்து விட்டு மறுபடியும் கடலில் விளையாடச் சென்றனர் பெண்கள் மூவரும்.
மணலில் அனன்யாவுடன் அமர்ந்த அவினாஷின் அருகில் அமர்ந்து கொண்டனர் சிவாவும் விட்டலும்.  சிவாவின் மடியில் அமர்ந்து கொண்டாள் சூர்யா. அவினாஷின் வாய் சும்மா இல்லாமல் விட்டிலை உசுப்பும் வேலையில் இறங்கியது.
“உங்க மனைவியை நீங்க ஒண்ணும் சொல்றதில்லை..அதான் கணவன் கண்ணெதிரெலே கடலைக் கட்டிக்கிட்டு..அலைகளோட ஆட்டம் போடறா.” என்றான்
அந்த விமர்சனம் கோபத்திற்குப் பதிலாக விட்டலின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. அதே புன்னகையுடன்,”ஐ லவ் ஹர் பிகாஸ் ஷி இஸ் லைக் திஸ் (i love her because she is like this)…இந்த மாதிரி  ஒரு கடற்கரைலே, இதே போல கடலோட விளையாடிக்கிட்டு இருந்த மாலினி மேலே காதலாயிட்டேன் சிவா.” என்று அவனும் மாலினியும் காதலில் விழுந்த கதையைச் சிவாவிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தான் விட்டல். சுமாரான ஆங்கிலத்தில் உரையாடிய விட்டல், சில சமயங்களில் அவனிற்குச் சரியான ஆங்கில் வார்த்தைகள் கிடைக்காத போது அவினாஷின் உதவியை நாடினான்.
“மாலினிக்குக் கடல் பிடிக்கும்..எனக்கு மழை பிடிக்கும்..மழையும் கடலும் ஒண்ணா சேர்ந்த ஒரு மாலை நேரத்திலே எங்க கூட டூர்லே வந்திருந்தவங்க மழைலே நனையப் பிடிக்காம, கடல் அலைகல்லே நனைய விரும்பாம அவங்க அவங்க ரூமுக்குத் திரும்பிப் போயிட்டாங்க..இருள் கவிழ ஆரம்பிச்ச அந்தி நேரத்திலே, கொட்டற மழைலே, பொங்கி எழுந்த அலை கடலோட கரைலே, ஓயாத அலைகளின், ஓய்வில்லாத மழைத் துளிகளின் ஓசைகளை அனுபவிச்சுக்கிட்டு அமைதியா நாங்க இரண்டு பேரும்.. மழையும், கடலும்.. எந்த நொடிலே, எப்படின்னு தெரியாம எங்க மனசு ஒண்ணாயிடுச்சு….
அதுவரை நானும் மாலினியும் சந்திச்சுகிட்டது இல்லை..அன்னைக்குத் தான் அவளையும் அவக் கோபத்தையும் நேர்லே பார்த்தேன்..அவப் பூனாலே வேலைக்குச் சேர்ந்த போது நான் அமெரிக்காலே இருந்தேன்..அமெரிக்கா போன பிறகு இந்தியா திரும்பி வர விரும்பலை..சில வருஷங்கள் கழிச்சு ஒரு புதுப் பிராஜெக்ட்டுக்குப் பூனா டிவிஷனை  டிரெய்ன் செய்ய என்னை இந்தியா அனுப்பினாங்க..திரும்ப அமெரிக்க வருவேன்னு கியாரண்டியோடு தான் அங்கேயிருந்து கிளம்பினேன்..ஆனா இன்னைவரை இங்கே தான் இருக்கேன்..வந்த போது சிங்கில்..இப்போ ஃபெமலி மேன்..மாலினிஸ் மேன்..
என்னோட சொந்த ஊர் மராத்வாடா பகுதிலே இருக்கற நூற்றுக் கணக்கான கிராமத்திலே ஒரு கிராமம்..தனியா, சிறப்பா எதுவும் கிடையாது…வானம் பார்த்த பூமி..மழை இல்லைன்னா எதுவுமே இல்லை..அதனாலே மழைன்னா எங்க அகராதிலே சந்தோஷம், மகிழ்ச்சின்னு அர்த்தம்..இப்போவும் மழையை நம்பிதான் அங்கே வாழ்க்கை..மழை வந்தா நிலத்திலே விளைச்சல்..இல்லைன்னா பஞ்சம், பட்டினி, குடிக்கற தண்ணீருக்குக்கூட அலைச்சல்…உணவு, குடி நீர் இரண்டும் சரியாக் கிடைக்கலைன்னா மனுஷனாலே வாழ முடியுமா? அங்கே வாழறாங்க..ஒரு நாள் பொழுதிலே முக்கால் வாசி நேரம் இது இரண்டையும் தேடி தேடிக்  கழிக்கறாங்க..அந்தத் தேடலேர்ந்து, அந்த சூழ் நிலைலேர்ந்து எப்படியாவது வெளியேறிடணும்னு வெறிலே வாழறாங்க..
