Advertisement

அத்தியாயம் – 11_1
ராம கிருஷ்ணன் அங்கிளின் கோபத்தில் சுப்ரமணி ஸர் ஸரிலிருந்து சர்ரென்று சறுக்கி அவன், இவன் என்று ஆனாதைப் பார்த்து அதற்கு மேல் அவரிடம் முறையிட முற்படாமல் அவள் வாயை மூடிக் கொண்டாள் கௌரி. ஒரு வருடத்திற்கும் மேலாக அவள் வீட்டில்  தனியாக இருந்தது அவள் அம்மாவின் பிரிவை இன்னும் ஆழமாக அவளை உணர வைத்திருந்தது.  மேகலா ஆன் ட்டி சொல்வது போல் அவளால் தனியாக இன்னும் எத்தனை நாள்கள் அதே வீட்டில் இருக்க முடியுமென்று தெரியவில்லை.  அவள் மனத்திற்கும், உடலிற்கும் புத்துணர்வு தேவைப்பட்டது.  அவள் அம்மா உயிரோடு இருந்த போதும் சரி அதற்கு பிறகும் சரி அவளுக்கு அரணாக, ஆதரவாக, ஆறுதலாக இருப்பது இந்தக் குடும்பம் தான்.  இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை விட நிச்சயமாக பூனாவில் நல்ல வேலை கிடைக்கும். அதனால் மாலினி அக்காவோடு போய் விடலாம் என்ற எண்ணம் கௌரியினுள் துளிர் விட்டது.  அந்த எண்ணம் துளிர் விட்ட அதே சமயம் ஏற்கனவே இருந்த துளிரில் இரண்டு அரும்புகள் தோன்றின.  அதில் தீபா, சூர்யாவின் முகங்களைக் கண்டவுடன் அதை மறக்க அந்த எண்ணங்கள் மரிக்க அவளை அலுவலக வேலையில் அமிழ்த்திக் கொள்ள முடிவு எடுத்தாள் கௌரி.
அடுத்து வந்த நாள்களில்  அவன் அம்மா சொன்னபடி கௌரிக்குத் தேவையான சில பொருள்களை அவர்கள் வீட்டிற்குக் கொண்டு வந்தான் அவினாஷ்.  அவளுடையை ஸ்கூட்டியும், காரும் அந்தப் பட்டியலில் முதல் இடம் பெற்றிருந்தது.
இந்தத் திடீர் திருப்பத்தைப் பற்றித் தகவல் தெரியாமல் கேமரா போட்ட தினத்திற்குப் பின் கௌரியிடமிருந்து ஒரு தகவலும் இல்லையென்று கவலை அடைந்திருந்தான் சிவா.  அது ஒழுங்காக வேலை பார்க்கிறதா? யாராவது மீண்டும் மணியடித்து தொல்லை கொடுத்தார்களா? கார் நன்றாக ஓடுகிறதா? கார் டயரும், ஸ்கூட்டியின் ஸீட் கவரும் சுகமாக இருக்கின்றனவா?  கௌரி சுகம் தானா? என்று எந்த விவரமும் தெரியாமல் கௌரியின் எண்ணங்களில் அமிழ்ந்து கொண்டிருந்தான். அதன் காரணமாக மூலாதாரத்தில் குடியிருந்த சிவாவின் குண்டலினி  சக்தி எறும்பு போல் ஊர்ந்து ஸ்வாதிஷ்டானத்தை அடைந்தது.  அதனால் ஒருமுறை கௌரியின் வீட்டிற்குச் சென்று சிசி டிவியிலிருந்து ஸீட் கவர் வரை அனைத்தையும் நேரடியாக சரி பார்க்கும் சாக்கில் கௌரியையும் பார்த்து விடலாமென்று முடிவு செய்து அவளுக்கு ஃபோன் செய்து தகவல் கொடுக்காமல் இரண்டு முறை நேரடியாக அவள் வீட்டிற்குச் சென்றான்.
