Advertisement

அத்தியாயம் – 12
அவினாஷ் சொன்னது நிஜமானது. இருளைப் பிளந்து கொண்டு விடியல் வெளியே வந்த நானோ நொடி காட்சிகளுக்கு சாட்சியானவன், இதுபோல் இனியொரு தூங்கா இரவையும் விடியலையும் அவனால் கையாள முடியாது என்று உணர்ந்து, அலைபாய்ந்து கொண்டிருந்த அவன் மனதோடு ஒரு தீர்மானத்திற்கு வந்தான் சிவா.  அதன் பின் அன்று காலை அவனே குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றான். அவனைச் சந்திக்க வந்த சூர்யாவின் கிஸாஸ் டீச்சர் அவளைப் பற்றி சொன்ன அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டு யோசித்து முடிவெடுப்பதாகச் சொல்லிவிட்டு கடைக்குச் சென்றான்.  
கடையைக் கவனித்துக் கொண்டே ஒரு மணி நேரம் போல் யோசித்தவன் அதன் முடிவில் அவன் அப்பாவை அழைத்து ஒரு முக்கியமான விஷயம் பேச அன்று மாலை சந்திக்க வருவதாகத் தகவல் கொடுத்தான். உடனே அவரும் அவனிடம் பேசுவதற்கு சில விஷயங்கள் இருப்பதாகவும் இரவு எட்டு மணி போல் வந்தால் மகேஷும் வீட்டிலிருப்பான் என்றார்.  திடீரென அவரும் அவனுடன் பேச வேண்டுமென்று சொன்னவுடன் என்ன விஷயமாக இருக்கும்? என்று யோசனை செய்தவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால் அந்த யோசனைகளுக்கு நடுவே மறக்காமல் சாவித்திரி அம்மாவின் மகன் மனோகரை அனுப்பி இரண்டாவது மாடியிலிருந்த ஆயுர்வேத மருந்தகத்திலிருந்து அவன் அம்மாவிற்காக கற்பூராதி தைலத்தை வாங்கி வரச் சொன்னவன் அதை அப்போதே அவன் பைக்கின் சைட் பெட்டியில் வைத்தான். 
அன்று மாலை ஏழு மணி போல் அவன் வீடு போய்ச் சேர்ந்த போது  இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் சூர்யா.  அவன் பைக் சத்தம் கேட்டவுடன் சாப்பாடு தட்டுடன் வெளியே ஓடி வந்தவள் கண்களில் அத்தனை மகிழ்ச்சி.
“அக்கா, அப்பா .” என்று அவள் கத்த, வீட்டுக்குள்ளேயிருந்து சாவித்திரி அம்மாவும் தீபாவும் அது உண்மையா? என்று கண்டறிய வந்தனர்.
“என்னப்பா சீக்கிரம் வந்திட்டீங்க?” என்று தீபா கேட்க,
“சித்தப்பா வீட்டுக்குப் போகணும்..நீயும் உன் வேலையெல்லாம் முடிச்சிட்டு சாப்டிடு..நைட் திரும்பி வந்த பிறகு செய்யணும்னு எதையும் பாக்கி வைக்காதே.” என்று சொன்னவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சூர்யாவைத் தூக்கி,”ஹோம்வர்க் முடிச்சிட்டேயா?” என்று கேட்டான்.
அவளைத் தூக்கிக் கொண்ட மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டே இல்லை என்று தலையசைத்தாள் சூர்யா.  இப்படித் தைரியமாக சிரித்தபடி இல்லை என்று  பதில் சொல்பவளைப் பணம் செலவானாலும் பரவாயில்லை என்று ஸ்கூல் நடத்தும் டியுஷன் கிளாஸில் போடுவது என்று அவன் எடுத்த முடிவுச் சரியானது தான் என்று  தோன்றியது. அதே சமயம் அவன் எடுத்த இன்னொரு முடிவும் சரியானதாக இருக்க வேண்டுமென்று அவன் மனம் பிரார்த்தனைச் செய்தது. அதனால் தான் இன்றே கௌரியைப் பற்றி அவன் குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தப் போகிறான்.
