Advertisement

பர்வீன் வீட்டிலிருந்து எடுத்து வந்த பொருட்களை ஒவ்வொன்றாக ருஹானா கட்டிலில் எடுத்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஆர்யன் வந்து வாசலில் நின்று அவள் மகிழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தான்.

“நீங்க எப்போ வந்தீங்க? நான் உங்களை கவனிக்கலயே!”

“இப்போ தான் வந்தேன். இத்தனை நேரம் இவான் கூட இருந்தேன்.”

‘நான் போய் இவானை தூங்க வைக்கணுமே!” என அவள் நகர, “இன்னைக்கு நீ ரொம்ப அதிகமா வேலை பார்த்திட்டே. நான் சாராவை சொல்லிட்டேன், இவானை தூங்க வைக்க. அவனும் தூங்கிட்டான்” என ஆர்யன் அவளை தடுத்தான்.

“அப்புறம், உன்னோட கருத்து அற்புதமா இருந்தது. உனக்கு என்னோட நன்றி. இனி விளம்பர வேலை சரியான திசையில நடக்கும்.”

“மீட்டிங் வந்தவங்களுக்கு என்னால எதும் மரியாதை குறைவா ஆகலயே? அவங்கலாம் படித்தவங்க, அந்த துறையில சிறந்தவங்க.”

“உச்!” என்ற ஆர்யன் “நீயே உன்னை குறைவா மதிப்பிடாதே. அவங்க அதை வேலையா தான் பார்த்தாங்க. அதுல இருந்த உணர்வை பார்க்க தவறிட்டாங்க. சரியான கதவை நீ திறந்து காட்டிட்டே. அன்பால தான் வீடு உருவாக்கப்படும்னு நீ எடுத்துக் காட்டினதால அந்த திட்டம் இப்போ சரியான பாதையில் போகப்போகுது. நன்றி” என்றான்.

“உங்களுக்கு உதவ முடிந்ததுல எனக்கு தான் அதிக மகிழ்ச்சி” என ருஹானா சொல்ல, அப்போது சல்மா அங்கே வந்தாள்.

“நீங்க இங்கயா இருக்கீங்க ஆர்யன்? நான் உங்களை தான் தேடி வந்தேன். இப்போ தான் விளம்பர நிறுவனத்தாரோட போன்ல பேசிட்டு வரேன். இன்னும் எதாவது சேர்க்கணுமான்னு அவங்க கேட்கறாங்க.”

“என்ன சொல்லணுமோ அதெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.”

“அதுல சில பாயிண்ட்ஸ் எனக்கு ஏத்துக்க முடியல. உங்களுக்கு இப்போ நேரம் இருந்தா, உங்க அறையில் நாம அதை விவாதிக்கலாமா?”

“தேவையில்ல. ஏற்கனவே நான் சொன்னது தான். அடிப்படை கருத்துல எந்த மாற்றமும் இல்ல. உனக்கு அதுல ஏதாவது புரியலனா” என்ற ஆர்யன் ருஹானாவின் புறம் திரும்பி “அந்த யோசனையோட சொந்தக்காரங்க கிட்ட கேட்டு தெளிவுபடுத்திக்கோ. என்னை விட அவங்க உனக்கு புரியும்படி சொல்வாங்க” என்றான்.

ருஹானா சந்தோசத்தை மறைக்க சிரமப்பட, சல்மா பொறாமையில் வெந்து போனாள். ஆர்யன் அங்கிருந்து அகல சல்மா ருஹானாவை சுடும் பார்வை பார்த்துவிட்டு வெளியே சென்றாள்.

———-

“ஹல்லோ கரீமா மேம்! நான் எல்லாம் கண்டுபிடிச்சிட்டேன். ருஹானா மேம் தான் இவானுக்கு கார்டியன். அதோட இவான் அர்ஸ்லான் மாளிகைல தங்கக் கூடாதுன்னு சமூகசேவை நிறுவனம் நிபந்தனை விதிச்சிருக்காங்க. அப்படி மீறி அர்ஸ்லான் மாளிகைல இவான் தங்கினா அவனை கூட்டிட்டு போய் மீண்டும் சிறுவர் விடுதில சேர்த்துடுவாங்க”

“அப்படியா? நீ நல்லா விசாரிச்சிட்டியா?”

