Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 90

மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்களே ஒருவருக்கு கிடைத்த உன்னதமான உறவு!

நீதிபதிகள் தீர்ப்பை வாசித்துவிட்டு செல்ல, ஆர்யன் ருஹானாவை கேள்வியாய் பார்க்க, கலங்கி நின்ற அவள் இல்லையென தலையாட்டினாள். “நான் உங்களை நம்புறேன்!” அவளின் அசாத்திய நம்பிக்கை அவனை அசர வைத்தது. 

அவன் கைகளில் விலங்கு பூட்டப்பட “இது உண்மை இல்ல. அவர் குற்றவாளி இல்ல” என அவள் புலம்ப, நிஸாம் கீழ்கண்ணால் ஓரப்பார்வை பார்த்தான். ஆர்யன் அவனை பார்க்க நிஸாம் தலையை குனிந்து கொண்டான்.

“கமிஷனர்! நிஸாமோட கண்கள், உடல்மொழியை பார்த்தீங்களா? இவன் கண்டிப்பா பொய் சொல்றான்.”

“ஆமா தன்வீர்! நானும் பார்த்தேன்.” 

இரு காவலர்கள் ஆர்யனை கூட்டிப் போக, ரஷீத்தை பார்த்து ‘எல்லாவற்றையும் பார்த்துக்கொள்’ என்பது போல அவன் தலையாட்டி செல்ல, ருஹானா அவன் பின்னாலேயே சென்றாள். 

சிறிது தூரம் சென்று திரும்பிய ஆர்யன், கண்ணீர் திரண்ட அவள் கண்களை பார்த்து “இவான் உன்னோட பொறுப்பு!” என்றான், அந்த நெருக்கடியான நேரத்திலும் இவானை மறக்காமல். 

‘நீங்களே ஒரு நாள் இவானை தூக்கி என் கையில் கொடுப்பீங்க!’ என ருஹானா ஆர்யனிடம் சவால் விட்டிருந்தாள் தான். ஆனால் அது இப்படி நிறைவேறுவது அவளுக்கு ஒப்புதலாக இல்லை.

அவள் கண்கள் நிரம்பி கண்ணீர் வெளியே வழிய “இல்ல.. அப்படி சொல்லாதீங்க.. நீங்க திரும்பி வந்துடுவீங்க!” என ருஹானா சொல்ல, அந்த கண்ணீரை துடைக்க விலங்கு பூட்டிய கையை ஆர்யன் அவளின் முகம் அருகே கொண்டு வர, பின்னால் நின்ற காவலன் கருணையின்றி அவனை கைப்பிடித்து முன்னே அழைத்து சென்றான்.

இவானின் சங்கிலியை பிடித்துக்கொண்ட ருஹானா, காவலர் சூழ கம்பீரமாய் நடந்து செல்லும் ஆர்யனையே பார்த்து நிற்க, ரஷீத், வாசிம், தன்வீர் மூவரும் அனைத்தையும் பார்த்து நின்றனர்.

———

“நாம யார்? நாம யார் அக்கா? நாம யார்? உன்னோட இளமை பருவத்தையெல்லாம் நீ இந்த குடும்பத்துக்கு கொடுக்கல? நாம ஆர்யனோட குடும்பமா இல்ல அந்த பட்டிக்காட்டு குப்பைக்காரியா?”

“சல்மா! சத்தத்தை குறை. ஆர்யன் யாரையும் வரவேண்டாம்ன்னு சொன்னான்ல, ரஷீத் சொன்னதை நீ கேட்டே தானே?”

“நாம பூச்சாடி மாதிரி அசையாம உக்காந்து இருப்போம். அந்த ருஹானா பாம்பு ஒவ்வொரு துளைக்குள்ளயும் போயிட்டு வரட்டும்.”

“அவ அங்க போனாலும் ஆர்யன்ட்ட நல்லா வாங்கி கட்டிட்டு தான் வருவா. நீ கவலைப்படாதே!”

