Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 97

சமூகசேவை நிறுவனத்தின் இரு பெண் அதிகாரிகளும் நேரிடையாக விசாரணையை ஆரம்பித்தனர். “எவ்வளவு நாளா இங்க இருக்கீங்க, ருஹானா மேடம்?”

“கொஞ்ச நாளாக தான்” என்றாள் ருஹானா கூம்பிய முகத்துடன்.

“உங்க கிட்டே அப்புறம் பேசுறோம். இப்போ இவான் அர்ஸ்லானை நாங்க பார்க்கணும்”

“நான் போய் கூட்டிட்டு வரேன்” என சொல்லிவிட்டு, ஆர்யனை ‘எதாவது செய்யுங்களேன்!’ என்பது போல பார்த்துவிட்டு ருஹானா செல்ல, பொங்கும் ஆனந்தத்தை மறைத்துக்கொண்டு கரீமா கீழே இறங்கி வந்தாள். “ஆர்யன் டியர்! என்ன இதெல்லாம்?” என ஒன்றும் தெரியாதது போல அவள் வினவ, அவன் பதில் சொல்லவில்லை.

கரீமா லைலாவிடம் “நீங்க முன்னமே இங்க வந்துருக்கீங்க. இப்போ என்ன?” என கேட்க “மிஸ் ருஹானா அவங்களோட தற்காலிக உரிமைக்கான நிபந்தனைகளை நிறைவேற்றல” என அவர் சுருக்கமாக சொன்னார்.

“புரியலயே! விளக்கமாக சொல்லுங்க” என கரீமா கேட்க, படிக்கட்டில் நின்றிருந்த சல்மா உற்சாகமாக தலையை ஆட்டினாள்.

“மிஸ் ருஹானாக்கு இவானோட கஸ்டடி வழங்கப்பட்டபோது அவங்க இந்த வீட்டுல இருக்கக்கூடாதுன்னு சொல்லப்பட்டு இருந்தது. அவங்களும் வேற வீடு எடுத்து தங்கியிருந்தாங்க. ஆனா இப்போ அந்த நிபந்தனையை மதிக்காம இங்க இருக்காங்க.”

அதைக் கேட்டு வெகுண்ட ஆர்யன் “அதனால என்ன கெடுதல் நடந்தது? இவான் என்னோட அண்ணன் பையன். அவனுக்காக நான் எதுவும் செய்வேன்” என சத்தமாக சொல்ல, சல்மா கீழே இறங்கி வந்து “அக்கா! எதும் பிரச்சனையா?” என கேட்டாள்.

லைலா “நாங்க தனிப்பட்ட முறையில எதுவும் செய்யல. சட்டதிட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம்” என சொல்ல, அவரின் உயரதிகாரி “இவானோட நலம் பாதிக்கப்படக் கூடாதுன்னு தான் நாங்க நினைக்கிறோம். நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பீங்கன்னு நம்புறோம்” என கடுமையாக கூறினார்.

கரீமா அவர்களை உள்ளே கூட்டிச் சென்று அமர வைக்க, ஆர்யன் செல்பேசியில் ரஷீத்தை அழைத்தான். அவன் போனை எடுக்காததால் ஜாஃபரிடம் அவனுக்கு விவரம் சொல்லுமாறு பணித்துவிட்டு இவானை நாடிச் சென்றான்.

————

கட்டிலில் தலை வரை போர்வையை மூடிக்கொண்டு இவான் அமர்ந்திருக்க, ருஹானா “அன்பே! நான் இந்த போர்வையை எடுக்கவா?” என கேட்டாள்.

“இது போர்வை இல்ல. என்னோட கூடாரம்!”

“சரி, நானும் கூடாரத்துக்குள்ள வரலாமா? உன்னோட அனுமதி கிடைக்குமா, கண்ணே?”

“எனக்கு ஜூரம். நீங்க உள்ள வந்தா உங்களுக்கும் ஒட்டிக்கும்” என சொல்லியபடி இவான் போர்வையை விலக்க, ருஹானா அழுகையை அடக்கிக்கொண்டு அவன் நெற்றியில் கை வைத்து பார்த்தாள்.

“உனக்கு ஜூரம் இல்லயே? எங்கயாவது வலிக்குதா?”

“எனக்கு உடம்பு சரியில்லனா அவங்க என்னை கூட்டிட்டு போக மாட்டாங்க தானே சித்தி? நீங்க அந்த ஆன்ட்டிட்ட சொல்லுங்க, நீங்க சொன்னா கேட்பாங்க. எனக்கு அங்க போகப் பிடிக்கல.”

“அவங்க உன்னோட பேசறதுக்கு தான் வர்றாங்க. அந்த ஆன்ட்டி நல்லவங்க. அவங்க வேலையை செய்யத்தான் வந்திருக்காங்க” என அவள் சொல்ல இவான் முகத்தில் தெளிவு.

“நான் உனக்கு சத்தியம் செஞ்சி கொடுத்துருக்கேன் தானே? உன்னை விட்டு எப்பவும் பிரிய மாட்டேன்னு. உன்னோட சித்தப்பாவும் தான். இது உன்னோட வீடு” என சித்தி சொல்ல, நம்பிக்கையுடன் தலையாட்டினான்.

