அவன் அறைக்குள் சென்று அவன் அலுவலக நாற்காலியில் அமர்ந்தவள், எதிரே இவானோடு ஆர்யனும் இருக்கும் புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தபடி, அழமாட்டேன் என ஆர்யனுக்கு கொடுத்திருந்த சத்தியத்தையும் மீறி தேம்பினாள்.
அவள் அவனை கண்ணீரோடு நினைவு கூற, சிறைச்சாலையில் ஆர்யனோ படுத்தபடி லாக்கப்பில் ருஹானா அவனுக்கு காபி கொண்டுவந்து தந்துபேசியதை கனிவாக நினைத்து கண்மூடினான்.
இந்த தருணம் ருஹானா தன் அறையில் தன் நாற்காலியில் அமர்ந்து தன்னை நினைத்து மனம் உருகுகிறாள் என்பது மட்டும் அவனுக்கு தெரியக்கூடுமானால், இப்போது அவனது முகத்தில் பூத்திருக்கும் இளநகை, ஆனந்த பூரிப்பாக மாறியிருக்கும்.
உள்ளே இருந்த காதர் ஆட்கள் அவனை வம்புக்கு இழுக்க பலதும் கிண்டல் செய்து பேசினர். அதை ஆர்யன் சட்டை செய்யாமல் கண்களையும் திறக்காமல் தன் உலகிலேயே சஞ்சாரித்துக் கொண்டு இருந்தான்.
அவர்களில் ஒருவன் “இங்க வர்றவன் எல்லாம் ஒன்னு அம்மாவை நினைப்பான், இல்லனா அவன் காதலியை நினைப்பான். இவன் திரும்பி போறவரை அம்மா காத்திருப்பா! காதலி காத்திருப்பாளா? இந்நேரம் வேற எவன்கூடவாது ஓடியிருப்பா!” என சொன்னது தான் தாமதம், கண்திறந்து எழுந்த ஆர்யன் ஒரே எட்டில் பேசியவனின் சட்டைக்காலரை பிடித்துக்கொண்டு நெற்றியால் அவன் தலையில் ஒரே முட்டு அதிவேகமாக முட்டினான்.
அவனுக்கு மண்டை கலங்கியது போல இருந்தது. மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. “இன்னொரு வார்த்தை நீ பேசினே, உன் கழுத்து எலும்பை உடைச்சிடுவேன்!” என ஆர்யன் கர்ஜிக்க, அவன் பயந்துப்போய் தலையை ஆட்ட, மற்றவர்கள் வந்து அவனை ஆர்யன் பிடியிலிருந்து விடுவித்து அழைத்து சென்றனர்.
——
நாற்காலியில் அமர்ந்தபடி ஆர்யன் மேசையில், கையில் வைத்திருந்த அவன் கோட்டோடு தலைசாய்த்த ருஹானா, மறு கையில் ஆர்யன் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, தன்னை அறியாமல் உறங்கியிருந்தாள்.
அவளது செல்பேசியின் சத்தம் அவளை எழுப்பிவிட, கண்விழித்தவள், தான் ஆர்யன் அறையில் இருப்பதை பார்த்து திடுக்கிட்டாள். எழுந்து ஸ்கர்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்தவள் “சொல்லு மிஷால்!” என்றாள், ஆர்யன் கோட்டை நாற்காலியில் மாட்டியபடி.
“எப்படி இருக்கே, ருஹானா?”
“நான் நல்லா இருக்கேன். நீ எதுக்கு கூப்பிட்டே?”
“நடந்தது கேள்விப்பட்டேன் ருஹானா! அதான் கால் செய்தேன். எனக்கு விவரம் ஒன்னும் தெரியல”
ருஹானா கடுப்புடன் “அவர் ஒரு சதியில மாட்டிகிட்டார் மிஷால்! அவ்வளவு தான்” என்றாள்.
“அவனோட மாஃபியா உலகத்துல இதெல்லாம் நடக்கும் தான். இதான் அவனுக்கு கிடைச்ச நல்ல முடிவு.”
கோபம் கொண்ட ருஹானா “உனக்கு எதுவும் தெரியாது, மிஷால்! உனக்கு அவரையும் தெரியாது” என்றாள். “ருஹானா..” என மிஷால் இன்னும் பேசவர, “என்னை இவான் கூப்பிடுறான். நான் போனை வைக்கிறேன்” என சட்டென்று செல்பேசியை அடைத்துவிட்டாள்.
