Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                        அத்தியாயம் – 99

மேல் இமையை மேலேயே ஒட்ட வைத்தது போல ஆர்யன் கண் சிமிட்டாமல் ருஹானாவையே பார்த்தபடியே படுத்திருக்க, புவியீர்ப்பு விசையை விட அதிக சக்தி வாய்ந்த அந்த பார்வையை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள்.

ஆனாலும் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வு அவளை திணறடிக்க, அப்படியே திரும்பி படுத்துக்கொண்டாள். என்றாலும் ஆர்யன் அவளின் சீரற்ற சுவாசத்தை பார்த்துக்கொண்டே தான் இருந்தான்.

திரும்பி படுத்தாலும் அவளுக்கு தெரிந்து கொள்ள ஆசை, இன்னும் தன்னை தான் பார்க்கிறானா என… இலேசாக திரும்ப போனவள் தலையை திருப்பாமல் தயங்கியபடி இருக்க, “சித்தி!” என குரல் கேட்டது.

இருவரும் தலையை தூக்கி பார்க்க “சித்தி! என் ரூம் ஜன்னல் காத்துல திறந்துடுச்சி. ரொம்ப குளிர்!” என்றபடி இவான் வந்தான். “என் கூட படுத்துக்க தேனே! சித்தி உன்னை மூடி விடுறேன்” என அவனை தன்னருகே படுக்க வைத்து அரவணைத்து கொண்டவள், அவன் கையை எடுத்து முத்தமிட “அச்சச்சோ! என் அன்பு செல்லத்துக்கு கை இப்படி சில்லுனு இருக்கே!” எனக் கவலைப்பட்டாள்.

“லேசா தான்” என சொன்ன இவான் ஆர்யனை திரும்பி பார்க்க, இவளும் மெதுவாக எட்டி பார்த்தாள். அவன் இவர்களின் பாசப்பிணைப்பை பார்த்தபடி பார்வையை மாற்றாமல் அப்படியேத் தான் இருந்தான்.

“சித்தி! நாம மூணு பேரும் எப்பவும் இதே போல சேர்ந்து தூங்கனும்னு நான் ஆசைப்படறேன்” என இவான் சொல்ல, ருஹானா அதற்கு பதில் சொல்லாமல் “தூங்கு மானே! கண்ணை மூடிக்கோ!” என தலையை தடவ, சித்தியின் சொல்லை என்றுமே மீறாத இவான் கண்களை மூடிக்கொண்டான்.

ருஹானாவும் இம்மியும் அசையாத ஆர்யனை கண்களில் நிரப்பிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். தூக்கத்தில் ஆழ்ந்த இருவரையும் விழி விரித்து பார்த்த ஆர்யன், ‘இந்த இரவு தூங்குவதற்கானது அல்ல, ஒரு நொடியும் வீணாக்க மாட்டேன்’ என கங்கணம் கட்ட… அந்தோ பாவம்.. அவன் கண்கள் தானாகவே மூடிக்கொண்டன. இதழ்களில் மலர்ந்த சிரிப்புடன் சுகமாக தூங்கிப் போனான்.

——–

ஆர்யனின் படுக்கையறைக்கு வந்த சல்மா கோட் ஸ்டான்ட்டில் தொங்கிய அவனது கோட்டை எடுத்து அணைத்துகொண்டாள். அழுதுக்கொண்டே அவன் படுக்கையில் படுத்துக்கொண்டாள்.

வீடு முழுதும் அவளை தேடிய கரீமா இங்கே தூங்கும் அவளை பார்த்து திடுக்கிட்டு அவளை எழுப்பினாள். “சல்மா! ஆர்யன் அறையில நீ என்ன செய்றே? உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? இங்க ஏன் படுத்துருக்கே? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?”

“விடு என்னை. அவங்க ஒரு முழு ராத்திரி ஒன்னா இருந்திருக்காங்க. அதை நினைச்சாலே எனக்கு தாங்க முடியல” என சல்மா மூர்க்கமாய் எதிர்க்க, அவளை பிடித்து இழுத்த கரீமா, “வா என்கூட. நீ நம்ம ரெண்டு பேரையும் அழிச்சிடுவ போல” என்று அவள் கையிலிருந்த கோட்டை பிடுங்கினாள்.

