Advertisement

அத்தியாயம் – 10
மாலினி, விட்டல் பற்றி நினைத்துக் கொண்டிருந்த கௌரியை நிகழ்விற்குக் கொண்டு வந்தான் வரவேற்பறைக்குள் நுழைந்த அவினாஷ்.  
”கௌரி, உன்னை ரொம்ப மிஸ் செய்தேன்.” என்றான்.
“அப்போ ஊருக்குப் போகறத்துக்கு முன்னாடி இன்னொரு நாள் என்னை அழைச்சிட்டுப் போங்க.”
“மாட்டேன்..எத்தனை முறை வீட்டுக்கு வான்னு உன்னைக் கூப்பிட்டேன் நீ வரவேயில்லை..அம்மா கூப்பிட்ட உடனே வந்திட்ட.”
“இப்போ ரொம்ப பிஸியான நேரம்..பதவி உயர்வுக்கான நேரம்..அதான் வர முடியலை..இன்னைக்குத் தான் டயம் கிடைச்சது.”
“உன்னோட நினைவுச் சின்னம் அப்படியே தான் இருக்கு…உன் அண்ணிக்குக் காமிச்சேன்.” என்று சொல்லிச் சிரித்தான்.
“அண்ணா, பொய்ச் சொல்லாதீங்க..பத்து வருஷமா அப்படியே இருக்குமா?..இப்போ அந்தத் தெரு ஒன் வே..அது வழியா போனாத் திரும்ப சுத்திக்கிட்டு வரணும்…அந்த ஸைட் நான் போய் நிறைய வருஷமாயிடுச்சு.”
“தெரியும்..அதுக்குத் தான் உன்னைக் கூப்பிட்டேன்..எனக்கும் வழி கொஞ்சம் குழப்பமா தான் இருந்திச்சு..அப்பா என்கூட இருந்தாரு அதனாலே தப்பிச்சேன்….நம்ம ஊர்லே சில விஷயமெல்லாம் எத்தனை வருஷமானாலும் மாறாது..நீ மோதின அந்தக் குப்பைத் தொட்டி அதே இடத்திலே அப்படியே இருக்கு..அந்தப் பள்ளமும்.”
“நான் மோதலை..நீங்க தான் லெஃப்ட் லெஃப்ட்ன்னு சொன்னீங்க.”
“சொன்னேன்..ஆனா நீ உடனே லெஃப்ட் எடுத்திட்ட..நான் சொன்னது அதுக்கு அப்புறம் வந்த லெஃப்ட் கட்.”
“நீங்க அதைப் பார்க்கத் தான் போனீங்களா? பீச்சுக்குப் போகலையா?”
“பீச்சுக்குப் போகற வழிலே அந்த நினைவுச் சின்னத்தை உன் அண்ணிக்கும் காட்டினேன் அப்ப்டியே எவிடென்ஸ் கலெக்ட் செய்தேன் ..அந்தக் குப்பைத் தொட்டி பள்ளத்திலேர்ந்து அப்போ வண்டியை வெளியே எடுத்ததுக் கொடுத்ததுக்கு இப்போ உன்கிட்டேயிருந்து பெரிசாக் கலெக்ட் செய்துக்கலாம்னு பிளான் போட்டிருக்கேன்.” என்று அவன் எடுத்திருந்த ஃபோட்டோவை அவளுக்குக் காட்டினான்.  
அதைப் பார்த்து,”அண்ணா..நீங்க ரொம்ப மோசம்.” என்றாள் கௌரி.
“அவ எதுக்கு டா உனக்கு ஏதாவது கொடுக்கணும்..ஒரு அண்ணனா நீ வண்டியை வெளியே எடுத்துக் கொடுத்திருக்க..அவளுக்குத் தெரியாத விஷயத்திலே, புரியாத இடத்திலே மாட்டிக்கிட்டுப் பிரச்சனை ஆச்சுன்னா நீ தான் உதவணும்…அது உன்னோட கடமை.” என்றார் மேகலா.
