Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 91

எதிரி காதரின் ஆட்களால் காயம் பட்ட ஆர்யனை, மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக நகரும் படுக்கையில் கூட்டிச்செல்லும் வேளையில் ரஷீத்தும், ருஹானாவும் வந்துவிட்டார்கள்.

ஆர்யன் கூடவே ஓடிச் சென்ற ருஹானா “தயவுசெய்து திரும்பி வாங்க!” என கண்ணீர்க்குரலில் சொல்ல, அரை மயக்கமாக இருந்த ஆர்யன் கண்விழித்தான். “நான் இங்க தான் இருக்கேன். உங்களுக்காக இங்கயே காத்திருப்பேன். சரியா?” என அவள் கேட்க, கண்களை மூடி திறந்து ஆமோதித்தவன் உடனே உணர்விழந்தான். 

கதவுகள் மூடும்வரை உடன் ஓடியவள் “அல்லாஹ்! அவரை காப்பாத்துங்க!” என்று பிரார்த்தனை செய்தபடி நின்றுவிட்டாள். அவள் வேதனையையும், வேண்டுதலையும் பார்த்தபடி ரஷீத்தும் கவலையோடு நின்றான்.

——–

கரீமா, சல்மா, அம்ஜத் வேகமாக உள்ளே வர, கரீமா கேட்டாள். “ரஷீத்! எப்படி நடந்தது இது? ஆர்யன் எப்படி இருக்கான்?”

“நாலு பேர் சூழ்ந்துக்கிட்டு ஒருத்தன் பின்னால இருந்து குத்தியிருக்கான். இடது பக்க இடுப்புல அடிபட்டு இருக்கு. நிறைய ரத்தம் வெளியேறியிருக்கு. கவலைக்கிடமா தான் இருக்கார். டாக்டர்ஸ் எதும் தெளிவா சொல்ல மாட்றாங்க. ஆபரேசனுக்கு அப்புறம் தான் அவரோட உடல்நிலையைப் பற்றி தெரிஞ்சிக்க முடியும்னு சொல்றாங்க” 

அதை கேட்ட அம்ஜத் நிற்க முடியாமல் அப்படியே அமர்ந்துவிட்டான். “அவன் போக மாட்டான். அவனால போக முடியாது. நம்மை விட்டுட்டு ஆர்யன் போக மாட்டான்” அம்ஜத்தின் கண்ணீர் கண்டு ருஹானாவிற்கும் அழுகையாக இருந்தது. சல்மாவின் கண்களும் நீரை வார்த்தன.

ரஷீத் மெல்ல சொன்னான். “உண்மையில ஆர்யன் வழக்குல இருந்து நாளைக்கு விடுபடப் போறார்”

“எப்படி ரஷீத்? ஆர்யன் நிரபராதின்னு தெரிஞ்சிடுச்சா?

“ஆமா! மிஸ் ருஹானாவோட முயற்சியால நிஸாம் எல்லா உண்மையும் சொல்லிட்டான்.”

சகோதரிகள் இருவரும் அதிர்ச்சியடைய, சல்மாவின் பார்வை சோகமாக நின்று கொண்டிருந்த ருஹானாவின் மேல் வெறுப்புடன் திரும்பியது. சமாளித்துக்கொண்ட கரீமா “அல்லாஹ்க்கு நன்றி. நல்லவேளையா ஆர்யன் திரும்ப சிறைக்கு போக வேண்டியது இல்ல” என்றாள்.

“அல்லாஹ்க்கு மிக்க நன்றி. ஆர்யனுக்கு சரியாகிடும். அவன் வீட்டுக்கு வந்துடுவான். நலமோட வந்திடுவான்” என அம்ஜத் சொல்ல, “ஆமா டியர்! ஆர்யன் வந்திடுவான்” என கரீமா அவனை தேற்றினாள்.

சல்மா கோபமாக ருஹானா பக்கம் நகர, அவளை கரீமா தனியாக தள்ளிக்கொண்டு வந்தாள். “மறுபடியும் ஆர்யன் கண்ணுக்கு அவ தான் தேவதையா தெரிய போறா… டாமிட்!” என சல்மா கத்த, “உன்னை கட்டுப்படுத்திக்கோ, சல்மா. இந்த சிக்கலையும் நாம ஒரு வாய்ப்பா மாத்துவோம். புரியுதா? ஆர்யனுக்கு மயக்கம் தெளியட்டும். அவனோட உனக்கு தனிமை ஏற்படுத்தி தரேன். சரியா?” என கரீமா அவளின் ஆத்திரத்தை குறைக்க முயற்சி செய்தாள்.