சாவித்திரி அம்மாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவனும் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு மகேஷின் வீட்டிற்குப் போய் சேர்ந்த போது எட்டரை மணி ஆகியிருந்தது.  மகேஷின் மனைவி விஜி அப்போது தான் அவளுடைய மகள் அக்ஷ்யாவிற்கு வாசலில் நின்று வேடிக்கைக் காட்டியபடி சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள்.  அவன் பைக்கை நிறுத்தியவுடன் அவன் முன்னால் அமர்ந்திருந்த சூர்யாவை இறக்கி விட்டு நிமிர்ந்த போது விஜியின் தோற்றத்தைப் பார்த்து ஒரு நொடி திகைத்தான்.  அப்போது விஜியின் இடுப்பிலிருந்து இறங்க முற்பட்ட அக்ஷ்யாயின் காலில் ஓர் அடி கொடுத்து வாயில் சாப்பாட்டைத் திணித்தாள் விஜி.
அதைப் பார்த்து அவனுடைய அம்மாவிற்காக வாங்கி வந்திருந்த தைலத்தை எடுத்துக் கொண்டிருந்த சிவாவுடன் ஓன்றிக் கொண்டனர் தீபாவும் சூர்யாவும்.   பல வாரங்களாக அவள் அம்மா வீட்டில் விஜி இருந்ததற்கானக் காரணம் இப்போது தான் அவனுக்குப் புரிந்தது.  ஏன் அவனிடம் யாருமே இந்த விஷயத்தை இதுவரை தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.  
சிவா வீட்டினுள் நுழைந்தபோது அவன் அப்பா  வெங்கடாசலமும் அம்மா ஜமுனாவும் உறங்குவதற்காக பாய் விரித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது அவன் படுக்கையறையிலிருந்து வெளியே வந்தான் மகேஷ்.  
வெகு நாள்களாக பார்த்திராத மூத்த மகனை நலன் விசாரிக்காமல் “தைலம் வாங்கிட்டு வந்தேயா?” என்று கேட்டார் அவர் நலனில் குறியாக இருந்த ஜமுனா.
“இந்தாங்கம்மா” என்று காகிதத்தில் சுற்றியிருந்த பாட்டிலை அவரிடம் கொடுத்தான்.  அதை வாங்கிப் பிரித்துப் பார்த்துவிட்டு,”ஒரு பாட்டில் இரண்டு வாரம் வர மாட்டேங்குது..இரண்டு பாட்டிலா வாங்கிட்டு வந்திருக்கலாம்..மனோகர்கிட்டே கொடுத்து விட்டதெல்லாம் தீர்ந்து போயிடுச்சு.” என்றார்.
“இரண்டு தான் சொன்னேன் மா..அவங்க கடைலே ஸ்டாக் இல்லை.” என்றான் கடமை தவறாத  சிவசங்கர்.
“இந்தா தீபா, இதைக் கொண்டு போய் உள்ளே அலமாரிலே வை..அக்ஷ்யாவுக்கு எட்டாத இடத்திலே வை.” என்று ஜமுனா கட்டளையிட அவள் பின்னே சூர்யாவும் செல்ல,
“டிவி போட்டிருக்கேன்..இரண்டு பேரும் பார்த்திட்டு இருங்க..அப்பா கிளம்பும் போது கூப்பிடறேன்.” என்றான் மகேஷ்.
குழந்தைகள் இருவரும் உள்ளே சென்றவுடன் அவன் இரவு சாப்பாடுடன் சேரில் வந்து அமர்ந்தான் மகேஷ்.   அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்த விஜி நேரே படுக்கையறைக்குச் சென்றவள் அக்ஷ்யாவை அங்கே விட்டு  விட்டு ஹாலிற்கு வந்து மகேஷ் அருகில் நின்று கொண்டாள்.  
தரையில் விரிதிருந்த பாயில் அமர்ந்தபடி மா நாட்டை துவக்கி வைத்தார் வெங்கடாசலம்.
“சிவா, கடை எப்படிப் போகுது? .
“போகுது பா..இப்போ நிறைய பேர் ப்ரிண்ட் செய்ய வரதில்லை..காகிதமில்லாத உலகத்தை உருவாக்காறாங்க..எல்லாம் டிஜிடெல்லாப் படிக்கறாங்க..பகிர்ந்துக்கறாங்க..ஸ்கூல், காலேஜ் பசங்கனாலே தான் வியாபாரம் நடக்குது..வேற ஏதாவது யோசிக்கணும்..வருமானம் பத்தலை..செலவு ஜாஸ்தியாயிடுச்சு..சின்னவ படிக்க மாட்டேங்கறா..ஸ்கூல்லேயே டியுஷன் போடலாம்னு இருக்கேன்..டியுஷன் முடிஞ்சதும் அவங்க வண்டிலே வீட்டுக்கு அனுப்பிடுவாங்க..நம்ம வீட்டுப் பக்கத்திலே போடலாம்னா யார் கொண்டு போய் விடுவாங்க? கூட்டிக்கிட்டு வருவாங்க.” என்றான் சிவா.
