Advertisement

மருத்துவமனையின் வெளிப்புறம் தோட்டம் போல இருந்த பகுதியில் நீள பென்ச் ஒன்றில் அமர்ந்திருந்த ருஹானா “ப்ளீஸ்! எழுந்திருங்க” என சொல்லிக்கொண்டே இருந்தாள்.

மருத்துவமனைக்கு வந்த தன்வீர் உள்ளே நுழையப் போனவன் அவளை பார்த்துவிட்டு அங்கே வந்தான். “ருஹானா! அர்ஸ்லான் எப்படி இருக்கார்?”

“இன்னும் கண் திறக்கல. தீவிர சிகிச்சை பிரிவுல தான் வச்சிருக்காங்க. நிஸாம் அறிக்கை கொடுத்ததும் எல்லாம் மாறிடுமா? எப்போ அவரை விடுதலை செய்வாங்க, தன்வீர்?” அவள் பக்கம் அமர்ந்த தன்வீர் சோகமயமான அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

“அதிக காலம் எடுக்காது,ருஹானா. கோர்ட்ல இருந்து கடிதம் வந்ததும் சில பேப்பர் வொர்க்ஸ் இருக்கும். அப்புறம் ரிலீஸ் ஆர்டர் தந்துடுவாங்க.”

“அப்படியா? அவ்வளவு வேகமா வேலை நடந்துடுமா? அல்லாஹ்க்கு நன்றி!” என குதூகலிக்க, ஆர்யனுக்காக மகிழ்ச்சியடையும் தங்கையை கவனித்த தன்வீர் “ருஹானா! நீ சரியா தான் சொல்லி இருக்கே. அர்ஸ்லான் குற்றவாளி இல்ல. வாழ்க்கையே விசித்திரம் தான், இல்லயா? நீ அவ்வளவு தூரம் வெறுத்த ஆர்யன் அர்ஸ்லானை இன்னைக்கு காப்பாத்தியிருக்கே! நிறைய விசயங்கள் மாறி இருக்குன்னு நான் நினைக்கிறேன். சரி தானே?” என கேட்டான்.

ருஹானா தலையாட்டினாள்.

——–

இவான் தந்த சிண்டுவை அணைத்து பிடித்தபடி ஆர்யன் அறைக்கு எதிரே ருஹானா நிற்க, சல்மா அவள் மீது பொசுக்கும் பார்வையை செலுத்தியபடி நடந்து கொண்டிருந்தாள்.

கதவு திறந்து வெளியே வந்த மருத்துவர் “மிஸ்டர் ஆர்யனுக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சி. நீங்க போய் பார்க்கலாம்” என்றார். “நன்றி டாக்டர்!” என கரீமா சொல்ல, ருஹானா கடவுளுக்கு நன்றி சொன்னாள். 

மூவரும் உள்ளே செல்ல எத்தனிக்க, வாசலில் துப்பாக்கியுடன் நின்ற காவலன் “ஒருத்தர் தான் உள்ளே போகணும். அதும் குடும்ப உறுப்பினர் மட்டும் தான்” என்றான். “நான் அவரோட அண்ணி!” என கரீமா சொல்ல, அவன் அனுமதி தந்து தலையசைத்தான்.

ஏமாற்றமான ருஹானா “கரீமா மேம்! நான் விசாரிச்சேன்னு அவர்கிட்டே சொல்றீங்களா?” என, கரீமா “கண்டிப்பா சொல்றேன், டியர்!” என்று உள்ளே சென்றாள். ருஹானா உள்ளே எட்டிப்பார்க்க ஆர்யன் பார்வைக்கு அகப்படவில்லை. சல்மா ருஹானாவை எகத்தாளமாக பார்த்தாள்.

ஆர்யன் முழு உணர்வுக்கு வந்த உடனே ருஹானா அவனுக்கு தைரியம் சொன்னது தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது. ‘நான் இங்க தான் இருக்கேன். உங்களுக்காக காத்திருக்கேன். சரியா?’

ஆர்யன் அவளையே நினைத்திருக்க, கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் ருஹானா தான் வந்துவிட்டாள் என ஆவலாக பார்வையை திருப்பினான். கரீமா உள்ளே வர, மிகவும் ஏமாந்து போனவன் தலையை திருப்பிக்கொண்டான்.

வேகமாக அருகே வந்த கரீமா “ஆர்யன்! நீ நல்லா இருக்கியா?” என கேட்க “ஆமா! நல்லா இருக்கேன்” என்றவன் “எல்லாரும் இங்க இருக்காங்களா?” என கேட்டான்.