———

ஆர்யன் குத்துப்பட்டது வாசிமுக்கு தெரிய வர, அவன் மிகவும் அதிர்ச்சி அடைந்தான். உடன் இருந்த தன்வீரை நிலைமையை தெரிந்து வரும்படியும் ருஹானாவிற்கு ஆறுதல் சொல்லவும் அனுப்பி வைத்தான். “அர்ஸ்லான் உடல்நிலை பற்றி எனக்கு தெரிவி, தன்வீர். உன் தகவலுக்காக நான் காத்திருப்பேன்” என வாசிம் அவனிடம் சொல்லிவிட்டான்.

——–

“அல்லாஹ்! அவர் திரும்பி வர அவருக்கு உதவி செய்ங்க. இவானுக்கு அவரை கொண்டு வந்து சேருங்க” என ருஹானா வேண்டியபடியே இருக்க, அவளது கண்ணீரைப் பார்த்து சல்மாவிற்கு கடுப்பானது. அவளையே முறைத்துக்கொண்டு நின்றாள்.

ரஷீத் காபி வாங்கி வந்தவன், சல்மாவிற்கு கொடுத்துவிட்டு ருஹானாவிடம் வந்தான். “காபி குடிக்கிறீங்களா?” என அவன் அவளிடம் காபியை நீட்டியபடி  கேட்டான் 

ருஹானாவிற்கு காபியை பார்த்ததும் ஆர்யன் அவளிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘உனக்கு ஒரு காபி கடன்பட்டு இருக்கேன். ஆனா நான் அதை திருப்பி செலுத்திடுவேன்.’ 

அதை நினைத்து மேலும் வருத்தப்பட்ட ருஹானா “நான்… நான் அப்புறம் குடிக்கறேன்” என மறுத்துவிட்டாள். ரஷீத்தும் அவளை வற்புறுத்தவில்லை. காபி குடித்துக்கொண்டிருந்த சல்மாவிற்கு ஆத்திரம் இன்னும் அதிகமானது.

அறுவை சிகிச்சை முடித்து மருத்துவர் வெளியே வர, அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டனர். “டாக்டர்! எப்படி இருக்கு நிலைமை? பயப்பட ஒன்னும் இல்லயே?” என கரீமா கேட்க, “என் தம்பிக்கு சரியாகிடுச்சா? அவன் நல்லா இருக்கானா?” என அம்ஜத் கேட்டான்.

“இத்தனை சீக்கிரம் எதும் சொல்ல முடியாது. ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சது. உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்ல. அடிவயிறு வரைக்கும் ஆழமான காயம். வேற பாதிப்புகள் என்னென்னன்னு இனி தான் தெரிய வரும்.. அவர் கண் திறந்தா தான் மற்ற பரிசோதனைலாம் செஞ்சி உறுதியா சொல்ல முடியும்.”

“நாங்க எப்போ பார்க்கலாம்?”

“அவர் ஐசியுல இருக்கார். இப்போ யாரும் பார்க்க முடியாது.”

“ஓய்வெடுக்கட்டும் கரீமா. ஆர்யனுக்கு ஓய்வு தேவை. அவனை நாம தொல்லை செய்யக்கூடாது” என அம்ஜத் சொல்ல, அவனுக்கு சரியென்ற கரீமா, சல்மாவிடம் “ஆர்யன் வெளிய வந்ததும் எப்படி இந்த மாயக்காரி அவனை பார்க்கறான்னு நானும் பார்க்கறேன்” என கங்கணம் கட்டினாள்.

சுவரில் சாய்ந்து நின்ற ருஹானாவிடம் வந்த கரீமா “ருஹானா டியர்! நீ மாளிகைக்கு போயேன். இங்க நாம செய்றதுக்கு ஒன்னும்  இல்ல. இவான் உன்னை தேடுவானே!” என சொல்ல, ருஹானா ஆர்யன் இருக்கும் அறையை திரும்பி பார்த்தாள். அவளுக்கு போக மனமில்லாத போதும் “சரி கரீமா மேம்!” என்றாள். 

