Advertisement

அத்தியாயம் – 24
நாள்தோறும் உதிக்கும் சூரியனை வைத்துப் பொழுதுகளை, வேளைகளைத் தேதிகளாகப் பிரித்து, இயற்கையின் செயல்பாட்டை நொடிதோறும் உணர்த்தும் பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை மாதம், நாள், கிழமை, நட்சத்திரம், திதி என்று வரிசைப்படுத்தி நம் நினைவு அடுக்குகளில் பதித்துக் கொள்கிறோம். அந்த நினைவுகளில் ஏதாவது ஒன்று  தவறாகிப் போனால், பிறந்த நாளன்று பரிசிற்காகக் காத்திருந்து ஏமாந்து போன உயிர்த் தோழன் பகைவனாகிறான், திவசத் திதியன்று படையலுக்காகக் காத்திருந்து ஏமாந்து போன பித்ருக்கள் சத்ருக்களாகிறார்கள்.  மனித வாழ்க்கையில் தோற்றம், மறைவு இரண்டு மட்டும் தான் மாற்ற முடியாத இரு முக்கிய நிகழ்வுகள்.  அதை வருடா வருடம் ஜெயந்தியாக, அஞ்சலியாக கொண்டாட வேண்டுமென்ற நியமங்களெல்லாம் யாருக்காக? யார் ஏற்படுத்திய நியதிகள்?
மனிதர்களில் வசதிப் படைத்தவர்கள், வறுமையில் வாடுபவர்கள், இந்த இரண்டு வர்க்கத்தினரும் இந்த விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் . முதல் வர்க்கத்தினரை மறந்து போன தினங்களின், திதிகளின்  விளைவுகள் சென்றடைதில்லை.  பரிகாரம் மூலம் பாதிப்பைச் சரிச் செய்யும் சக்தி அவர்களிடம் இருக்கிறது.  அதே போல் இரண்டாம் வர்க்கத்திர்னர்க்கு முடிந்து போனவைகளைச் சுமந்து செல்லும் சக்தி இல்லாததால் இந்த நியதிகளிலிருந்து விதிவிலக்குப் பெறுகிறார்கள். தேதி, திதி என்ற விதிகளெல்லாம் வறுமைக்கும் வசதிக்கும் நடுவே போராடும் மத்திய வர்க்கத்தினருக்கும் மட்டும் தான். 
அந்த வர்க்கத்தைச் சேர்ந்த சிவாவிற்கும் அவன் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை நாள், திதி என்று பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கம் இருந்தது. வறுமைக் கோட்டின் கீழே வாழ்க்கையை ஆரம்பித்த கௌரிக்கு நல்ல நாள், கெட்ட நாள் என்று நாள்களைப் பிரித்துப் பார்க்க வாய்ப்பும் வசதியும் இருந்ததில்லை. அவள் அம்மா கல்யாணி, அவரின் கடைசி காலத்தில், கடவுள் மீது அவருக்கு இருந்த கோபத்தை உதறிவிட்டு, கௌரிக்காக தெய்வத்தின் காலடியில் தஞ்சமடைந்தார்.  அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்ற அவரின் கனவு நிறைவேற கடவுளின் உதவியை நாடினார். 
கடந்த சில வருடங்களாக கௌரியின் நிதி நிலைமையும் வாழ்க்கை முறையும் வெகுவாக மாறியிருந்தாலும், தெய்வ நம்பிக்கை, சடங்குகள், சாஸ்திர சம்பிரதாயங்கள் மீது பெரிய மாற்றுக் கருத்தோ, அபிப்பிராயமோ அவளுக்கு ஏற்படவில்லை. அதனால் அவள் அம்மாவின் முதல் நினைவு நாளன்று ஆபிஸிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு, அவர் நினைவுகளுடன் அந்தத் தினத்தை மேகலா ஆன்ட்டியுடன் கழித்தாள். அதே போல் அவன் நிதி நிலையைச் சுட்டிக் காட்டி கோவிலில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்ற சிவாவின் ஆலோசனையையும் அப்படியே ஏற்றுக் கொண்டாள். 
பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பார்க்கும் இரு, தனி நபர்கள், அவர்களின் திருமணத்திற்குப் பின், தம்பதியராக ஆன பின், பல சமயங்களில் ஒரே கோணத்தில் பிரச்சனைகளைப் பார்க்கப் பழகிக் கொண்டாலும் சில சமயங்களில் பழைய பழக்கத்தில் புதுப் பிரச்சனைகளைத் தொடங்கி வைப்பார்கள்.
இன்னும் திருமணப் பந்தத்தில் இணையாத சிவாவும் கௌரியும் அவர்களின் பிரச்சனைகளைப் பற்றி அவரவர் கோணத்தில் யோசனை செய்து கொண்டிருந்த அவர்களது எண்ணங்களுக்குத் தெளிவான வார்த்தை வடிவம் கொடுக்காமல், மற்றவர்களின் கோணத்தில் யோசிக்க முடியாமல், தனிமையில் பேசிக் கொள்ள  கிடைத்த அந்த அரிய வாய்ப்பை வீணடித்தனர். 
கௌரிக்கு மெஸேஜ் அனுப்பி விட்டு,”நான் கிளம்பறேன்.’ என்று வாசல் வரை சென்ற சிவாவிடம்,”ஒரு நிமிஷம்.” என்றாள் கௌரி.
“என்ன?” என்று திரும்பியவனிடம்,
“காயத் ரியோட ஃபோட்டோ வைச்சிருக்கீங்களா?” என்று கேட்டாள். சற்றும் யோசிக்காமல், உடனே அவன் சட்டையின் இடதுப் புறப் பேக்கட்டிலிருந்த பர்ஸை வெளியே எடுத்து கௌரியிடம் நீட்டினான் சிவா. அதைத் திறந்தவுடன் சிவாவும் காயத்ரியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட சிறிய புகைப்படம். அதை அடுத்து சிறு வயது தீபாவும், சில மாதங்களான சூர்யாவும் தனித் தனியாக சிரித்துக் கொண்டிருந்தனர். சில நொடிகள் அந்தப் புகைப்படங்களைத் தீவிரமாகப் பார்த்து விட்டு பர்ஸை அவனிடம் திருப்பிக் கொடுத்தாள் கௌரி.  
அந்தப் பர்ஸில் இன்னொரு புகைப்படத்திற்கு இடமில்லை.  இனிப்  பெரிய ஸைஸில் புதுப் பர்ஸ்ஸா? இல்லை அதே பர்ஸ்ஸில் புதுப் புகைப்படமா? என்ற கேள்வி கௌரியினுள் எழுந்தது.  அதை வெளிப்படுத்தும் துணிவு இல்லாததால் தயக்கத்தின் பிடியில் மௌனமானாள்.
பர்ஸைக் கௌரியிடம் கொடுத்த பின் அவள் முகத்தில் அவள் மனதைப் படிக்க முயன்று தோற்றுப் போனான் சிவா. அவனும் காயத்ரியும் சேர்ந்து இருந்த புகைப்படத்தைப் பார்த்த பின் அவளிடமிருந்து என்ன எதிர்வினையை எதிர்பார்த்தான் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவளிடம் பர்ஸைக் கொடுத்தவுடன் அவனுள் மாற்றம் ஏற்பட்டது. அதன் விளைவாக கௌரியின் வீட்டினுள், காயத்ரியின் பொருள்களுடன் வீற்றிருந்த பெட்டியைப் புதுக் கோணத்தில் பார்த்தான். 
