Advertisement

அத்தியாயம் – 20
“அப்போ உங்க வீட்லேர்ந்து கௌரி ஆபிஸ் ஒரு மணி நேரம்.” என்றாள் மாலினி. அதைக் கேட்டு சிவாவின் முகத்தில் வந்த உணர்வுகளைச் சரியாகப் படித்த மாலினிக்கு அவன் அந்தக் கோணத்தில்  யோசிக்கவே இல்லையென்று தெரிந்தது. 
“உங்களோட புதுக் கடை இந்த ஏரியாலே தான் இருக்கணும்னு சொல்றது சரி ஆனா உங்க வீடும் இங்கே தான் இருக்கணுங்கறது அவசியமில்லை.”  என்று வலியுறுத்தினாள்.
“குழந்தைங்களோட ஸ்கூல் பக்கத்திலே தான் வீடு இருக்கணும்..இரண்டு பேரும் சின்ன பசங்க..தினமும் நிறைய தூரம் பயணம் செய்ய முடியாது..களைப்பாயிடுவாங்க.”
“புது ஸ்கூலும் புது வீடும் பக்கத்து பக்கத்திலே இருக்கும்.”
“புது ஸ்கூலா? இப்போ யாரும் சேர்த்துக்க மாட்டாங்க..பாதி டர்ம் முடியப் போகுது.” என்று எதிர்ப்பு தெரிவித்தவனின் மனத்தில் அதற்குப் பணத்திற்கு எங்கே போவது என்ற கவலை முளைத்தது.
“ஸ்கூல் அட்மிஷன் என்னோட பொறுப்பு..புது வீடு எந்த ஏரியாவுலே இருக்கணும்னு சொல்லுங்க அங்கேயே ஸ்கூல் பார்த்திடறேன்..இரண்டுத்தையும் கல்யாணத்திற்கு முன்னே செய்து முடிக்கணும்..இப்போ கௌரி இருக்கற ஒரு பெட் ரூம் ஃபிளாட்டை வாடகைக்கு விடணும்..உங்களுக்கு மூணு பெட் ரூம் ஃபிளாட் தேடணும்.”
‘மூணு பெட் ரூமா?’ இப்போது அவன் குடியிருக்கும் வீட்டில் மொத்தமே மூன்று அறைகள் தான்.  அவனுடைய நிதி நிலைமையைப் பற்றித் தெரிந்து கொண்டு தான் மாலினி இப்படிப் பேசுகிறாளா? இப்படிப் பேசி அவனுக்கும் கௌரிக்கும் இருக்கும் இடைவெளியை, அவனுடைய இயலாமையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டி அவனைக் கௌரியின் வாழ்க்கையிலிருந்து விலக்கப் பார்க்கிறாளா?   
நேற்றிரவிற்குப் பின் கௌரியின் மனம் மாறிவிட்டதா? அவனை மணக்க எடுத்திருந்த முடிவை அவள் மாற்றிக் கொண்டு விட்டாளா? அதை அவனிடம் நேரடியாக தெரிவிக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றவில்லையா? அவனைச் சந்திக்க மாலினி வரப் போவதைப் பற்றி அதனால் தான் அவனுக்குத் தெரிவியப்படுத்தவில்லையா? என்று தறிக்கெட்டு ஓடிய மனதைக் கட்டுக்குள் கொண்டு வந்த சிவா ஒரு முடிவிற்கு வந்திருந்தான். அப்போது அவன் கைப்பேசி ஒலிக்க ஆரம்பித்தது.  அழைப்பு அவன் அக்காவிடமிருந்து.  இவளால் தான் பிரச்சனை என்று மனத்தில் வெறுப்பு ஏற்பட அந்த அழைப்பை நிராகரித்தான்.
திடீரென்று அமைதியான சிவாவை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலினி.  அவனின் கைப்பேசி ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்க ஒருவேளை அவன் மாமா தான் அக்காவின் ஃபோனிலிருந்து  அழைக்கிறாரோ என்று நினைத்து அந்த அழைப்பை ஏற்றான் சிவா. “ஹலோ” என்றவுடன் அந்தப் புறம் பேசுவது அவன் அக்கா என்று தெரிந்தவுடன்,”இப்போ என்னாலே உன்கிட்டே பேச முடியாது..வைச்சிடறேன்.” என்று சாந்தியின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தான். 