“ஒஹ்! அப்படியா? ஆர்யன் அவ மேல கோபப்படுவான்னு இன்னும் நீ நம்புறியா? ஆனா நான் ஒன்னும் பச்ச குழந்தை இல்ல, இதை நம்பறதுக்கு. அந்த பாம்பு செய்றதுக்கு எல்லாம் அனுபவிப்பா. அவளை நான் பாடாப்படுத்துவேன்.”

“நீ மாத்திரை போட்டு தூங்கு, சல்மா!”

“நான் தூங்க மாட்டேன். அவ வர்றவரை முழிச்சி இருப்பேன். அவளுக்கு நல்லா பாடம் கத்துக் கொடுப்பேன். அந்த சூனியக்காரிக்கு ஆர்யனை நான் விட்டு தரமாட்டேன்.”

——- 

வாசிம் தன்வீரிடம் செல்பேசியில் பேசிக்கொண்டே மிஷால் உணவகத்துக்குள் நுழைந்தான். “நிஸாம் பத்தின எல்லா தகவல்களும் எனக்கு வேணும். அவன் ஆர்யன் கிட்டே சேருறதுக்கு முன்னாடி இருந்தே.”

“வாசிம், நீ போன்ல பேசினது நான் கேட்டேன். ஆர்யன் அர்ஸ்லானுக்கு என்ன?”

“அவனை ஆட்கடத்தல் குற்றதுக்காக  கைது செய்திருக்கோம், மிஷால்!”

“அது பெரிய குற்றமா, வாசிம்?” 

“ஆமா, அவனை ஜாமீன்ல கூட வெளிய விடல. ரிமாண்ட்ல வச்சிருக்காங்க” என்று சொன்ன வாசிம் “சரி, மிஷால்! வாகிதா எப்படி சமைக்கிறா? உனக்கு உதவி செய்றாளா? இல்ல உபத்திரமா?” என பேச்சை வேறு திக்குக்கு மாற்றினான். 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. புதுசு தானே? போகப்போக கத்துக்குவா.”

  ——–

தூணில் சாய்ந்து நின்று படிக்கட்டையே பார்த்துக்கொண்டு சல்மா, ருஹானாவிற்காக நெடுநேரம் காத்திருக்க, ருஹானா சோகமாக மெல்ல படியேறி வந்தாள். அவளை பார்த்ததும் சல்மா அவள் எதிரே வேகமாக வந்தவள் “ஆர்யன் எப்படி இருக்கான்?” என வெடுக்கென கேட்டாள்.

அவள் கேட்டதன் தொனியை புரிந்து கொள்ளாத ருஹானா அவளுக்கு விளக்கலானாள். “துரதிருஷ்டவசமா அவருக்கு ஆதரவா சாட்சி சொல்ல வந்தவர் அவருக்கு எதிரா சாட்சி சொல்லிட்டார். அவருக்கு ஜாமீன் கிடைக்கல.”

“இது எல்லாமே எனக்கு ஏற்கனவே தெரியும். ரஷீத் எனக்கு போன் செய்து விவரமா சொல்லிட்டார். ஆனா நீ ஏன் கோர்ட்க்கு போனேன்னு எனக்கு தெரியல, ருஹானா! ஆங்…! அதுமில்லாம ஆர்யன் யாரையும் வரவேணாம்னு சொன்ன பிறகும் நீ ஏன் அங்க போனே?”

“எனக்கு தெரியல. நான் அங்க இருந்தா அவருக்கு ஆறுதலா இருக்கும்னு நினைச்சேன்.”

நக்கலாக சிரித்த சல்மா அவளை அடிப்பவள் போல வந்தாள். “இங்க பாரு. இந்த மாளிகைல உனக்கு என்ன இடம்ங்கறதை மறந்திடாதே! நீ வெறும் இவானுக்கு சித்தி தான். நீ ஆர்யனோட குடும்பம் இல்ல. நீ அவனுக்கு ஒன்னுமே இல்ல.”

“ஆனா.. நான் அங்க…”

“நீ உன்னோட தகுதிக்கு மீறி நடந்துக்கிட்டே! ஆர்யனுக்கு எதும் தேவைனா அது நாங்க செஞ்சிக்குவோம். நாங்க தான் அவனோட குடும்பம். நீ இல்ல.”

