Advertisement

அத்தியாயம் – 21
அம்மா என்றால் என்ன? பாசம் பொழியும் பாட்டியிடம் அம்மாவைப் பார்க்கும் பேரன்கள். கொஞ்சும் மழலையில் பேசும் பேத்தியிடம் அம்மாவைக் காணும் தாத்தாக்கள்.  அதட்டி உருட்டும் அக்காவிடம் அம்மாவைப் பார்க்கும் தம்பிகள். அன்பைக் காட்டும் தங்கையிடம் அன்னையைக் காணும் அண்ணன்கள். மலர்க் கண்களை விரித்து அப்பா என்று அழைக்கும் மகளிடம் தாயைப் பார்க்கும் தந்தைகள். தாரத்திடம் தாயின் சாயலைக் கண்டு சந்தோஷமடையும் கணவர்கள். உயிர் போகும் பசியில் துவளும் போது அன்னமிடும் கை அன்னையின் கையாகத் தெரிகிறது. உயிர் போகும் வலியில் துடிக்கும் போது ஆறுதல் அளிக்கும் அறிமுகமில்லாதவர்க் கூட அன்னையாகத் தெரிகிறார். 
இப்படிப் பல நேரங்களில், பல இடங்களில், பல ஸ்தானங்களில் தாயை உணர்ந்திருந்தாலும் மறுமணம் மூலம் தாய் ஸ்தானத்திற்கு வரும்  பெண்ணை மட்டும் சின்னம்மா, சித்தி என்று ஏன் வேறுபடுத்துக்கிறோம்? அந்த வேற்றுமையின் விளைவால் தான் பாசம் கூட பாதை தவறுகிறதோ? இயற்கையின் படைப்பில் பெண்ணாகப் பிறந்து இயற்கையாகவே தாய்மையை உணரும் தாய்மார்களால் ஏன் இந்தத் தவறைச் சரி செய்ய முடியவில்லை? ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?
மாலினியின் கடைசி கேள்வி சிவாவைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்தாலும் அவளை நேர்ப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.  அவன் பார்வையை மாலினியால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அவன் கண்களில் பொய்மை இல்லை அதே சமயம் அவன் எண்ணமும் என்னயென்று வெளிப்படவில்லை.
தீபா, சூர்யா இருவரையும் தத்துக் கொடுக்கிறேன் என்று சொன்ன அவனுக்கு இன்னொரு குழந்தைக்குத் தகப்பனாகும் தகுதி இருக்கிறதா? அதைத் தீர்மானிக்க வேண்டியது அந்தக் குழந்தையின் தாய் அல்லவோ. ஆகையால் கௌரி அம்மாவாக விரும்பினால் மட்டுமே அவன் அப்பாவாக வாய்ப்பு உண்டு என்று உணர்ந்த சிவா, மாலினியின் கடைசி கேள்விக்கு முதலில் பதில் கொடுத்தான். 
“இன்னொரு குழந்தைக்கு வாய்ப்பு இருக்கு..அந்த  விருப்பம் கௌரியோடதா இருக்கணும்னு நினைக்கறேன்.” என்று அவன் விருப்பத்தைப் புறம் தள்ளி அவன் வாய்ப்பை உறுதிப்படுத்திய சிவா அறிந்திருக்கவில்லை அந்தக் கணத்தில் கௌரியின் வாய்ப்பைப் பற்றி பேச அவன் அம்மாவிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறானென்று .  
அப்போது சிவாவின் பைக்கை வீட்டு வாசலில் பார்ர்த்து ‘அப்பா” என்று கத்தியபடி முதுகில் மாட்டியிருந்த புத்தகப் பையுடன் தட தடவென்று உள்ளே நுழைந்த சூர்யா, மாலினியைப் பார்த்ததும் ஒரு நொடி அமைதியாகி மறுகணம்,”அப்பா.” என்று அழைத்தபடி ஓடிப் போய் அவனைக் கட்டிக் கொண்டாள்.  அதற்குள் தீபாவும் சாவித்திரி அம்மாவும் வீட்டிற்குள் வந்தனர். மாலினியைப் பார்த்ததும் தீபாவும் சிறிது தடுமாறினாள்.  அதைக் கண்டு  கொண்ட மாலினி குழந்தைகள் இருவரையும் பார்த்துப் புன்னகை செய்தாள்.
உடனே,”உங்களைப் பார்க்க பூனாலேர்ந்து பெரியம்மா வந்திருக்காங்க.” என்று மாலினியை  முறையாக அறிமுகப்படுத்தி வைத்தான் சிவா. அதற்கு குழந்தைகள் இருவரும்,
“மாலினி ஆன்ட்டியா?.” என்று கேட்டனர்.