ஆர்யன் அறை விட்டு வெளியே வந்தவள் இவான் அறைக்கு செல்ல போக, அங்கே வந்த ஜாஃபர் “குட் மார்னிங் ருஹானா மேம்! ரஷீத் வந்தா சொல்ல சொன்னீங்களே, அவர் இப்போ கரீமா மேம்கிட்டே பேசிட்டு இருக்கார்” என சொல்ல, அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு படிகளில் வேகமாக இறங்கினாள்.
“எனக்கும் ஒன்னும் புரியல. ஆர்யனுக்கு எதிரான இறுதி தீர்ப்பு கேட்க நம்மை தயார்ப்படுத்திக்கணும்.”
அதை கேட்டு அதிர்ந்த ருஹானா “இல்ல! நான் அப்படி நடக்க விட மாட்டேன்” என தனக்குள் சொன்னவள், வரவேற்பறைக்கு செல்லாமல் வாசற்கதவு திறந்து வெளியே போய் நின்றாள்.
கரீமா “யோசி ரஷீத். நம்ம கையில இருக்குற சொத்து எல்லாம் நழுவிட போகுது” என சொல்லவும், அவளை ரஷீத் சந்தேகமாக பார்க்க, சட்டென்று முகத்தை மாற்றிக்கொண்ட கரீமா, “ஆர்யன் பாடுபட்ட சேர்த்தது வீணா போகலாமா? நாம இதை அனுமதிக்கப் போறோமா? ஆர்யன் நம்மை பார்த்து என்ன சொல்வான்?” என பாவமாக கேட்டாள்.
“ஆமா, எல்லாம் ஆர்யன் அரும்பாடு பட்டு உருவாக்கினது. நான் கண்டிப்பா என்னால ஆனதை செய்வேன்” என ரஷீத் உறுதி கூற “எனக்கும் தகவல் தெரிவி!” என கரீமா கேட்க, அவனும் சரியென்றான்.
வெளியே வந்த ரஷீத்திடம் ஓடினாள் ருஹானா. “மிஸ்டர் ரஷீத்! வாட்ச்மேன் நிஸாமை பார்க்க என்னை கூட்டிட்டு போக முடியுமா?”
“அதுனால எந்த பயனும் இல்ல, ருஹானா!”
“முயற்சி செய்து பார்க்கறதுல ஒரு தப்பும் இல்லயே! வேற பார்வையில சின்னதா ஏதாவது ஒரு வழி கிடைக்கலாம், இல்லையா?”
“எனக்கு நம்பிக்கையே இல்ல, சரி! வாங்க”
—–
நிஸாமின் வீட்டில் சோபாவில் ருஹானாவும், ரஷீத்தும் அமர்ந்திருக்க, எதிர் சோபாவில் நிஸாமும் அவனது மனைவியும் தலையை குனிந்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். நிஸாம் கைகளை பிசைந்தபடி இருக்க, அவன் மனைவி தாரைதாரையாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.
“இத்தனை நேரமா நான் எவ்வளவோ பேசிட்டேன். நீங்க வாயை திறக்க மாட்றீங்க. ஆர்யன் அர்ஸ்லான் குற்றவாளி இல்லன்னு உங்களுக்கு தெரியும் தானே?” அன்பாக பேசும் ருஹானாவை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
ருஹானா தன் கழுத்து சங்கிலியை கழற்ற, பக்கத்தில் இருந்த ரஷீத் அவள் என்ன செய்கிறாள் என குழப்பமாக பார்த்தான். எழுந்து சென்று நிஸாமின் மனைவி அருகே அமர்ந்த ருஹானா, லாக்கெட்டை திறந்து இவானை இருவருக்கும் காட்டினாள். நிஸாமின் மனைவியின் அழுகை அதிகமாகியது. நிஸாம் முகத்தை திருப்பிக் கொண்டான்.
“நான் என்னோட அப்பாவையும், அக்காவையும் அடுத்தடுத்து இழந்தேன். என் வாழ்க்கையே என்னோட அக்கா மகன் இவான் தான். அவனுக்கு என்னையும், அவனோட சித்தப்பாவையும் விட்டா யாரும் கிடையாது. நீங்க ஆர்யன் அர்ஸ்லானை மட்டும் சிறைல தள்ளல. சின்ன குழந்தை இவானையும் சேர்த்து தான் தள்ளுறீங்க”
நிஸாமின் மனைவி வாயில் துணியை வைத்து மூடிக்கொண்டு பொங்கி பொங்கி அழுதாள்.
“அவனுக்கு அம்மா, அப்பா கிடையாது. அவன் அம்மா, அப்பாவா எங்களை தான் பார்க்கறான். நீங்க அந்த பிஞ்சு குழந்தைக்கு அப்பா பாசம் இல்லாம செய்ய போறீங்களா? அவனோட கண்ணீருக்கு நீங்க காரணமா இருக்க போறீங்களா?”
