Advertisement

இருவரும் நம்பமுடியாமல் மீண்டும் தங்கள் கையில் சேர்ந்திருந்த அந்த படத்துண்டுகளை பார்த்துக்கொண்டனர். பின் ஒருவருக்கொருவர் காந்த பார்வையில் மூழ்கிப் போயினர்.

இந்த காட்சியை வெளிஜன்னல் வழியாக பார்த்து நின்ற சல்மாவிற்கு பயங்கர இடியொன்று சத்தம் செய்யாமல் தலையில் விழுந்தது. மெய்மறந்திருந்த காதலர்களை கண்டு வெதும்பிய அவள் கையில் இருந்த அலுவலக கோப்பை நசுக்கினாள். அதற்கு மேல் தாங்க முடியாமல் அழைப்பு மணியை அழுத்தினாள்.

மணியோசை கேட்டு இவ்வுலகம் மீண்ட இருவரில், ருஹானா “நான் போய் பார்க்கறேன்” என எழுந்து வந்து கதவை திறந்தாள்.

“சல்மா?” ருஹானா ஆச்சர்யமாக கேட்க, அவளை வெட்டும் பார்வை பார்த்த சல்மா “நான் ஆர்யனை பார்க்க வந்தேன்” என அவளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள்.

“சாரி ஆர்யன். இது முக்கியமான ஆவணமா இருக்கலனா நான் உங்களை தொல்லை செய்திருக்க மாட்டேன். இதை அவசரமா ஜெர்மனிக்கு அனுப்பணும்” என நீட்ட, அதை வாங்கி கையொப்பம் இட்ட ஆர்யன் “அதுக்கு நீ இங்க வந்திருக்க வேண்டிய அவசியம் இல்ல. நான் ஆபீஸ்க்கு வந்து கையெழுத்து போட்டுருப்பேன்” என்றான், கடுமையான குரலில்.

“சொன்னேனே! இது அவசரமா அனுப்பணும்னு. அதுவும் இல்லாம எனக்கு இவானை பார்க்கணும் போல இருந்தது” என்று சொன்ன சல்மா இவான் அருகே மண்டியிட்டு அவன் தலையை தடவினாள். “இவான் டியர்! நீ இல்லாம நம்ம மாளிகையே வெறிச்சோடி கிடக்குது.”

ஆர்யனும் ருஹானாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, அதை ஓரக்கண்ணால் கவனித்த சல்மா வீட்டை நோட்டம் விட்டு “இந்த வீடு அழகா இருக்கு” என்று சொல்ல, அவளிடம் யாரும் பேசவில்லை.

“நான் போய் இவானுக்கு அவன் வயதுக்கு ஏத்த வேற பஸில் வாங்கிட்டு வரேன்” என ருஹானாவிடம் சொல்லி ஆர்யன் எழுந்து கொள்ள, சல்மா “நாம சேர்ந்து காபி குடிக்கலாம்னு நினைச்சேனே!” என கெஞ்சுதலாக கேட்க, “இன்னுமொரு சமயம் பார்க்கலாம்” என ஆர்யன் நிர்தாட்சண்யமாக மறுத்தான்.

“சித்தப்பா! நானும் உங்க கூட வரட்டுமா?” என இவான் கேட்க, ஆர்யன் ருஹானாவை பார்க்க, அவள் சம்மதித்து தலையாட்டினாள். அவர்களின் நேத்ர மொழியில் சல்மாவிற்கு இரத்தம் கொதித்தது.

“வா, சிங்கப்பையா! என்னோட வர உன் சித்தி அனுமதி கொடுத்துட்டாங்க” என ஆர்யன் சொல்ல, ருஹானாவின் முகத்தில் பூத்த புன்னகைப்பூ ஆர்யனுக்கு நறுமணம் தர, சல்மாவிற்கு எரிச்சலை தந்தது.

