Advertisement

“சித்தப்பா மெல்ல வாங்க. கட்டிலை பிடிச்சிக்கங்க. மெதுவா உட்காருங்க.”

“இப்படியா?” என கேட்ட ஆர்யன் தன் குளிராடையை கழட்ட, ருஹானா பின்னால் இருந்து அதை வாங்கிக் கொண்டாள்.

“அதிகமா குனியாதீங்க. வயிறு வலிக்கும். மெதுவா படுங்க” என இவான் கட்டளைகள் இட, மருந்து மாத்திரைகளை கையில் வைத்திருந்த ருஹானா அதை சிரிப்புடன் பார்த்திருந்தாள்.

கட்டிலில் மெல்ல சாய்ந்த ஆர்யன் தலையணை இருக்கும் பக்கம் நகர, வலி அவனை அதிகமாய் தாக்கியது. “ஸ்” என்ற அவன் சத்தத்தில் அருகே ஓடிவந்த ருஹானா மருந்தை பக்கத்து மேசையில் வைத்துவிட்டு அவன் தோளை பிடித்துக்கொண்டு தலையணையை சரியாக வைத்தாள்.

வலியில் சுளித்த அவன் முகம் கண்டு “நீங்க ஓகே தானே?” என கவலையுடன் கேட்டாள்.

“ஆமா!” என்ற ஆர்யன் மிக அருகில் பச்சை கண்களை பார்த்து திகைக்க, அவனுடைய வலி, வேதனையெல்லாம் அவனை விட்டு ஓடோடியது.

அவன் பார்வை கண்டு சங்கடப்பட்ட ருஹானா “உங்க தையல்ல கவனமா இருக்கணும்” என மெதுவாக சொல்லியபடி விலகி நின்றாள்.

“நாம நேசிக்கறவங்களுக்கு உதவி செய்யணும். இல்லயா சித்தி?” என இவான் கேட்க, வேகமாக ஆர்யன் ருஹானா முகம் பார்க்க, அவள் உமிழ்நீரை விழுங்கிக் கொண்டாள்.

சித்தியின் கையை பற்றிய இவான் “இனிமேல் பயப்படாதீங்க சித்தி. நானும் சித்தப்பா எப்போ வருவாரோன்னு கவலையா இருந்தேன். இதோ, இப்போ சித்தப்பா வந்துட்டார்” என ஆறுதல் சொன்னான்.

“சித்தி நீங்க இல்லாதபோது ரொம்ப கவலையா இருந்தாங்க சித்தப்பா! என்னை நேசிக்கறது போல சித்தி உங்களையும் நேசிக்கிறாங்க. அதனால தான் அவங்க அதிகமா பயப்பட்டாங்க” என வெடிகுண்டை எடுத்து இவான் வீச, ருஹானாவிற்கு ஒன்றும் ஓடவில்லை. ஆர்யனுக்கு முகத்தை காட்டாமல் திரும்பி நின்று கொண்டாள்.

இவான் என்கிற அற்புத குழந்தை தனது சிறு தோளில் இவர்களது சொல்லாத காதலை தூக்கி சுமக்கிறான்.

இவான் கூறிய உண்மையில் புளகாங்கிதம் அடைந்த ஆர்யன், அவள் முகத்தை பார்க்க ஆசைப்பட, அவளோ “நாம போகலாம் அன்பே! சித்தப்பா ஓய்வு எடுக்கட்டும்” என இவானை இழுத்துக்கொண்டு “எதும் தேவைன்னா என்னை கூப்பிடுங்க!” என லேசாக ஆர்யன் முகம் பார்த்து சொல்ல, அவனும் சரியென கண்களை மூடி திறந்தான்.

ருஹானா இவானோடு வேகமாக வெளியே செல்ல, அவர்கள் கண்ணுக்கு மறையும்வரை அவர்களை பார்த்திருந்த ஆர்யன், தனது ஹூடியின் முன்னே, குளிருக்கு கைகளை வைக்கும் பையில் வைத்திருந்த துண்டு சீட்டை வெளியே எடுத்தான்.

ருஹானாவின் எழுத்துக்களை ஆயிரமாவது தடவை வாசித்தவன், செல்லப்பிராணியை தடவுவது போல அதை தடவிக்கொடுத்தான். பின் கட்டிலை சேர்ந்தாற்போல இருந்த மேசையின் இழுப்பறையை திறந்தவன் அதிலிருந்த ஒரு சிறிய பெட்டியை சிரமத்துடன் தூக்கினான்.

