Advertisement

அத்தியாயம் – 17
“ரியலி.” என்றாள் திரையில் தெரிந்த மாலினி.
அவினாஷும் நித்யாவும் சற்றுமுன் தான் கௌரியின் கல்யாண விஷயத்தை மாலினிக்குத் தெரியப்படுத்தியிருந்தனர். அதைக் கேட்டு அந்தப் புறம் திரையில் தெரிந்த நான்கு பேரில் மூன்று முகங்களில் சந்தோஷம்.  மாலினியின் முகத்தில் மட்டும் தீவிர சிந்தனை. 
சிவாவிற்கு அடுத்து தீபா அமர்ந்திருக்க அவளருகே அமர்ந்திருந்த கௌரியின் மடியில் இருந்த சூர்யாவை அவன் மடியில் அமர்த்திக் கொண்ட அவினாஷ், திரையில் தெரிந்த, ஒரே போல் உருவத்தில், ஒரே நிறத்தில் உடையணிந்திருந்த இரட்டையர்களைக் காட்டி, “யார் சுமித்? யார் வினித்? கரெக்ட்டா சொல்லு.” என்றான். அவள் பதில் சொல்வதற்கு முன், தீபா, சிதார்த் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு இது வினித், இது சுமித் என்று இருவரும் ஒரே போல் பதில் கொடுத்தனர். 
“ஒகே.. இப்போ சூர்யாவோட சான்ஸ்.” என்றாள் கௌரி.
சில நொடிகள் யோசித்த சூர்யா, “வத்தல் அங்கிள், மாலினி ஆன் ட்டி, வினித், சுமித்” என்று திரையில் தெரிந்த நால்வரையும் அடையாளம் காட்டினாள்.  அதைக் கேட்டு சிந்தனைவயப்பட்டிருந்த மாலினி முகத்தில் சிரிப்பு தோன்றியது.
உடனே மாலினியின் மகன்கள் இருவரும்”வத்தல் அங்கிளா என்று பலமாக சிரித்து விட்டு..சூர்யா தான் ரைட்.” என்று கத்தினர்.
அதற்குப் பின் பத்து நிமிடம் போல் நித்யாவுடன், அவினாஷுடன் அவர்களைப் பற்றிப் பேசிவிட்டு, கௌரியிடம் இரவு பேசுவதாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் மாலினி.
“அக்கா எந்த விவரமும் கேட்கலையே? ஏன் அண்ணா?” என்று அவினாஷைக் கவலையாக கௌரி கேட்டது சிவாவையும் கவலையில் ஆழ்த்தியது.  அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை மாலினி.
“உன்கிட்டே இராத்திரி பேசறேண்ணு சொல்லியிருக்கா..ஸோ டோண்ட் வரி.” என்று கௌரிக்குத் தைரியம் அளித்தவன்,”என் அப்பா, அம்மாகிட்டே பேசிட்டு உங்களுக்கு ஃபோன் செய்யறேன்..நீங்க உங்க அக்கா, மாமாவைக் அழைச்சுக்கிட்டு வாங்க…கல்யாணத்தைப் பேசி முடிச்சிடலாம்.” என்று சிவாவிற்குத் தெரிவித்தான்.
அதன்பின் அவினாஷ் புறப்பட்டவுடன் சிவாவும் கிளம்பிவிட்டான். குழந்தைகள் இருவரும் மாலைவரை கௌரியுடன் இருக்க அடம்பிடித்தனர்.  ஆனால் அது முடியவே முடியாதென்று அழுதுக் கொண்டிருந்த சூர்யாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான் சிவா.  அவன் அக்கா, மாமாவை அவன் வீட்டிற்கு அழைக்கப் போவதாக அவன் கடைக்குச் சென்றிருந்த போது தகவல் கொடுத்திருந்தார் ஜமுனா.  
