புயல் காற்றில் விளக்காகவே

                                                            அத்தியாயம் – 93

ஆர்யன் தன் கையில் கொடுத்த முடிவிலி சின்னத்தின் மேற்புறத்தை ருஹானா அவனைப் போலவே விரல் கொண்டு தடவினாள். அத்தனை மூர்க்கமாக இருந்த ஆர்யன் இத்தனை சாத்வீகமாக மாறியதை கண்கூடாக கண்டவளுக்கு தனது ஆனந்தத்தை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. அனிச்சையாக உதட்டில் புன்னகை மலர்ந்தது.

முடிவிலி பற்றி அறிந்து கொண்டதாக தெரிவித்த ஆர்யன் அதை தேடப் போவதாக சொல்லியதும் அவனுக்கு ஊக்கம் தந்தாள். “எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க அதை கண்டுபிடிச்சிடுவீங்க. தேடுறதை நிறுத்தாதீங்க” என அவனை பார்த்து சொன்னவள், சற்று தயங்கி “ஆனா இது உங்களோட பொக்கிஷம். இதோட முக்கியத்துவம் ரொம்ப பெருசு. எனக்கு….. நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என மறுத்தாள்.

அவளை கெஞ்சுதலாக பார்த்தவன் “ஆனா இது உன்கிட்டே தான் இருக்கணும்னு நான் விரும்பறேன்” என்றான்.

“என்னோட பொறுப்பு மாதிரியா?”

“அப்படித்தான்னு நான் சொன்னா நீ இதை வாங்கிக்குவியா?”

“ஹூஹூம்”

“நீ கடனை திருப்பி செலுத்தினா ஏத்துக்குவியா?”

“ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?”

“கடனுக்கு கால அவகாசம் இருக்கு. நீ ஒருநாள் அதை திருப்பித் தந்தே ஆகணும். ஆனா பொறுப்பு?”

“பொறுப்பு?”

“ஒருத்தன் தன்னோட உயிரை உன்கிட்டே தர்ற அளவுக்கு உன் மேல நம்பிக்கை வைக்கிறான், அவனோட நேசத்துக்குரியவங்களை ஒப்படைக்கிறான், அவனோட ஆகப்பெரிய ரகசியத்தை சொல்றான், அவனோட உள்மன பயத்தை தெரிவிக்கிறான், மத்தவங்ககிட்ட சொல்லமுடியாத தன்னோட விருப்பத்தை சொல்றான்…”

உதாரணங்களை நிறுத்தி நிதானமாக சொன்ன ஆர்யன் ‘இதையெல்லாமே நான் உனக்கு செய்துவிட்டேனே!’ என்பது போல அவளை உற்று நோக்கினான்.

“இது எதுக்குமே முடிவு தேதி கிடையாது” என்று சொன்ன ஆர்யன் அவள் கையில் இருந்த முடிவிலியை எடுத்துக்கொண்டான்.

“இவான் மேல உனக்கு இருக்குற அன்புக்கு கால அளவு இருக்கா? இல்ல கடனை தீர்ப்பது போல அவனுக்கு உன்னோட அன்பை திருப்பி செலுத்துவியா?”

ருஹானா இல்லை என வேகமாக தலையாட்ட, அவள் கையை பற்றி முடிவிலியை அவள் உள்ளங்கையில் வைத்தவன், அவள் விரல்களை  மடக்கி அதை மூடி தன் கை கொண்டும் அதன் மேல் மூடிக்கொண்டான்.

“அதனால இதை கடனைப் போல அல்ல, திருப்பி செலுத்தமுடியாத வாழ்நாள் பொறுப்பா இதை ஏத்துக்கோ” என விளக்கி சொன்னவன் “இப்போ நீ வாங்கிக்குவியா?” என கேட்டான்.

“நிச்சயமா!” என அவள் சொல்ல, அவன் முகம் பெரிதாக மலர்ந்தது.

