Advertisement

அத்தியாயம் – 11_2
“ஆமாம்..இரண்டு முறை போனேன்..பூட்டி இருந்திச்சு..கார், ஸ்கூட்டி, இரண்டும் பார்க்கிங்லே இல்லை..சுப்ரமணி ஸர் வீட்டுக்குப் போய் விசாரிச்சேன்..அவங்க மனைவி சொன்னாங்க இந்த வீட்டை வாடகைக்கு விட்டிட்டு மேகலாவோட  மக வீட்டுக்குப் பூனாக்கு போகப் போறாண்ணு.” என்று சொன்னவன் குரலில் ஏதோ ஒன்று இருப்பதைக் கண்டு கொண்டான் அவினாஷ்.
“ஆமாம்..இனி பூனா தான்..அந்த வீட்டை வாடகைக்கு விடப் போறா..உங்களுக்கு யாராவது நல்ல டெனெண்ட் தெரிஞ்சா சுப்ரமணி ஸர்கிட்டே சொல்லுங்க.” என்று கண்ணுக்குத் தெரியாத துண்டில் போட்டான்.
“ஏன் திடீர்ன்னு..இங்கே வேலை செய்துகிட்டு இருக்காளே?” என்று துண்டிலைப் பட்டும் படாமல் பிடித்துக் கொண்டவனுக்கு கௌரி மீது ஏதாவது ஈடுபாடு இருக்கிறதா? இல்லையா? என்று திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ள அவனைக் காயப்படுத்த ஆயுத்தமானான் அவினாஷ்.
“அங்கே வேற வேலை தேடிப்பா..ஆனா வேலைக்காக போகலை.” என்று அவினாஷ் மறுத்தவுடன், 
“வேலைக்காக இல்லைன்னா எதுக்குப் பூனாக்குப் போகணும்?” என்று கௌரி  ஊரை விட்டு போகும் காரணத்தை அறிய முற்பட்டான் சிவா.
“நல்ல வாழ்க்கை துணைக்காகப் போகறா.” 
அதைக் கேட்டு சிவானினுள் எழுந்த ஏமாற்றம், ஆவல் இரண்டும் தடுப்பை உடைத்துக் கொண்டு பொங்கி எழுந்தது,“அவக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சா?..மாப்பிள்ளை என்ன செய்யறார்? நம்ம ஊர்க்காரங்களா இல்லை பூனாக்காரங்களா? சுப்ரமணி ஸர் பார்த்துக் கொடுத்தாங்களா? அவர் டூர் ஏற்பாடு செய்து கொடுக்கறதுனாலே பூனாலே அவருக்கு நிறைய பேரைத் தெரியும்..ஒரு முறை பூனாவை சுற்றி இருக்கற அஷ்ட கணபதி கோவில்களுக்கு டூர் போனாங்க..நான் தான் அதுக்கு ப்ரோகராம் ப்ரிண்ட் செய்து கொடுத்தேன்.” என்று அலை அலையாக ஆரப்பரித்தான்.
“இல்லை..சுப்ரமணி ஸருக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை..மேகலாவும் மேகலாவோட பொண்ணு மாலினியும் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும்னு ஒரு முடிவோட இருக்காங்க..மேகலாவோட பையனும் அவன் ஊருக்குப் போகறத்துக்கு முன்னாடி கௌரி கல்யாணத்தை முடிக்கணும்னு நினைக்கறான்..மேகலாவோட கணவர் மாப்பிள்ளை வீட்லே பேசத் தயாரா இருக்கார்..அதனாலே பூனாலே போனவுடனே அவ கல்யாணதான்னு நினைக்கறேன்..சிவா, அனன்யா முழிச்சுக்கிட்டா..உங்களோட அப்புறம் பேசறேன்.” என்று மூச்சு விடமுடியாதபடி துண்டிலை இறுக்கியப் பின் அழைப்பைத் துண்டித்தான் அவினாஷ்.
கௌரிக்கு யாருமில்லை என்று சுப்ரமணியன் ஸர் சொன்னது உடனே சிவாவின் நினைவிற்கு வந்தது. இப்போது கௌரியின் கல்யாணத்தை நடத்த பொறுப்பேற்று இருக்கும் மேகலாவின் குடும்பம் திடீரென்று எங்கேயிருந்து வந்தது? அவர்களிடம் அவனைப் பற்றி, அவனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியதைப் பற்றி கௌரி சொல்லவில்லையா? அவனுக்குத் தகவல் சொல்லாமல் பூனாவிற்கு போக, வேறொருவனைத் திருமணம் செய்து கொள்ள அவளுக்கு எப்படி மனம் வந்தது? என்று என்னவோ கௌரிக்கும் அவனுக்கும் ஒப்பந்தம் இருந்தது போல் அதை அவள் மீறியது போல் அவள் மீது சினம் கொண்டான் சிவா.  
