Advertisement

அத்தியாயம் – 23
அந்தப் பெட்டியுடன் வீட்டினுள் சென்ற கௌரியைப் பின் தொடர்ந்தான் சிவா.  பெருக்கித் துடைத்து சுத்தமாக இருந்தது வரவேற்பறை. வரவேற்பறையின் சுவரையொட்டி அந்தப் பெட்டியை வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள் கௌரி. 
வெகு நாள்களுக்குப் பின் சிவாவுடன் இந்தத் தனிமைச் சந்திப்பு என்று எண்ணியபடி சமையலறைக்குள் சென்றவள், முகம், கழுத்து, அவள் உடுத்தியிருந்த குர்த்தி ஈரமாவதைப் பொருட்படுத்தாமல் தண்ணீர்ப் பாட்டில்லை அப்படியே வாயில் சரித்துக் கொண்டாள். வரவேற்பறையில் வைத்த பெட்டியின் பாரம் தலையில் ஏறி இருந்தது.  இப்போது இந்த ஒரேயொரு பெட்டி மட்டும் தான், ஒரு வாரத்திற்குப் பின் புது வீட்டில் அவனுடன் வாழ ஆரம்பித்த பிறகு எத்தனை பொருள்களில் எத்தனை முறை காயத்ரியை சந்திக்கப் போகிறோமென்று மனத்தில் எழுந்த கேள்விக்குப் பதில் இன்னொரு கேள்வியானது.  இது போன்ற சூழ் நிலைகளை எதிர்கொள்ள தான் விதவையை, விவாகரத்தான பெண்ணை மணமுடிக்க எண்ணினானோ? அப்போது அவர்கள் இருவரும் சங்கடப்படாமல் அவரவர் முதல் கல்யாணப் பயணப் பொதிகளைக் கையாள்வது என்று கலந்து பேசி ஒரு முடிவிற்கு வந்திருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றிய நொடியில்,”கௌரி” என்று விளித்தான் சிவா.
“வரேன்.” என்று குரல் கொடுத்தவிட்டு அவளைச் சமன் படுத்திக் கொண்டு சமையலறையிலிருந்து வெளியே சென்றாள் கௌரி. அவள் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை சிவாவிடம் நீட்டியவுடன்  அதை மறுக்காமல் வாங்கிக் குடிக்க ஆரம்பித்தான்.
தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த சிவாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கௌரி. முதல் முறை பார்த்தப் போது எப்படி இருந்தானோ அதே போல் தான் இன்றும் இருந்தான். ஒரு வாரத்தில் கல்யாணம், இவன் தான் மாப்பிள்ளை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். போன வாரம் சிவாவின் தோற்றத்தைப் பற்றி அவினாஷிடம் பேச முயன்றார் மேகலா. அதற்கு,”அம்மா, அவர் என்கிட்டே நல்லாப் பேசறார், பழகறார்..அதுக்காக முடி வெட்டிக்கோங்க, தாடியை எடுங்க, மீசையை ட் ரிம் செய்யுங்கண்ணு சொல்ல முடியுமா?..தப்பா எடுத்துக்கிட்டா என்ன செய்யறது?கல்யாணம் நெருங்கி வந்திடுச்சுண்ணு அவராச் செய்யணும்..இல்லை இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் கௌரி தான் அவருக்குச் சொல்லணும்.” என்ற அவினாஷின் விளக்கம் இப்போது கௌரியின் நினைவிற்கு வந்தது. சில விஷயங்களை அவள் தான் சிவாவிற்குப் புரிய வைக்க வேண்டுமென்ற அவினாஷின் கூற்று அவளுள் சுனாமியை ஏற்படுத்தியது.
அவர்கள் இருவரும் திருமணப் பந்தத்தில் இணைய முடிவெடுத்த பின், இதுவரை,  நீ, நான், உனக்கு, எனக்கு என்று அவர்களைப் பற்றி யோசிக்கவில்லை. அந்த மாதிரி ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை. அவர்களைப் பற்றி பேசிக் கொண்டதெல்லாம் தொடக்கத்தில் அவர்கள் இருவருக்கும் பொருந்தி வரப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டிருந்த போது தான்.  கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்த  பின் சிவாவைப் பற்றிய பேச்சு எல்லாம் புதுக் கடையைப் பற்றிய பேச்சாக இருந்ததால் அந்த நேரங்களில் அவர்களுடன் அவினாஷ் இருந்தான்.  அவளைப் பற்றிய பேச்செல்லாம் புது வீடு, குழந்தைகளைப் பற்றிய பேச்சாக இருந்ததால் அந்தப் பொழுதுகளில் மாலினி உடனிருந்தாள். நெருங்கிக் கொண்டிருந்த திருமணம் பற்றிய பேச்சுக்கள் வந்த போது அவள் குடும்பம் முழுவதும் அவர்களுடன் இருந்தது. 
