Advertisement

மிஷால் சொன்ன இடத்தில் காத்திருக்க, காரை நிறுத்தி இறங்கிய ஆர்யன் காயம் காரணமாக மென்னடை என்றாலும் கம்பீரமாக மிஷாலின் எதிரே வந்து நின்றான்.

“நான் வந்திட்டேன். என்ன வேணும் உனக்கு?”

“நீ சிறைக்கு போனதுக்கும், உனக்கு அடிப்பட்டதுக்கும் நான் தான் காரணம். காரணம்னா நேரிடையான காரணம் இல்ல. உன் இடத்துல ரெய்டு நடக்கப்போகுதுன்ற தகவலை மட்டும் உன் எதிரிக்கு கொடுத்தேன்.”

ஆர்யன் முகம் கோபத்தில் விறைக்க, அவன் முஷ்டியை மடக்கினான்.

“நான் உன்கூட சண்டை போட வரல. நான் சொல்றதை கேட்ட பிறகு நீ என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிக்கலாம். நீ நிரபராதியா இருப்பேன்னு நான் நினைக்கல. சிறைல உன்னை கொல்ல திட்டம் போடுவாங்கன்னு எனக்கு சத்தியமா தெரியாது.”

நிதானமடைந்த ஆர்யன் மிஷால் பேசுவதை பதில் சொல்லாமல் கேட்டான்.

“ஆனா இதெல்லாம் நான் செஞ்சதுக்கு சாக்குப்போக்கு கிடையாது. நீ என்னை கொன்னு கூட போடு. என்னால இந்த குற்ற உணர்ச்சியோட இருக்க முடியல”

மிஷாலை முழுதாக பேசவிட்டு கேட்ட ஆர்யன் இன்னும் அவன் அருகே நெருங்கி “நீயே உனக்கு எல்லாம் செஞ்சிக்கிட்டே!” என ஒரே வாக்கியத்தில் சொன்னவன் திரும்பி விடுவிடு காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ஆர்யனுடன் கைகலப்பு, சண்டையை எதிர்பார்த்து வந்த மிஷால் அவன் ஒன்றும் சொல்லாமல் நடக்கவும், திகைப்பானவன் அவன் பின்னாலேயே ஓடிவந்தான். ஆர்யன் அடித்தால் கூட தாங்கி கொள்வான். ஆனால் அவன் அமைதி மிஷாலை கொன்றது.

“நீ எங்க போறே? நான் எல்லாமே ருஹானாவுக்காக தான் செய்தேன். அவளை காப்பாத்த.. ஏன்னா அவள் மேல எனக்கு காதல். தப்பேன்னாலும் அவளுக்காக தான் செய்தேன். உனக்கு கேட்குதா? நான் ருஹானாவை காதலிக்கிறேன். ருஹானாவை….”

ருஹானாவின் பேரை சொன்னால் ஆர்யன் கோபமடைவான், தன்னை வந்து தாக்குவான் என மீண்டும் மீண்டும் அவளை காதலிக்கிறேன் என சொல்லி மிஷால் ஆர்யனை நிறுத்தப் பார்த்தான்.

ஆர்யனோ அவனை திரும்பிக் கூட பார்க்காமல் காரில் ஏறி அதை பின்னாலேயே செலுத்தி திருப்பிக்கொண்டு வேகமாக சென்றுவிட்டான். ஆர்யனின் மாற்றம் கண்டு மிஷால் ஒன்றும் புரியாமல் விழித்து நின்றான்.

——

“ருஹானா டியர்! காலைல தான் நாம ஒன்னா சாப்பிட முடியல. என்கூட காபி குடிக்க வாயேன்”

“இந்த பொம்மையை இவானுக்கு கொடுத்துட்டு வரேன், கரீமா மேம்!”

“சீக்கிரம் வந்துடு. உனக்காக நான் காத்திருக்கேன்.”

——–

வரவேற்பறையில் தந்திர நரிகள் இரண்டும் அமர்ந்திருக்க, வாசற்கதவை திறந்த நஸ்ரியா, ஆர்யனின் வக்கீலை உள்ளே அழைத்து வந்தாள்.

“வாங்க உட்காருங்க” என கரீமா உபசரித்தாள்.

“ஆர்யன் சார் எனக்காக காத்திட்டு இருப்பார்.”

“அவன் இப்போ தான் வெளியே போயிட்டு வந்தான். உடை மாத்தி கொஞ்சம் இலகுவாகட்டும். அதுக்குள்ள நீங்க ஒரு காபி குடிக்கலாம்.”

