Advertisement

தயங்கியபடி ஆர்யன் அறைக்குள் வர, அது காலியாக இருந்தது.

“உன் சித்தப்பா இல்ல, நாம அப்புறம் வரலாம், கண்ணே!” வேகமாக சென்றுவிட முயன்றாள்.

“இந்த மேசையில வைக்கவா சித்தி? சித்தப்பா வந்து பார்க்கும்போது சர்ப்ரைஸா இருக்கும்”

“சரி தான் தேனே!”

“பறந்து போயிடுமோ? இந்த ட்ராயர் திறந்து வைக்கறேன், சித்தி!” என இவான் இழுப்பறையை திறக்க, ருஹானா பதறிப் போய் பக்கம் வந்தாள். “ஆனா உன் சித்தப்பா அனுமதி இல்லாம நாம அவர் அலமாரியை திறக்கக் கூடாது, செல்லம்.”

இவான் அவள் சொல் கேட்டு நிற்க, ருஹானாவின் பார்வையில் அந்த துண்டு சீட்டு பட்டு விட்டது. அவள் இதயத்தில் தாமரை பூக்க, கன்னங்களில் ரோஜாக்கள் பூத்தன.

இவானை வைக்கக் கூடாது என தடுத்த அவள் மட்டும் அந்த சீட்டை கையில் எடுத்தாள். அதை அவள் ரசித்துக் கொண்டிருந்த நேரம் கதவு திறந்தது. உள்ளே வந்த ஆர்யனுக்கு இருவரையும் தனது இடத்தில் பார்த்து இன்ப அதிர்ச்சி.

அழகு முறுவலுடன் அவன் படியிறங்கி வர, ருஹானாவிற்கு தன் கையில் சீட்டு இருந்தது அப்போது தான் உறைத்தது. “ஹே சித்தப்பா!” என இவான் ஆர்யனை அழைக்க, அவன் பார்வை இவான் மேல் திரும்பவும், மெல்ல அதை திறந்திருந்த இழுப்பறையில் போட்டு விட்டாள்.

“நான் உங்களுக்காக இதை வரைந்து எடுத்துட்டு வந்தேன். உங்களுக்கு பிடிச்சிருக்கா? உங்க மேசைக்குள்ள வைக்க போனேன். உங்க அனுமதி இல்லாம திறக்கக்கூடாதுன்னு சித்தி சொன்னாங்க” என இவான் ஆர்வமாக பேசினான்.

ருஹானாவின் மேல் பார்வையை வைத்து “அப்படியா சொன்னாங்க?” என கேட்ட ஆர்யன், “இது ரொம்ப அழகா இருக்கு, சிங்கப்பையா!” என இவானின் முடியை ஒதுக்கிவிட்டு அவனை பாராட்ட, இவான் சந்தோசமாக சிரித்தான்.

நகராமல் அதே இடத்தில் நின்றிருந்த ருஹானாவின் சிவந்த முகத்தை ஆர்யன் கவனித்துவிட்டு எட்டி மேசையை பார்த்தான். அந்த துண்டு சீட்டும் ‘நான் இங்கே தான் இருக்கிறேன், வாக்கு கொடுத்தபடி’ என சொல்ல ஆர்யனின் மகிழ்ச்சி அணை உடைத்து பீறிட்டது.

அவளது மடலை தான் பொக்கிஷமாக வைத்திருப்பதை தன்னவள் பார்த்துவிட்டாள், தனது இதயத்தை அறிந்து கொண்டாள் என அவன் மனது இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

ஆமாம், அங்கே இருந்த சிறுமி ருஹானாவின் படம் எங்கே? அதை ருஹானா பார்த்திருந்தால் அவன் காதலின் ஆழம் தெள்ளத்தெளிவாக அவளுக்கு புரிந்திருக்குமே!

ருஹானாவின் தவிப்பு அதிகரித்து கொண்டே சென்றது. தன்னையறியாமல் மீண்டும் அந்த சீட்டை திரும்பி பார்த்தவள் உதட்டை மடித்துக்கொண்டாள். “வந்து…. இவான் உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சான். அதான் இங்க வைக்க வந்தோம்” என அவள் சொல்ல “எனக்கு புரியுது. பரவாயில்லை“ என ஆர்யன் சொன்னான்.

“அக்னி சிறகே! நான் இந்த பெயிண்டிங்கை எடுத்துக்கறேன்”

“ஆமா, உங்களுக்கு தான்! ஒரு நிமிஷம் சித்தப்பா. இதுல பறவையும் வரைந்து தரவா?”