அவள் கை மேல் இருந்த தன் கையை அவன் எடுக்கவும் “லேட்டாகிடுச்சி. நான் போறேன். குட்நைட்” என ருஹானா சென்றுவிட்டாள்.

அதே மலர்ச்சியுடன் நெடுநேரம் கதவை பார்த்தபடி நின்றவன் மனதில் ‘நான் உன்னில் தொலைந்த பின்னே புன்னகைக்கவும் கற்றுக்கொண்டேன்’ என்ற எண்ணம் ஓடியது.

———–

கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ருஹானா முடிவிலியை பார்த்துக்கொண்டு தூங்காமல் விழித்திருக்க, ஆர்யனும் புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு ருஹானா வாசித்த பக்கங்களை திருப்பி திருப்பி படித்துக் கொண்டிருந்தான்.

‘இருவர் ஒருவராவது தான் காதலா? நேரத்தை நிறுத்தும் வல்லமை அதற்கு இருக்குமா? காலம் கடந்தும் அமரத்துவம் பெறுமா?” என வாய்விட்டு கேட்டுக் கொண்டான்.

———-

“ஹல்லோ அக்கா, காலைல ஆபீஸ் வந்ததுமே ஒரு கெட்ட செய்தி. அந்த பிச்சைக்காரிக்கு ஆர்யன் நம்ம கம்பெனியோட ஷேர்ஸ் கொடுக்கப் போறான். இது அவளுக்கு கூட தெரியாது.”

“என்னது? இது எப்படி நடக்க முடியும்? சல்மா, நீ சரியா தான் தெரிஞ்சிகிட்டியா? இன்னும் அங்க நல்லா விசாரி. நானும் சித்திகாரிக்கு எதும் தெரியுமான்னு பார்க்கறேன்.”

———

கண்ணாடி முன்னாடி அமர்ந்து தலை சீவி முடித்த ருஹானா மேசையில் இருந்த முடிவிலியை பார்த்து புன்னகைத்தாள். அதை கையில் எடுக்கும்போது இவான் அவள் அறைக்குள் ஓடிவந்தான்.

“சித்தி! நான் இன்னைக்கு சித்தப்பா கூட காலை உணவு சாப்பிடவா?”

“நீ அவரை சோர்வடைய செய்யாம சாப்பிடறதா இருந்தா சரி, கண்ணே!”

“நான் சித்தப்பாவை தொந்தரவு செய்ய மாட்டேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து உணவு தயாரிக்கலாமா?”

“சரி, அன்பே” என ருஹானா இவானின் கையை பிடித்து முத்தமிட, அவள் கையில் இருந்த முடிவிலியை அவன் பார்த்து கேட்டான். “சித்தி! இது என்ன?”

“இது முடிவிலி சின்னம், தேனே!”

“முடிவிலின்னா என்ன சித்தி?”

“அப்படினா எப்பவும் முடிவே இல்லாதது”

“எப்பவுமா?”

“ஆமா! உதாரணமா அன்பு. உன்மேல நான் வச்சிருக்கும் அன்புக்கு எல்லையே கிடையாது. வலிமையானது. உனக்காக நான் எதுவும் செய்வேன். உன்னோட மகிழ்ச்சிக்காக நான் செய்யக் கூடாதது எதுவுமே இல்ல. உனக்கு புரியுதா, தேனே? நீயும் யாரையாவது நேசிக்கும்போது அவங்களுக்காக எதுவும் செய்வே”

அப்போது கரீமா அறை வாசலில் வந்து நின்றாள்.

“இது எங்க இருந்து வாங்கினீங்க சித்தி?”

“நான் வாங்கல செல்லம். உன் சித்தப்பா கொடுத்தார்”

ருஹானா சொன்னதை கேட்ட கரீமாவின் முகம் விகாரமானது. ‘அந்த அளவுக்கு போய்விட்டதா? இதை எப்படி நான் கவனிக்காமல் விட்டேன்?’ என உள்ளுக்குள் பொருமினாள்.