“கரெக்ட்..அப்போ அவப் பிரச்சனைக்கு அண்ணன் சொல்ற தீர்வைக் அவக் கேட்கணுமில்லே? என்று அவினாஷ் பேச்சை தொடருமுன் வரவேற்பறைக்கு வந்தனர் நித்யாவும் குழந்தைகளும்.  அந்தப் பேச்சை அவினாஷ் எந்தப் பாதையில் கொண்டு போகப் போகிறான் என்று புரிந்து கொண்ட கௌரி அந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அந்த இடத்திலிருந்து வெளியேறினாள். 
அதற்குப் பின் இரவு நேர உணவோட மற்ற விஷயங்களைப் பேசி பொழுது கழிந்து போக அவன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு அமையவில்லை அவினாஷிற்கு.  அதனால் அவர்கள்  வீட்டை விட்டு கௌரி கிளம்புமுன் அந்த வாய்ப்பைப் பிடிவாதமாக ஏற்படுத்திக்  கொண்டான்.
அடுத்த இரண்டு நாள்கள் மேகலா ஆன்ட்டி வீட்டிலிருந்து வேலைக்குச் சென்று வந்தாள் கௌரி.  இப்போது வீட்டு வேலை செய்வதற்கு இரண்டு பேரும், மேகலா ஆன்ட்டியைப் பார்த்துக் கொள்ள தனியாக ஒரு நபரும் இருந்ததால் டி வி பார்த்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு, வெளியே சென்று பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர்.
மூன்றாவது நாள், வேலை விஷயமாக அடுத்த நாள் அவள் திருச்சி செல்ல இருந்ததால் அன்று மாலை அவள் வீட்டிற்குச் செல்ல ஆயுத்தமானாள் கௌரி.  ஏழு மணி போல் காலை உணவிற்கு அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்த போது,
“கௌரி, இங்கேயே வந்திடு..நீ தனியா இருக்க வேணாம்.” என்று கடந்த ஒரு வருடமாக  நிராகரிக்கப்பட்டு வந்த கோரிக்கையை அவள் முன் அன்று மறுபடியும் வைத்தார் மேகலா.
அவருக்குப் பதில் சொல்லாமல் அவள் கை விரல்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கௌரி.  ஏனோ வாய்விட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு மனம் பாரமாக இருந்தது.  அவளின் சோகங்கள், துக்கங்கள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள் அனைத்திற்கும் சாட்சியாக இருந்த அந்த வீட்டுச் சுவர்களும் அன்று வாய்ப்புக் கிடைத்தால் அவளுடன் சேர்ந்து அழுதிருக்கும்.   கடைசியாக அம்மாவுடன் இங்கே வந்தபோது மேகலா ஆன்ட்டியிடம் அவர் மௌனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த காட்சி அப்படியே அவள் மனத்தில் வர, கௌரிக்குக் கண் கலங்கியது.
அவள் கண்கள் குளமாகுவதைப் பார்த்து,”என்ன டா?” என்று அவள் அருகே அமர்ந்து அணைத்தபடி கேட்டார் ராம கிருஷ்ணன்.  
“அம்மா ஞாபகம் வந்திடுச்சு.”
“எனக்கும் அவ  ஞாபகம் தான்…..என்னை எடுத்திட்டுப் போகாம கடவுள் எதுக்கு அவளை அழைச்சுக்கிட்டுப் போனாருன்னு தெரியலை..மாலினிக்கும் அவினாஷுக்கும் என் இடத்திலே இருந்து அவ தான் எல்லாம் செய்தா..ஆனா உனக்கு தான் அவ எதுவும் செய்ய முடியாம போயிடுச்சு..அதுக்குள்ளே அவளை அழைச்சுகிட்டாரு..அவ உடம்புக்கு ஒண்ணுமே இல்லை..எல்லாம் மனசு தான் காரணம்..கவலைதான் அவளைக் கொண்டு போயிடுச்சு….கடைசியா உன்னோட இங்கே வந்த போது உன் கல்யாணத்தைப் பற்றித் தான் கவலைப்பட்டா.” என்றார் மேகலா.