அந்த கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்தவுடன், அந்தப் புகைப்படத்தை உடனே அகற்றச் சொல்லிக் கௌரி கேட்டிருந்தால், அவன் அதைச் செய்திருப்பானா? திருமணம் முடியும் வரை காத்திருந்து, அகற்றச்  சொன்னால், என்ன செய்யப் போகிறான்? ஏதாவது காரணம் கண்டு பிடித்து மறுப்பானா? இல்லை செய்கிறேன் என்று சொல்லித் தள்ளிப் போடுவானா? புகைப்படத்தை அகற்றி விட்டால் புது வாழ்க்கையில் புகுவது அவனுக்கு இலகுவாகி விடுமா?  என்ற கடைசி கேள்விக்கு இல்லை என்று பதில் சொன்னது அவன் மனது.  அதே சமயம் அவனுக்கு இலகுவாக இல்லாவிட்டாலும் கௌரிக்கு இலகுவாக இருக்கும் என்று உணர்ந்தவன்,  இனிக் காயத்ரி சம்மந்தப்பட்ட நிகழ்வுகளிலிருந்து, விஷயங்களிலிருந்து முடிந்த அளவு கௌரியைத் தள்ளி வைக்க வேண்டுமென்று எண்ணலானான். அதில் முதல் கட்டமாக அந்தப் புகைப்படத்தை உடனே அகற்ற முடிவு செய்தான் சிவா.  
கௌரியின் கோணத்திலிருந்து சிந்தித்து அவளுக்காக அவன் எடுத்த முடிவை அவளுக்குத் தெரியப்படுத்தி இருக்கலாம் ஆனால் எந்தளவிற்கு அவனால் அந்த எண்ணங்களைச் செயல்படுத்த முடியுமென்று சந்தேகம் எழுந்ததால்,  இப்போது வேண்டாமென்று அந்தப் பேச்சை சில காலம் தள்ளிப் போட்டான் சிவா.  மௌனமாகப் பர்ஸைத் திருப்பியவளிடம்,
“நீ எப்போ சுப்ரமணி ஸர் வீட்டுக்குப் போகப் போற?” என்று விசாரித்தான்.
“இங்கே வேலை முடிஞ்சிடுச்சு..நானும் கிளம்ப வேண்டியதுதான்.” என்றாள் கௌரி.
ஒரு நொடி யோசித்தவன்,”பூட்டிக்கிட்டுக் கிளம்பு..நானும் வரேன்.” என்று வீட்டிற்குள் வந்து, சுவரோரத்தில் இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டான். வீட்டின் விளக்குகளை அணைத்து விட்டு, கதவைப் பூட்டிக் கொண்டு மின் தூக்கியில் பயணம் செய்து கீழ் தளம் வந்து சேர்ந்தனர் இருவரும்.  அவன் பைக்கை நோக்கிச் சென்ற சிவாவைப் பின் தொடராமல்,” நான் நடந்து போயிடறேன்.” என்றாள் கௌரி. 
“என்னோட பைக்கிலே போயிடலாம்.” என்றான் சிவா.
“வேணாம்..பெட்டி வேற இருக்கு.”
“நான் இங்கே கொண்டிட்டு வரும் போது என் முன்னாடி வைச்சுக்கிட்டேன்..இப்போ உன் மடிலே வைச்சுக்கிட்டு உட்கார்.”
“வேணாம்.” என்று மறுத்தவள் இதுவரை யாருடனும் பைக்கில் போய்ப் பழக்கமில்லை என்று தெளிவாகச் சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை.
கௌரி மறுத்தது சிவாவின் கோபத்தைக் கிளப்பியது.  இவள் ஸ்கூட்டி, இவள் கார் இது இரண்டில் தான் பயணம் செய்வாளா? என்று வேறு கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தவன், ஒரு வாரம் கழித்து இதே போல் பேசினால் வேறு மாதிரி பதில் கொடுக்க வேண்டுமென்று முடிவெடுத்தான். உடனே,
“சரி..வா..இரண்டு பேரும் நடந்தே போகலாம்.” என்று பெட்டியுடன் நடக்க ஆரம்பித்தான். அவனுடன் சேர்ந்து கொண்டாள் கௌரி.  இருவரும் வெளியே அமைதியாக இருந்தாலும் உள்ளே அலை போல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் கழித்து,
“இத்தனை நகைகளை வீட்லே வைச்சிருக்கறது பாதுகாப்பில்லை..லாக்கர்லே வைக்கறது பெட்டர்” என்றாள் கௌரி.