நானும் அந்த மாதிரி வெறிலே தான் அங்கேயிருந்து வெளியேறி பூனாக்கு வந்து சேர்ந்தேன்..நான் வந்த பாதை, படிப்பு..என் கிராமத்திலே எங்க ஆளுங்க பள்ளிப்படிப்பை முடிச்ச பிறகு ஊர்லே இருக்கறதில்லை.. வேலைக்காக, படிப்பிற்காக பூனா, நாஸிக், மும்பை போயிடுவாங்க….அப்படிப் போனவங்க நிறைய பேர் திரும்பி ஊருக்குப் போகறதில்லை.. என்ன கஷ்டம் வந்தாலும் ஊருக்குத் திரும்பிப் போக விரும்ப மாட்டாங்க….சில சமயம் அவங்களைப் பெற்றவங்களோட இறுதியைக் கூட ஊர்லே இருக்கறவங்க தான் செய்வாங்க..அதுக்கு முக்கியக் காரணம் அங்கே இருக்கற பூமி மட்டும் வறண்டு போகலை..அங்கே வாழற மனுஷங்களோட மனசும் வறண்டு போய்க் கிடக்கு..
மழை வந்தா வறண்டு கிடக்கிற பூமி வளமாகிடும்..கொஞ்ச காலம் பசுமையா, ஈரத்தன்மையோட இருக்கும்..என்ன நடந்தாலும், எத்தனை வருஷமானாலும் வறண்டு போயிருக்கற மனுஷங்க மனசெல்லாம் அப்படியே தான் இருக்கும்..அதிலே மனிதத் தன்மையை வளர்க்க முடியாது, வரவழைக்க முடியாது..அதனாலே நாங்க எத்தனை பெரியா ஆளா இருந்தாலும் எத்தனை வருஷம் கழிச்சு ஊருக்குப் போனாலும் எங்களை அதே போல தான் நடத்துவாங்க.. பிறந்து, வளர்ந்த ஊர் வித்தியாசமா நடத்தினா அங்கே திரும்பிப் போக யார் விரும்புவாங்க..அதனால் தான் நாங்கெல்லாம் பெரிய நகரங்கள்லே தொலைஞ்சுப் போகறத்துக்கு மும்பை, தில்லின்னு போயிடறோம்..
அப்படிக் காணாமப் போகறதும் சுலபம் கிடையாதுண்ணு அங்கே போன பிறகுதான் புரியுது..நான் பொறியியல் கல்லூரிலே படிச்சிக்கிட்டு இருந்த போது என் பெயரைக் கேட்டவுடனேயே என் கூட படிச்ச பசங்க தள்ளி உட்கார்ந்திடுவாங்க. என்கூட வேலை பார்த்தவங்க என்னோட ஒரே டேபிள்லே சாப்பிட சங்கடப்படுவாங்க. நான் எத்தனை படிச்சிருந்தாலும், அவங்கெல்லாம் எல்லாம் எத்தனை படிச்சாலும் சில விஷயங்களை எந்தப் படிப்பும் மாற்ற முடியாது..அவங்க என்னை ஏத்துக்கணும்னு நான் எதிர்பார்த்தது என்னையே எனக்குப் பிடிக்காம செய்திடுச்சு..அதனாலே என்னோட பிறப்பை வைச்சு என்னைப் பிரிச்சு, வித்தியாசமாப் பார்க்கற, நடத்தற இடத்திலேர்ந்து என்னை என் திறமைக்காக மதிச்ச ஊருக்குப் போயிட்டேன்..இங்கே திரும்பி வரக் கூடாதுண்ணு நினைச்சுக்கிட்டு இருந்த போது தான் பூனா டிவிஷனுக்குத் திரும்ப வந்தேன்.. மாலினியைச் சந்திச்சேன்..
அந்த வருஷம் மழைக் காலம் முழுக்க பயங்கரமான மழை..பச்சை வண்ணப் போர்வைலே வெள்ளி நீரோடைகள்….சின்னதா, பெரிசா, வேகமா, உயரமான்னு ஆறு, குளம், அருவின்னு எங்கே பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர் தான்..இயற்கையோட கருணையை, எழிலை அனுபவிக்க, கம்பெனி சார்பா நாங்க எல்லாரும் ஒரு கடற்கரை ரிசார்ட்டுக்குச் சுற்றுலா போனோம்.