அவளுடைய அத்தனை கனவுகளையும் அவள் அம்மாவுடன் கௌரி பகிர்ந்து கொண்ட போது அவளுடைய கனவுகளில் கல்யாணக் கனவைக் காணவில்லை என்று குறைபட்டுக் கொண்டார் கல்யாணி.  அவள் கல்யாணக் கனவு காணவில்லை அதனால் அவள் பட்டியலில் அது காணவில்லை என்று பதில் சொன்னாள் கௌரி.  அதைக் கேட்டு அவர் வாழ்க்கையில் அவர் எடுத்த முடிவு அவர் மகளின் வாழ்க்கையை நிர்ணயிக்க முடியாது என்று முடிவு செய்தார் கல்யாணி.  அதனால் வறண்டு கிடந்த கல்யாணியின் கனவு உலகத்தில் இடம் பிடித்தது கௌரியின் கல்யாணம்.  அவர் உயிரோடு இருந்தவரை அந்தக் கனவு நிஜமாகவில்லை.  
“அங்கிளும் நானும் எத்தனை நாள் இருப்போம்னு தெரியலை..எங்க கண்ணெதிரே வந்திடு..இந்த வீடு உன் வீடு தான் கௌரி..மாலினி, அவினாஷ், உனக்கு, உங்க மூணு பேருக்கும் பங்கு வர மாதிரி எழுதி வைச்சிட்டோம்.” என்று கௌரியின் எண்ணவோட்டாத்தைத் தடை செய்தார் மேகலா.
இந்த வீட்டில் ஒரு பங்கா? என்று அதிர்ச்சியான கௌரி,”ஆன் ட்டி என்ன சொல்றாங்க அங்கிள்?” என்று ராமகிருஷ்ணனைக் கேட்க,
“சரியாதான் சொல்றாங்க..நீ இந்த வீட்டுப் பொண்ணு டா.” என்றார்.
“நோ..அம்மா இருந்திருந்தா இதுக்கு ஒத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க.”
“அவளுக்கு இந்த விஷயம் சொல்லி பல வருஷமாயிடுச்சு ஆனா அவளும் ஒத்துக்கலை.. அதனாலே தான் அவ உயிரோட இருந்தவரை அவளை மீறி என்னாலே இந்த முடிவை செயல்படுத்த முடியலை..நான் இந்த அளவு நல்ல உடம்போட, இவ்வளவு வருஷம் உயிரோட, பேரன் பேத்தியோட சந்தோஷமா இருக்கறதுக்கு அவதான் காரணம்.. 
மாலினி கல்யாணம், குழந்தைங்க, அவினாஷ் கல்யாணம் எல்லாத்தையும் அவ இல்லாம நடத்தியிருக்க முடியாது..வேலைக்கு வந்த கல்யாணி ஆன்ட்டி என்னைக்குக் கல்யாணி அம்மா ஆனாங்களோ அன்னைக்கே நீங்க இரண்டு பேரும் இந்தக் குடும்பத்திலே சேர்ந்திட்டீங்க..
ஆனா உன் மனசுலேயும், அவ மனசுலேயும் எப்போதும் நீங்க இங்கே வேலைக்கு வந்தவங்கங்கற எண்ணம் இருக்கு..அதே போல தான் மற்றவங்களும் நினைக்கறாங்க..உனக்காகப் பார்த்த அத்தனை மாப்பிள்ளைங்களும் உன்னையும்  கல்யாணியையும் எங்களோட சேர்த்து பார்க்க முடியலை..தனியா தான் பார்த்தாங்க.. இப்போ நீ இருக்கற உயரத்தையும் அதுக்குப் பின்னாலே இருக்கற உன் உழைப்பையும் பார்க்காம உன் பின்னணியைப் பார்த்தாங்க….அதான் உன்னைச் சொந்த ஃபிளாட் வாங்கித் தனியாப் போகச் சொன்னேன் கௌரி..
உன் கல்யாணத்தை முடிச்சிட்டு அந்த வீட்லே தனியா இருக்க கல்யாணி தயாரா இருந்தா ஆனா நீ அதுக்குத் தயாரா இல்லை..இப்போ கல்யாணி போய் நீ தனியா இருக்கற மாதிரி ஆயிடுச்சு..இந்த மாதிரி  நடக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை..உங்க இரண்டு பேரையும் தனியாப் போகச் சொல்லி தப்பு செய்திட்டேன்னு தோணுது..உங்களைத் தனியா வைச்சதுக்குப் பதிலா இங்கேயே எங்கக்கூட வைச்சிருந்து உன்னையும் கல்யாணியையும் அப்படியே ஏத்துக்கற  மாப்பிள்ளை கிடைக்கறவரை பொறுமையா இருந்திருக்கணும்..கல்யாணியும் சந்தோஷமா இருந்திருப்பா..உயிரோட இருந்திருப்பா.” என்று சொல்லி அழ ஆரம்பித்தார் மேகலா.