“சரி, நான் ருஹானாவோட ஒரு காபி குடிக்கறேன்” சல்மாவும் விடாப்பிடியாக அங்கேயே நிற்க, அவளை ருஹானாவோடு தனித்து விட தயங்கிய ஆர்யன் ருஹானாவின் முகம் பார்க்க, அவள் பரவாயில்லை என்பது போல தலையசைத்தாள்.

“நாங்க சீக்கிரம் வந்துடுவோம்” என்று ருஹானாவிற்கு குறிப்பு காட்டி ஆர்யன் இவானை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்.

“அப்பாடா! இப்போ தான் நமக்கு தனிமை கிடைச்சது” என சல்மா தன் குளிரங்கியை கழட்டி சோபாவில் போட்டாள்.

“நான் உணவு தயாரிக்கணும்.” ருஹானா அவளிடமிருந்து விலகி சமையலறைக்கு செல்ல, சல்மாவும் அழையாத விருந்தாளியாக அவள் பின்னால் சென்றாள்.

ருஹானா அவளை கண்டுகொள்ளாமல் சமையலில் ஈடுபட சல்மாவின் கோபம் தலைக்கேறியது. அவளை வம்புக்கு இழுத்தாள். “உனக்கு கஷ்டமா இருக்கும் தானே? அவ்வளவு பெரிய மாளிகையை விட்டுட்டு இந்த சின்ன வீட்ல இருக்க..”

“எனக்கு புரியல.”

“ஆனா பின்னாடி வர போற புதையலை நினைச்சா இதை பொறுத்துக்கலாம், அப்படித்தானே?”

“நீ என்ன பேசுறே?”

“ஒன்னும் தெரியாதவ மாதிரி நடிக்கறதை நிறுத்து! அது என்கிட்டே தேவை இல்ல. நாம தனியா தான் இருக்கோம். ஒத்துக்கோ, ஆர்யனை நீ மயக்க பார்க்கற தானே?”

“அதுப்போல எந்த நோக்கமும் எனக்கு இல்ல.” ருஹானாவின் கண்கள் கலங்க, சல்மாவிற்கு குஷியானது.

“எனக்கு நல்லா தெரியும். நீ ஒரு மாயக்காரி. காசுக்காக எதையும் செய்வே. எளிமையான பொண்ணு மாதிரி ஆர்யன் கிட்டே முகமூடி போட்டு ஏமாத்துறே. ஆர்யனை முட்டாளாக்கலாம். ஆனா என்கிட்டே உன் மாய்மாலம் செல்லாது.”

“உனக்கு என்னை பத்தி எதுவும் தெரியாது. நீ சொன்னது எல்லாம் உன்னை பத்தி தான். உன்னைப் போல என்னை நினைச்சியா? உனக்கு முகமூடி இருக்கலாம். ஆனா எனக்கு இல்ல. ஒருவேளை தந்திரம், நாடகம், முகமூடில்லாம் இருந்தா அது என்கிட்டே இல்ல. உனக்கே நல்லா தெரியும், இதெல்லாம் யார்கிட்டே இருக்குன்னு..” ருஹானா பெண்புலியென சீறினாள்.

ருஹானாவின் சீற்றத்தை எதிர்பார்க்காத சல்மா “நீ என்கிட்டே இப்படி பேச…” என தொடங்க, “என் வீட்டை விட்டு வெளியே போ… தயவு செய்து..” என ருஹானா வாசலுக்கு கையை காட்டினாள்.

அதிர்ந்து போன சல்மா கைகளை பிசைந்தாள். கோபத்தில் வார்த்தை வராமல் தவித்தாள். பின் “இது இதோட முடியாது. நான் மட்டும் இல்ல, எல்லாரும் உன் சுயரூபத்தை பார்ப்பாங்க.. நான் காட்டுவேன்” என சொல்லி வேகமாக வெளியே சென்றாள்.

