Advertisement

சல்மாவிடம் அலுவலக நிலவரத்தை கேட்டுக்கொண்ட கரீமா, உணவு மேசையில் அமர்ந்தபடி இங்குள்ளதை அவளுக்கு தெரிவித்தாள். நஸ்ரியா வரவும் பேச்சை நிறுத்தி போனை அடைத்தாள்.

“ருஹானாக்கு தட்டு வைக்க மறந்திட்டியா, நஸ்ரியா?”

“லிட்டில் சாரும், ருஹானா மேடமும் ஆர்யன் சார் கூட அவரோட அறையில சாப்பிடுறாங்க”

“ஓஹோ! அப்படியா! சரி நீ போ”

“அன்புப் பரிசு, சேர்ந்து உணவு, கம்பெனில பங்கு…. நச்சுப்பாம்பு நல்லா தான் திட்டம் போடுது. உன்னை எப்படி நசுக்கறதுன்னு எனக்கு தெரியும்” கரீமா கறுவிக்கொண்டாள்.

——-

“கண்ணே! நீ ஏன் காளானை சாப்பிடல? அதுல நிறைய புரோட்டீன் இருக்கே!”

“எனக்கு அது பிடிக்காது சித்தி!”

“ஆனா உனக்கு பிடிச்சது மட்டும் சாப்பிட்டா நீ எப்படி வளருவே? அப்புறம் காளான் மாதிரி குள்ளமா தான் இருப்பே”

முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டு அவள் சொல்லிய விதத்தில் ஆர்யன் பயந்து போனான். திகைப்பாக ருஹானாவை பார்த்தான். அவள் பார்வையோ இவான் மேல் தான் இருந்தது.

“சரி சித்தி! சாப்பிடுறேன்” என ஒதுக்கி வைத்த காளானையும் ஆம்லெட்டுடன் இவான் சாப்பிடவும் தான் ருஹானா முகத்தில் புன்னகை முளைத்தது.

திருப்தியான அவள் முகத்தையும், இவான் காளானை சாப்பிடுவதையும் பார்த்த ஆர்யனுக்கு, தன் அண்ணன் மகனை இவளைவிட யாராலும் சிறப்பாக வளர்க்க முடியாது என மீண்டும் ஒருமுறை உறுதியானது. சரியான கரத்தில் தான் இவான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறான், அவன் எதிர்காலம் பற்றி தான் இனி கவலைப்பட வேண்டியதில்லை என நிம்மதியடைந்தான்.

இவான் இரு சுட்டுவிரலையும், நடுவிரலையும் இணைத்து முடிவிலி சின்னத்தை தன் விரல்களில் கொண்டுவந்து “சித்தப்பா! பாருங்க, நான் இன்ஃபினிட்டியை தெரிஞ்சிகிட்டேன். சித்தி தான் சொல்லி தந்தாங்க” என்றான்.

‘யா அல்லாஹ்! இவான் இன்னும் எதையெல்லாம் சொல்லப் போகிறானோ?’ என ருஹானா திக்பிரமை அடைய, ஆர்யன் இவானிடம் கேட்டான்.

“முடிவிலின்னா என்ன சிங்கப்பையா?”

“முடிவிலின்னா அன்பு. அப்படித்தான் சித்தி சொன்னாங்க” என இவான் சொல்ல, ஆர்யன் அவள் முகம் பார்க்க, அவள் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

இவான் “சிறந்த அன்புக்கு முடிவே கிடையாது. சித்தி என்னை முடிவிலிக்கு மேல நேசிக்கிறாங்க. நான் சந்தோசமா இருக்கறதுக்காக சித்தி என்ன வேணும்னாலும் செய்வாங்க. உயிருக்கு உயிரா நேசிக்கறவங்க அவங்களுக்காக எதுவும் செய்யணுமாம், பயம் இல்லாம நெருப்புல கூட குதிப்பாங்களாம். உங்களுக்கு தெரியுமா சித்தப்பா?” என கேட்டான்.

ருஹானா மூச்சை கூட வெளியே விடாமல் முள் மேல் இருப்பதுபோல் அமர்ந்திருக்க,  ஆர்யன் “உன் சித்தி சரியா தான் சொல்லியிருக்காங்க, அக்னிசிறகே!” என்றான்.

“நெருப்புல குதிக்கறதா? எனக்காக நீங்க அப்படி செய்வீங்களா, சித்தப்பா?”

அதுவரை மென்மையாக இருந்த ஆர்யனின் முகம் தீவிரமானது. “ஆமா, உனக்காக எதுவும் நான் செய்வேன்.”

