Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                                            அத்தியாயம் – 92

ஆர்யன் ருஹானாவை வரவழைத்த மருத்துவமனையின் மேல்தளம் அமைந்த பகுதி மனதை கொள்ளை கொள்வதாக இருந்தது. பெரிய நதி ஒன்று இரு மலைகளுக்கு நடுவே ஓடி கடலை சென்றடையும் காட்சி பின்னணியில் தெரிந்தது.

நீல வானமும், நீல கடலும் தொட்டு தழுவ, வானில் பறக்கும் பறவைகள் நாவாய்களாக தெரிய, நீரில் நகரும் நாவாய்கள் மிதக்கும் பட்சிகளாய் காட்சி தர, மேலே வெண்மேகங்களுக்கு நடுவே கதிரவன் இம்மதுரமான அழகை ரசித்துக்கொண்டிருந்தான்.

அவளை அழைத்து வர செய்தவனும் ரம்மியமாக தான் இருந்தான். எப்போதும் கோட்சூட்டுடன் இருக்கும் அவன் இன்று சாம்பல் நிற ஹூடியில் இளமையின் துள்ளலில் அழகாக இருந்தான். சோர்வாக காணப்பட்டாலும், மனதின் பூரிப்பும், அவளை பார்க்கும் ஆசையும் முகத்திற்கு தனி சோபையை தந்தது, அவளை வசீகரமாக ஈர்த்தது.

அவள் மீது கொண்ட காதலும், அவளை காண ஏற்பட்ட துடிப்பும் தான் அவனை மின்னல் வேகத்தில் எழுந்து நடக்க வைத்துவிட்டதா?

ஆர்யன் தன்வீரை தடுத்து நிறுத்தியது எதற்கோ? காவலரிடம் அனுமதி வாங்கி வெளியே வர உதவி செய்யத்தானோ?

அழைத்து வந்த ரஷீத் வழிகாட்டி விட்டு கீழேயே தங்கிவிட்டான் போலும். ரஷீத்தும் அவர்களின் காவிய காதலுக்கு உதவி செய்வோர் பட்டியலில் வந்துவிட்டான். அவனது முதலாளியும் நண்பனுமான ஆர்யனின் மனதில் உள்ளதை அவனும் சந்தேகமற தெரிந்து கொண்டான்.

ஆர்யன் காபியை நீட்டியபடியே இருக்க, ருஹானா அவனையே அதிசயமாக சன்ன சிரிப்புடன் பார்த்திருக்க, “எடுத்துக்க மாட்டியா?” என ஆர்யன் கேட்டான், புருவம் உயர்த்தி.

காபி கடனை திருப்பிக் கொடுப்பது நானும் உன்னிடம் திரும்பி வந்துவிட்டேன் என சொல்லாமல் சொல்வதா?

அவள் காபியை வாங்க அவளால் சூடு பொறுக்க முடியவில்லை. வேகமாக “என்கிட்டே கொடு” என வாங்கியவன், தன் காபியை மதில் சுவரில் வைத்துவிட்டு, குடுவையின் மேல் இருந்த ஒரு காலி கப்பை எடுத்து, ருஹானாவின் கப்பை அதற்குள் வைத்தான்.

“இப்போ சுடாது” என அவளிடம் கொடுத்துவிட்டு தன் கப்பையும் கையில் எடுத்துக்கொண்டான்.

“ஆனா நீங்க எப்படி இங்க வந்தீங்க? போலீஸ் எப்படி விட்டாங்க?” என கேட்டவள், குரலை தழைத்து “இல்ல.. அவங்களுக்கு தெரியாம தப்பிச்சி வந்திட்டீங்களா?” என்றாள்.

அவன் முகத்தின் மலர்ச்சி விரிவடைந்ததே தவிர வாய் திறக்கவில்லை.

“உங்க வாக்கை காப்பாத்தவா?” ருஹானா நிறுத்தவில்லை. “நாம அப்புறம்கூட காபி குடிச்சிருக்கலாமே!”

‘என்னருகே நீயிருந்தால் காயமும் மாயமாகும்’ என மனதில் அவளோடு பேசியவன் லேசான புன்னகையுடன் சொன்னான். “இன்னொரு கப்புக்கு இப்போ தேவையே இல்ல. காபி ஆறி போயிருக்கும்” அவளின் சூடான பேச்சுக்கு முன்னால் காபி குளிர்ந்திருக்குமாம்.

