Advertisement

“ம்.. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே. பர்வீன் அம்மா இன்னைக்கு இங்க வரேன்னு சொல்லியிருக்காங்க”

“அவங்க வரலனா நல்லா இருக்கும்” என இவான் சொல்ல இருவரும் அவனை திரும்பி பார்த்தனர். “நாம மூணு பேர் மட்டும் இருக்கறது எனக்கு பிடிச்சிருக்கு. நாளைக்கு அவங்க வரட்டும். அவங்களை எனக்கும் பிடிக்கும் தான். ஆனா இன்னைக்கு நம்மோட சந்தோஷ தினம்.”

“தேனே! அவங்க வந்தாலும் நாம சந்தோசமா இருக்கலாம்.”

இவான் பதில் சொல்லாமல் பெருமூச்சு விட, ஆர்யன் “இவான் சரியா தான் சொல்றான்னு எனக்கும் தோணுது. நாம மூணு பேர் இருக்கறதே நல்லா இருக்கு” என சொல்ல, ருஹானா அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

அதன் பின்னரே தான் உண்மையை உளறிவிட்டதை உணர்ந்து கொண்ட ஆர்யன் “நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என சிரிக்க, மூவரும் சிரித்தனர்.

“சித்தி! நான் எப்படி சாப்பிடுறேன், பாருங்க” என இவான் ஜாமை ரொட்டியோடு அள்ளி சாப்பிட, ருஹானாவும் அதையே பின்பற்ற, இருவரின் விளையாட்டையும், சிரிப்பையும் ஆர்யனும் சாப்பிட மறந்து நிறைந்த மனதுடன் பார்த்திருந்தான்.

——-

மலர்களிடம் பேசியபடி நீர் தெளித்துக்கொண்டிருந்த அம்ஜத்திடம் வந்த கரீமா “அம்ஜத் டியர்! நீங்க மருந்து சாப்பிட வேண்டிய நேரம்” என கொடுத்தாள்.

“இது வேற மாத்திரையா கரீமா? எப்பவும் நான் சாப்பிடறது இது இல்லயே!”

“அதே மாத்திரை தான் டியர். வெளியுறை மட்டும் மாறி இருக்கு.”

“அப்போ இது என் மாத்திரை தானா?”

“அம்ஜத் டியர்! என்னை சோர்வடைய வைக்காதீங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு. இதை சாப்பிடுங்க.”

மாத்திரையை சாப்பிட்டுவிட்டு மீண்டும் தோட்டத்தில் வேலை செய்யும் கணவனை பார்த்து கரீமா நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

——–

ஆர்யன் ருஹானாவின் கட்டிலை சரிசெய்ய, ருஹானா அதற்கு உதவி செய்ய, ருஹானா வீட்டை துடைக்க, ஆர்யன் பழுதுபார்க்க… பொழுது இனிமையாக நகர்ந்தது.

சிறிய வீட்டில் இருவரும் எதிரெதிரே முட்டிகொள்ளும் சமயங்களில் ஆர்யன் ஒதுங்கி அவளுக்கு வழிவிட, அவளுக்கு எட்டாத பொருட்களை அவன் எடுத்து கொடுக்க, அவன் நெருக்கம் அவளுக்கு பதட்டத்தை ஏற்படுத்த… அவன் பார்க்க அவள் செய்யும் வேலைகளில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் இருவருக்கும் உள்ளே ஒரு சந்தோஷ ஆறு ஓடிக்கொண்டே இருந்தது.

“இந்த ஹாலை லேசா மாத்தி அமைச்சேன். இப்படி இருக்கறது உங்களுக்கு பிடிக்கலனா பழையபடி மாத்திடுறேன்”

“உனக்கு எப்படி பிடிக்குதோ அப்படியே இருக்கட்டும்.”

“இல்ல. உங்களுக்கு பிடிக்கல போல நான் மாத்திடுறேன்” என நகரப்போனவளை கை நீட்டி தடுத்தான் ஆர்யன்.

