Advertisement

அந்த சமயம் அவள் உள்ளே வந்தாள். “பிடித்ததா புத்தகம்? உடம்பு சரியில்லாதபோது படிக்க வேண்டிய புத்தகம் இல்லை இது.”

“ஆமா, நல்லா இருக்கு. சில பக்கங்கள் புரட்டினேன். படுத்த நிலையில் படிக்க சிரமமாய் இருக்கு. உன்னால எனக்கு வாசித்துக் காட்ட முடியுமா.?”

தயங்கினாலும் அவன் எதிரே கட்டிலில் அமர்ந்தாள்..

படிக்க வசதியாக இல்லாத ஆர்யனுக்கு அவளை பார்க்க மட்டும் வசதியாக நேராக அமர்ந்துக் கொள்ள முடிந்தது.

அவள் விரல் அவன் விரலை தொட்டது. இருவருமே அதை இனிமையாக உணர்ந்தனர்.

“எது வரைக்கும் படிச்சி இருந்தீங்க?”

“காலம் என்ற வார்த்தையில இருந்து தொடங்கு”

அவன் எடுத்து கொடுத்த வாக்கியத்திலிருந்து வாசிக்க துவங்கினாள்..

காலம் நகர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னொரு பரிணாமத்தில் நான் உலகை சுற்றிக் கொண்டு இருக்கிறேன், நாங்கள் இருவர் மட்டுமே இருக்கும் உலகத்தை…

உலகின் மற்றுமொரு அதிசயம் என நான் அவனை வியந்து கொண்டிருக்கிறேன். 

ஓர் இரவின் பொழுதில் அவன் வீட்டின் எல்லா கடிகாரங்களையும் நிறுத்தினான். சுவர் கடிகாரத்திலிருந்து என் கைக்கடிகாரம் வரை… 

பின்னும் அவன் பார்வை மேசை மேல் இருந்த மணற்கடிகாரத்தின் மேல் படிந்தது.அதை நேராக நிறுத்தாவிட்டால் நேரம் காட்டாதே, பின் அதை ஏன் பார்க்கிறாய்?” என நான் கேட்டேன்.

என் சொல் அவன் காதில் விழவில்லை.. எழுந்து சென்று மணற்கடிகாரத்தை சாய்த்து படுக்க வைத்தான்.

ஏன் நேரத்தை நிறுத்துகிறாய்?“ என நான் கேட்டேன். 

அவன் என் கண்களை பார்த்து சொன்னான்.

ருஹானாவின் கண்களும் ஆர்யனின் கண்களும் சந்தித்து கொண்டன. அவள் குரல், ஏற்ற இறக்கங்களுடன் அவள் வாசித்த அழகு, அதில் கலந்த இதம் அவனை சுருட்டி மடக்கியிருந்தது. ஒவ்வொரு வார்த்தையும் அவள் வாசிக்கும்போது அவளுடைய’ முகபாவனையை கவனித்தபடியே அவன் கேட்டிருக்க அவள் தொடந்து வாசித்தாள்.

ஏன் என்றால் உன்னுடன் கழிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் எனக்கு அற்புதமானவை. இந்த வீட்டில் உன்னுடன் காலம் கடந்தும் நான் இருக்க விரும்புகிறேன்என்றான்.

நான் திரும்பி அந்த மணற்கடிகாரத்தை பார்த்தேன். இரு பகுதிகளாக இருந்த அதை நடுவில் ஓடிய மணல் ஒன்றாக இணைத்திருந்தது. 

அது எங்களை போலவே இருந்தது… அச்சு அசல் எங்களை போலவே!

படிப்பதை நிறுத்திவிட்டு புத்தகத்தை மூடிய ருஹானா, உள்ளே படபடத்தாலும் அமைதியாக அமர்ந்திருக்க அவளை பார்த்து ஆர்யன் கேட்டான். “உண்மையில் இப்படித்தான் இருக்குமா?”

ருஹானா வாய் திறக்கவில்லை. மறுபடியும் கேட்டான். “இந்த காதல்… இப்படியா இருக்கும்?”

தயங்கினாலும் “எனக்கு தெரியலயே!” என்றாள். அவள் மனதை பயம், பதட்டம், இனம்புரியா மகிழ்ச்சி அத்தனையும் சூழ்ந்து கொண்டது.