எப்படியும் கொஞ்ச நாள்லே அமெரிக்கா திரும்பிப் போயிடுவேண்ணு ஆபிஸ்லே யாரோடேயும் அதிகமாப் பேச்சு வைச்சுக்கலை..அந்தப் பயணத்திலே, பஸ்லே, பின்னாடி ஸீட்டிலே தனியா உட்கார்ந்திருந்தேன்.  வெளியே பலமான மழை. அதனாலே பஸ் உள்ளே உட்கார்ந்து மதிய சாப்பாடு சாப்பிட்டு முடிச்சோம்.. சில பேர் அவங்க கையைக் குடிக்கற தண்ணீர்லே கழுவினாங்க..அப்போ,”வெளிலே விடாம மழை பெய்யுது..அதிலே கையைக் கழுவாம குடிக்கற தண்ணீர்லே கையைக் கழுவறவங்களைத் தண்ணீர் டாங்கரை நம்பி வாழற சென்னை மா நகருக்கு மாற்றல் செய்யணும்னு கன்னா பின்னான்னு ஒரு பொண்ணு திட்டிக்கிட்டு இருந்தா..உடனே அவங்க எல்லாரும் ஒரு பாட்டில் தண்ணீர்லே பெரிய மாற்றம் வராதுண்ணு அவளைத் திரும்ப திட்ட ஆரம்பிச்சாங்க..
அதையெல்லாம் கேட்டிட்டு கொஞ்சம் கூட அசராம நீங்கெல்லாம் குடிக்க தண்ணீர் கிடைக்காட்டா கோக் குடிச்சுப்பீங்க..அதனாலே உங்களுக்கு வேற சாபம் கொடுக்கறேன்.. நீங்க எல்லாரும் பாத் ரூம் போயிட்டு டிஷ்யு பேப்பர் இல்லாம.. கழுவிக்க சொட்டுத் தண்ணீர் இல்லாமத் தவிக்கணும்..திண்டாடனும்.. பாட்டில் பாட்டிலா கோக் வைச்சுக்கிட்டுக் அதைக் குடிச்சா பாத் ரூம் வருமோன்னு பயந்துகிட்டு பைத்தியமாப் போகணும்னு சாபம் விட்டு, அசிங்கமாப் பேச ஆரம்பிச்சிட்டா..அதைக் காது கொடுத்துக் கேட்க முடியாம அவங்க எல்லாரும் உடனே தப்பு தப்பு தான்னு ஒத்துக்கிட்டு அவக்கிட்டே அப்படியே சரண்டராகிட்டாங்க..அந்தப் பொண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சது..அன்னைக்குச் சாயந்திரம் கொட்டற மழைலே, கடலோட விளையாடிக்கிட்டு இருந்த அவ மேலே காதாலாயிடுச்சு.” என்று அவன் வாழ்க்கை, காதல் வயப்பட்ட கதையைச் சொல்லி முடித்தான் விட்டல்.  உடனே,
“அட டா, தண்ணீர் பஞ்சத்திலே திண்டாடற மராட்வாடாவையும், மதராஸையும் ஒரு பாட்டில் தண்ணீர் சேர்த்து வைச்சிருக்கு.” என்றான் அவினாஷ்.
“உனக்கும், கௌரிக்கும் மாலினி மாதிரி ஓர் அக்கா இருக்கா..என் அக்கா மாலினி மாதிரி இல்லையே..அதான் மழையும், கடலும் எங்களைச் சேர்த்து வைச்சது.” என்று சொல்லிச் சிரித்தான் விட்டல்.
விட்டலின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த சிவாவின் மனத்தில், யாரையும் வித்தியாசமாகப் பார்க்க, பழகத் தெரியாதவளும், வித்தியாசமானப் பார்வைகளை மட்டும் பார்த்துப் பழக்கப்பட்டவனும் ஜோடி சேர்வது இயற்கைதானே என்று தோன்றியது.  அதனால் தான் இயற்கையே அவர்களை இணைத்திருக்கிறது என்று எண்ணினான்.
***********************************************************************************************************
மஹாராஷ்ட்ராவின் மராட்வாடா பகுதி, ஆந்திராவின் அனந்த்பூர் பகுதி. வறட்சி காரணமாக விவசாய நிலங்கள் தரிசாகிப் போவதால் இந்த இடங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரு நகரங்களில் வாகன ஓட்டு நர்களாக, வாட்ச்மேன்களாக புது அவதாரம் எடுக்கிறார்கள்.  
இந்தப் பிரச்சனைக்கு வறண்டு போன குளங்கள், வற்றிப் போன ஆறுகள், விஷமாக மாறிப் போன நீர் நிலைகள் மட்டும் காரணமில்லை. மனிதர்களும் பொய்த்துப் போவதால் தான் இதற்குத் தீர்வு என்பதே கிடைப்பதில்லை.

Advertisement