முதல் முறை அவள் வீட்டு வாசலில் பூட்டு இருந்ததைப் பார்த்து ஒருவேளை வெளியூருக்குச் சென்றிருக்கலாம் என்று எண்ணி வேறு யோசனைகளுக்கு இடம் கொடுக்காமல் திரும்பி விட்டான். அடுத்த முறை அவள் ஆபிஸ்லிருந்து திரும்பும் நேரத்தைக் கணக்கிட்டு கரெக்ட்டாக அவள் வீட்டிற்குச் சென்று போது மறுபடியும் வீடு பூட்டியிருந்தது. இந்த முறை யோசனையுடன் கீழே வந்தவன் பார்க்கிங்கில் அவளுடைய ஸ்கூட்டி, கார் இரண்டையும் தேட, அவை காணவில்லை.  உடனே என்னவாயிற்று கௌரிக்கு என்ற கேள்விக்கு அவனுள் விஸ்வரூம் எடுக்க அதற்குப் பதில் தேடி சில நிமிடங்கள் கழித்து சுப்ரமணியன் ஸர் வீட்டு அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தான் சிவா. 
 வாசல் கதவை அவர் மனைவி திறந்தவுடன் தான் அவர் டூரில் இருப்பது அவன் நினைவிற்கு வந்தது.
”என்ன சிவா? ஸர் ஏதாவது கொடுக்கச் சொல்லிட்டுப் போனாரா?” என்று விசாரித்தவுடன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான். 
“இல்லை..இல்லை..இந்த ஸைட்…” என்று சிவா தடுமாற,
“வா…உள்ளே வா..” என்று அவர் அழைக்க,
‘வேணாம்..நான் கிளம்பறேன்..” என்று சொன்னவனுக்கு கௌரியைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அங்கேயிருந்து கிளம்பிப் போக ஸ்வாதிஷ்டானத்தில் பிரதிஷ்டை ஆகியிருந்த அவன் குண்டலினி சக்தி அனுமதி மறுத்தது. அதனால்,
“கௌரி வீட்லே சிசிடிவி எப்படி வேலை பார்க்குதுண்ணு தெரிஞ்சிட்டுப் போகலாம்னு வந்தேன் .. வீடு பூட்டியிருக்கு.” என்று சொன்னவன் இது இரண்டாவது விஸிட் என்பதை வெளியிடவில்லை.
“ஸர் உன்கிட்டே சொல்லலையா? அவ இப்போ இந்த வீட்லே இல்லை..மேகலா வீட்டுக்குப் போயிட்டா..இதை  வாடகைக்கு விட்டிட்டு பூனாக்குப் போகப் போறா…அந்த சிசிடிவையைக் கொண்டு வந்து இங்கே போட்டிடலாம்னு நினைக்கறார் ஸர்.” என்றார்.
அவன் அதிர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல்,“பூனாக்கா? ஏன்?” என்று கேட்க,
“மேகலாவோட பொண்ணு அங்கே தான் இருக்கா..கௌரி அவளோட தான் இருக்கப் போறா..இனிமே அங்கேதான்.” என்றார் திட்டவட்டமாக.
மேகலா யார்? அவருடைய பெண் யார்? இனி ஏன் எல்லாம் பூனா தான்? என்று கேட்க நினைத்த அனைத்தையும் அடக்கி,”தாங்க்ஸ்.” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான் சிவா.
அன்று இரவு கடையைப் பூட்டி விட்டு அவன் வீட்டுக்கு வந்த போது இரவு மணி ஒன்பது.  ஹாலில் விரித்திருந்த பாயில் சூர்யா படுத்திருக்க அவள் அருகில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள் தீபா. வீட்டு வாசலில் இவனுக்காகக் காத்திருந்த சாவித்திரியம்மா,”வரேன் பா.” என்று அப்படியே வாசலோடு புறப்பட்டுச் சென்றார்.
“நீ இன்னும் தூங்கலையா? “ என்று தீபாவை விசாரித்து விட்டுப் படுக்கையறைக்குச் சென்று வேட்டிக்கு மாறி வெளியே வந்தான்.  நேரே சமையலறைக்குச் சென்று அங்கே இருந்த உணவை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு ஹாலில் தூங்கிக் கொண்டிருந்த சூர்யாவின் அருகில் அமர்ந்தான்.
 சாப்பிட ஆரம்பித்தவனிடம் ஒரு நோட்டை நீட்டினாள் தீபா.  
