Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                        அத்தியாயம் – 98

சமூக சேவை நிறுவனத்தின் இரு பெண் அதிகாரிகளும் இவான் பேசிய பேச்சிலும், அவன் வெனிலெமோன் பற்றி விவரித்ததலிலும் இளக்கம் கொண்டு ருஹானாவிற்கு மறு வாய்ப்பு கொடுத்து, தனி வீட்டில் வசிக்க வேண்டும் எனும் நிபந்தனையை கடைபிடிக்கவேண்டும் எனும் உறுதியையும் பெற்றுக்கொண்டு அகல, அர்ஸ்லான் மாளிகையே ஆனந்த கடலில் மூழ்கி இருந்தது.

வரவேற்பு அறையில் அனைவரும் அமர்ந்து சாரா தயாரித்து தந்த குக்கீஸை சாப்பிட்டபடி சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது வேகமாக உள்ளே வந்த ரஷீத் “ஆர்யன்! புகார் கொடுத்தவங்க யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்” என சொல்ல, சகோதரிகள் முகத்தில் ஈயாடவில்லை.

கோபமாக எழுந்த ஆர்யன் “யார் இந்த வேலையை பார்த்தது?” என வினவ, ரஷீத் “பக்கத்து வீட்டுக்காரங்க தான். பூட்டியே கிடக்கற வீடுன்னு லோக்கல் அத்தாரிட்டிட்ட புகார் கொடுத்துருக்காங்க. அவங்க சோசியல் சர்வீஸ்ல சொல்லியிருக்காங்க” என்று சொல்லவும், இருவரின் உயிரும் மீண்டு வந்தது.

“சரி, ரஷீத்! நீ லாயர்ஸ்ட்ட பேசு. கார்டியன்ஷிப்பை வலிமையாக்க என்ன செய்யணும்னு பாரு. என்ன சட்ட சிக்கல் இருந்தாலும் அதை தீர்க்கணும். திரும்ப இவானை நான் அவங்க கையில கொடுக்க மாட்டேன்” என்று ஆர்யன் ஆணையிட, ரஷீத் சரியென அகன்றான்.

———–

“எப்படி அக்கா? எங்க இருந்து இந்த பக்கத்து வீட்டுக்காரங்க வந்தாங்க? நான் பயந்தே போயிட்டேன். நீ மாட்டிக்குவியோன்னு… ஆர்யன் நம்மள வெளிய தள்ளிடுவான்னு கதிகலங்கி போச்சி. நீ ஏன் இதை முன்னாடியே என்கிட்டே சொல்லல?”

“நீ எங்க என்னை பேச விட்டே? ருஹானா என்ன செய்றான்னு நீ ஆர்யன் பின்னாடியே அலைஞ்சிட்டு இருந்தியே… அப்போ பணம் கொடுத்து இந்த வேலைய நான் பார்த்தேன். நீ என்ன நினைச்சே, நான் என் பேருல புகார் கொடுப்பேன்னா?” தற்பெருமையுடன் பேசிய கரீமாவின் முகம் உடனே ஆத்திரமாக மாறியது.

“ஆனா நாம நினைச்சது நடக்கல, நான் இதை இப்படியே விட மாட்டேன்.”

“போ அக்கா! எனக்கு போரடிக்குது. நீ செய்ற எதுவும் வேலைக்காக மாட்டேங்குது.”

———

“நாம கிளம்பணும் தேனே! மறுபடியும் நம்மோட புது வீட்டுக்கு போகணும்”

“சரி சித்தி! சித்தப்பாவும் வருவாங்க தானே?” என கேட்ட இவான், ருஹானாவின் பின்னால் நின்றிருந்த ஆர்யனையும் அழைத்தான். “சித்தப்பா! நீங்களும் எங்க கூட வாங்க!”

“இந்த முறை நீ உன் சித்தியோட போ, அக்னி சிறகே! உன்னோட நன்மைக்காக தான் நாம இப்போ பிரிந்து இருக்கப் போறோம். அதுவும் கொஞ்ச நாளைக்கு தான். அப்புறம் நாம சேர்ந்து இருக்கலாம்” என தன்மையாக விளக்கிய ஆர்யன், இவானின் கன்னத்தை தடவி “இப்போ நீ பெரிய பையன். உனக்கும் இந்த நடைமுறைகள் லேசா புரியும்” என சொல்ல, இவான் பாவமாக தலையாட்டினான்.

ருஹானா இவானின் துணிகளை எடுத்து வைக்க, ஆர்யன் வெளியே சென்றான், கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்த இவானை பார்த்தபடியே.

———

கலங்கிய முகத்துடன் தன் பொம்மைகளை பெட்டியில் எடுத்து வைக்கும் இவானை பார்த்த ருஹானா “நீ இப்படி சோகமா இருக்காதே அன்பே! உன்னை பார்த்து எனக்கும் வருத்தமாகுது” என்றாள்.