“எனக்கும் தெரியல. ஆனா இது போல தான் இருக்கும்னு நினைக்கிறேன். நேரத்தையே நிறுத்துற அளவுக்கு முக்கியமானதா இருக்கணும்” என அவளை பார்த்துக்கொண்டே சொல்ல, ருஹானா அவன் பார்வையை தவிர்த்தாள். இருவருக்குமே முதல் காதல் தானே! இனங்கண்டு கொள்ள தெரியவில்லை.

“எழுத்தாளர் சொல்றார், உன்னில் பாதியா இருக்கறவங்களை தேடு. யாரு உனக்காக நேரத்தை நிறுத்துறாங்களோ அவங்களை கண்டுபிடி” என ஆர்யன் புத்தகத்தின் சாராம்சத்தை புரிந்து கொண்டு சொல்ல, ருஹானா அவன் சிந்தனையை திசை மாற்ற விரும்பினாள்.

எழுந்து புத்தகத்தை மேசையில் வைத்தவள் “தசைகள் இறுகாமல் இருக்க டாக்டர் உங்களை நடக்க சொன்னாரே?” என்றாள்.

ஆர்யன் சிரமப்பட்டு எழுந்துக் கொள்ள பார்க்க அவனால் முடியவில்லை. “நீ எனக்கு உதவி செய்வியா?”

முன்பு அவள் உதவி வேண்டாம் என எட்டி நிறுத்தியவன், இப்போது அவனே அவளிடம் உதவி கேட்டு அருகே அழைக்கிறான்.

அவள் சங்கடத்துடன் அவன் தோளை பற்றி எழுப்ப, வேகமாக எழ முயற்சி செய்த ஆர்யன் கட்டிலில் சாய்ந்து விட்டான். ருஹானாவும் அவன் மேல் லேசாக சாய, கட்டிலில் மறுகையை ஊன்றி கொண்டாள்.

காந்தமும் இரும்பும் ஒட்டிக்கொள்ள, காந்தமே முதலில் சுதாரித்தது. எழுந்து நின்றவள் ஆர்யனின் முழங்கையை பற்றி மெல்ல வெளியே அழைத்து வந்தாள்.

——

“நிஸாம்! ஆர்யன் இப்போ ஓய்வுல இருக்கான். பார்க்க முடியாது” வாசல் கதவை முழுதும் திறக்காமல் கரீமா கண்டிப்பாக சொல்ல, மனைவியுடன் வந்த நிஸாம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

“ஒரே ஒரு முறை பார்த்துட்டு போயிடுறோம். அவர்கிட்டே மன்னிப்பு மட்டும் தான் கேட்கணும்.”

——-

“இந்த வேகம் போதுமா? நான் உங்க கூடவே நடந்து வரேன். இல்ல.. நான் வேகமாக நடந்துட்டேன் போல” என ருஹானா ஆர்யனை சிறுகுழந்தை போல அழைத்து வர, அவன் அவளை பார்த்தபடி நின்றுவிட்டான்.

“இல்ல.. இது சரி இல்ல.. தையல் பிரியற அபாயம் இருக்கு. இதுக்கு மேல நடக்குறது ஆபத்து. வாங்க அறைக்கு போலாம்” என அவள் கலவரம் அடைய, அவளை தடுத்த ஆர்யன் “எனக்கு ஒன்னும் இல்ல. நீ வாசித்ததை யோசித்தேன்” என்றபடி நடந்தவன் மாடிப்படியருகே வந்தான்.

“இனி கைப்பிடியை பிடிச்சிக்கங்க. நான் உங்க பக்கத்துலயே வரேன்” என ருஹானா விலகி அவன் பின்னால் வர, ஆர்யனை பார்த்த கரீமா “ஐயோ! இதென்ன சோதனை?” என முனகியவள், “நீங்க அப்புறமா வாங்க” என நிஸாம் தம்பதியினரை அனுப்ப பார்த்தாள்.

“அண்ணி! நான் இங்க தான் இருக்கேன்” என ஆர்யன் குரல் கொடுக்க, “ஆர்யன் டியர்! நீ தூங்கலயா?” என கரீமா கேவலமான சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

“நஸ்ரியா! இவங்களை உள்ளே கூட்டிட்டு போ!” கரீமா அழைக்க, ருஹானா தானே முன்வந்தாள், “நான் அவங்களை கவனிக்கிறேன்!” என.

ருஹானாவை முறைத்து பார்த்த கரீமா அப்படியே நிற்க, கை நிறைய கோப்புகளுடன் வந்த சல்மா “என்னக்கா ஏன் வாசல்லயே நிற்கிற?” என கேட்டாள். “நிஸாமும் அவன் மனைவியும் வந்திருக்காங்க. ஆர்யனுக்கு இப்போ எல்லா உண்மையும் தெரிய போகுது” என கரீமா சொல்ல, எரிச்சலான சல்மா அக்காவையும் அழைத்துக் கொண்டு மாடிவளைவில் போய் நின்றுக்கொண்டு கீழே நடப்பதை பார்க்கலானாள்.

