Advertisement

‘உன்னால தான். உன் தப்பு தான்’ சல்மா சொன்னதின் தாக்கம் குறையாமல் இருந்தாலும், ருஹானா இவானை மடியில் படுக்க வைத்து அவன் தலையை வருடியபடி அவனை தூங்க வைக்க முயன்றாள்.

“அம்ஜத் பெரியப்பா சொன்னது போல நாம ஒளிஞ்சிக்கலாம், சித்தி!” இவான் சொன்னதைக் கேட்டபடியே உள்ளே வந்த ஆர்யன் முகத்திலும் கவலை பரவிக் கிடந்தது.

“அது தப்பு செல்லம். அவங்க கண்டுபிடிச்சிடுவாங்க.”

அவள் மடியில் இருந்து எழுந்த இவான் “அப்போ வாங்க! நாம வேற இடத்துக்கு போய்டலாம். நான், நீங்க, சித்தப்பா. அசுரன் கதையில வந்த மாதிரி குட்டிப்பையன், அசுரன், இளவரசி மட்டும்” என்றவன் எங்கே போவது என்பதையும் சொன்னான்.

“நாம முன்ன போனோமே, அந்த கிராமத்துக்கு போய்டலாம்”

“நாம ஓடிப்போனா நிலைமை இன்னும் மோசமாகும் அன்பே!”

“அப்போ நான் உங்களை விட்டுப் போகணுமா? என்னை அவங்க கிட்டே கொடுக்காதீங்க” என அவளை கட்டிக்கொண்டான். ஆர்யன் அவர்கள் பக்கம் வந்து “சிங்கப்பையா! சின்ன பையன் ஓடிப்போனானா? நின்னு சண்டை போட்டானா?” என கேட்டான்.

“அன்பு வழியில் சண்டை போட்டான், சித்தப்பா!” என இவான் எழுந்து அமர்ந்து பதில் சொன்னான்.

“அசுரன் சின்ன பையனை விட்டுட்டு போகல தானே?” ருஹானா கேட்க, இவான் “இல்ல, எப்பவுமே அசுரன் குட்டிப் பையனை விடல” என நம்பிக்கையாக சொன்னான்.

ஆர்யன் “இளவரசி சின்னப் பையனோட கையை பிடிச்சிக்கிட்டாங்க தானே?” என கேட்க, இருவரும் தலையாட்டினர்.

——

“நஸ்ரியா! என்ன நடக்குது உள்ளே?”

“தெரியல பெரியம்மா! ஆனா எல்லாரும் கவலையா தான் இருக்காங்க.”

“ஆர்யன் சார் லிட்டில் சாரை விட்டு தரவே மாட்டார். ருஹானாவும் அப்படித்தான். ரெண்டு பேரும் இவானை நேசிக்கிறாங்க. அவங்க இணைந்து செயல்படுவாங்க.”

“ஆமா பெரியம்மா! அவங்க இதுக்காக மட்டும் இணையல. ஏற்கனவே ஒன்னு சேர்ந்துட்டாங்க.”

“நீ என்ன சொல்றே?” என சாரா கேட்க, அவர்கள் அன்பால் இணைந்துவிட்டார்கள் என கண்டுகொண்ட இளவயது நஸ்ரியா அதை சொல்ல தயக்கம் காட்டினாள்.

அதற்குள் சமையலறைக்கு வந்த ஜாஃபர் “மேல போய் மீட்டிங் முடிந்ததுன்னு ஆர்யன் சார்ட்ட சொல்லு” என கட்டளையிட, நஸ்ரியா நகர்ந்தாள்.

——

“தூங்கிட்டான். ஆனா முயல் தூக்கம் தான். அப்பப்ப நடுங்குறான். பாவம் ரொம்ப பயந்திட்டான்” என ருஹானா மடியில் படுத்திருந்த இவானை பார்த்தபடியே சொல்ல, அங்கே நடந்து கொண்டிருந்த ஆர்யனும் இவானை அருகில் வந்து பார்த்தான்

“சார்! ஆபீசர்ஸ் உங்களை கூப்பிடுறாங்க1” என நஸ்ரியா வந்து சொல்ல, திகிலடைந்த ருஹானாவை பார்த்து “பயப்படாதே!” என்ற ஆர்யன், நஸ்ரியாவிடம் “நீ இவான் கூட இரு!” என்று சொல்ல, ருஹானா இவானை மெத்தையில் படுக்க வைத்தாள்.

இருவரும் கீழே பதட்டமாக செல்ல, லைலா ருஹானாவிடம் ஒரு ஆவணத்தை தந்தார்.

“உங்களுக்கு சொல்லப்பட்டப்படி நீங்க நடக்கல. அதனால நாங்க இவான் அர்ஸ்லானை கூட்டிட்டு போகப் போறோம். நீங்க நீதிமன்றத்தில மேல்முறையீடு செஞ்சி இந்த உத்தரவை ரத்து செய்ய வைக்கலாம். ஆனா தீர்ப்பு வரவரை இவான் சிறுவர் விடுதில தான் இருப்பான்.”

