Advertisement

சிவாவிற்கும் அவன் அம்மாவிற்கும் நடுவே நடந்து கொண்டிருந்த யுத்தத்திலிருந்து விலகியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது மகேஷிற்கு. திடீர் திடீரென்று விஜிக்கு இரத்தக் கொதிப்பு பிரச்சனை ஏற்பட்டதால் ஆஸ்பத்திரி, மருத்தவர் என்று மாறி மாறி அலைந்து கொண்டிருந்தான் மகேஷ்.  கல்யாணத்திற்குச் சில நாள்களுக்கு முன் விஜியை இரண்டு நாள்களுக்கு மருத்துவமனையில் கண்காணிக்க  வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது.  அதுவரை இது இரண்டாவது குழந்தை என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டிருந்த மகேஷிற்கு பயம் உண்டானது.  
சிவாவின் வாழ்க்கையில் நடந்த விபரீதம் அவனுக்கு நடக்கக்கூடாது என்று வெகு ஜாக்கிரதையாக மனைவியைப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தான். அதனால் வீட்டில் நடந்து கொண்டிருந்த சச்சரவிலிருந்து முடிந்த அளவு விஜியை ஒதுக்கி வைக்க அவள் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.   இளைய மருமகளின் உடல் நிலையைப் பற்றி கவலையோ கலவரமோ அடையாமல், சண்டை சச்சரவைக் குறைக்காமல்,’உனக்குப் பையன் வரப் போறான் அதான் இப்போவே அவன் அம்மாவை இப்படிப் படுத்தறான்.’ என்று விஜியின் மனத்தில் எதிர்பார்ப்பை விதைத்தார் ஜமுனா.  
கடையில் பங்கு வேண்டுமென்று சாந்தி கேட்ட தினத்திலிருந்து இரண்டு தம்பிகளும் சாந்தியைப் புறக்கணிக்க ஆரம்பித்து இருந்தனர். விஜிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட போது அவளை ஆஸ்பத்திரியில்  சந்திக்கச் சென்ற சாந்தியிடம் விஜி, மகேஷ் இருவரும் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவர்கள் இருவரின்  குணம் தெரிந்திருந்ததால் சாந்தியும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  ஆனால் சிவாவின் புறக்கணிப்பு அவளைப் பெரிதும் பாதித்து இருந்தது. அவன் கடையை அத்தனை சீக்கிரமாக அதுவும் அவன் கல்யாணத்திற்கு முன் அதை விற்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.  அதை அவள் கணவனுக்குப் புரிய வைக்க முயற்சி செய்து தோற்றுப் போயிருந்தாள்.  அவர்கள் வீட்டில் அவள் கணவனுடன் மட்டும் அதுவும் அவன் கடை சம்மந்தமாக தான் பேசிக் கொண்டிருந்தான் சிவா.  அவளுடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தியிருந்தான். அதனால் அவள் மனதிலிருப்பதைச் சிவாவிற்குத் தெரியப்படுத்த முடியவில்லை. 
இது போன்ற சூழ் நிலையில் சிவாவின் குடும்பத்தினர் அவன் மறுமணத்தில், புது வாழ்க்கையில் அக்கறை காட்டவில்லை. அதனால் சிவா, கௌரியுடன் ராம கிருஷ்ணன் குடும்பத்தினர் அனைத்துப் பொறுப்புக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அவளின் முதல் வருகைக்குப் பின் சிவாவை அவன் வீட்டில் சந்திக்கும் சந்தர்ப்பம் மாலினிக்கு அமையவில்லை. அவன் வீட்டுப் படுக்கையறையில் இருந்த ஸ்டீல் அலமாரியைத் தவிர்த்து மற்ற பொருள்களைச் சாவித்திரி அம்மாவின் உதவியோடு பட்டியலிட்டு அதைக் கௌரியின் வீட்டுச் சாமான்களோடு ஒப்பிட்டு புதிதாக ஒரு பட்டியல் தயார் செய்தாள்.  அதன்படி தேவையில்லாததை ஒதுக்கி, தேவையான சாமான்களை வாங்கிப் போட்டு புது வீட்டைக் குடித்தனத்திற்கு தயார் செய்தாள்.