சிரிப்பை சிந்திய இவான் “சித்திக்காகவும் செய்வீங்களா?” என கேட்க, ருஹானா தலையை குனிந்து கொண்டாலும் ஆர்யன் சொல்வதை கேட்பதில் முழுகவனமும் வைத்தாள்.

ருஹானாவை நோக்கிய ஆர்யன் “செய்வேன்!” என்றான் தலையை ஆட்டியபடி. ருஹானா நிமிர்ந்து ஆர்யனை பார்த்தாள்.

“முடிவிலி வரைக்கும்?” இவான் இன்னும் அவர்களை அவர்களுக்கு தெளிவுபடுத்தினான்.

“ஆமா, முடிவிலி வரைக்கும்” ஆர்யனும் பின்வாங்கவில்லை.

“ஏன்னா?….” என இழுத்த இவான் “சித்தி! நீங்க சொல்லுங்க” என்றான்.

வாய் திறக்க சிரமப்பட்டாலும், ருஹானா இவானை மறுக்காமல் “ஒருத்தர் மேல அளவுக்கு அதிகமா அன்பு வச்சிருந்தீங்கனா, அவங்களுக்காக எதையும் செய்வீங்க” என சொல்லி முடித்தாள்.

நிலையான முடிவில்லா ஒளியையே

கதிர்களாய் வழங்குகிறான் ஆதவன்!

அவ்வுயிர் வெப்பம் பெறவேண்டி

தன்னையே சுழற்றி தானும் சுழன்றும்

முன்னும்பின்னும் இங்குமங்கும்

பரந்து விரிந்த நிலம் நீர் எங்கும்

பரவச் செய்கிறது பூமிப்பந்து!

ஒளியும், சுழற்சியும் முடிவில்லாதுபோல்

தாய் அன்பிற்கோர் முடிவுண்டோ?

தந்தையின் அரவணைப்புக்குத்தான் எல்லையுண்டோ?

ஆர்யனின் நோக்குவர்மத்தை தாங்க இயலாத ருஹானா சட்டென்று எழுந்துகொண்டு இவானையும் அழைத்தாள். “சாப்பிட்டு முடிச்சிட்டியா, அன்பே? வா போகலாம். உன் சித்தப்பா ஓய்வு எடுக்கட்டும்” என கூப்பிட, அவனும் எழுந்து அவளோடு நடந்தான்.

‘அதற்குள்ளாகவா உணவு தீர்ந்தது? இன்னும் என்ன சொல்லி இவளை நிறுத்த?’ என ஆர்யன் ஏங்க “நீ உன் ரூம்க்கு போ. நான் உன் சித்தப்பாக்கு மாத்திரை கொடுத்துட்டு வரேன்” என அங்கேயே தேங்கினாள்.

இவான் தலையாட்டி செல்ல, ஆர்யன் உடலில் புது ரத்தம் வேகமாக ஓடியது.

மாத்திரையும், தண்ணீரையும் எடுத்து கொடுத்தவள் “அவன் சின்ன குழந்தை. அவனுக்கு ஏத்த மாதிரி நாம சொல்றதை புரிஞ்சிக்கிறான்” என்றாள், இவான் பேசியதற்கு விளக்கம் போல.

“உண்மையான கருத்து என்ன?” மாத்திரையை கையில் வாங்கியவன் கேட்டான்.

“உண்மையான கருத்தா?”

“நீ தானே சொன்னே, அவனுக்கு புரியறது மாதிரி எடுத்துக்கிட்டான்னு. உண்மையில நீ அவன்கிட்டே என்ன சொன்னே?” மாத்திரையை விழுங்கினான்.

“நானா?” என கேட்டவள் எதுவும் சொல்ல முடியாமல் நின்றாள்.

“நீ சொல்றதை நானும் ஒப்புக்கறேன். ஐந்து மாதங்களுக்கு முன்னே வலிமையான உணர்வு எதுன்னு என்கிட்டே கேட்டுருந்தா நான் கோபம்ன்னு தான் பதில் சொல்லியிருப்பேன். ஆனா இப்போ என்னால அப்படி சொல்ல முடியாது. முடிவில்லாத உணர்வு எதுன்னு கேட்டா அன்பு,  நேசம், காதல்…” என்று ஆர்யன் சொல்ல, ருஹானா விழிவிரித்து பார்க்க, சின்ன இடைவெளி விட்டு “அப்படின்னு அந்த எழுத்தாளர் சொல்றது போல” என முடித்தான்.

