Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 96

பர்வீனை வழியனுப்பி விட்டு வந்த ருஹானா வாசலில் நின்ற ஆர்யனை பார்த்து திருதிருவென விழித்தாள். தாங்கள் பேசியதை அவன் கேட்டுவிட்டானோ என அச்சம் கொண்டாள். “நான்…. நீங்க வீட்டுக்குள்ள போயிட்டீங்கன்னு நினைச்சேன்”

“வெளிக்காற்று வாங்கலாம்னு வந்தேன்” என அவன் அவள் முகத்தை உற்று பார்த்துக்கொண்டே சொல்ல, அவள் “நீங்க என்கிட்டே ஏதாவது சொல்லணுமா?” என கேட்டுப் பார்த்தாள். அவன் அவள் வலையில் சிக்கவில்லை. ”ஏன் அப்படி கேட்கறே?”

செயற்கையாய் சிரித்தவள் “உங்களை பார்த்தா எனக்கு அப்படி தோணுது” என்றாள், விடாமல். அவனோ “நான் அப்படியா இருக்கேன்?” என அவளையே கேட்டான். அவன் வாய் திறக்க மாட்டான் என புரிந்து கொண்டவள் “தெரியல. எனக்கு தோணுச்சி” என்று சொல்லிவிட்டு போர்த்தியிருந்த சால்வையை இறுக்கிக்கொண்டு “குளிர் அதிகமாயிடுச்சி. நான் உள்ள போறேன்” என்று சென்றுவிட்டாள்.

‘ஐயோ பர்வீன் அம்மா! ஒருவேளை அவர் கேட்டுருந்தா? நான் எப்படி அவர் முகத்தை பார்ப்பேன்?’ என விரல்களை மடக்கிக்கொண்டே அவள் அறைக்குள் சென்றாள்.

முன் தோட்டத்தில் நின்ற ஆர்யன் முகத்தில் இன்பப் புன்முறுவல் பூத்தது. ஊசியாய் குத்தும் குளிர் காற்றும் அவனை இதமாக தீண்டி சென்றது. பர்வீன் சொன்னதை மீண்டும் நினைத்து பார்த்துக்கொண்டு ஆனந்தமாக நின்றான்.

——–

“சல்மா! ருஹானாவும், இவானும் நம்ம மாளிகைல இருக்கறது சட்டப்படி குற்றம். இதை பயன்படுத்தி நாம அவங்க ரெண்டு பேரையும் வெளிய அனுப்பிடலாம். அதுக்கு அப்புறம் நீயும் நானும் தான் இந்த முழு சொத்துக்கும் சொந்தக்காராங்க”

“அக்கா! எப்போ பாரு உனக்கு சொத்து நினைப்பு தானா? நான் துன்பத்துல இருக்கேன். எனக்கு வலிக்குது அக்கா. என்னோட ஒரே லட்சியம் அவளை வெளிய துரத்துறது தான். எனக்கு அவளை பார்க்க பிடிக்கல. ஆர்யனோட அவ நெருக்கமா இருக்கறது பார்க்க எனக்கு பத்திட்டு எரியுது” என சல்மா கத்த, அவளை அடக்க முடியாமல் கரீமா பயந்து போனாள்.

“எனக்கு தெரியும், இப்போ கூட அறையில ஆர்யன் அவளை பத்தியும், அவ ஆர்யனை பத்தியும் தான் நினைச்சிட்டு இருப்பாங்க” என சல்மா கொதிக்கும்போது, ருஹானா கையில் முடிவிலி சின்னமும், ஆர்யன் கையில் ருஹானா அனுப்பிய துண்டு சீட்டும் தான் இருந்தது. அவர்கள் இருவரும் வேறு உலகத்தில் மிதந்தனர்.

“அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கறது எனக்கு சித்ரவதையா இருக்கு. அவளை உடனே வெளிய அனுப்பணும். ஆர்யன் அவளை பார்க்கறதை, மதிக்கறதை, அவளை பாதுகாக்கறதை என்னால பொறுத்துக்கவே முடியல. என்னால தாங்க முடியல”

“சல்மா டியர்! இனி நீ கவலைப்பட தேவை இருக்காது. இப்பவே நான் பாம் வைக்கறேன். சீக்கிரமே எல்லாம் முடிவுக்கு வந்துடும்” என போனை கையிலெடுத்த கரீமா தங்கையின் சூட்டை தணிக்க முயன்றாள்.