அதற்குள் ருஹானா அவளை பார்த்து எழுந்து வர, “ருஹானா டியர்! உணவு மேசைக்கு வரலயா நீ?” என அன்பொழுக கேட்டாள்.

“இதோ வந்திட்டேன், கரீமா மேம்! இவான் அவன் சித்தப்பா கூட சாப்பிடப் போறான். அவங்களுக்கு உணவு கொடுத்துட்டு வரேன்.”

“எல்லாம் சரியா தானே போயிட்டு இருக்கு, டியர்? ஒன்னும் பிரச்சனை இல்லயே?”

“இல்லயே கரீமா மேம்! ஏன் இப்படி கேட்கறீங்க?”

“இல்ல, என் கண்ணுக்கு நீ வாட்டமா தெரியறே! அதான் கேட்டேன். சரி உணவு மேசைல சந்திப்போம்” என சொல்லி, இவான் தலையை அன்பாக தடவிவிட்டு கரீமா சென்றாள்.

“வா கண்ணே! நாம கிச்சனுக்கு போகலாம்” என ருஹானா இவானை கைப்பிடித்துக் கூட்டிப்போனாள்.

——–

ஆர்யன் அலுவலக அறையில் சோபாவில் அமர்ந்து ரஷீத்திடம் போனில் பேசிக்கொண்டிருந்தான். “இன்னைக்கே பங்கு மாற்றம் நடக்கணும். மத்த வேலைகளை நிறுத்திட்டு உடனே இதை பாரு. முடிச்சிட்டு லாயரை இங்க அனுப்பு”

கதவு தட்டப்பட்டு ருஹானாவும் இவானும் கைகளில் தட்டுக்களோடு வருவதை பார்த்தவன் “நான் அப்புறம் பேசுறேன், ரஷீத்!” என வைத்துவிட்டு இவர்கள் இருவரையும் பூரிப்பாக பார்த்தான்.

“இவான் உங்க கூட சாப்பிட விரும்பறான். அவனே உங்க உணவை ரெடி செய்தான். நானும் கொஞ்சம் அவனுக்கு உதவி செய்தேன் தான்.”

“சித்தப்பா! சித்தி சும்மா சொல்றாங்க, நம்பாதீங்க. இந்த ரொட்டியை மட்டும் தான் தூக்கிட்டு வந்தேன். நான் என்ன செய்தேன் சித்தி?”

“என்ன செய்தியா? தக்காளியை கழுவி கொடுத்தியா? முட்டையை அடிச்சி கொடுத்தியா? காளானை ஃப்ரிட்ஜ்ல இருந்து எடுத்து தந்தியா?”

அவர்களின் அன்பு சண்டையை ஆர்வமாக பார்த்த ஆர்யன் புன்னகை செய்தான். முன்னே வந்த ருஹானா ட்ரேவை ஆர்யனுக்கு முன்னால் இருந்த டீப்பாயில் வைத்துவிட்டு “நீங்க சாப்பிடுங்க. வேற எதும் வேணும்னா என்னை கூப்பிடுங்க. இனிய உணவு!” என சொல்லி கதவை நோக்கி நடந்தாள்.

ஆர்யன் மிகவும் ஏமாற்றமாக அவளை பார்க்க, இவான் “சித்தி! நீங்களும் எங்க கூட சாப்பிட வாங்க” என அழைத்து, ஆர்யனின் படபடக்கும் நெஞ்சை குளிர வைத்தான்.

ருஹானா என்ன செய்ய என முழித்து நிற்க, இவான் திரும்பவும் அவளை வற்புறுத்த, அவள் ஆர்யனை நோக்க, அவன் கண்ணால் கெஞ்சி தலை சாய்த்து அசைத்து அவளை அழைத்தான்.