ருஹானாவிற்கு சிரிப்பு வந்துவிட “நீங்க உங்க வாக்கை நிறைவேத்திட்டீங்க!” என்றாள். “நீயும் தான்!” என்றான் அவன். ‘உங்களுக்காக இங்கேயே காத்திருக்கிறேன்’ என அவள் சொன்னதை நிறைவேற்றிவிட்டாள் அல்லவா?

இருவரும் ஒருவரையொருவர் கண்களால் விழுங்கிக்கொண்டே, காபியையும் விழுங்க, ஆர்யன் “இப்படி ஒரு இடத்துல பேப்பர் கப்புல காபி கொடுத்து என்னோட கடனை தீர்ப்பேன்னு நான் நினைச்சி பார்க்கல. ஆனா..” என்றான்.

சென்ற முறை போனது போல அழகான காபி கடையில் இனிமையான இசை பின்னணியில் ஒலிக்க…. அப்படியேதும் திட்டமிட்டுருப்பானோ?

அவன் பேச்சின் இடையே குறுக்கிட்ட ருஹானா “எனக்கு இது நல்லா இருக்கு…” என வேகமாக சொல்லிவிட்டாள். அவனின் கூர்மையான பார்வையை உணர்ந்து “வந்து… அது…. காபி… இந்த இடம் கூட” என சொல்லி அங்குமிங்கும் பார்க்க, அதன் பின்னரே இருவருக்கும் சுற்றுப்புறத்தின் அழகு கண்ணில் பட்டது.

அதையும் ரசித்தபடியே காபியையும் ரசித்து அருந்த, ருஹானாவின் முகத்தில் சிரிப்பை பார்த்த ஆர்யன் “என்ன யோசிக்கிறே?” என கேட்டான்.

“எனக்கு எப்பவும் மேகங்களை பார்க்கறது ரொம்ப பிடிக்கும். மேகம் கறுத்து மழை பெய்யும்போது சின்ன வயசுல நான் நினைப்பேன். சூரியன் விட்டு பிரிந்ததால மேகம் அழுது, கண்ணீர் விடுது. மேகம் சூரியனை மிகவும் நேசிக்குது. சூரியன் விலகி போனதால பாவம் மேகம் வேதனைப்படுது. அப்படிக்கூட நான் யோசித்து இருக்கேன்” என சிரிப்புடன் சொல்ல, ஆர்யன் அவள் சொல்வதை ஆர்வமாக கேட்க “அப்போ நான் படிச்ச தேவதை கதைகளோட தாக்கமா கூட இருக்கலாம்” என முடித்தாள்.

வானத்தை பார்த்த ஆர்யன் “ஆனா இது எதிர்பதமாக கூட இருக்கலாம். சூரியன் தான் மேகத்தை காதலிக்குது. அதனால தான் அது விலகி போகுது” என்றான்.

“சூரியன் மேகத்தை நேசிச்சா அது ஏன் விலகி போகணும்?”

“அது பயப்படலாம். மேகத்தை நெருங்கினால் சூரியனோட நெருப்பு மேகத்தை ஆவியா மாற்றிடுமே!” என ஆர்யன் சொல்ல, ருஹானா அவனை வியப்பாக பார்த்தாள்.

ஆர்யன் மனதில் இப்படி நினைக்கிறானா? ‘நான் உன்னை காதலிக்கிறேன். ஆனால் அதை வெளிப்படுத்த, உன்னை நெருங்க பயமாக இருக்கிறது, உனக்கு பாதிப்பு ஏற்படுமோ என’

தலையை ஆட்டிய ருஹானா “நான் மேகத்தோட பார்வையில தான் எப்பவும் பார்த்துட்டு இருந்திருக்கேன். ஆனா சூரியனும் பாவம் தான்” என்றாள்.

“இருக்கலாம். உனக்கு தெரியாது அல்லது நீ பார்க்க முடியாம இருக்கலாம்.. அதோட இதயத்திலயும் இப்படி நெருப்பு கொளுந்துவிட்டு எரியும்.”

“நல்லவேளையா சூரியனுக்கு எரித்து தான் பழக்கம். அதனால சூரியனுக்கு வலி ஒன்னும் இல்ல. சரி தானே?”

“இல்ல.. அது தன்னையும் எரிச்சிக்கிட்டு தான் எரியுது.”

