Advertisement

நடந்து போய் வேறு சோடாவை கொண்டுவந்தவன், கேட்டவன் அருகே அதை சத்தம் வருமாறு வேகமாக வைத்தான். “குளிர்ச்சியா இருக்கா?” என்றும் கேட்டான்.

“எனக்கு புரியல, ஆர்யன் சார்” என சொல்ல “சோடா. நீங்க கேட்டது போல ஜில்லுனு இருக்கா?” என ஆர்யன் கேட்க, சோடாவை வாங்கியவன் நன்றி சொன்னான்.

ருஹானாவிற்கு உள்ளே சந்தோசம் பொங்கியது. தன்னை ஏவுவது பிடிக்காமல் ஆர்யனே எடுத்து வந்தது அவளுக்கு பூரிப்பை தந்தது. அது அவளது முகத்திலும் தெரிந்தது.

சல்மா ஆர்யனின் இந்த நடவடிக்கையை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. ருஹானாவிற்காக அவன் இத்தனை பரிந்து வேலை செய்வான் என அவள் கனவிலும் நினைக்கவில்லை. பொறாமை, கோபம் மனதை நிறைக்க முகம் சுருங்கியது.

ருஹானா உள்ளே செல்ல, ஆர்யன் நாற்காலியில் அமர்ந்து “நாம தொடரலாம்” என்றான்.

“பாருங்க, மிஸ்டர் ஆர்யன். நாங்க தயாரிச்ச இந்த சிற்றேடுகள்ல உங்களுக்கு நல்லா புரியும் இயற்கையுடன் வாழும் வாழ்க்கையை நாங்க காட்டியிருக்கோம்”

——-

இவான் ருஹானாவின் இரண்டு படுக்கையறை வீட்டில் நின்றிருந்த கரீமா “எதுக்கு இந்த வீட்டை வாடகைக்கு எடுக்கணும்? ஏன் அதை ருஹானா பேர்ல எடுக்கணும்? அப்போ ஏன் அவ இங்க தங்கல? இது அவங்க ரகசிய சந்திப்பிடமா?” என வாய்விட்டு தன் கேள்விகளை அடுக்கினாள் .

உள்ளே வந்த அவள் ஆளிடம் “சீக்கிரம் தேடு. ஏதாவது தடயம் கிடைக்குதா பாரு. எல்லா விவரமும் கண்டுபிடி” என உத்தரவிட்டுவிட்டு அவளும் அந்த வீட்டிற்குள் சுற்றி வந்தாள்.

———

“ருஹானா! நான் நஸ்ரியாக்கு உணவு கொடுத்துட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என சாரா சொல்ல “நீங்க போய்ட்டு வாங்க சாரா அக்கா. நான் இங்க பார்த்துக்கறேன்” என ருஹானா சொல்லவும் அவரும் கிளம்பினார். இருவரும் சேர்ந்து ஒரு பெரிய விருந்தை சமைத்து முடித்திருந்தனர்.

தனக்காக ஆர்யன் செய்ததை நினைத்தபடி புன்னகையுடன் அவள் வெள்ளரிக்காயை தோல் சீவிக்கொண்டிருக்க, ஆர்யனின் கம்பீர குரல் அங்கே வரை கேட்க, ருஹானா ஆர்வமாக அதை கேட்டாள்.

“நீங்க புதுசா எதும் சொல்லல. ஏற்கனவே இந்த மார்க்கெட்ல இருக்கற மத்த நிறுவனங்களோட விளம்பரங்களும் இதே தான் சொல்லுது. நாம இந்த துறைக்கு புதியவங்களா இருக்கலாம். ஆனா வியாபார யுக்திகள் நமக்கு புதுசு இல்ல”

“ஆமா, ஏற்கனவே சிறந்த திட்டங்களுக்கான நாலு விருதுகள் வாங்கியிருக்கோம்” என சல்மா பின்பாட்டு பாட, குறுக்கிட ஆர்யன் “அதெல்லாம் இருக்கட்டும். மக்கள் நம்ம யுவா திட்டதுக்கும், மற்றவங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்குன்னு பார்ப்பாங்க” என சொல்ல, ருஹானா ஆர்யனை மட்டும் பார்க்குபடியாக கதவை லேசாக திறந்து அங்கே நின்று கொண்டு அவன் பேசுவதை கேட்டாள்.