“சரி! சாருக்கு ஓய்வு அவசியம்னா நான் காத்திருக்கிறேன்” என சொன்ன வக்கீல் கண்ணாடி மேலுறை கொண்ட அந்த ஆவணத்தை மேசை மேல் வைத்துவிட்டு அமர்ந்தாள்.

அந்த ஆவணத்தின் மேல் தன் செல்பேசியை வைத்த கரீமா “நஸ்ரியா! காபி எடுத்துட்டு வா!” என கட்டளையிட்டாள்.

——-

“ஹல்லோ ரஷீத்! வேலை முடிந்ததா?” படுக்கையறையிலிருந்து போன் பேசிக்கொண்டே அலுவலக அறையில் வந்து அமர்ந்தான் ஆர்யன்.

“நீங்க சொன்னபடி எல்லாம் ரெடி செய்தாச்சி. ஆவணங்களை எடுத்துட்டு லாயர் இந்நேரம் அங்க வந்திருப்பாங்க. உங்க கையெழுத்தும், ருஹானா கையெழுத்தும் மட்டும் தான் தேவை”

“நல்லது.”

“ஆர்யன்! இது நான் கேட்க கூடாது தான். ஆனா ஒரு நண்பனா கேட்கறேன். இது ஒரு முக்கியமான முடிவு. நீங்க உறுதியா தான் இருக்கீங்களா?”

“எப்பவும் விட உறுதியா!”

“சரி தான்! ஆனா ருஹானா? அவங்க இதை ஏத்துக்குவாங்களா?”

ரஷீத்திற்கு கூட ருஹானாவின் நேர்மை, எளிமை தெரிந்திருக்கிறது.

——-

பொறுமையின்றி வக்கீல் கைக்கடிகாரத்தை பார்க்க, சல்மாவும் கரீமாவும் ருஹானாவை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

“ஆர்யன் சாரை பார்க்க முடியுமான்னு கேளுங்களேன்” என வக்கீல் சொல்ல “இதோ! நஸ்ரியாவை மேலே போய் பார்க்க சொல்றேன்” என சொன்ன கரீமா, வரவேற்பறைக்கு வந்த ருஹானாவை வரவேற்றாள்.

மூன்றாம் நபர் ஒருவர் அங்கே இருப்பதை பார்த்த ருஹானா “நீங்க பிஸியா இருந்தா நாம அப்புறம் காபி குடிக்கலாம், கரீமா மேம்!” என்றாள்.

“இல்லல்ல. இவங்க ஆர்யனோட லாயர். அவனை பார்க்க தான் காத்திருக்காங்க. எல்லாரும் சேர்ந்தே காபி குடிக்கலாம்” என ருஹானாவை அழைக்க, அவள் சோபாவில் உட்கார வர, கரீமா தன் போனை எடுப்பது போல அந்த ஆவணத்தை கீழே தள்ளி விட்டாள்.

“யா அல்லாஹ்! ஸாரி!” என அவள் போலியாக வருத்தப்பட, “நான் எடுக்கறேன்” என ருஹானா குனிந்து எடுக்க, இதையெல்லாம் சல்மா நமட்டு சிரிப்புடன் பார்த்திருந்தாள்.

கண்ணாடி மூடியின் வழியே தன் பெயரை கவனித்த ருஹானா அந்த ஆவணத்தை படித்தாள்.

“என்ன ருஹானா! உன் முகமே மாறிப் போச்சே!” என சல்மா அக்கறையாக கேட்க “ஒன்னுமில்ல” என ருஹானா சொன்னாலும் அவள் முகம் சிவந்து கண்களில் நீர் திரையிட்டது.

சகோதரிகள் இருவருக்கும் சிரிப்பு பொங்க, வக்கீல் “எனக்கு அதை தரீங்களா? ஆர்யன் சார் இதுல கையெழுத்து போட காத்திட்டு இருக்கார்” என கேட்க, ருஹானா காதில் அது விழவில்லை.

——–

மடிக்கணினியில் வேகமாக தட்டச்சு செய்துக் கொண்டிருந்த ஆர்யன், கதவை தட்டாமல் அறைக்குள் கோபவேசமாக நுழைந்த ருஹானாவை அதிர்ந்துப்போய் பார்த்தான்.

அருகில் வந்த அவள் கையில் இருந்த ஆவணத்தை மேசை மேல் விட்டெறிந்தாள். பல்லை கடித்துக்கொண்டு ஆங்காரமாக கேட்டாள். “என்ன இது? ஏன் இப்படி செய்தீங்க?”

