Advertisement

“இவானை கூட்டிட்டு போய்ட்டாங்க. நம்ம அமைதி போச்சி!”

கட்டிலில் அமர்ந்து அம்ஜத் பேசிக்கொண்டே ஆடிக்கொண்டிருக்க, கதவுக்கு வெளியே நின்று சகோதரிகள் அதிக எதிர்வினையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

“நீ சொன்னது மாதிரி எதுவும் நடக்கல அக்கா. மச்சான் அமைதியா தான் புலம்புறார்.”

“இப்போ பாரு, சல்மா!” என உள்ளே வந்த கரீமா “அம்ஜத் டியர்! இவானை நாம திரும்ப பார்க்க முடியலனா என்ன ஆகும்? நமக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்?” என அவன் மனதின் தாக்கத்தை அதிகப்படுத்தினாள்.

அம்ஜத் கத்திக்கொண்டே அந்த அறையையே புரட்டிப் போட, கரீமா ஆர்யனுக்கு காணொளி அழைப்பு விடுத்தாள்.

“ஆர்யன் டியர்! நான் உன்னை தொந்தரவு செய்ய நினைக்கல. ஆனா உன் அண்ணாக்கு பானிக் அட்டாக் வந்துடுச்சி. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல”

“எப்படி?” ஆர்யன் கேட்டான் கவலையாக.

“இவான் திரும்ப வரமாட்டான்னு அவர் பயப்படுறார். நீ இவானை கூட்டிட்டு இங்க வாயேன், கொஞ்ச நேரம்.”

அறையில் நிதானம் இல்லாமல் சுற்றி அலையும் சகோதரனை பார்த்து “அண்ணா இங்க பாருங்க. இவான் எங்ககூட பத்திரமா இருக்கான். அவனை யாரும் கூட்டிட்டு போக முடியாது. கவலைப்படாதீங்க. நீங்க இவான் கூட பேசுறீங்களா?” என ஆர்யன் கூப்பிட்டான். அவன் சத்தம் கேட்டு ருஹானாவும் ஓடிவந்து செல்பேசியின் திரையை பார்த்தாள்.

போனை கீழே போட்ட சல்மா குரல் மட்டும் கொடுத்தாள். “ஏன் அம்ஜத் போனை தள்ளிவிட்டீங்க? ஆர்யன்! இதுக்கு மேல என்னால பேச முடியாது. நீ ஏதாவது செய். அம்ஜத்தை காப்பாத்து” என சொல்லி போனை நிறுத்தினாள்.

“அம்ஜத் அண்ணாவோட நிலைமை மோசமா இருக்கு. நாம உடனே அங்க போகணும்” என ருஹானா சொல்ல, ஆர்யன் “நீ சொல்றது சரி தான். ஆனா இவானை நாம அங்கே அழைச்சிட்டு போறது அவங்களுக்கு தெரிஞ்சா இவானை நம்ம கிட்டே தர மாட்டாங்க” என பயந்தான்.

“இப்போ இரவு நேரம். யாரும் பார்க்க மாட்டாங்க. நாம வேகமா போயிட்டு வேகமாக வந்திடலாம்.”

“சரி, நீ இவானுக்கு உடை மாத்தி கூட்டிட்டு வா. நான் அண்ணிட்ட சொல்லிட்டு காரை எடுக்கறேன்.”

——-

தன் மடியில் அமர்ந்திருந்த இவானின் கையை பற்றி முத்தமிட்ட அம்ஜத் புன்னகை செய்தான்.

“பாருங்க இவான் இங்க தான் இருக்கான். யாரும் அவனை நம்ம கிட்டே இருந்து பிரிக்க முடியாது. இனி நீங்க பயப்படாதீங்க. நீங்க எப்போ வேணும்னாலும் அங்க வந்து இவானை பார்க்கலாம்” என ருஹானா அம்ஜத்துக்கு உறுதி சொன்னாள்.