“ஆமா, நான், சல்மா, ரஷீத். எல்லாரும் ராத்திரில இருந்து இங்க தான் இருக்கோம். சல்மாவும் உன்னை பார்க்க ஆசைப்பட்டா. ஆனா ஒருத்தரை தான் உள்ளே விடுவேன்னு சொல்லிட்டாங்க. அம்ஜத்தை வீட்டுக்கு அனுப்பிட்டேன். எல்லாரும் உன் உடல்நலத்தை விசாரிச்சாங்க” என கரீமா சொல்லவும், அவன் முகம் வாடி போனது. “நன்றி!” என்றான்.

“அப்புறம் உனக்கு என்கிட்டே ஒரு நல்ல செய்தி இருக்கு. நீ சீக்கிரமே விடுதலை ஆகப்போறே. நிஸாம் உண்மையை சொல்லிட்டான்” என கரீமா சொல்ல ஆச்சரியமான ஆர்யன் “அப்படியா? எப்படி?” என கேட்டான்.

“ரஷீத் அவனை சரிக்கட்டிட்டான்” என கரீமா பூசி மெழுகினாள். அவளுக்கே எப்படி என்று முழுவிவரம் தெரியாதே!

“விடுதலை உத்தரவு சீக்கிரம் வந்துடும்” என அவள் சொல்ல, ஆர்யனுக்கு தன்னைவிட ருஹானாவிற்கு தான் இதில் அதிக மகிழ்ச்சி இருக்கும் என தோன்றியது. அவளை பார்க்க மனம் ஏங்கியது.

வெளியே வந்த கரீமா காவலனிடம் “எனக்கு தெரியும், நீங்க ஒருத்தரை தான் உள்ளே அனுப்புவீங்க. ஆனா ஆர்யன் இன்னொருத்தரை பார்க்க விரும்பறார். பார்க்க போகலாமா?” என கேட்க, ருஹானாவிற்கு தன்னை தான் ஆர்யன் சொல்லியிருப்பான் என உறுதியாக நம்பி ஆவலோடு முன்னே வந்தாள்.

“சரி, ஆனா அதிக நேரம் எடுத்துக்க கூடாது” என காவலன் சொன்னதும் “சல்மா டியர்! வா!” என கரீமா அழைக்க, ருஹானாவின் முகமும் மனமும் சுருங்கிப்போனது. என்றாலும் தன் முயற்சியை கைவிடாமல் “கரீமா மேம்! இவான் இதை அவன் சித்தப்பா கிட்டே கொடுக்க சொன்னான். நான் உள்ளே போய்….” என பேசும்போதே சல்மா பொம்மையை பிடுங்கிக்கொண்டாள்.

“நான் கொடுத்துக்கறேன்!” என வெற்றிப் புன்னகையுடன் அவள் உள்ளே செல்ல, கரீமாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ருஹானாவின் கண்கள் கலங்கின.

மீண்டும் கதவு திறக்கவும், இந்த முறை கண்டிப்பாக ருஹானா தான் உள்ளே வருவாள் என ஆசையுடன் நோக்கிய ஆர்யன் சல்மாவை பார்த்ததும் சலித்தபடி கண்களை மூடிக்கொண்டான்.

நினைவுகளெல்லாம் அவளாகிட

மயக்கத்திலும் தடையில்லா

கனவுகளாய் உலா வருகிறாள்!

நினைவு மீண்டிட

சுற்றி வருவதெல்லாம்

சூனியமும் சூழ்ச்சியும்.

பரிதவிக்கும் விழிகள்

கதவிடுக்கில் தேடித்தேடி

களைத்திடுதே!

தாமதித்து தவிக்க விடாதே 

தாங்காது இதயம்!!

“நீங்க எங்களை பயமுறுத்திட்டீங்க. சீக்கிரம் நலமாகட்டும்!” என சல்மா சொல்ல, ஆர்யன் வழக்கம்போல ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான்.

“நன்றி!”

“வலி அதிகம் இருக்கா?”

“இல்ல.. அப்படிலாம் இல்ல!” என சொன்னவன் பார்வையை திருப்பிக் கொள்ள, சல்மாவிற்கு மேலே என்ன பேசுவது என தெரியவில்லை. கையில் இருந்த பொம்மையை நீட்டினாள். “இவான் இதை உங்களுக்கு கொடுத்துவிட்டான்!”

“இவான்… உன்கிட்டேயா கொடுத்தான்?” ஆர்யன் சரியாக யூகித்து விட்டான்.

மாட்டிக்கொண்ட சங்கடத்தில் திக்கி திணறி “இல்ல… ருஹானாட்ட கொடுத்தான். அவ என்கிட்டே கொடுத்தா” என சல்மா சொன்னாள்.