“என் பாதுகாப்புக்குத் தான் வீட்லே வைச்சிருக்கேன்..வியாபாரம் செய்யறேன்..எப்போ பணத் தேவை ஏற்படும்னு சொல்ல முடியாது..சில பேர் வாய் வார்த்தைலே கடன் கொடுப்பாங்க, சில பேர் கையொப்பம் வாங்கிக்கிட்டு கடன் தருவாங்க..சில நபர் நகையோ, சொத்துப் பத்திரமோ கேட்பாங்க..அந்த நேரத்திலே வங்கியைத் தேடிக்கிட்டுப் போக முடியாது..எனக்குச் சரிபடாது.” என்று வெடுக்கென்று பதில் சொன்னான் சிவா. அப்போது அவன் கைப்பேசி அழைக்க, பெட்டியை இன்னொரு கைக்கு மாற்றிக் கொண்டு, அழைப்பை ஏற்று,”வந்துகிட்டே இருக்கேன்..உட்கார்த்தி வைச்சு ஜுஸ் வாங்கிக் கொடு.” என்று கட்டளையிட்டான்.
உடனே, “நீங்க கிளம்புங்க..நான் பெட்டியை எடுத்திட்டு போயிடறேன்.” என்றாள் கௌரி. 
“வேணாம்….உன்னை அவங்க வீட்டு வாசல்லே விட்டிட்டு நான் கிளம்பறேன்.” என்றான் சிவா.
அடுத்த சில நிமிடங்களில் சுப்ரமணி ஸர் வீட்டு வாசலில்  இருந்தனர் இருவரும்.  வாசலோடு கிளம்ப இருந்த சிவாவைத் தடுத்து நிறுத்தி, வீட்டினுள் அழைத்துச் சென்று காபி குடிக்க வைத்தார் திருமதி சுப்ரமணி.  சுப்ரமணி ஸர் வழக்கம் போல் வீட்டிலில்லை.  
அவள் கைப்பையிலிருந்த வீட்டுச் சாவியைக் கொடுக்க வந்த கௌரியிடம்,”வீட்டுச் சாவி சிவாகிட்டே இருக்கட்டும்.. அவனோட ஃபோன் நம்பரை விளம்பரத்திலே போடலாம்னு ஸர் சொல்றார்..அவர் அடிக்கடி வெளியூர் போகறதுனாலே அவர் நம்பரைக் கொடுக்க முடியாது…வீட்டைப் பார்க்க இஷ்டப்படறவங்க சிவா நம்பருக்கு ஃபோன் செய்யுட்டும்..உன் புருஷன் எல்லாத்தையும் பார்த்துக்கட்டும்..வாடகை, அட்வான்ஸ் எல்லாம் ஸர்கிட்டே கேட்டுக்கோ சிவா..இங்கே ஓனர் நினைச்ச மாதிரி வாடகை வாங்க முடியாது..எல்லாம் அஸொசேஷன் தான் நிர்ணயிக்கும்.” என்றார் திருமதி சுப்ரமணி.
புது வீடு, பதவி உயர்வு, குடும்பப் பொறுப்பு என்று அடுத்தடுத்து ஏகப்பட்ட கடமைகள் இருந்ததால் உடனே அவள் கையிலிருந்த வீட்டுச் சாவியை சிவாவிடம் ஒப்படைத்தாள் கௌரி.  அதை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்ட சிவா,”புது வீடு, பதவி உயர்வு, குழந்தைங்க பள்ளிக்கூடம் எல்லாம் ஸெட்டில் ஆக உனக்கு டயமெடுக்கும்..இந்த வீட்டை நான் பார்த்துக்கறேன்.” என்றான். கணவனும், மனைவியும் ஒரே கோணத்தில் அந்தப் பிரச்சனையைப் பார்த்ததால் திருமதி சுப்ரமணியத்தின் தீர்வை அப்படியே ஏற்றுக் கொண்டனர். 