ருஹானா ரகசியமாக பெருமூச்சு விட, அவர்களின் ஏகாந்த தனிமையை தொல்லைபேசி மணி அடித்து கெடுத்தது. எரிச்சலாக போனை எடுத்த ஆர்யன் அழைத்தது யார் என தெரிந்ததும் இன்னும் எரிச்சலானான்.

“ஹல்லோ!”

“நான் மிஷால் பேசுறேன். நான் உன்னை உடனே பார்க்கணும். இது ருஹானாக்கு தெரிய வேணாம். கிரீன் பார்க் பக்கத்துல இருக்கிற சதுக்கத்துக்கு வரியா?”

“வரேன்!” என்ற ஒற்றை வார்த்தையில் ஆர்யன் போனை நிறுத்தினான்.

இதுவரை இனிமையாக இருந்த ஆர்யன் முகம் நொடியில் கடுமையாக மாறியது கண்டு ருஹானா “எதும் பிரிச்சனையா?” என கவலையோடு கேட்க, “ஒரு வேலையை முடிக்கணும். ஒன்னு, ரெண்டு மணி நேரத்துல வந்திடுவேன்” என ஆர்யன் சொன்னான்.

“இன்னும் உங்களுக்கு காயம் ஆறல. இந்த வேலையை தள்ளி போட முடியாதா?”

“எனக்கு ஒண்ணுமில்ல. அதிக நேரம் எடுக்காது. சீக்கிரம் முடிச்சிட்டு உடனே திரும்பி வந்துடுவேன்”

நிலைத்த நீடித்த உறவிற்கு ஒருவரையொருவர் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிந்து கொள்ளும் படலம் தான் இருவரிடையே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

———

“வா சல்மா! நீ சொன்னது எல்லாம் நெஜம் தானா?”

“அக்கா! கம்பெனில இருந்து ஒரு பங்கு சூனியக்காரிக்கு கொடுக்க பத்திரங்கள்லாம் ரெடி ஆகிடுச்சி. இன்னைக்கு ஆர்யன் கையெழுத்துக்கு அது இங்க வருது.”

“இவ தன்னோட தகுதிக்கு மேல ஆசைப்படுறா. அர்ஸ்லான் கம்பெனில இருந்து எங்கிருந்தோ வந்தவளுக்கு சொத்து போகுதா? நான் இதை அனுமதிக்கவே மாட்டேன்.”

“நீ ரொம்ப லேட் அக்கா. நான் ஆயிரம் முறை உனக்கு சொல்லிட்டேன். நீ தான் காதுல போட்டுக்கவே இல்ல. ஆர்யன் அவ காதல் வலைல எப்பவோ விழுந்திட்டான். நான் சொன்னதை நீ லட்சியம் செய்யல. இப்போ காசுக்கு போய் தவிக்கிறே! ஆர்யன் என்ன உன்கிட்டயா வந்து கேட்க போறான், யாருக்கு சொத்து கொடுக்கறதுன்னு?”

“எனக்கு புரியவே இல்ல. இவ அப்படி என்ன செய்திட்டா, இத்தனை சொத்தை ஆர்யன் தூக்கி கொடுக்க?”

“ஆனா இது அவளுக்கு தெரியவே தெரியாது. ஆர்யன் அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டம் போடுறான், அக்கா. அது தான் எனக்கு கொஞ்சம்கூட தாங்கிக்க முடியல.”

சல்மா சொன்னதை கேட்ட கரீமாவின் மூளை சுறுசுறுப்பானது. “என்ன செய்யணும்னு எனக்கு தெரிஞ்சிடுச்சி. இதை எப்படி முறியடிக்க போறேன் பார் சல்மா. ஒத்த பைசா கூட அவளுக்கு கிடைக்க விடாம நான் செய்வேன்.”

“எப்படி, அக்கா? இப்போ லாயர் பத்திரங்களோட வரப் போறா. ஆர்யன் கையெழுத்து போடப் போறான். நீ என்ன செய்ய முடியும்?”

“நான் இல்ல.. அந்த சித்தியே செய்வா. அவளோட தன்மானத்துல அடிக்க போறேன். அவ அக்கா தஸ்லீம் போல தான் இவளும். அடிமட்டத்துல இருக்கறவங்க வீண் பெருமை, தன்மானம், நேர்மைனு ஒன்னுக்கும் உதவாத குணங்களை பிடிச்சிட்டு தொங்கிட்டு இருப்பாங்க. நாம சரியா காய் நகர்த்தினா அவளை ஆர்யன்கிட்டே இருந்து கூட பிரிச்சிடலாம்.”