உடனே,”இவனுக்கும் இப்போ குடும்பம் பெரிசாகப் போகுது..இரண்டாவது உண்டாயிருக்கா விஜி.” என்று சில மாதங்களில் உலகத்தைப் பார்க்க தயாராக இருந்த குழந்தையை அன்று தான் உண்டாகியது போல் அறிவித்தார் ஜமுனா.
அவனுக்கு ஏன் முன்பே தெரிவிக்கவில்லை என்று கோபப்படாமல்,“ரொம்ப சந்தோஷம் டா.” என்று மகேஷிடம் அவன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் சிவசங்கர்.
அதைத் தலையசைவில் ஏற்றுக் கொண்டான்  மகேஷ்.  உடனே அவனுடைய விஷயத்தைச் சொல்ல வேண்டிய தருணம் அதுதான் என்று தப்புக் கணக்குப் போட்டு,
“அப்பா, உங்க எல்லார்க்கிட்டேயும் ஒரு விஷயம் சொல்லணும்.” என்றான்.
“என்ன டா சொல்லணும்..நானும், நீயும் ஃபோன்லே பேசிக்கிட்டு தானே இருக்கோம்..அப்போ சொல்லியிருக்கலாமே.” என்று சொன்ன ஜமுனா ஏன் விஜி உண்டாகியிருப்பதை அதே ஃபோன் காலில் சொல்லவில்லை என்று சிவசங்கருக்கு தோண, அந்த எண்ணத்தைப் புறம் தள்ளிவிட்டு அவன் சொல்ல வந்ததைச் சொன்னான்.
“நான் மறுமணம் செய்துகலாம்னு இருக்கேன்..கடைக்கு வர்ற சுப்ரமணி ஸருக்கு தெரிஞ்சவங்க..அவப் பெயர்..” என்று அவன் தொடருமுன்,
“நான் உங்ககிட்டே என்ன சொன்னேன்..என் விஷயத்தை முன்னாடியே இவன்கிட்டே பேச சொன்னேனில்லே..நீங்க தான் வேணாம்னு தள்ளிப் போட்டீங்க..இன்னொரு கல்யாணம் செய்துக்க போறான்..இப்போவாவது பேசுங்க.” என்று வெங்கடசாலத்திடம் கோபப்பட்டான் மகேஷ்.
அவன் மறுமணச் செய்தியைக் கேட்டு மகேஷ் ஏன் கோபப்படுகிறானென்று புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தா சிவாவிடம்,
“இவ்வளவு நாள் உன்னை தொந்தரவு செய்ய வேணாம்னு நினைச்சேன்.. ஆனா இப்போ சில விஷயங்கள் பேசிடலாம்னு மகேஷ் நினைக்கறான்.” என்று தம்பியின் சார்பாக அவன் அப்பா பேச, விஷயம் பெரிது என்று உணர்ந்த சிவா அவன் அம்மாவைப் பார்க்க அவரோ அவருக்கும் அதற்கும் சம்மந்தமில்லாதது போல் அமர்ந்திருந்தார்.
“சொல்லுங்க பா.”
“இனிமே கடை வருமானத்திலே இவனுக்கும் ஒரு பங்கு மாசா மாசம் கொடுத்திடு.” என்றார் வெங்கடாசலம்.
“வருமானமே இல்லைன்னு சொல்றேன் இவனுக்கு எப்படிப் பா மாசா மாசம் பங்கு கொடுக்க முடியும்?உங்களுக்கு ஒரு பங்கு கொடுக்கறேனே பா.” என்று ஆதங்கத்துடன் சொன்னான் சிவா.
அதற்கு வெங்கடாசலத்திடமிருந்து பதில் இல்லை.
அவன் இரவு உணவை நிதானமாகச் சாப்பிட்டு முடித்து கை கழுவிக் கொண்டு வந்த மகேஷ்,”அப்போ கடையை யாருக்காவது லீஸ்க்கு விட்டிட்டு அந்தப் பணத்தை நாம மூணு பங்கா பிரிச்சுக்கலாம்.” என்றான்.
“அப்போ நான் வருமானத்திற்கு என்ன செய்யறது? அந்த இடத்திலே கிட்டதட்ட இருபது வருஷமா தொழில் செய்யறேன்.” என்றான் சிவா.