திருமதி சுப்ரமணியும் அதைப் பார்த்துத் திருப்தி அடைந்தார்.  சிவாவின்  அம்மாவைச் சந்தித்ததிலிருந்து அவருக்கு லேசான பயம் ஏற்பட்டிருந்தது.  சிவா, கௌரி இருவருடனும் பல வருடங்களாகப் பழகி வருகிறார்கள்.  அவர்கள் இருவரின் குண நலன்கள் பற்றித் தெரிந்திருந்ததால், அவர்கள் இருவருக்கும் ஓத்துப் போகுமென்று நினைத்ததால் தான் அவர்களிடம் திருமணப் பேச்சை எடுத்தார் சுப்ரமணி.  ஆனால் சிவாவின் குடும்பத்தைச் சந்தித்த பின் தயக்கம் ஏற்பட்டிருந்தது.  இப்போது கௌரி மீது சிவா காட்டிய கரிசனம் அந்தத் தயக்கத்தை வெளியேற்றியது.
“கௌரி, உனக்குப் பதவி உயர்வு கிடைச்சிடுச்சா?” என்று திருமதி சுப்ரமணி கௌரியுடன் பேச ஆரம்பித்த போது சிவாவின் கைப்பேசி அழைத்தது.  அந்த அழைப்பை ஏற்றவுடன்,”நான் கிளம்பறேன் கௌரி..அவசரமாப் போகணும்.” என்று அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டான் சிவா.
அடுத்த நாள் முற்பகல் வேளையில், ஜவுளி கடை வாசலில், “நான் கிளம்பறேன் கௌரி..அவசரமாப் போகணும்..இதிலே அம்பதாயிரம் இருக்கு..உனக்கும், குழந்தைங்களுக்கும் கல்யாணத்திற்கு வாங்கிக்கிட்டு அப்படியே சாவித்திரி அம்மாக்கும் அவங்களுக்குப் பிடிச்சதையும் வாங்கிக் கொடுத்திடு.” என்று கௌரியிடம் பணத்தைக் கொடுத்து விட்டு அவன் பைக்கில் பறந்து போனான் சிவா.
அரைமணி நேரம் முன்பு கௌரியைக் கைப்பேசியில் அழைத்தவன், அவர்கள் இருக்கும் இடத்தை விசாரித்து, ஓர் ஆட்டோவில் சாவித்திரி அம்மாவுடன் குழந்தைகளை அனுப்பி வைத்தான்.  சாவித்திரி அம்மாவை இதுவரை கௌரி சந்தித்ததில்லை.  அதனால் மாலினியுடன் கடை வாசலில் காத்திருந்த போது, ஆட்டோவிலிருந்து இறங்கிய தீபாவும் சூர்யாவும் பாய்ந்து வந்து கௌரியைக் கட்டிக் கொண்டனர்.  அதன்பின் கௌரியைச் சாவித்திரி அம்மாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் மாலினி.  அவர்கள் அனைவரும் கடைக்குள் நுழையும் போது மறுபடியும் கௌரியைக் கைப்பேசியில் அழைத்த சிவா, சில நிமிடங்கள் கடை வாசலில் காத்திருக்கும் படி கட்டளையிட்டான்.  மற்றவர்களைக் கடையினுள் அனுப்பி விட்டு அவன் வரவிற்காக காத்திருந்தவளின் கையில் காசைக் கொடுத்து விட்டு, எதற்காக என்ற காரணத்தைச் சொல்லி விட்டு மறைந்து போனான்.