“ஆன் ட்டி..ப்ளீஸ் அழாதீங்க..அப்புறம் மூச்சுத் திணறலாயிடும்.” என்று கௌரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,”எத்தனையோ முறை ஆஸ்பத்திரி போய் திரும்பி வந்த நான் ஒவ்வொரு முறையும் கல்யாணி இருக்கா அவ மாலினியையும் அவினாஷையும் பார்த்துப்பாங்கற நம்பிக்கைலே நிம்மதியா போவேன்….இப்போ அவளுக்கு அந்த மாதிரி நிம்மதியை நான் கொடுக்க வேணாமா? உன்னை எப்படி இப்படியே விட முடியும்? 
நம்ம வீட்டுக்கு வந்திடு இல்லை மாலினிகிட்டே போயிடு..இல்லை இவனோடு போயிடு கௌரி.” என்று அழுகையுடன் தொடர்ந்து பேசியதில் அவர் மூச்சு விட கஷ்டப்பட உடனே அவருடைய இன்ஹெலரைக் கொண்டு வந்து கொடுத்தாள் நித்யா.
அவன் அம்மாவின் மூலம் கௌரியின் மனதை அறிந்து கொள்ள அவனுக்குக்  கிடைத்த அரிய வாய்ப்பை உபயோகித்துக் கொள்ள நினைத்த அவினாஷ் அதே சமயம் அவன் சொல்ல போகும் விஷயம் அவர் உடல் நிலையைப் பாதித்தால் என்ன செய்வது என்று கவலை அடைந்தான்.  சில நிமிடங்களுப் பின், அவன் அம்மாவின் மூச்சு ஸ்திரமானவுடன், 
“அம்மா, கௌரிக்குச் சீக்கிரமே நல்லது நடக்கும்..கவலைப்படாதீங்க.” என்றான் அவினாஷ்.
“என்ன டா சொல்ற? அவளை உன்கூட அழைச்சிட்டுப் போகப் போறேயா?’
“இல்லை மா..அவ வர மாட்டா…நான் இங்கே வந்தா தான் என்கூட இருப்பா.”
“மாப்பிள்ளை பார்த்து வைச்சிருக்காளா மாலினி?”
“இல்லை மா.”
“வேற என்ன டா?” என்று மேகலா கேட்டவுடன், சிந்தனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அவினாஷின் முகம் சிவசங்கர் தான் அந்த நல்லது என்று கௌரிக்குச் செய்தி சொல்ல, உடனே,”அது முடிஞ்சுப் போன விஷயம் அண்ணா.” என்று அவசர அவசரமாக மறுப்புத் தெரிவித்தாள் கௌரி.
“எது முடிஞ்சு போயிடுச்சு?” என்று கேட்டார் ராம கிருஷ்ணன்.
கௌரியின் மறுப்பை மீறி,” கௌரி விருப்பப்படி ஒரு வாழ்க்கை துணையைப் பார்த்துக் கொடுத்தாரு சுப்ரமணி ஸர்..ஆனா அவர் இஷ்டமில்லைன்னு சொல்லிட்டாராம்.” என்று மற்றத் தகவல்களை வெளியிடாமல் மேலோட்டமாக விஷயத்தை அவன் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தினான் அவினாஷ்.
“யாருடா? சென்னையா இல்லை சுப்ரமணி ஸர் வெளியூர் பயணத்திலே மீட் செய்தாரா? உனக்குப் பிடிச்சிருக்குன்னா சொல்லு டா.. நான் போய் அவங்க வீட்லே பேசறேன் டா. ” என்று கௌரியிடம் சொன்னார் ராம கிருஷ்ணன்.