“நோ ஆன்ட்டி..இனிப் பெரியம்மான்னு தான் என்னைக் கூப்பிடணும்.” என்று அவர்களைத் திருத்தினாள்  மாலினி.  
அங்கே நடப்பவற்றை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த சாவித்திரி அம்மாவிடம்,
“நான் கல்யாணம் செய்துக்கப் போறேன் சாவித்திரி அம்மா..அவங்க பெயர் கௌரி..இவங்க கௌரியோட அக்கா மாலினி.” என்று மாலினியை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் சிவா.
அந்தத் தகவலைக் கேட்டு ஆச்சர்யமடைந்த சாவித்திரி அம்மா அதை மறைக்க முடியாமல், தடுமாற்றத்துடன்,”ரொ..ரொம்ப சந்தோஷம் தம்பி.” என்றார்.
அப்போது சிவாவின் ஃபோன் ஒலித்தது.  அழைப்பு அவன் மாமாவிடமிருந்து. 
“மாமா ஃபோன் செய்யறார்..என்ன விஷயம்னு தெரியலை..இப்போவே பேசிட்டா நல்லது.” என்று மாலினிக்குத் தெரிவித்தான் சிவா.  
அவன் மாமாவுடன் தனிமையில் பேச நினைக்கறான் என்று புரிந்து கொண்ட மாலினி அவனுக்குத் தனிமையைக் கொடுக்க எண்ணி,”ஸ்கூல் டிரெஸ்ஸை மாற்றிடலாமா?” என்று குழந்தைகளிடம் கேட்டாள். இருவரும் உற்சாகமாக ‘சரி”யென்று தலையசைத்தனர்.
சாவித்திரி அம்மா, குழந்தைகளுடன் படுக்கையறைக்குச் சென்றாள் மாலினி.
“சொல்லுங்க மாமா.” என்று ராஜேந்திரனின் அழைப்பை ஏற்றான் சிவா.
“கடைலே அவங்க எதிர்லே எதுவும் பேச வேணாம்னு நினைச்சேன்.” என்று பேச்சை ஆரம்பித்த ராஜேந்திரன் அறிந்திருக்கவில்லை தற்போது மாலினி சிவா வீட்டில் தான் இருக்கிறாளென்று.
“என்ன விஷயம் மாமா?”
“மாப்பிள்ளை..சொந்தமாக் கடையா? நல்லா யோசனை செய்திட்டேயா?..பின்பக்கமாப் பார்த்தாலும் எப்படியும் நாற்பது ஆகிடும்.”
“பரவாயில்லை..பாருங்க..எந்த ஏரியான்னு நான் இன்னும் முடிவெடுக்கலை..கொஞ்சம் அவகாசம் வேணும்.”
“இப்போ இருக்கற அதே ஏரியா..அக்கம் பக்கத்திலே.. எல்லாம் அந்த ரேட்லே தான் போகுது..ரேட்லே மாற்றம் வராது.”
“பணத்திற்காக அவகாசம் கேட்கலை..வேற சில விஷயங்கள் முடிவெடுக்கணும்.” என்று சொன்னவன் என்ன விஷயங்களென்று விளக்கவில்லை.
அவரும் என்ன விஷயங்கள் என்று கேட்காமல்,”பணத்துக்கு என்ன செய்யப் போற?” என்று கேட்டார்.
பணத்தின் பின்னணியைத் தெரிந்து கொள்ள தான் அவர் ஃபோன் செய்திருக்கிறார் என்று உணர்ந்த சிவா,”கடன் வாங்கப் போறேன்.” என்றான்.
“யார்கிட்டே?” என்று கேட்டு முழு விவரம் தெரிந்து கொள்ளாமல் அவனை அவர் விடப் போவதில்லை என்ற சிவாவின் சந்தேகத்தை நிரூபணம் செய்தார் ராஜேந்திரன்.
அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று சிவாவிற்குத் தெரியவில்லை.  கௌரியின் குடும்பத்தினர் அவனுக்கு உதவி செய்யப் போகிறார்களென்று சொல்ல விரும்பவில்லை. கௌரியின் பெயரில் கடை வாங்கும் போது அந்த விவரத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் இப்போது அதை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்தான்.  
“என்னை நம்பி யார் கடன் கொடுக்கத் தயாரா இருக்காங்களோ அவங்க எல்லார்கிட்டேயும் கடன் கேட்கப் போறேன்.”