அது அவன் பாதுகாக்கும் பொருட்களை வைக்கும் பொக்கிஷப் பெட்டி போல! அதில் தன்னுடைய முதல் காதல் கடிதத்தையும் பத்திரப்படுத்தியவன், அதில் இருந்த ஒரு பொருளை வெளியே எடுத்தான். அது எட்டு எண் வடிவம் கொண்ட மரத்தாலான ஒரு வடிவம்.

எட்டின் பாதி பாகம் குடையப் பட்டிருக்க, மற்ற பாதியோ மூடியே இருந்தது. அதை கையில் எடுத்து பார்த்துக்கொண்டே இருந்தான்.

——–

இவான் ஆர்யனிடம் தன் மனதில் உள்ளதை போட்டு உடைத்துவிட, அந்த படபடப்பு தாங்கமுடியாமல் ஓடிவந்த ருஹானா சமையலறைக்கு வந்து நிறைய தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.

சற்று ஆசுவாசம் அடைந்ததும் அவளுக்கு சமீபமாக வீட்டு சாப்பாடு சாப்பிடாத ஆர்யனுக்கு நல்ல உணவு கொடுக்க ஆசை வந்தது. தீவு சுற்றுலா சமயம் இருவரும் சேர்ந்து ‘கார்னியாரிக்!’ என சொன்னது அவளுக்கு நினைவு வர, சிரிப்புடன் குளிர்சாதனப்பெட்டியில் பெரிய கத்திரிக்காயை தேடி எடுத்தாள்.

அப்போது அங்கே வந்த சாரா “ருஹானா! ஏன் இத்தனை உணவு இருக்கும்போது இன்னும் செய்றே?” என கேட்க, “பெரிய கத்திரிக்காயை பார்த்தேன். அதான் செய்யலாமேன்னு….” என ருஹானா இழுக்க, “சரி, அதும் நல்லது தான். ஆர்யன் ஸார்க்கும் அதிகம் பிடிக்கும்” என அவர் சொல்லி செல்ல, இவான் அங்கே வந்தான்.

“சித்தி! நானும் உங்களுக்கு உதவி செய்யவா?” ஆவலாக அவன் கேட்க, அவனை தூக்கி அடுப்பு மேடையில் அமர வைத்த ருஹானா “கண்டிப்பா அன்பே!” என்றாள்.

—–

ஆர்யன் ஒரு கத்தியை வைத்துக்கொண்டு எட்டு வடிவத்தின் ஒரு பாதிக்குள் இருந்த மரத்தை செதுக்கி வெளியே எடுத்துக் கொண்டிருந்தான்.

“ஆர்யன்!” என அழைத்துக்கொண்டே சல்மா உள்ளே வர, தன் படுக்கை அறைக்குள் அனுமதி இல்லாமல் வரும் அவளை ஆர்யன் வித்தியாசமாக பார்த்தான்.

“உங்களை நினைச்சி நான் ரொம்ப கவலைப்பட்டேன். உங்களுக்கு எல்லாம் வசதியா இருக்கா?” என கேட்டுக்கொண்டே அவன் புறம் குனிந்து தலையணையை சரிசெய்ய, சங்கடமான ஆர்யன் ஒதுங்கிக்கொண்டு அவளை கையைக் காட்டி தடுத்தான்.

பின்பு அவளுக்கு ஒரு வார்த்தை கூட பதில் சொல்லாமல் ஆர்யன் தன் வேலையை தொடர, “அது என்ன ஷேப்? எனக்கு இங்கிருந்து பார்க்க தெரியலயே!” என கேட்டாள். அதற்கும் அவனிடமிருந்து பதில் இல்லை.

பக்கத்து மேசையில் இருந்து மருந்து மாத்திரைகளை கையில் எடுத்துக்கொண்டவள் “நீங்க கவலைப்படாதீங்க. நான் உங்களை கவனமா பார்த்துக்கறேன். நீங்க நலமாகறவரை உங்க கூடவே இருக்கேன்” என பாசத்தை பொழிய, ஆர்யன் முகம் யோசனையானது.

செய்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவன் அவளை பார்க்க, சந்தோசமான சல்மா “இப்போ உங்களுக்கு ஏதாவது தேவையா, சொல்லுங்க?” என கேட்டாள்.