“நாம அவங்களை கவரும்படியா என்ன சொல்லப் போறோம்? முக்கியமா எந்த மக்களை நோக்கி நம்ம விளம்பரங்கள் போக போகுது? ஜிம், ஷாப்பிங் தவிர அவங்களுக்கு வேற எதும் வேணாமா? நகரத்துல இருந்து வெளிய வசிக்க ஆசைப்படறாங்க, சரி தான். நாம அதை மட்டுமே ஒரு நன்மையா சொல்ல முடியாது. அதைவிட அடிப்படையானதை நாம ஆழமா தொடணும்” என அவன் பேச, அந்த பேச்சில் கவரப்பட்டு ருஹானா கதவை ஒட்டி வந்து நின்று அவனையும் அவன் பேசுவதையும் தன்னை மறந்து கவனிக்கலானாள்.

“நமக்கு ஐடியா மட்டும் தேவை இல்ல. ஒரு உணர்வு தோன்ற வைக்கணும். ஆயிரம் வருஷமா மக்கள் உறைவிடம் தேடி வசிக்கிறாங்க. அது எதனால? இந்த ஆராய்ச்சியோட பதில் எனக்கு தேவை. இது நமக்கு கிடைக்கலனா…” என பேசிக்கொண்டே நிமிர்ந்த ஆர்யன் ருஹானாவை பார்த்துவிட்டான்.

அவளது ரசிப்பு மிகுந்த பார்வையில் சிக்கியவன், அவள் தன்னைத்தான் ரசிக்கிறாள் என உணர்ந்ததும் சந்தோஷத்தில் மொழி மறந்து போனான்.

அவன் பார்வை சென்ற இடம் பார்த்த சல்மாவிற்கு ஆத்திரம் பொங்கியது. ருஹானாவும் தன் தவறை உணர்ந்து உள்ளே செல்ல, ஆர்யன் பேசாமல் இருக்க, சல்மா “சொல்லுங்க ஆர்யன்! பதில் கிடைக்கலனா….” என அவனை மேலே பேச ஊக்கினாள்.

“நீங்க பேசுங்க. நான் இப்போ வரேன்” என எழுந்த ஆர்யன், வரவேற்பறையை சுற்றிக்கொண்டு மற்றொரு வழியாக சமையலறை நோக்கி சென்றான், அவளை பார்த்து முடித்தது போதாதென, இன்னும் அருகே பார்க்க வேண்டி.

மீண்டும் வெள்ளரிக்காயின் தோல் நீக்கிக்கொண்டே ருஹானா தன்னைத்தானே திட்டிக்கொண்டாள். “என்ன செய்றே நீ? ஏன் அப்படி நின்னே? அறிவில்ல உனக்கு? இப்போ வசமா மாட்டிகிட்டே!” ஆர்யன் காலடியோசை கேட்கவும் வாயை மூடிக்கொண்டு வேலையில் கவனம் போல இருந்தாள்.

அவளின் அதே ரசனை மிகுந்த பார்வையை காண ஆவலோடு உள்ளே வந்த ஆர்யன், அவள் குனிந்து வேலை செய்வதை பார்த்து தானே பேச்சு கொடுத்தான். “வாசனை எனக்கு பசியை தூண்டிவிட்டுடிச்சின்னு நினைக்கறேன். நீ என்ன செய்திருக்கே?”

பசி என ஏமாற்றி சந்திப்பின் இடையே அவளை காண வந்தால், அவள் அவனை பார்க்காமல் வேலை செய்தால் எப்படி?

“அதோ! அதுல இருந்து எடுத்து சாப்பிடுங்க” முன்னே அவள் செய்து அழகாக அடுக்கி வைத்திருந்த கட்லெட்டுகளை கையால் காட்டினாள், அவன் முகத்தை நிமிர்ந்தும் பாராமல்.