நேற்று இரவு கௌரியைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அவரிடம் தெரிவித்த போது அவர் உடல் நிலையைக் காரணம் காட்டி அவன் திருமணத்தைப் பேசி முடிக்க அவரால் யார் வீட்டிற்கும் வர இயலாதென்று மறுத்துவிட்டார்.  அவருக்கு பதிலாக அவன் அக்காவையும் மாமாவையும் அழைத்துச் செல்லும்படி ஆலோசனை அளித்தார். அவன் அம்மாவைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை அதனால் அந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டான் சிவா.  இன்று கௌரியுடன் கலந்து ஆலோசித்தப் பின் இன்றே அவன் அக்காவிற்கும் மாமாவிற்கு அவன் கல்யாண விஷயத்தை நேரில் தெரியப்படுத்தலாமென்று முடிவுச் செய்திருந்தான்.  அதற்குள் அவன் அம்மாவே அவர்களை அவன் வீட்டிற்கு அழைத்து விட்டார்.
சிவா வீடு போய் சேரும் வரை தூங்கி வழிந்து கொண்டிருந்தாள் சூர்யா.  ஒரு கையால் அவளைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் பைக்கை நிதானமாக ஓட்டிக் கொண்டு வந்தான்.  வாசலில் அமர்ந்திருந்தார் சாவித்திரி அம்மா. சிவா பைக்கை நிறுத்தியவுடன் சூர்யாவை அப்படியே தூக்கிச் சென்றார். பைக்கிலிருந்து இறங்கிய தீபா,
“அப்பா, எனக்கும் தூக்கம் வருது.” என்றாள்.
“சரி..நீயும் போய்த் தூங்கு..சாவித்திரி அம்மாவை ஆறு மணி போல எழுப்பச் சொல்றேன்..நான் இப்போ கடைக்குப் போகணும்.” என்று வீட்டிற்குள் நுழைந்தவன் அடுத்த கட்டமாக கடைக்குப் போகத் தயாரானான்.
அப்போது மதிய உறக்கத்திலிருந்து விழித்த ஜமுனா,  
“எங்கே டா கிளம்பிட்ட?” என்று சிவாவைக் கேட்டார்.
“கடைக்குத் தான்.”
“மனோகரைப் பார்த்துக்கச் சொல்லு..இப்போ சாந்தியும் மாப்பிள்ளையும் வரப் போறாங்க..மகேஷும் பர்மிஷன் போட்டு வரான்..நேத்து நீ சொன்னதைப் பேசி முடிச்சிடலாம்.” என்றார்.
“இப்போவா?..இன்னைக்கு இராத்திரி கடையைப் பூட்டிட்டு அக்கா வீட்டுக்குப் போய் நானே விஷயத்தைச் சொல்லலாம்னு நினைச்சேன்..அதுக்குள்ளே அவங்களை இங்கே வரச் சொல்லியிருக்கீங்க..இப்போ மகேஷை வேற கூப்பிட்டிருக்கீங்க? எதுக்கு?” அப்பா எங்கே?”
“சாந்தியை அழைச்சிட்டு வரப் போயிருக்கார்..மாப்பிள்ளை சைட்லேர்ந்து நேரா இங்கே வந்திடுவார்..சாவித்திரியை எல்லார்க்கும் டிஃபன் செய்து வைக்கச் சொல்லு..நான் சொன்னா ஏதாவது காரணம் சொல்லித் தப்பிச்சுக்குவா.” 
இன்றைக்கு மா நாடு அவன் வீட்டில் என்று புரிந்து கொண்ட சிவா,
“அவங்களாலே ஆறு பேருக்குச் சமைக்க முடியாது..அவங்க கிளம்பிப் போகட்டும்..நான் வெளியே இருந்து வரவழைக்கறேன்.” என்றான்.
“இன்னைக்கு மதியம் எங்க இரண்டு பேருக்குத் தான் சமைச்சிருக்கா..சும்மா சம்பளம் வாங்கிட்டுப் போறா.” என்று வாய்க் கூசாமல் பேசினார் ஜமுனா.
படுக்கையறையிலிருந்து சாவித்திரி அம்மாவின் காதில் விழுந்தால் அவர் மனம் கஷ்டப்படும் என்று நினைத்து,”அம்மா, அவங்களும் வயசானவங்க..இன்னைக்குச் சீக்கிரமா வீட்டுக்குப் போகட்டும்..நம்ம எல்லார்க்கும் இராத்திரி சாப்பாடு வெளியே இருந்து வரவழைக்கறேன்.” என்றான் சிவா.