“இவான் டியர்!” என லைலாவின் குரல் கேட்க, பாய்ந்து வந்து “சித்தி!” என ருஹானாவை கட்டிக்கொண்டான். இருவரும் உள்ளே வர, அவர்களை பார்த்ததும் இவான் போர்வையால் தன்னை மூடிக்கொண்டான்.

கண்ணீரை துடைத்துக்கொண்ட ருஹானா “பயப்படாதே என்னுயிரே! நான் வெளியே தான் இருக்கேன். இந்த கூடாரத்தை எப்படி செய்தேன்னு அவங்களுக்கும் காட்டு” என சொல்லி திரும்பி பார்த்தவண்ணம் கதவை மூடி வெளியே செல்ல, இரு அதிகாரிகளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

———-

ஆர்யனுக்கு ரஷீத் செல்பேசியில் அழைத்து, தான் ஒரு சந்திப்பில் இருந்ததாகவும், போனை கவனிக்கவில்லை எனவும் சொல்ல, ஆர்யன் “ரஷீத்! என்ன வேலை செய்றே நீ? சோசியல் சர்வீஸ் நிறுவனத்தில எது நடந்தாலும் நமக்கு தெரியனும்னு சொல்லியிருக்கேன் தானே? அப்புறம் இது எப்படி?” என இரைந்தான். கரீமாவும் சல்மாவும் அவன் பின்னே கைகளை பிடித்துக்கொண்டு சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.

“நான் விசாரிச்சிட்டேன், ஆர்யன்! இது வழக்கமா நடக்கற நடவடிக்கை இல்ல. அதனால தான் அங்க இருக்கற நம்ம ஆளுக்கு தெரியல. யாரோ புகார் கொடுத்திருக்காங்க. அதான் இவங்க வேகமா வந்திருக்காங்க.”

“புகார் கொடுத்தது யாருன்னு உடனே கண்டுபிடி ரஷீத்! அவங்களுக்கு என் கையாலயே தண்டனை கொடுப்பேன்” என ஆர்யன் கர்ஜிக்க, சகோதரிகளின் மலர்ந்த முகங்கள் சின்னதானது.

“ஆர்யன் டியர்! நாம இப்போ எதாவது செய்ய முடியுமா?” என கரீமா கேட்க, ஆர்யன் இல்லை என தலையாட்டினான். “ஏன் ருஹானா இதை நம்ம கிட்டே இருந்து மறைச்சா?” என கரீமா தொடங்க, “எனக்கு தெரியும்!” என ஆர்யன் இடைமறித்தான்.

“நீ என்கிட்டே சொல்லியிருக்கலாம், ஆர்யன் டியர்! நாம வேற தீர்வை யோசித்து இருக்கலாம். உதாரணமாக ருஹானா இங்க தங்கியிருக்கலனா…” என சொல்ல, ஆர்யன் அவளை முறைத்த முறைப்பில் உரையாடலின் போக்கை மாற்றிக் கொண்டாள். “எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும், நீ என்னை தப்பா நினைக்காதே, ஆர்யன்! ஆனாலும் இப்போ இப்படி ஒரு ஆபத்து வந்திடுச்சே!”

“இவானோட சந்தோசத்துக்காக தான் அவன் சித்தி அவனை இங்க கூட்டிட்டு வந்தா. ஏன்னா நானும் அதைத்தான் விரும்பினேன்” என ஆர்யன் அழுத்தமாக சொல்ல, கரீமா சல்மாவைத் தான் வேகமாக பார்த்தாள். அவள் தன்னை அடக்கிக் கொள்ள கழுத்தை பிடித்துக்கொண்டாள்.

——–

லைலா குறிப்பெடுத்துக் கொள்ள, மற்ற அதிகாரி இவானிடம் அன்பாக பேச, அவன் போர்வைக்குள்ளேயே இருந்து பதில் சொன்னான்.

“இவான் டியர்! உனக்கு கூடாரம் செய்ய பிடிக்குமா?”

“ஆமா!”

“இந்த கூடாரம் தவிர இந்த வீடும் உனக்கு பிடிக்குமா?”

“ஆமா, என்னோட சித்தி, சித்தப்பா இங்க தான் இருக்காங்க. பெரியப்பாவும் மத்தவங்களும் இருக்காங்க.”

“நீ வேற புது வீட்டுக்கு போக விரும்புறியா, உன் சித்தி கூட?”

“இல்ல. இதான் என்னோட வீடு.”

“உன்னோட சித்தப்பாவை உனக்கு பிடிக்குமா?”

முகத்தில் இருந்து போர்வையை நீக்கிய இவான் “நான் என் சித்தப்பா மேல அதிக அன்பு வச்சிருக்கேன். உங்களுக்கு தெரியுமா? என் சித்தப்பா நல்ல உள்ளம் இருக்குற பெரிய அசுரன்” என்றான்.