———

காலையில் தைரியத்தை திரட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்த ருஹானா எதிரே இருந்த ஆர்யன் அறையை நின்று கவனித்தாள். அவன் வெளியே வரும் அறிகுறி எதும் தெரியாததால் நிம்மதியாக படிக்கட்டுக்கு நகர்ந்தாள்.

எதிரே வந்த ஆர்யன் அவனாகவே “குட்மார்னிங்!” என்று சொல்ல, இவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. தட்டுத்தடுமாறி “குட்மார்னிங்!” சொன்னவள் “இவானுக்கு உணவு தயாரிக்கப் போறேன்” என அவன் கேட்காமலேயே சொல்லிவிட்டு தப்பிக்க பார்த்தாள்.

அவள் முன்னே வந்து அவன் “என் அறையை எட்டி பார்த்தியே! என்கிட்டே நீ எதாவது சொல்ல நினைக்கிறீயா?” என கேட்டதும், வசமாக அகப்பட்ட திருடன் போல “இல்லயே! நான் பார்க்கலயே! நான் பார்த்த மாதிரி எனக்கு நினைவு இல்லயே?” என படபடத்தாள்.

“உண்மையா தானா?” ஆழ்ந்த குரலில் கேட்டான். பார்வையும் ஆழமாகவே இருந்தது.

“ஆமா, எனக்கு உங்ககிட்டே சொல்ல ஒன்னும் இல்லயே”

“ஆனா நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்”.

“எதைப்பற்றி?” அவள் இதயம் தடதடத்தது.

“உன் பர்வீன் அம்மா….”

“என்ன கேட்கப் போறீங்க?” அவளுக்கு நாக்கு உலர்ந்துவிட்டது.

பதில் சொல்ல தேவைக்கதிகமாகவே சில விநாடிகள் எடுத்துக்கொண்டவன் “அவங்களை டின்னருக்கு கூப்பிடலாமா? நீ என்ன நினைக்கறே?” எனவும் அவள் கண்களை தாழ்த்தி மூச்சு விட்டுக்கொண்டாள்.

“அவங்க அன்னைக்கு இல்லனாலும் நாம அவங்க வீட்டுல சாப்பிட்டோம் தானே? இவான், நீ, நான் வெளிய சாப்பிட போகலாம் அவங்களையும் அழைச்சிட்டு போகலாமா?”

“போகலாமே!” என அவள் சொல்லும்போது, “சித்தி!” என இவான் கூப்பிட, ஆர்யனிடம் தலையாட்டிவிட்டு அவள் இவான் அறைக்கு வேகமாக செல்ல, ஆர்யன் முகத்தில் குறும்பு புன்னகை.

——

“சீஸ் சாப்பிடு செல்லம், இல்லனா அது வருத்தப்படுமே” ருஹானா சமையலறையின் சிறிய மேசையில் அமர்ந்து இவானுக்கு உணவு தந்து கொண்டிருந்தாள்.

“நஸ்ரியா! உன் கால் எப்படி இருக்கு? நீ எங்க போறே? உன் கால் வலிக்காதா?”

“இப்போ பரவால்ல ருஹானா. ஆர்யன் சாருக்கு காபி கொண்டு போறேன்”

அந்த காபி ட்ரேவை கையில் வாங்கிய ருஹானா “நீ ஏன் போறே? ஜாஃபர் அண்ணா இல்லயா?” கால் சரியில்லாத நஸ்ரியாவை அனுப்ப மனம் வராமல், தானும் செல்ல முடியாமல் தவிக்க, “இந்த காபி எனக்கா?” என கேட்டபடி ஆர்யனே அங்கு வந்துவிட்டான்.

“ஆமா சார். நான் மேல கொண்டு வர இருந்தேன். ருஹானா மேடம் தான்…”

“நான் இங்கயே குடிக்கறேன்” என்று சொல்லி இவான் பக்கத்தில் அமர்ந்துவிட்டான். “ஹூர்ரே! சித்தப்பா நம்ம கூட சாப்பிட போறாங்க” என இவான் மகிழ, தன் கையில் இருந்த காபியை ஆர்யன் முகம் பார்க்காமல் ருஹானா கொண்டுவந்து வைத்தாள்.

ஆர்யன் அவளை புன்னகையுடன் பார்க்க, அவளோ சமையலறை பொருட்களை எல்லாம் ஒன்றுவிடாமல் பார்த்தாள். இவான் அருகே ஆர்யனுக்கு எதிரே அமர்ந்தவள் “பாலைக் குடி அன்பே!” என தன் காபியை அவன் புறம் நகர்த்தினாள்.