ஆர்யன் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. பொம்மையை மென்மையாக தடவிக் கொடுத்தவன் “அவ இங்க இருக்காளா?” என கேட்டான். 

“ஆமா!” வேறுவழியின்றி தன்னை நொந்தபடி சல்மா ஒத்துக்கொண்டாள்.

ஆர்யனின் இதயத்தின் வேகம் மாறி களிநடனமானது. முகத்தில் தோன்றிய இளநகையை அவனால் மறைக்க முடியவில்லை

அந்த முட்டாள் அது அவளுக்கான புன்னகை என எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தது. எந்த காலத்திலும் ஆர்யன் பேச்சில், பார்வையில், செய்கையில் அவளை தள்ளியே நிறுத்துவான். எந்த நம்பிக்கையில் இவள் இப்படி அவனை தனக்கு நெருக்கமானவன் என நினைக்கிறாளோ தெரியவில்லை. அவனை பரவசமாக பார்த்தபடி நின்றாள்.

ருஹானா தொட்டு கொடுத்தது என அறிந்த பின்பு அந்த சிண்டு பொம்மையின் மேல் ஆர்யனுக்கு பாசம் அதிகமானது. அதை பூப்போல வருடினான். 

பின்பே சல்மாவை பார்த்தவன் அவள் இன்னும் அங்கேயே இருப்பது கண்டு “எக்ஸ்க்யூஸ்மீ! நான் ஓய்வு எடுக்கணும்” என்றான்.

“நான் எதும் செய்யணுமா? உங்களுக்கு எதும் தேவையா?” என சல்மா பரபரப்பாக கேட்டாள்.

“வேணாம். நன்றி!” என சொன்னதும் அவனை பார்த்துக்கொண்டே சல்மா வெளியேற, ஆர்யன் சிண்டு பொம்மையின் அழகை ரசித்தபடி பார்த்திருந்தான்.

———— 

மிஷாலுக்கு தன்வீர் போன் செய்து ஆர்யன் மருத்துவனையில் இருப்பது பற்றி தெரிவித்து, ருஹானாவிடம் பேசும்படி கூறினான். அதிர்ச்சியடைந்த மிஷால் “யார் அப்படி செய்தது? கண்டுபிடிச்சிட்டீங்களா?’ என கேட்க, “யார் அவனை மாட்டிவிட்டாங்களோ அவங்க தான் செய்திருக்கணும். ஆர்யனுக்கு நிறைய எதிரிகள் இருக்காங்களே” என தன்வீர் சொல்ல, மிஷால் யோசனையில் ஆழ்ந்தான்.

——– 

ஆர்யன் பொம்மையை நெஞ்சின்மீது வைத்துக்கொண்டு அது அவனிடம் பேசுவதுபோல பார்த்துக்கொண்டிருந்தான். துப்பாக்கியை ஏந்தி எப்போதும் வேகமாக இருக்கும் அவனை காதல் என்கிற மாயம் நாய்க்குட்டியை மிருதுவாக ஏந்த வைத்திருக்கிறது! 

உள்ளே செவிலிப்பெண் வரவும் பொம்மையை கட்டிலில் தனக்கு பக்கத்தில் வைத்துவிட்டான். “எப்படி இருக்கீங்க மிஸ்டர் ஆர்யன்?” என அவள் கேட்க, தலையை மட்டும் ஆட்டினான்.

“ட்ரிப்ஸ் இன்னும் முடியல. உங்களுக்கு வேற எதும் வேணுமா?” என அவள் கேட்க, “இல்ல, நன்றி!” என்றான்.

சுற்றுமுற்றும் பார்த்த அந்த பெண் “உங்களுக்கு ஒரு தகவல்!” என ஒரு துண்டு சீட்டை நீட்டினாள். அவளை சந்தேகமாக பார்த்த ஆர்யன் “என்ன இது?” என கேட்டான்.

“வெளிய ஒரு பெண் உங்ககிட்டே கொடுக்க சொன்னாங்க” என சொல்லி அதை கொடுத்துவிட்டு செவிலி வெளியே சென்றுவிட்டாள். ருஹானாவை பார்த்து அவள் தலையாட்ட அவள் சந்தோசமாக நன்றி சொன்னாள்.

காகிதத்தைப் பிரித்துப் படித்த ஆர்யன் அன்றுவரை அனுபவித்திராத மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தான். 

இங்கே தான் இருக்கிறேன்…

காத்திருக்கிறேன்….

வாக்கு கொடுத்தபடி!

ருஹானா எழுதியிருந்த வார்த்தைகளை வருடிக் கொடுத்தான். திரும்ப திரும்ப படித்தான். ஒவ்வொரு எழுத்தையும் ரசித்தான். அது எழுதப்பட்ட அழகை அனுபவித்தான்.