ருஹானாவை மிரட்டிவிட்டு சல்மா செல்ல, ‘இப்போது நடக்கும் போராட்டத்தில் இது வேறா?’ என தொய்ந்தபடி ருஹானா அவள் அறைக்கு சென்றாள். 

——  

சல்மா அவளது அறையில் கண்ணீருடன் அமர்ந்திருக்க, கரீமா வேகமாக உள்ளே வந்தாள்.

“இப்போதான் ரஷீத்ட்ட பேசினேன், சல்மா! அந்த நிஸாம் உண்மையை சொல்லலனா ஆர்யனுக்கு தண்டனை கிடைக்கும். அவனோட சொத்தையும் முடக்கிடுவாங்க. நமக்கு ஒரு காசு கூட பெயராது.”

“ஒரு நிமிஷம் இரு. நீ என்ன சொன்னே இப்போ? எனக்கு புரியல!”

“நம்மோட எதிர்காலம் அந்த நிஸாம்ட்ட இருக்குன்னு சொன்னேன். இதுல என்ன உனக்கு புரியல?”

“நீ வெளியே போ!”

“சல்மா! கொஞ்சம் பிராக்டிக்கலா யோசனை செஞ்சி பாரு. பணம் இல்லனா நாம என்ன செய்றது?”

“எனக்கு ஆர்யனை தாண்டி எதுவும் யோசிக்க முடியல. எனக்கு எதை பத்தியும் அக்கறை இல்ல. நீ சொத்துக்களை பற்றி கவலைப்படுறே!”

“நிதானமா இரு! நீ என்ன பைத்தியமா? அமைதியா யோசி! மூளையை லேசா உபயோகி சல்மா!”

“ஆமா! நான் பைத்தியம் தான். ஆர்யன் திரும்பி வரவரை எனக்கு அமைதி கிடையாது. என்னோட கோபத்தால நான் எல்லாத்தையும் கொளுத்திடுவேன். எனக்கு எதுவும் வேணாம். ஆர்யன் மட்டும் போதும். அவனை நான் பார்க்க கூட முடியல. ஆனா அந்த குப்பைக்காரி பார்த்துட்டு வந்திருக்கா.” சல்மா அலறிக்கொண்டே எல்லாவற்றையும் தூக்கி வீசினாள்.

தரையில் படுத்து அழுத சல்மாவை எழுப்பி, அணைத்து ஆறுதல்படுத்தி  கட்டிலில் அமர வைத்த கரீமா அவளுக்கு மாத்திரை எடுத்துக் கொடுத்தாள். “சல்மா! இப்படி உன்னை ஆர்யன் பார்த்தா என்ன நினைப்பான்? வா கொஞ்ச நேரம் தூங்கு.”

“ஆமா! ஆர்யன் வந்திருவான் தானே?”

“கண்டிப்பா வந்திருவான், சல்மா! ரஷீத் எல்லா முயற்சியும் செய்றான்.”

“எப்போ அவன் நிஸாமை பேச வைப்பான்?”

“எனக்கு தெரியல, சல்மா. காரியம் நிறைவேறுனதும் நமக்கு கண்டிப்பா போன் செய்வான்.”

மாத்திரையை சாப்பிட்டு படுத்துக்கொண்ட சல்மாவை, கரீமா மிகுந்த கவலையுடன் பார்த்து அமர்ந்திருந்தாள்.

———–

“எப்போ சித்தப்பா வருவார், சித்தி?”

“வந்துடுவார் அன்பே! ஆனா கொஞ்சம் நாளாகும்.”

“எத்தனை தடவை நாம தூங்கி எழுந்தா சித்தப்பா வருவார், சித்தி?”

“சில தடவை தான் அன்பே! வா, நாம தூங்கலாம். அப்போ நேரம் வேகமா போய்டும்.”

இவானுக்கு குடிக்க பால் கொடுத்து படுக்க வைத்த ருஹானா, அவனை தூங்க வைக்க கதைப் புத்தகத்தை எடுத்து வந்து அவன் அருகே அமர்ந்தாள்.