“ஆமா, கஸ்டடி தீர்ப்பு வந்ததுமே இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துருக்காங்க. சமூகசேவை நிறுவனத்திலிருந்து இன்ஸ்பெக்ஷன் வரவரை ருஹானா மேடமும், இவானும் அங்க தங்கி இருந்திருக்காங்க. இப்போ யாரும் அங்க இல்ல”

“நல்லது. இன்னும் ருஹானா பேர்ல வேற என்ன இருக்குன்னு தேடி கண்டுபிடி” என பேசி கரீமா போனை வைக்கவும், சல்மா ஆங்காரமாக உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“அக்கா! இந்த பிச்சைக்காரிய நான் கொல்லப் போறேன். ஆர்யன் பெரிய திட்டத்தோட விளம்பர பொறுப்பை அவ கிட்ட கொடுத்திருக்கான்”

“அது எப்படி நடக்க முடியும்?”

“நடந்திடுச்சே! சொற்பொழிவை ஆத்து ஆத்துன்னு ஆத்தி ஆர்யனை மயக்கிட்டாளே. பாரு, என் கை இன்னும் ஆத்திரத்துல ஆடுது.”

“விடு சல்மா! இப்போ அவ நம்ம கைப்பிடியில. அவளை சீக்கிரமே நான் வெளிய தூக்கி போடப் போறேன்”

“எப்படிக்கா?”

“இவானை சோசியல் சர்வீஸ்ல இருந்து எடுத்துக்க போறாங்க. இவளும் பின்னாலயே மாளிகையை விட்டு வெளியேறப் போறா. இதோட சித்திக்காரியின் கதை அர்ஸ்லான் மாளிகைல முடிவுக்கு வருது” என்ற கரீமா, தங்கைக்கு தாங்கள் அன்று கண்டுபிடித்ததை விளக்கி சொன்னாள். இருவரும் கட்டி அணைத்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.

———

“ருஹானா! உன்னோட பர்வீன் அம்மா வந்திருக்காங்க. நான் அவங்களை உள்ளே கூப்பிட்டேன். ஆனா அவங்க மறுத்திட்டாங்க” என சாரா ருஹானாவின் அறைக்கு வந்து அழைக்க, “இதோ நான் வரேன்” என ருஹானா எழுந்தாள்.

வாசல் கதவு பாதி திருந்திருக்க, ஏன் என ஆர்யன் வெளியே எட்டிப்பார்க்க அங்கே நின்ற பர்வீனை பார்த்து “மெஹ்ரபா! நீங்களா? ஏன் அங்கயே நிக்கிறீங்க? உள்ள வாங்க” என அழைத்தான்.

“மெஹ்ரபா! நான் ருஹானாவை பார்க்க வந்தேன். இரவு நேரமாகிடுச்சே. உங்களை தொந்தரவு செய்யக் கூடாதுன்னு இங்கயே நிற்கறேன்.”

“ஏன் அப்படி சொல்றீங்க. வாங்க” என ஆர்யன் அவரை உள்ளே அழைத்து வர, படிக்கட்டில் வேகமாக இறங்கி வந்த ருஹானா ஆர்யனின் விருந்தோம்பலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாள்.

“நல்வரவு பர்வீன் அம்மா!” என அவரை தழுவி அமர வைத்தாள். சாரா மூவருக்கும் தேநீர் கொண்டுவந்து தர, “இங்க பக்கத்துல ஒரு வேலை இருந்தது. அது முடிச்சிட்டு இதை உனக்கு கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்” என பர்வீன் ஒரு பொம்மையை எடுத்து ருஹானாவிடம் கொடுத்தாள்.

“மிக்க நன்றி அம்மா! எனக்கு அதிக ஆனந்தத்தை தந்திட்டீங்க” என வெகுசந்தோசமாக பர்வீனிடம் சொன்ன ருஹானா, எதிரே அமர்ந்திருந்த ஆர்யனிடம் “இது எனக்காக இவங்க பின்னி கொடுத்தது. இதை வச்சிக்கிட்டு தான் தூங்குவேன், சாப்பிடுவேன், விளையாடுவேன்” என தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாள்.