“கவலைப்படாதீங்க சித்தி! நீங்க வருத்தப்படுறது எனக்கு பிடிக்காது. சித்தப்பாவும் நம்மோட வரணும்னு நான் ஆசைப்படறேன். சித்தப்பா வர முடியாதுன்னு நினைச்சா எனக்கு அழுகை வருது.”

“வருத்தப்படாதே கண்ணே! சித்தப்பா நம்ம கூட வரலைன்னாலும் நாம அவரை தினமும் பார்க்கலாம்.”

“ஆனா ராத்திரி எனக்கு அவர் கதை படிச்சி சொல்வாரே! அவர் இருந்தா நான் பயப்படாம இருப்பேன். ஒருவேளை புது வீட்டில எனக்கு பயம் வந்தா?”

“என்னுயிரே! நாம சமாளிச்சி தான் ஆகணும். எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். சீக்கிரத்திலயே நாம ஒன்னு சேர்ந்துடுவோம். வா! கார் தயாரா இருக்கு, நாம போகலாம்” என்று சொல்லி, வெளியே வந்த இருவரும் ஆர்யன் அறையை பார்த்தபடி சில வினாடிகள் நின்றனர்.

பின் தோளில் கைப்பையுடன், இரு பெட்டிகளையும் இரு கைகளிலும் தள்ளிக்கொண்டு ருஹானா நடக்க, அவளோடு இவானும் மெல்ல நடந்தான்.

“இருங்க!” என கூவியபடி அவர்கள் பின்னால் ஆர்யன் ஓட்டமும் நடையுமாக வந்தான். “சித்தப்பா? நீங்களும் எங்க கூட வர்றீங்களா?” என இவான் ஆவலோடு கேட்க, ருஹானா அதிசயமாக பார்க்க, ஆர்யன் தலையசைத்தான்.

“நான் உன்னை எப்பவாது பிரிந்திருக்கேனா, அக்னி சிறகே? நானும் உங்ககூட வரேன். போகலாம் வாங்க” இவானிடம் பேச துவங்கி ருஹானாவை பார்த்து முடித்த ஆர்யன், இரு பெட்டிகளையும் அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான்.

படிக்கட்டில் மூவரும் இறங்க, வரவேற்பறையில் இருந்த மூவரும் அவர்களை நோக்கி வந்தனர். “ருஹானா டியர்! எங்க போறீங்க?” என கரீமா கவலையோடு கேட்க, சல்மா சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

“சோசியல் சர்வீஸ்ல சொன்ன மாதிரி இவான் அவன் சித்தியோட வேற வீட்டுக்கு போறான். வேற தீர்வு லாயர்ஸ் கண்டுபிடிக்கற வரை கொஞ்ச நாளைக்கு அவன் அங்க தான் இருப்பான்” என ஆர்யன் சொல்ல, பதட்டமான அம்ஜத் “இவான் போறானா? அவனை நீ போக விட்ருவியா?” என கேட்டான்.

சல்மா சிரிப்பை மறைக்க சிரமப்பட, கரீமா “அம்ஜத் டியர்! எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்” என அவனை தேற்ற, ஆர்யனும் “கவலைப்படாதீங்க அண்ணா! நான் இவானை எப்பவும் விட மாட்டேன். சில நாட்களுக்கு தான் இந்த பிரிவு” என்று சொல்லி, ருஹானாவிடம் “போகலாம்” என நடக்க துவங்கினான்.

அதிர்ச்சியடைந்த கரீமா “ஆர்யன் டியர்! நீ எங்க போறே?” என படபடப்பாக கேட்டாள். “நான் அவங்களை தனியா விட முடியாது” என சொன்ன ஆர்யன் ருஹானாவை பார்த்தபடி நிற்க, சல்மாவின் முகம் சவமென வெளுத்தது.

இவானை கட்டிக்கொண்ட அம்ஜத் “இவான் எனக்கு அடிக்கடி போன் பேசு. சரியா? ஆர்யன்! ருஹானா! இவானை நல்லா பார்த்துக்கோங்க. இவான் பத்திரமா இருக்கணும். சரியா?” என சொல்ல, ருஹானா “கவலைப்படாதீங்க அம்ஜத் அண்ணா!” என ஆறுதல்படுத்த, சல்மா அவளை எரித்துவிடுவது போல பார்த்தாள்.

மூவரும் விடைபெற, அம்ஜத் அவர்களோடு கார் வரை செல்ல, இங்கே சல்மா பல்லைக் கடித்துக்கொண்டு குதித்தாள்.

“அக்கா! இதான் உன் ரகசிய திட்டமா? திரும்பவும் நீ அவளுக்கு நல்லது தான் செய்றே! அவ இப்போ ஆர்யனோட இருப்பா… அதும் தனியா இருப்பா… போதும்.. போதும்… இதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியாது. அந்த பாம்பை நான் மிதிச்சே கொல்லப் போறேன்” என வாசலுக்கு பாய்ந்தாள்.