சிவா, கௌரி இருவருடன் அலைந்து திரிந்து அவள் அப்பாவின் முன்னாள் மாணவர் ஒருவரின் சிபாரிசில் தீபா, சூர்யா இருவருக்கும் ஒரே பள்ளிக்கூடத்தில் இடம் ஏற்பாடு செய்தாள் மாலினி.  தீபாவிற்கு சீட் கிடைப்பதில் பிரச்சனை இருக்கவில்லை ஆனால் சூர்யாவிற்கு எழுதுவதில் பிரச்சனை இருந்ததால்  அவளை முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ள பள்ளிக்கூடம் தயக்கம் காட்டியது. அவள் வயதைக் கருத்தில் கொண்டு அவளை யு கே ஜிலேயே சேர்த்துவிடலாம் என்ற கௌரியின் முடிவிற்கு மாலினி ஒப்புக் கொள்ளவில்லை.  புதுப் பள்ளிக்கூடத்தில் பன்னிரெண்டாவது வரை இருந்ததால் வருங்காலத்தில் அவள் வயது பிரச்சனையாகாது என்று விளக்கம் கொடுத்து, சூர்யாவை எழுத வைப்பது கௌரியின் பொறுப்பு என்று கட்டளையிட்டு சூர்யாவை முதல் வகுப்பிலேயே சேர்த்தாள்.
ஒருபுறம் உடல் உபாதைகளுக்கு நடுவே கல்யாணத்திற்காக அனைத்தையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்த மேகலா, அவருக்கு உதவியாக ராமகிருஷ்ணன். இன்னொரு புறம் அவன் வேலையை, பயணத்தைத் தள்ளிப் போட்டுக் கல்யாண ஏற்பாட்டிற்காக அலைந்து கொண்டிருந்த அவினாஷ், பூனாவிற்கும் சென்னைக்கும் நடுவே அலைந்து கொண்டிருந்த மாலினி,  ஆபிஸ் வேலை, வீடு, குழந்தைகள் என்று மூன்றையும் சமாளித்துக் கொண்டிருந்த நித்யா. இவர்கள் அனைவரும் எத்தனை முயற்சி செய்தும் ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென்று நினைத்த கல்யாணம் இரண்டு மாதம் முடிய சில நாள்கள் இருந்த போது தான் நடைபெற்றது. 
அவன் அக்காவுடன் ஃபோனில் பேசுவதை, அவளை நேரில் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டிருந்ததால் அவனை அவர்கள் வீட்டிற்கு வந்து விடும்படி அவன் மாமா பலமுறை கட்டாயப்படுத்தியும் அதற்குச் சிவா ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியாக அவினாஷ் வீட்டில் நேரடியாக சந்தித்தப் போது அவனுடன் பேச சாந்தி எடுத்துக் கொண்ட முயற்சிகளை முறியடித்திருந்தான்.  அதனால் சாந்தியைத் தவிர்க்க கல்யாணத்திற்கு முன் மூன்று நாள்கள் மகேஷ் வீட்டில் அவன் பெற்றோருடன் தங்க முடிவு செய்தான். 
கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவள் வீட்டைக் காலி செய்து புது வீட்டிற்குச் சாமானை அனுப்பிய பின் மேகலா ஆன் ட்டி வீட்டிற்குப் போக முடிவு செய்திருந்தாள் கௌரி. கல்யாணம் முடிந்த பின் மேகலா ஆன் ட்டி வீட்டில் சில நாள்கள் இருந்துவிட்டு புது வீட்டிற்குப் போக திட்டமிட்டிருந்தனர்.  அதற்கு முக்கியக் காரணம் கல்யாணத்திற்குப் பின் அவினாஷும் மாலினியும் அடுத்தடுத்து ஊருக்குச் செல்லயிருந்தது தான்.
கல்யாணத்திற்கு ஒரு வாரம் போல் இருக்கையில் விட்டலும் குழந்தைகளும் சென்னைக்கு வந்தனர்.  வீட்டு உறுப்பினர்களுக்குக் கல்யாணத்திற்காக ஜவுளி எடுக்கத் திட்டமிட்ட போது கௌரிக்கும் அதே தினத்தில் எடுத்துவிட முடிவு செய்தனர். அந்தத் தகவலைச் சிவாவிற்குத் தெரியப்படுத்திய மேகலா,
“அரக்கு கலர்லே நூல் புடவைதான் முகூர்த்தப் புடவைன்னு நம்ம வீட்டுக்கு வந்த போது உங்கம்மா சொன்னங்க.. தாலி டிசைனை உங்ககிட்டே கொடுத்து அனுப்பறதாச் சொன்னங்க..ஒரே நாள்லே புடவை, தாலி இரண்டு வேலையையும் முடிச்சிடலாம்னு நினைக்கறேன்..தாலி வாங்கப் போகும் போது உங்க வீட்லேர்ந்து யாராவது வருவாங்களா? அவங்களே டிசைன் கொண்டு வந்திடுவாங்களா?” என்று கேட்டார்.