சின்ன பொருளுக்கு இத்தனை மகிழும் ருஹானாவை விந்தையாக ஆர்யன் பார்க்க அவன் போன் அடித்தது. “ரஷீத் கூப்பிடுறான். நான் பேசிட்டு வரேன்” என அவர்களிடம் மன்னிப்பு கேட்டு நகர்ந்து சென்றான்.

“எத்தனை அருமையான பெண் நீ. இந்த உல்லன் பொம்மைக்கே இவ்வளவு சந்தோசப்படுறே! நான் உங்க அம்மா போட்டோவை கவனக்குறைவா விட்டுட்டேன். ஒரே ஒரு போட்டோ அதை என்னால காப்பாத்த முடியல. நேத்துலாம் எனக்கு தூக்கமே இல்ல. உன்னோட உயிரா அதை வச்சிருந்தே. என்னை மன்னிச்சிடு மகளே!”

“பர்வீன் அம்மா! நான் ஒன்னு உங்களுக்கு காட்டணும். நீங்க இங்க உட்கார்ந்திருங்க. நான் இப்ப வந்திடுறேன்” என சொல்லி சென்ற ருஹானா, தனது அன்னையின் படத்துடன் திரும்பி வந்தாள்.

அதை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்த பர்வீன் “ஆனா.. இது.. எப்படி.. நீ எப்படி இதை சரிசெய்தே?” என புகைப்படத்தை தடவிக்கொண்டே கேட்க, “நான் இல்ல. அவர் தான்” என போன் பேசிக்கொண்டிருக்கும் ஆர்யனை சுட்டிக் காட்டினாள்.

“ஆர்யன் இப்படிப்பட்ட நல்லவரா இருப்பார்னு எனக்கு தெரியாதே!”

“எனக்கு தெரியும் அம்மா. எல்லாருக்கும் அவரோட நல்ல பக்கம் தெரியாது. அவர் முரடர், கெட்டவர்ன்னு மத்தவங்க நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா அவர் அப்படி கிடையாது.”

ருஹானாவின் பேச்சும், அவள் ஆர்யனை கனிவோடு பார்க்கும் விதமும் கண்ட பர்வீன் தன் வீட்டில் அவர்களின் நெருக்கத்தையும் நினைவு கூர்ந்தார். ருஹானாவை பற்றிய கவலை இனி தனக்கு இல்லை என மகிழ்ச்சி பெருமூச்சு ஒன்றை விடுவித்தார்.

——

“டிரைவர் உங்களை வீட்டுல விடுவான். இந்த நேரத்துல நீங்க தனியா போக வேண்டாம்” என ஆர்யன் சொல்ல “உங்களுக்கு எதுக்கு சிரமம்? நான் டாக்ஸி பிடிச்சி போய்டுவேனே!” என பர்வீன் மறுக்க, “இதுல ஒரு சிரமமும் இல்ல” என ஆர்யன் வற்புறுத்த, பர்வீன் அவனுக்கு நன்றி சொன்னார்.

“நான் பர்வீன் அம்மாவை அனுப்பிட்டு வரேன்” என ஆர்யனிடம் சொல்லிவிட்டு, வாசற்கதவிலிருந்து காரை நோக்கி ருஹானா அழைத்து சென்றாள்.

“ருஹானா! நீ சொன்னது போல தான் ஆர்யன் இருக்கார். தன்மையான மனுசன். நல்லவர். உண்மையில உங்க ரெண்டு பேர் குணங்களும் ஒன்னு தான். ஒரே வித்தியாசம். உன்னோட நல்ல தன்மை வெளிய தெரியுது. அவரோடது வெளிய தெரியல.”

“எனக்கு நல்ல குணங்கள் இருக்கான்னு எனக்கு தெரியல. ஆனா அவர் நிஜத்துல நீங்க சொன்ன மாதிரி தான்.”

“மகளே! கடைசில என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது. ஆனா நீங்க ரெண்டுபேரும் ஒருத்தொருக்கொருத்தர் ரொம்ப பொருத்தமானவங்க. அல்லாஹ் உங்க ரெண்டு பேரையும் உங்க ரெண்டு பேருக்காகவே படைச்சிருக்கார்.”

