Advertisement

ருஹானாவை சோபாவில் அமர வைத்து ஆர்யன் பக்கத்தில் இருந்து அவளை தேற்றிக் கொண்டு இருந்தான். “என்னை பாரு. நீ தப்பு எதும் செய்யல.” அவள் அழுவது அவனுக்கு துன்பத்தை தந்தாலும், அவள் அவனுடைய கைக்குட்டையால் முகத்தை துடைப்பது அவனுக்கு இதமாக இருந்தது.

“நான் இவானை வச்சி ரிஸ்க் எடுத்துட்டேன். இதெல்லாம் நான் முன்னமே யோசித்திருக்கணும்.”

“நீ தைரியமா முடிவெடுத்தே. நாம இவானோட குடும்பம். நம்ம கிட்டே இருந்து அவனை பிரிக்க முடியாது. உனக்கும், இவானுக்கும் தீங்கு நடக்க நான் விட மாட்டேன்.”

ஆர்யன் தண்ணீரை ஊற்றி அவளுக்கு குடிக்கக் கொடுக்க, அதை வாங்க நீண்ட அவள் கை நடுங்கியது.

“நீ இறகை போல நடுங்குற. உன்னை பலவீனமானவனு நீ நினைச்சிக்கறே. இந்த மாதிரி சமயத்துல தான் ஒருத்தொருக்கொருத்தர் ஆதரவா இருக்கணும். அழாதே!” என்ற அவன் கண்களில் வலி அவள் கண்ணீர் கண்டு.

ருஹானா தண்ணீர் குடித்து முடித்ததும் “இப்போ பரவாயில்லையா?” என கேட்டான். “உங்க கைக்குட்டை ஈரமாயிடுச்சி. நீங்க பத்திரமா வச்சிருப்பீங்க. நான்…” என்றவளின் பேச்சில் இடையே நுழைந்த ஆர்யன் “நீ அதுக்கு உயிர் கொடுத்துட்டே….“ என்றவன் சில விநாடிகள் தாமதித்து “இவானுக்காக!” என்று சேர்த்து சொன்னான்.

“இப்போ உன்னை திடப்படுத்திக்கோ. இவான் உன்னை கண்ணீரோட பார்க்கக் கூடாது.”

——–

“நீ ஏன் அக்கா திரும்ப என்னை அறையில அடைக்கிறே? ஆர்யன் அவன் கைக்குட்டையை குப்பைக்காரிக்கு கொடுக்கறான். நான் போய் அவளோட இடத்தை அவளுக்கு காட்டிட்டு வரேன்!” என கதவை நோக்கி பாய்ந்த தங்கையை கரீமா ஒரே பிடியில் இழுத்து கட்டிலில் தள்ளினாள்.

“அடங்கு சல்மா! ஆபிசர்ஸ் முடிவெடுக்கற வரை நாம அமைதியா இருக்கணும். வெற்றி கோட்டை நெருங்கிட்டோம். உன்னோட சின்னப்பிள்ளத்தனமா பொறாமையால என்னோட திட்டம் பாழாக நான் விட மாட்டேன்.”

“என்னோட வலி உனக்கு புரியாது. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கற நேரம் நான் நரகத்துல இருக்கேன். அவங்க பேசும்போது என்மேல சுவர் இடிஞ்சி விழுது. உனக்கு தெரியல, அவன் பார்வையிலயே அவ மேல வச்சிருக்கற காதல் வழியுது.”

கரீமா அவளை பயத்தோடு பார்க்க, சல்மா தலையணைகளை விட்டெறிந்தாள். வெளியே நின்றிருந்த நஸ்ரியாக்கு சல்மா கத்துவது மட்டும் கேட்க, பீதியோடு பார்த்தவள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.

“நீ சொல்லியிருக்கே தானே! ஆர்யன் யாருக்குமே அவன் கைக்குட்டையை தர மாட்டான்னு. இப்போ பாரு, அந்த சூனியக்காரி, அந்த நாட்டுப்புறம் அதை வச்சிருக்கா. எனக்கு எரியுது.”

“பழசை விடு. எதிர்காலத்தை பாரு. இப்போ அவங்களுக்கு நடக்கறது எல்லாம் உனக்கும் நடக்கும். பொறுமையா இரு. இவான் மாளிகையை விட்டு போய்டுவான். அந்த பாம்பும் பின்னாலயே போய்டும். எல்லாம் உனக்கு சாதகமா நடக்கும்” என தங்கையின் தோள் மேல் கை போட வந்த கரீமாவை சல்மா உதறினாள்.

——-

இவான் தான் வரைந்த அசுரன், சிறுவன், இளவரசி படத்தை இரு அதிகாரிகளுக்கும் காட்டி அந்த கதையை சொன்னான். “நீ அந்த அசுரனை பார்த்து பயப்படலயா?” என கேட்ட கேள்விக்கு இல்லையென தலையாட்டிய இவான் அந்த படத்தை வாங்கி அணைத்துக் கொண்டான்.

