Advertisement

அத்தியாயம் – 22
பல வருடங்களாக ஒரு பொருளை ஓர் இடத்தில் பார்த்துப் பழகிய கண்களுக்குத் திடீரென்று அதே இடத்தில் ஒரு புதுப் பொருளைப் பார்க்கும் போது ஆவல், ஆசை, பிரமை, பிடித்தமின்மை என்று பழைய பொருளுடன் இருந்த ஈடுபாட்டைப் பொறுத்து பலவிதமான உணர்ச்சிகள் எழும்.  திடீரென்று காயத்ரியின் இடத்தில் கௌரியைக் குழந்தைகள் ஏற்றுக் கொண்ட போது சிவாவும் அவன் குடும்பத்தினரும் அது போல் தான் உணர்ந்தனர். குழந்தைகளின் அம்மா என்ற விளிப்பு மரித்துப் போயிருந்த காயத்ரியின் நினைவுகளுக்கு புத்துயிர் அளித்தது.  அந்த அழைப்பு கௌரிக்கும் குழந்தைகளுக்கும் இடையே இடைவெளியை குறைத்த அதே நேரத்தில் சிவாவிற்கும் கௌரிக்கும் இடையே இடைவேலியை ஏற்படுத்தியது. 
அம்மா என்று தீபாவும் சூர்யாவும் அழைத்த அந்தத் தினம், அந்த நொடி அதுவரை கௌரியின் வாழ்க்கையில் அவள் முக்கியமாக கருதிய தினங்களை, பொழுதுகளைப் பின்னுக்குத் தள்ளியது. அதே அழைப்பு  அதுவரை சிவா பின்னுக்குத் தள்ளியிருந்த பல பொழுதுகளையும் தினங்களையும் முன்னுக்கு கொண்டு வந்து அவன் மனதை ஆட்டுவித்தது.  அவனின் அந்த மனப் போராட்டத்தை யாரிடமும் வெளிப்படுத்த முடியாமல் சில சமயங்களில் எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாமல் யாருக்கோ என்னவோ நடக்கிறது என்று சம்மந்தமில்லாதது போல் நடந்து கொண்டான் சிவா.  அதன் விளைவாக கணவன் மனைவி உறவில் சேரவிருந்த இருவருக்கும் கல்யாணத்திற்கு முன், நாள்கள் குழப்பமாக நகர்ந்தன.   
‘நீ யாரை வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொள்’ என்று சிவாவின் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிய ஜமுனாவிற்கு அவர் அங்கீகாரம் இல்லாமல் இத்தனை சீக்கிரம் அதுவும் கல்யாணத்திற்கு முன்பே கௌரியை அம்மாவாக ஏற்றுக் கொண்ட அவர் பேத்திகளின் மன மாற்றத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம் கௌரிக்கு அம்மா ஸ்தானம் கிடைத்த பின் தான் அவர் இழந்ததை அவர் உணர்ந்தார் . புது வீடு, புதுப் பள்ளிக்கூடம், புதுக் கடை என்று அடுத்தடுத்து சிவாவைப் பற்றிய தகவல்கள் அவர் மாப்பிள்ளை ராஜேந்திரன் மூலம் கேள்விப்பட்டவுடன் அவர் மகன் அவர்களிடமிருந்து விலகிப் போவதைக் கண்டு பதற்றமடைந்து தாய் ஸ்தானத்தைத் தக்க வைத்துக் கொள்ள தேவையில்லாததைப் பேச, செய்ய ஆரம்பித்தார்.  
உன் வாழ்க்கையில் என்னால் இவ்வளவு தான் செய்ய முடியுமென்று அவர் தான்  ஒதுங்கி இருக்க முடிவு செய்தார் எனபதை சௌகர்யமாக மறந்து போய் சிவா மீது கோபம் கொண்டார் ஜமுனா. அவர் ஒதுங்கியதை, அவனை ஒதுக்கியதைச் சுட்டிக் காட்டாமல்  அவர் கோபத்தில் நியாயமில்லை என்று எடுத்துரைத்து அவருக்குப் புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் அவரின் தவப்புதல்வன்.  அதை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜமுனா, சிவாவின் செயல்களுக்கு அவனைக் காரணமாக்காமல் வேறு யார் மீது பழிப் போடுவது என்று யோசித்து, கடைசியில் வழக்கம் போல் வீட்டிற்கு வரவிற்கும் புது வரவு மேல் வீண் வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.  அவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தப் போது இல்லை சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு அதை வெளிப்படுத்தவும் செய்தார். 
