Advertisement

“இரு பகுதியாய் இருந்த நாங்கள் இருவரும் ஒன்றாக முயற்சித்தோம். காதல் என்று சொல்வார்களே அது இது போல் தான் இருக்குமோ என வியந்து போனேன். ஒன்றாக இணைவோமா? காலம் கடந்த அமரத்துவம் அடைவோமா?”

அப்போது சரியாக சல்மா கதவருகே வந்து நின்று ஒட்டுக் கேட்டாள். அவளுக்கு ஆர்யன் சொல்வது கேட்காவிட்டாலும், அவனது கனிவான குரலும், அவன் ருஹானாவை பார்க்கும் இதமான பார்வையும், அவள் மேனியெங்கும் தணலை அள்ளித் தெளித்தன.

“எனக்கு லேசா தான் புரியுது. முழுசா புரியல, சித்தப்பா. இது அசுரன், இளவரசி காதல் கதையா?”

“உன் சித்தி உனக்கு சரியா விளக்கி சொல்வாங்க” என்று சொன்ன ஆர்யன் ருஹானாவிடம் “அப்படித்தானே?” என கேட்டான். அவள் அதற்கு என்ன பதில் சொல்லுவாள்?

“செல்லம், நாம ரூம்க்கு போகலாம், வா” என ஒருவழியாக இவானை அழைத்துக் கொண்டு சென்றாள். சர்க்கரை சேர்க்காமலேயே இனிப்பாக இருந்த காபியை ஆர்யன் இளநகையுடன் ருசித்தான்.

——-

ஆங்காரத்தை அடக்க முடியாத சல்மா வேகமாக ருஹானாவின் அறைக்கு சென்றாள். அங்கே இருந்த பொருட்களை உடைக்க எண்ணி வாசனை திரவிய புட்டியை கையில் எடுத்து ஓங்கினாள். அவள் பின்னால் ஓடிவந்த கரீமா அதை பிடித்துக் கொண்டாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு, சல்மா. எல்லாத்தையும் கெடுத்துடாதே. உன் கோபத்தை அடக்கு” என அவளை கையோடு வெளியே அழைத்து சென்றாள்.

—–

சமையலறையில் நடந்ததை உவகையுடன் நினைத்தபடி முகம் மலர தனது அறையில் அமர்ந்திருந்த ஆர்யனிடம் “சார்! நீங்க கேட்ட கொரியர் வந்துடுச்சி” என ஜாஃபர் கொண்டுவந்து தர, “என்ன ஜாஃபர்! எல்லாம் சரியா தானே போயிட்டு இருக்கு?” என ஆர்யன் கேட்டான்.

“ஆமா சார்! எந்த சிக்கலும் இல்ல” என ஜாஃபர் சொல்ல, ஆர்யன் தலையாட்ட, “நீங்களும் சில நாட்களா மகிழ்ச்சியா இருக்கறது பார்க்க நல்லா இருக்கு, சார்” என ஜாஃபர் புன்னகையுடன் சொல்ல, ஆர்யனும் “ஆமா, ஆமா” என புன்னகைத்தான்.

“ஜாஃபர்! இவானோட சித்தியை வர சொல்றீங்களா? ஒரு தகவல் கேட்கணும்”

“இப்பவே சொல்றேன், சார்.”

“பிஸியா இருக்கேன்னு சொல்வா. நான் காத்திருக்கேன்னு சொல்லுங்க.”

“சரி சார்”

——

ருஹானாவின் அறையில் இவான் சித்தியோடு கார் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.

“இதோ… இப்போ… ஆர்யன் அர்ஸ்லான் கார் ருஹானா அர்ஸ்லான் காரை தாண்டி போகுது”

திடுக்கிட்ட ருஹானா “செல்லம், என்னோட கடைசி பேர் அர்ஸ்லான் இல்ல” என்றாள் சங்கடத்துடன்.

“ஓ! இல்லயா? ஏன் அப்படி? நீங்களும் எங்க குடும்பம் தானே?” திகைப்பாக கேட்டான் இவான்.

“என்னோட அப்பா பேர் தான் என் பேர் பின்னாடி வரும்.”

“எப்போ அர்ஸ்லானா மாறும்? இப்போ எங்ககூட தானே இருக்கீங்க?” என்ற இவானின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ருஹானா தலை குனிந்து யோசிக்க, ஜாஃபர் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான்.