அதன் பின் அவன் அக்கா, அப்பா, மாமா, தம்பி என்று ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர்.  அனைவருக்கும் டீ போட்டுக் கொடுத்து விட்டுக் கிளம்பிச் சென்றார் சாவித்திரி.
சிவாவின் மாமா தான் பேச்சை ஆரம்பித்தார்.
“சிவா, கல்யாணம் எப்போ?” என்று கல்யாணம் பேச வேண்டியவரே அவனை விசாரித்தவுடன் அவன் விஷயத்தில் அவருக்கு இருந்த ஈடுபாட்டின் அளவைப் புரிந்து கொண்டான் சிவா.
“ஒரு மாசத்துக்குள்ளே வைக்கணும்.”
“தேதி குறிச்சிட்டேயா?”
“இன்னும் இல்லை.”
“எங்கே வைக்கப் போற.”
“கோவில்லே தான் மாமா”
“புதுப் பெண் வர்றத்துக்கு முன்னாடி நம்ம விஷயத்தைப் பேசி முடிச்சிடலாம்.” என்றார் ராஜேந்திரன்.
‘நம்ம விஷயமா?’ என்று புதிராகப் பார்த்தான் சிவா.
“சிவா, உன் அப்பாக்கும், மகேஷுக்கும் கொடுக்க வேண்டியதைப் பற்றி என்ன முடிவு எடுத்திருக்க? என்று அவன் அப்பாவின், தம்பியின் சார்பாக அவன் அக்காவின் கணவர் ராஜேந்திரன் கேட்டார்.
கல்யாண விஷய்த்தைப் பேச வேண்டியவர் கடை விஷயத்தைப் பேசுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.அவன் கொடுக்க வேண்டிய பணத்தைப் பற்றி அவர் பேசியது கொஞ்சமும் பிடிக்கவில்லை சிவாவிற்கு.  அதை வெளிக்காட்டாமல்,
“மாசா மாசம் அப்பாக்கு கொடுக்கறது போல மகேஷும் கேட்டான்..இப்போதைக்கு அவனுக்கும்  கொடுத்திடலாம்னு இருக்கேன்.” என்றான்.
உடனே,”இதை அன்னைக்கே சொல்லியிருக்கலாம்.” என்றான் மகேஷ்.
அதற்குச் சிவா பதில் சொல்லவில்லை.
அவரின் மைத்துனர்களுக்கிடையே கடையை வைத்து பெரிய சண்டையாகப் போகிறது என்று நினைத்துக் கொண்டு வந்தவருக்கு ஏமாற்றாகிப் போனது. உடனே,
“சரி..மகேஷுக்கு பணம் கொடுத்திடுவ..உன் அக்காக்கு என்ன கொடுக்கப் போற?’ என்று சிவாவிடம் கேட்டார்.
அவர் அப்படிக் கேட்டவுடன் தான் ஏன் இந்த விஷயத்தை அவர்கள் இருவரும் அவனிடமிருந்து மறைத்தனர் என்று சிவாவிற்குப் புரிந்தது. மகேஷின் பங்கை வைத்து அவர்களின் பங்கை நிர்ணயிக்கத் தான் காத்திருந்திருக்கிறார்கள்.
“அக்காக்கு என்ன கொடுக்கணும்?” என்று கேட்டது மகேஷ்.
“பெண்களுக்கும் சொத்திலே பங்கு இருக்கு..கடைலே உன் அக்காக்கு ஒரு பங்குக் கொடுன்னு நான் சொன்னா அண்ணன், தம்பி உங்க இரண்டு பேருக்கும் ஒண்ணுமில்லாம இல்லாம போயிடும்…அதனாலே ரொக்கமா உங்களாலே முடிஞ்சதைக் கொடுங்க..இங்கேயே முடிச்சிடிலாம்.” என்றார் ராஜேந்திரன்.
பஞ்சாயத்து செய்ய வந்தவர் பங்கு கேட்டவுடன் அதிர்ச்சியாயினர் மகேஷும், வெங்கடாசலமும். உடனே சிவாவை மகேஷ் பார்க்க, சிவாவோ மௌன நிலையில் இருந்தான்.  அன்னைக்கு நம்மகிட்டே அவ்வளவு கத்தினான் இப்போ அமைதியா இருக்கானே என்று குழப்பமடைந்தான் மகேஷ்.
மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்வதென்று வெங்கடாசலத்திற்குத் தெரியவில்லை.  அவர்கள் வீட்டுப் பிரச்சனையைத் தீர்க்க அவரின் உதவியை நாடியது தப்பு என்று இப்போது தான் புரிந்தது.  
அங்கே ஏற்பட்டிருந்த அமைதியை உடைத்தாள்  சாந்தி.
“என்னப்பா எதுவும் பேசாம இருக்கீங்க? என் பங்கைத் தானே அவர் கேட்கறார்.” என்று நியாயத்தை எடுத்துரைத்தாள் சாந்தி.
“உனக்கும் பணம்  கொடுத்தா சிவா என்ன செய்வான்? திரும்ப கல்யாணம் செய்துக்க போறான்..குடும்பம் பெரிசாகப் போகுது…..அதான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.” என்று இப்போது சிவாவின் பின்னே மறைந்து கொள்ளப் பார்த்தார் வெங்கடாசலம்.
உடனே,”என்ன அம்மா, அப்பா இப்படிச் சொல்றாரு? என்னைக்கு இருந்தாலும் எனக்கு ஏதாவது கொடுத்து தானே ஆகணும்..அதை இப்போவே செய்திடுங்கண்ணு சொல்றேன்..இதிலே யோசனை செய்ய என்ன மா இருக்கு?” என்று ஜமுனாவிடம் முறையிட்டாள் சாந்தி.  இரண்டு மகன்களும் அவரவர் குடும்பமென்று ஆன பின் அவர் மகளுக்குச் சிறப்பாக எதுவும் செய்யவில்லை.   சாந்தி கேட்பது நியாயமென்று அவருக்கும் தோன்றியது. ஆனால் அவர்கள் யாருமே இந்தக் கோணத்தில் இதுவரை யோசிக்காததால் ,
“இரண்டு தம்பிங்களும் அவங்களாலே முடிஞ்சதை அவங்களுக்கு முடியற போது கொடுப்பாங்க.” என்று யார்? எவ்வளவு? எப்போது? கொடுப்பார்கள் என்று தெளிவில்லாத தீர்வொன்றைத் தந்தார் ஜமுனா. அதைக் கேட்டுக் கோபமடைந்த மகேஷ்,
“அந்த இடம் முப்பது லட்சம் பெறும்..மூணு பங்கு வைக்கணும்னு பேசிக்கிட்டோம்..இப்போ நீ புதுசா வந்து பங்கு கேட்டா என்னக்கா அர்த்தம்?” என்று எகிறினான்.
“புதுசாவா..நான் உங்களுக்கெல்லாம் அக்கா டா நான்..சரி நம்ம தம்பிங்களாச்சே எது கொடுத்தாலும் வாங்கிட்டுப் போகலாம்னு நினைச்சேன்..நீ இப்படிப் பேசற..கடையை வித்து என் பங்கை முதல்லே வைச்சிட்டு நீங்கெல்லாம் உங்க பங்கைப் பிரிச்சுக்கோங்க.” என்று அவள் முடிவை மாற்றிக் கொண்டாள் சாந்தி.   உடனே,
“என்ன மாமா இது?..கடையை வித்து பங்கு தரச் சொல்றா அக்கா.. சிவா என்ன செய்வான்? நானாவது வேலைலே இருக்கேன் அவன் கடையை மட்டும் நம்பித் தானே இருக்கான்.” என்று  சிவாவை முன்னே வைத்துப் பிரச்சனையை அவனுக்குச் சாதகமாக முடிக்கப் பார்த்தான் மகேஷ்.
அங்கே நடப்பதைப் பார்த்து சில முடிவுகளை உடனடியாக மனத்தில் எடுத்த சிவா அதை செயல்படுத்த முதலில் அவன் கல்யாணத்தை முடிக்க வேண்டுமென்று உணர்ந்தான். அதனால்,
“அக்கா, இப்போதைக்கு கடையை விற்க முடியாது…நான் எனக்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்துக்கணும்.. அதற்குப் பிறகு எப்போ விற்கறேனோ அப்போ உனக்கும் கண்டிப்பா ஒரு பங்கு கொடுத்திடறேன்.” என்று சாந்தியின் உரிமையை அங்கீகரித்தான்.