———-
வரவேற்பறைக்கு வந்த சல்மா, முகம் சுருக்கி அமர்ந்திருந்த சகோதரியிடம் கேட்டாள். ”மாத்திரை போட்டு எனக்கு தான் தலை வலிக்குது. நீ ஏன் இப்படி இருக்கே, அக்கா?”
“ரஷீத் வந்தான். நிஸாமை பேச வைக்க முடியலயாம்.”
“ஏன் முடியாது? அவனை சித்ரவதை செய்ய வேண்டியது தானே? தானா உண்மையெல்லாம் கக்கிட போறான்.”
அப்போது ஜாஃபர் இவானை அழைத்துக்கொண்டு உணவுமேசைக்கு செல்ல, சல்மா அவனை தடுத்து நிறுத்தினாள். “ஏன் நீங்க இவானுக்கு உணவு கொடுக்கறீங்க, ஜாபர்? அவனோட சித்தி என்ன செய்றா?”
“ருஹானா மேம் வெளிய போயிருக்காங்க. என்னை இவானை கவனிக்க சொன்னாங்க.”
“அவ எங்க போனா?”
“அவங்க ரஷீத் கூட போனாங்க” என்று சொல்லி ஜாஃபர் உள்ளே செல்ல, பொங்கி எழுந்த சல்மாவை பார்த்து கரீமா பயந்தாள்.
“டாமிட்! இவ ஏன் ரஷீத் கூட போனா?”
“பொறுமையா இரு, சல்மா! உடனே கோபப்படாதே! என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்குவோம்” என கரீமா அவளின் வேகத்தை குறைக்க பார்க்க, போனை எடுத்த சல்மா “இதோ! இப்போ தெரிஞ்சிக்கலாம்” என்றபடி ரஷீத்தை அழைத்தாள்.
“ரஷீத்! ஏதாவது முன்னேற்றம் இருக்கா?”
“நாங்க நிஸாம் வீட்ல இருக்கோம். மிஸ் ருஹானா அவனை பேச வைக்க முயற்சி செய்றாங்க.”
“சரி ரஷீத்! எந்த தகவல்னாலும் எங்களுக்கு சொல்லுங்க” என போனை வைத்தவள் கரீமாவிடம் எகிறினாள். “பார்த்தியா அக்கா அந்த பாம்பு அங்கயும் ஊர்ந்து போய்டுச்சி. அவளை நான் கொல்ல போறேன்!” என்றபடி போனை தூக்கி அடித்தாள்.
நிலுவையில் வழக்கு!
நிருபிப்பேன் உண்மையை,
விடுவிப்பேன் வழித்துணையையென
விழிமூடாமல் போராடும் நல்லவள்!
இரவுகளை எண்ணும் சின்னவன்!
இல்லாத உரிமையை நிலை நாட்ட
திமிராய் ஆங்காரமாய் ஆணவக்காரி!
சொத்துக்களையே சொந்தமாய் கொண்டாடுபவளோ
அது பறிபோய்விடுமோயென்ற அச்சத்தில்!
—–
“உங்க கண்ணுல நான் கருணையை பார்க்கறேன். உங்களால யார்க்கும் எந்த கெடுதலும் செய்ய முடியாது. உங்களால இவானுக்கு துன்பம் தரமுடியாது. உங்களுக்கு குழந்தை இல்லயா? உங்களுக்கு புத்திர பாசம் பற்றி தெரியுமா?” என ருஹானா உருக்கமாக கேட்கவும், நிஸாமின் மனைவி உடைந்து அழுதாள்.
“என்னோட மகன்… எங்க உயிர்.. எங்க செல்லம்!” என அவள் சொல்லி அழ, நிஸாம் “பேசாதே! வாயை மூடு!” என அவளை எச்சரித்தான். ரஷீத் உன்னிப்பாக கவனிக்க, ருஹானா “அல்லாஹ் பெயரால கேட்கறேன். தயவு செய்து சொல்லுங்க!” என கண்ணீர் விட்டு கெஞ்சினாள்.
“என்னோட மகன்.. அவனை கடத்தி வச்சிருக்காங்க” என அவள் தேம்பி அழ, நிஸாம் தலையில் கைவைத்துக் கொண்டான். வேகமாக எழுந்த ரஷீத் “யாரு கடத்தினது?” என கேட்டான். நிஸாம் பதில் சொல்லாமல் அழ, “நிஸாம்! வாய் திறந்து பேசு. காதர் பிரதர்ஸ் தானே?” என ரஷீத் கேட்டான்.