‘வேற எங்கேயாவது கடை போடு..என்னாலேயும் செலவைச் சமாளிக்க முடியலை..முன்னே அப்பாவும் அம்மாவும் உன்கூட பாதி நாள் இருந்தாங்க இப்போ அப்படியில்லை..வருஷத்திலே இரண்டு மாசம்  உன் வீட்லே இருந்தா பெரிசு.” என்றான் மகேஷ்.
அவன் இங்கு வரும் போதெல்லாம் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வந்தது, சில சமயங்களில் ஃபோன் மூலம் அவன் அம்மா கொடுக்கும் லிஸ்ட்டை மனோகர் மூலம் ஹோம் டெலிவரி செய்தது என்று அவன் செய்த உதவிகளைச் சொல்லிக் காட்டாமல்,
“இந்தக் கடையை விட்டிட்டு வேற இடம் போகணும்னா வீட்டை மாத்தணும், ஸ்கூலை மாத்தணும்..உங்க எல்லாரையும் விட்டு தூரப் போகணும்..குழந்தைங்களுக்குக் கஷ்டமாயிடும்.” என்றான்.
“சரி அப்போ கடையை நீயே எடுத்துக்க..மொத்தமா எனக்கும் அப்பாக்கும் பணத்தைக் கொடுத்திடு.”
அதைக் கேட்டு அதிர்ந்த சிவா, “அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்? ஏற்கனவே கடன்லே இருக்கேன்.”
“நான் என்ன செய்ய முடியும்? கடை வருமானத்திலே பங்கு கொடுக்க மாட்டேங்கற, கடையை லீஸுக்கு விட ஒத்துக்க மாட்டேங்கற..அப்போ அந்தக் கடைலே எனக்கு உரிமை இல்லைன்னு சொல்றேயா? நாளைக்கே எனக்கு வேலை போயிடுச்சுன்னா நான் அங்கே வந்து உட்கார முடியாதா? அது உன்னோட இடம் மட்டும் தானா?” என்று கத்தி சிவாவை முடிவு எடுக்கக் கட்டாயப் படுத்தினான் மகேஷ்.
“ஏன் டா கத்தற? உனக்கும் கொடுக்கற அளவுக்கு வியாபாரம் இல்லைன்னு சொல்றான்.” என்றார் வெங்கடாசலம்.
“வர்ற வருமானத்திலே கொடுக்கச் சொல்லுங்க.”
அதைக் கேட்டவுடன்,”அப்பா வைச்சிருந்தது தினசரி, வாரப்பத்திரிக்கை கடை..நான் வைச்சிருக்கறது டிஜிட்டல் ப்ரிண்டிங் கடை..என்னோட படிப்பை வைச்சு ஆரம்பிச்சு,  என்னோட உழைப்புலே இந்த அளவு முன்னேறியிருக்கேன்..கடை வருமானத்திலே உனக்குப் பங்கு கிடையாது..கடை இருக்கற இடத்திலே தான் உனக்குப் பங்கு இருக்கு.” என்று சிவாவும் பதிலுக்கு கத்தினான்.
“சரி அப்போ அந்த இடத்தோட பங்கை ரொக்கமாக் கொடுத்திடு.” என்று அவன் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்தான் மகேஷ்.
“உடனே எப்படி டா என்னாலே முடியும்? இரண்டு வருஷமா எவ்வளவு கஷ்டப்படறேண்ணு உனக்குத் தெரியாதா?” என்று ஆத்திரப்படாமல் அமைதியாகப் பேசினான்  சிவா
“கஷ்டப்படறவன் இப்போ எதுக்கு மறுபடியும் கல்யாணம் செய்துக்கற? மாசா மாசம் எனக்கு பணம் கொடுக்க முடியாதுண்ணு சொல்ற அப்போ உன்னோட புதுக் குடும்பத்திற்குப் பணம் எங்கேயிருந்து வரப் போகுது?” என்று மகேஷ் எல்லை மீறி பேசியதைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்தனர் வெங்கடாசலமும் ஜமுனாவும்.