சிவா சண்டை போடுவான் என்று எதிர்பார்த்திருந்த மகேஷிற்கும் வெங்கடாசலத்திற்கும் அவனின் ஒப்புதல் அதிர்ச்சியைக் கொடுத்தது.  அதே சமயம் அவன் அக்கா சாந்தியும் அவர் கணவர் ராஜேந்திரனும் அதைக் கேட்டு சந்தோஷம் அடைந்தனர்.
“சொல்லு மாப்பிள்ளை..எங்கே வரணும்..எப்போ வரணும்னு.. எனக்கு நிறைய வேலை இருக்கு ஆனாலும் உனக்காக எல்லாத்தையும் ஒத்தி வைச்சிட்டு உன் கல்யாணத்தை பேசி முடிக்கறேன்.” என்று அடுத்த பஞ்சாயத்திற்குத் தயாரானார் ராஜேந்திரன்.
அப்போது,”எனக்கு உடம்புக்கு முடியலைன்னு தான் உங்களையும் சாந்தியையும் கல்யாணம் பேச அனுப்பலாம்னு நினைச்சேன்..உங்க வேலையை கெடுத்துக்கிட்டு நீங்க இந்த வேலையா அலைய வேணாம்….என் பையனுக்கு நானே பேசி முடிக்கறேன்..நீங்க கிளம்புங்க உங்க பசங்க வீட்லே தனியா இருப்பாங்க.” என்று நயமாக சிவாவின் திருமண பேச்சு வார்த்தையிலிருந்து மகளையும் மாப்பிள்ளையும் கழட்டி விட்டுச் சட்டென்று  அவர்கள் இருவரையும் வீட்டிலிருந்து துரத்திவிட்டார் ஜமுனா.  
அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்ற அடுத்த நொடி சிவாவின் மேல் பாய்ந்தனர் நால்வரும்.
“ஏன் டா உடனே பங்கு கொடுக்கறேண்ணு சொன்னே..கலந்து பேசிட்டு பதில் சொல்றோம்னு சொல்லியிருக்கணும்.” என்றார் வெங்கடாசலம்.
“நான் அவளைச் சமாதானப்படுத்தி தம்பி இரண்டு பேரும் பணம் கொடுப்பாங்கண்ணு சொன்ன பிறகு நீ எதுக்கு டா கடையை வித்து பங்கு கொடுக்கறேண்ணு வாக்கு கொடுத்த? என்று சிவாவிடம் கோபப்பட்டார் ஜமுனா.
“ஏதாவது ரொக்கம் கொடுத்து முடிக்கறதை விட்டிட்டு பங்கு கொடுக்கறேண்ணு ஏன் ஒத்துக்கிட்ட?” என்று மகேஷும் சிவாவைக் கடிந்து கொண்டான்.
“என் மேலே எதுக்கு கோபப்படறீங்க..என்கிட்டே கலந்து பேசறத்துக்கு முன்னாடி நீங்கெல்லாம் தானே நம்ம வீட்டு விஷயத்திலே தலையிட மாமாக்கு அழைப்பிதழ் கொடுத்தீங்க..இப்போ அவர் அக்காவையே பங்கு கேட்க வைச்சிட்டார்..அவளுக்குக் கொடுக்க மாட்டேண்ணு எப்படிச் சொல்ல முடியும்? மகேஷ் எப்படியோ அப்படித் தானே அவளும்.” என்றான் சிவா.
“அதுக்கு தான் அவளுக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் கொடுத்து முடிக்கலாம்னு சொல்றேன்.” என்றான் மகேஷ்.
“அப்படிக் கொடுக்க என்கிட்டே பணம் கிடையாது..உன்கிட்டே இருந்தா நீ கொடு.” என்றான் சிவா.
“நான் எதுக்கு அவளுக்குக் கொடுக்கணும்..அப்பா தான் அவளுக்கு எதையாவது கொடுத்து இதை முடிக்கணும்.”
“உன் அம்மாவும் நானும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காம எங்க விஷயத்தை நாங்களே பார்த்துக்க எங்களுக்குப் பணம் வேணாமா? அதையும் அவகிட்டே கொடுத்திட்டு உங்க இரண்டுபேர்கிட்டே நான் கெஞ்சிகிட்டு இருக்கணுமா?” என்று இப்போது இரு மகன்கள் மீது கோபப்பட்டார் வெங்கடாசலம்.
