Advertisement

அத்தியாயம் – 14
“மகேஷ் உங்க தம்பியா? கடைலே உங்க அப்பாவும் தம்பியும் பணம் போட்டிருக்காங்களா?” என்று அவள் ஆச்சர்யத்தை மறைத்துக் கொண்டு விவரங்கள் அறியமுற்பட்டாள் கௌரி.
“ஆமாம்.. என்னோட தம்பி..ஆரம்பித்தலே அப்பா கொஞ்சம் பணம் கொடுத்தார்..அதை அப்போவே திருப்பிக் கொடுத்திட்டேன்..தீபா பிறந்த பிறகு காயத்ரியோட நகையை வைச்சு கடையை மாத்தி அமைச்சு ஸ்டெஷனரி சாமான் விற்க ஆரம்பிச்சேன்..மற்றபடி யார்கிட்டேயும் பணம் வாங்கினதில்லை..இதுவரை அப்பாக்கு மட்டும் மாசா மாசம் என் வருமானத்திலே ஒரு பங்கு கொடுத்திட்டு வரேன்..இப்போ மகேஷும் மாசா மாசம் பங்கு கேட்கறான்..
கடை என்னோட உழைப்பு அதனாலே மாசா மாசம் கொடுக்க முடியாதுண்ணு சொல்லிட்டேன்..அதுக்கு கடையை லீஸுக்கு விட்டிட்டு இல்லை வித்திட்டு மூணு பங்கு வைச்சிக்கலாம்னு சொல்றான்.. லீஸுக்கு விட்டாலும், மொத்தமா வித்தாலும் என் பங்குலே குடும்பத்தை ஓட்ட,  புதுசா கடை போட முடியாது.அவங்களோட பங்கு, மகேஷோட பங்கு இரண்டுத்தையும் கொடுத்திட்டு என்னைக் கடையை மொத்தமா எடுத்துக்க சொல்றாங்க அம்மா..இப்போ அந்த இடத்தோட மதிப்பு முப்பது லட்சம்..அவங்களுக்கு இருபது லடம் கொடுக்க என்கிட்டே அவ்வளவு பணம்  இல்லைன்னு சொன்னேன்…அதுக்கு காயத்ரி வீட்டு ஆளுங்ககிட்டே உதவி கேளுன்னு மகேஷ் சொல்றான்..காயத்ரி வீட்லே அவ போனவுடனேயே என்னையும் என் குழந்தைங்களையும் ஒதுக்கிட்டாங்க..நானும் அவங்களை ஒதுக்கிட்டேன்.”
‘அவனுடை பங்கு பத்து லட்ச ரூபாய் எவ்வளவு நாள் வரும்? என்று யோசித்தவுடன் தான் அவன் பிரச்சனையின் ஆழம் புரிந்தது கௌரிக்கு.
“கொஞ்சம் பொறுத்துக்கச் சொல்லுங்க….வேற ஏதாவது தீர்வு கிடைக்கும்.”
“மகேஷ்னாலே காத்திருக்க முடியாதுன்னு சொல்லிட்டான்.”
“ஏன்? திடீர்னு என்ன ஆயிடுச்சு? அவருக்கு ஏதாவது பிரச்சனையா?”
“பிரச்சனையில்லை..நல்ல விஷயம் தான்..அவனுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப் போகுது.”
“ஓ..எப்போ?”
“தெரியாது.” என்று சொன்னவனை அவள் விந்தையாகப் பார்க்க,
“என்கிட்டே யாரும் இந்த விஷயத்தைச் சொல்லலை..என்கிட்டே பேசணும்னு ஒரு நாள் இராத்திரி என்னை அவன்  வீட்டுக்கு அப்பா கூப்பிட்டாங்க…எனக்கும் அவர்கிட்டே ஒரு விஷயம் பேச வேண்டியிருந்திச்சு..வீட்டு  வாசல்லே அக்ஷ்யாவுக்கு விஜி சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருந்தா..அப்போ நேர்லே பார்த்த போதுதான் தெரிஞ்சது.”
“அவங்க வீட்லேதானே தீபாவையும் சூர்யாவையும் ஞாயிற்று கிழமைலே விடுவீங்க?”
“விஜி அவங்க அம்மா வீட்டுக்குப் போனதிலிருந்து நாங்க யாரும் அங்கே போகறதில்லை…இவ்வளவு நாள் அவ அவங்க அம்மா வீட்லே இருந்ததுக்குக் காரணம் இதுதான்னு எனக்கு இப்போதான் தெரிஞ்சுது.”