“ஆர்யனை தான் என்னால தொட முடியல. அவன் ஜாக்கெட்டையாவது தொட்டுக்கறேன். விடு” என போராடிய சல்மாவிடமிருந்து ஆர்யனின் உடையை பறித்து கட்டிலில் போட்ட கரீமா “வா, போகலாம். அழாதே!” என அவளை வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றாள்.

——

காலையில் கண்விழித்த ஆர்யன் தான் நேராக படுத்திருப்பது கண்டு திகைத்து வேகமாக திரும்பி எதிர் சோபாவை பார்த்தான். அங்கே ருஹானாவும், இவானும் அயர்ந்து தூங்குவது கண்டு நிம்மதியாய் புன்னகைத்தான்.

எழுந்து வசதியாக அமர்ந்துக்கொண்டு நேற்று முடிக்காமல் விட்ட வேலையை தொடர்ந்தான். ருஹானா அசையும்வரை பார்த்தவன், அவள் விழிக்கவும் வேகமாக பார்வையை திருப்பிக்கொண்டான். இரவில் நேருக்கு நேராக பார்த்தவன் தானே! விடிந்ததும் என்ன திருந்திவிட்டானா? ஏன் இந்த மாற்றம்?

வேகமாக எழுந்த ருஹானா தூங்கும் இவானுக்கு நன்றாக மூடிவிட்டு “நான் நல்லா தூங்கிட்டேன். சீக்கிரமே எழுந்திருச்சிருக்கணும். நான் போய் பேகலும், ரொட்டியும் வாங்கிட்டு வரேன்” என கிசுகிசுப்பாக சொன்னாள், இவான் தூக்கம் கலைந்துவிடக் கூடாதே என்று.

ஆர்யனும் அதே குரலில் “நான் போறேனே!” என்றான். “இல்ல, இந்த முறை நான் போறேன். விட்டுப்போன சில பொருட்களும் நான் சேர்த்து வாங்கிட்டு வரேன்” என சொன்னவள், அவன் காலை பார்த்தாள்.

அவள் பார்வையை தொடர்ந்து அவனும் அவன் காலை அசைத்து பார்த்துவிட்டு என்ன என கேட்டான். “ஒன்னுமில்லையே!” என்று சொல்லி அவள் நகர்ந்து விட்டாள்.

——–

“என்ன இதெல்லாம்?” கடைக்கு போய்விட்டு வந்த ருஹானாவிடம் ஆர்யன் கேட்க, “சில பொருட்கள் தேவைப்பட்டுச்சி. அதான் வாங்கிட்டு வந்தேன். அப்படியே உங்களுக்கு பல் தேய்க்க பிரஷும், செருப்பும் வாங்கிட்டு வந்தேன்” என அவன் முன்னால் ஒரு செருப்பை வைத்தாள்.

அவளின் செய்கையில் உருகிப் போனவன் “நல்லா இருக்கு. நாம இங்க வசதியா செட்டில் ஆகிட்டோம்” என்று சொல்ல “நாம குறுகிய காலம் இங்க தங்கினாலும், இந்த இடத்தை சரியா பராமரிக்கணும். இதும் நம்ம வீடு தான்” என ருஹானா சொல்ல, அவளது ‘நம்ம வீடு’ எனும் பதம் அவனை சந்தோசப்படுத்தியது.

“நான்…” என இருவரும் தொடங்க ஆர்யன் விட்டுக் கொடுத்தான். “நான் காலை உணவு தயாரிக்கறேன்” என அவள் சொல்ல, “நான் இவான் ஜன்னலை சரிசெய்றேன்” என அவன் சொல்லவும், அவள் தலையாட்டி சென்றாள்.

அவள் வாங்கித் தந்த செருப்பை பூப்போல மாட்டியவன் அது அவன் காலுக்கு மிக சரியாக இருப்பதைக் கண்டு பூரிப்படைந்தான். இரு உள்ளங்கால்களையும் பிரட்டி பிரட்டி பார்த்துக்கொண்டான். அவன் ஆயுளில் அவனுக்கு தேவை என்று யாரும் எதுவும் வாங்கிக்கொடுத்திராத நிலையில், ருஹானாவின் இந்த செய்கை அவனுக்கு நிறைவாய் இருந்தது.