ருஹானாவிற்கு மூச்சு எடுக்க முடியாமல் இதயம் படபடக்க கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

———

 ‘கவலைப்படாதே ருஹானா! அவ சொல்லிட்டு போனது எல்லாம் குப்பை. அதை மனசுல இருந்து தூக்கி போடு.’ அவளுக்கு அவளே தேற்றிக்கொண்டாலும், சல்மாவின் கொடுஞ்சொற்களில் இருந்து ருஹானாவால் வெளியே வர முடியவில்லை.

“சித்தி!” என இவான் வர, “நீங்க வந்துட்டீங்களா?” என அவள் எழுந்து கொள்ள, நொடியில் அவளின் முகமாற்றத்தை ஆர்யன் கண்டு கொண்டான்.

“பாருங்க, சித்தி! நானே என்னோட புதிர் படத்தை தேர்ந்தெடுத்தேன். நல்லா இருக்கா?”

“அருமையா இருக்கே. எனக்கு பிடிச்சிருக்கு, அன்பே!”

அவள் முகத்தை காட்டாமல் பேசினாலும் ஆர்யன் அவள் ஏதோ சரியில்லை என் புரிந்து கொண்டான். “நீ நல்லா தானே இருக்கே?”

“ஒண்ணுமில்லயே! உங்களுக்கு எல்லாம் எப்படியோ தெரியல, எனக்கு அதிகமா பசிக்கிது. வாங்க சாப்பிடலாம்” என அங்கிருந்து அகன்றாள்.

——–

ஆர்யன் வரவேற்பறையின் சோபாவில் அமர்ந்துகொண்டு அலுவலக வேலைகளை பார்த்துக்கொண்டிருக்க, தண்ணீரை எடுத்துக்கொண்டு ருஹானா அவனை தாண்டி படுக்கையறை நோக்கி சென்றாள்.

“இவான் தூங்கிட்டானா?” என ஆர்யன் கேட்க, அவள் ஆமென தலையசைத்தாள். “இங்க வா, உட்கார்” என அவன் அழைக்க, அவள் மறுத்தாள். “உங்க வேலை என்னால கெட்டுப் போக கூடாது.”

“அதெல்லாம் கெட்டுப் போகாது. நீ உட்கார்” என கூப்பிட்ட ஆர்யன், அவள் எதிரே அமர்ந்தபின்னும் யோசனையில் இருக்க, ருஹானா தானாகவே கேட்டாள். “உங்களை ஏதோ குழப்புதே?”

“நான் இவானை பற்றி யோசிக்கிறேன். நீங்க அம்மா அப்பாவா இருந்திருக்கலாம்னு இவான் நம்மை கேட்டான்ல. அது ஏன் அப்படி கேட்டான்? அவனை ஏதும் பாதிச்சிருக்குமா? அவன் கவலையா இருக்கானா?”

“இல்ல. அவன் அவனோட அம்மா அப்பாவை தேடுறான்.”

“சரி தான்!” வருத்தமாக தலையாட்டிய ஆர்யன் “அவனோட அப்பாக்கு மாற்றா என்னால இருக்க முடியாது” என சோகமாக சொன்னான். அதைப் பொறுக்காத ருஹானா “நீங்க…. ரொம்ப நல்லவர். இவான் அதிர்ஷ்டசாலி” என்று சொல்ல, ஆர்யன் முகத்தில் நிம்மதியான ஒரு ஆறுதல் புன்னகை.

“நீயும் ரொம்ப நல்ல சித்தி தான்” என அவன் பாராட்ட, அவள் முகத்திலும் புன்னகை.

“காபி?” என அவனும் “உங்களுக்கு காபி வேணுமா?” என அவளும் ஒரே நேரத்தில் கேட்க, அவர்கள் புன்னகை மேலும் விரிந்தது. சரியென அவன் தலையாட்ட, “நான் காபி தயாரிக்கிறேன்” என அவள் சமையலறைக்கு சென்றாள்.

கெட்டிலை மின்செருகியில் ருஹானா மாட்டவும், வீடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது.