“மாப்பிள்ளை..கொஞ்சமும் யோசிக்க மாட்டேங்கற..அகலக் கால் வைக்கற.. ஆழம் தெரியாம கீழே இறங்கற..மேலே வர முடியாது.”என்று எச்சரிக்கை செய்தார்.
“வாடகை கடை ஒத்து வராது மாமா..அது நிலையில்லாத இடம்…எப்போ நம்ம கால் கீழேயிருந்து கடை நழுவிப் போகும்ங்கற பயம் இருந்து கிட்டே இருக்கும்….வியாபாரம் சூடு பிடிச்ச பிறகு அந்த இடத்தைக் காலி செய்யணும்னா அத்தனை உழைப்பும் வீணாப் போயிடும்..அந்த மாதிரி நஷ்டத்தை என்னாலே தாங்கவே முடியாது..அதுக்குப் பதிலா ஓர் இடத்திலே வேலைக்குப் போகறது மேல்…மாசம் தவறாம சம்பளமாவது வரும்.”
“சரி..என்னவோ செய்..எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்..அப்போ இன்னைக்கு நம்ம கடையைப் பார்க்க வந்தவங்களுக்கு என்ன பதில் சொல்றது?”
“கொஞ்சம் அவகாசம் கேளுங்க.”
“அதுக்கும் அவகாசமா? எவ்வளவு நாள்?”
“என் கல்யாணம் வரை.”
“அது எப்போ மாப்பிள்ளை?”
“இன்னும் தேதி முடிவாகலை..ஒரு மாசம் இல்லை இரண்டு மாசம் ஆகும்.”
“பார்ட்டியை ரொம்ப நாள் வெயிட்டிங்லே வைக்க முடியாது..வேற இடத்திற்குப் போயிடுவாங்க.” என்று சிவாவை அப்பொழுதே முடிவெடுக்கத் தூண்டினார் ராஜேந்திரன்.
“அப்படிப் போகறவங்க போகட்டும்..இரண்டு மாசம் கழிச்சு யார் வர்றாங்களோ அவங்களுக்கு வித்திடலாம்.” என்று திடமாகப் பதில் கொடுத்து விட்டு அழைப்பைத் துண்டித்தான் சிவா.
சில நிமிடங்கள் கழித்து குழந்தைகள் இருவரும் வீட்டில் அணியும் உடைக்கு மாறி, முகத்தைக் கழுவிக் கொண்டு அவர்கள் சாப்பாடு தட்டுடன் ஹாலிற்கு வந்து அமர்ந்து கொண்டனர். சாவித்திரி அம்மா அவருடைய மதிய உணவை சமையலறையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தவுடன் மாலினியும் ஹாலிற்கு வந்தாள்.
தரையில் அமர்ந்து தீபாவும் சூர்யாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது,”சாவித்திரி அம்மா வீடு எங்கே இருக்கு?” என்று சிவாவிடம் விசாரித்தாள்.
“இங்கேயிருந்த் அரைமணி நேரம்..பஸ்லே வந்து போறாங்க..லேட்டாயிடுச்சுன்னா ஆட்டோலே அனுப்பிடுவேன்.”
“புது வீடு அவங்க வீட்லேர்ந்து அரை மணி நேரத் தூரத்திலே இருக்கணும்.” என்று புதுக் கண்டிஷன் போட்டாள் மாலினி.
அதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த சிவாவிடம்,”இப்போ குழந்தைங்களை அவங்க தான் பார்த்துக்கறாங்க..உங்க கல்யாணத்திற்குப் பிறகு வீட்டைச் சமாளிக்க, பிரச்சனை எதுவும் இல்லாம கௌரி வேலைக்குப் போக அவங்க உதவியும் ஒத்துழைப்பும் அவளுக்குத் தேவைப்படும்.” என்று விளக்கினாள்.
சாவித்திரி அம்மா பொறுமைசாலி இல்லை.  பதிலுக்குப் பதில் பேசுபவர் அதனால் ஏற்படும் பிணக்கை சிவாவே பலமுறை தீர்த்து வைத்திருக்கிறான். சில சமயங்களில் குழந்தைகளிடம் கூட அவர் கோபத்தை வெளிப்படுத்தி விடுவார்.  அதையெல்லாம் யோசித்து கொண்டிருந்த சிவாவின் மடியில் அமர்ந்து அவள் உணவைச் சாப்பிட ஆரம்பித்தாள் சூர்யா.  சில நிமிடங்கள் கழித்து,“எதுக்கும் இதைப் பற்றி கௌரிகிட்டே இப்போவே ஒரு வார்த்தை கேட்டிடுங்க.” என்றான்.