அவன் மறுமணம் செய்து கொள்வதை அவன் வீட்டினர் விரும்பவில்லை என்று தெரிந்து கொண்ட சிவா அந்தப் பேச்சிற்கு ஒரு முடிவு கட்ட நினைத்து,
“வேற என்ன செய்யச் சொல்ற? எத்தனை நாள் இப்படி இந்தக் குழந்தைகளை உன் வீட்லேயும் அக்கா வீட்லேயும் விட முடியும்? சாவித்திரி அம்மா வரலைன்னா ஸ்கூலுக்கு லீவு, வெளியே இருந்து சாப்பாடுன்னு சமாளிச்சுக்கிட்டு இருக்கேன்.. சின்னவ சில நாள் படுக்கையிலேயே பாத்ரூம் போகறா..அந்தப் பழக்கத்தை எப்படி மாத்தறதுண்ணு தெரியலை..
எனக்கு வயசாயிடுச்சு உன் வீட்டைப் பார்த்துக்க முடியாது, உன் பிள்ளைங்களைக் கவனிக்க முடியாதுண்ணு அம்மா சொல்லிட்டாங்க….இரண்டாவது கல்யாணத்திலே என் குடும்பம் பெரிசாகும், செலவும் அதிகமாகும் அதே சமயம் இந்த அல்லாட்டமெல்லாம் நின்னு போகும்….இங்கே வர்றது, அக்கா வீட்டுக்குப் போகறது, ஸ்கூலுக்கு போகறதுன்னு இப்படியே தான் நான் ஓடிக்கிட்டு இருக்கேன்.கடைலே வருமானத்தை பெருக்க வேற ஏதாவது யோசிச்சு செய்ய முடியலை..இப்போ இருக்கறதைப் பார்க்கக் கூட நேரம் கிடைக்கறதில்லை…மனோகரை நம்பி தான் கடையை நடத்தறேன்.”
அவர் மீது பழி விழுந்தவுடன் வெகுண்ட ஜமுனா,
“உன்னைப் பற்றி கவலைப்படாம தான் பார்க்கறவங்கிட்டே எல்லாம் உனக்காகப் பொண்ணு தேடச் சொன்னேனா? ..இரண்டு பெண் குழந்தைங்கன்னு சொன்னவுடனேயே சோத்துக்கு வழியில்லதாவங்க கூட காணாமப் போயிடறாங்க..எல்லாம் என் தலையெழுத்து..இரண்டு பையங்களைப் பெத்தும் என் பொழைப்பு இப்படி நாறிப் போயிருக்கு..என் உடம்பைப் பற்றி உனக்குக் கவலை இருக்கா டா? இந்த வயசுலே என்னாலே உன் இரண்டு பொண்ணுங்க பின்னாடி ஓட முடியுமா டா?..கால் ஒரு பக்கம் போகுது..கை ஒரு பக்கம் போகுது..இப்போ இவனுக்கும் இன்னொரு குழந்தை வரப் போகுது..என்னாலே எதுவும் முடியாதுண்ணு தான் அக்ஷ்யாவை பக்கத்திலே இருக்கற பள்ளிக்கூடத்திலே சேர்க்கப் போறான்..
இனி விஜியாலேயும் உன் பொண்ணுங்களைப் பார்த்துக்க முடியாது.. விதவையோ, விவாகரத்தனாவளோ, ஒரு குழந்தைக்காரியோ, இரண்டு குழந்தைக்காரியோ..உன் இரண்டு பொண்ணுங்களை எவப் பார்த்துக்கறாளோ அவளைக் கட்டிக்கிட்டுப் பொங்கிப் போடச் சொல்லி உன் பொழைப்பைப் பார்த்துக்கோ..…..என்னை எதுக்கும் எதிர்பார்க்காதே….நான் எப்போதும் போல எனக்குத் தோணின போது உன் வீட்டுக்கு வருவேன் , தங்குவேன், போவேன்..
மகேஷுக்கு அவன் பங்கைக் கொடுக்கும் போது எங்க பங்கையும் சேர்த்துக் கொடுத்திடு.. வருங்காலத்திலே கடையை வைச்சுத் திரும்ப எந்தப் பிரச்சனையும் வேணாம்..கடை உன்னோடது மட்டுமா இருக்கட்டும்.” என்று கடை பிரச்சனைக்கும் சிவாவின் மறுமணத்தின் மூலம் வரப் போகும் பிரச்சனைகளுக்கும் அவர் முடிவை முன்கூட்டியே மகனிற்குத் தெளிவாகத் தெரியப்படுத்தினர் ஜமுனா.
அவன் அம்மா பேசியதற்கு அவன் அப்பாவும் தம்பியும் அமைதியாக இருந்ததைப் பார்த்து அவர்கள் மூவரும் ஏற்கனவே பேசி முடிவு செய்தபின் தான் அவனை அழைத்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட சிவசங்கர், 
“கடை எத்தனைக்கு போகும்ணு இனிமேதான் நான் விசாரிக்கணும்.” என்றான்.
