Advertisement

“அடடா! மாவு இல்லயே!” ஆர்யன் கிளம்பி சென்ற வெகு நேரத்துக்கு பின்பே கவனித்த ருஹானா அவனை செல்பேசியில் அழைத்தாள்.

இருகைகளிலும் நான்கு, ஐந்து பைகளை வைத்துக்கொண்டு கடையில் இருந்து மூச்சிரைக்க வெளியே வந்த ஆர்யன், போன் அடிக்கவும் நின்றான். கோட் பையில் இருந்த போனை அவனால் எடுக்க முடியவில்லை.

ஒருவழியாக பத்து பைகளையும் ஒரே கையில் மாற்றி போனை எடுத்தான்.

“நீங்க மார்க்கெட் விட்டு வெளியே வரலைனா ஒரு கிலோ மாவும் வாங்கிட்டு வந்துடுங்களேன்”

“சரி, இப்போ தான் காய்கறி வாங்கிட்டு வெளியே வரேன். மாவும் வாங்கிடுறேன்” என அவன் பெருமூச்சு விட, ருஹானா என்ன என கேட்டாள்.

“ஒண்ணுமில்ல. வேற ஏதும் வாங்கனுமா?”

“இல்ல.. அவ்வளவு தான்”

“நல்லா யோசி. உதாரணமா ஃப்ரிட்ஜ்ல வால்நட் சாக்லெட் இருக்கா?” குறும்புடன் கேட்டான்.

“இல்ல! அது நான் லிஸ்ட்டில் எழுத மறந்திட்டேன்” வெட்கத்துடன் சொன்னாள்.

“சரி, நான் ஏற்கனவே அதை மனசுல எழுதி வச்சிருக்கேன். வாங்கிட்டு வரேன்.” சந்தோசமாக சொன்னான்.

“நன்றி!” சொன்னவளும் இன்பப் புன்முறுவல் செய்தாள்.

——–

“இவான் எங்க? தூங்கிட்டானா?” ருஹானாவிடம் பைகளை கொடுத்தபடி ஆர்யன் கேட்க, அவற்றை பிரித்து எடுத்து வைத்தபடியே ருஹானா பதில் சொன்னாள்.

“அவன் ரூம்ல இருக்கான். அவன் பெரியப்பா கூட வீடியோ கால்ல பேசிட்டு இருக்கான்” என்றவள் ஆர்யன் வாங்கி வந்த தனக்கு பிடித்த சாக்லேட்டை கையில் எடுத்து சிரிப்புடன் தடவினாள்.

ஆர்யன் நீட்டிய இன்னொரு பையில் எலுமிச்சை இருப்பது கண்டு “இது நான் சொல்லலயே?” என கேட்க “இது இவானுக்காக! லெமன் குக்கீஸ் அவனுக்கு பிடிக்கும் தானே?” என ஆர்யன் சொல்ல, தங்கள் இருவரின் விருப்பத்தை நிறைவேற்ற ஆர்யன் எடுத்துக்கொள்ளும் சிரத்தையில் அவள் நெகிழ்ந்து போனாள்.

இன்னொரு பையில் பெரிய கத்திரிக்காயை பார்த்தவள் “அப்போ இன்னைக்கு டின்னருக்கு கார்னியாரிக்கும், நெய் சோறும் தான்” என சிரிப்புடன் சொல்ல, அவனும் மகிழ்வாக தலை அசைத்தான்.

“நீ சொன்னது ஏதும் விட்டு போயிருக்கா?”

“நான் பார்க்கறேன். எல்லாம் இருக்குன்னு தான் நினைக்கறேன்” என பைகளை பார்த்து சொன்னவள் ஆர்யனிடம் திரும்பினாள். “அப்புறம் என்னோட கட்டில் ஸ்குரூ லூசா இருக்கு. அதை சரிசெய்ய யாரையாவது கூப்பிடலாமா?”