ஆர்யனிடம் நிஸாம் மனம் கசிந்து மன்னிப்பு கேட்டான். “தூக்கிவிட்ட கையையே நான் உடைச்சிட்டேன், சார். என்னோட மகன் உயிரைத் தவிர வேற எதுக்கும் நான் அடிபணிந்திருக்க மாட்டேன். என் உயிர் போனாலும் சரி இப்படி செஞ்சிருக்க மாட்டேன். என் நாக்கை அறுத்து அவங்க முன்னால தூக்கி போட்டுருப்பேன்”

எதிரே அமர்ந்து அழும் அவனை பார்த்த ஆர்யன் “நிஸாம்! இங்க பாரு! வாழ்க்கையில மூணு விசயங்களை நாம விட்டு தரவே கூடாது. உன்னோட உயிர், உன் மனைவி, உன் குழந்தை. நீ சரியா தான் செஞ்சிருக்கே. உன் மகனை காப்பாத்தி இருக்கே!” என சொல்ல, ருஹானா ஆர்யனை அதிசயமாக பார்த்தாள்.

நிஸாம் அருகே அமர்ந்திருந்த அவன் மனைவி அவள் மறுபுறம் அமர்ந்திருந்த ருஹானாவின் கையை பற்றிக்கொண்டாள். “ருஹானா மேம் மட்டும் வந்து பேசியிருக்கலனா நாங்க வாயே திறந்திருக்க மாட்டோம். சித்தப்பா, சித்தியும் அப்பா, அம்மா போல தான்னு நீங்க பேசி எங்க மனசை மாத்தி, எங்களை தப்பு செய்ய விடாம தடுத்திட்டீங்க. உங்களுக்கு நாங்க நன்றிக்கடன் பட்டுருக்கோம்”

ஆர்யன் அதிர்ந்து போய் பேராச்சிரியமாய் ருஹானாவை பார்க்க, அவள் தலையை குனிந்து கொண்டாள். மேலே நின்ற சகோதரிகளுக்கு ருஹானாவின் மேல் கடும் குரோதம் உண்டானது. ஆர்யன் நெஞ்சம் முழுதும் ருஹானா நிறைய, அவனோ அவள் கட்டளை இடாமலே அவள் அன்பில் கட்டுப்பட்டு கிடந்தான், மௌனியாக.

காப்பாளனையே காக்கும் வல்லமை

அன்பின் சொந்தக்காரிக்கு உண்டு

அவன் உண்மை அறிந்த நேரம்

மனதில் சந்தோசம் பொங்கியே

வார்த்தைகள் மௌனித்துவிட்டன!

கன்றின் உரிமை போராட்டத்தில்

கசப்பாக தொடங்கிய உறவு

அன்பிற்காக அன்போடு போராடியும்

அரவணைக்க போராடிய 

சிற்றன்னை சிற்றப்பனின்

தொடர்ந்தெடுத்த முயற்சிகளால்

அவர்கள் முன்னிருந்த சிறு நீங்கி

அன்னையும் அப்பனுமாய்

விளங்கிட செய்கிறது!

“சித்தி! இந்த ட்ராயிங் பாருங்க!” என இவான் அங்கே வர, நிஸாம் மனைவி “இவர் தான் இவானா?” என கேட்க, நிஸாம் பாசமாக இவானை பார்த்தான்.

“ஆமா!” என்ற ருஹானா “இவான் செல்லம்! இவங்களுக்கு சலாம் சொல்லு” என சொல்ல, இவானும் அப்படியே செய்தான். பண்பு கொண்ட தங்கள் முதலாளியின் மகனை அவர்கள் அன்போடு வாழ்த்த, எல்லாவற்றையும் ஆர்யன் பார்த்திருந்தாலும் அவன் கருத்தில் ஏறவில்லை. ருஹானாவை தவிர அங்கு வேறு எதற்கும் இடமில்லை.

——

“ஹலோ! எப்படி இருக்கே ருஹானா? ஆர்யனுக்கு அடிபட்டதுக்கு என்னோட வருத்தத்தை தெரிவிக்க தான் கூப்பிட்டேன்.”

“வீட்டுக்கு வந்துட்டோம். நன்றி மிஷால். கேஸ்ல இருந்தும் வெளிய வந்துட்டார்.”