கௌரி அவள் முடிவை மாற்றிக் கொண்டு விட்டாளா? இல்லை அவன் திட்டத்தில் மாறுதல் செய்ய மாலினியை அனுப்பியிருக்கிறாளா? என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது கடையினுள் நுழைந்தார் ராஜேந்திரன்.  மாலினி அமர்ந்திருப்பதைப் பொருட்படுத்தாமல்,
“சிவா, காலைலே சொன்னேனே…இவங்க தான்.” என்று அவருக்கு பின்னால் நின்றிருந்த இருவரை அறிமுகம் செய்து வைத்தார். உடனே,
“நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.” என்று மாலினியிடம் தெரிவித்து விட்டு அடுத்த இருபது நிமிடங்கள் கடையைப் பார்க்க வந்தவர்களிடம் அக்குவேர் ஆணிவேராக அத்தனையும் பேசி முடித்தான் சிவா. அப்போது தான் மாலினி இருப்பை உணர்ந்தார் ராஜேந்திரன். அவள் அமர்ந்திருந்த தோரணையில் கடையின் கஸ்டமரில்லை என்று புரிந்து கொண்டார்.  சிவா கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண் இவள் தானா என்று சுவாரஸியத்துடன் மாலினி மீது பார்வையை பதித்தவரால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.  கல்யாணம் ஆன பெண்ணிற்கான எந்த அறிகுறியும் மாலினியிடம் இல்லை என்பது  அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.  மாலினி யாரென்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவர் அழைத்து வந்த பார்ட்டியை அனுப்பிவிட்டு மறுபடியும் கடைக்கு வந்த ராஜேந்திரன்,
“சிவா, ஏதோ பேசணும்னு சொன்னயே?” என்று ஆரம்பித்தார்.  அவர்கள் பேசப் போவது முக்கியமான விஷயமாக இருக்குமென்பதால் மாலினிக்கு அவன் விடைகொடுத்து அனுப்பியபின் அவனிடம் அவளைப் பற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டார் ராஜேந்திரன்.  அவர் அறிந்திருக்கவில்லை மாலினி பேச வந்தது அதைவிட முக்கியமான விஷயமென்பதால் அவளை அறிமுகப்படுத்தி விட்டு அவளெதிரிலேயே அவருடன் பேசி முடித்து அவருக்கு விடைகொடுக்கப் போகிறானென்று.
“மாமா, இவங்க மாலினி..கௌரியோட அக்கா..இவங்க என் அக்கா கணவர் ராஜேந்திரன்.” என்று இருவரையும் அறிமுகம் செய்து வைத்தான் சிவா.
கௌரி என்ற பெயரை கேட்டவுடன் மாலினி யாரென்று புரிந்து கொண்ட ராஜேந்திரன்,“வணக்கம் மா..என்ன கடைக்கு வந்திருக்கீங்க..நம்ம வீட்டுக்கு வந்திருக்கலாமே..சிவா வீட்டுப் பக்கத்திலே தான் இருக்கோம்.”
“முதல்லே கடையைப் பார்த்திடலாம்னு நினைச்சேன்.” என்றாள் மாலினி.
“அப்போ இன்னொரு நாள் சாவகாசமா நம்ம வீட்டுக்கு வாங்க.” என்று அழைப்பு விடுத்த கையோடு,”சிவா, பார்ட்டி வெயிட் செய்துகிட்டு இருக்காங்க..என்ன பேசணும்..சொல்லு.’ என்றார்
“எனக்கு வேற கடை பார்த்துக் கொடுங்க..கமிஷன் கொடுத்திடறேன்.” என்றான் சிவா.
கமிஷன் கொடுக்கிறேன் என்று சிவா சொன்னது பிடித்திருந்தாலும் அதை மாலினியின் முன்னால் சொன்னது பிடிக்காமல் போனதால், 
“என்ன சிவா இப்படிச் சொல்லிட்ட..உன்கிட்டேயிருந்து கமிஷன் எடுத்துக்க முடியுமா..நீ வெளி ஆளா என்ன? என்று மறுத்தார்.