“ருஹானா மேம்! உங்களுக்கு நேரம் இருக்குமா?”

“ஓ! சொல்லுங்க ஜாஃபர் அண்ணா! என்ன செய்யணும்?”

“ஆர்யன் சார் உங்களுக்காக அவர் அறையில் காத்திருக்கார்.”

“ஒஹ் அப்படியா? ஆனா எனக்கு கொஞ்சம் வேலை….” என மறுக்க பார்த்த ருஹானா, ஜாஃபர் தலை சாய்த்து பார்த்த பார்வையில் மாட்டிக்கொண்டது புரிந்து “சரி, ஜாஃபர் அண்ணா! நான் போறேன்” என்றாள்.

“தேனே! நான் இப்போ வந்துடுறேன்” என சொல்ல, தலையாட்டிய இவான் இரு கார்களையும் இரு கைகளில் வைத்துக்கொண்டு தானே ஓட்டி விளையாட, ருஹானா ஆர்யனின் அறைக்கு சென்றாள்.

——-

உள்ளே வந்த ருஹானாவை ஆர்யன் மென்மையாக பார்க்க “என்னை கூப்பிட்டீங்களாமே? எதுக்கு?” என ருஹானா கேட்க, மேசையை தாண்டி அவள் பக்கம் வந்தவன் “என் காதுல கேட்டது பற்றி பேச! நேத்துல இருந்து நானும் தள்ளிப்போட்டுட்டே இருக்கேன். ஆனா இப்போ பேசிடறது நல்லது” என்றான்.

“நீங்க கேட்டதா? எதைப் பற்றி சொல்றீங்க?” ருஹானா மிடறு விழுங்கிக் கொண்டு கேட்க, “கேட்டது மட்டும் இல்ல. நான் படிச்சதும் கூட” என ஆர்யன் மேலும் பயமுறுத்த, “என்ன? படிச்சீங்களா?” என குழப்பமானாள் அவள்.

“ஆமா, சில பெற்றோர் பேச கேட்டேன். சில வெப் சைட்ல படிக்கவும் செஞ்சேன். இவான் வயசு பசங்க பாலர் வகுப்புக்கு போகணும், இல்லயா? நாமும் இவானை பள்ளில சேர்க்கணுமே! நீ என்ன சொல்றே?”

‘அப்பாடா! இது வேற விஷயம்’ என மனதில் சொன்னவள் “இல்ல, இது ரொம்ப சீக்கிரம். அடுத்த வருடம் தான் அவனை சேர்க்கணும்” என அவனிடம் சொன்னாள்.

“அடுத்த வருடம் எந்த பள்ளிக்கு அனுப்பலாம்னு இப்பவே பார்த்து வச்சிடலாமா? மிகச் சிறந்த பள்ளியில தான் அவன் படிக்கணும். நான் ஏற்கனவே சிலது தேர்ந்தெடுத்தேன். நீயும் பாரேன்” என ஐபேடை அவள் அருகே கொண்டு வந்து காட்டினான்.

அவள் தோளோடு அவன் தோள் உரச நின்று கொண்டு ஒவ்வொரு பள்ளியாக அவன் காட்டிக்கொண்டே வர, அவள் எங்கே ஐபேடின் திரையை பார்த்தாள்? தொட்டுக் கொண்டிருந்த இடத்தை அவள் மூச்சைப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவளிடமிருந்து பதில் ஏதும் வராமல் போகவே ஆர்யன் அவளை திரும்பி பார்த்தான்.

அவள் நிலை அவனுக்கு புரிந்தாலும் வேண்டும் என்றே ‘என்ன?’ என புருவம் உயர்த்தி ஆச்சரியமாக வினவ, அவன் கையில் இருந்த ஐபேடை படக்கென்று அவள் பிடுங்கிக்கொண்டாள்.

“சரி, நான் பார்த்துக்கறேன். என்னோட அறையில் போய் பார்க்கறேன். இவான் கிட்டே இப்போ வந்துடறேன்னு சொல்லிட்டு வந்தேன்” என தடதடவென படிக்கட்டில் ஏறி கதவருகே சென்று அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு போய்விட்டாள்.

“ஓடு, ஓடு! எங்க தான் ஓடுவேன்னு நானும் பார்க்கறேன்”

அவளை சீண்டிப் பார்ப்பதில் அவன் அடையும் இன்பம் அலாதியாக இருந்தது.