இத்தனை அன்பும், அக்கறையும் தன்னால் தாங்க முடியுமா எனவும் அவனுக்கு சந்தேகம் வந்தது.

——

“பெரியம்மா! இதை பார்த்தீங்களா?” என நஸ்ரியா தன் கையில் இருந்த காதணியை சாராவிடம் காட்ட “இப்போ எனக்கு வதந்தி பேச நேரம் இல்ல. காலை உணவு தயாரிக்கணும்” என அவர் எரிந்து விழுந்தார்.

“பெரியம்மா! இது சல்மா மேடமோட கம்மல். இது ஆர்யன் சார் படுக்கையில கிடந்தது. படுக்கை விரிப்பும் கலைந்து போய் கிடந்தது. அப்படினா என்ன அர்த்தம்?”

அதிர்ச்சியடைந்த சாரா “உன் வேலையை மட்டும் நீ பார்க்க மாட்டியா? உனக்கு சம்பந்தம் இல்லாததுல தலையிடாதேன்னு உனக்கு எத்தனை முறை சொல்றது?” என கத்த, அதை சற்றும் காதில் வாங்காத நஸ்ரியா “சல்மா மேடம் ஆர்யன் சாரை காதலிக்கிறாங்க. இது ஆர்யன் சாருக்கு தெரியாதுன்னு நான் நினைக்கறேன். நீங்க என்ன நினைக்கறீங்க?” என்றாள்.

நெருப்பை மிதித்தது போல குதித்த சாரா “நான் என்ன சொல்றேன், நீ என்ன செய்றே? வாயை மூடிட்டு பாத்திரத்தை கழுவு” என சொல்ல, “ஆனா… “ என நஸ்ரியா மறுத்து பேச, “ஆனாலாம் எதுவும் கிடையாது. உன் பெரியம்மா சொல்றபடி நட” என பின்னால் வந்து நின்ற ஜாஃபர் கடுமையாக சொல்லவும், நஸ்ரியா யோசனையுடனேயே நகர்ந்தாள்.

——

“சிங்கப்பையா! அந்த ஸ்க்ரு டிரைவரை எடுத்து கொடு”

“இதுவா சித்தப்பா?”

“நீ கப்பல் கேப்டன் ஆகணும்னா இதெல்லாம் நல்லா தெரிஞ்சிக்கணும். இது ஸ்பானர். இதான் ஸ்க்ரு டிரைவர். இதை ஸ்க்ரு தலையில இப்படி மாட்டி இப்படி திருப்பணும்” என செய்து காட்டிய ஆர்யன், திருப்புளியை இவான் கையில் கொடுத்தான். “பார்த்துக்கிட்டியா? எங்க, நீ செய் பார்க்கலாம்.”

சிறிய தகப்பன் சொல்லிக் காட்டியபடி இவான் உதடுகளை மடக்கிக்கொண்டு சிரத்தையாக ஆணியை திருகியவன் “ஹே! இது வேலை செய்யுது. சித்தப்பா! நான் முடுக்கிட்டேன்” என குதூகலிக்க, “ஆமா அக்னி சிறகே! வெல்டன்!” என ஆர்யனும் அவனை பாராட்டினான்.

இவான் வயிறு சத்தம் எழுப்ப “சித்தப்பா! அந்த சத்தம் எங்க இருந்து வருதுன்னு உங்களுக்கு தெரியுமா? என் வயித்துல இருந்து தான்” என சிரித்தான். அவன் உயரத்துக்கு மண்டியிட்ட ஆர்யன் “சிங்கப்பையா! இப்போ நான் உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்க போறேன். கவனமா கேளு. உன் சித்திட்ட போய் காலை உணவு ரெடியான்னு கேளு. ஓடு” என ரகசியமாக சொன்னான்.

“சரி சித்தப்பா!” என உற்சாகமாக ஓடிய இவானை அன்போடு ரசித்து பார்த்த ஆர்யன் தன் வேலையை தொடர்ந்தான்.