“சோபால உட்கார்ந்து வரை. அங்க பென்சில் இருக்கு பார்” என ஆர்யன் எதிரே காட்ட, இவான் அங்கே சென்றான்.

அப்போது ஜாஃபர் காபியுடன் உள்ளே வர, ஆர்யனின் நாற்காலி அருகே ருஹானா நிற்பதையும், ஆர்யன் மேசையை ஒட்டி நிற்பதையும் கவனித்தாலும் அந்த வியப்பை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.

அவனிடம் காபியை வாங்கிக்கொண்ட ஆர்யன் “இன்னொரு காபி கொண்டு வர முடியுமா, ஜாஃபர்?” என கேட்க, “இதோ உடனே கொண்டு வரேன், சார்” என சிரித்தபடி ஜாஃபர் சொல்லி சென்றான்.

தன்னுடைய காபியை அவளுக்கு நீட்டி கண்களால் ‘எடுத்துக்கொள்!’ என ஆர்யன் சமிக்ஞை செய்ய, ருஹானா மெல்லிய சிரிப்புடன் எடுத்துக்கொண்டு நன்றி சொன்னாள்.

மேசையை விட்டு வெளியே வந்த அவளும் இவான் அருகே சோபாவில் அமர்ந்து கொண்டாள். ஆர்யனுக்கு காபி வரும்வரை அவளும் குடிக்காமல் காத்திருந்தாள்.

ஆர்யன் நேராக நாற்காலியில் அமர்ந்து கொண்டவன், தனது அன்பிற்கினிய இருவரையும் மகிழ்ச்சியுடன் பார்த்தான். மாஷா அல்லாஹ்! அவனுடைய அறை இன்று அவனுக்கு மிக அழகாக தெரிந்தது.

“இங்க கூட நீ விரும்பினா இன்னொரு பறவை வரையலாம், அன்பே!” என ருஹானா சொல்ல, இவான் தலையசைத்தான்.

ஆர்யனுக்கும் காபி வர, இருவரும் சேர்ந்து காபி அருந்திய அத்தனை இனிய தருணங்களும் அவர்களுக்கு நினைவு வர, ஆர்யன் அவளை வைத்த கண் எடுக்காமல் பார்க்க, அவள் தயக்கமாக அடிக்கொரு முறை பார்த்துக் கொண்டாள்.

படம் வரைந்து கொண்டு இருந்த இவானுக்கு பெருத்த சந்தேகம் வந்தது. “நீங்க ரெண்டு பேரும் ஏன் பேசிக்க மாட்றீங்க,?” என கேட்டான், அறை மௌனத்தில் மூழ்கி இருக்கும் காரணம் புரியாமல்.

ஆர்யன் ருஹானாவை பார்த்தான். அவள் தலையை குனிந்து கொண்டாள்.  ‘ஓசையின்றி பேசிடுவோம் விழிமொழியில், நிமிர்ந்து நோக்கிடு என் பார்வையை!’

இவானுக்கு புரியும்படி சொன்னான், அவன் சிறிய தந்தை. “அமைதியே சிலசமயம் அதிகமா சொல்லிடும், அக்னி சிறகே! வார்த்தையில்லாமலே ரெண்டுபேரும் புரிஞ்சிப்பாங்க” என அவள் சொல்ல, ருஹானா மகிழ்ச்சியை மறைக்க குனிந்தபடி காபியை அருந்தினாள்.

 

காதல் விளையாட்டில் வார்த்தைகள் ஆடிடும்

அதையும் தாண்டிய விழிகள் சுழன்றிடும் ஆட்டம்

மனங்கள் இரண்டும் எண்ணங்களில் உரையாட

காந்தவிழிகளை காணும் விழிகளும் மனுப் போட…..

மனு சரியாக பரிசீலிக்கப்படுமா என்றே விழிகளில் 

ஒன்று யாசிக்க மற்றொன்று யோசிக்க…..

காதல் கடவுள் இரோஸின் மனப்புலம்பல்..

பால பாடம் தாண்டாத மக்கு காதலர்களை

வைத்துக்கொண்டு என்ன செய்வேன் நான்?