சல்மாவிற்கு ஆவல் தாங்கவில்லை. “பிரிக்கறதா! எப்படிக்கா?”

“ஆர்யன் கையெழுத்து போடறதுக்கு முன்ன அந்த பத்திரத்தை ருஹானாவை பார்க்க வைக்கணும். அதுக்கு முன்ன நான் சொல்றது போல நீ ஒரு சின்ன வேலை செய். மத்தது நான் பார்த்துக்கறேன்.”

——–

கையில் வைத்திருந்த புத்தகத்தில் ஒரு கண்ணும், கடிகாரத்தில் ஒரு கண்ணுமாக இருந்த ருஹானா “இன்னும் காணோமே? எங்க போனார்? சரியா நடக்க கூட முடியாதே!” என தவித்தாள். செல்பேசியை எடுத்து ஆர்யனை அழைக்க போனவள் ஒரு விநாடி தயங்கினாள். பின் தயக்கம் உதறி அழைப்பெடுக்க விரலை அழுத்தப் போக கதவு தட்டும் சத்தத்தில் நிறுத்தினாள்.

எப்போதும் திருப்பி கொண்டு செல்லும் சல்மா தன் அறைக்குள் வந்ததை ஆச்சர்யமாக பார்த்த ருஹானா “என்ன சல்மா? எதும் பிரச்சனையா?” என கேட்டாள்.

“எனக்கு ஒரு உதவி செய்வியா?” சல்மா அலட்சியமாக கேட்டாள்.

“செய்றேனே! என்ன?”

“என்னோட ஆடை அலமாரிய நான் மாத்த போறேன். எனக்கு தேவையில்லாத துணியை கழிக்க போறேன். நான் ஒருமுறை கூட போடாத உடைகளும் அதுல இருக்கு. நீ வாழ்ந்த இடத்துல இதெல்லாம் தேவைப்படற ஏழைங்க நிறைய பேர் இருப்பாங்க தானே? அவங்களுக்கு கொண்டு போய் கொடுக்கறியா? அவங்க கூடலாம் இன்னும் தொடர்புல இருக்கியா? இல்ல, பணக்கார வாழ்க்கை கிடைச்சதுன்னு விட்டு விலகிட்டியா?”

“நான் இன்னும் அவங்கள…” ருஹானாவை பேச விடவில்லை சல்மா.

“நான் உன்னை தப்பு சொல்ல மாட்டேன். எனக்கு புரியுது. இங்க நீ புது வாழ்க்கை ஆரம்பிச்சிட்டே. உன் பழைய சொந்தங்களை திரும்பி கூட பார்க்க மாட்டே தானே? இங்க நீ கனவுலயும் நினைச்சி பார்க்காத ஆடம்பர வாழ்க்கை, பெரிய மாளிகை, கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரங்க,…. உனக்கு பெரிய அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு.”

நடந்துக்கொண்டே சல்மா ருஹானாவை கேவலமாக பேச ருஹானாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

“குப்பைமேட்டுல இருந்து தப்பிச்சி கோபுரத்துல வந்து உட்கார்ந்துட்டே. இது மாதிரி மாயாஜால கதைகள்ல தான் நடக்கும். இனிமேல் நீ உஷாரா இருப்பே. உன் அதிர்ஷ்டத்தை காப்பாத்த நினைப்பே. இந்த வசதியான, சுகமான வாழ்க்கை நிலைக்க நீ எதுவும் செய்வே. சரிதானே?”

சல்மாவில் பேச்சில் புண்பட்ட ருஹானா இவளுக்கு பதில் சொல்லாமல் போனால், இன்னும் ஏளனம் செய்வாள் என நினைத்தவள் கம்பீரமாக தன்னை பற்றி எடுத்து சொன்னாள்.

“நான் இங்க வெறும் விருந்தாளி மட்டும் தான்.  நான் முன்னாடி வாழ்ந்தது பாசமானவங்களுக்கு மத்தியில நிம்மதியான வாழ்க்கை. அது குப்பை மேடு இல்ல. அன்பான மகிழ்ச்சியான சொர்க்கம். எனக்கு எந்த ஆடம்பரமும் தேவை இல்ல. அது மேல எனக்கு அக்கறையும் இல்ல. இங்க இவான் மட்டும் தான் என்னோட சொத்து. நான் அவனை போய் பார்க்கணும்.”

ருஹானா வெளியேறிவிட சல்மா வெற்றிகரமாக அக்கா சொன்ன வேலையை தான் முடித்தது நினைத்து பெருமையாக சிரித்தாள்.

——–

Advertisement