“சாரி ருஹானா. நீ சொன்னது தான் சரி. நான் ஆர்யனை பத்தி தப்பா பேசிட்டேன்.”

“மன்னிப்பு கேட்க எதும் இல்ல. நீ நல்லவன், மனசாட்சி உள்ளவன்னு எனக்கு தெரியும், மிஷால். உன் நோக்கம் எப்பவும் தப்பா இருக்காது.”

“நாம ஒருமுறை சந்திப்போமா, ருஹானா?”

“அப்புறம் பேசலாம், மிஷால். இரவு நேரமாகிடுச்சி. நான் வைக்கிறேன்”

—–

ருஹானா வாசித்தது மீண்டும் மனதில் ஓட, அதைக் கேட்டுக்கொண்டே ஆர்யன் மும்முரமாக அந்த எட்டு வடிவத்தை செதுக்கிக்கொண்டு இருந்தான்.

கதவை தட்டிவிட்டு ருஹானா உள்ளே வர, அந்த வடிவத்தை முடித்துவிட்ட ஆர்யன் மரத்துகளை ஊதி ஊதி அகற்றிக் கொண்டிருந்தான். ருஹானா சத்தமாக கனைக்க அதன் பின்னே வாசலை பார்த்த ஆர்யன் காயத்தை பிடித்துக்கொண்டு சிரமப்பட்டு எழுந்தான்.

அருகே வந்த ருஹானா “விளக்கு எரியறதை பார்த்து வந்தேன். நீங்க நல்லா தூங்கினா தான் உடம்பு சீக்கிரம் சரியாகும்” என்றாள். வலியால் சுருங்கிய அவன் முகத்தை பார்த்த அவள் கவலையுடன் “வலிக்குதா?” என கேட்டாள்.

இல்லையென தலையாட்டிய ஆர்யன் “இது உனக்கு..” என கையில் இருந்ததை அவளிடம் நீட்டினான்..

“எல்லாராலயும் சரியான வார்த்தைகளால மனசுல இருக்கறதை வெளிய சொல்லமுடியாது. நீ தான் என்னை இதை முழுசா முடிக்க வச்சே. அதனால இது உன்னோடது தான்.”

அதை கையில் வாங்கி பார்த்த ருஹானா “இது இன்ஃபினிட்டி… அதான் முடிவிலி சின்னம் தானே?” என கேட்டாள்.

உனக்கு என்னுடைய நன்றிக்கடன் முடிவில்லாது என குறிப்பால் உணர்த்துகிறானா?

“நான் இதை எட்டு வடிவத்துல தான் செய்ய ஆரம்பிச்சேன். அப்போ எனக்கு இருபது வயசு இருக்கும். இப்போ நடந்த மாதிரி ஒரு சதியில மாட்டி சிறைக்கு போயிருந்தேன். எட்டு மாதம் சிறைத்தண்டனை. இதை கோபமா செஞ்சிட்டு இருந்தேன். அப்போ அங்கயிருந்த வயதான கைதி ஒருத்தர் ‘இதை நீ மாத்தி பிடிச்சிருக்கே’ன்னு சொல்லி திருப்பி காட்டினார்”

ஆர்யன் ருஹானாவின் உள்ளங்கையில் எட்டு வடிவத்தில் நேராக நின்ற அந்த வடிவத்தை பக்கவாட்டில் திருப்பி வைத்தான்.

“எட்டு மாசம்ங்கறது ஒன்னுமே இல்ல. நீ முடிவிலி நோக்கி பயணம் செய். வாழ்க்கையோட அர்த்தத்தை தேடு. அப்போ தான் நீ முழுமை பெற முடியும்னு சொன்னார்”

“முன்ன எனக்கு முடிவிலி சின்னம் ஒரு கோபம் தான். அதனால தான் நான் துப்பாக்கியை கைல எடுத்தேன். இதை பாதியில விட்டுட்டேன். முடிக்கவே இல்ல. ஆனா இப்போ துப்பாக்கி…” என ஆர்யன் சொன்னதை “உங்களுக்கு தேவையே இல்ல” என ருஹானா முடித்து வைத்தாள்.

ஆமென ஏற்றுக்கொண்ட ஆர்யன் ருஹானாவிடம் நம்பிக்கையாக சொன்னான்.

“இப்போ எனக்கு முடிவிலின்னா என்னன்னு தெரிஞ்சிடுச்சி. ஒருநாள் அதை கண்டுபிடிச்சிடுவேன்”

(தொடரும்) 

Advertisement