“ஆமா, எனக்கு ஆபீஸ்ல இருந்து சில ஃபைல்ஸ் தேவை”

சல்மாவின் முகம் சுருங்க “நான் ரஷீத் ட்ட சொல்லி….” என ஆரம்பிக்க, இடையிட்ட ஆர்யன் “ரஷீத்துக்கு வேற வேலை இருக்கு. வேற யாரையும் நம்ப முடியாது. முக்கியமான ஒப்பந்தங்கள் அது” என்றும் சேர்த்து சொன்னான்.

“சரி, நான் போய் எடுத்துட்டு வரேன்” என சலிப்போடு சொன்ன சல்மா நகராமல் அங்கேயே நிற்க, ஆர்யனின் வக்கீல் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தாள்.

“எனக்கு உடனே அந்த ஃபைல்ஸ் வேணும்” என ஆர்யன் சொல்ல, சரியென நகர்ந்த சல்மா கதவை பாதி சாத்திவிட்டு உள்ளே என்ன பேசுகிறார்கள் என கவனித்தாள்.

“இவானோட சித்தியை பற்றி பேசணும். இந்த விஷயம் நமக்குள்ள மட்டும் தான் இருக்கணும். இவானோட சித்திக்கு கூட தெரியக்கூடாது.”

ருஹானாவை பற்றிய தகவல் என்றதும் சல்மா செவி தீட்டி தயாராக, கதவு லேசாக திறந்திருப்பது கண்ட வக்கீல் “சரி, சார்!” என்று சொன்னபடி வந்து கதவை நன்றாக அடைத்தாள்.

                              ——-

“சல்மா! நீ ஏன் ஆர்யன் கூட இல்ல? இங்க என்ன செய்துட்டு இருக்கே?”

“அன்பு அக்கா! ஆர்யனுக்கு முக்கியமான ஃபைல்ஸ் வேணுமாம். உண்மையை சொல்லணும்னா அவன் என்னை கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளிட்டான்.”

“ஓ! அவன் உன்னை அந்த அளவு நம்புறான்.”

கரீமாவிற்கு பழிப்பு காட்டிய சல்மா “என்னவோ இருந்துட்டு போகட்டும். அதைவிட முக்கியமான தகவல் ஒன்னு. ஆர்யன் வக்கீல்ட்ட பேசினதை நான் கேட்டேன். அந்த சூனியக்காரியை பற்றி ஏதோ. ஆனா அவளுக்குமே அது தெரியக்கூடாதாம்” என அவளிடம் பகிர்ந்தாள்.

“சரி, நான் அதை கண்டுபிடிக்கிறேன். நீ கிளம்பு”

——-

ஆர்யன் அறை வாசலில் நடந்துக்கொண்டிருந்த கரீமா உள்ளே எப்படி செல்வது என தவித்துக் கொண்டிருக்க, ருஹானா உணவு தட்டுடன் வர, மிக்க மகிழ்ச்சியுடன் அதை பிடிங்கிக்கொண்டாள்.

“ருஹானா நீ ஏன் சிரமப்படுறே? நான் கொடுத்துக்கறேன். உன் முகமே சோர்வா இருக்கு. நீ போய் ஓய்வெடு.”

மிகுந்த ஏமாற்றமான ருஹானா எதுவும் பேச முடியாமல் நகர்ந்து செல்ல, தட்டுடன் கரீமா உள்ளே செல்லவும், ஆர்யன் பேசி முடித்து வக்கீலை அனுப்பி வைக்கவும் சரியாக இருந்தது.

“நான் சொன்ன எதையும் மறந்திடாதீங்க.”

“சரி சார். உங்களுக்கு சீக்கிரம் குணமாகட்டும்.” என வக்கீல் செல்ல,  கரீமா கபடத்துடன் கேட்டாள். “ஆர்யன் டியர்! எதும் தப்பா நடக்கலயே, வக்கீல் வந்துட்டு போறாங்க”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.” ஆர்யனிடமிருந்து செய்தியை சேகரிக்க முடியுமா, என்ன!

“உனக்கு பிடித்தமான உணவு கொண்டு வந்திருக்கேன்” கரீமா அபாண்டமாக புளுகினாள். அப்படியே அன்பாக பேசி தகவலை பெற முடியுமா என முயற்சி செய்தாள்.

“சித்தப்பா! உங்களுக்கு இது பிடிச்சிருக்கா? சித்தி செய்யும்போது நான் அவங்களுக்கு உதவி செய்தேன்” என சொன்னபடியே இவான் உள்ளே வர, ஆர்யன் சடாரென கரீமாவை நோக்க, அவள் முகம் வெளுத்திருந்தாள்.