மூவரும் வெளியே வர வாசலில் நின்ற ருஹானாவை இவான் ஓடிவந்து அணைத்துக் கொண்டான். அவனை முத்தமிட்ட ருஹானா “பார்த்தியா, அன்பே! பயப்பட ஒன்னுமே இல்ல” என சொல்லி கட்டிக்கொண்டாள்.

“இவான் எங்களுக்கு அழகா ஒரு கதை சொன்னான். அவனோட சித்தப்பா சொன்ன அசுரன் கதை. அவன் உங்களை பார்த்து பயப்படல. மாறா உங்க மேல அதிக நம்பிக்கை வச்சிருக்கான். ஆச்சரியமா இருக்கு” என லைலா சொல்ல, ஆர்யன் “கண்டிப்பா. நான் அவனோட சித்தப்பா. எங்களோட உறவு ஆழமானது. பலமானது. அதை நீங்க பேசி தெரிஞ்சிக்க முடியாது” என்றான்.

“சித்தப்பா!” என இவான் ஆர்யனை அணைத்துக்கொள்ள, “எதுக்கும் கவலைப்படாதே, அக்னிசிறகே!” என அவன் இவானின் முதுகை தட்டிக்கொடுக்க, இருவரின் பந்தத்தை அதிகாரிகளும் கவனித்தனர்.

“நீங்க வாங்க மிஸ் ருஹானா!” என லைலா அவளை விசாரணைக்கு அழைக்க, ஆர்யன் அவளுக்கு கண்களால் தைரியம் சொன்னான்.

“சொல்லுங்க மிஸ் ருஹானா! நீங்க ஏன் உங்களுக்கு சொல்லப்பட்ட நிபந்தனையை தெரிஞ்சும் மீறினீங்க?”

“இவானுக்காக!”

“அப்படினா நீங்க இவானுக்காக இவானையே ரிஸ்க் எடுத்தீங்களா?”

“ஆமா, இவானுக்கு அம்மா அப்பா கிடையாது. அதனால அவன் எங்க ரெண்டு பேர் கூடவும் அதிக நெருக்கமாக இருப்பான். அவன் சித்தப்பாவை பிரிந்ததால மனதளவில அதிகமா பாதிக்கப்பட்டான். அவனோட குழந்தை மனசு துயரமாகி கிடந்தது. அதனால நான் இப்படி முடிவெடுக்க வேண்டியதாகிடுச்சி”

சூனியங்களின் சூழ்ச்சியால் எல்லை வகுக்கப்பட்டபோது

அன்பு மட்டும் போதவில்லை, சிறுகுஞ்சுக்கு!

கதகதப்பான அரவணைப்பையும் தந்தையானவனிடம்

தேடியே தன்னியல்பை தொலைத்து தவிக்கும்போது

உரிமைச்சட்டத்தை தாண்டியே சிறுவனை

மகிழச்செய்ய துணிந்திடுமே தாயினன்பு! 

“இவான் அவனோட சித்தப்பா கூட இருக்கற பிணைப்பு அழகா இருக்கு. வெளிப்படையா தெரியுது. ஆனா முன்னே அப்படி இல்லயே. எங்க அறிக்கையில் கூட அப்படித்தான் சொல்லப்பட்டு இருக்கு.”

“எப்பவுமே அவங்க ரெண்டு பேருடைய அன்பும் அதிகமாக தான் இருந்திருக்கு. புதுசா எதும் மாறல. ஆனா இப்போ இவானுடைய மகிழ்ச்சிக்காக அவன் சித்தப்பாவோட குணங்கள் மாறி இருக்கு. அவரோட அன்பை வெளிப்படையா காட்ட முயற்சி செய்றார்.”

“எங்க அறிக்கையில இந்த மாற்றத்தை நாங்க குறிப்பிட்டு பரிந்துரை செய்தாலும், உங்க மேல இருக்கற குற்றச்சாட்டு இன்னும் அப்படியே தான் இருக்கு, மிஸ் ருஹானா!”

“என்னோட மனசாட்சிக்கு விரோதம் இல்லாம நான் சரியா தான் நடந்திருக்கேன்.”

“அதை நாங்க தான் முடிவெடுக்கணும் மிஸ் ருஹானா! சட்டத்தை மதிக்கணும்ங்கற தர்க்கரீதியா முடிவை எடுக்காம நீங்க உணர்வின் அடிப்படையில நடந்திருக்கீங்க.”

———

“நீங்க கெட்டவர்னு அவங்க நினைக்கறாங்க, சித்தப்பா. ஆனா நீங்க அப்படி இல்ல, என்மேல் நிறைய அன்பு வச்சிருக்கிங்கன்னு நான் அவங்களுக்கு சொல்லிட்டேன். ஐ லவ் யூ சித்தப்பா!” என இவான் சொல்ல, நெகிழ்ந்து போன ஆர்யன் அவன் முடியை ஒதுக்கி விட்டான்.