காயத்ரிக்காக வாங்கிய சங்கிலியைப் பார்த்த பின் கௌரிக்கு என்ன வாங்கிக் கொடுப்பது என்ற கேள்வி சிவாவின் தூக்கத்தைப் பறித்திருந்தது. அதனோடு  கல்யாணத்திற்காக குழந்தைகளுக்கும் புதுத் துணி எடுக்க வேண்டுமென்றும் என்ற எண்ணம் தோன்றியிருந்தது.  அவன் குடும்பத்தினர் அவன் கல்யாணத்தில் ஆர்வம் காட்டாததனால் அவன் எண்ணத்தை எப்படிச் செயல்படுத்துவது என்று தெரியவில்லை.  இரவு முழுவதும் யோசித்தவன் காலையில் ஒரு முடிவிற்கு வந்திருந்தான்.  கௌரியின் குடும்பத்துடன் குழந்தைகளையும் சாவித்திரி அம்மாவையும் கடைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று.  
அதனால் காலையில் முதல் வேலையாக சாவித்திரி அம்மாவிடம் குழந்தைகளோடு வெளியே செல்லத் தயாராகும்படி சொல்லி விட்டு அவன் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து அம்பதாயிரம் ரூபாய் எடுத்து வரச் சென்றான். அந்தப் பணத்துடன் வீட்டிற்கு வந்தவன், கௌரியை அழைத்து அவர்கள் இருக்குமிடத்தின் விவரத்தைக் கேட்டு கொண்டான். சாவித்திரி அம்மாவையும் குழந்தைகளையும் ஆட்டோவில் அனுப்பி வைத்து விட்டுக், கடைக்கு சென்று சில ஏற்பாடுகளைச் செய்து முடித்த பின் அவன் பைக்கில் கௌரியைச் சந்திக்கச் சென்றான். 
கௌரியிடம் காசு கொடுத்த பின் அடுத்த வேலையாக மறுபடியும் கடைக்கு வந்து அங்கே காத்திருந்தவர்களுடன் கடையை விற்கும் ஓப்பந்தத்தை உறுதி செய்தான். அதன் பின் அவர்களிடமிருந்து அவன் பங்கைத் தவிர பாக்கி பணத்தைப் பெற்றுக் கொண்டான்.  இனிக் கடையைப் பதிவு செய்யும் நாளில் அவனுடைய பங்கு அவனை வந்து சேரும்.  அன்று மாலை அவன் குடும்பத்தினரிடம் அவரவர் பங்கைக் கொடுத்து விட்டு அவர்களுடன் கணக்கை முடித்து கொண்டு அவன் நிம்மதியை மீட்டு எடுக்க முடிவு எடுத்தான்.  நாளையிலிருந்து அவன் வீட்டை பேக் செய்ய வேண்டும், புதுக் கடையின் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும், அவினாஷ் ஊருக்குப் புறப்படுமுன், கல்யாணம் முடிந்த சில நாள்களில் அந்தக் கடையைக் கௌரியின் பெயரில் பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டான்.  
அவன் திட்டமிட்டிருந்த படி வேலைகளை முடித்துக் கொண்டு அன்று இரவு சிவா வீடு திரும்பிய போது, மகிழ்ச்சி பொங்க அவர்களின் புதுத் துணியை அவனிடம் காண்பித்தனர் தீபாவும் சூர்யாவும். கல்யாணத்திற்காக இருவருக்கும் பட்டுப் பாவாடை.  ரிசெப்ஷனில் அணிய கண்ணாடி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த காக்ரா சோலி. சாவித்திரி அம்மாவும் சந்தோஷத்துடன் அவர் வாங்கிக் கொண்ட புடவையை அவனிடம் காண்பித்தார்.  அப்போது, அவன் கொடுத்த பணத்தில் அளுக்காக கௌரி என்ன வாங்கிக் கொண்டிருப்பாள் என்று ஆர்வமானான் சிவா.  அதனோடு என்ன வாங்கிக் கொண்டாள் என்ற தகவலை அவளாக அவனோடு பகிர்ந்து கொள்ளவில்லை என்ற ஏமாற்றமும் எழுந்தது.  இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் அன்றைக்கு எப்படியும் தெரிய தான் போகிறது என்று அவனைச் சமாதானம் செய்து கொண்டான் சிவா.