“ஃப்யூஸ் போய்டுச்சி!” என சத்தமாக சொன்ன ருஹானா அருகில் வந்த ஆர்யனின் நிழலை பார்த்து பயந்து போய் “ஆஹ்!” என்றாள்.

“பயப்படாதே! நான் இங்க தான் இருக்கேன்” என்ற ஆர்யன் கையில் இருந்த செல்பேசியின் விளக்கை இயக்கியிருந்தான்.

“நான் ப்ளக்கை மாட்டினதும் பவர் போய்டுச்சி.”

“கவலைப்படாதே! இப்போ நான் சரி செய்துடறேன்” என்று சொன்ன ஆர்யன் அவள் கையை பிடித்துக்கொண்டே மின்இணைப்பு இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்தான்.

“அந்த டிராயர்ல டெஸ்டரும், ஸ்குரூ டிரைவரும் இருக்கும். எடுத்துட்டு வர்றீயா?” என அவளிடம் செல்பேசியை கொடுத்து அனுப்ப, அவளும் தட்டுத்தடுமாறி அவன் கேட்டதை கொண்டு வந்தாள்.

“இதோ இங்க தான் பிரச்சனை. இந்த வயர் எரிஞ்சிருக்கு பார். லைட் கிட்ட காண்பி” என அவன் சொல்ல, அவன் தோளுக்கு மேல் எட்டி அவளும் விளக்கை பிடித்தாள்.

“வேடிக்கை தான் இல்லையா? நான் சின்ன குழந்தை போல இருட்டுக்கு பயப்படுறேன்” என சிரித்தபடி அவள் சொல்ல, செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவன் அவளை நோக்கி திரும்பினான். டார்ச் ஒளியிலும் தேவதையாக மின்னிய அவளை ரசித்த அவன், அவள் நாணம் கண்டு வேலையை தொடர்ந்தான்.

“சரி செய்தாச்சி!” என ஆர்யன் எல்லா இணைப்புகளையும் இயக்க, மின்னொளி எங்கும் பரவி அவர்கள் கண்கள் கூசியது.

அவள் கேள்விக்கு நிதானமாக பதில் சொன்னான். “தெரியாததுக்கு மக்கள் பயப்பட தான் செய்வாங்க. ஆனா சிலருக்கு இருட்டு நல்லா பழகி இருக்கும். அவங்க இருட்டுலயே தான் வாழ விரும்புவாங்க.”

அவனை இரக்கமாக பார்த்த ருஹானா “ஒருவேளை அவங்களுக்கு வெளிச்சத்தை கண்டா பயமா இருக்கலாம். இருட்டுக்கு பின்னால ஒளிமயமான வாழ்க்கை இருக்கு. அதை வாழ முடியும்னு அவங்களுக்கு தெரியல” என்றாள்.

அவள் சொல்வதை புரிந்து கொண்ட ஆர்யன் “முடியும்னு நீ நினைக்கிறியா? அப்படி ஒரு வாழ்க்கை?” என கேட்க, ஆமென ருஹானாவின் கண்கள் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தன.

அவளிடம் சந்தேகமாக ஆர்யன் கேட்டாலும் அவன் மனதில் உறுதியான நம்பிக்கை இருந்தது. ‘என்னருகில் நீயிருக்க இருளேது என் வாழ்வில்!’

இருவரின் முகங்களும் அருகருகே இருக்க, அவளின் செவ்விதழ்கள் அவனுக்கு முத்தமிட ஆசையை தூண்டின.  தன்னை மறந்து அவன் நெருங்க, “சித்தி! எனக்கு தாகமா இருக்கு” என இவான் வந்து நிற்க, இருவரும் சட்டென்று விலகினர்.