“என்னது ? என்று விசாரிக்க,
“சூர்யாக்கு ரைட்டிங் சரியா வரலைன்னு டீச்சர் சொல்றாங்க பா..தினமும் அவங்க கொடுக்கற வேலையை முடிக்காம அப்படியே கிளாஸ்க்கு வந்திடறாளாம்..அவளோட மேம் என்னைக் கூப்பிட்டு இதை உங்ககிட்டே கொடுக்கச் சொன்னாங்க.” என்றாள்.
தீபாவிற்கு எப்படி, எப்போது இதெல்லாம் சொல்லிக் கொடுத்தாள் காயத்ரி என்று அவனுக்குத் தெரியவில்லை.  இப்போது சூர்யவுடன் எல்லாமே பிரச்சனையாக மாறிக் கொண்டிருந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பிராஜெக்ட் செய்து கொடுக்கும் அவனால் அவன் ஐந்து வயது குழந்தைக்கு ரைட்டிங் சொல்லிக் கொடுக்க முடியவில்லை. என்ன செய்யப் போகிறான்? எப்படி இதைச் சரி செய்வது என்று புரியவில்லை.
“நீ என்ன படிச்சுக்கிட்டு இருக்க?”
“டேபில்ஸ் பா.”
“இவ எப்போ தூங்கினா?”
“எட்டு மணிக்கு….ஆறு மணிக்கே பசிக்குதுன்னு சொன்னா ப்பா.. சாவி அம்மா இவளைக் கோவிச்சுக்கிட்டாங்க.”
“பிஸ்கெட் பாக்கெட் தீர்ந்திடுச்சா?”
“இருக்க பா..ஸ்கூல்லேர்ந்து வந்தவுடனே சாப்பிட்டோம்.”
“அப்போ ஏன் இவளுக்குப் பசிக்குது?” என்று அவன் சின்ன பெண்ணை விட சில வருடங்கள் பெரியவளான அவன் மூத்த பெண்ணிடம் பசியின் காரணம் கேட்டான் அவர்களைப் பெற்ற தகப்பன். கண்ட நேரத்தில் சாப்பிட, கண்டபடி சாப்பிட, கண்ட நேரத்தில் விளையாடுவது, கண்ட நேரத்தில் உறங்குவது தானே குழந்தை பருவம்.  
“தெரியலை பா.”
அவன் சாப்பிட்டு முடித்தவிட்டு அந்த நோட்டை படித்துப் பார்த்தான்.  சூர்யாவின் மேல் ஏகப்பட்ட புகார்.  எந்த வேலையும் சரியாக செய்வதில்லை, எதற்கெடுத்தாலும் அழுவது என்று அவளுடைய வகுப்பு டீச்சர் அவள் மேலிருந்த குறைகளைப் பட்டியலிட்டிருந்தார்.  போன வருடம் வரை நான்கு மணி நேரம் தான் பள்ளிக்கூடம்.  சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் விடுமுறை.  கவுண்டிங், கலரிங்க், ஆல்ஃபட்ஸ் என்று சுலபமாக இருந்த பாடத்திட்டம் திடீரென்று ஸ்பெல்லிங், ரைட்டிங், ரீடிங் என்று பாரமாகிப் போனதில் சூர்யா பயந்து போயிருந்தாள்.  பள்ளிக்குச் செல்ல அடம் பிடித்தாள்.  வீட்டு பாடங்களைப் புறக்கணித்தாள். 