அதைக் கேட்டுக் கௌரிக்கு அழுகை வந்தது.  அதைப் பார்த்து அவன் சொதப்பி விட்டான் என்று பதைபதைத்துப் போன அவினாஷ் மற்ற விவரங்களை கௌரி வெளிப்படுத்தும் முன்,”வேணாம்னு சொன்னவர் நமக்கு வேணாம் பா..விடுங்க.” என்றான்.
அவினாஷ் சொன்னதைச் சட்டை செய்யாமல்,”அந்தப் மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்கா கௌரி?” என்று முக்கியமான கேள்வியை, அவினாஷிற்குப் பதில் தெரிய வேண்டிய கேட்டார் ராம கிருஷ்ணன்.
“ஆமாம்.” என்று கௌரி தலையசைத்தவுடன் சிவாவின் மீதிருந்த ஈடுபாடிலிருந்து அவன் தங்கை இன்னும் மீளவில்லை என்று தெளிவாகப் புரிந்த அவினாஷிற்கு மீளுவாளா என்ற ஐயமும் எழுந்தது.
“அவர் ஏன் டா வேணாம்னு சொன்னாரு..என்ன காரண்ம டா..அதைச் சரி செய்ய முடியும்னா..நான் சரி செய்யறேன் டா.” என்று கௌரிக்கு வாக்குறுதி கொடுத்தார் ராம கிருஷ்ணன்.
அதைக் கேட்டு அதுவரை அவள் அடக்கிக் கொண்டிருந்த அழுகை வார்த்தைகளின் உதவியோடு வெளியேறியது.
”அம்மா இல்லாத குடும்பத்திலே ரெடிமெட் அம்மாவா போகலாம்னு நினைச்சேன் அங்கிள்….அப்பா இல்லாத குடும்பத்துக்கு அவங்க ரெடிமெட் அப்பாவா போகணும்னு நினைக்கறாங்க..அதனாலே எங்க இரண்டு பேருக்கும் சரி வராதுன்னு சொல்லிட்டாங்க.”
அதைக் கேட்டு அதிர்ச்சியானார் ராம கிருஷ்ணனும். இரண்டாவது திருமணமா? கல்யாணியின் வாழ்க்கை சிதைந்து போக காரணமே இரண்டாவது திருமணம் தான்.  முதல் மனைவி கல்யாணி உயிரோடு, ஒரு குழந்தையோட இருந்த போது அவருடைய தங்கையைத் திருமணம் செய்து கொண்ட கணவரைத் தள்ளி வைத்து, இரு குடும்பங்களையும் ஒதுக்கி வைத்து, கடைசி வரை அதே உறுதியுடன் வாழ்ந்தவர் கல்யாணி. அப்படிப்பட்ட கல்யாணியின் மகளுக்கு எப்படி, எங்கேயிருந்து இந்த எண்ணம் வந்தது?
அவருடைய இரு குழந்தைகளைப் பெற்ற தாய் போல் பார்த்துக் கொண்ட கல்யாணியைப் போல் அவர் மகளும் இரு குழந்தைகளுக்குத் தாயாக இருக்க விரும்புகிறாள் என்று சரியாகப் புரிந்து கொண்ட மேகலா அவர் கணவரைப் போல் அதிர்ச்சி அடையாமல் அமைதியாக இருந்தார். அவன் அம்மாவையே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த அவினாஷை அவரின் அமைதி குழப்பியது.
கௌரி அளித்த அதிர்ச்சியிலிருந்து வெளி வந்து,“என்ன டா சொல்றா இவ? இரண்டாம் தாரமா கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டாளா? அதுதான் நீ சொன்ன நல்லதா?” என்று ராம கிருஷ்ணன் அவினாஷைக் கேட்க,
“அவ விரும்பற வாழ்க்கை அவளுக்குக் கிடைக்கறது அவளுக்கு நல்லது தானே ப்பா.” என்றான் அவினாஷ்.
“உனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா மா” என்று மருமகள் நித்யாவை விசாரித்தார் ராம கிருஷ்ணன்.
“நாங்க ஊருக்கு வந்தவுடனே மால் போனோமே அங்கே அவரோட இரண்டு மகள்களோட சிவா வந்திருந்தாரு..அடுத்த நாள் சிதார்த் ஆஸ்பத்திரிலே இருந்த போது கௌரியோட வந்திருந்தாரு..மருந்தெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.”