“ஏன் உங்ககிட்டே யாருமே இந்த நல்ல  விஷயத்தை சொல்லலை?” என்று காரணத்தைக் கண்டறிய முயன்றாள் கௌரி.
“தெரியலை…கொஞ்ச நாள் முன்னாடி தான் அக்கா என் கடைக்கு வந்து அவங்க பசங்க பரீட்சைக்குத் தேவையான ஸ்டெஷனரி சாமான்களை எடுத்திட்டுப் போனாங்க..அப்போ கூட விஜி பற்றி சொல்லலை.. ..மாமா தான் இடத்தோட மதிப்பு எவ்வளவுன்னு கணக்குச் செய்து சொல்லியிருக்காங்க..அதைப் பற்றியும் என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லலை…
நான் எப்போதும் இருக்கற மாதிரி தான் எல்லாரோடேயும் இருக்கேன்..அவங்கெல்லாம் தான் மாறிப் போயிட்டாங்க..யாரையும் நான் குறை சொல்ல விரும்பலை..எனக்கு நடந்த கெட்டது என்னோட போகட்டும்..எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும்.” என்ற சிவாவின் பெருந்தன்மை கௌரியின் குண்டலினி திறனை அடுத்த நிலையான அனாஹத நிலைக்கு அனுப்பியது.  அதன் விளைவாக சதா சிவா என்று அவள் மனத்தில் சிவசங்கரை வடித்துக் கொண்டாள் கௌரி. உடனே,
“இப்போ உங்களுக்கு எது பிரச்சனை? பங்கு கேட்டதா? இல்லை அவங்கெல்லாம் உங்களை ஒதுக்கிட்டாங்கறதா?” என்று அவனைத் தெளிவுப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள்.
சில நொடிகள் சிந்தித்த பின்,”இரண்டும் தான்.” என்றான் சிவா.
“முதல் பிரச்சனைக்கு ஏதாவது யோசனை செய்யறேன்..இரண்டாவது பிரச்சனை பற்றி எனக்கு ஐடியா கிடையாது..உறவுகள் இல்லாத எனக்கு இந்த மாதிரி உறவுகளை என்ன செய்யறதுண்ணு எப்படித் தெரியும்?” என்று அவளைப் பற்றி சிவா சொன்னதை அவனுக்கு நினைவுப்படுத்தினாள். அதற்கு,
“அவங்களோட இவ்வளவு வருஷமா இருக்கற எனக்கே என்ன செய்யறதுன்னு தெரியலை..சூழ் நிலைக்கு ஏற்ற மாதிரி மாறிக்கற உறவுக்காரங்களை எப்போதும் ஒரே போல இருக்கறவங்களாலே என்ன செய்ய முடியும்..பொறுத்துதான் போக முடியும்.” என்றான்.
அதன்பின் இருவரும் மௌனமாக யோசனையில் இருக்க, சில நிமிடங்கள் கழித்து ஒரு முடிவிற்கு வந்த கௌரி,”நீங்க கிளம்புங்க..லேட்டாயிடுச்சு.” என்றாள்.
அவன் யோசனையில் முடிவில்,”அன்னைக்கு என் அப்பாகிட்டே உன்னைப் பற்றி பேசத்தான் போனேன்.” என்றான் அவளிடமிருந்து விலகியிருக்க முடிவெடுத்திருந்தவன்.
எதுக்கு இப்போ இந்தத் தகவலென்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கௌரி.
“ஒரு குடும்பத்தைச் சமாளிக்க முடியாத எனக்கு எதுக்கு இன்னொரு கல்யாணம்? இரண்டு குழந்தைகளைப் படிக்க வைக்க கஷ்டப்படும் போது இன்னும் இரண்டு பேரை எப்படிப் படிக்க முடியும்னு மகேஷ் கேட்கறான்?..இதுவரை என்னைக் கல்யாணம் செய்துக்க யாரும் முன்வராததுக்குக் காரணம் என் இரண்டு பெண்ணுங்கதான்னு அம்மா சொல்றாங்க. ” என்றான்.
அவளுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவளைப் பற்றி அவன் ஒரு முடிவுக்கு வர,“உங்க தம்பி சொன்னதை, உங்கம்மா சொன்னதைக் கேட்டுக்கிட்டு சும்மா இருந்தீங்களா? என்னைக் கல்யாணம் செய்துக்க ஒருத்தி தயாரா இருக்கான்னு ஏன் அவங்ககிட்டே சொல்லலை? அதைச் சொல்லத்தானே அங்கே போனீங்க? இப்படி எப்போதும் சந்தேகத்தோட, தயக்கத்தோட நீங்க இருந்தா நமக்குள்ளே சரிப் படாது..கிளம்புங்க.” என்று அவனை அவள் மறுத்து அவளை அவன் ஏற்றுக் கொள்ள உந்தினாள் கௌரி.
ஆனால் அவள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அவள் சொன்னதை அமைதியாக ஏற்றுக் கொண்டு வாசல் கதவருகே சிவா சென்றவுடன், இவங்களோட என்று மனம் வெறுத்துப் போனாலும் மனத்தில் அவனைக் கணவனாக வரித்துக் கொண்டதால்,
“நாளைக்கு காலைலே பத்து மணி போல குழந்தைங்களை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வாங்க..அவினாஷ் அண்ணனை வரச் சொல்றேன்..உங்க பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமான்னு பார்க்கலாம்.” என்றாள் கௌரி.
“சரி” என்று தலையசைத்தவனிடம்,”குழந்தைங்க என்ன விரும்பிச் சாப்பிடுவாங்க? என்று கேட்க,
சில நொடிகள் கழித்து, “தெரியலை.” என்றான்.
“நீங்க?” என்று கேட்க,
சிறிது யோசித்தவன்,”ஞாபகம் வர மாட்டேங்குது.” என்றான்.
“சரி..நாளைக்கு தீபா, சூர்யாகிட்டே கேட்டுக்கறேன்..நீங்களும் அதுக்குள்ளே ஞாபகப்படுத்திக்கோங்க.” என்ற கௌரியின் உள்ளன்பில் சிவாவின் குண்டலினி திறன் அடுத்த நிலையான அனாஹத நிலையை பறந்து சென்று ஆக்கிரமித்துக் கொண்டது. அதன் விளைவாக அவன் இதயத்தில் எழுந்த மனோகர ஓசையைக் கௌரி மனோகரி என்று சரியாகக் கண்டு கொண்டான் சிவா. அவன் இதயராகத்தின் இன்னிசையில் கட்டுண்டவன், 
“நாளைக்கு ஸ்கூல் இருக்கு.” என்றான்
“நாளைக்கு எனக்கும் ஆபிஸ் இருக்கு..நாங்க எல்லாரும் ஒரு நாள் லீவு.” என்று பதில் கொடுத்தாள்.
“சரி..அழைச்சுக்கிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு சென்றவனை வீட்டு வாசலில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள் கௌரி.  இன்று அவள் வாழ்க்கையின் முக்கியப் பக்கத்தை அவனுக்குத் திறந்து காட்டியதை அவன் படித்தானா? என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவ்வப்போது சில பக்கங்களை அவனுக்குப் புரட்டிக் காட்ட வேண்டுமென்று முடிவு செய்தாள்.
மறு நாள் காலை பத்து மணி போல் வந்து சேர்ந்தான் சிவா. இன்றும் வேண்டுதல் போல் வேட்டி சட்டையில் இருந்தான். காலை வேளையில் குழந்தைகள் இருவரும் உற்சாகமின்றி சோர்வாக இருந்தனர்.  வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் தூக்கிக் கொள்ளும்படி கௌரியை நோக்கி கையை நீட்டினாள் சூர்யா.  
உடனே அவளைத் தூக்கிக் கொண்டாலும்,
“ஃபர்ஸ்ட் கிளாஸ்லே படிக்கற..தூக்கி வைச்சுக்க நீ பேபி கிடையாது.” என்றாள்.
கௌரியின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்ட சூர்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
அதை உணர்ந்த கௌரி,“என்ன ஆச்சு இவளுக்கு? எதுக்கு அழறா?” என்று சிவாவிடம் கேட்க, அவன் மௌனமாக இருந்தான்.
அவனருகே சோபாவில் அமர்ந்திருந்த தீபாவிடம்,”நீ இவளோட சண்டை போட்டேயா?” என்று கௌரி கேட்டவுடன்,
“அப்பாவும் பாட்டியும் அவளை அடிக்கறாங்க.” என்றாள் தீபா.