அவனைத் தான் சூரியனுக்கு ஒப்பிட்டு பேசுகிறான் என அவளுக்கு புரிந்துவிட்டது. இத்தனை நேரம் இலகுவாக பேசிக் கொண்டிருந்தவன் தீவிரமாக பேச, ‘அவன் உடல் நலத்துக்கு அது ஊறு விளைவிக்குமோ?’ என அதை மாற்ற நினைத்தாள்.

“நீங்க ரூம்க்கு போகலாமே. இப்போ தான் சர்ஜரி முடிஞ்சிருக்கு. நாம காபியும் குடிச்சிட்டோம்”

“நான் நல்லா இருக்கேன், எப்பவும் இருக்கறதைவிட நலமா!” உறுதியுடன் அவன் சொல்ல, திருப்தியானவள் விடாமல் கேட்டாள்.

“ஆனா என்னால ஏதாவது கெட்டது நடந்திடுச்சினா?”

“அப்படி எதுவும் எனக்கு ஆகாது.”

“சத்தியமா?”

“சத்தியமா!” பழைய இளநகை மீண்டிருந்தது அவனிடம்.

கண்ணால் பேசி நின்றனர் இருவரும், காவலன் வந்து அழைக்கும்வரை. “ஆர்யன் அர்ஸ்லான்! நேரமாச்சி. அறைக்கு போகலாம்.”

கையில் காபி கப்புடன் மிகச்சிறிய எட்டுகளை வைத்து மெல்லமாக நடந்தாலும் அவளை பார்த்துக்கொண்டே, மனதில் அவளிடம் பேசியவாறே நடந்தான். ‘விடைபெறும்போதெல்லாம் மறக்க முடியாத தருணங்களை பரிசாக தந்தே செல்கிறாய்…’

——–

“ரொம்ப சீக்கிரம் தேறிட்டீங்களே, மிஸ்டர் ஆர்யன்! எக்ஸ்ரே முடிவும் வந்திடட்டும். இன்னும் எவ்வளவு முன்னேற்றம்னு பார்த்திடலாம்” என மருத்துவர் மற்ற முடிவுகளையும், ஆர்யனையும் பரிசோதித்துவிட்டு சொல்ல, கரீமா கேட்டாள்.

“முடிவு வரவும் தாமதமாகுமா, டாக்டர்? எக்ஸ்ரே எடுக்க கூட்டிட்டு போயிட்டு வர அவ்வளவு நேரம் ஆச்சே” என அக்கா கேட்க, அருகே நின்ற தங்கையும் “ஆமா, ஆர்யன் ரொம்ப நேரமா திரும்பி வரல” என புகார் படிக்க, ஆர்யன் கதவோரம் ஒதுங்கி நின்ற ருஹானாவை அர்த்தமாக பார்த்தான்.

அவள் புன்னகையை மறைக்க முற்படவில்லை. ஏனென்றால் பின்னால் நின்ற அவளை தான் யாரும் பார்க்கவில்லையே, ஆர்யனை தவிர.

“ஆனா மிஸ்டர் ஆர்யன் தான் …” என மருத்துவர் ஏதோ சொல்ல தொடங்க, ஆர்யன் அவர் பேச்சை தடுக்க உள்ளே நுழைந்த ரஷீத்தை வேகமாக அருகே அழைத்தான்.

“ரஷீத்! என்ன?”

“ஆர்யன்! நல்ல செய்தி. நீதிமன்றத்தில இருந்து உங்க விடுதலை உத்தரவு வந்திடுச்சி.”

“அல்லாஹ்க்கு என்னோட நன்றி” என்று உடனே சொன்ன ருஹானாவின் மகிழ்ச்சியை ஆர்யன் கவனிக்க, சல்மா “எனக்கு அதிக ஆனந்தம்” என சொல்ல, கரீமா “இறுதியா நீதிக்கு வெற்றி” என்றாள்.

“நாம இப்போ ஒரு காபி குடிச்சி இதை கொண்டாடலாம்!” என சல்மா குதுகலிக்க, பட்டென்று “அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல” என சொன்ன ஆர்யன் மீண்டும் ருஹானாவை பார்க்க ‘நாம தான் காபியை குடித்து கொண்டாடிவிட்டோமே!’ என அந்த பார்வை சொன்னது. ருஹானா மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் தலைகுனிந்து கொண்டாள்.

