Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                                            அத்தியாயம் – 95

அன்னையின் புகைப்படத்துடன் தன்னருகே ஓடிவந்தவளை ஆர்யன் ஆர்வமாக பார்க்க, ருஹானா அவன் முகத்தை பார்த்து கண்களும், உதடுகளும் சிரிக்க ஆனந்த கண்ணீருடன் நின்றாள்.

“நான்……. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. உங்களுக்கு மனமார நன்றி சொல்றேன். என்னோட அம்மாவோட நான் திரும்ப சேர்ந்த மாதிரி இருக்கு” என்று சொல்லி புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

அவளின் பரவசத்தை ரசித்தவன் “இது சரிசெய்ய முடியாத செயல் இல்ல. இப்போ இருக்குற நவீன தொழில் நுட்பத்துல சுலபமா திருத்திடலாம். பெரிய காரியமே இல்ல இது” என சொல்ல, அவள் ஏற்றுக்கொள்ள மறுத்து தலையாட்டினாள்.

“இல்ல, நீங்க செய்த செய்கை இத்தனை எளிதா கடந்து போற விஷயம் கிடையாது. உங்களுக்கு தெரியாது, இந்த ஒரு போட்டோ மூலமா நீங்க எனக்கு உலகத்தையே தந்திட்டீங்க. நன்றி” என அவள் உணர்ச்சி வசப்பட, ஆர்யன் அகமகிழ்ந்து போனான்.

தலையாட்டி “குட்நைட்!” என்று கதவை நோக்கி அவன் திரும்ப, ருஹானா அவன் கையின் மேல் லேசாக தொட்டு “நானும் உங்களுக்கு எதாவது செய்ய ஆசைப்படறேன்” என கடகடவென சொல்ல, ஆர்யன் தன் கைமேல் இருக்கும் அவள் கையை பார்த்தான்.

அதன் பின்னே அதை உணர்ந்த ருஹானா கையை பின்னிழுத்துக் கொண்டாள். “உடைந்து போன உங்க பொருளை சரி செய்யவோ, நீங்க தொலைத்ததை கண்டுபிடித்து தரவோ எனக்கு ஒரு வாய்ப்பு வேணும்” என கெஞ்சுதலாக அவள் கேட்க, அவளை நோக்கி திரும்பினான்.

“மனிதன் பொருட்களை மட்டும் தொலைக்கறது இல்ல, புகைப்படங்கள் மட்டும் சேதம் ஆகறது இல்ல. உனக்கு….. புரியாம இருக்கலாம், தொலைந்து போனது திரும்ப கிடைச்சிருக்கு. உடைந்து போனது சீராகியிருக்கு. நடக்க வேண்டியது நடக்கும். நாம ஒருத்தருக்கொருத்தர் நன்றி சொல்லிக்க வேண்டாம்” என அவன் சொல்ல, அவள் நெக்குருகிப் பார்க்க, ஆர்யன் கதவை மூடி வெளியே சென்றுவிட்டான்.

திருவள்ளுவர் கூற்று

அன்பெனப்படுவது யாதெனில்

எல்லோரும் இன்புறச் செயல்!

அனைவரையும் இன்புறச்செய்யும் 

அன்பு காதலர்களிடையே பகிர்ந்து 

பகிர்ந்து களைப்புறச் செயல்!

நன்றி சொல்ல தேவையில்லாத நிலைக்கு இருவரும் வந்துவிட்டார்களா? இருவரும் ஒருவரே என இணைந்துவிட்டார்களா?

அவன் தொலைத்த எதை இவள் கண்டுபிடித்து தந்தாள்? அதுவும் பொருள் இல்லையாமே! அவனுடைய உடைந்த எதையோ இவள் சீராக்கியும் தந்திருக்கிறாளாமே! அவன் எதை குறிப்பால் உணர்த்துகிறான்?

காணாமல் போன அவன் நிம்மதியும், உடைந்து போன அவன் இதயமுமா?

——-

“என்னோட இளமையை இந்த குடும்பத்துக்காக தொலைச்சேன். பாதி பைத்தியத்தை கல்யாணம் செஞ்சிகிட்டேன். ஆனா நேத்து வந்த ருஹானா பாம்புக்கு அர்ஸ்லான் குடும்ப சொத்து போக போகுதா?”

“அந்த விஷப்பாம்பு ஆர்யனை வளைச்சி போட்டுட்டா அக்கா. அவளோட ஆசைப்படி ஆர்யனை ஆட வைக்கிறா. இன்னும் என்னென்ன செய்யப் போறாளோ?”