அம்மா ஸ்தானத்தைக் குழந்தைகளுக்குப் புரிய வைத்தது மாலினி.  மனைவி ஸ்தானத்தை மனைவி ஆகப் போகிறவளைத் தவிர யார் புரிய வைக்க முடியும்.  ஆனால் அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறாளென்று கௌரிக்குப் புரியவில்லை. அண்ணன், அங்கிள், நண்பன், சக ஊழியர் என்று பல ஸ்தானங்களில் ஆண்களுடன் நெருக்கம், நட்பு என்று பலவிதமான உறவு, பிணைப்பு இருந்தாலும், கணவன் என்ற ஸ்தானத்தில் ஆண் எப்படி நடந்து கொள்ளுவான், நடந்து கொள்ளக்க்கூடம் என்று எள்ளவும் அவளுக்கு ஐடியா இல்லை.  அப்பாவாக இருந்தவரை எடுத்துக் காட்டாக எடுத்துக் கொள்ள முடியாது, அதே போல் ராம கிருஷ்ணன் அங்கிளும் பெரும்பான்மையான கணவர்கள் போலில்லை.  அந்த வகையைச் சார்ந்தது தான் விட்டல், மாலினி, நித்யா, அவினாஷ் ஜோடிகளின் உறவு.  விரும்பித் திருமணம் செய்து கொண்டதால் அந்த ஜோடிகளுக்கு இடையே புரிதல் இருந்தது.  
பொதுவாக பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணங்களில் ஆண், பெண் இருவரும் தம்பதியராக ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிப்பதால் ஒருவருக்கொருவர் உதவி செய்து, தட்டு தடுமாறி  அந்தப் பயணத்தின் இலக்குகளை அடையும் போது ஒருவிதமான புரிதல் ஏற்பட்டு விடுகிறது.   ஏற்கனவே இந்தப் பயணத்தை மேற் கொண்டு சில இலக்குகளை அடைந்திருக்கிறான் சிவா. இந்த முறை,  பழகிய பாதையா? புதிய பாதையா? பழமையும், புதுமையும் கலந்த பாதையா?  பழக்கப்பட்ட அதே இலக்குகளா? இல்லை புது மனைவியுடன் புது இலக்குகளாக? இதையெல்லாம் எப்போது? எப்படி நிர்ணயிப்பது? 
இன்று, இப்போது தான் முதல் முறையாக அவளைப் பற்றிய ஒரு முக்கியமான  விஷயத்தை  சிவாவுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.  அவனும் அவளுடன் அவனைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறான். அதனால் இந்தப் புள்ளியிலிருந்து இப்போதே அவர்களுக்கான தனிப் பாதையை அமைக்க வேண்டுமென்று முடிவெடுத்தாள் கௌரி,
“மாலினி அக்கா லிஸ்டிலே இது இல்லை.” என்றாள். அடுத்து, ஏன் இதை இங்கே கொண்டு வந்தாய்? என்று நேரடியாகக் கேட்டு, சரியான பாதையில் அவர்கள் உறவைக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் கேட்கவில்லை. அவளின் குண்டலினி திறனிற்கு விசுத்தி நிலை பற்றிய விவரமில்லாததன் விளைவு.
கௌரி அப்படிச் சொன்னவுடன்,“இது ஸ்டீல் அலமாரிலே இருந்தது..மற்றச் சாமனோட அனுப்ப முடியாது..நான் தனியா எடுத்திட்டுப் போகணும்னு நினைச்சேன்..கொஞ்ச நேரம் முன்னாடி மேகலா ஆன்ட்டி எனக்கு ஃபோன் செய்தாங்க..நாளைக்குத் தாலி வாங்க கடைக்குப் போகப் போறாங்க..டிசைன் வேணும்னு சொன்னாங்க..காயத்ரியோடது எல்லாம் இதிலே தான் இருக்கு..அதான் உன்கிட்டேயே கொடுத்திடலாம்னு இங்கே எடுத்திட்டு வந்தேன்…இப்போ ஆன் ட்டிகிட்டே கொண்டு போய்க் கொடுக்கணுமா?” என்று கேட்டவன்,’என்னோட அம்மா ஏன் இப்படி நடந்துக்கறாங்கண்ணு தெரியலை’ என்று ஒரு வரியை அத்தனை பெரிய விளக்கத்தோடு சேர்த்திருக்கலாம் ஆனால் சேர்க்கவில்லை. அவன் குண்டலினி சக்திக்குச் சற்று உயரத்தில் இருந்த விசுத்தி நிலையைப் பற்றிய தகவல் இல்லாததால் இதயத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்ததன் விளைவு.