“ஏன் என்கிட்டே நீங்க இரண்டு பேரும் இதைப் பற்றி இதுவரை வாயே திறக்கலே.” என்று மகன், மருமகளிடம் கோபப்பட்டார் ராம கிருஷ்ணன். உடனே,
“அங்கிள்..ப்ளீஸ்..அண்ணனைக் கோவிச்சுக்காதீங்க..நான் தான் வீட்லே சொல்ல வேணாம்னு சொன்னேன்.”
“நீ எதுக்கு இரண்டு குழந்தைகளோட அப்பாவைக் கல்யாணம் செய்துக்கணும்? சுப்ரமணியும் இதைப் பற்றி ஒரு வார்த்தை எனக்குச் சொல்லலை..ஏன்?” என்று கௌரியை நேரடியாகக் கேட்டார் ராம கிருஷ்ணன்.
“அம்மா இருந்த போதும் அவங்க இரண்டு மூணு இடம் சொன்னாங்க அங்கிள்..அது போல தான் இந்த இடமும்..மற்றவங்களைப் போல இவங்களும் வேணாம்னு சொன்னப் பிறகு உங்ககிட்டே சொல்றத்துக்கு என்ன இருக்குண்ணு சுப்ரமணி ஸர் சொல்லாம இருந்திருப்பாங்க..அதோட இந்த விஷயமே முடிஞ்சிருக்கும் ஆனா சில நாளா எனக்குக் கொஞ்சம் பிரச்சனைகள்..அதைத் தீர்த்து வைக்க சிவாவுக்கு ஆள் தெரியும்னு சொன்னாங்க அதனாலே அவங்க உதவியை ஏத்துக்கிட்டேன்….அதன் பிறகு ஒரே ஒருமுறை தான் என் வீட்டுக்கு வந்தாங்க அவ்வளவு தான்……நாங்க இரண்டு பேரும் இந்த விஷயத்தைப் பற்றி பேசிக்கவே இல்லை..அவங்க எதிர்பார்ப்பு வேற..அது நானில்லை.” என்றாள் கௌரி.
“என்ன பிரச்சனை உனக்கு? ஏன் எங்ககிட்டே சொல்லலை? நாங்க இங்கே இருக்கும் போது நீ எதுக்கு வேற யார்கிட்டேயோ உதவி கேட்ட?” என்று ராம கிருஷ்ணன் அவள் பிரச்சனைகளைப் பற்றிக் கேட்க, 
‘ஐயோ இப்போ என்ன செய்யறது?’ என்று கௌரி அவினாஷைப் பார்க்க அவனோ நீதான் பதில் சொல்ல வேண்டுமென்று கட்டளையாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அண்ணன் உதவி செய்யப் போவதில்லை என்று உணர்ந்த தங்கை,
“அங்கிள், கொஞ்ச நாள் முன்னாடி யாரோ என் ஸ்கூட்டியோட ஸீட் கவரை கிழிச்சு விட்டுட்டாங்க..இப்போ கார் டயரை கிழிச்சு விட்டுட்டாங்க..அப்புறம் யாரோ விடாம வாசல் பெல் அடிக்கறாங்க..கதவைத் திறந்தா யாரும் இருக்கறதில்லை..அதான் சிவாகிட்டே சொல்லி வாசல்லே ஒரு கேமரா..” என்று அவள் தொடருமுன்,
“கௌரி..யாரோ உன்னை டார்ச்சர் செய்யறாங்க..நீ அதைச் சாதாரணமா சொல்ற..சுப்ரமணி என்ன செய்துகிட்டு இருக்கான்? இவ்வளவு நடந்திருக்கு என்கிட்டே அவன் ஏன் சொல்லலை?”