“நானே சரி செய்றேன். இவான் அறையில கூட ஜன்னல் கதவு சரியா மூடல. ரெண்டையும் நாளைக்கு பார்த்துடறேன்”

“சரி, நான் தண்ணி சூடு செய்றேன்” என வெந்நீர் வைக்கும் மின்சார அடுப்பை அவள் பொறுத்த, அதை பார்த்த ஆர்யன் “இந்த கேபிள் சரி இல்ல. நீ கவனமா இரு. ஷாக் அடிக்கலாம். இதை இப்பவே பார்த்திடறேன்” என அதை எடுத்துக்கொண்டு மேசைக்கு சென்றான்.

“சரி. டீ போடவா? நீங்க குடிக்கிறீங்களா?”

“ம்.. குடிக்கறேன்”

——-

“பெரியப்பா, என் பொம்மை உங்களுக்கு பிடிச்சிருக்கா?” செல்பேசியில் காணொளி அழைப்பில் இவான் அம்ஜத்திற்கு காட்டிக்கொண்டிருந்தான்.

“நல்லா இருக்கு செல்லம்!” அம்ஜத்திற்கு சற்று தள்ளி அமர்ந்து கொண்டு பேச்சு கொடுக்காமல் கரீமாவும் திரையை எட்டி பார்த்திருந்தாள்.

“ஆனா பெரியப்பா எனக்கு நம்ம வீட்டில இருக்குற விளையாட்டு சாமான்கள் தான் அதிகமா பிடிச்சிருக்கு. நான் உங்களையும் ரொம்ப மிஸ் செய்றேன்.”

“நானும் உன்னை தேடுறேன், இவான். ஆனா நீ சீக்கிரம் இங்க வந்துடுவே! உன் சித்தப்பா உன்னை கூட்டிட்டு வந்துடுவான். உனக்கு தெரியும் தானே, ஆர்யன் சொன்ன சொல் காப்பாத்துவான்.”

தலையசைத்து ஆமோதித்த இவான் “உங்களுக்கு வீடு சுத்தி காட்டவா பெரியப்பா?” என எழுந்து கொண்டான்.

“ஓஹ்! என்னையும் கூட்டிட்டு போ!”

“இது படுக்கை அறை, இது காரிடார், இது கிச்சன்…” என சொல்லி காட்டிக்கொண்டிருக்கும்போது, சல்மாவும் அம்ஜத் பின்னால் வந்து நின்று பார்த்தாள்.

“உன் புது வீடு அழகா இருக்கு, இவான்!” என அம்ஜத் சொல்லும்போது இவான் சமயலறையில் நுழைந்திருந்தான்.

ஆர்யனுக்கு ருஹானா தேநீர் கொடுத்தபடி பக்கத்தில் நிற்க, இருவரும் திரையில் அம்ஜத்தை பார்த்து கையசைத்தனர். சல்மாவின் சீற்றம் எகிறி குதிக்க, அவள் வேகமாக வெளியே நடந்தாள். “சல்மா! சல்மா!” என அழைத்துக்கொண்டே கரீமாவும் அவள் பின்னே ஓடினாள்.

சல்மா காரை எடுக்க “சல்மா என்ன செய்றே? அமைதியா இரு. எல்லாத்தையும் கெடுத்துடாதே” என கரீமா அவளை தடுக்க பார்த்தாள். “விடு என்னை! என் வழில என்னை போக விடு” என சல்மா அவளை உதறி தள்ளிவிட்டு காரை வெகு வேகமாக செலுத்திக்கொண்டு சென்றுவிட்டாள்.

கரீமா என்ன செய்வது என புரியாமல் விழிக்க, சமையலறை கண்ணாடி ஜன்னலில் இருந்து இதை பார்த்த நஸ்ரியா “இந்த பொண்ணு கண்டிப்பா ஆர்யன் சாரை விரும்பறாங்க” என தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

“இங்க என்ன செய்றே நஸ்ரியா?” சாராவின் குரல் கேட்க, பயந்து போன நஸ்ரியா, நொடியில் சமாளித்துக்கொண்டு “இங்க இயற்கை காட்சிகள் நல்லா இருக்கு பெரியம்மா!” என்றாள்.

“என்ன சொல்றே?”

“ஒண்ணுல்ல பெரியம்மா!” என சொன்னவள் தனக்குள் “நான் உண்மையை சொன்னா என்னை திட்டி தீர்த்துடுவீங்க” என முனகிக் கொண்டாள்.