“ஆர்யன் டியர்! நீ வந்தது நல்லதா போச்சி. இல்லனா என்னால சமாளிச்சிருக்கவே முடியாது.  அம்ஜத்துக்கு இவ்வளவு மோசமான அட்டாக் சமீபமா வந்தது இல்ல” என கரீமா சொல்லும்போது ஆர்யன் கைகடிகாரத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

நஸ்ரியா அனைவருக்கும் குடிக்க பானம் வழங்க, கரீமாவின் பின்னே நின்றிருந்த சல்மா அக்காவின் காதை கடித்தாள். “ஏன் இன்னும் சோசியல் சர்வீஸ் லேடி வரல? அவங்க வரும் முன்னே இவங்க கிளம்பிட்டாங்கன்னா…” கரீமா அவளை முறைத்துப் பார்த்தாள்.

அண்ணனின் கையை பிடித்த தம்பி “இந்த பிரிவு அதிக காலம் நீடிக்காது அண்ணா. நான் உங்களுக்கு வாக்கு தரேன். இவான் நம்ம கூட தான் இருப்பான். இப்போ நாங்க கிளம்பணும் அண்ணா. சரியா?” என கேட்க, அம்ஜத் புன்னகையுடனேயே சரி என தலையாட்டினான்.

ஆர்யன் எழுந்து கொள்ள போக “போகாதீங்க!” என சல்மா தன்னை மீறி கத்திவிட்டாள். ஆர்யன் அவளை விசித்திரமாக பார்க்க, அக்கா தங்கையின் உதவிக்கு வந்தாள். “ஆர்யன் டியர்! சல்மாவும் நானும் நீ வரும்முன்னே அம்ஜத்துக்கு மாத்திரை கொடுக்க பார்த்தோம். நாங்க கொடுத்தா அவர்  சாப்பிடவே இல்ல. தூக்கி போட்டுட்டார். மாத்திரை மட்டும் கொடுத்துட்டு போ. அதைத் தான் சல்மாவும் சொல்றா!”

ஆர்யன் ருஹானாவின் முகத்தை பார்க்க அவள் தலையாட்டவும் அவனும் சரி என்றான். கரீமா தங்கையிடம் “சல்மா! போய் மாத்திரை எடுத்துட்டு வரீயா?” என கேட்க, “இதோ உடனே எடுத்துட்டு வரேன்!” என சல்மா மேலே ஓடினாள்.

அதுவரை தான் ஓட்டம். அறைக்குள் வந்தவள் கையைக் கட்டிக்கொண்டு அப்படியே நின்றாள்.

சிறிது நேரத்தில் உள்ளே வந்த ஜாஃபர் “மிஸ் சல்மா! ஆர்யன் சார் கூப்பிடுறார்” எனவும் திடுக்கிட்டு திரும்பினாள்.

“இங்க எல்லாம் இரைந்து கிடக்கறதால மாத்திரையை கண்டுபிடிக்க முடியல. அதான் தேடிட்டு இருக்கேன்” என அவள் சமாளிக்கப் பார்க்க, கட்டில் பக்கத்தில் இருந்த மேசையில் இருந்த புட்டியை காட்டிய ஜாஃபர் “இதோ இருக்கே!” என சொல்ல “அட! இங்க இருக்கா. பதட்டத்துல என் கண்ணுக்கு தெரியவே இல்ல” என சப்பைக்கட்டு கட்டிய சல்மா அதை எடுத்துக்கொண்டு கீழே வந்தாள்.

அம்ஜத் இவானை மடியில் இருந்து இறக்கி விடாமல் அவனுக்கு பழச்சாறு குடிக்கக் கொடுக்க, ருஹானா ஆர்யனின் முகத்தை பார்க்க, ஆர்யன் மாடிப்படியை பார்க்க, கரீமா வாசல்கதவை பார்த்தாள். அம்ஜத், இவான் தவிர அனைவர் இதயங்களும் வேகமாக அடித்துக் கொண்டன.

“உங்களை காக்க வச்சதுக்கு சாரி, ஆர்யன். ரூம் ஒரே களேபரமா கிடந்தது. தேட முடியல” என சல்மா ஆர்யனிடம் மன்னிப்பு வேண்டியபடியே புட்டியை நீட்டினாள்.