சல்மாவின் சிரிப்பு மறைய, ஆர்யன் “ரஷீத் வீட்டுக்கு போக என்ன செய்யணும்னு பாரு” என உத்தரவிட மருத்துவர் ஆர்யனை வீட்டுக்கு அனுப்ப மறுத்தார்.

“ஆனா இன்னும் மத்த ரிசல்ட்ஸ்லாம் வரல. நீங்க இங்க தான் இருக்கணும்.”

“கவலைப்படாதீங்க டாக்டர். நீங்க சொல்றபடி நாங்க நடந்துக்குவோம். ஆர்யனை கவனமா பார்த்துக்குவோம்” என ரஷீத் உறுதி அளிக்க, மருத்துவர் மனமின்றி அனுமதி தந்தார்.

——-

“ஹேய்! சித்தப்பா வந்துட்டாங்க!”

“ஆர்யன் சரியாகி வந்திட்டான். அல்லாஹ்! உங்களுக்கு நன்றி!”

இவானோடு அம்ஜத்தும் ஓடிவர, பணியாளர்களும் அங்கே குவிந்தனர்.

“நான் உங்களை அதிகமா தேடினேன். உங்களுக்கு நல்லா ஆகிடுச்சா, சித்தப்பா?”

“ஆமா, அக்னி சிறகே! உன் சிண்டு என்னையும் குணமாக்கிடுச்சி!” என சிண்டு பொம்மையை இவானிடம் கொடுத்த ஆர்யன் அவன் தலையை பாசமாக தடவினான்.

ஆர்யனின் கால்களை கட்டிக்கொண்ட இவான் “சித்தி! நான் சொன்னேன்ல” என பெருமை பேச, கண்களில் கண்ணீருடன் அம்ஜத் ஆர்யனை தழுவிக்கொண்டான்.

எல்லாரும் கூடி நின்று ஆர்யன் குணமாக வாழ்த்து சொல்ல, ஆர்யன் அனைவருக்கும் மனமார நன்றி சொன்னான். மன்னிப்பு என்கிற வார்த்தை ஆர்யன் நாவிலிருந்து கிளம்பவே கிளம்பாது என்றாலும் நன்றியும் அத்தனை சீக்கிரம் வெளிவராது. லேசான தலையசைப்பே அவனிடமிருந்து வெளிவரும் பெரிய செயல். ஆனால் இப்போதெல்லாம் சர்வசகஜமாக அனைவருக்கும் நன்றி சொல்கிறான்.

“உன் அறையில எல்லா ஏற்பாடும் ஜாஃபர் செய்துட்டான். நீ மேலே போய் ஓய்வெடு” என கரீமா சொல்ல, சல்மா ஆர்யன் அருகே வந்து “நான் உதவி செய்றேன்” என கையை பிடிக்க வந்தாள்.

அவளிடமிருந்து விலகிய ஆர்யன் “சிங்கப்பையா! நீ என்னை கூட்டிட்டு போறீயா?” என இவானிடம் கேட்க, அவன் ஆனந்தமாக வந்து சித்தப்பாவின் கையை பிடித்து படியில் கூட்டிச் சென்றான்.

“கண்ணே! உன் சித்தப்பா இன்னும் முழுமையா குணமாகல. அவரை சோர்வடைய வைக்காதே!” என வேகமாக இழுத்த இவானிடம் ருஹானா எச்சரிக்க, அவளிடம் ஒன்றும் இல்லை என கைகாட்டிய ஆர்யன் “இந்த குட்டி வீரன் அவனோட சித்தப்பாவை வழிநடத்துவான்” என சொல்ல, இவான் சிரிப்புடன் கண்களை மூடிக்கொண்டு மூன்று முறை வேகமாக தலையாட்டினான்.

“மெதுவா தேனே!” என ருஹானாவும் அவர்களின் பின்னே சொல்ல, சல்மா கடுப்பாக கண்ணை மூடி தன்னை அடக்கிக்கொண்டு நின்றாள்.

“என்ன செய்வியோ, ஏது செய்வியோ நீ தான் ஆர்யனை பார்த்துக்கணும். அவளை அவன் கிட்டே நெருங்க விட்டுறாதே!” தமக்கை இன்னும் அவளை ஏற்றிவிட்டாள்.

——-

Advertisement