“எனக்கு பிடிச்சிருக்கு. இந்த கட்டிடத்தை நீ தான் வீடா மாத்தியிருக்கே. நான் முன்னாடி….” என ஏதோ சொல்ல வந்தவன் நிறுத்திக்கொண்டான். “இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லாத செயல்கள். நான் வளர்ந்த இடம் கூட எனக்கு வீடா தெரியல. அதுனால எனக்கு இதெல்லாம் வித்தியாசமா இருக்கு. நீ தப்பா எடுத்துக்காதே” என சொன்னவனை ருஹானா கனிவோடு பார்த்தாள்.

ஆர்யன் செல்பேசி அழைக்க “ரஷீத்! நான் அரைமணிநேரத்துல வரேன்!” என பேசி வைத்தவன் “ஒரு முக்கியமான வேலை. நான் ஆபீஸ் போகணும். சீக்கிரம் திரும்பி வந்துடுவேன்” என சொல்லி கிளம்பினான்.

அவன் வெளியே செல்ல, பர்வீன் எதிரே வந்தார். அவருக்கு நல்வரவு கூறி வரவேற்றவன், ருஹானாவிடம் “நான் சொன்னேன் தானே. லேட்டாகாது. உனக்கு எதும் வேணும்னா எனக்கு போன் செய்” என சொல்லி சென்றான்.

பர்வீனை ருஹானா உள்ளே அழைக்க “வெளியே இருந்து பார்க்கும்போதே இது அழகான வீடுன்னு தெரியுது. நீ தொடுற எதுவும் அற்புதமா தான் மாறிடுது” என அவர் தன் மகள் மேல் இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தினார்.

“வாங்க! நான் டீ போடுறேன்.”

“சரி, நான் போய் இவானை பார்க்கறேன்.”

——-

தோட்டத்திலிருந்து தள்ளாடி தள்ளாடி தங்கள் அறைக்கு வரும் அம்ஜத்தை பார்த்த சல்மா, வராத போனை எடுத்து காதுக்குள் வைத்து “என்ன! இவான் எங்களுக்கு கிடைக்க மாட்டானா? அவனை அப்படியே கூட்டிட்டு போய்டுவாங்களா?” என அதிர்ச்சியாக கேட்டாள்.

“இவான் இங்க வர மாட்டானா?” அம்ஜத் பயத்துடன் கேட்டான்.

“ஆமா, என் லாயர் தோழி கிட்டே கேட்டேன். அவங்க அப்படி தான் சொல்றாங்க.”

“ஆனா ஆர்யன் இவானை கூட்டிட்டு வந்துடுவேன்னு சொன்னானே!”

“ஆர்யனாலயும் இந்த முறை எதுவும் செய்ய முடியாது. இவான் அர்ஸ்லான் மாளிகைக்கு வரவே முடியாது.”

தலைமுடியை பிய்த்துக்கொண்ட அம்ஜத் தரையில் அமர்ந்துகொண்டு “இவான் வர மாட்டான். எல்லாரும் போறாங்க. அக்ரம் போனான். தஸ்லீம் போனா. அவங்க திரும்பி வரல. நம்ம அமைதி குலைந்து போச்சி. ருஹானா போய்டுவா. இவான் வர மாட்டான்” என திரும்ப திரும்ப புலம்பினான்

“போய்ட்டாங்க… திரும்ப வர மாட்டாங்க” என நக்கல் சிரிப்பு சிரித்தாள், கரீமா.

——

“மகளே! சமூக சேவை நிலையம் இவானை உன்கிட்டே கொடுத்தது எனக்கு நிம்மதி, சந்தோசம். நீ உன் அக்காவோட வாரிசை அருமையா பார்த்துக்கறே!”

“இவான் தான் எனக்கு எல்லாமே. அவன் தான் என்னோட உயிர். அவன் சித்தப்பாவும் அவனை அப்படித்தான் பார்க்கறார்.”

“ஆமா, நீ சொல்றது சரிதான். வெளியே பார்க்கறது போல முரட்டுத்தனமா இல்ல, ஆர்யன். உள்ளே அன்பும், அக்கறையும் நிறைந்தவரா இருக்கார். அவ்வளவு பெரிய மாளிகையை விட்டுட்டு உன் கூட இங்க வந்து இருக்கார்.”

“பர்வீன் அம்மா! அவர் இவானுக்காக இங்க இருக்கார்” என ருஹானா சங்கடமாக சொல்ல, அவள் போனில் ஆர்யன் அழைத்தான். “நான் வீட்டுக்கு கிளம்பிட்டேன். எதும் வாங்கிட்டு வரணுமா?”