“இல்லை..கமிஷன் எடுத்துக்கிட்டுக் கடை பிடிச்சுக் கொடுங்க..வியாபாரம் வேற.. உறவு வேற.” என்று அவன் பாடம் கற்றுக் கொண்டு விட்டானென்று அவருக்குத் தெரியப்படுத்தினான்.
“சரி..கடை படிஞ்ச பிறகு நாம அதைப் பற்றி பேசிக்கலாம்..புதுக் கடை எந்த எரியா?” என்று சற்று முன் மாலினி கேட்ட அதே கேள்வியைக் கேட்டார் ராஜேந்திரன்.
“இதே ஏரியாவிலே தான் பார்க்கணும்.”
“எத்தனை வாடகைலே?”
அந்தக் கேள்விக்குச் சிவாவிடம் பதிலில்லை. ஆனால் மாலினியிடம் இருந்தது.
“அண்ணா, விலைக்குப் பாருங்க..இதே போல இல்லாம கொஞ்சம் பெரிசா.” என்றாள்.
அதைக் கேட்டு அதுவரை அவன் மனத்தில் கௌரியின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதோ என்று சஞ்சலமடைந்து இருந்தவன் ஆசுவாசமடைந்து,”ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பின்பக்கம் பாருங்க..என் வேலைக்குச் சௌகர்யமா இருக்கும்..விலையும் கம்மியா இருக்கும்.”
“மாப்பிள்ளை..பின்புறம் கடை இருந்தா வியாபாரம் பிக் அப் ஆகாது.” 
“இது துணிக்கடை இல்லை..தினமும் தினுசு தினுசா வெளிலே தொங்கவிட்டு விளம்பரம் செய்யறத்துக்கு..முதல் இரண்டு மாசம் பிட் நோட்டீஸ் அடிச்சு விளம்பரப்படுத்தினா போதும்.. புதுக் கஸ்டமர்ஸ் தானா வருவாங்க..நான் எங்கே கடை மாற்றினாலும் பழைய கஸ்டமர்ஸ் விசாரிச்சுக்கிட்டு வந்திடுவாங்க..…இந்தக் கடையை விக்கறத்துக்கு முன்னாடி புது இடம் கிடைச்சிட்டா நல்லா இருக்கும்..அப்போதான் இங்கேயிருந்து நேரா அந்தக் கடைலே வியாபாரத்தைத் தேக்கமில்லாம தொடர முடியும்.அதனாலே நீங்க இடம் தேட ஆரம்பிங்க.” என்று ராஜேந்திரனுக்குக் கட்டளை போட்டு விட்டு விடைகொடுத்தான் சிவா. 
ராஜேந்திரன் கிளம்பிச் சென்றவுடன் இரண்டு டிசைனர்களும் மதிய உணவை முடித்துக் கொண்டு திரும்பி இருந்தனர்.  உடனே,”உங்க வீட்டுக்குப் போகலாம்.” என்று சிவாவிடம் சொல்லிவிட்டு அவள் கைப்பையுடன் புறப்பட்டாள் மாலினி.
“டேய்..கடையைப் பார்த்துக்கோங்க டா..நான் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்.’ என்று தெரிவித்து விட்டு அவன் பைக்கில் சிவா புறப்பட்டவுடன் அவனைப் பின் தொடர்ந்தாள் மாலினி.
இருபது நிமிடங்கள் கழித்து மெயின் ரோட்டிலிருந்து பிரிந்த, சற்று அகலம் குறைந்த தெருவில், எதிரும் புதிருமாக, அடுத்தடுத்து நெருக்கமாக வீடுகள் இருந்த ஏரியாவை அடைந்தனர்.  அந்தத் தெருக்கோடியில், கடைசி வீட்டு வாசலின் முன்னால் அவன் பைக்கை நிறுத்தினான் சிவா.  எப்போதும் போல் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார் சாவித்திரி அம்மா.  காலையில் அவன் அம்மா, அப்பாவை அனுப்பி வைத்து விட்டு, வேலையெல்லாம் முடித்து விட்டு சிறிது ஓய்வாக அமர்ந்திருந்தவர் அந்த நேரத்தில் சிவாவை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வரும் பழக்கம் அவனுக்கு இருந்ததால் அவன் வரவைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.  சிவாவைத் தொடர்ந்து மாலினியும் வீடு வந்து சேர்ந்தவுடன், யார் இது? என்று யோசனையானார்.