கரீமா “நீ அம்ஜத்தையும் கூட்டிட்டு போறீயா, ருஹானா? ஆர்யனை பார்க்க அனுமதி கிடைச்சதும் நான் தகவல் சொல்றேன். நீங்க வந்து பாருங்க” என நைச்சியமாக பேசி இருவரையும் மாளிகைக்கு அனுப்பி வைத்தாள்.

ரஷீத் நடப்பதை பார்த்துக்கொண்டு நிற்க, சகோதரிகள் திருட்டுப் புன்னகை செய்துக்கொண்டனர்.

——–

ருஹானா இவானை தூங்க வைக்க “சித்தி! நீங்க ஏன் அமைதியா இருக்கீங்க?” என கேட்டான்.

“எனக்கு லேசா சோர்வா இருக்கு, அன்பே!”

“சித்தப்பா இன்னைக்கு வந்துடுவாரா?”

“அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. ஹாஸ்பிடல்ல இருக்கார். ஆனா நீ கவலைப்படாதே, செல்லம். டாக்டர்ஸ் சீக்கிரம் அவரை குணப்படுத்திடுவாங்க.”

“சீக்கிரம் வந்துடுவார் தானே?” என கவலையுடன் கேட்ட இவான் அவனுக்கு மிகவும் பிடித்த நாய்க்குட்டி பொம்மையை அவளிடம் கொடுத்தான். “சித்தப்பா கிட்டே இந்த சிண்டுவை கொடுங்க. எனக்கு உடம்பு சரியில்லாத போது இவனை பிடிச்சிக்கிட்டு படுத்துக்குவேன். உடனே எனக்கு சரியாகிடும். சித்தப்பாவும் அதே மாதிரி குணமாகி வீட்டுக்கு வந்துடுவார். சிண்டு நம்மோட ஸ்பெஷல் டாக்டர்!” 

அதை வாங்கிக்கொண்ட ருஹானா “கண்டிப்பா கண்ணே! சிண்டுவை உன் சித்தப்பாட்ட கொடுக்கறேன். இப்போ நீ கண்மூடி தூங்கு” என அவனை தூங்க வைத்தாள்.

வெளியே வந்தவள் ஆர்யன் அறையை பார்த்து சில விநாடிகள் வருத்தமாக நின்றுவிட்டு திரும்பி நடக்க, அவன் அறை திறக்கும் சத்தம் கேட்டது. மருத்துவமனையில் மயக்கமாக படுத்திருக்கும் அவன் அங்கே வர நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை என்ற போதும், ஆசை கொண்ட அவள் மனது ஆவலோடு திரும்பி பார்த்தது.

கையில் பையுடன் வந்த ஜாஃபர் “ருஹானா மேம்! ஆர்யன் சாரோட உடைகள் இதுல இருக்கு. நீங்க ஹாஸ்பிடல் போகும்போது இதை எடுத்துட்டு போங்க” என்று சொல்ல, மூச்சை ஆழ இழுத்துவிட்ட ருஹானா சரியென தலையாட்டினாள்.

கவலை நிறைந்த அவள் முகத்தை பார்த்த ஜாஃபர் கூறினான். “நீங்க வருத்தப்படாதீங்க. ஆர்யன் சார்க்கு ஒன்னும் ஆகாது. அது எனக்கு எப்படி தெரியும்னு கேட்டீங்கன்னா என்கிட்டே பதில் இல்ல. ஆனா எனக்கு நிச்சயமா தெரியும்”

——-

உணர்வில்லாமல் படுத்திருக்கும் ஆர்யனை கண்ணாடித் திரையில் பார்த்துவிட்டு சோகமாக கரீமாவின் பக்கத்தில் வந்து அமர்ந்த சல்மா “அக்கா! நீ சூனியக்காரியை மாளிகைக்கு அனுப்பி அவளுக்கு நல்லது செய்திட்டே. இல்லனா நான் அவளை அடிச்சிருப்பேன்” என்றாள், கோபமாக.