ருஹானா அதிர்ச்சியடைந்து சிலையென நின்றாள்.

எததனையெத்தனை பொருத்தங்கள் இருவருக்குமிடையே:

ஆர்யன் கம்பீரமானவன், ருஹானா தெய்வீகமானவள்

அவனுக்கு அவளிடம் உரிமையுணர்வு அதிகம், அவளுக்கு பொறுமை அதிகம்.

அவன் வாழ்க்கையில் அடிவாங்கி பண்பட்டவன், அவள் அனுபவம் இல்லாதவள்.

அவன் அமைதியாய் காத்திருக்கிறான், அவள் அழகு நிறைந்தவள்.

அவனுடைய தேவை என்ன என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறான், அவள் குழப்பத்தில் இருக்கிறாள்.

அவனுள் அக்னி கொழுந்துவிட்டு எரிகிறது, அவளோ தெளிந்த நீரோடை.

அவன் சூரியன், அவள் அடிவானம்.

அவன் இதயம் அவளுக்காக ஏங்குகிறது, அவள் இதயம் மௌனமாக அவனை தேடித் தவிக்கிறது.

அவன் வலிமையானவன், அவள் மென்மையானவள்.

அவன் விழிகள் அவளோடு கட்டுண்டு கிடக்கிறது, அவள் விழிகள் அவன் ஆத்மாவை அமைதிப்படுத்துகிறது.

அவன் குறைவாக பேசுகிறவன், அவள் கள்ளங்கபடமின்றி பேசுபவள்.

அவன் கருப்பு முத்து, அவள் வெண்ணிற அன்னம்.

இருவருக்கும் பொருத்தம் என பர்வீன் சொன்னதை உள்வாங்கிய அவள் முகத்தில் குபீரென மகிழ்ச்சி, வெட்கம், திகைப்பு, சங்கடம், ஆர்வம், மறுப்பு, பயம் என எல்லாமே தாண்டவமாடியது.

இருவரையும் ஒன்று சேர்த்து பேசியதில் மகிழ்ச்சி, அதோடு கூடிய நாணம், அவள் உள்மனதை பர்வீன் அறிந்து கொண்டதில் திகைப்பு, இப்படி அறியும்படி தான் வெளிப்படையாக தெரிவிக்கிறோமோ என சங்கடம்.

இருவரும் அத்தனை பொருத்தமாகவாக இருக்கிறோம் என அறிந்து கொள்ள ஆர்வம், அதை ஏற்றுக்கொள்ளாத பொய்யான மறுப்பு, இவர்கள் பேசுவதை யாரும் கேட்டுவிடுவார்களோ என்ற பயம்.

இத்தனையும் சில நொடிகளில் அவள் முகத்தில் மாறி மாறி பிரதிபலிக்க, விரைவில் அவற்றை கட்டுக்குள் கொண்டுவந்து “இல்ல அம்மா, அவர் இவானுக்கு சித்தப்பா மட்டும் தான். எங்க ரெண்டு பேருக்கும் இடையே அதைத் தவிர வேற எதுவும் இல்ல” என அவள் சொல்லவும், பர்வீன் குறும்பாக சிரித்தார்.

அவர் கையைப் பிடித்து “வாங்க நேரமாச்சி. நீங்க கார்ல ஏறுங்க” என்று வேகமாக கார் கதவை திறந்து அவரை அமர வைத்தாள்.

சிண்டு பொம்மையிலிருந்து இவான், சையத், ரஷீத், ஜாஃபர் என்று, இன்று பர்வீன் வரை இவர்களை காதல் சங்கிலியில் பிணைக்க முயன்று வருகின்றனர்.

பர்வீனை காரில் அனுப்பிவிட்டு வெட்கத்துடன் மாளிகை நோக்கி வந்த ருஹானா, வாசல் கதவிலிருந்து வெளியே வந்து நின்ற ஆர்யனை பார்த்து அதிர்ந்து போனாள்.

‘இது எப்படி? இவர் எல்லாவற்றையும் கேட்டுருப்பாரா?’

(தொடரும்)

Advertisement