வீட்டினுள் நுழைந்தவுடன் அவனைப் பின் தொடர்ந்து வந்த சாவித்திரி அம்மாவிடம்,”குடிக்க தண்ணீர் கொண்டு வாங்க…அப்படியே நீங்க போய் குழந்தைங்களை அழைச்சுக்கிட்டு வந்திடுங்க.” என்றான்.
அவர் தண்ணீர் கொண்டு வந்த போது நாற்காலியில் அமர்ந்திருந்தாள் மாலினி.  அவர்கள் இருவருக்கும் தண்ணீர் கொடுத்து விட்டு தீபாவையும் சூர்யாவையும் அழைத்து வரச் சென்றார் சாவித்திரி அம்மா.
சிவாவின் வீட்டைப் பார்வையால் அளந்தபடி“குழந்தைங்க ஸ்கூல்லேர்ந்து வர்ற நேரமா?” என்று விசாரித்தாள் மாலினி.
“ஆமாம்..மெயின் ரோட்டிலேர்ந்து அழைச்சுக்கிட்டு வரணும்.”
“இங்கேயிருந்து எந்தச் சாமான் எடுத்திட்டுப் போகணும்னு லிஸ்ட் போடுங்க..கௌரியையும் லிஸ்ட் போடச் சொல்றேன்..அப்போதான் எது இல்லை..எது தேவைன்னு ஒரு முடிவுக்கு வந்து கல்யாணத்திற்கு முன்னாடி புது வீட்டை செட்டில் செய்ய முடியும்.” என்று அடுத்து திட்டமிட்டாள் மாலினி.
அந்த எண்ணத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்,
“இந்த வீட்லே தான் ரொம்ப வருஷமா இருக்கேன்..இங்கே எல்லாம் பக்கத்திலே..சௌகர்யமா இருக்கு.” என்று அவன் அபிப்பிராயத்தை வெளியிட்டான் சிவா.
“நீங்க புது வாழ்க்கை ஆரம்பிக்கணும்னு நினைக்கறீங்களா? இல்லை உங்க பழைய வாழ்க்கைலே கௌரி பொருந்திப் போகணும்னு எதிர்பார்க்கறீங்களா?” என்று கேட்டாள் மாலினி.
அந்தக் கேள்வி அவனைக் காயப்படுத்தியதால்,”என் பழைய வாழ்க்கைக்கு ஆதாரம் என் குழந்தைங்க..அவங்களுக்காக தான் இன்னொரு கல்யாணம்..புது வாழ்க்கை..இந்த வீட்டைப் போல அவங்களுக்கும் ஏதாவது புது ஏற்பாடு வைச்சிருக்கீங்களா?” என்று மாலினியின் நோக்கத்தைச் சந்தேகப்பட்டான் சிவா.
“சிவா, உங்க குழந்தைங்களுக்குப் புதுப் பள்ளிக்கூடம்னு சொன்னேனே தவிர உங்ககிட்டேயிருந்து பிரிக்கப் போறேண்ணு சொல்லலை..அப்படி ஏதாவது எண்ணமிருந்திருந்தா உங்களைத் தேடி நான் இங்கே வந்திருக்க மாட்டேன்..கௌரியை பூனாக்கு வரச் சொல்லி இருப்பேன்..
இந்தக் கல்யாணத்தைப் பற்றி நீங்களும் கௌரியும் எவ்வளவு ஆழமா யோசிச்சு இருக்கீங்கண்ணு எனக்குத் தெரியாது..ஆனா நான் யோசனை செய்யறேன்..நேத்து காலைலே உங்களை முதன் முதலா வீடியோலே பார்த்ததிலேர்ந்து இந்த நொடிவரை யோசனை செய்துகிட்டு இருக்கேன்..