“அவங்க அடிக்கடி டூர் போயிடறாங்க..தவிர அத்தனை பெரிய காம்ப்லெக்ஸ்லே எல்லாம் அசோசெஷன் முடிவு தான்..சுப்ரமணி அங்கிள் தனியா முடிவு எடுக்க முடியாது..இப்போ என்னோட கார் ரிப்பேருக்கு செலவானதை அவர் மூலமா அசோசெஷ்ன்கிட்டே சிவா கொடுத்து விட்டிருக்காரு..அவங்க அந்த பில் அமௌண்ட் பே செய்யாட்டா மெயிண்டனென்ஸ்லே கழிச்சுக்க சொல்லியிருக்காரு….அதனாலே இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாச் சீக்கிரத்திலே பொது இடத்திலே கேமரா போட்டிடுவாங்க..நானும் வீட்டு வாசல்லே கேமரா போடிட்டேன்..இனி யாரும் தொந்தரவு செய்ய மாட்டாங்க.” என்று ராம கிருஷ்ணனுக்கு எடுத்துச் சொன்னாள் கௌரி.
அதற்குள் ஒரு முடிவிற்கு வந்திருந்த மேகலா,
“நீயும் கல்யாணியும் உங்க ஆயா வீட்டுப் பக்கத்திலே இருந்த போது இந்த மாதிரி தான் அவளைத் தொல்லை செய்தாங்க..உங்கப்பாவை விட்டிட்டு இருக்காண்ணு எல்லாரும் அவளைத் தான் தப்பா பேசினாங்க..
அந்தச் சுற்றுப்புறம், சூழ் நிலை வேற.. நீ இருக்கற இடம் வேற.. ஆனா உன்னைச் சுற்றி இருக்கறவங்க எண்ணமெல்லாம் அதே மாதிரி தான் இருக்கு…எந்தக் காலத்திலேயும் பெண்கள் தனியா இருக்க முடியாது போல..அங்கே நடக்கறதெல்லாம் சரியில்லை.” என்று கௌரியிடம் சொன்னவர்,அவினாஷிடம்,
”முதல்லே இவக்கூட போய் அந்த வீட்லேர்ந்து இவளுக்குத் தேவையான சாமனையெல்லாம் கொண்டு வந்து இங்கே போடு..இனி அவ அங்கே தனியா இருக்க வேணாம்.” என்று ஆர்டர் போட்டார்.  அடுத்து அவர் ஃபோனில் மாலினியை அழைக்க,
”என்ன மா விஷயம்..காலைலே ஃபோன் செய்திருக்கீங்க?” என்று கவலையோடு கேட்ட மாலினியிடம்,”கௌரியை உன் பொறுப்பிலே விடப் போறேன்.. முதல்லே அவளுக்கு ஒரு நல்ல வேலை..அப்புறம் ஒரு நல்ல மாப்பிள்ளை..கல்யாணி இடத்திலே இருந்து இனி நீதான் கௌரிக்கு எல்லாம் செய்யணும்.” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
அதன்பின்,”கௌரியை பூனா அனுப்ப ஏற்பாடு செய்திடு..அவ வீட்டை சுப்ரமணிகிட்டே சொல்லி வாடகைக்கு விட்டிடு..நல்ல வேலை, மாப்பிள்ளை மாலினி பொறுப்பு…அவளோட கல்யாணம் உன்னோட பொறுப்பு.” என்றார் அவினாஷிடம்.
“ஆன் ட்டி..என்னாலே இப்போ இந்த வேலை..” என்று ஆரம்பித்த கௌரியிடம்,
“நானே எவ்வளவு நாள் இருப்பேண்ணு தெரியாத போது உன்னை இங்கே எங்களோட இருக்கச் சொல்றது தப்பு.. உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கறது தான் சரி.. உன் கல்யாணத்தைப் பார்த்திட்டு நிம்மதியா போகணும்னு நினைக்கறேன் கௌரி..நீ விருப்பப்பட்ட இடத்திலேயே உன்னைக் கல்யாணம் செய்து கொடுத்திருப்பேன் ஆனா அவர் விருப்பமில்லைன்னு சொல்லிட்டார்..அதனாலே அதை விட்டிடலாம்..இனி நீ உன் வீட்டுக்குப் போக வேணாம்..பூனா போகறவரை எங்களோடவே இரு.” என்றார் மேகலா.
இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை விட கௌரி இஷ்டப்படவில்லை.  அதே சமயம்  மேகலா ஆன்ட்டியின் ஆலோசனையை மறுத்துப் பேச அவளுக்கு மனது வரவில்லை. 

Advertisement