———

அறைக்குள் வந்தவள் கதவை மூடி மூச்சு வாங்க நின்றாள்.

“ஏன் சித்தி அங்கயே நிக்கறீங்க? இங்க வாங்க” என இன்னும் கார் ஓட்டிக் கொண்டிருந்த இவான் அழைத்தான்.

“அன்பே! நாம பூங்காக்கு போகலாமா? எனக்கு போர் அடிக்குது.”

“எனக்கு அப்படி இல்லயே. ஆனாலும் நீங்க ஆசைப்படறதால போகலாம்.”

“இயற்கை காற்று வாங்கினா புத்துணர்ச்சியா இருக்கும், கண்ணே!”

“சரி சித்தி வாங்க”

“’இரு, உனக்கு கனமான ஸ்வெட்டர் போட்டு விடுறேன்.”

——-

“இப்போ நிதானத்துக்கு வந்திட்டியா, சல்மா? நம்ம திட்டத்தை எல்லாம் பாழாக்கிருப்பே! ஏன் உனக்கு இப்படி ஆவேசம் வருது?”

“அக்கா! நான் அவளை ரெண்டா கிழிச்சி போட்டு இருப்பேன். நீ தான் தடுத்திட்டே”

“உன்னால நானும் அவளை போய் பார்க்க முடியல. இப்போ சோசியல் சர்வீஸ்ல இருந்து வந்துடுவாங்க. அவங்க ரெண்டு பேரும் இங்க இல்லனா ஆர்யன் அழகா சமாளிச்சிடுவான். ரெண்டு பேரும் எங்கயும் போகாம பார்த்துக்கணும். இல்லனா நீ ஆர்யனை மறந்துட வேண்டியது தான்”

“நீயும் உன் சொத்துக்களை மறந்திட வேண்டியது தான், அக்கா!” சல்மா நக்கலாக சொன்னாள்.

“நமக்குள்ள சண்டை போட வேண்டிய நேரம் இல்ல இது. சரி, நானே போய் பார்க்கறேன்” என்று வெளியே வந்த கரீமா அதிர்ந்து போய்விட்டாள். ருஹானாவும் இவானும் கனமான குளிராடையை அணிந்துக்கொண்டு படிக்கட்டில் இறங்க, கரீமா அவர்களை நோக்கி ஓட்டமாய் ஓடினாள்.

“ருஹானா டியர்! இந்த பனிக்காத்துல எங்க கிளம்பிட்டீங்க?”

“பூங்காக்கு போறோம், கரீமா மேம்!”

“இந்த காலநிலைல இவானுக்கு சீக்கிரம் சளி பிடிச்சிடுமே”

“சித்தி, எனக்கு கனமான டிரஸ் தான் போட்டுருக்காங்க.”

“நீ அங்க போய் ஓடி விளையாடுவே. வேர்க்கும். அப்புறம் சளி பிடிக்கும். இப்போ வெளிய போக வேண்டாம்.”

“சரி தான் கரீமா மேம்! நாம இன்னொரு போகலாம், அன்பே! உன் அறைக்கு போய் வண்ணம் தீட்டலாம்” என ருஹானா இவானோடு திரும்பி செல்ல, கரீமா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

——

இவான் படம் வரைந்துக் கொண்டிருக்க, ஆர்யன் மனப்பாடமாக சொன்ன வரிகளை ருஹானா நினைவுப்படுத்தி முகம் மலர்ந்தாள். “எல்லாத்தையும் மனசுல போட்டு வச்சிருக்கார்” என சொல்லிக் கொண்டாள்.

“சித்தி! என் ஓவியம் எப்படி இருக்கு?”

“அழகா இருக்கே, செல்லம்”

“இதை நான் சித்தப்பாக்காக வரைஞ்சேன். நாம போய் கொடுத்துட்டு வரலாமா?” இவான் அவளை திகைக்க வைத்தான்.

“அவர் வேலை செய்துட்டு இருப்பார். அப்புறமா கொடுக்கலாம், தேனே!”

“நான் அவருக்காக ஆசையா வரைந்தேனே! இப்போ போய் பார்த்துட்டு வரலாமா, சித்தி?” என இவான் வாடிய முகத்துடன் கேட்க, ருஹானாவின் மனம் இளகியது.

Advertisement