அதன் விளைவாக உடனே அவளுக்கு ஃபோன் செய்ய, தூக்கத்தில் இருந்தவள் அழைப்பை ஏற்றவுடன்,
“மாலினி உனக்கு பூனாலே மாப்பிள்ளை ரெடியா வைச்சிருக்கும் போது என்னைப் பார்க்க எதுக்கு வந்த?” என்று பாதி தூக்கத்தில் இருந்தவளிடம் பஞ்சாயத்திற்கு வந்தான்.
சிவாவின் சினம் கௌரியைச் சென்றடைய சில நொடிகளானது.  அந்தச் சினத்தின் காரணம் உடனே புரிந்ததால் கடந்த சில நாள்களாக சுணக்கம் அடைந்திருந்த மனம் சுகமாக உணர்ந்தது.  அதை மறைத்துக் கொண்டு,”உங்ககிட்டே இந்த விவரமெல்லாம் யார் சொன்னாங்க?” என்று விசாரித்தாள்.
“நீ சொல்லலை..நானா கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்..ஊரை விட்டுப் போகப் போற அதைப் பற்றி என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்குத் தோணவேயில்லையா?”என்று மீண்டும் கோபப்பட,
“எதுக்குச் சொல்லணும்? அதை தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன செய்யப் போறீங்க? உடனே என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லப் போறீங்களா? இல்லை இதே ஊர்லே வேற நல்ல மாப்பிள்ளையா எனக்குப் பார்த்துக் கொடுக்கப் போறீங்களா?” என்று அவன் சினத்தைக் கிளறி அவன் வாயிலிருந்து அவளுக்குத் தேவையான பதிலைப் பெற நினைத்தாள் கௌரி.  ஆனால்,
“கௌரி, தேவையில்லாம பேசாதே..உன்னோட நல்லதுக்குதான் உனக்கு நான் வேணாம்னு  சொன்னேன். புரிஞ்சுக்க..” என்று அவன் பழையபடி பேச,
அவன் மனத்தில் அவள் மேல் ஏற்பட்டிருக்கும் ஈடுபாட்டை தொடர்ந்து மறுத்துக் கொண்டிருந்தவனின்  செய்கையில் கோபமடைந்தவள்,“நீங்க என்னை வேணாம்னு சொன்ன பிறகு நான் எந்த ஊருக்கு போனா உங்களுக்கு என்ன? யாரைக் கல்யாணம் செய்துகிட்டா உங்களுக்கு என்ன? நீங்க ஒருத்தர் இந்த உலகத்திலேயே விடோவரா?” என்று வாயை விட்டாள் கௌரி.
“நான் அப்படிச் சொன்னேனா? உனக்குப் புத்தி சொல்ல நினைச்சேன் பாரு..என்னைச் சொல்லணும்.”
“உங்களை என்ன வேணும்னாலும் சொல்லிக்கோங்க..எனக்கு அதைக் கேட்டுக்கிட்டு இருக்க நேரம் கிடையாது..நான் தூங்கணும்.” என்று கோபமாகக் கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.  
அப்போது அவள் அறை கதவைத் தட்டி, “கௌரி, கௌரி” என்று விளித்தான் அவினாஷ்.
அந்த நேரத்தில் அவினாஷின் விளிப்பைக் கேட்டு மேகலா ஆன் ட்டிக்குத் தான் என்னவோ ஏதோயென்று நினைத்து,“என்ன ஆச்சு அண்ணா? என்று பதற்றத்துடன் கதவைத் திறந்தாள் கௌரி.
“உனக்கு என்ன மா ஆச்சு? இந்த நேரத்திலே பக்கத்து ரூம்லே கேட்கற அளவு கத்தற? ஏசி போட்டுக்கலையா?” என்று தங்கையை ஆழம் பார்த்தான் அண்ணன்.
“கொஞ்ச நேரம் போடிட்டு அணைச்சிட்டேன்.”
“இந்த நேரத்திலே யாரோட சண்டை போட்டுக்கிட்டு இருக்க?”
“நான் போடலை..அவங்கதான் என்கூட சண்டை போடறாங்க.”
“சிவா தானே?” என்று கேட்டு அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தினான் அவினாஷ்.
அமைதியாக இருந்து அவன் கேள்விக்கு ஆமாமென்று பதில் அளித்த கௌரியிடம்,
“ஒரு திடமான முடிவு எடுக்கச் சொல்லி நல்லாச் சண்டை போடு..உன்னை வேணாம்னு சொன்ன அந்த ஆளை நம்ம வீட்டுக்கு வரவழைச்சு, மேகலா கால்லே விழுந்து பொண்ணு கொடுங்கன்னு கேட்க வைக்கற அளவுக்குப் பயங்கரமா சண்டை போடு.” என்று அவளைப் போருக்குத் தயாராக்கினான் அவினாஷ்.