“இது பால் இல்ல, சித்தி!” என இவான் சொல்ல, பார்வையை மேசைக்கு திருப்பியவள், தடுமாற்றத்துடன் கோப்பைகளை இடம் மாற்றிவிட்டு காபியை குடிக்கலானாள்.

அவளை பேச வைக்க ஆர்யன் “நேத்து உன் பர்வீன் அம்மா வசதியா வீட்டுக்கு போனாங்களா? அவங்க கூட பேசினியா?” என கேட்க, “ஆமா, பேசிட்டேன். கார்ல அனுப்பினதுக்கு உங்களுக்கு என் நன்றி” என அவள் காபி தான் முக்கியம் போல குடித்துக்கொண்டே சொன்னாள்.

“இது கூட செய்யலனா எப்படி? அவங்க உனக்கு கிடைச்சது உன்னோட அதிர்ஷ்டம் தான். உன்னை பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க” என ஆர்யன் சொல்லவும், அவளுக்கு காபி புரைக்கேறியது.

ஆர்யன் சிரிப்பை மறைத்துக்கொள்ள, ருஹானா “ஆமா!” என்றாள்.

“கண்ணே! சாப்பிட்டு முடிச்சிட்டியா?” என அவள் இவானை அவசரப்படுத்த, அவன் இல்லையென தலையாட்டினான். “இல்லையா? சரி, நீ சாப்பிட்டே இரு. நான் போய் உன் அறையை சுத்தம் செய்றேன்” என எழுந்து கொள்ள, உள்ளே வந்த நஸ்ரியா “நான் இப்போ தான் செய்திட்டு வரேன்” என்றாள்.

வேறு வழியில்லாமல் திரும்ப எழுந்த இடத்தில் அமர்ந்து கொண்டவள் “இன்னைக்கு உனக்கு பசி அதிகமா இருக்கு அன்பே! நல்லா சாப்பிடுறே! குட்!” என்றாள். ஆர்யன் அவள் முகம் போகும் போக்கை பார்த்து முறுவலை அடக்கமுடியாமல் இவான் புறம் திரும்பி அவன் தலையை தடவி விட்டான்.

——

மாடித் தோட்டத்தில் சகோதரிகள் காபி குடித்துக் கொண்டிருந்தனர்.

“அக்கா! சோசியல் சர்வீஸ்ல இருந்து எப்போ வருவாங்க?”

“எப்ப வேணா வரலாம். அவங்க வரும்போது ருஹானா வெளிய போகாம பார்த்துக்கணும். நீ போய் அவ என்ன செய்றான்னு பார்த்துட்டு வா”

——-

“கடலில் நுரை பொங்குதே

எனக்கு பார்க்க பிடிக்குதே

கப்பலில் சங்கு கூவுதே

சீகல் பேகலை சாப்பிடுதே”

இவான் தலையாட்டி அழகாக பாடியவன் “சித்தப்பா! இந்த பாட்டு நல்லா இருக்கா? சித்தி சொல்லிக் கொடுத்தாங்க” என்று ஆவலோடு கேட்டான். ஆர்யன் ருஹானாவை பிரமிப்பாக பார்க்க, அவள் சந்தோசமாக “என் அப்பா சொல்லி தந்தார் எனக்கு!” என்றாள், அவன் முகம் பார்த்து.

தங்கள் குடும்பத்தின் அன்பு வாரிசை எல்லா வகையிலும் துடிப்பாக மாற்றிய ருஹானாவிற்கு மனதில் நன்றி சொன்னபடி, இவான் முதுகை தட்டிக் கொடுத்து “ரொம்ப நல்லா இருக்கு, சிங்கப்பையா! உன் சித்தி எனக்கு கூட ஒரு வாக்கியம் சொல்லி தந்திருக்காங்க” என்றான்.

“அதும் பாட்டா சித்தப்பா?”

“அது போலவும் சொல்லலாம்” என ஆர்யன், தட்டுக்களை கழுவும் இடத்தில் போட சென்ற ருஹானாவை பார்க்க, அவள் அவனை குழப்பமாக பார்த்தாள்.

“உங்களுக்கு அது நினைவு இருக்கா? எனக்கு சொல்றீங்களா, சித்தப்பா?”

“கண்டிப்பா சொல்றேன், சிங்கப்பையா” என்று சொன்ன ஆர்யன், தட்டுக்களை கழுவும் சாக்கில் அங்கேயே நின்ற ருஹானாவை பார்த்துக்கொண்டே சொன்னான்.

Advertisement