“இல்ல, எதுவும் வேணாம்.”

“நிச்சயமா?

“ஆமா, விடுபட்டதுலாம் நான் காலைல வாங்கிட்டேனே!”

“அப்போ நான் நேரா வீட்டுக்கு வரேன்.”

“சரி!” புன்னகைக்கும் பர்வீன் முன்னிலையில் ஆர்யனிடம் பேச ருஹானாவிற்கு வெட்கமாக வந்தது.

“பாரு, கல்யாணம் ஆகி நிறைய வருஷம் ஆன ஆண்கள்கூட இப்படி நடந்துக்கறது இல்ல. ஆர்யன் வீட்டையும், குடும்பத்தையும் பெருசா மதிக்கிறார்” என பர்வீன் திரும்பவும் அவர்களுக்குள்ள நெருக்கத்தை கோடிட்டு காட்ட,  “இவானுக்காக!” என ருஹானா பாதையை மாற்றினாள்.

மர்ம புன்னகை செய்த பர்வீன் “நான் கிளம்பறேன், மகளே!” என்றார்.

——–

கையில் பேக்கரி பையுடன் வந்த ஆர்யனிடம் ருஹானா “என்ன கேக் வாங்கிட்டு வந்துருக்கீங்க? ஏன் இந்த சிரமம் உங்களுக்கு?” என கேட்டாள்.

“பேக்கரி பக்கமா வந்தேன். இது இவானுக்கும் உ…. இவானுக்கு பிடிக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன்” என ஆர்யன் அவள் கண்களை பாராமல் சொல்ல “என்கிட்டே கொடுங்க” என ருஹானா பையை வாங்க, அந்த பையின் பின்னே ஒரு அழகிய மலர்கொத்தை அவன் மறைத்து பிடித்திருந்தான்.

தவறு செய்த சிறுவன் ஆசிரியையிடம் மாட்டிகொண்டது போல “அந்த கடைக்கு வெளியில ஒரு சின்ன பொண்ணு இதை வித்துட்டு இருந்தா. நீ இங்க இருக்கிற ஜாடில பூக்கள் வைக்கறதை பார்த்தேன். நான்… உனக்கு பிடிக்குமோன்னு…” என ஓரக்கண்ணால் அவளை பார்த்தபடியே மெல்ல வார்த்தைகளை உதிர்த்தான்.

அவளும் தயங்கியபடியே அதை வாங்கி அவனை பார்த்து புன்னகைக்கவும் தான் அவனுக்கு மூச்சு சீராக வந்தது. அதை முகர்ந்து பார்த்தவள் “அழகா இருக்கு. நல்ல வாசனை. நன்றி” என சொல்லவும் உற்சாக பந்து அவனுள்ளே குதித்தது.

“சித்தப்பா! வந்துட்டீங்களா?” என இவான் அங்கே வர, “ஆமா, அக்னி சிறகே!” என ஆர்யன் சொல்ல, “உன் சித்தப்பா உனக்கு பிடிச்ச கேக் வாங்கிட்டு வந்துருக்கார்” என்று ருஹானா சொன்னாள்.

“நாம இப்போ அதை சாப்பிடலாமா, சித்தி?”

“சரி, கொஞ்சமா தான் சாப்பிடனும். இல்லனா நீ இரவு உணவு சரியா சாப்பிட மாட்டே” என சொல்லி அவள் மூவருக்கும் சிறிய கரண்டியோடு கொண்டுவந்து உணவு மேசையில் வைக்க, அதன் மூடியை திறந்த இவான் சிரிப்புடன் கண்களை மூடிக்கொண்டான்.

இவானை பார்த்த ஆர்யன் ருஹானாவை கேள்வியாய் பார்க்க, அவள் “என்ன செய்றே அன்பே?” என கேட்டாள். கண்களை திறக்காமலேயே இவான் “நான் இந்த தருணத்தை என் மனசுல பதிவு செய்து வைக்கிறேன். இதை எப்பவும் நான் மறக்க விரும்பல” என்றான்.

அவனது மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன ஆர்யன் “அப்போன்னா இது உன் மனசுல மட்டும் இருந்தா போதாது. ஒரு போட்டோவும் எடுத்து வச்சிக்கலாம்” என சொல்ல, இவான் ஆனந்தமாக தலையாட்டினான்.