இருவரும் திக்பிரமை அடைந்து நிற்க “ப்ளீஸ்! தயவுசெய்து இப்படி செய்யாதீங்க!” என ருஹானா கெஞ்சினாள்.

“நாங்க செய்றது இவானோட நலன் கருதி தான். இந்த இடம் இவான் வசிக்க தகுதியானது தான்னு நீங்க நிரூபணம் செஞ்சிட்டு இவானோட உரிமைக்காக மனு கொடுங்க.”

“இவானை எங்க கிட்ட இருந்து பிரிக்காதீங்க” என கண்ணீர் விட்ட ருஹானாவின் கண்கள் இருண்டன. தடுமாறி விழப் போனவளை தாங்கிக் கொண்ட ஆர்யன் “நிதானத்துக்கு வா! என்னை பாரு!” என்று அவளை கைப்பற்றி அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தான். “ஜாஃபர் தண்ணி கொண்டு வாங்க!” என குரல் கொடுத்தான்.

——-

அதிகாரிகள் அழைத்து செல்வது போல கனவு கண்ட இவான் அதிர்ந்து “சித்தி!” என விழிக்க, அறையை விட்டு தள்ளி நின்று போன் பேசிக்கொண்டிருந்த நஸ்ரியா அவன் கீழே போவதை கவனிக்கவில்லை.

——

கையில் தண்ணீர் டம்ளருடன் “இப்போ பரவாயில்லயா? தளர்ந்து போகாதே!” என ஆர்யன் சொல்ல, ருஹானா மூச்சிரைக்க அழுது கொண்டிருந்தாள்.

“மிஸ் ருஹானா! நாங்க இவானை அழைச்சிட்டு போகணும்”

“வேணாம், ப்ளீஸ்! அவன் தூங்கிட்டு இருக்கான். நாங்க ரெண்டு பேரும் இல்லாம அவன் இருக்க மாட்டான். எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்க!” என ருஹானா எழுந்து சென்று அதிகாரிகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்க, அதை பார்த்துக்கொண்டே வந்த இவான் “சித்தி!” என அழைத்தான்.

“ஆருயிரே!” என ருஹானா ஓடிச்சென்று மண்டியிட்டு அவனை அணைத்துக் கொள்ள, ஆர்யன் அவர்கள் பக்கம் வந்து நின்றான்.  .

“சாரி! அவன் எழுந்து வந்ததை நான் பார்க்கல!” என ஓடிவந்த நஸ்ரியா மன்னிப்பு கேட்க, அவளை முறைத்த ஜாஃபர், அவளை உள்ளே செல்ல ஜாடை காட்டினான்.

“கண்ணே! நீ எழுந்திட்டியா?’ என ருஹானா கேட்க, இவான் அவளுக்கு பதில் சொல்லாமல் அவளது கண்ணீர் முகத்தையும், அதிகாரிகளையும் மாறி மாறி பார்த்தவன், இரு அதிகாரிகளின் முன்னே போய் லைலாவின் கையை பற்றினான்.

“நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும். நீங்க வெனிலெமோன் சாப்பிட்டு இருக்கீங்களா? அது வெனிலாவும் லெமனும் கலந்து தரும் அன்பு சுவை! அது ஒரு குக்கீஸ்!” என்று சொல்ல, ஜாஃபர் முகத்தில் புன்முறுவல்.

அவனை அதிசயமாக பார்த்த லைலா அவன் உயரத்துக்கு மண்டியிட்டு “நாங்க சாப்பிட்டது இல்லயே! அது சுவையா இருக்குமா?” என கேட்டார்.

“ஆமா, வெனிலா என் சித்தியோட வாசனை. லெமன் என் சித்தப்பாவோட வாசனை. என்னை கூட்டிட்டு போகாதீங்க. அவங்க இல்லாம என்னால இருக்க முடியாது. யாருமே என் சித்தி, சித்தப்பா வாசனையில இருக்க மாட்டாங்க. வெனிலெமோனும் அப்படித்தான்.”

ருஹானாவும் ஆர்யனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ருஹானாவின் கன்னங்களில் நீர் கரை புரண்டோடியது. கரீமாவும், சல்மாவும் அப்போது தான் அறையை விட்டு வெளியே வந்து மாடியில் நின்றுக்கொண்டு கீழே நடப்பதை சிரிப்புடன் பார்த்தனர்.

“என் அம்மா கூட அதே வாசனைல தான் இருப்பாங்க. ஆனா அவங்க என்னை விட்டுட்டு போய்ட்டாங்க. நான் ரொம்ப அழுதேன். அவங்க தலையணைல அதே வாசனை இருந்தது. நான் அது வச்சிட்டு தான் தூங்குவேன். அதை துவைச்ச பின்னால அந்த வாசனை போய்டுச்சி. எனக்கு அழுகையா வந்தது.”

லைலா மற்ற அதிகாரியை பார்க்க, இவான் திரும்பி ருஹானாவை பார்த்தான். அவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு இவானை பார்த்து சிரமப்பட்டு சிரித்தாள்.