இந்த விஷயத்தைப் பற்றி ஏன் இதுவரை அவன் அம்மா சொல்லவில்லை என்று சிவா யோசித்த போது அவனுக்கு விடை கிடைக்கவில்லை.  ஆனாலும்,
“விஜிக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரிலே இருந்தா..அந்த டென்ஷன்லே மறந்து போயிருப்பாங்க..” என்று ஜமுனாவை விட்டுக் கொடுக்காமல் பேசிய சிவா, அதே சமயம் இந்த விஷயத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தால் புதுச் சண்டையை ஆரம்பிப்பார் என்று உணர்ந்து, வேறு விதமாக இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கத் தீர்மானித்து,”நீங்க கவலைப்படாதீங்க…நானே டிசைனை கௌரிகிட்டே கொடுத்திடறேன்.” என்றான்.
“அவளோட சாமானெல்லாம் இப்போ தான் புது வீட்டிற்கு அனுப்பிட்டேண்ணு எனக்கு ஃபோன் செய்தா.. அவினாஷும் மாலினியும் புது வீட்லே இருக்காங்க..இந்த வீட்டை களீன் செய்திட்டு இன்னைக்கு நைட் சுப்ரமணி ஸர் வீட்லே தங்கிட்டு நாளைக்கு இங்கே வந்திடுவா..நாளைக்கு டிசைனை எடுத்துக்கிட்டு நீங்க இங்கே வர்றீங்களா?” என்று கேட்டார் மேகலா.
“இல்லை..நான் இப்போவே அவ வீட்டுக்குப் போய் கொடுத்திடறேன்..நீங்க அவக்கிட்டே வாங்கிக்கோங்க.” என்றான் சிவா.
அவளுடைய வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த கௌரி சந்தோஷமாக இருந்தாள். சற்று முன் தான் அவளுக்குப் பதவி உயர்வு கிடைத்திருப்பதை கைப்பேசியில் அழைத்து உறுதிப்படுத்தியிருந்தார் அவள் மேல் அதிகாரி.   இந்த வேலையை முடித்து விட்டு சுப்ரமணி ஸர் வீட்டிற்குப் போன பின் இன்றிரவு அனைவருக்கும் இந்தச் சந்தோஷச் செய்தியைத் தெரிவிக்க வேண்டுமென்று எண்ணி கொண்டிருந்த போது அழைப்பு மணி வாசலுக்கு அழைத்தது.  சிசிடிவியை புது வீட்டில் பொருத்த ஏற்பாடாகியிருந்ததால் யாராக இருக்கும் என்று யோசித்தபடி கதவைத் திறந்தாள். வாசலில் சிவா. அவன் கையில் பெரிய சூட்கேஸ். அதைக் கவனிக்காமல்,
“எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிடுச்சு..இப்போதான் ஜி எம் ஃபோன் செய்தார்.” என்று சந்தோஷமாக அறிவித்தாள்.
அதற்கு,”ஓ..வாழ்த்துகள்.” என்று சிவா பதில் சொன்னவுடன் தான் அவன் கையிலிருந்த பெட்டியைக் கவனித்தாள்.
“என்ன பெட்டி இது? எதுக்கு இங்கே கொண்டு வந்திருக்கீங்க? இங்கேயிருந்து எல்லாச் சாமானும் புது வீட்டுக்குப் போயிடுச்சு.” என்றாள்.
“நாளைக்கு முகூர்த்தப் புடவையும் தாலியும் வாங்க மேகலா ஆன் ட்டி கடைக்குப் போக போறாங்க..காயத் ரியோட பட்டுப் புடவைகள்..நகைகள்..கல்யாணப் புடவை..தாலி.. எல்லாம் இது உள்ளே இருக்கு.” என்று கௌரியிடம் அந்தப் பெட்டியை நீட்டினான் சிவா.
அவன் நீட்டிய பெட்டியைப் பெற்றுக் கொண்டவளின் முகத்திலிருந்து சந்தோஷம் மறைந்து பேயறைந்தது போல் ஆனது.
அவளின் கனவு நிஜமான சந்தோஷத்தை சிவாவுடன் பகிர்ந்து கொண்டாள் கௌரி.  அவனின் நிஜத்துடன் அவன் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தில் கௌரியைப் பங்குதாரர் ஆக்கினான் சிவா.

Advertisement