ஒரு மாலை நேரத்தில் கௌரியைச் சந்திக்க அவன் குடும்பத்தினரை அவினாஷ் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் சிவா.  அன்றைக்குப் பகல் பொழுதில் விஜிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவளும் அக்ஷ்யாவும் வீட்டிலேயே இருந்து கொண்டனர்.  அக்ஷ்யாவுடன் விளையாட  தீபாவையும் சூர்யாவையும் மகேஷ் வீட்டில் விட்டு விட்டு பெரியவர்கள் மட்டும் பெண்ணைப் பார்த்து, கல்யாணத்தைப் பேசி முடிக்க புறப்பட்டனர்.  அவினாஷ் வீட்டு விலாசத்தை முன்கூட்டியே விசாரித்துக் கொண்ட அவன் மாமா, அவன் அக்காவுடன் அவர்களுக்கு முன் அங்கே ஆஜராகியிருந்தார். 
சிவாவின் குடும்பத்தை அவினாஷின் வீட்டு வாசலில் வரவேற்றது சுப்ரமணி, திருமதி சுப்ரமணி.  சுப்ரமணி தான் இந்தக் கல்யாணத்திற்கு  மூலக்கர்த்தா என்பதால் அவர் முன்னிலையில் சிவாவின் குடும்பத்தினருடன் கல்யாணத்தைப் பேசி முடிவெடுக்க வேண்டுமென்று எண்ணினார் ராம கிருஷ்ணன்.  அதனால் சிவாவின் குடும்பம் வருவதற்கு முன் என்ன பேசுவது? எதைப் பேசுவது? என்று சுப்ரமணி, திருமதி சுப்ரமணியுடன் கலந்து ஆலோசித்தார்.
அவர்கள் அனைவரையும் மரியாதையுடன் நடத்தினாலும் ஏனோ ஜமுனாவிற்குக் கௌரியின் குடும்பத்திற்குத் தெரிந்தவர்கள் என்று சுப்ரமணி அறிமுகம் செய்து வைத்த ராம கிருஷ்ணன் குடும்பத்தினரைப் பிடிக்கவில்லை.  அதற்கு ஒரு காரணம் மேகலாவின் மாப்பிள்ளையும் மருமகளும் வேற்று மா நிலம், வேற்று மதம் என்ற தகவல். மற்றொரு காரணம் அதைப் பொருட்படுத்தாமல் அவர்களிடம் சிவா காட்டிய அன்னோன்யம். அதனால்  நான் வேறு மாதிரி என்ற நிரூபிக்க அவர் நடந்து கொண்ட விதத்தில் ஜமுனாவுடன் கல்யாணத்தைப் பற்றி பேச மேகலா எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வி அடைந்தது. 
கல்யாணத்தை எந்தக் கோவிலில் வைக்கலாம், எத்தனை பேரை அழைக்கலாம், ரிசெப்ஷனை எங்கே ஏற்பாடு செய்வது என்று அவர் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் “இரண்டாவது கல்யாணம் தானே” என்று விட்டேத்தியாகப் பேசினார் ஜமுனா.  அதைக் கேட்டு ஏற்கனவே சிவாவின் குடும்ப நபர்களோடு எப்படிப் பொருந்தப் போகிறோம் என்று ஐயம் கொண்டிருந்த கௌரியின் மனத்தில் ஐயம் அகன்று பொருந்தவே முடியாது என்று பதிந்து போனது. அதன்பின் ஜமுனாவை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் கௌரி. அவளின் அந்த அமைதியை அழுத்தமென்று எடுத்துக் கொண்டு கௌரி  மீது ஆத்திரம் அடைந்தார் ஜமுனா.  அவள் அம்மாவின் அநாகரீக பேச்சு சாந்திக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தியது. ஏன் இப்படி நடந்து கொள்ளுகிறார் என்று புரியாமல், ஜமுனாவை அடக்க வழிக் கிடைக்காமல், கௌரியுடன் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவளும் கௌரியைப் போல அமைதியாகிப் போனாள். அதனால் கௌரி, சாந்தி, ஜமுனா மூவரும் ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.