“பொறுமை சல்மா! இந்த சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்திக்கலாம்ன்னு பாரு. ஆர்யன் கூட நெருக்கமாகு” என்று கரீமா சொல்லிக்கொண்டு இருக்கும்போது பையுடன் ருஹானா அங்கே வந்தாள்.

அவளை நோக்கி பாய்ந்த சல்மாவை கையை பிடித்து இழுத்து நிறுத்திய கரீமா, பின்னால் நின்ற ரஷீத்தை கண்ணால் காட்டினாள். “என்ன ருஹானா திரும்பி வந்திட்டே?” என கரீமா கேட்க, “ஜாஃபர் அண்ணா துணிகளை கொடுத்து விட்டார்” என அவள் காட்டினாள். 

பையை வேகமாக வாங்கிக்கொண்ட கரீமா “சரி, நான் கொடுத்துக்கறேன். நீ இருக்கணும்னு அவசியம் இல்….” என சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட ரஷீத் “ருஹானா! அங்க போய் உட்காருங்க. நிக்காதீங்க” என நாற்காலியை காட்டினான். தனது எஜமானனுக்கு அவள் எத்தனை முக்கியம் என அவனுக்கு தெரிந்துவிட்டது.

“எதுக்கு இவ திரும்ப வந்து தொலைச்சா?” என சல்மா பல்லைக் கடிக்க, அவளை இழுத்துக்கொண்டு சென்ற கரீமா அவளை தள்ளி அமர வைத்தாள்.

ரஷீத் சென்று கண்ணாடித்திரையில் பார்ப்பதை கவனித்த ருஹானா எழுந்து அங்கே சென்றாள். ருஹானாவிற்கு வழிவிட்ட ரஷீத் விலகி சென்று நின்று கொண்டான்.

கருவிகள் மாட்டப்பட்டு மயங்கி படுத்திருந்த ஆர்யனை பார்த்த அவள் “நான் இங்க தான் இருக்கேன்” என்று சொன்னாள். இதே வார்த்தைகள் தான் ஆர்யனும் அவளை மரணக்குழியிலிருந்து மீட்க, மண்ணை தோண்டியெடுக்கும்போது பரிதவிப்போடு சொன்னது.

அவள் சொன்னதும் எதிர்புறம் இருந்த அவன் விரல் அசைந்தது அவளுக்கு தெரியவில்லை. அவன் கண்கள் திறக்காதா என அவள் ஏக்கத்துடன் பார்த்திருக்க, மூடிய விழிகளுக்குள் அவனோ இன்ப கனா கண்டு கொண்டு இருந்தான். 

அடர்த்தியான பெரிய மரம் கப்பும் கிளைகளுமாக விரிந்திருக்க, நிலவின் ஒளிக்கீற்றுகள் இடைவெளிகளில் வெள்ளிரேகைகளாக ஊடுருவ, மரத்தடியில்  வெள்ளைநிற ஆடையில் தேவதையாய் ருஹானா நின்றிருக்க, அதே வெண்ணிற உடையில் ஒரு இளவரசனை போன்ற கம்பீர நடையில் வந்த ஆர்யன் நீண்ட காம்புடன் கூடிய ரோஜா மலரை அவளிடம் நீட்டினான்.  

அவள் கன்னங்கள் சிவக்க வெட்க குறுநகையுடன் அதை பெற்றுக்கொண்டாள். ஆர்யன் அவள் காதருகே குனிந்து ஏதோ சொல்ல, அவனின் ஆழ்ந்த மூச்சும், கிறங்கிய அவன் குரலும் அவளுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. ரோஜா இதழை வருடியபடி அவள் அவனை நிமிர்ந்து பார்த்து கண்ணால் சிரித்தாள்.

பனிக்காற்று அதிகமாக வீச, பேசும்போது மட்டுமல்ல, மூச்சு விடும்போதே புகை வெளிவந்தது. ஆனாலும் அவள் அருகே ஆர்யன் கதகதப்பை உணர்ந்தான்.

கனவில் கண்ட அதே நிறைவை நினைவிலும் உணர்ந்த ஆர்யனின் கண்களில் அசைவு தெரிந்தது. அதை பார்க்கும்முன் ருஹானா நகர்ந்து வெளியே போய்விட்டாள்.

———

Advertisement