அதே நேரத்தில் சிவாவைப் போலவே சிந்தித்துக் கொண்டிருந்தாள் கௌரி.  அவள் என்ன வாங்கிக் கொண்டாளென்று சிவா ஏன் விசாரிக்கவில்லை? அவனுக்கு ஆர்வமில்லையா? என்று அவன் மீது கோபம் கொண்டாள்.  அதன் விளைவாக அவள் என்ன வாங்கிக் கொண்டாளென்று அவளாக வெளியிடக் கூடாது, அவனாக கேட்டால் தான் சொல்ல வேண்டுமென்று உறுதிப் பூண்டாள். 
சிவா கேட்க வேண்டுமென்று காத்திருந்தாள் கௌரி.  கௌரி சொல்ல வேண்டுமென்று காத்திருந்தான் சிவா.  அவள் வாங்கிக் கொண்ட பொருளின் மதிப்பு முப்பதாயிரம் ரூபாய் என்று கரெக்ட்டாக கணித்தவனுக்கு, கல்யாணததன்றும் அதன் பின்னும் அந்தப்  பொருள் அவன் கண்ணெதிரே இருந்தும்  அது என்னயென்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.  கடைசியில் தோல்வியை ஒப்புக் கொண்டு, அதைத் தெரிந்து கொள்ள அவன் ஆவல் காட்டிய போது, அதே பொருளை அபராதமாக வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று கண்டிஷன் போட்டாள் கௌரி.
*****************************************************************************************
கதையைப் பற்றி : குண்டலினி பயணத்திற்கு மூன்று நிலைகள் தான் பாக்கி இருக்கு. அந்த மூன்றும் முக்கியமான நிலைகள்.  விசுத்தி காலியா இருக்கறதுனாலே miscommunication, communication gap ஆகுது.  அது கல்யாணத்திற்குப் பிறகும் தொடர்கிறதுண்ணு ஏற்கனவே ஒரு பதிவுலே சொல்லிட்டேன். அடுத்த கட்டத்திற்கு போகறத்துக்கு முன்னாடி கௌரி, சிவாவோட மனசை முடிஞ்ச அளவு எழுத்திலே கொண்டு வர முயற்சி செய்யறேன்.  அதான் பெரிய கதையாப் போகுது.  சின்னதா எழுதினால் கதையும், கதை மாந்தர்களும் சிதைஞ்சிடுவாங்கண்ணு தோணுது.  
நிஜத்திலே, நிறைய குடும்பங்களில் முதல் மனைவியோட சிரார்த காரியங்களில் கணவரோடு, இரண்டாம் மனைவியும் பங்கேற்கறாங்க. சில குடும்பங்களில் இரண்டாம் திருமணம் ஆன பின்னும் தனியா அந்தக் கடமையைச் செய்யற கணவர்கள் இருக்காங்க.  அது போன்ற நிஜங்களை இந்தக் கதை மூலம் சொல்ல விரும்பறேன்.  உடனே காயத் ரியை மறந்து கௌரியோட சிவா பொருந்திக்கற மாதிரி கொண்டு போய் கதையை முடிக்க முடியாது.  காயத் ரி  கரெக்டர் எதிர்பாராதவிதமா இறந்து போனவங்க.. கெட்டவங்க இல்லை.  I cannot suddenly sully that character. Siva has to reconcile with those memories and move forward. அது இந்தப் பதிவிலே ஆரம்பமாகுது.
Thanks for the support..stay blessed.

Advertisement