“இல்லை..இப்போ வேணாம்..வீட்டுக்குப் போனதும் அவகிட்டே பேசறேன்..உங்களைப் பார்க்க கடைக்கு வந்தது பற்றி யாருக்கும் தெரியாது…சுப்ரமணி ஸர்கிட்டே விலாசம் விசாரிச்சுக்கிட்டு வந்திட்டேன்..இன்னைக்கு நான் சென்னைக்கு வரப் போறேன்னு வீட்லே யாருக்கும் தகவல் சொல்லலை..காலைலே எல்லார்க்கும் ஒரே அதிர்ச்சி.” என்றாள் மாலினி.
அப்போது சூர்யாவின் தட்டு கவிழ்ந்து அதிலிருந்து கொஞ்சம் சாப்பாடு அவள் மேல், சிவாவின் மேல் விழுந்து அவர்கள் உடையை ஈரமாக்கி, கறை படிய ஆரம்பித்தது.  இப்படிச் சாதத்தைக் கொட்டியதால் எத்தனை முறை பாட்டியிடமும் சிவாவிடமும் அவள் அடி வாங்கியிருக்கிறாள் என்று நினைத்தவுடன் பயந்து போன சூர்யா அவள் அப்பாவை மருட்சியுடன் பார்த்தாள்.  சூர்யாவின் பயத்தைச் சிவா உணர்ந்த அதே நொடியில் அவன் மனத்தில் கௌரி வந்தாள். 
அதன் விளைவாக,”பரவாயில்லை..நீ சாப்பிட்டு முடிச்சதும் நாம இரண்டு பேரும் வேற டிரெஸ் மாத்திக்கலாம்.” என்று அமைதியாகச் சொல்லி விட்டு கௌரியின் ஆலோசனைப்படி மீதமிருந்த சாதத்தை அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான். சூர்யா சாப்பிட்டு முடித்தப் போது சிவாவும் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.  
அங்கு நடப்பதை அமைதியாக பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மாலினி.  சூர்யாவின் பயத்தைச் சிவா கையாண்ட விதம் அவனை மற்ற ஆண்களிலிருந்து மாறுபட்டவனாகக் காட்டியது. அடுத்து வந்த நிமிடங்களில் அப்பா, மகள்களுக்கு இடையூறு செய்யாமல் அவள் ஃபோனில் பிஸியனாவளுக்கு அவள் முதல் கேள்விக்கு விடை தெரியாமல் அந்த வீட்டை விட்டுப் போகும் எண்ணமில்லை. அதைப் புரிந்து கொண்ட சிவாவும் வீண் பேச்சில் ஈடுபடாமல் அமைதி காத்தான். 
குழந்தைகள் இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன் தீபாவை மாலினியுடன் இருக்கச் சொல்லி விட்டு சூர்யாவுடன் படுக்கையறைக்குச் சென்றான் சிவா.  சூர்யாவை ஈரத் துணியால் துடைத்து விட்டு, அவள் விரும்பிய உடையை அவளுக்கு அணிவித்து, அவனும் வேறு உடைக்கு மாறி அவர்கள் இருவரும் வரவேற்பறைக்குத் திரும்பிய போது தீபாவின் புத்தகப் பை திறந்திருந்தது.  தீபாவின் அருகில் அமர்ந்து அவளுடைய  புத்தகங்கள் சிலவற்றைப் புரட்டிக் கொண்டிருந்தாள் மாலினி.
சூர்யாவுடன் நாற்காலியில் அமர்ந்த சிவா அவன் ஃபோனிலிருந்து கௌரிக்கு வீடியோ அழைப்பு விடுத்தான். அவன் அழைப்பை கௌரி ஏற்பதற்குள் தீபாவையும் அவனருகே அழைத்துக் கொண்டான். அவன் அழைப்பை கௌரி ஏற்கவில்லை.  அதனால் சிறிது இடைவெளி விட்டு பலமுறை முயற்சி செய்தான்.  அவன் மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வதைப் புதிராகப் பார்த்துக் கொண்டிருந்த மாலினிக்கு அவன் கௌரியைத் தான் அழைக்கிறான் என்று புரிந்து கொள்ள சில நொடிகளானது.  ஒருவேளை சாவித்திரி அம்மாவைப் பற்றி பேசத்தான் அழைக்கிறானோ என்ற அவள் யோசனையைக் கலைத்தது குழந்தைகளுடனான அவனது பேச்சு.  