அவன் உள்ளே புன்னகைக்க அவள் வெளியே பதில் புன்னகை செய்தாள். நடுவில் இருக்கும் கதவோ, சுவரோ அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லை. 

——–

வாசிமும், தன்வீரும் அங்கே வர, அவர்களை பார்த்து ருஹானா திகைக்க, “பயப்படாதே. அர்ஸ்லான் கிட்டே பேசணும்” என வாசிம் சொல்லி உள்ளே சென்றான். வாசிமை பார்த்து ஆர்யனும் அதிசயமாக தான் பார்த்தான். வாசிம் பேசியது மேலும் அவனை அதிசயப்பட வைத்தது.

“நீங்க சரி தான். நான் தான் தவறு செஞ்சிட்டேன். சதி செய்து உங்களை மாட்டி விட்டுருக்காங்க. நீங்க நிரபராதி. சீக்கிரமே நீங்க விடுதலையாகிடுவீங்க!” என்று வாசிம் சொல்ல, ‘இவனும் நல்லவன் தானோ?’ என நினைத்துக்கொண்ட ஆர்யன் தலையை மட்டும் ஆட்டினான்.

அப்போது உள்ளே வந்த செவிலிப்பெண் “நோயாளிக்கு எக்ஸ்ரே எடுக்க கூட்டிட்டு போகணும்” என சொல்லவும், வாசிமும், தன்வீரும் “விரைவாக குணமடைய வாழ்த்துக்கள்!” என சொல்லி திரும்ப, ஆர்யன் தன்வீரை பார்த்து “நீ கொஞ்ச நேரம் இருக்கியா?” என கேட்டான். வாசிம் தலையாட்டி வெளியே சென்றான்.

———-

காவல் நிலையம் வந்த வாசிமும், தன்வீரும் ஆர்யனைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தனர். 

“கமிஷனர்! நீங்க செய்தது நல்ல செயல். அர்ஸ்லான் கிட்டே பேசினது சிறப்பு. வேற யாரும் இதை செய்திருக்க மாட்டாங்க.”

“இது தான் சரியான நடைமுறை, தன்வீர். அவன் தேவையில்லாம குத்து வாங்கியிருக்கான். அதான் என்னை அதிகமா வருத்தப்பட வச்சிருச்சி. நல்லவேளை வேகமா குணமாகுறான்”

———-

மருத்துவமனை தோட்டத்து பெஞ்சில் உட்கார்ந்திருந்த ருஹானாவிற்கு ஆர்யனுக்கு தகவல் தெரிவித்தது சந்தோசத்தை தந்தது என்றாலும் அவனை பார்க்க முடியவில்லையே என்பதும் வருத்தத்தை அளித்தது. இருவகையான உணர்வுகளுடன் இருந்த ருஹானா நல்லபடியாக ஆர்யன் குணமாக ஆண்டவனை பிரார்த்தித்தாள். 

அவளை தேடி வந்த ரஷீத், அங்கே கண்டு முகம் மலர்ந்தவன் “ருஹானா! என்கூட வாங்க!” என வேகமாக கூப்பிட, ஆர்யனுக்கு ஏதோ பின்னடைவோ என ருஹானா பயந்து போனாள். “ஏதாவது கெட்ட செய்தியா?”

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் “வேகமா வாங்க!” என ரஷீத் அழைத்து சென்றான். அவன் பின்னால் சென்ற ருஹானா ஆர்யன் அறை இருந்த பக்கம் செல்ல “அப்படி இல்ல. இந்த பக்கம் வாங்க” என கூட்டி சென்றான்.

மருத்துவமனையின் மொட்டைமாடிக்கு வந்தடைந்த ருஹானா அங்கே ஆர்யனை பார்த்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளானாள். வேகமாக அவனை நெருங்கியவள் அவன் தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள். 

இரு கைகளில் காகித கப்புகளை வைத்திருந்த ஆர்யன், ஒன்றை அவளிடம் நீட்டினான், அவள் மீதிருந்து கண்களை எடுக்காமல்.

“உனக்கு ஒரு காபி கடன்பட்டேனே!”  

கவலையுடன் இருந்த அவள் வதனம், ரஷீத் வேறுபக்கம் அழைத்துச் செல்லவும் குழப்பமாகி, பின் ஆர்யனை அங்கே பார்த்ததும் கலக்கமாகி, அவன் நலமாக இருப்பது கண்டு நிம்மதியாகி, அவன் கையில் இருக்கும் காபியைக் கண்டு குறும்பு புன்னகையை பூசிக்கொண்டது.

(தொடரும்)

Advertisement