ஆர்யன் மாத்திரையை எடுத்து அண்ணனிடம் கொடுக்க, ருஹானா இவானை தன் அருகில் கூட்டிக்கொண்டு, தண்ணீர் குவளையை எடுத்து அம்ஜத்திடம் கொடுத்தாள். “மாத்திரையை போட்டுக்கங்க. உங்களுக்கு சரியாகிடும்”

அம்ஜத் ஆர்யனை திரும்பி பார்க்க அவன் ஆமோதிக்கவும், மாத்திரையை போட்டு தண்ணீர் குடித்தான். “வா! சிங்கப்பையா போகலாம்” என ஆர்யன் நகர,  சல்மா நகத்தை கடிக்க, கரீமா அவன் பின்னால் ஓடி வந்தாள். “ஆர்யன் டியர்! இன்னும் கொஞ்ச நேரம் இருக்க முடியுமா? அவருக்கு திரும்ப அட்டாக் வந்தா நான் என்ன செய்வேன்?”

“இங்க இருக்கறது இவானுக்கு ஆபத்து. நாங்க இப்போ போகணும்” என ஆர்யன் பொறுமையை இழந்து சொல்லவும், கரீமா முகத்தை சோகமாக வைத்துக்கொண்டாள்.

“அண்ணா! உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு? நாங்க போகவா?” என அம்ஜத்திடம் நேரடியாக ஆர்யன் கேட்க, கையை ஆட்டிய அம்ஜத் “நான் இப்போ ஓகே தான்! நீங்க போங்க!” என்றான்.

“கவலைப்படாதீங்க, பெரியப்பா! நாங்க சீக்கிரம் வந்துடுவோம்” என இவான் சொல்ல, அம்ஜத்தின் முகத்தில் சிரிப்பு, சின்ன பையன் நமக்கு ஆறுதல் சொல்கிறானே என. என்றாலும் “சரி! இவான்” என ஏற்றுக்கொண்டான்.

வேகமாக இவான் அருகே மண்டியிட்ட கரீமா அவனை கட்டிக்கொண்டாள். “நீ சீக்கிரம் இங்க திரும்பி வந்துடுவே இவான் டியர். நாங்க உன்னை நேசிக்கிறோம். அது உனக்கு தெரியும் தானே? அடிக்கடி நீ போன் செய். உன் பெரியப்பாவை கூட்டிட்டு நாங்களும் அங்க வரோம். சரியா?” என அவன் கைகளில் முத்தமிட்டு நீட்டி முழக்கி பேசினாள்.

ஆர்யனும், ருஹானாவும் ஒருவரையொருவர் தர்மசங்கடமாக பார்துக்கொண்டனர். கடைசியில் “அண்ணி! நாங்க போகணும்” என ஆர்யன் சொல்ல, கரீமா இவானை விட்டு எழுந்து கொண்டாள். சல்மா கையை பிசைய, ஆர்யன் “அக்னி சிறகே வா!” என அழைத்துக்கொண்டு வாசலுக்கு சென்றான்.

சகோதரிகள் அவர்கள் பின்னாடியே ஓடிவர “அக்கா! ஏதாவது செய். அவங்க போறாங்க” என்று சல்மா தவிக்க, கதவை திறக்கப் போன ஆர்யனை கரீமா சத்தமாக அழைத்தாள்.

“ஆர்யன் டியர்! இப்போலாம் அம்ஜத் உடல்நிலை நல்லாவே இல்ல. நாம டாக்டரை போய் பார்க்கலாமா? மருந்து மாத்தி தர சொல்லலாமா?”

“நாம இதை பத்தி அப்புறம் பேசுவோம். இப்போ அண்ணா கவலைப்படற மாதிரி எதுவும் அவர் கிட்டே பேசாதீங்க”

“கண்டிப்பா இல்ல.. நான் கேட்கறது..” என பேச வந்த கரீமாவின் பேச்சை தடை செய்த ஆர்யன் “நாங்க போகணும்” என்று வாசற்கதவை திறந்தான்.

அங்கே லைலாவும் அவரின் உயர் அதிகாரியும் கோபமாக பார்த்து நிற்க, ஆர்யனும் ருஹானாவும் உறைந்து நின்றனர்

சுட்டெரிப்பவனே குளிர்ந்துவிட்டான்!

இனிமையான நிகழ்வுகள் அரங்கேற

சூனியமும் சூழ்ச்சியும் தொடர்ந்து

கைவரிசையை காட்ட

மீண்டும் ஒரு சோதனை

மீண்டு வருவார்களா?

(தொடரும்)

Advertisement