தன் முன் விழுந்த பத்திரத்தை பார்த்த ஆர்யனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. மெல்ல காயம் பட்ட இடத்தை பிடித்துக்கொண்டு எழுந்து ருஹானா முன்னே நின்றான்.

“நான் இதுக்காக இங்க இருக்கலன்னு இவ்வளவு நாட்கள்ல உங்களுக்கு புரியலயா? இது என்னை எவ்வளவு பாதிக்கும்னு உங்களுக்கு தெரியாதா?”

“எனக்கு ஏதாவது நடந்திட்டா, நீ தான் இவானை பார்த்துக்குவே. நீ மட்டும் தான். உன்னை வேதனைப்படுத்த இதை நான் செய்யல. நீயும் இவானும் பாதுகாப்பா இருக்கணும், எனக்கு பின்னாடி உங்களுக்கு யாரோட உதவியும் தேவைப்படக்கூடாதுன்னு தான் இதை செய்தேன்.”

அவள் ஆவேசமாக படபடவென பேச, அவன் ஆழ்ந்த குரலில் நிதானமாக பதில் சொன்னான்.

“நீங்களே இல்லனா, இதெல்லாம் வச்சிக்கிட்டு நாங்க என்ன செய்ய?” நொடியில் ருஹானா கேட்ட கேள்வியில் ஆர்யன் வாயடைத்து போனான். சொத்தை விட தன்னை பெரிதாய் நினைக்கும் பெண்ணை பார்த்து திகைத்தான்.

அந்த ஸ்தம்பித்த நிலையிலும் கண்ணீர் ததும்பிய அவள் கண்களை காண சகிக்கவில்லை, அவனுக்கு.

“நீங்க பணத்துக்காக கவலைப்பட்டீங்கன்னா, இவானுக்காக நான் எப்படியும் உழைத்து அவனை காப்பாத்துவேன். என்னால முடியும் தானே! உங்களுக்கும் அது தெரியும் தானே?”

‘உன்னை பற்றி எல்லாம் எனக்கு தெரியுமே! அதனால் தானே உனக்கு தெரியாமல் இதை தயாரிக்க சொன்னேன். ஆனால் இத்தனை சீற்றம் நான் எதிர்பார்க்கவில்லையே! எப்படி உன்னை சமாதனப்படுத்த போகிறேன்’ உள்ளுக்குள் ஆயிரம் ஓடினாலும் ஆர்யனால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை.

“ஆனா உங்க இழப்பை நான் எப்படி ஈடு செய்வேன்? இவானுக்கு சொத்து தேவையில்ல. நீங்க தான் வேணும்”

‘இவானுக்கு மட்டுமா அவன் தேவை? உனக்கு நான் தேவை இல்லையா?’ அவன் மனம் சுணங்கியது.

ஆவணத்தை மீண்டும் கையில் எடுத்து நீட்டிய ருஹானா “மத்தவங்க கிட்டே இதுக்கு நான் என்ன விளக்கம் கொடுக்க முடியும்? மாளிகையில எல்லாரும் என்னை எந்த பார்வைல பார்ப்பாங்கன்னு நீங்க யோசிக்கலயா? பணத்துக்காக தப்பா நடக்கற பெண் நான்னு எல்லாரும் நினைக்க மாட்டாங்களா? அதான் உங்களுக்கு வேணுமா?” என கேட்டுவிட்டு அதை தூக்கி அடித்தாள்.

அவளை பற்றி அவளே இழிவாக பேசவும் ஆர்யன் நா அசைந்துவிட்டது. அவளிடம் இன்னும் இரு அடி நெருங்கியவன் கோபமாக சொன்னான்.

“உன்னை அப்படி நினைக்க யாரும் தைரியம் வராது” என ஆர்யன் சொல்ல ருஹானாவின் கண்ணீர் வெளியே தெறித்து ஓடியது.

“இதுவரைக்கும் பெண்கள்னா விஷம் கக்கும் நாகம்னு தான் நான் நினைச்சிட்டு இருந்தேன். எந்த பெண்ணையும் நான் நம்பாட்டாலும் உன்னை மட்டும் நம்பினேன். ஏன்னா நீ… மத்த பெண்களை போல கிடையாது. எனக்கு தெரியும். நீ வித்தியாசமானவள்!”

அவள் கண்களுக்குள் ஊடுறுவி பார்வையை பதித்து அழுத்தமாக ஆர்யன் உரைத்த சேதியில், அவன் குரலின் தோரணையில் ருஹானா விக்கித்து நின்றாள்.

இன்னும் எத்தனை விதமாகத் தான் இவனும் அவன் மனதில் உள்ள காதலை சொல்வான்?

(தொடரும்)    

Advertisement