“சித்தி உங்களுக்கு தெரியுமா? அசுரன் இப்போ கெட்டவங்களை பலத்தால மட்டும் இல்ல இதயத்தாலயும் ஜெயிக்கப் போறான். என் சித்தப்பா சொல்லியிருக்கார்.”

“ஆமா செல்லம்! சில அசுரன்களுக்கு மிக அழகான இதயம் இருக்கும், தேனே! அது நிறைய பேருக்கு தெரியாது.”

  ——-

“நிஸாமோட கடந்த காலம் தெளிவா இருக்கு, கமிஷனர்! எல்லாரும் அவனோட நேர்மையையும், பொறுப்புணர்வையும் பற்றி புகழ்றாங்க” என தன்வீர் சொல்ல, வாசிம் “சரி தான்” என தலையாட்ட அவனுக்கு சையத் பார்க்கும் கோணம் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது.

“தன்வீர்! நாம எல்லாமே தப்பான பக்கம் பார்க்கறோமான்னு தெரியல. ஆனா இனிமேல் நாம செய்றதுக்கும் ஒன்னும் இல்ல. அது நம்மோட வேலையும் இல்ல. ஆர்யன் குற்றவாளியா இல்லயான்னு நீதிமன்றம் முடிவு செய்யும். நாம இல்ல” என பெருமூச்சு விட்ட வாசிம், மற்ற வேலைகளை பார்க்கப் போனான்.

———

நிஸாம் வீட்டில் ரஷீத் அவனை மிரட்டிக்கொண்டிருந்தான். நிஸாமை இருபக்கமும் ஆட்கள் பிடித்துக்கொண்டிருக்க, நிஸாமின் மனைவி பக்கத்தில் நின்று அழுதுக்கொண்டு இருந்தாள்.

“சொல்லு நிஸாம்! யார் உன்னை விலைக்கு வாங்கினது? எவ்வளவு கொடுத்தாங்க? உனக்கு அதைவிட அதிகம் பணம் நான் தரேன். சொல்லு! நீ பேசலன்னா நான் உன்னை சுட்டுடுவேன்” என கத்திய ரஷீத் கண்ணைக் காட்ட, பக்கத்தில் நின்றவன் நிஸாம் தலையில் துப்பாக்கியை வைத்தான். அப்போதும் நிஸாம் மௌனம் சாதிக்க, ஆத்திரம் அடைந்த ரஷீத், நிஸாமின் கழுத்தை நெறித்தான். 

“அப்படின்னா உன் உயிர் உனக்கு முக்கியம் இல்ல! உன்னோட மனைவியை சுடவா, உண்மையை சொல்றியா?” என ரஷீத் கேட்க, இன்னொருவன் அவன் மனைவியின் தலையில் துப்பாக்கியை வைத்தான்.

நிஸாம் அதிர்ந்து போய் அசையாது நின்றவன் இறுதியில் சொன்னான். “எங்களை கொன்னுடுங்க!”

ரஷீத் செய்வதறியாது திகைத்து நின்றான்.

——-

இவானை தூங்க வைத்துவிட்டு வெளியே வந்த ருஹானா, பக்கத்து அறையை பார்த்தபடி நின்றாள். அதில் ஆர்யன் இல்லாதது அவள் இதயத்திலும் வெற்றிடத்தை உண்டாக்கியது.

வருத்த பெருமூச்சு ஒன்றை விட்டவள், பால் டம்ளரை சமையலறையில் வைக்க செல்ல, அங்கே நாற்காலியில் ஆர்யன் மாட்டிய கருப்பு மேல்கோட்டை பார்த்தாள். ‘நான் உங்களை பார்த்து பயப்படல. நீங்க எனக்கு அந்நியன் இல்ல. எனக்கு உங்களை தெரியும்’ என ஆர்யனிடம் மனம்விட்டு பேசிய தருணமும், உடனே காவலர்கள் அவனை அழைத்து போனதும் கண்ணில் தோன்றி இன்னும் அவளை சோகமாக்கியது.

கோட்டை எடுத்து மடித்து கையில் தொங்கவிட்டுக் கொண்டவள் படிகளில் ஏறிச் செல்ல, அர்ஸ்லான் மாளிகையெங்கும் அவன் பிம்பங்களே தோன்றின. 

Advertisement