புருவத்தை உயர்த்தியவன் “பார்க்க நல்லா இருக்கே” என்று சொல்லி ஒரு கட்லெட்டை எடுத்து சாஸ் தொட்டு சாப்பிட்டான். “ரொம்ப சுவையாக இருக்கு. நன்றி” என்று அவன் மேலும் சொல்ல, செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தாமல் அவள் “இனிய உணவு!” என்றாள்.

மீண்டும் சாஸை எடுத்தவன் அதிகமாக எடுத்துவிட அது வழிந்து அவன் சூட்டில் பட்டுவிட்டது. “யா அல்லாஹ்!” என அவன் பதற, அவள் “என்னோட தப்பு தான். சாஸை தண்ணியா செஞ்சிட்டேன்” என வருத்தப்பட்டுக் கொண்டே துணியை நீரில் நனைத்து கொண்டு வேகமாக வந்தாள்.

அவன் கையைப் பிடித்துக்கொண்டு அவள் சாஸை துடைத்து எடுக்க, அவனோ “நல்லா இருக்கு, நிஜமா நல்லா இருக்கு” என்றான் சந்தோசமாக, நினைத்து வந்ததை விட அவள் அருகாமை கிடைத்ததை எண்ணி.

“கறை போய்டுச்சி!” என நிம்மதியாக சொல்லி நிமிர்ந்தவளும் அவன் பார்வை வீச்சில் சிக்கிக்கொண்டாள். கதவு திறக்கும் ஓசை கேட்கும்வரை அப்படியே நின்றவர்கள் விலகி நிற்க, உள்ளே வந்த சல்மா “ருஹானா! விருந்தாளிகள் தண்ணீர் கேட்கறாங்க” என சொல்லவும் ஆர்யன் முகம் மாறியது.

ருஹானா தண்ணீர் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல, அவளை முறைத்திருந்த சல்மா, முகத்தை மாற்றிக்கொண்டு, புன்னகையுடன் “உங்களுக்கு பசிக்க ஆரம்பிச்சிடுச்சா, ஆர்யன்? மீட்டிங் தொடரலாமா?” என கேட்டாள்.

அவளை கோபமாக பார்த்தவன் “இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன்” என்றான் விறைப்பாக.

——-

கரீமா இவான் அறையை பார்த்துவிட்டு ”இது குழந்தை தங்குற ஒரு அறை! இதுல இவான் எங்க இருந்து வரான்?” என்றாள், வண்ண பென்சில்களை கையில் எடுத்து.

“எல்லாரிடமும் மறைத்து ஒரு வாடகை வீடு. நான் பயந்த மாதிரி இது ருஹானாவுக்கு வாங்கி கொடுக்கப்படல. அப்புறம் ஏன்?” என கரீமா குழம்பிக் கொண்டிருக்கும்போது, அவள் ஆள் “இங்க சமூகசேவை நிறுவனத்தோட கார்டு இருக்கு” என கொண்டுவந்து கொடுத்தான்.

“இந்த வீட்டுக்கும், அவங்களும் என்ன தொடர்புன்னு கண்டுபிடி” என கரீமா அவனை ஏவ, இருவரும் வீட்டை மூடி கிளம்பினர்.

———

“நீங்க சரின்னு சொன்னீங்கனா நாம ஒரு கார்டூன் படம் செய்யலாம். ஒரு இளைஞன் நகரத்தோட பிடியில் சிக்கி அல்லாடுறான். அப்புறம் அவன் தளர்ந்து சோர்வாகி நம்ம யுவா ஏரியால நுழையறான். அது அவனுக்கு பாலைவன சோலையா தெரியுது. சொர்க்கத்தில இருக்கற மாதிரி மகிழ்ச்சி அடையறான்” என கூட்டத்தில் பேசப்பட, ருஹானா ‘அடேங்கப்பா!’ என கிண்டலாக புருவத்தை உயர்த்தினாள்.

ஆர்யன் அவளுக்கு பதிலாக சோடா கொண்டு வந்து தந்த பின், வெட்கம் விடுத்து அவளே விருந்து தரும் உரிமையானவள் போல சுற்றி சுற்றி பரிமாறிக் கொண்டிருந்தாள், காதில் விழுந்ததை கவனமாக கேட்டபடி.