“என்னோட பையன் ஜார்ஜியா நாட்டில டாக்டர்க்கு படிக்கிறான். ஆர்யன் சார்க்கு தண்டனை கிடைக்கற வரை அவங்க பிடியில அவனை வச்சிருப்பாங்க. நான் அவங்க சொன்னபடி நடக்கலனா இரக்கமே இல்லாம அவனை கொன்னுடுவேன்னு மிரட்டியிருக்காங்க” என்று சொல்லிவிட்டு நிஸாம் முகத்தை மூடிக்கொண்டு அழுதான்.
ரஷீத் போனை எடுத்துக்கொண்டே “ஜார்ஜியால காதருக்கு சொந்தமான எல்லா இடங்களும் நமக்கு தெரியும்! நீ பயப்படாதே” என்று சொல்லிவிட்டு பக்கத்து அறைக்கு சென்றான்.
ருஹானா அழும் நிஸாமின் மனைவியை அணைத்து ஆறுதல்படுத்த, நிஸாம் மடை திறந்த வெள்ளம் போல பேசிக்கொண்டே இருந்தான்.
“என் மகனுக்கு உடம்பு சரியில்லாம போச்சி. அப்போ ஆர்யன் சார் அவனோட எல்லா சிகிச்சை செலவும் செய்தார். அவன் வெளிநாட்டில டாக்டர் படிப்பு படிக்க ஆசைப்படுறதா சொன்னதும் அவர் தான் அவனை ஜார்ஜியாக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்” என சொன்ன நிஸாம் தன் செல்பேசியை எடுத்து அவன் மகனும், ஆர்யனும் இருக்கும் புகைப்படத்தை ருஹானாவிற்கு காட்டினான்.
அதை கையில் வாங்கிய ருஹானா, அதில் முறைப்பாக நிற்கும் ஆர்யனை பெரிதுபடுத்தி பார்த்தாள். ஒருவருக்கும் தெரியாமல் அவன் செய்யும் உதவிகளில் அவள் மனதிலும் அவன் பெரிதாகிப் போனான். கண்ணீரோடு அவள் உதடுகளில் சிரிப்பும் மலர்ந்தது.
“அவருக்கு நாங்க எப்படி நன்றிக்கடன் செலுத்துறதுன்னு தவிச்சிட்டு இருந்தோம். இப்போ நாங்களே அவருக்கு துரோகம் செய்யவேண்டிய சூழ்நிலைல மாட்டிகிட்டோம். அவர் முகத்துல நான் எப்படி முழிக்க போறேன்?” என நிஸாம் புலம்பியபடியே பேசினான்.
——
உள்ளே புன்னகையுடன் வந்த ரஷீத் ”நல்ல செய்தி! உங்க மகனை கண்டுபிடிச்சிட்டாங்க. நம்ம இடத்துக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. அவனுக்கு எந்த ஆபத்தும் இல்ல. நல்லா இருக்கான்” என சொன்னான்.
நிஸாம் எழுந்து ஓடிவந்தவன் ரஷீத்தின் கையை பற்றிக்கொண்டு அவன் காலில் விழப் போனான். “என்ன செய்றே நிஸாம்?” என பதறிய ரஷீத் அவனை பிடித்துக்கொண்டான். “என் மகனை காப்பாத்திட்டீங்க. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்” என நிஸாம் சொல்ல, அவன் மனைவியின் துன்ப கண்ணீர் ஆனந்த கண்ணீரானது. “அல்லாஹ்க்கு நன்றி” என்ற ருஹானா அவளை கட்டிக்கொண்டாள்.
“இப்போ நீ பயமில்லாம உன் வாக்குமூலத்தை திருப்பி வாங்கு” என ரஷீத் சொல்ல, நிஸாம் சரியென பெரிதாக தலையாட்டி கிளம்பினான். ருஹானா அவனை நன்றிப்பெருக்குடன் பார்க்க, மருத்துவரை பெற்ற இருவரும் அவளுக்கு மனமார நன்றியுரைத்தனர்.
ருஹானா, ரஷீத், நிஸாம் மூவரும் வெளியே காருக்கு வர, “நீங்க இவானுக்கு மிகப்பெரிய உதவி செஞ்சிட்டீங்க, நன்றி!” என ருஹானா நிஸாமிடம் சொல்லிக்கொண்டே வர, ரஷீத்தின் செல்பேசி அழைக்க, அவன் அந்த அழைப்பை ஏற்றான்.
“என்ன!! சிறையில ஆர்யனை குத்திட்டாங்களா? ஆபத்தான நிலமையா?”