“நீங்க போய் அண்ணனை பாருங்க அண்ணி. அதான் இவான் வந்திட்டானே. அவன் என்னை பார்த்துக்குவான்”

“சரி, ஆர்யன் டியர்! இனிய உணவு” என சொல்லி கருகிய முகத்துடன் கரீமா வெளியே சென்றாள்.

“வா, சிங்கப்பையா! நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்”

“நான் சித்தி செய்ததுமே நிறைய சாப்பிட்டேன் சித்தப்பா. நீங்க சாப்பிடுங்க”

இவான் நன்றாக சாப்பிட்டான் என தெரிந்ததும் ஆர்யன் மனம் நிறைய, அவனும் மகிழ்வுடன் சாப்பிட ஆரம்பித்தான். இவானை ஒருவேளை உணவு சாப்பிட வைக்க என்னவெல்லாம் முயற்சி செய்திருக்கிறான், ஆர்யன்!

“படுத்துட்டே இருக்க உங்களுக்கு போரடிக்குதா? இதெல்லாம் என்னோட புக், சின்ன பசங்க புக். உங்களுக்கு சரிவராது. சித்திட்ட கேட்டு பார்க்கவா? நீங்க அது படிக்கிறீங்களா?” அவனே பிரச்சனையை யோசித்து அதற்கு அருமையான தீர்வும் சொன்னான்.

“நல்ல யோசனை, அக்னி சிறகே!” என சிரிப்புடன் ஆர்யன் பாராட்ட சித்தி என அழைத்தபடியே இவான் வெளியே ஓடினான்.

——–

கார்னியாரிக், நெய் சோறு, யோகர்ட் என ஆர்யன் சுவைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, “இனிய உணவு!” என சொன்னபடி உள்ளே வந்த ருஹானாவின் கையில் புத்தகங்கள் இருந்தன.

“உனக்கு நன்றி. உணவு அருமையா இருந்தது” என சொல்லி ஆர்யன் சாப்பிட்டு முடித்து தட்டை கீழே வைத்தான்.

“இவான் உங்களுக்காக புக்ஸ் கேட்டான். உங்களுக்கு எது பிடிக்கும்னு எனக்கு தெரியல. அதான் இத்தனை கொண்டுவந்தேன்.”

அவற்றை கையில் வாங்கிய ஆர்யன் “படிக்கவேண்டிய நேரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தேன். அதனால எனக்கு புக் படிக்க நேரம் இருந்தது இல்ல. கால ஓட்டத்தில் நான் சிக்கிக்கொண்டேன். வாசிப்பு பற்றி அறிந்தவன் அல்ல… நீயே தேர்ந்தெடுத்து கொடு” என்று ஒவ்வொரு புத்தகமாக தடவி பார்த்தான்.

“இது படிங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச புக். அதிகமா படிச்சே பழசாயிடுச்சி. ஒரு பெண்ணோட சுயசரிதை இது” என ஒரு பழுப்பேறிய புத்தகத்தை எடுத்து அவள் கொடுக்க, “சித்தி!” என இவான் அழைக்க “நீங்க படிச்சிட்டே இருங்க. இதோ வரேன்” என்று சொல்லி அவள் வெளியே சென்றாள்.

ஆர்யன் விரிக்கிறான் புத்தகத்தின் இடையே ஒரு பக்கத்தை…

நான் அவனை பார்க்கும்போது அவனது வாசத்தை உணரும்போது என்னுடைய எல்லாமும் அவனுடையதுடன் இடம் மாற ஆரம்பித்தன…

என்னுடைய வலது கை அவனது இடது கைக்கு மாறியது..

எனது இடது கண்ணை அவனது இடது கண்ணாக பார்க்க ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் அவன் நானாக மாற நான் அவனாக மாறினேன்..

இருவரும் ஒருவருக்குள் மாற மாற இருவரும் ஒருவரே போல தோன்றினோம்

நடக்கமுடியாது என நான் நினைத்த அனைத்தும் அவனுள் உருமாற தொடங்கியது..

இருபகுதியாய் இருந்த நாங்கள் இருவரும் ஒன்றாக முயற்சித்தோம்..

காதல் என்று சொல்வார்களே அது இது போல் தான் இருக்குமோ என வியந்து போனேன்..

ஒன்றாக இணைவோமா..? காலம் கடந்த அமரத்துவம் அடைவோமா?’

இதை படித்தவுடன் அவனுள் ஏதோ ஆழமாக நகர்ந்தது.. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்..

Advertisement