“ராஜேந்திரன் மாமாவை விசாரிச்சுட்டேன்..அந்த இடம் இன்னைக்கு முப்பது லட்சம் பெறும்னு சொல்றார்…. பத்து லட்சம் எனக்கு, பத்து லட்சம் அப்பாக்கு.” என்றான் மகேஷ்.
அக்காவிற்கும் மாமாவிற்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கிறது ஆனால் அவனுக்குத் தெரியப்படுத்தவில்லை.  அவன் குடும்பத்தினர் அனைவரும் ஒரு குழுவாகவும் அவன் தனி ஆளாக இருந்ததை உணர்ந்தவன்,
“ஒரு வருஷம் பொறுத்துக்கோ..முதல்லே உனக்குக் கொடுக்கறேன்..அப்புறம் அப்பாக்குக் கொடுக்கறேன்..எப்படியும் உங்க இரண்டு பேருக்கும் கொடுக்கறத்துக்குள்ளே இரண்டு வருஷத்துக்கு மேல ஆகிடும்.”
“அதுக்குள்ளே அந்த இடத்தோட மதிப்பு இன்னும் கூடிடும்..காயத்ரி அக்காவோட நகையெல்லாம் இருக்கே.” என்று அத்தனை நேரம் மௌனமாக இருந்த விஜி அவள் வாயைத் திறந்து ஆலோசனை கொடுத்தாள்.
உடனே,”நீ இரண்டு வருஷமா உன் இரண்டு பொண்ணுங்களோட இவ்வளவு கஷ்டப்படற ஆனா அண்ணி வீட்டு ஆளுங்க உன் பக்கம் திரும்பிக்கூட பார்க்கலை..அவங்க வீட்லே எல்லாரும் நல்ல நிலைலே இருக்காங்க..அவங்ககிட்டே நீ உதவி கேளு.. உன் பொண்ணுங்களுக்கான்னு சொல்லு…அவங்க கண்டிப்பாச் செய்வாங்க.” என்று அவன் மனைவியின் வீட்டில் அவன் மகள்களைக் காட்டிப் பிச்சை கேட்கச் சொன்னான் சிவசங்கரின் தம்பி.
“உனக்கு பணம் தானே வேணும்..நான் ஏற்பாடு செய்யறேன்..யார்கிட்டே கேட்கணும்னு நீ எனக்குச் சொல்ல வேணாம்..காயத்ரி வீட்டு ஆளுங்களுக்கு நான் சொல்லித்தான் என் இரண்டு பொண்ணுங்க அவங்க வீட்டுப் பேத்திங்கன்னு தெரிய வேணாம்..அந்த வீட்டோட அவ போனப் பிறகு எனக்கு எந்த உறவுமில்லை..
இப்போ நானே வேற புதிய உறவை ஏத்தக்க போறேன் இந்த நேரத்திலே அவங்ககிட்டே எதுக்குப் போய் நிக்கணும்..எனக்கு யோசிக்க கொஞ்சம் டயம் கொடு..ஏதாவது ஏற்பாடு செய்யறேன்.” என்று சொல்லிவிட்டு அவன் குழந்தைகளை அழைக்க சிவா குரல் கொடுக்கும் முன் குரல் கொடுத்தனர் மகேஷ், விஜி, ஜமுனா மூவரும்.  
அவர்கள் குரலைக் கேட்டு வெளியே வந்த குழந்தைகளை அழைத்துக் கொண்டு புறப்பட்ட சிவாவிடம்,”இந்த ஞாயிற்றுக் கிழமை எங்களை உன் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போ..விஜிக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க..எவ்வளவு நாள் அவளும் அவங்க அம்மா வீட்லே இருப்பா? அதான் அவ இங்கே வந்தவுடனே நான் அங்கே வந்திடலாம்னு நினைச்சேன்.” என்று சிவாவின் மீது அவர் ஆதிக்கத்தை நிலை நாட்டினார் ஜமுனா.
“காலைலே வர முடியாது..இவங்களையும் அழைச்சுக்கிட்டு கடைக்குப் போகணும்.. இராத்திரி வரேன்.” என்று ஜமுனாவின் ஆதிக்கத்திற்கு அங்கீகாரம் கொடுத்தான் சிவசங்கர்.

Advertisement