மூன்று பெண்களுக்கு நடுவே ஏற்பட்டிருந்த அடிநகர்வு அந்தக் குடும்பத்து ஆண்களைச் சென்றடையவில்லை. வரவேற்பறையின் மறுபுறத்தில் மகேஷும் ராஜேந்திரனும் அவினாஷைப் பற்றி தெரிந்து கொள்ள தனித் தனியாக விசாரணையில் இறங்கி இருந்தனர்.  சிவா, வெங்கடாசலத்துடன் பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர் ராம கிருஷ்ணனும் சுப்ரமணியும்.  
சிவாவின் குடும்ப நபர்களை டிஃபன் தட்டோடு ஒப்பிட்டுக் கொண்டிருந்தாள் நித்யா. இட்லிக்குத் தொட்டுக் கொள்ளும் காரப் பொடியாக ஜமுனாவை மனத்தில் உருவகப்படுத்திக் கொண்டாள். எந்த சூழ் நிலையிலும் எல்லா விதமான ஆள்களோடும் பொருந்திப் போகும் மாலினியும் அந்தச் சூழ் நிலையில் பொருந்திப் போக முடியாமல் தள்ளி நின்றாள்.  அவளால் கௌரிக்கும் ஜமுனாவிற்கும் நடுவே பிரச்சனை ஏற்படுவதை அவள் விரும்பவில்லை.  ஆனால் ஒவ்வொரு முறையும் இது இரண்டாவது கல்யாணம் தானே என்று ஜமுனா சொன்ன போது அவர் வாயை எப்படி நாசுக்காக அதே சமயம் அழுத்தமாக வலிக்கும்படி மூடுவது என்று யோசிக்கலானாள். அந்த யோசனை செயல்படுத்தினார் திருமதி சுப்ரமணி.
“சரி மேகலா அவங்க மகனுக்கு இது இரண்டாம் கல்யாணம்..நமக்கு இது கௌரியோட  முதல் கல்யாணம்..அதனாலே எல்லாம் நம்ம இஷ்டம் தான்…கல்யாணத்தை நம்ம கோவில்லேயே ஏற்பாடு செய்திடலாம்..ரிசெப்ஷன் இங்கே நம்ம வீட்டு மாடிலே வைச்சிடலாம்..முகூர்த்தச் சாப்பாடு கோவில் பக்கத்திலே இருக்கற ஹால்லே அரேன்ஜ் செய்திடறேன்..ரிசெப்ஷனுக்கு புஃபே டிஃபன் நீ ஏற்பாடு செய்திடு.” என்றார். உடனே,
”உங்க வழக்கம் என்ன? யார் தாலி செய்வாங்க? முகூர்த்தப் புடவை யார் எடுக்கணும்? என்று முக்கியமானக் கேள்விகளை ஜமுனாவிடம் கேட்டார் மேகலா.
அதுவரை அனைத்துக் கேள்விகளுக்கும் இரண்டாம் கல்யாணம் தானே என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று பெண்கள் அனைவரும் ஜமுனாவைப் பார்த்தனர்.   ”எத்தனை முறை கல்யாணம் செய்துகிட்டாலும் எங்களுதுலே பொண் வீட்லே தான் முகூர்த்தப் புடவை எடுக்கணும்.. தாலி செய்யணும்..முகூர்த்தத்திற்கு அரக்கு கலர்லே நூல் புடவை எடுத்திடுங்க..தாலி என்ன டிசைன்னு காகிதத்திலே வரைஞ்சு சிவாகிட்டே கொடுத்து அனுப்பறேன்.” என்று இந்த முறையும் இடக்காகப் பதில் கொடுத்தார். 
அவர் கழுத்தில் இருந்த தாலியை எடுத்துக் காட்டினால் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாமென்று எண்ணியிருந்த மாலினி ஏமாற்றமடைந்தாள்.  அந்த ஏமாற்றத்திற்கு ஆயுள்காலம் கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்பு வரை என்று எழுதியிருந்தது. அதுவரை தாலி என்ன டிசைன் என்ற தகவல் அவர்களுக்கு வந்த சேரவில்லை. 
சிவாவின் கல்யாணத்தைப் பற்றி அவனோடு பேசும் நிலையில் அவர்கள் வீட்டில் யார் மன நிலையும் இல்லை. அதற்குக் காரணம் அவன் எடுத்திருந்த புது முடிவுகள்.  அதை தெரிந்து கொண்ட தினத்திலிருந்து சிவாவுடன் புதுசு புதுசாக சண்டை வளர்க்க ஆரம்பித்திருந்தார் ஜமுனா.

Advertisement