“இனிமேல் அவ எதும் செய்ய முடியாது, சல்மா. இத்தனை நாள் அவளை நான் குறைத்து எடை போட்டுட்டேன். இனி பழைய கரீமா திரும்பி வர போறா.”

“என்ன செய்யப் போறே அக்கா?”

“இனி எந்த வாய்ப்பும் தவற விடக்கூடாது. அவளோட பலவீனம் என்னன்னு கண்டுபிடிக்கணும். அவளை பற்றி நமக்கு தெரியாத தகவல்கள் இருக்கான்னு தேடணும்.”

கரீமா போனை எடுத்து தன் கையாளுக்கு அழைத்தாள்.

——–

ருஹானா கட்டிலில் அமர்ந்தபடி அன்னையின் படத்தை பார்த்தவாறு புளகாங்கிதத்துடன் இருக்க, அவளது வெளிப்படையான மகிழ்ச்சியில் மனநிறைவுடன் வந்த ஆர்யன் தன் அலுவலக அறையில் மேசையின் இழுப்பறையில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியே எடுத்தான். அது ருஹானாவின் சிறுவயது படம், பெரிதாக்கப்பட்டிருந்தது.

அவளது அன்னையின் படத்தோடு, இந்த படத்தையும் அவனுக்காக பெரிதாக்கி இங்கே மறைத்து வைத்திருக்கிறான். அதை கையில் வைத்தபடியே ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான், நெடுநேரம்.

எப்போது தூங்க சென்றானோ, எப்போது விழித்தெழுந்தானோ! காலையில் உற்சாக மனநிலையோடே அழகான நீல நிற சூட் அணிந்து அலுவலகம் கிளம்பியவன் “ஹல்லோ ரஷீத்! நான் ஆபிஸ்க்கு கிளம்பிட்டேன். இன்னைக்கு என்னென்ன வேலை இருக்கு?” என கேட்டான்.

“விளம்பர நிறுவனத்தோட சந்திப்பு இருக்கு, ஆர்யன். அவங்க அறிக்கையை பற்றி பேச நீண்ட நேரம் எடுக்கும். நீங்க அதுக்கு தயாரா வாங்க. உங்க உடம்பு தாங்குமா?”

“நான் சரியாகிட்டேன், ரஷீத். ஆனாலும் சுருக்கமா விவரங்கள் தரணும்னு அவங்க கிட்டே சொல்லிவை. நான் சீக்கிரமா மாளிகைக்கு திரும்பணும்” என்றான் மேசைக்குள்ளே இருந்த சிறுமி ருஹானாவை பார்த்தபடியே.

“ஒன்னும் பிரச்சனை இல்லயே, ஆர்யன்?”

சிறிய மரகத கண்களை நோக்கியபடி “ஆமா!” என்றவன் “இல்ல, நான் வீட்டுல இருக்கணும்னு நினைக்கறேன்” என சொல்லி அவனுக்கு தேவையான ஆவணத்தை எடுத்துக்கொண்டு இழுப்பறையை மூடினான். அப்போது ருஹானா காபியோடு உள்ளே வர “சரி ரஷீத், நான் வைக்கறேன். கார்ல வர்ற வழில கால் செய்றேன்” என்றான்.

உள்ளே வந்த ருஹானா “நீங்க நன்றி சொல்ல வேண்டாம்னு சொன்னீங்க தான். ஆனாலும் என்னோட நன்றியை தெரிவிக்க காபி கொண்டு வந்தேன். நீங்க கிளம்பிட்டீங்க போல. சரி, பரவாயில்லை. நீங்க திரும்பி வந்ததும் நான் காபி ரெடி செய்து தரேன்” என திரும்பினாள்.

அவள் முகத்தின் ஏமாற்ற சாயல் கண்ட அந்த ஷணத்தில் முடிவெடுத்த ஆர்யன் “இரு!” என சொல்லிவிட்டு ஆவணத்தை மேசை மேல் வைத்துவிட்டு அவளின் பக்கம் வந்தான். “நான் எங்கயும் போகல. இன்னைக்கு முழுதும் மாளிகைல தான் இருக்கப் போறேன்” என்றான், அவள் முகத்தில் எதையோ தேடியபடி.

அவனை ஏமாற்றவில்லை, அவள். உடனே முகம் மலர “நல்லது!” என்றவள், “அதாவது…. ஓய்வா காபி குடிக்க உங்களுக்கு நேரம் கிடைச்சிருக்கேன்னு சொன்னேன்” என சமாளித்தாள்.