“கிச்சன்ல அத்தனை வேலை கிடக்கு. அங்க பராக்கு பார்க்காம வந்து வேலைய பாரு.”

———

“இது எல்லாம் மாட்டிட்டேன். இந்த ஒரு ஸ்குரூ தான் முறுக்கணும். இதை கொஞ்சம் பிடிக்கிறியா?” என ஆர்யன் அழைக்க, ருஹானா கைவேலையை விட்டுவிட்டு வேகமாக வந்து அந்த மின்கெட்டிலை பிடித்தாள்.

அவள் கூந்தல் அவன் முகத்தில் மோத, மின்சாரம் பாயாமலே ஆர்யனுக்கு மின்அதிர்ச்சி ஏற்படுத்தியது, அவளது நெருக்கம்! அவள் கூந்தலின் நறுமணமும், அவளின் உரசலும் அவனை செயலாற்ற விடாமல் கட்டிப்போட்டது.

ஆணியை முறுக்காமல் இருக்கும் அவனை ருஹானா கேள்வியாக பார்க்க, அவனுக்கு திருப்புளியை வலது புறம் திருக வேண்டுமா, இடது புறம் திருக வேண்டுமா என்பது மறந்து போனது.

ஒருவழியாக தன்னை மீட்டுக்கொண்டவன், அதை திருகி முடித்தான்.

“இது சரிபடுத்தியாச்சி” என அவன் சொல்லவும் “நான் மாட்டி பார்க்கறேன்” என ருஹானா அதை எடுக்க “இல்ல!” என வேகமாக சொன்னவன் அதே வேகத்துடன் அதை அவளிடமிருந்து பிடிங்கிக்கொண்டான். “நானே சரி பார்க்கறேன். எலெக்ட்ரிக் ஷாக் அடிக்க வாய்ப்பு இருக்கு” என சொல்லி அவனே மின் இணைப்பில் மாட்டினான்.

“இது வேலை செய்யுது!” என ஆர்யன் சொல்லும்போது அங்கே வந்த இவான் “சித்தி, சித்தப்பா! இந்த புதிர் விளையாட்டு எனக்கு சரியா வரல. எந்த துண்டு எங்க வரணும்னு கண்டுபிடிக்க சிரமமா இருக்கு. நீங்க எனக்கு உதவி செய்வீங்களா? நாம சேர்ந்து படத்தை உருவாக்கலாமா?” என்றான்.

அதைக் கேட்ட ஆர்யனின் மகிழ்ச்சிக்கோ எல்லையே இல்லை. ருஹானாவுடன் நெருங்கி இருக்க மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைத்தது நினைத்து அவன் மனம் துள்ளாட்டம் போட்டது.

———-

புதிர் படத்தை சின்ன மேசையில் வைத்து அதன் மூன்று பக்கங்களிலும் மூவரும் தரையில் அமர்ந்து கொண்டனர்.

“இது?” மேசையில் சிதறிக் கிடந்த துண்டுகளில் இருந்து ஆர்யன் ஒவ்வொரு பாகமாக எடுத்துக்கொடுக்க, ருஹானா பொருத்திப் பார்த்தாள். இவான் இவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இல்ல” சேராத துண்டை ருஹானா திருப்பிக் கொடுத்தாள்.

“இது சரியா பாரு?” அவள் கண்களின் அழகை பார்த்துக்கொண்டே கைக்கு வந்ததை ஆர்யன் எடுத்துக் கொடுத்தான்.

“இதுவும் இல்ல”

“இது இங்க வருமா?”

“இல்ல.. இது அங்க வரும். இவான் வயசுக்கு இது கஷ்டமான புதிர்ப்படம். இது பொருந்தல” இருவரும் புன்னகையுடன் இந்த நொடி இன்னும் சிறிது நீளாதா என படத்தில் கவனமாக இருக்க, இருவரையும் நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்த இவான் தன் குட்டி மனதின் ஆசையை வெளிப்படுத்தினான், சடாரென.

“நீங்க ரெண்டு பேரும் எனக்கு அம்மா அப்பாவா இருக்கலாம்னு எனக்கு ஆசையா இருக்கு.” கனனத்தில் இரு கைகளையும் ஊன்றியபடி புன்னகையுடன் கேட்ட இவானை இருவரும் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தனர். பின்னர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“ஆனா அதுக்கு முதல்ல நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கணும்ல?” அடுத்த அதிரடி கேள்வி பாய்ந்து வந்தது.

அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் ருஹானாவை ஒரு பார்வை பார்த்த ஆர்யன் “உனக்கு எப்படி இது தோணுச்சி சிங்கப்பையா?” என கேட்டான்.

இவான் அதற்கு பதில் சொல்லவில்லை. திரும்ப அவன் பிடித்த பிடியிலேயே நின்றான். “அம்மா அப்பா ஆகணும்னா உங்களுக்கு கல்யாணம் ஆகணும் இல்லையா?”

“ஆமா, அம்மா அப்பா ஆகணும்னா கல்யாணம் செய்துக்கணும்.” இவான் சொன்னதையே ஆர்யனும் வழிமொழிந்தான்.

“அப்படின்னா நீங்க கல்யாணம் செய்துக்கறீங்களா?”

ஆர்யன் ருஹானாவின் சிவந்த முகத்தை பார்த்தான். ருஹானா வெட்கம் விடுத்து இவானின் சந்தேகத்தை தீர்க்க முயன்றாள்.

“இவான் செல்லம்! நீ சொல்றது சரிதான். பெற்றோர் ஆகணும்னா கல்யாணம் செய்துக்க தான் வேணும். ஆனா கல்யாணம் செய்துக்க சில விஷயங்கள் இருக்கு.”

“விஷயங்களா? என்ன மாதிரியான விஷயங்கள்?” இவான் விடுவதாக இல்லை.

“வந்து… ரெண்டு பேரும் காதலிக்கணும்.” தயக்கத்துடன் வந்தது ருஹானாவின் பதில்.

“நீங்க ரெண்டு பேரும் காதலிக்கலயா?” இவான் இப்படியா அப்பட்டமாக கேட்பான்? இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு தலையை குனிந்து கொண்டனர்.

‘எங்கே! சொல் பார்ப்போம்? நீ என்னை காதலிக்கவில்லை என்று உன்னால் சொல்ல முடியுமா?’ மனதில் ருஹானாவோடு பேசிய ஆர்யன் இவானை விட அதிகமாக அவளின் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருந்தான்.

“தேனே! ஒருத்தரை கல்யாணம் செய்துக்கணும்னா அவங்க சிறப்பானவங்களா இருக்கணும்” தயங்கி தயங்கி ருஹானா சொல்ல, ‘அப்படி என்ன சிறப்பு தகுதி? அது என்னிடம் இல்லையா?’ என மெலிதாக கோபம் எழுந்தது ஆர்யனுக்கு. என்றாலும் அவள் பேசுவதை உன்னிப்பாக கவனித்தான்.

“நம்மை அவங்க முழுமைப்படுத்தணும். இந்த புதிர் படத்தை போல. இந்த படங்கள் ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யணும். பொருத்தமா இணையனும். உதாரணமா.. இந்த ரெண்டு துண்டுகளும் இணையுதான்னு நாம இப்போ பார்க்கலாம்” என ஒரு துண்டை எடுத்து இவானுக்கு அதை காட்டி, ஆர்யன் அருகே நெருங்கி அமர்ந்து அவன் புறம் நீட்டினாள்.

இவான் ஆவலாக பார்க்க, ஆர்யனும் அமைதியாக தன் கையில் இருந்த துண்டை எடுத்து அவள் கையில் இருந்த பாகத்துடன் பொருத்த, அது அச்சு பிசகாமல் ருஹானாவின் படத்துண்டுடன் அப்படியே பொருந்திக் கொண்டது. இருவரும் அதிசயமாக அதையே பார்த்தனர், ஆனந்த பூரிப்பில் இருந்த இவானையும் மறந்து.

‘இப்போது என்ன சொல்கிறாய்? உனக்கு என்னை தவிர யார் பொருத்தமாக இருப்பார்கள்?’ என ஆர்யன் பார்வை பேச, ருஹானா முகத்தில் வெட்கமும், பிரமிப்பும், மகிழ்ச்சியும் ஜொலித்தது.

Advertisement