உங்க கல்யாணத்திற்கு முன்னாடி எனக்குச் சில விஷயங்கள் பேச வேண்டியிருக்கு..கௌரி யோசிக்காதது..அவினாஷ் பேசாதது..அம்மாவும் அப்பாவும் கேட்க முடியாதது….அதைக் கேட்கணும், பேசணும்னு தான் இன்னைக்கு உங்களைச் சந்திக்க வந்தேன்..
உங்களோட, கௌரியோட சஞ்சலமும் சந்தேகமும் கல்யாணம் முடிஞ்சவுடனே காணாமப் போயிடாது..நீங்க மறக்கணும், மாறணும் நினைக்கற போது உங்க குடும்பமும் உங்களுக்குத் தெரிஞ்சவங்களும் பழசை மறுபடியும் மறுபடியும் ஞாபகப்படுத்திக்கிட்டு இருப்பாங்க..அதையெல்லாம் தவிர்க்கணும்னா நீங்களும் கௌரியும் உங்களோட  புது வாழ்க்கையை புது இடத்திலே ஆரம்பிக்கணும்..அந்தப் புது இடம் கௌரிக்கும் குழந்தைங்களுக்கும் சௌகர்யமா இருக்கணும்..அதான் புது வீடு பார்க்கணும்னு சொல்றேன்..
கௌரி இப்போதைக்கு இந்தக் கம்பெனிலே தான் வேலை பார்க்கப் போறா..அவளுக்கு பதவி உயர்வு வரப் போகுது..அதனாலே அவ வேற கம்பெனிக்கு மாற முடியாது அதான் குழந்தைங்களை வேற ஸ்கூலுக்கு மாற்றிடலாம்னு நினைக்கறேன்..அந்த ஸ்கூல் பக்கத்திலே நல்ல வீடு பார்க்க வேண்டியது மட்டும் தான் நம்ம கடமை மற்ற செலவெல்லாம் கம்பெனி பார்த்துப்பாங்க.” என்று புது ஸ்கூல் புது வீடு பற்றிய அவன் பணக் கவலை, மனக் கவலையை உணர்ந்து அவனுக்குப் புரியும்படி விளக்கினாள் மாலினி.
சிவாவினால் மாலினி சொன்ன எதையும் மறுத்துப் பேச முடியவில்லை. அதனால், 
“புது ஸ்கூலும் புது வீடும் செட்டான பிறகு புதுக் கடையைப் பார்த்துக்கலாம்.” என்று வீட்டையும் பள்ளிக்கூடத்தையும் முன் நிறுத்தினான் சிவா.
“ஃபைன்..உங்களுக்குத் தான் அந்த ஏரியா பழக்கம்..எனக்கு லொகலிட்டி விவரம் அனுப்புங்க..அந்த  இடத்திலே ஸ்கூலும் வீடும் தேடறேன்.” என்றாள் மாலினி.
அதன் பின் இருவரும் சில நொடிகள் மௌனமாக இருக்க,”என்கிட்டே என்ன கேட்கணும்? என்ன பேசணும்? என்று கேட்டான் சிவா.
அவனைத் தீர்க்கமாகப் பார்த்த மாலினி,”ஏன் குழந்தை இருக்கற பெண்ணை இரண்டாம் தாரமா கல்யாணம் செய்துக்கணும்னு நினைச்சீங்க?” என்று கேட்டாள்.
இப்போது எதற்கு இந்தக் கேள்வி என்று புரியாமல்,” எனக்கும் அவங்களுக்கும் சில விஷயங்கள் ஒத்துப் போகும்னு நினைச்சேன்..அதனால் தான்.”
“எந்த விஷயங்கள்? தெளிவாச் சொல்லுங்க.” 
“அவங்க எதிர்பார்ப்பும் என்னோடதும் ஒரே போல இருக்கும்னு நினைச்சேன்.”
“எந்த எதிர்பார்ப்பு?” என்று மாலினி கேட்டவுடன், 
“என்ன கேட்க வரீங்கண்ணு புரியலை எனக்கு.”