“அடிக்கறாங்களா? ஏன் அடிச்சீங்க? என்று சிவாவைக் கேட்க,
அதற்கும் பதில் சொல்லாமல் மௌனமாக தலை குனிந்து அமர்ந்திருந்தான் சிவா.
“உங்கம்மா இப்போ உங்க வீட்லே தான் இருக்காங்களா?” என்று சிவாவைக் கேட்டாள்.
அவன் தலையசைவில் “ஆமாம்” என்றான்.  கௌரியின் தோளில் விசும்பிக் கொண்டிருந்தாள் சூர்யா. அவள் முதுகைத் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டிருந்த கௌரியிடம், “கௌரி ஆன் ட்டி, அப்பாவை நீங்க எப்போ கல்யாணம் செய்துக்கப் போறீங்க?”என்று கேட்டு சிவா, கௌரி இருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாள் தீபா. 
அவர்கள் இருவரும் அதிர்சியிலிருந்து மீளுமுன்,”ஸ்கூலுக்கு எவ்வளவு நாள் லீவு போடணும்?” என்று அவளுக்குத் தேவையான விவரம் கேட்டாள்.
“தீபா, வாயை மூடிட்டு இருக்கேயா?” என்று சுள்ளென்று விழுந்தான் சிவா.
உடனே தீபாவின் முகம் சோர்ந்து போக, அவளருகே சென்று அமர்ந்த கௌரி,”யார் சொன்னாங்க?” என்று விசாரித்தாள்.
“நேத்து நைட் தாத்தா, பாட்டிகிட்டே அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாங்க.” என்றாள் தீபா. 
நேற்றிரவே அவளைப் பற்றி அவன் பெற்றோரிடம் சொல்லிவிட்டான் ஆனால் அதை அவளிடம் சொல்லத்தான் அவனுக்கு கௌரி நல்ல நேரம் அமையவில்லை போல என்று நினைத்துக் கொண்டாள் கௌரி. 
அவள் தோளிலிருந்த சூர்யாவை தீபாவின் அருகில் சோபாவில் உட்கார வைக்க முயன்று போது அதை மறுத்து கௌரியின் கழுத்தை இறுக கட்டிக் கொண்டாள் சூர்யா. 
அவளையுன் தூக்கிக் கொண்டு பிரிஜ்ஜை நோக்கிச் சென்றாள் கௌரி.  பிரிஜ்ஜின் கதவைத் திறந்தவுடன் வீசிய குளிர் காற்றில் உடனே அவள் தலையைத் திருப்பி, கண்களைத் துடைத்தபடி,”பிங்க் ஜுஸா?” என்று சூர்யா  கேட்டவுடன், அவளை அணைத்து முத்தமிட்ட கௌரி,”உங்கப்பாவை அடிக்க உனக்கு நிறைய சான்ஸ் கொடுக்கப் போறேன் அதுக்கு நீ நல்லாச் சாப்பிட்டு பெரிசா, ஸ்ட் ராங்க வளரணும்..ஓகேவா?” என்று கேட்டவுடன். அவளும்  “ஓகே” என்று தலையசைத்தாள்.
“நீ போய் சோபாவிலே உட்கார்ந்துக்க..நான் கொண்டு வரேன்.” என்று அவளை இறக்கி விட்டவுடன், சோபாவில். தீபாவின் அருகில் அமர்ந்து கொண்டாள் சூர்யா.
பிரிஜ்ஜிலிருந்து பால் எடுத்துக் கொண்டு கிட்சனுக்குச் சென்றாள் கௌரி. 
சில நிமிடங்கள் கழித்து திரும்பி வந்த கௌரி,“பிங்க் ஜுஸ் இல்லை..மில்க் ஷேக் தான்.” என்று சொல்லி ரோஸ் மில்க் ஷேக்கை இருவர் கையிலும் கொடுத்தாள். 
“அப்பாக்கு?” என்று கேட்டாள் அப்பாவிடம் அடி வாங்கியவள், சில நிமிடங்கள் முன் அவள் அப்பாவை அடிக்கத் தயார் என்றவள்.  உடனே அவளை அவன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு,”அப்பாக்கு வேணாம்..நீ குடி.” என்று அவளிடமிருந்து கிளாஸை வாங்கி அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புகட்டினான் சிவா.