“இது பார்க்கறவங்களுக்கு சர்ப்பரைஸா தான் தெரியும். அவங்க மனசை பாதிக்காது” என ஆர்யன் ருஹானாவின் பாவனைகளை பார்த்தபடியே அதை நிராகரித்தான்.

“மக்களுக்கு மனசுல பதியனும்னா அதிர்ச்சியான தகவலை சொல்லி தான் இழுக்க முடியும்” என அந்த பெண் மேலும் சொல்ல, ஆர்யன் இடைமறித்தான்.

“அகாபா நகரத்துக்கு வெளிய நூத்துக்கணக்கான வீட்டு திட்டங்கள் இருக்கு. அவங்களோடதுல இருந்து யுவா எப்படி மாறுபடுது? அதை எப்படி நாம காட்டப் போறோம்?” என ஆர்யன் சொல்ல, ‘சபாஷ்! சரியான கேள்வி!’ என ருஹானாவின் முகத்தில் மெச்சுதல் தெரிந்தது.

“நாம நகரத்துல பெரிய பெரிய பேனர்கள் வைக்கலாம். முதல் பேனர்ல இப்படி எழுதலாம் ‘உங்களை பீடித்திருக்கும் அவதியில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமா?’ ரெண்டாவது பேனர்ல ‘உங்களுக்கான தீர்வு சில அடிகளில் இருக்கிறது. தொடர்ந்து நடங்கள்.’ மூணாவது பேனர்ல யுவா வீட்டுத்திட்டம் பற்றிய அறிவிப்பு” என சோடா கேட்டவன் சொல்ல, சல்மா பிரமித்து பார்க்க, ருஹானா ‘இது வேலைக்காகாது!’ என சலித்துக்கொண்டாள்.

“இது மார்கெட்டிங்க்கான ஒரு வழி. ஆனா புது உணர்வை தூண்டாது” என ஆர்யன் அந்த யோசனையையும் நிராகரிக்க, ருஹானாவின் புன்னகை விரிந்தது.

“திரும்ப ஆரம்பத்துல இருந்து தொடங்குங்க. முக்கியமான சாராம்சத்தை நீங்க தவற விடுறீங்க. இந்த திட்டத்துக்கு யுவான்னு பேர் தெரிந்தெடுத்திட்டோம். முதல்ல உங்களை நீங்களே கேட்டுக்கங்க. யுவா அப்படினா என்ன?” என ஆர்யன் கேட்டான்.

ஒருவர் “யுவா நாம வசிக்கிற ஒரு இடம்” என சொல்ல, மற்றொருவர் “யுவா வெளி அபாயங்களில இருந்து நம்மை காப்பாற்றும் ஒரு தங்குமிடம்” என சொல்ல சல்மா முன்னே வந்தாள், தன்னுடைய திறமையை காட்ட.

“பாருங்க, ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி மக்கள் குகைகள்ல தங்கினாங்க. அப்புறம் குடிசைகள் உருவாக்கினாங்க. நம்மோட அடிப்படை தேவை வீடு” என சல்மா பெரிதாக பேச துவங்க, ஆர்யன் “இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும். எனக்கு தெரியாத ஒரு தகவலை சொல்லுங்க” என அவள் பேச்சை நிறுத்தினான்.

“விக்கிறவங்க பக்கம் இருந்து யோசிக்காதீங்க. நீங்க புத்திசாலித்தனமான ஐடியா தான் யோசிக்கிறீங்க. சரியான உணர்வுகளை யோசிக்க மாட்றீங்க. எனக்கு தேவை வெற்றி பெறத் தகுதியான, நேர்மையான முன்னோக்கு திட்டம்” என சொல்லிக்கொண்டே வந்தவன், தனக்கு பரிமாற வந்த ருஹானாவிடம் திரும்பி “நீ என்ன நினைக்கிறே?” என கேட்டான்.

சல்மா சீறும் பாம்பென ருஹானாவின் புறம் திரும்ப, மற்றவர்கள் அலட்சியமாக பார்க்க, நிஸாம் விசயத்தில் அவளை பற்றி தெரிந்திருந்த ரஷீத் ஆவலோடு பார்த்தான்.