அவள் காபி கொடுத்ததும் அவனது முக்கியமான வியாபார சந்திப்பை மறந்து விட்டானே! அதில் அவள் தூவிய மயக்கப்பொடி காரணமா? இல்லையே, அவன் அதை குடிக்கக்கூட இல்லையே! அவள் முகபாவனையிலேயே அவளது ஏக்கத்தை புரிந்துக் கொண்டானா?

காபியை கையில் எடுத்து ஒரு மிடறு விழுங்கியவன் “நன்றி!” என்று சொல்ல, அப்போது இவான் சத்தமாக அழைத்தான். “சித்தி! எங்க இருக்கீங்க?”

அவனைக் கூட கவனிக்காமல் ஆர்யனை பார்க்க வந்துவிட்டாள் போல. “நான் போய் இவானை பார்க்கறேன்” என சொன்னவள், ட்ரேவில் இருந்த தண்ணீரை மேசையில் வைக்க போக, ஆர்யன் அதை தடுத்து கையில் வாங்க, இருவர் விரல்களும் தீண்ட, இருவருக்கும் இரத்தவோட்டம் வேகமானது.

அவள் சென்ற பின்னர் அவள் தந்த காபி ஒரு கையில், தண்ணீர் ஒரு கையில் என சில விநாடிகள் நின்ற ஆர்யன், அவற்றை அன்போடு பார்த்தான், அவள் சென்ற பாதையையும் ஒரு முறை பார்த்துக்கொண்டான். பின் நாற்காலியில் அமர்ந்து துளித்துளியாய் காபியை அருந்த, கதவை தட்டிவிட்டு சல்மா பெரிய சிரிப்புடன் உள்ளே வந்தாள்.

“குட்மார்னிங் ஆர்யன். நான் ரெடி. போகலாமா?”

“நாம எங்கயும் போகப் போறது இல்ல.”

“விளம்பரம் தொடர்பான முக்கிய மீட்டிங் இருக்கே!”

“அவங்களை இங்க வரவழை.”

“அது எப்படி? எனக்கு புரியல.”

“நீ சரியா தான் கேட்டே. அந்த சந்திப்பு இங்க மாளிகைல தான் நடக்கப் போகுது.”

“சரி, உங்க விருப்பப்படி.”

“அப்புறம், கிச்சன்ல தகவல் சொல்லிடு. மதிய உணவு எத்தனை பேருக்கு தயாரிக்கணும்னு”

“சரி ஆர்யன்!”

காபி கப்பை தான் பார்த்தானே தவிர அவளை ஏறிட்டும் பார்க்கவில்லை. அவளது உடை, அலங்காரம், சிரிப்பு எல்லாம் வீணாகத் தான் போனது. சல்மா கதவருகே சென்றும் அவனை திரும்பிப் பார்த்தாள். அவன் எங்கே நிமிர்ந்தான்? ஏமாற்றமாக கதவை மூடி சென்றுவிட்டாள்.

———

சமையலறையில் சாரா வேலை செய்துக்கொண்டே ருஹானாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“ஜாஃபர் வெளிய போயிருக்கார். நஸ்ரியா காலை சுளுக்கிட்டு ஹாஸ்பிடல்ல இருக்கா. நீ உதவி செய்யலனா காலை உணவு தயாரிக்க நான் திணறி இருப்பேன், ருஹானா. உனக்கு என் நன்றி.”

“இது ஒரு பிரமாதமா, சாரா அக்கா? நீங்க நஸ்ரியாக்கு சாப்பாடு கொண்டு போகணும் தானே?”

அப்போது அங்கே வந்த சல்மா “ஆபிஸ்ல நடக்க வேண்டிய மீட்டிங் இன்னைக்கு மாளிகைல நடக்க போகுது. ரஷீத் கூட நாலு பேர் வருவாங்க. அவங்களுக்கு விருந்து தயாராகணும்” என்றாள். “அப்படியா? நஸ்ரியாவும் ஜாஃபரும் இல்லயே? எப்படி சமாளிக்கறது?” என சாரா கேட்க “ஏன், ருஹானா இருக்காளே! அவளுக்கு இதெல்லாம் பழக்கம் தானே?” என அலட்சியமாக சொன்னபடி சல்மா வெளியே போனாள்.