“இப்போ ஃபோன்லே கௌரி ஆன்ட்டி வருவாங்க..அவங்ககிட்டே நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்காங்கன்னு சொல்லுவீங்க.” என்று கேட்டான் சிவா.
கௌரியை ஆன்ட்டி என்று சிவா சொன்னவுடன் மாலினிக்கு என்ன டா இது? இவன் எங்கே போறான்? என்று சஞ்சலமானாள்.
“பெரிம்மா.” என்று கத்தினாள் சூர்யா. அவளைத் தொடர்ந்து,”மாலினி பெரியம்மா” என்றாள் தீபா.  குழந்தைகள் இருவரும் சற்றுமுன் கற்றுக் கொடுத்த பாடத்தை சரியாகப் பிடித்துக் கொண்டிருந்தனர்.  அதில் சந்தோஷமடைந்த சிவா,
“குட்..மாலினி ஆன்ட்டி பெரியம்மான்னா அப்போ கௌரி ஆன்ட்டி என்ன?” என்று கேட்டான். அவன் கேள்வி சூர்யாவிற்குப் புரியவில்லை.  சொல்லிக் கொடுத்தால் அப்படியே திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளை அவள் அதனால் பதில் தெரியவில்லை.  குழந்தையாக சில நேரம், பெரியவளாக சில நேரம் என்று மாறி மாறி உணரும் தீபாவிற்கு அந்தக் கேள்வியைப் புரிந்து கொள்ள சில நிமிடங்கள் ஆனது.  மேலும் சில நிமிடங்கள் ஆனது அதற்குச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க.  அந்தப் பதில் கிடைத்தவுடன் சிவாவை இறுக்கமாக அணைத்து அவன் காதில் அவள் பதிலைச் சொன்னாள்.  “கரெக்ட்’ என்று சொல்லி தீபாவின் கன்னத்தில் முத்தமிட்டான் சிவா.  
அப்போது கௌரியிடமிருந்து அழைப்பு வந்தது.  சிவாவை முந்திக் கொண்டு,”ஸாரி..உங்க வீடியோ அழைப்பை ஏற்க முடியலை..அந்த இடத்திலே நிறைய பேர் இருந்தாங்க..அதான் இப்போ ரெஸ்ட் ரூம் வந்திருக்கேன்..” என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தவளை இடைமறித்த தீபா,”அம்மா, நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்காங்கன்னு தெரியுமா? கண்டு” என்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கௌரியை அம்மா என்று அழைத்து, நம்ம வீடு என்று தீபா சொன்னவுடன் கௌரியின் காலடியில் பூமி நழுவியது.  அவளைச் சுதாரித்துக் கொள்ள முடியாமல் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.  
அதைப் பார்த்து அவள் பேச்சைப் பாதியில் நிறுத்திய தீபாவிடமிருந்து ஃபோனைப் பறித்த சூர்யா அவள் அக்காவைப் போல்,”அம்மா” என்று அழைத்து, “பெரிம்மா” என்று ஃபோனைக் கொண்டு போய் மாலினியிடம் கொடுத்தாள்.
அக்கா, தங்கை இருவரின் ‘அம்மா’ என்ற அழைப்பிற்குக் காரணம் சிவா வீட்டில் அமர்ந்திருந்த அவள் அக்கா தான் என்று புரிந்து கொண்டாள் அந்தத் தங்கை. 
“அக்கா.” என்று ஆரம்பித்த கௌரிக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.  எத்தனை கட்டுப்படுத்தியும் அழுகை நிற்கவில்லை.  உடனே,
“கௌரி..கண்ட்ரோல் யுவர்செல்ஃப்..குழந்தைங்க பயந்திடுவாங்க.” என்றாள் மாலினி.
ஆனால் கௌரியால் அவள் உணர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.  அதனால்,”நான் இப்போ வீட்டுக்குக் கிளம்பிக்கிட்டு இருக்கேன்..நாம அப்புறம் பேசலாம்.” என்று அழைப்பைத் துண்டித்தாள் மாலினி.
அவளுடைய முதல் கேள்விக்கு அவன் குழந்தைகள் மூலம் பதில் கொடுத்த சிவாவை நேராகப் பார்த்துக் கொண்டிருந்த மாலினியின் பார்வையில் மரியாதை இருந்தது.
இயற்கையின் படைப்பில் ஆணாகப் பிறந்து தன்னைத் தாயாக உணர்ந்த அந்தத் தாயுமானவன் அவன் வீட்டில் அத்தகைய தவறு நிகழ்வதைத் தடுத்து விட்டான்.

Advertisement