“நானா?” என அதிர்ச்சியான ருஹானா “எனக்கு தெரியாதே!” என்றாள். சல்மாவும், மற்றவர்களும் ஒருவரையொருவர் பார்த்து கிண்டலாக சிரித்துக்கொண்டனர்.

“இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல. உன் மனசுக்கு தோணினதை சொல்லு” என ஆர்யன் அவளை வற்புறுத்த, எல்லாரையும் சங்கடமாக ஒருமுறை பார்த்த ருஹானா தயக்கமாக பேச ஆரம்பித்தாள்.

“வீடுன்னு சொன்னாலே பாதுகாப்பு, தங்குமிடம் தான் முதல்ல நினைப்புக்கு வரும்” அவர்கள் அத்தனை நேரம் பேசிய கருத்தை ஒட்டியே ருஹானா பேச ‘இவள் என்ன நமக்கு தெரியாததை சொல்லிவிடப் போகிறாள்?’ என சல்மா நக்கலாக சிரித்தாள்.

“ஆனா வீட்டுக்குள்ள இருக்கிற மனிதர்கள் தான் ஒரு வீட்டை இல்லமா மாத்துறாங்க” என ருஹானா அழுத்தமாக சொல்ல, ஆர்யனோடு மற்றவர்களுக்கும் அவள் பேச்சில் ஆர்வம் பிறந்தது.

“நாலு சுவர்கள் சூழ்ந்த எதுவும் வீடாகலாம். ஆனா என்னைப் பொறுத்தவரை வீடுன்னா ஒருத்தருக்கொருத்தர் அன்பு காட்றவங்க இருக்கறது தான். எதுக்கோ பயந்தோ, வசதியாக தங்கவோ இருக்கறது வீடு இல்ல” என ருஹானா சொன்னதை கேட்டு, ரஷீத் ஆமாம் என தலையசைத்து பெருமிதமாக புன்னகைத்தான்

“அன்பானவங்க கூட சேர்ந்து இருக்கறது தான் வீடு. முடிவில்லாத அன்பே ஒரு வீட்டோட அடித்தளம். உலகத்துலேயே அழகான இடமா இருந்தா கூட, அதுல அன்பு, நம்பிக்கை, அமைதி இல்லனா அதை வீடுன்னு நான் சொல்ல மாட்டேன்” என உறுதியாக அவள் சொல்ல, மகுடிக்கு மயங்கிய நாகங்கள் போல விளம்பர நிறுவனத்தினர் தலையை ஆட்டினர்.

“ஒரு வீட்டின் கூரை ஒழுகலாம். சுவர்கள் சேதமா இருக்கலாம். ஆனா அங்க அன்பானவங்க இருந்தா அது மகிழ்ச்சியான வீடு தான். எளிமையான தங்குமிடத்தை கூட அன்பு அழகான வீடா மாத்திடும்” என்று முடித்த ருஹானா ஆர்யனின் முகத்தை பார்க்க, அதில் எந்த ஒப்புதலும் தெரியாதது கண்டு, முகம் வாடி “இது என்னோட கருத்து!” என சேர்த்து சொன்னாள்.

அவள் பேச்சிலும், கருத்திலும் அது சொல்லப்பட்ட விதத்திலும் மெய்மறந்திருந்த ஆர்யன் “இதான் நான் கேட்டது. நான் நினைச்சி தேடினது சரியா இதைத்தான்!” என மேசையைத் தட்டி சொன்னான். இதே தான் அவன் வாழ்க்கைக்கும் கேட்கிறானா?

ரஷீத் சந்தோசமாக சிரிக்க, சல்மாவிற்கு உடம்பெல்லாம் தீயாய் எரிய, கைகளை பிசைந்து கொண்டாள். ருஹானாவிற்கும் அவனது மகிழ்ச்சி ஒட்டிக்கொள்ள, அவனுக்கு தான் உதவியாக இருந்ததை நினைத்து அவனை நிறைவாக பார்த்தாள்.

“இதோட மீட்டிங் நிறைவடைந்தது. இதை அடிப்படையா வைத்து உங்க வேலையை தொடங்குங்க” என்று ஆர்யன் சொல்ல, நிறுவனத்தினர் பணிய, அவன் செல்லும் ருஹானாவையே பார்த்திருந்தான்.

——–

Advertisement