சின்னவளை வழிக்குக் கொண்டு வர அவளை மட்டும் யாரிடமாவது டியுஷன் அனுப்பலாமா என்று யோசித்தான் சிவா.  அந்த ஏற்பாட்டை எப்படி செயல்படுத்துவது என்று தெரியவில்லை.  அவனுடைய அப்பா, அம்மா இருவரும் இங்கேயே நிரந்தரமாக அவனுடன் இருந்தால் அவன் அப்பாவின் பொறுப்பில் இந்த விஷயங்களை விட முடியும். ஆனால் அவன் அம்மாவிற்கும், சாவித்திரி அம்மாவிற்கும் ஒத்துவரவில்லை. அவன் பெற்றோரின் வருகையால் சாவித்திரி அம்மாவின் வேலைகள் அதிகரித்தன.  அவன் அம்மாவிற்குக் கை, கால் மூட்டு வலி இருப்பதால் அவரால் ஒரு வேலையும் செய்ய முடியாது.  ஒரு நாள் வேலை பார்த்தால் ஒரு வாரம் படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டார். அந்த நிலை ஏற்படாமல் இருக்க இவன் தான் அவருக்குத் தவறாமல் தைலம் வாங்கி கொடுத்து வலி நிவாரண சிகிச்சைக்கும் அழைத்துச் செல்கிறான்.  இந்தப் பிரச்சனைக்கு யார் உதவி செய்ய முடியும்? என்று எண்ணியவன், 
“தீபா, ஸ்கூல்லே டியுஷன் கிளாஸ் எடுக்கறாங்க இல்லே?” என்று விசாரித்தான்.
“எடுக்கறாங்க பா.”
நாளை ஸ்கூலுக்குச் சென்று அவர்களிடமே சூர்யாவின் டியுஷனுக்கு ஏற்பாடு செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்தான் சிவா.  
“தீபா, காலைலே எழுந்து படிச்சுக்கோ..நேரமாயிடுச்சு..அப்பாக்கு டயர்டா இருக்கு..தூங்கலாம் வா.” என்று அவளைக் கிளப்பியவன், சூர்யாவைத் தூக்கிச் சென்று கட்டிலில் விட்டான்.  
அடுத்த பத்து நிமிடத்தில் தீபாவும் உறங்கிவிட சிவாவிற்குத் தான் உறக்கம் வரவில்லை.  கௌரி ஏன் பூனா போகிறாள்? ஒருவேளை இந்த வீட்டில் அவளுக்கு வேறு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டதா? அந்தப் பிரச்சனை பற்றி அவளிடம் எப்படி விசாரிப்பதென்று யோசித்தபடி அவன் ஃபோனில் அவள் நம்பரைத் தேடி எடுத்தான்.  ஆனால் அந்த நேரத்தில் அவளிடம் பேசத் தயக்கமாக இருந்தது.  சுப்ரமணி ஸருக்குக் கண்டிப்பாக காரணம் தெரிந்திருக்கும்.  அவர் டூரிலிருந்து திரும்பி வரும் வரை காத்திருக்க முடியாமல் உடனே அவினாஷிற்கு ஃபோன் செய்தான் சிவா.  
சிவாவின் அழைப்பை அவினாஷ் ஏற்கவில்லை.  கௌரியைப் பற்றி தெரிந்து கொள்ள துடித்த மனதை அதன் இஷ்டத்திற்கு திரிய விட்டவன் அவள் நம்பரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது அவினாஷிடமிருந்து அழைப்பு வந்தது.
சிவா அழைப்பை ஏற்றவுடன்,”சொல்லுங்க சிவா” என்றான் அவினாஷ்.
கௌரியைப் பற்றி நேரடியாக விசாரிக்காமல் மறைமுகமாக விசாரணையை ஆரம்பித்து அவினாஷிடம் கையும் களவுமாகப் பிடிப்பட்டான் சிவா.
“மேகலா யாரு? கௌரி ஏன் அவங்க வீட்லே இருக்கா?” என்று மேகலாவின் மகனிடமே விசாரித்தான். 
அந்தக் கேள்வியில் உஷாரான அவினாஷ்,”ஏன் கேட்கறீங்க?” என்ற கேள்வியோடு வந்தான்.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று சிவாவிற்குத் தெரியவில்லை.  ஸ்வாதிஷ்டானத்தில் இருக்கும் அவன் குண்டலினியின் சேட்டை அது என்று அவனுக்குப் பிடிபடவில்லை.  ஏன் கேட்கிறோம்? கௌரி எங்கே போனால் என்ன? அவனுக்குத் தகவல் சொல்லிவிட்டுப் போக வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எங்கே இருந்து வந்தது? என்று சிவா அவனையே கேள்வி கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு முடிவிற்கு வந்த அவினாஷ்,”கௌரியைப் பார்க்க அவ வீட்டுக்குப் போயிருந்தீங்களா?” என்று கேட்டான்.

Advertisement