“கொஞ்ச நேரத்திலே சிதார்த்தும், அனன்யா பாப்பாவும் வந்திடுவங்க அதுவரை பெட் ரூம்லே ரெஸ்ட் எடுத்துக்கோங்க..தூக்கம் வந்தா தூங்குங்க…” என்று மில்க் ஷேக் குடித்து முடித்தவுடன் இருவரையும் படுக்கையறையில் விட்டு, லேசாக கதவைச் சாத்திவிட்டு வந்து சிவாவின் மீது பாய்ந்தாள் கௌரி.
“பிரிஜ்ஜை திறந்தவுடனேயே பிங்க் கலர் ஜுஸ்ஸான்னு ஞாபகமா கேட்கறா..அவளுக்குக் ஜுஸ் கொடுத்தவுடனே அப்பாக்குன்னு கேட்கறவளை அடிக்க உங்களுக்கு எப்படி மனசு வருது?” 
“வேற என்ன செய்ய? தட்டுலேர்ந்து சரியாச் சாப்பிட தெரியலை..ஒரே இடத்திலே உட்கார மாட்டேங்கறா..தட்டோட வீடு பூராச் சுத்தி வரா அதனாலே எல்லா இடமும் சாப்பாடு விழுந்து அசிங்கமாகிடுது..சாவிம்மானாலே எத்தனை முறை வீட்டைக் கூட்ட முடியும்? இப்பொல்லாம் இராத்திரி படுக்கைலே பாத் ரூம் போயிடறா..பெட்ஷீட் துவைச்சு அவங்க டயர்டாகிடறாங்க..அதோட அம்மா, அப்பாவோட துணியையும் துவைக்க வேண்டியிருக்கு.. என்னோடது துவைக்க முடியறதில்லை..இரண்டு நாளா எனக்கும் துணி துவைக்க நேரம் கிடைக்கலை..அதான் வேஷ்டி உடுத்தியிருக்கேன்.” என்ற விளக்கம் கௌரியை அமைதிப்படுத்தாமல் ஆத்திரப்படுத்தியது.
“சூர்யாக்கு என்ன வயசாகுது?”
“அஞ்சு நடக்குது.”என்றான்.
“அப்போ நாலுன்னு சொல்லுங்க..அவளா சாப்பிடணும், பாத் ரூம் போனா அவளா கழுவிக்கணும், இராத்திரி பாத் ரூம் வந்தா எழுப்பணும்..வேற என்ன எதிர்பார்க்கறீங்க? அவளோட ஆறாவது வயசுக்குள்ளே சமைக்க, பாத்திரம் கழுவ, வீடு கூட்டிப் பெருக்க கத்துக்கணுமா? அப்புறம் பத்து வயசுக்குள்ளே அவளுக்குக் கல்யாணமா? என்று வெடித்த கௌரியின் மனது ‘இவங்களுக்கு இந்த வேட்டிக்கூட இல்லாமச் செய்திருக்கணும்.’ என்று வன்மையாக யோசித்தது. 
”கௌரி வேணாம்..ரொம்ப பேசற.” என்று அவளைப் போலவே ஆத்திரமாகப் பேசி அவளை அடக்கப் பார்த்தான் சிவா. அவள் மனதிலிருந்ததை வெளியிட்டிருந்தால் என்ன செய்திருப்பான்? நெற்றிக் கண்ணைத் திறந்திருப்பானோ?
“எனக்கு ஏழெட்டு வயசா இருக்கும் போது என் அம்மாக்கு சின்ன சின்ன உதவி செய்வேன்..அவங்க கூட என்கிட்டே இப்படியெல்லாம் எதிர்பார்க்கலை..காலைலே சில வீடுங்களுக்குச் சீக்கிரமா வேலைக்குப் போகணும் அதனாலே அவங்களுக்கு நேரமிருக்காது ஆனா இராத்திரி எனக்குக் கண்டிப்பாச் சோறு ஊட்டுவாங்க..
இப்போ அண்ணியும் சிதார்த்தோட அதைத்தான் செய்யறாங்க..ஒரு வேளை அவங்க ஊட்டுவாங்க..மற்ற வேளைகள் அவனா சாப்பிடறான்..ஸ்கூல்லே எப்படியும் சூர்யாதானே சாப்பிடறா..அப்புறம் எதுக்கு வீட்லேயும் அவளே சாப்பிடணும்..ஒரு வேளை அந்தச் சாவி அம்மா ஊட்ட மாட்டாங்களா?” என்று கேட்டாள்.