“அப்படியா? அசுரன் என்ன செய்வான்? நீ அசுரனை பார்த்து பயப்பட மாட்டியா?”

“இல்ல, நல்ல அசுரன். என்னை, சித்தியை, எல்லாரையும் பாதுகாக்கற அசுரன்.”

“எப்படி காப்பாத்துவான்? கைகளால சண்டை போட்டா?”

“இல்ல, அசுரன் இதயத்தால சண்டை போட்டு பாதுகாக்கறதா சித்தப்பா சொல்லியிருக்கார்.”

“நல்லது”

“இப்போ நீங்க என்னை கூட்டிட்டு போக முடியாது. என் சித்தப்பா என்னை காப்பாத்துவார்.”

“உன் சித்தப்பாவா உனக்கு கதை சொல்லுவார்?”

“ஆமா, அசுரன் கதை சொல்வார். நாங்க சேர்ந்து சாப்பிடுவோம். நான் அவருக்காக படம் வரைந்து தருவேன். அவர் எனக்கு பஞ்சுமிட்டாய் வாங்கி தருவார்.”

———–

இவான் அறை வாசலில் ருஹானா அழுதுக் கொண்டே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தாள். “அல்லாஹ்! இவானை எங்க கிட்ட இருந்து பிரிச்சிடாதீங்க. நான் செய்த தப்புக்கு அவனுக்கு தண்டனை கொடுத்துடாதீங்க”

அதைக் கேட்டுக்கொண்டே வந்த ஆர்யன் அவளை ஆறுதல்படுத்தினான். “நீ ஒரு தப்பும் செய்யல. இவானோட மகிழ்ச்சியை தான் நீ பெருசா நினைச்சே!”

“இவான் போர்வைக்குள்ள மறைஞ்சி இருக்கான். அவங்க கூட்டிட்டு போய்டுவாங்கன்னு பயப்படுறான். நாம இல்லாம ஒரு இரவு கூட இருக்க மாட்டான். அவனை கூட்டிட்டு போகாம இருக்க எதாவது செய்ங்க” என அவள் கண்ணீர் வடிக்க, ஆர்யன் அவனை அறியாமல் அவள் கண்ணீரை துடைக்க கையை உயர்த்தி அவளை நெருங்கியும் விட்டான்.

ருஹானா கண்கள் அகல பார்க்கவும் கையை இழுத்துக்கொண்டவன், கோட் பாக்கெட்டில் இருந்து தனது கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் வாங்க தயங்கி அவனை ஏறிட்டு பார்க்க, அவன் கண்ணால் வற்புறுத்தவும், அவள் வாங்கிக்கொண்டு கண்ணீரை துடைத்தாள்.

“எனக்கு தெரியும், நீங்க தான் அவனை காக்கும் அசுரன். அவனோட கையை எப்பவும் நீங்க விட மாட்டீங்க”

“நீயும் அவனை பிரிய மாட்டே! நாம ரெண்டுபேரும் அவனுக்கு இருக்கோம். பயப்படாதே!”

கரீமாவும், சல்மாவும் அங்கே வர, ஆர்யன் ருஹானாவை விட்டு சற்றே தள்ளி நின்றான். அதற்கே சல்மாவிற்கு பொசுங்கியது.

கரீமா “இன்னுமா இவான் கூட பேசுறாங்க? பாவம் அவன் எவ்வளவு பயப்படுவான்? ருஹானா! இதை நீ எங்ககிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா நாங்க குடும்பமா தீர்வு கண்டுபிடிச்சிருப்போம்” என குத்திக் காட்ட,

“ஆமா! நீங்க சொல்றது சரிதான். எல்லாம் என்னோட தப்பு!” என்ற ருஹானாவிற்கு நின்ற கண்ணீர் மீண்டும் பெருக்கெடுக்க, “அண்ணி!” என கோபக்குரல் கொடுத்த ஆர்யன் கரீமாவை முறைத்தான்.

அதற்கே சகோதரிகள் அதிர்ந்து போக, ருஹானா கண்ணீரை துடைக்கும் கைக்குட்டையை பார்த்து திகைத்து போயினர்.

“வா! என் கூட!” என ஆர்யன் ருஹானாவை தன் அறைக்குள் அழைத்துச் சென்று கதவை மூட, கொதித்து எழுந்த சல்மா அவர்கள் பின்னாலேயே செல்ல, கரீமா அவளை ஓடிச்சென்று நிறுத்தினாள். “சல்மா! என்ன செய்றே?”

“என்னை விடு அக்கா! இன்னைக்கு அவளை உண்டு இல்லைன்னு செய்திடுறேன்! அவளோட முதலை கண்ணீரை எதுல துடைக்கிறா பார்த்தியா? அது ஆர்யனோட கைக்குட்டை.”

திமிறிய சல்மாவை கரீமா இழுத்துக்கொண்டு செல்ல, இதையெல்லாம் பார்த்த நஸ்ரியா ஆர்யன் ருஹானாவின் நெருக்கத்தில் மகிழ்ந்து, சல்மாவின் ஆட்டத்தில் பயந்து போனாள்.

———-

Advertisement