பலவிதங்களில் அவர்கள் ஒன்று சேர தூண்டும் இவான், இப்போது இடைஞ்சலாக வந்து நின்றான். இவான் அழைத்தும் ருஹானா இயல்பு நிலைக்கு வர முடியாமல் பெரிய மூச்சுக்கள் எடுத்து திணறி நிற்க, ஆர்யன் “வா, சிங்கப்பையா! உனக்கு தண்ணீ எடுத்து தரேன்” என்று அவனை அழைத்து சென்றான்.

———

வரவேற்பறையில் சோபாவில் ஆர்யனுக்கு கனமான கம்பளிகளை மடித்து செருகிய ருஹானா, ஆர்யனின் முகம் காண வெட்கப்பட்டு அவன் வருவதற்கு முன் சென்று விட முயல, ஆர்யன் அங்கே வந்துவிட்டான்.

“உங்களுக்கு படுக்கை தயார் செய்திட்டேன். குட்நைட்” என அவள் சொல்ல, அவளிடம் ஏதோ சொல்ல வந்தவன், மனதை மாற்றிக்கொண்டு “குட்நைட்!” என்றான்.

வேகமாக அவள் அறைக்குள் சென்று கதவடைத்த ருஹானா கதவின் மேலேயே சாய்ந்து நின்றாள். ஆர்யனின் நெருக்கம் தந்த மயக்கத்தில் இருந்து இன்னமும் அவள் விடுபட முடியவில்லை. விடுபடவும் அவள் விரும்பவில்லை.

ஆர்யனும் சோபாவில் அமர்ந்து சற்று முன் நடக்க இருந்த இன்ப நிகழ்வை அனுபவித்து கொண்டிருக்க, ருஹானாவின் அறையில் இருந்து பெரும் சத்தம் கேட்டது. ஒரே ஓட்டமாக அவள் அறைக்கு ஓடிய ஆர்யன் “என்ன சத்தம்? என்ன நடந்தது?” என பதட்டமாக கேட்டான்.

மெத்தை கீழே விழுந்து கிடக்க கட்டில் கால்கள் சாய்ந்து கிடந்தன. “கட்டில் ஸ்குரூ லூசா இருக்குன்னு சொன்னேன்ல” என ருஹானா சங்கோஜமாக சொல்ல, “உனக்கு ஒன்னும் ஆகலயே?” என அவன் கவலையாக கேட்டான்.

“இல்ல.. ஆனா?” என தயக்கமாக கேட்ட ருஹானா தனது படுக்கையையும் எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தாள். “இங்க உனக்கு வசதியா இருக்குமா?” என ஆர்யன் கேட்க, தலையாட்டிய ருஹானா, ஆர்யனின் சோபாவிற்கு எதிர் சோபாவில் தனக்கு படுக்கையை விரித்தாள். மீண்டும் அவனுக்கு இரவு வணக்கம் சொல்லி படுத்துக்கொண்டாள்.

அவனும் இரவு வணக்கம் சொல்லி விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்துக்கொண்டான். அவனுக்கு முதுகு காட்டி அவள் படுத்திருந்தாலும் அவளது ஏறி இறங்கிய தோள்களில் இருந்து அவள் இயல்பாக இல்லை என புரிந்து கொண்டான்.

விட்டத்தை பார்த்தபடி அவன் படுத்தாலும் அவ்வப்போது அவளை திரும்பியும் பார்த்துக்கொண்டான். ஒரே அறையில் ஒரே காற்றை சுவாசித்துக்கொண்டு, ஒரே வாசனையை முகர்ந்து கொண்டு இருவரும் இனம்புரியா மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

தூக்கம் வராமல் தூங்கும் மற்றவரை பார்க்க இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் படுக்க, இருவருமே கண்டது விழித்திருக்கும் மற்றவரைத் தான்.

ருஹானாவின் இமைகள் படபடக்க, ஆர்யன் கண்ணிமைக்காமல் அவளை பார்த்திருந்தான், இமைத்தால் அவள் வதனம் அந்த அரை விநாடி நேரம் மறைந்துவிடுமே என்று!

(தொடரும்)

Advertisement