நடுவர்களை அவர்கள் வாழ்க்கையில் கொண்டு வரும் பழக்கத்தை முடிவிற்குக் கொண்டு வர நினைத்த கௌரி,”திறங்க.” என்று அவனுக்கு ஆணையிட்டு, பிரச்சனையை தீர்க்க நேரடியாக களத்தில் இறங்கினாள்.  
“இப்போவா?”
“ம்ம்ம்”
“கடைலே முக்கியமான வேலை இருக்கு..நான் போகணும்..கொஞ்ச நேரத்திலே ஆளுங்க வந்திடுவாங்க அவங்களைக் காக்க வைக்க முடியாது.” என்று சொன்னவன் அவன் கடையை விற்க அட்வான்ஸ் வாங்கப் போகிறான் என்று விளக்கம் கொடுக்கவில்லை. சுத்தமாக இருந்த விசுத்தியால் வந்த வினை.
“இதைத் திறந்து உள்ளே என்ன இருக்குண்ணு பார்க்க வேணாமா? நீங்க சொன்னதெல்லாம் இருக்காண்ணு நீங்க என் பக்கத்திலே இருந்து சொல்லலைன்னா எனக்குப் எப்படி தெரியும்?” என்று கேட்டவள் அவனைச் சந்தேகித்தாளா? இல்லை அவள் மேல் சந்தேகம் வரக்கூடும் என்று நினைத்தாளா?  
விசுத்தி வஞ்சிக்கப்பட்டு இருந்ததால் அவளின் கேள்வி தெளிவாக இல்லை அவன் பதிலும் தெளிவாக இல்லை.  
“இரண்டு வருஷத்திற்கு முன்னாடி நான் தான் முடினேன்.” என்று பதில் கொடுத்தவன், ‘அவன் அம்மா, விஜி இருவரும் எத்தனை முயன்றும் இதுவரை அவர்களிடம் இந்தப் பெட்டியைப் பற்றி வாயே திறக்கவில்லை..வேறு யாரும் திறந்ததில்லை.’ என்ற முக்கியமான தகவலைக்  கொடுத்திருக்கலாம். கொடுக்கவில்லை.
“அப்போ யார் மூடினாங்களோ அவங்களே திறக்கறது தான் நல்லது.” என்று சீனியர் மேனேஜராக பேசினாள் கௌரி.
“சரிங்க மேடம்.” என்று அவள் வேலையாள் போல் பதில் சொன்னான் சிவா.
உடனே சிவாவை கௌரி முறைக்க சிவாவும் பதிலிற்கு முறைத்தான்.   அவன் பார்வையைப் பயமில்லாமல், பதற்றமில்லாமல் எதிர்க்கொண்டாள் கௌரி.  அதற்கு மேல் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அந்தப் பெட்டியின் நம்பர் லாக்கை விடுவித்துப் பெட்டியைத் திறந்தான் சிவா.
பெட்டியின் உள்ளே நாலைந்து பட்டுப் புடவைகளும் அரக்கு நிறத்தில் நூல் புடவையும் இருந்தது.  அதைத் தவிர இரண்டு பெரிய ஸ்டீல் டிஃபன் டப்பாக்கள்.  ஒவ்வொன்றாக திறந்தான் சிவா. அதனுள்ளே தங்க நகைகள். 
“நகைகளைத் தனித் தனியாத் தரையிலே வைங்க.” என்றாள் கௌரி.
உடனே டிஃபன் பாக்ஸிலிருந்த நகைகள் அனைத்தையும் தரையில் கொட்டி, தனித் தனியாக பிரித்து வைத்தான் சிவா.
“எல்லாத்தையும் தனித் தனியா ஃபோட்டோ எடுங்க.” என்றாள்.
“எதுக்கு?”
“அடுத்து பத்து, பதினெஞ்சு வருஷம் கழிச்சு இதைத்  திறக்கும் போது எல்லாம் அப்படியே இருக்காண்ணு செக்  செய்ய சௌகர்யமா இருக்கும்.”