அங்கே வந்த அம்ஜத் “ஆர்யன்! இவானை அவங்க கிட்டே கொடுத்துடாதே!” என அச்சத்துடன் சொல்ல, ஆர்யன் “கவலைப்படாதீங்க, அண்ணா!” என சொல்ல, “பெரியப்பா என்னை கூட்டிட்டு போக தான் அவங்க வந்திருக்காங்க” என இவான் சொல்லவும், அம்ஜத் இவானின் கையை பிடித்தான்.

“நாம ஒளிஞ்சிக்கலாம், இவான். அவங்க கண்டுபிடிக்க முடியாது” என அம்ஜத் இவானை அணைத்து நெற்றியில் முத்தமிட, இவான் “சித்தியும் வந்துடட்டும். நாம யாருக்கும் தெரியாம மறைஞ்சிக்கலாம்” என சொல்ல, ஆர்யன் அவர்களை கவலையோடு பார்த்தான்.

———

அதிகாரிகள் தங்களுக்குள் பேசி முடிவெடுக்க தனி அறை வேண்டும் என கேட்க, ஆர்யன் கரீமாவோடு அவர்களை அனுப்பிவிட்டு, ருஹானாவிடம் “நீ ஓகே தானே? அங்க என்ன நடந்தது?” என பதட்டமாக கேட்டான்.

“நான் உங்களை பத்தி எல்லாமே அவங்களுக்கு சொல்லிட்டேன். நீங்க எப்படி இவானையும் குடும்பத்தினரையும் பாதுகாக்கறீங்க! சின்ன சின்ன விஷயத்துக்கும் எத்தனை அக்கறை காட்றீங்க! உங்க அன்பு, பாதுகாப்பு எல்லாமே எங்களுக்கு எப்படி நிம்மதியா உணர வைக்குது.. எல்லாம் சொல்லிட்டேன்” என ருஹானா சொல்ல, ஆர்யன் அவளை அன்போடு பார்த்தான்.

“நல்ல இதயம் கொண்ட அசுரன் நீங்கன்னு இவானும் சொல்லியிருக்கான். இப்போ என்ன ஆகும்?” என அவள் கேட்க, ஆர்யன் “கவலைப்படாதே. நான் எல்லாம் பார்த்துக்கறேன். நீங்க ரெண்டு பேரும் வருத்தப்பட நான் விட மாட்டேன். நீயும் இவானும்” என அவர்கள் பேசுவதை தூணின் பின்னால் மறைந்திருந்து சல்மா பார்த்திருந்தாள்.

——

“நாங்க தனியா பேசணும். எதும் நம்பிக்கை வச்சிக்காதீங்க. இது அறிவிப்பு சொல்ற மீட்டிங் தான். முடிவை மாத்துற மீட்டிங் இல்ல” என கரீமாவிடம் அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்க, கரீமாவின் மலர்ந்த முகம், ஆர்யன் அதைக் கேட்டுக்கொண்டே இறுக்கமாக வருவதை கண்டவுடன் நொடியில் மாறி வருத்தத்தை பூசிக்கொண்டது.

————

தனியாக நின்றிருந்த ருஹானாவை நெருங்கிய சல்மா “என்ன நடந்தது?” என கேட்டாள். அவள் உண்மையான அக்கறையில் கேட்கிறாள் என நினைத்த ருஹானா “கடுமையா தான் பேசுறாங்க” என கவலையாக பதிலளித்தாள்.

“பின்ன நீ என்ன நினைச்சே? நீ செய்த காரியத்துக்கு பாராட்டு பத்திரமா வாசிப்பாங்க? நீ தான் ரூல்ஸ்சை மதிக்கலயே”

“இவானுக்காக….”

“சும்மா இவான் இவான்னு நடிக்காதே! அவன் தான் உன் கையில் இருந்தான்ல அப்புறம் நீ ஏன் இங்க திரும்பி வந்தே? உன் மனசுல வேற எண்ணம் இருக்கு.”

ருஹானா அவளை புரியாமல் பார்க்க சல்மா மேலும் பொரிந்தாள். “இப்போ இவானை கூட்டிட்டு போக போறாங்க. அதுக்கு நீ தான் காரணம்.”

“நான்…”

“நீ…. நீ… நீ… நீ எப்பவும் உன்னை பத்தி மட்டும் தான் யோசிக்கறே. உன் சுயநலத்தால இவான் இந்த குடும்பத்தை இழக்கப் போறான். இந்த வீட்டை இழக்கப் போறான். வாழ்த்துக்கள்! நீ ஒரு நல்ல சித்தி!” இகழ்ச்சியாக சொல்லிவிட்டு சல்மா செல்ல, ருஹானா செயலிழந்து நின்றாள்.

——-

Advertisement