“என் அப்பாவும் அம்மாவும் இப்போவும் நாங்க யாரையும் வித்தியாசமாப் பார்க்கக் கூடாது, வித்தியாசமா நடத்தக்கூடாதுண்ணு சொல்லிக்கிட்டு இருப்பாங்க..சில பேருக்கு அதை நடைமுறைலே செயல்படுத்தறது ரொம்ப கஷ்டமான விஷயம்..அவினாஷுக்கு இன்னும் அது சரியா வராது..சில சமயம் அவனோட ஒதுக்கம் வெளிப்படையாத் தெரியும்..
எனக்கும் கௌரிக்கும் அந்த விஷயத்திலே பிரச்சனை இருந்தது இல்லை..அதனால் தான் அவளோட அம்மா எனக்கு கல்யாணி அம்மா என்னோட அம்மா அவளுக்கும் அம்மா.. இனிக் கௌரி உங்களோட இரண்டு குழந்தைங்களுக்கும் அம்மா..நான் அவங்களோட பெரியம்மா..
தீபாவும் சூர்யாவும் கௌரியை அம்மாவா நினைக்கணும்னா அவளை வித்தியாசமாப் பார்க்கக் கூடாது..அவங்க இரண்டு பேருக்கும் சிந்திச்சு செயல்பட கூடிய வயசு இல்லை..சொல்லிக் கொடுத்தாக் கத்துக்கற, புரிஞ்சுக்கற வயசு…அதனாலே நாம தான் அவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும்.. அதை அவங்க செயல்படுத்தறாங்களான்னு கவனிச்சுக்கிட்டு இருக்கணும்….
உங்க குழந்தைங்களுக்கு அம்மா தேவைன்னு தான் கௌரியைக் கல்யாணம் செய்துக்கறீங்க..உங்க முதல் மனைவிக்கு மட்டும் உரிய இடம் அதுன்னு கௌரியைச் சித்தி ஆக்கிடாதீங்க..நம்ம சமூகத்திலே கணவனை இழந்த, குழந்தை இருக்கற பெண்ணைக் கல்யாணம் செய்துக்கற எந்த ஆணும் கல்யாணத்திற்குப் பிறகு சித்தப்பா ஆகறதில்லை.. 
அந்த மாதிரி கல்யாணங்கள் அதிகம் நடக்கறதில்லைங்கறதும் ஒரு காரணம்..அப்படி நடந்தாலும் அந்த ஆண் எப்போதும் அப்பா தான்.. அந்த நிலைக்கு வேற ஏதாவது பெயர் இருந்தாக்கூட அதை நாம யாரும் உபயோகிக்கிறதில்லை.. அதனாலே நீங்க நாலு பேரும் ஒரு குடும்பமா இருக்கணும்னா தீபாவும் சூர்யாவும் கௌரியை அம்மான்னு தான் அழைக்கணும்….உடனே அந்தப் பழக்கத்தை நாம ஆரம்பிக்கணும்.” அவள் சொல்ல வேண்டியதை ஒரே மூச்சில் சொல்லி விட்டு அமைதியானாள் மாலினி.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவாவிடம் எந்தச் சலனமுமில்லை. அதனால் சில நொடிகள் கழித்து,”இன்னொரு முக்கியமான கேள்வி இருக்கு. கேட்கட்டுமா?” என்று கேட்டுவிட்டு விட்டு சிவாவின் பதிலிற்காகக் காத்திருந்தாள் மாலினி.  இந்தக் கேள்வி அதிமுக்கியமான கேள்வி அதனால் அவன் பதில் சொல்லும் வரை பொறுமையாக இருந்தாள் மாலினி.
மாலினியின் பேச்சு சிவாவினுள் பூகம்பத்தை ஏற்படுத்தியிருந்தது.  அது வெளியில் தெரியாமல் அவனைச் சுதாரித்துக் கொண்டிருந்தவன் சில நிமிடங்கள் கழித்து,”கேளுங்க.” என்றான்.
“குழந்தையோட இருக்கற பெண்ணைக் கல்யாணம் செய்துக்க விரும்பியதற்குக் காரணம் இனி அப்பாவாக உங்களுக்கு விருப்பமில்லையா இல்லை வாய்ப்பில்லையா?” என்று அந்தரங்க விஷயத்தை அசால்ட்டாகக் கேட்டு விட்டு சங்கடம் எதுவுமில்லாமல் சிவாவை நேர் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் மாலினி.
  
  

Advertisement