கௌரி சொன்னது போல் அத்தனை நகைகளையும் தனியாக ஃபோட்டோ எடுத்தான் சிவா. அப்போது அவன் கையில் கிடைத்த தாலியை முகூர்த்தப் புடவையின் மீது வைத்து அவன் ஃபோனில் அதை ஃபோட்டோ பிடித்தவுடன்,”இந்த ஃபோட்டவை நானே மேகலா ஆன் ட்டிக்கு அனுப்பிடறேன்.” என்று அந்தப் புகைப்படத்தை  மட்டும் உடனே அனுப்பி வைத்தான்.
தரையில் இருந்த நகைகளை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கௌரி.  அதன் மதிப்பு கிட்டதட்ட இருபது லட்சத்திற்கு மேல் இருக்கும்.  அம்மா, அப்பா, அண்ணன், அத்தை, மாமா என்று உறவுகள் சந்தோஷ நிகழ்வுகளுக்கு ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்திருந்த நகைகள்.  எதையும் கையில் எடுத்துப் பார்க்காமல் சற்று தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கௌரியின் மனத்தில் லேசான வலி உண்டானது.  அவளிடம் இருக்கும் நகைகளெல்லாம் அவள் சம்பாதிக்க ஆரம்பித்த பின் நகைக் கடையில் சீட்டுக் கட்டி வாங்கியது. கல்லூரி வரை போலி நகைகளை மட்டும் அணிந்து பழகியிருந்தவளுக்கு, வேலையில் சேர்ந்த பின் தங்கத்திலான நகைகள் அணிய வேண்டுமென்ற கனவு ஏற்கனவே இருந்த கனவுகளோடு சேர்ந்து கொண்டது.  
இப்போது அவளிடம் இருக்கும் நகைகளைச் சேர்பத்தற்குப் பல வருடங்களானது.  அதற்குப் பின் சொந்த ஃபிளாட் வாங்க வேண்டுமென்று ரொக்கம் சேர்க்க ஆரம்பித்தாள். தரையில் கிடத்தப்பட்டிருந்த காயத் ரியின் நகைகளின் மதிப்பு அவளுள் பொறாமையைக் கிளப்பவில்லை, அதில் பொதிந்திருந்த அன்பு தான் அவளுள் பொறாமையைக் கிளப்பியது.  அந்த நகைகளின் மூலம் காயத்ரியின் குடும்பத்தினருக்கு அவள் மீதிருந்த அன்பு தெரிந்தது.  அதே சமயம் அவள் போன பின் அவளின் அடையாளமாக இருக்கும் குழந்தைகள் மீது அந்த அன்பைக் காட்டாமல் எப்படி அவர்கள் ஒரேடியாக ஒதுங்கிப் போனார்களென்று புதிராக இருந்தது.  
கௌரி அவள் யோசனையில் ஆழந்திருந்த போது அவன் கையில் ஒரு செயினை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.  அதைக் கையில் எடுத்தவுடனேயே அவனுடைய எண்ணங்கள் பத்து வருடங்கள் பின் நோக்கிச் சென்றது.  அவர்கள் குடும்பத்தில் பெண் வீட்டினர் தான் தாலி செய்வது வழக்கம்.  அதே போல் பிள்ளை வீட்டுச் சார்பாக மணப் பெண்ணிற்கு தங்கச் சங்கிலி போடுவது வழக்கம்.  அவன் கையில் இருந்தது காயத்ரிக்காக அவர்கள் வீட்டின் சார்பாக போடப்பட்ட சங்கிலி.  இந்த முறை கௌரிக்கு என்ன செய்வது என்ற பேச்சை யாருமே எடுக்கவில்லை. ஒருவேளை தற்போது அவனுக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான நிலையை மனத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பேச்சை எடுக்கவில்லையா? இல்லை அவன் அம்மா இதையும் மறந்து விட்டாரா? என்ற யோசனையுடன் நகைகளை டிஃபன் பாக்ஸில் போட்டு மூடினான் சிவா.
புடவைகள், நகைகள் இரண்டையும் பெட்டியினுள் வைத்து மூடியப் பின் உடனே கௌரிக்கு மெஸெஜ் செய்தான்.  அவள் கைப்பேசியின் ஓசையில் அதை திறந்தவுடன் அவனிடமிருந்து வந்த மெசெஜ்ஜைப் பார்த்து,”என்ன நம்பர் இது? என்று கேட்டவுடன், “நம்பர் லாக்கை ஓபன் செய்ய.” என்று சொன்னவன், அது அவனுடைய முதல் திருமண நாள் என்ற கூடுதல் விவரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம் ஆனால் பகிர்ந்து கொள்ளவில்லை.  தற்செயலா? திட்டமிட்ட செயலா?  ஊழ்வினையா? செய்வினையா? இல்லை விசுத்தி வினையா? 

Advertisement