அதைக் கேட்டு,“அண்ணா..உங்களுக்கு எப்படி?” என்று கௌரி மறுபடியும் கத்த,
“கத்தாதே..அனன்யாவை இப்போதான் தூங்க வைச்சேன்..முதல்லே சிவா ஃபோன் செய்து அவளை எழுப்பினார்..இப்போ நீ சத்தம் போட்டுத் திரும்ப எழுப்பிடாதே..நீ பூனா போகறது அவருக்குத் தெரிஞ்சிடுச்சு..மேகலா யாரு? மேகலா மக யாருன்னு இராத்திரிலே ஃபோன் செய்து மேகலா மகன்கிட்டேயே கேட்கறாரு..நல்லா மண்டை காயட்டும்னு விவரம் எதுவும் சொல்லலை..அடுத்து உன்னைப் பார்க்கணும்னு தோணும் அப்போ மேகலா வீடு எங்கேன்னு கேட்டு ஃபோன் வரும்..உன்னை வேணாம்னு இரண்டு தடவை சொன்னார் இல்லே அதுக்கு தண்டனையா மேகலா அட் ரெஸ் கொடுக்காம சுத்த விடறேன்.” என்று வேண்டுமென்றே வன்மத்தோடுப் பேசினான் அவினாஷ்.  அவன் எதிர்பார்த்தது போல்,
“வேணா அண்ணா..அவங்க என் நல்லதுக்குதான் சொன்னேன்னு சொல்றாங்க.” என்றாள் கௌரி.
“கௌரி, சிவாவோட நல்லது, கெட்டதுலே உனக்குப் பங்கு வேணுமா? வேணாமா? நீயும் தெளிவாச் சொல்லிடு.”
“எனக்கு வேணும்..அவங்க வேணாம்னு சொல்றாங்க.”
“அவர் அப்படி சொல்றத்துக்குக் காரணமிருக்கே கௌரி..இரண்டாவது தடவை திருமணம் செய்யப் போறாரு..உன்னைவிட படிப்பிலே, அந்தஸ்திலே கம்மி..அதனாலே தயங்கறாரு..முதல் மனைவி அவருக்கு ஏற்ற மாதிரி பார்த்து அவங்க வீட்லே கல்யாணம் செய்து வைச்சிருப்பாங்க..அதே போல நீயும் உனக்கு ஏற்ற மாதிரி கல்யாணம் செய்துக்கணும்னு அவர் நினைக்கறார்..உனக்கு அவர் தான் ஏற்றவருன்னு நீ முடிவு செய்திருக்க அதை அவராலே ஏற்க முடியலை.. அதே சமயம் உன் முடிவை ஏற்றுக்காம இருக்கவும் முடியலை..அதான் குட்டி போட்ட பெட்டை பூனையாட்டம் அந்தக் கடுவன் பூனை உன்னைச் சுற்றி வருது.”
“இப்போ என்ன அண்ணா செய்யறது?”
“அவர் வந்து உன்னைக் கல்யாணம் செய்துக்க கேட்டா நாங்க கல்யாணம் செய்து கொடுக்கறோம்….இல்லைன்னா உன் பிளான் படி பூனா போ..மாலினி அக்கா சொல்ற ஆளைக் கல்யாணம் செய்துக்கோ.” என்று அவினாஷ் சொன்னதற்கு கௌரியிடமிருந்து பதில் வரவில்லை.  சில நிமிடங்கள் கழித்து, 
“என்ன யோசனை கௌரி?”
“இப்போவும் வேணாம்னு தான் சொன்னாங்க..அதான் எப்படி அவங்களா வருவாங்கண்ணு யோசிக்கறேன்.” 
“உன்னாலே அவருக்கு இராத்திரி தூக்கம் போயிடுச்சு அதனாலே கட்டாயம் உன்னைத் தேடி வருவாரு.”
“அவராலே எனக்குத் தூக்கம் போகுது…பூனா போகச் சரின்னு சொன்னப் பிறகு இப்போ இந்த மாதிரி சொன்னா ஆன்ட்டி ஒத்துப்பாங்களா?”
“முதல்லே சிவா சரின்னு சொல்லியிருந்தா உன்னைக் கல்யாணம் செய்து கொடுத்திருப்பேன்னு தானே அம்மா சொன்னாங்க..அதை இப்போ செய்வாங்க…சிம்பில்.”
“அவ்வளவு சிம்பிலா இந்த விஷயம் முடிஞ்சிடுமா?”
“முடிஞ்சிடும்.” என்று தங்கைக்குக் வாக்குக் கொடுத்து தூங்கச் சென்ற அவினாஷ் அறியவில்லை சிவா சந்திக்கப் போகும் சிக்கல்களையும் அதைத் தாண்ட அவன் வழி வகுத்துக் கொடுக்கப் போவதையும்.
அன்று இரவு பூனாவை நினைத்துப் கடுவன் பூனைக்குத் தூக்கம் கெட்டுப் போனது.  பூனா போக வேண்டியவளோ கடுவன் பூனையையும் அதன் குட்டிகளையும் நினைத்தபடி நிம்மதியாகத் தூங்கிப் போனாள்.

Advertisement