“நீ கூட இருக்கலனா இவான் குறைவா சாப்பிடுவான்” இவானை சாக்கிட்டு ஆர்யன் தன் விருப்பத்தை நிறைவேற்றப் பார்க்க “சரி!” என்ற ருஹானா பக்கவாட்டு சோபாவில் வந்து அமர்ந்தாள். பெரிய புதையலே கிடைத்தது போல ஆர்யன் மனம் துள்ளாட்டம் போட்டது.

ஆர்யன் இருந்த சோபாவில் இவான் வந்து அமர, ஆர்யனும் உட்கார்ந்தபடியே இவான் பக்கம் நகர்ந்தான், வலியால் லேசாக முகத்தை சுருக்கியபடி.

“உன்னோட டீ எங்க?” என ஆர்யன் கேட்க, ருஹானா வேகமாக எழுந்தாள். “நான் போய் கொண்டு வரேன்”

“போகாதே! நஸ்ரியாவை கொண்டு வர சொல்லலாம். நீ போகாதே!” என ஆர்யன் அவளை கனிவாக கேட்டுக்கொள்ள, ருஹானா தர்மசங்கடமாக திரும்ப அமர்ந்தாள். சில நிமிடங்கள் கூட அவளுடன் இருக்கும் வாய்ப்பை அவன் தவறவிட விரும்பவில்லை.

அவள் கரண்டிகளையும், முள்கரண்டிகளையும் எடுத்து வைக்க, ஆர்யன் அவனுடைய தட்டில் இருந்த உணவில் பாதியை எடுத்து இன்னொரு காலி தட்டில் பறிமாறினான். அதில் ஒரு முள்கரண்டியும் வைத்து அவள் முன்னே வைத்தான்.

“நான் போய் எனக்கு இன்னொரு தட்டுல எடுத்துட்டு வரேனே!” என ருஹானா தயக்கமாக சொல்ல, “இங்க இருக்கறது உனக்கு பத்தாதுன்னா போய் இன்னும் எடுத்துக்கலாம். இது நம்ம ரெண்டு பேருக்கும் போதும். ஆனா என் தட்டுல இருந்து நீ சாப்பிட மாட்டேன்னா வேற எடுத்துக்கலாம்” என ஆர்யன் அவளை பார்த்துக்கொண்டே சொல்ல, ருஹானா வேகமாக குறுக்கிட்டாள்.

“ஏன் மாட்டேன்?” என சத்தமாக சொன்னவளுக்கு அதன் பிறகே தன் வேகம் அதிகப்படி என தோன்றியது. சத்தத்தை குறைத்துக்கொண்டு “ஆனா என்னால நீங்க சரியா சாப்பிடாம போனா? நீங்க குணமாக நல்லா சாப்பிடணுமே!” என்றாள்.

சந்தோஷமான ஆர்யன் “நான் தான் சொன்னேனே. இங்க நம்ம ரெண்டு பேருக்கும் தேவைக்கு அதிகமாவே இருக்கு. நீ போகாதே” என்றான், மீண்டும்.

ருஹானாவிற்கு புத்தகத்தின் வரிகள் ‘உனக்காக காலத்தை நிறுத்தக்கூடியவரை கண்டுபிடி’ நினைவுக்கு வர, அவள் ஆர்யனையே பார்க்க, இவானுக்கு ஆம்லெட்டை எடுத்து வைத்து கொண்டிருந்த ஆர்யன் அவளிடம் அசைவு தெரியாததை கண்டு அவளை பார்த்தான்.

அவள் தன்னையே பார்ப்பது கண்டு மகிழ்ந்து போனவன் சாப்பாட்டில் கவனம்போல் பாவனை செய்தான். ‘என்னிடம் மொழியில் பேசு, காந்தவிழியில் பேசி என்னை வீழ்த்திடாதே’ என மனதில் கேட்டுக் கொண்டான். அது அவளது செவியை சேர்ந்திடுமா?

——–