“அப்புறம் என் சித்தி வந்தாங்க. அதுக்கு அப்புறம் நான் அழல. நாங்க என் அம்மாவோட கல்வீட்டுல செடி நட்டோம். பூக்கள் வச்சோம். அம்மா தாத்தா கூட சந்தோசமா இருப்பாங்கன்னு சித்தி சொன்னாங்க.”

தாரை தாரையாக கண்ணீர்விடும் ருஹானாவையும், இவானையும் ஆர்யன் மாறி மாறி பார்க்க, இரண்டு சகோதரிகளின் சிரிப்பு அதிகமானது.

“என் சித்தி வரலனா நான் அழுதுட்டே தான் இருந்திருப்பேன். சித்தியும் சித்தப்பாவும் அம்மாவை போல வாசமா இருக்காங்க, வெனிலெமோனைப் போல.”

இவான் பேசி முடிக்க “எங்களுக்கும் ஒருநாள் வெனிலெமோன் கொடு. சரியா, இவான்?” என லைலா கேட்க, இவான் தலையாட்டினான். அவன் சென்று ருஹானாவை அணைத்துக்கொள்ள, இரு அதிகாரிகளும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டனர்.

முன்னே வந்த லைலா “நீங்க ரெண்டு பேரும் இவானுக்கு முக்கியம். உங்க உறவை நாங்க உடைக்க விரும்பல. குடும்பம் தான் குழந்தைகளுக்கு ஆதாரம். என்னோட சக்தியை பயன்படுத்தி நான் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தரேன், மிஸ் ருஹானா!” என்று சொல்ல, ருஹானா முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆட, “நன்றி! நன்றி! மிக்க நன்றி!” என்றாள்.

“ஆனா உங்களை நாங்க எச்சரிக்கிறோம். உங்களோட தவறால நீங்க இவானை பிரிந்திருப்பீங்க. இனிமே அப்படி நடக்காம பார்த்துக்கங்க” என அவர் சொல்ல, “சரி, சரி, கண்டிப்பா கவனமா இருப்பேன்” என வேகமாக தலையாட்டிய ருஹானா ஆனந்த கண்ணீரோடு ஆர்யனை பார்த்தாள்.

இவான் சித்தப்பாவின் காலை கட்டிக்கொள்ள அவனும் குனிந்து மிதமிஞ்சிய ஆனந்தத்துடன் அண்ணன் மகனை அணைத்துக் கொண்டான். ருஹானா இருவரையும் பார்த்து சிரிக்க, அங்கே அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி குடிகொண்டது.

——..

“வா! நாமும் கீழ போகலாம், சல்மா!”

“நீ சொன்னது எல்லாம் என்ன ஆச்சு அக்கா? ரெண்டுபேரும் இன்னைக்கே வீட்டைவிட்டு போய்டுவாங்கன்னு சொன்னே!”

“எனக்கு புரியலயே! எப்படி ஆபிசர்ஸ் மனசு மாறினாங்க?”

——

“என்னோட செல்லம்! என் தங்கம்!” என அம்ஜத் இவானை மடியில் உட்கார வைத்து கொஞ்ச, அவன் இருபுறமும் சோபாவில் ருஹானாவும் ஆர்யனும் இருந்தனர். கரீமாவும், சல்மாவும் எதிரே அமர்ந்திருக்க, பணியாட்கள் அனைவரும் அவர்களை சுற்றி இருந்தனர்.

“நஸ்ரியா! நல்லவேளை நீ இவான் கீழே இறங்கி வந்ததை பார்க்கல” என அம்ஜத் கிண்டல் செய்ய, ஜாஃபர் அவளை முறைக்க, அவள் காதை பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

“நான் வெனிலெமோன் குக்கீஸ் செய்தேன். பாருங்க லிட்டில் சார், அருமையான வாசனை!” என சாரா கொண்டு வந்து தர, இவான் “ஆஹ்! வெனிலெமோன்!” என குதுகலித்தான்.

“அல்லாஹ்! உங்களுக்கு எங்களோட நன்றி. எங்க இவான் எங்களை விட்டு பிரியல” என சொன்ன ருஹானாவை பார்த்த ஆர்யன் “ஆமா! எப்பவும் நம்மை விட்டு பிரிய மாட்டான்” என்று புன்னகையுடன் சொன்னான்.

“நம்மோட அமைதியும் நம்மை விட்டு போகல!” என அம்ஜத் சொல்ல, கரீமா “சல்மா! எல்லாரும் மகிழ்ச்சியா இருக்காங்க. நீயும் சிரிக்கிற மாதிரி முகத்தை வச்சிக்கோ!” என யாருக்கும் தெரியாமல் தங்கையை இடுப்பில் இடித்தாள்.

மூளையை கசக்கி தான் போட்ட திட்டம் தவிடுபொடியானதை மறைத்து கரீமா திறமையாக நடித்து சிரிக்க, இஞ்சி தின்ற குரங்கு போல சல்மா இளித்து வைத்தாள்.

(தொடரும்) 

Advertisement