“அப்பா, அக்கா நம்மகிட்டே பங்கு கேட்கறத்துக்கு முன்னாடி அவ சொன்னதை நாம் ஏத்துக்கிட்டிருந்தா அவளும் சரின்னு கொடுத்ததை வாங்கிட்டுப் போயிருப்பா..இப்போ அவ பங்கு கேட்ட பிறகு நாம கொடுக்க முடியாதுண்ணு சொன்னோம்னா கடையை விற்க முடியாம நமக்குப் பலவிதத்திலே  பிரச்சனை கொடுப்பார்..அக்காக்கும் பங்கு கிடைக்கப் போகறதுனாலே நல்ல பார்ட்டியா பார்த்து, நல்ல விலைக்கு கடையை வித்துக் கொடுப்பார்.” என்று அவன் அப்பாவிற்கு விளக்கியவன்,”இதெல்லாம் நடக்கணும்னா முதல்லே என் கல்யாணத்தைப் பேசி முடிங்க.” என்று அவன் அம்மாவிடம் தெரிவித்தான்.
ஜமுனா மனத்திலும் அதே எண்ணம் தான் இருந்தது.  இத்தனை பெரிய நஷ்டம் அடைந்த பின் தான் அவருக்கு அறிவு வந்திருந்தது. இரண்டு பெண் குழந்தையோடு இருக்கும் சிவாவைக் கல்யாணம் செய்து கொள்ள நினைக்கும் பெண்ணைச் சீக்கிரமாக அவர் வீட்டு மருமகளாக்க வேண்டுமென்ற முடிவிற்கு வந்து,
“யார் டா அந்தப் பொண்ணு?” என்று முதல்முறையாக சிவாவின் விஷயத்தில் ஆர்வம் காட்டினார். 
“அவப் பெயர் கௌரி..அவ அம்மா இப்போதான் ஒரு வருஷம் முன்னாடி இறந்து போனாங்க..அப்பா கிடையாது..சுப்ரமணி ஸர் குடியிருக்கற காம்ப்ளெக்ஸ்லே தான் இருக்கா..அதுக்கு முன்னாடி அவளும், அவ அம்மாவும் தெரிஞ்சவங்க வீட்லே இருந்தாங்க..அந்த வீட்டுப் பெரியவங்ககிட்டே தான் நீங்க கல்யாணம் பேசணும்.” என்று கௌரியைப் பற்றி சொன்ன விவரங்களில் அவள் அம்மா, அப்பா இல்லாதவள் என்ற விஷயம் ஜமுனா மனத்தில் ஆழமாகப் பதிந்து போனது.
“ஏன் டா கல்யாணம் பேசு…பேசுன்னு சொல்ற..அங்கே போய் என்னத்தைப் பேச சொல்ற?” என்று கேட்டார் வெங்கடாசலம்.
“என்ன பேசுவாங்க..எங்கே வைச்சுக்கலாம்..எப்போ வைச்சுக்கலாம்..அவ்வளவு தான்..இதை மட்டும் நீங்க பேசினா போதும்..மற்றதை நான் பார்த்துக்கறேன்.”
“முக்கியமான விஷயத்தை நீ சொல்லலையேடா?” என்றார் ஜமுனா.
“என்ன விஷயம் மா?”
“அவளுக்கு எத்தனை குழந்தைங்க? ஆணா? பொண்ணா? வேலைக்கு போறாளா இல்லை வீட்டோட இருக்காளா? விதவையா? விவாகரத்து ஆனவளா?” என்று அடுக்கினார் ஜமுனா.
“ஒரு கம்பெனிலே அக்கவுண்ட்ஸ் மேனஜரா இருக்கா..அவளுக்கு இது முதல் கல்யாணம்.” என்றான் சிவா.
அதைக் கேட்டு ஜமுனா, வெங்கடாசலம், மகேஷ் மூவரும் புரியாத பாஷையில் பேசும் வேற்று கிரஹவாசிப் போல் சிவாவைப் பார்த்தனர்.  

Advertisement