ஆர்யன் செல்பேசியை எடுத்து இருவரையும் படம் எடுக்க முயல, “ஆனா சித்தப்பா நீங்க இல்லாம எப்படி?” என இவான் சொல்ல ஆர்யனும் ருஹானாவை பார்த்தபடி எழுந்து வந்தான். இவானின் நாற்காலியின் கைப்பிடியில் அமர்ந்தவன் செல்பேசியில் படம் எடுக்கும் நேரத்தை அமைத்து அதை அவர்களுக்கு முன்னே வைத்தான்.

“சித்தி, சித்தப்பா! நீங்க போட்டோல வரவே இல்ல. கிட்ட வாங்க” என இவான் இருவரையும் கழுத்தை பிடித்து இழுத்து தன் தலையோடு ஒட்ட வைத்தான்.

மூவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைபடத்தை ரசித்து பார்த்த இவான் “இது அழகா இருக்கு தானே, சித்தி?” என கேட்க, அவள் ”ஆமா, ஏன்னா நீ மகிழ்ச்சியா இருக்கே கண்ணே!” என்றாள்.

“உங்களுக்கு பிடிச்சிருக்கா, சித்தி?”

“ஆமா, பிடிச்சிருக்கு அன்பே!”

“சித்தப்பா! உங்களுக்கு?”

“ரொம்ப பிடிச்சிருக்கு.” இது இவானிடம்.

“அழகா இருக்கு.” இது ருஹானாவை பார்த்து.

——-

ருஹானா பல்தேய்க்கும் பற்பசையை கையில் வைத்துக்கொண்டு அதை கவலையுடன் பார்த்து நிற்க, அங்கே வந்த ஆர்யன் “ஏன்? என்ன நடந்தது?” என கேட்டான்.

“இவான் பற்பசையை நடுவுல அழுத்திட்டான். நான் எத்தனையோ முறை அப்படி செய்யக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்.”

“அதனால என்ன? அவன் விருப்பப்படி செய்யட்டுமே!”

“அப்படி செய்தா முன்னாடி இருக்கற பற்பசை வெளியே வந்து காஞ்சி போகுது.”

“இருக்கட்டும். புதுசு வாங்கிக்கலாம்.”

“ஆனா அது வீணா போகும் தானே? இப்போ இருந்தே இவானுக்கு சிக்கனத்தை பற்றி சொல்லிக் கொடுக்கணும்.”

“அவன் எதுக்கு சிக்கனத்தை பத்தி கத்துக்கணும்? அவன் அர்ஸ்லான். சிக்கனமா இருக்கணும்னு அவனுக்கு அவசியம் கிடையாது.”

கோபமாக சிரித்த ருஹானா “இது பணம் பற்றியது கிடையாது. இந்த வயசுல தான் இவானோட குணங்கள் நிர்ணயம் ஆகும். இது போல சின்ன விஷயங்கள் முக்கியமானது” என கடுமையாக சொன்னாள்.

“இந்த பற்பசை மாதிரியா?” குழப்பமாக கேட்டான்.

“ஆமா. நான் இவான் கிட்டே இதை பத்தி விளக்கமா சொல்லி தரப் போறேன்.”

“அவனுக்கு தான் அது முன்னாடியே தெரியுமே!” என ஆர்யன் அவளை தடுக்க பார்க்க, அவனை தாண்டி இவான் அறைக்கு போவதற்கு அவள் நகர, “ஆனா அதுக்கு முன்னாடி நீ ஒன்னு தெரிஞ்சிக்க வேண்டியது அவசியம்” என ஆர்யன் சொல்ல, ருஹானா திரும்பி பார்த்தாள்.

“பற்பசையை அப்படி அழுத்தினது இவான் இல்ல. நான் தான்” ஆர்யன் பெருமையாக சொல்ல, ருஹானா சலிப்பாக தலையை ஆட்டினாள். சிரிப்பை அடக்கிக்கொண்டு திரும்பி வந்த வழியே அவள் செல்ல, ஆர்யனும் சிரிப்புடன் அவள் சொல்லித் தந்ததை மனதில் நிறுத்தினான்.

——–

Advertisement