அவளை பிடித்துக்கொண்ட கரீமா “சல்மா! நிதானம். எல்லாம் நான் சரி செய்றேன்” என அவளை மாடிக்கு இழுத்து சென்றாள்.

“உன்னால தான்! எல்லாம் உன்னால தான். நீ அவங்களை பிரிக்க செய்றது எல்லாம் அவங்களை சேர்த்து தான் வைக்குது” என  சல்மா அவளை பிடித்து தள்ள, “கத்தாதே சல்மா!” என தங்கையை அடக்க பார்த்தாள்.

“முடியாது! அவங்க போய்ட்டாங்க. சூனியக்காரி அங்க போய் என்னென்ன செய்வாளோ? அந்த வீட்டில அவங்க சேர்ந்து இருப்பாங்க” என கத்தியபடியே அறையில் இருந்த எல்லா பொருட்களையும் போட்டு உடைத்தாள்.

“சத்தத்தை குறை, சல்மா! யாராவது கேட்டுடப் போறாங்க” என கரீமா அவளை கட்டிலில் தள்ளி அழுத்தி பிடிக்க, அந்த பக்கம் வந்த நஸ்ரியா சல்மாவின் சத்தம் கேட்டு கதவின் பின்னே நின்றாள்.

“எனக்கு அதை பத்தி பயம் இல்ல. அந்த பாம்பு என்கிட்டே இருந்து ஆர்யனை பிரிக்க நான் விட மாட்டேன். ஆர்யன் எனக்கு தான்!”

கெடுக்க நினைப்போர்

பறிப்பதெல்லாம் குழியாகிட

பாசமுடன் பயணிப்பவர்

சதியை உரமாய் மாற்றிட

விருட்சமாகியதே அன்பு!

———

சமையலறையை சுற்றி பார்த்த ருஹானா கவலையோடு நிற்க, அவளை தேடி வந்த ஆர்யன் என்ன என வினவினான்.

“இவானுக்கு சீக்கிரமே பசிக்கும். இங்க சமையலுக்கு ஒன்னும் இல்லயே!”

“என்ன வேணும்னு சொல்லு. நான் போய் வாங்கிட்டு வரேன்.”

“சரி, வாங்க வேண்டிய பொருட்கள் லிஸ்ட் போடலாம். முதல்ல காலை உணவுக்கு அப்புறம் மத்த தேவைகளுக்கு..” என சொல்லி பேப்பரும், பேனாவும் எடுத்துக்கொண்டு வர, இருவரும் உணவு மேசை நாற்காலியில் பக்கவாட்டில் அமர்ந்தனர்.

“திரும்பவும் உடனடி சூப் வாங்கிட்டு வந்துற மாட்டீங்கன்னு நான் நினைக்கறேன்” என சிரிப்போடு ருஹானா கூற, ஆர்யன் முகத்திலும் புன்னகை. “இல்ல, நான் இப்போ கத்துக்கிட்டேன்” என்றவன் “நீ சொல்லு. நான் எழுதுறேன்” என பேனாவை அவள் கையிலிருந்து வாங்கிக்கொண்டான்.

“பால், முட்டை, சீஸ், ரொட்டி, ஆலிவ் ஆயில், சூரியகாந்தி எண்ணெய்…” என ருஹானா சொல்லிக்கொண்டே போக, ஆர்யன் “என்ன! சூரியகாந்தி எண்ணெயா?” என குழப்பமாக கேட்டான்.

“ஆமா! அந்த எண்ணெய் தான்” என சிரிப்பை புன்சிரிப்பாக மாற்றி “எதுன்னு உங்களுக்கு தெரியலனா.. கடைல கேளுங்க எடுத்து தருவாங்க” என சொல்ல, அவனும் இசைந்தான்.

“கோதுமை ரவை பெருசா பார்த்து வாங்குங்க, சின்னது அத்தனை ருசியா இருக்காது” என ருஹானா சொல்ல, ஆர்யன் முகம் மேலும் குழப்பத்தை காட்டியது. இந்த முறை வெளிப்படையான சிரிப்புடன் “வேணும்னா நான் கடைக்கு போயிட்டு வரவா?” என கேட்டாள்.

“இல்ல.. நானே போறேன். எனக்கு அவ்வளவா புரியல. இருந்தாலும் சமாளிச்சிடுவேன்னு நினைக்கறேன். வேற என்ன வேணும்?” என ஆர்யன் குனிந்து எழுதிக்கொண்டே கேட்க, அவனுக்கு பதில் சொல்லாமல் ருஹானா அவனையே பெருமையாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

தனக்கு பதில் வராததால் நிமிர்ந்து பார்த்த ஆர்யன், ருஹானா தன்னையே பார்ப்பது கண்டு மகிழ்ச்சி புன்னகை செய்தான். ருஹானா தன்னை சமாளித்துகொண்டு “காய்கறி கடைக்கும் நீங்க போகணும். தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், கோஸ்…” என அடுக்கிக்கொண்டே போனாள்.

———

Advertisement