“சல்மா மேம் பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்கறேன், ருஹானா” என சாரா வருத்தப்பட, “என்ன சாரா அக்கா, நான் தான் உங்களுக்கு உதவி செய்வேனே! இதுக்கு போய் நீங்க ஏன் வருத்தப்படுறீங்க? நாம சேர்ந்து செய்வோம், பதட்டப்படாதீங்க” என ருஹானா தேறுதலாக சொன்னாள்.

——-

பெரிய உணவு மேசையில் ஆர்யன் எப்போதும் போல அவனது நாற்காலியில் நடுநயமாக அமர்ந்திருக்க அவனது வலது பக்கத்தில் சல்மாவும், ரஷீத்தும் அமர்ந்திருந்தனர். இடப்பக்கம் விளம்பர நிறுவனத்தினர் அமர்ந்திருந்தனர்.

அவர்களில் பெண் ஊழியர் “மிஸ்டர் ஆர்யன்! நாம விளம்பரங்களை சொகுசான வசதிகளை அடிப்படையா வச்சி செய்யலாம். நகரத்துக்கு வெளியே பசுமையான சூழ்நிலையில் நம்மோட யுவா வீடுகள். நகரத்தின் வசதிகளோட நாம தரப்போற ஆடம்பர வீடுகள். புறநகரில் நவீன வீடுகள். இதைத்தான் நாங்க முக்கியமா வலியுறுத்த போறோம்” என சொல்லிக்கொண்டிருக்க, ஒரு ஃபைலை பார்த்தபடி அதை ஆர்யன் கேட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது ருஹானா கையில் ட்ரேவுடன் வர ஆர்யன் அதிர்ந்து போனான். சல்மாவிற்கோ வெற்றிப் புன்னகை. ருஹானா அவன் அருகே வந்து ஒரு கப்பை வைக்க “ஏன்?” என கோபமும் வருத்தமும் கலந்த மிக மெல்லிய குரலில் ஆர்யன் கேட்க, ருஹானாவும் அதே குரலில் “நஸ்ரியாவும் ஜாஃபர் அண்ணாவும் இல்ல” என சொல்லி மற்றவர்களுக்கும் வைக்கப் போனாள்.

சல்மா நக்கல் சிரிப்போடு ருஹானா வைப்பதை பார்க்க, ரஷீத் மரியாதையோடு நன்றி சொன்னான். ஆர்யன் மனது தாளவில்லை, அவளோடு இருக்க ஆசைப்பட்டு சந்திப்பை வீட்டிற்கு இடம் மாற்ற, இப்படியாகி விட்டதே என.

“வொயிட் காலர் ஆட்கள் நகரத்தை விட்டு விலகி இருக்க ஆசைப்படுவாங்க, சிட்டியோட நெரிசலான போக்குவரத்து, இரைச்சல், தூசில இருந்து தள்ளி இருக்கணும்னு நினைப்பாங்க. ஆனா அதே சமயம் அவங்க பழக்கமான வழக்கங்களும் அவங்களுக்கு வேணும். ஷாப்பிங், சினிமா, விளையாட்டு எல்லாமும் தேவை. அதனால இது ரெண்டையும் நாம எடுத்துக்காட்டினா அவங்களை கவர்ந்திடலாம்” என விளக்கிகொண்டிருந்த அப்பெண்மணி, ருஹானா கப்பை அவள் அருகே வைக்கவும் “நன்றி!” என்றாள்.

பக்கத்தில் இருந்த ஆண் ஊழியருக்கும் ருஹானா கப்பை வைக்க “எனக்கு சோடா கிடைக்குமா?” என அவன் கேட்க, சல்மா நாசுக்காக வாயை மூடி சிரிப்பை அடக்க பார்த்தாள். ஆர்யனுக்கு கோபம் வந்தது, தன்னவளை ஏவல் செய்வதா என.

“இதோ கொண்டு வரேன்!” என ருஹானா கொண்டு வந்து தர, அதை வாங்கியவன் “இது சில்லுனு இல்ல. வேற கொண்டு வரீங்களா?” என கேட்க, சல்மாவின் ஆனந்தம் அளவிட முடியவில்லை.

ருஹானா சரியென நகர பார்க்க, ஆர்யன் சடாரென எழுந்து நின்றான். ருஹானா, சல்மா, ரஷீத் மூவரும் ஆர்யன் என்ன செய்யப்போகிறானோ என பயத்துடன் பார்க்க, மற்றவர்கள் குழப்பமாக பார்த்தனர்.

Advertisement