“காயத்ரி போன போது சூர்யாக்கு இரண்டு வயசு..அவங்களும், என் அம்மாவும் தான் மாற்றி மாற்றி பார்த்துக்கிட்டாங்க..கொஞ்ச நாளைக்கு அப்புறம் அம்மாக்கு முடியலை அதனாலே அவளைத் தனியா சாப்பிட, பாத் ரூம் போக எல்லாம் பழக்கப்படுத்த சாவி அம்மாகிட்டே சொன்னங்க..அவங்களுக்கும் அதெல்லாம் முடியலை அதான் சீக்கிரமா ஸ்கூல்லே சேர்த்திட்டேன்..அங்கே தான் எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க..இப்போதான் அஞ்சு நடக்குது ஃபர்ஸ்ட் கிளாஸ்லே இருக்கா.” என்று அவன் வீட்டு நிலவரத்தையும் சூர்யாவைச் சமாளிக்க அவன் செய்ததையும் தெரியப்படுத்தினான்.
ஒரு நொடி அவன் சொன்னதைக் கேட்டு அவள் கண்களை மூடி அவள் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்த கௌரி,
“எப்படி சேர்த்துக்கிட்டாங்க..மூணு வயசு முடியாம சேர்க்கறது தப்பு.”
“அவங்க முடியாதுண்ணு தான் சொன்னாங்க..சின்ன ஸ்கூல் அஞ்சாவது வரைக்கும் தான் இருக்கு..அதனாலே கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கிட்டாங்க.”
“அப்போ இரண்டு பேரையும் ஆறாவதுக்கு வேற ஸ்கூல்லே போடணும்.”
“தீபாக்குப் பிரச்சனை இருக்காது..சூர்யா அஞ்சாவது கிளாஸ் திரும்பப் படிக்கணும்..அப்போதான் வயசு கரெக்ட்டா இருக்கும்.” என்று விளக்கம் கொடுத்தவனை வெட்டி போட ஆத்திரம் வந்தது.
“ஓர் ஆறு மாசம் கழிச்சு அவளை ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம்..உங்க தம்பி வீட்லேயே அவளை விட்டிருக்கலாம்..அவங்க பொண்ணோட சேர்ந்து வளர்ந்திருப்பா..அவளைச் சேர்க்கும் போது இவளையும் ஸ்கூல்லே சேர்த்திருக்கலாம்.’
“அக்ஷ்யா இரண்டு மாசம் பெரியவ.. இன்னும் ஸ்கூல்லே சேர்க்கலை..இப்போதான் அவங்க வீட்டுப் பக்கத்திலே இருக்கற பள்ளிக்கூடத்திலே சேர்க்கப் போறாங்க.”
அவன் கொடுத்த தகவல்களில் கொதி நிலையை அடைந்திருந்த கௌரி இனி ஒரு வார்த்தை அவன் பேசினால் மறுபடியும் வெடித்து விடுவாள் என்ற நிலையில் சூர்யாவின் பிரச்சனையை எப்படிச் சமாளிக்கலாம் என்று யோசித்தவள்,
“இராத்திரி தூங்கப் போகறதுக்கு முன்னாடி யாராவது சூர்யாவைப் பாத் ரூமிற்கு அழைச்சுக்கிட்டுப் போறீங்களா?” என்று கேட்டாள்.
“எனக்குத் தெரியாத்ய்…நான் வீட்டுக்குத் திரும்பும் போது அவ தூங்கிக்கிட்டு இருப்பா”
“தீபாகிட்டே சொல்றேன்..முன்னே ஒரு தடவை வீட்டை விட்டு வெளியே கிளம்பறத்துக்கு முன்னாடி சூர்யாவை பாத் ரூம் அழைச்சுக்கிட்டுப் போகணும்னு அவகிட்டே சொன்னேன்..அதை மறக்காம அப்படியே செய்யறா..இன்னைக்கு இதையும் சொல்றேன்.” என்று கௌரி சொல்லிக் கொண்டிருக்கும் போது வாசல் அழைப்புமணி ஒலித்தது. வாசல் கதவைத் திறந்தான் சிவா.
வாசலில் அவன் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தான் அவினாஷ்.  அவன் குடும்ப உறுப்பினர்கள் முகத்தில் லேசான சிரிப்பு, அவினாஷின் முகத்தில் கடுகடுப்பு.
********************************************************
அனாஹத சக்கரம் – நான்காவது நிலைலே you will know what you want from yourself and from others too..கதைலே உறவு நிலையை நிர்ணயம் செய்து..compatibility establish ஆகுது..

Advertisement