 

“சித்தப்பா, பாருங்க நான் பறவையும் வரைந்திட்டேன். இந்தாங்க, இப்போ நீங்க வச்சிக்கோங்க”

“இங்க தான் என்னோட மதிப்பான பொருட்களை வச்சிருப்பேன். அதோட உன்னோட படமும் இருக்கும்” என குறிப்பாக ருஹானாவிற்கு சொன்ன ஆர்யன், அந்த படத்தை இழுப்பறையில் பத்திரப்படுத்தினான்.

அதற்கு மேல் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத ருஹானா “நான் இதை கிச்சன்ல கொண்டு வைக்கறேன்” என்று இரு காபி கோப்பைகளையும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

சிரிப்புடன் அவள் வெளியே வருவதை பார்த்த சல்மா, தன் கோபத்தை அடக்க முடியாமல் “நீ என்ன ஆர்யனோட நிழலா? ஒரு நிமிஷம் கூட அவனை விட மாட்டியா? நீ எதுக்கு முயற்சி செய்றேன்னு எனக்கு நல்லா தெரியும்” என்றாள்.

கண் கலங்கிய ருஹானா “என்ன சொல்றே நீ?” என்றாள்.

“நீ ஒரு புதையல் தேடி. இவான் அதுக்கு ஒரு நல்ல சாக்கு உனக்கு. நல்ல சித்தின்னு நடிச்சி ஆர்யனை முட்டாளாக்கறே. ஒன்னும் தெரியாதவ மாதிரி வேஷம் போட்டு அவனை மயக்கறே! உன் குடிசை வாழ்க்கைக்கு திரும்பி போகாம இங்கயே சொகுசா இருக்க என்ன வேணுமானாலும் செய்வே நீ!”

“வாயை மூடு!” என்றபடியே ருஹானா பளாரென அவளை அறைந்து விட்டாள். அடிவாங்கிய சல்மா விதிர்த்து நிற்க, ஆர்யன் அறைக் கதவு திறக்கும் ஓசை கேட்டது.

“ஆமா, நீ சொல்றது சரி தான், ருஹானா! இவானுக்கு போர் அடிக்குது. அவனை உற்சாகப்படுத்த நாம எதாவது செய்யலாம்” என சல்மா மாற்றி பேச, சல்மா பேச்சின் தாக்கத்தில் ருஹானா கலங்கி நின்றாள். நேராக ருஹானாவின் பக்கம் வந்த ஆர்யன் “எதும் பிரச்சனையா?” என கேட்டான்.

சல்மா சிரமப்பட்டு ஆர்யனைப் பார்த்து புன்னகை செய்து ‘ஒன்றுமில்லை’ என தலையாட்ட, அவன் அவளை நம்பாமல் “என்ன? சொல்!” என ருஹானாவிடம் கேட்க, சல்மாவிற்கு குலை நடுங்கியது.

அப்போது ஜாஃபர் வந்து “ருஹானா மேம்! சமூகசேவை நிறுவனத்தில இருந்து உங்களை பார்க்க வந்துருக்காங்க” எனவும், சல்மா உயிர் பிழைக்க அங்கிருந்து ஓடிவிட்டாள்.

வேகமாக கீழே இறங்கப் போன ருஹானாவை கைகாட்டி தடுத்த ஆர்யன் கீழே எட்டிப்பார்த்தான். சமூகசேவை நிறுவனத்தில் இருந்து லைலாவும், அவரின் உயர் அதிகாரியும் வாசலில் நின்றிருந்தார்கள்.

“நிதானமா இரு. அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்கலாம்” என ஆர்யன் ருஹானாவை அமைதிப்படுத்த, தலையாட்டிய ருஹானா கீழே இறங்கினாள், ஆர்யன் பின்தொடர.

“சொல்லுங்க!” என ருஹானா அதிகாரிகளிடம் பயத்துடன் கேட்க, இதற்கு சூத்திரகாரிகளான சகோதரிகள் இருவரும் நடக்கப் போகும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக மாடிப்படியில் சந்தோசமாக வந்து நிற்க, லைலா கடுமையுடன் பேசினார்.

“மிஸ் ருஹானா! நாங்க உங்க வசிப்பிடத்துக்கு போயிட்டு தான் வரோம். அக்கம்பக்கம் இருக்கறவங்க நீங்க ரொம்ப காலமா அங்க போகலன்னு சொல்றாங்க. நீங்க கஸ்டடி நிபந்தனைகளை கடைப்பிடிக்கல. அதுக்கான நடவடிக்கைகள் கடுமையா இருக்கும்.”

 

(தொடரும்) 

Advertisement