“சித்தி!” என இரகசியமாக அழைத்த இவானிடம் குனிந்த ருஹானா அவளும் இரகசியமாகவே கேட்டாள். “என்ன அன்பே?”

“நான் ஒரு முக்கியமான வேலையா இங்க வந்தேன்.”

“என்ன கண்ணே?”

“சித்தப்பா ஒரு தகவல் கேட்க சொன்னார். காலை உணவு எப்போ ரெடியாகும்?”

“சீக்கிரமே.  முட்டை மட்டும் தான் செய்யணும். இப்போ நானும் உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்க போறேன். அது உன் சித்தப்பா கொடுத்த வேலையை போல அதிக முக்கியமானது.”

“என்ன சித்தி?”

“நீ போய் உன் சித்தப்பாட்ட கேளு” என சொன்னவள் அவன் காதில் இரகசியம் பேசினாள்.

“சரி, சித்தி” என சிரிப்புடன் அவன் உள்ளே ஓட, ருஹானாவும் சிரித்தாள்.

“சித்தப்பா! சித்தப்பா! சித்தி எனக்கு ஒரு வேலை கொடுத்திருக்காங்க. அதும் உங்க வேலை போல முக்கியமானது தான். நீங்க ரெடியா? நான் கேட்கவா?” என கண்களை விரித்துக்கொண்டு இவான் சொல்ல “நான் ரெடி” என்றான் ஆர்யன்

“சித்தி கேட்டாங்க. உங்களுக்கு முட்டை எப்படி செய்யணும்?”

“உன் சித்திட்ட சொல்லு. என் சித்தப்பாக்கு வேக வைத்த முட்டை வேணும்”

“சித்தி! சித்தப்பாவுக்கு முட்டையை வேக வைங்க. எனக்கு ஆம்லேட் போடுங்க” என இங்கிருந்தே கத்திக்கொண்டு ஓடினான், இவான்.

அந்த சிறிய வீட்டை அன்பின் அக்கறையும், அரவணைப்பின் பாதுகாப்பும் சூழ்ந்திருந்தது. சிரிப்பும், மகிழ்ச்சியும் எதிரொலித்தது.

——–

ஆர்யனும், இவானும் சாப்பிட சமையலறைக்குள் வர, ருஹானா ஏதோவொரு பாடலை ஹம் செய்தபடியே முட்டையின் ஓட்டை நீக்கிக்கொண்டிருந்தாள்.

அதைக்கேட்டு அப்படியே நின்ற ஆர்யன் ‘என்னுள் இருந்து குரலாய் என்னை இசைக்கிறாய் என்றால் தேன்குரலால் என்னை இயக்கவும் செய்கிறாயே’ என வியந்து கொண்டான்.

ஆர்யன் நிற்பதை பார்த்த ருஹானா “நீங்க உட்காருங்க. நான் முட்டை தோலை உரிச்சிடுறேன்” என சொல்ல, ஆர்யன் கண்ணசைத்து இணங்கினான். அவன் அமர, முட்டையை கொண்டுவந்து வைத்தவள் தேநீரையும் கொண்டு வந்து அவன் கோப்பையில் ஊற்றினாள். ஆர்யன் அவளுடைய கோப்பையையும் அவள் ஊற்றுவதற்கு வசதியாக பக்கத்தில் எடுத்து வைத்தான்.

அவள் வசதிக்கு செய்தானா அல்லது அவள் அருகாமை நீடிக்க அவன் வசதிக்காக செய்தானா?

மூவரும் உணவை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட “இது தான் என்னோட முழு வாழ்க்கையிலயும் நான் சாப்பிட்ட சிறந்த உணவு” என இவான் பெரிய மனிதனைப்போல சொன்னான்.

“உன் முழு வாழ்க்கையிலயுமா?” என ஆர்யன் சிரிக்காமல் கேட்க, ருஹானா புன்னகைத்தாள்.

“ஆமா, ஏன்னா நீங்க ரெண்டு பேரும் என்கூட இருக்கீங்க. அதனால எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. சரியா சித்தி?” என கேட்க, மூவரும் உணவையும், அந்த இனிய தருணத்தையும் அனுபவித்து உண்டனர்.

Advertisement